என் பத்திரிக்கையான ஜாமக்காரன் செலவுகளை இந்தியாவிலேயே விசுவாசிகள் ஏராளமானவர்கள் மாதாமாதம் எனக்கு பணம் அனுப்பி கடன் இல்லாமல் பத்திரிக்கை ஊழியத்தை நடத்தி உதவுகிறார்கள். என் வெளிநாட்டு பயணத்துக்கான டிக்கட் பணத்தை என்னை அழைக்கும் சபைகளே கொடுத்துவிடுகிறார்கள். விசா செலவீனங்களுக்கும் தேவையைவிட மிகுதியாகவே பணம் கொடுத்து விடுகிறார்கள். அப்படியிருக்க மேற்கொண்டு எனக்கு பணம் எதற்கு?

இந்த மூன்று நாட்களும் பெஹரினில் நீங்கள் கூட்டத்தில் எடுத்த காணிக்கையை தயவுசெய்து இந்திய மிஷனரி பணிக்காக அப்படியே அனுப்பிவிடுங்கள் என்று பகிரங்கமாக அறிவித்தேன்.

இப்போது நான் எழுதும் இந்த செய்தியை நான் நேசிக்கும் அந்த பெஹரின் சபை மக்கள் அனைவரும் படிப்பார்கள். நெட்டில் பார்ப்பார்கள். நான் பொய் பேசுகிறேனா! உண்மை பேசுகிறேனா! என்று அவர்களும் - கர்த்தரும் அறிவார்கள். நான் அப்படி பேசினதற்கு பிறகுதான் அரேபியா நாடுகளிலேயே மிக அதிகமான இந்திய மிஷனரிகளை தாங்கும் ஒரே சபை பெஹரின் சபை என்ற நற்பெயர் பெற்றது.

இப்போது சில மாதங்களுக்குமுன் நான் பெஹரின் சென்றபோது அந்த சபையினர் இப்போது நூற்றுக்கணக்கான மிஷனரி ஸ்தாபனங்கள் பெஹரின் சபையினரால் தாங்கப்படுகிறது ஏராளமான ஆலயங்களை பெஹரின் சபையினர் கட்டிகொடுத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு தேவனை துதித்தேன். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

ஏன் இவைகளை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால். எனக்கும் பண தேவை உண்டு. பணம் இல்லாமல் எந்த ஒரு ஊழியமும் செய்யமுடியாதே. ஆனால் அந்த தேவைகளை மனிதர்களிடம் கேட்காமல், டிவியில் அல்லது வானொலியில் அறிவிக்காமல் பண தேவைகளை பத்திரிக்கை வழியாக கேட்காமல்! நேரிடையாக கர்த்தரிடம் அறிவிக்கவேண்டும். (கேட்கக்கூடாது! ஆனால் அறிவிக்க வேண்டும்). கேட்பதற்கும் அறிவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. நாம் வேண்டிக்கொள்வதற்கு முன்பே இன்னது தேவை என்று கர்த்தர் அறிந்திருக்கிறார் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.

பணதேவையுள்ள என் நெருக்கமான சூழ்நிலையில் கைகளை நீட்டி மடி ஏந்தி பிச்சை கேட்பதுபோல் நம் கர்த்தரிடம் நாம் ஜெபிக்கும்போது அந்த ஜெபத்தில் கிடைக்கும் இன்பம் இருக்கிறதே அது அலாதியானது!. அந்த ஜெபத்தின்மூலம் தேவனோடு உண்டாகும் நெருக்கம் இருக்கிறதே! அது மிகவும் விசேஷமானது. அதை அனுபவித்தால் மட்டுமே அறியமுடியும்.

அந்த இன்பம்!, அந்த நெருக்கம் யாவும் நமக்கு பணம் நிறைய கிடைத்துவிட்டால் அந்த ஆவிக்குரிய சந்தோஷம் நெருக்கம், இன்பம் யாவும் போய்விடும்.

அதனால்தான் சாலமோன் கேட்டான். கர்த்தாவே, பணம் இல்லாததால் நான் உம்மிடம் முறுமுறுக்காமல், பணம் நிறைய கிடைப்பதால் நான் உம்மை மறந்துவிடாமல் இருக்க, என்னை எப்போதும் இதுபோலவே ஒரே மாதிரி வாழவையும் என்று ஞானமாக கேட்டானே!.

அந்த வாழ்க்கை டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய எனக்கு கிடைக்கவேண்டுமானால் என்னை பணக்கார ஸ்டார் ஊழியனாக கர்த்தர் மாற்றாமல் இருந்தால் போதுமானது. இதில் கிடைக்கும் நிம்மதி - பயம் இல்லாத சூழ்நிலை! வேறெதிலும் கிடைக்காது!.

கடந்த 50 வருடங்கள் என் ஊழியத்தில் கர்த்தர் என்னையும் என் குடும்பத்தையும் எத்தனை அருமையாக கடன் இல்லாமல், வியாதி இல்லாமல் நடத்துகிறாரே அந்த பெரும் கிருபை என் மரணம் வரை தொடரவேண்டும் என்பதே என் ஜெபம் ஆகும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM