நான் கூறிய இந்த திட்டத்தை செயல்படுத்த நீங்கள் ஒருநாள் தெரிந்தெடுத்து ஒரு பகல் உபவாசித்து ஜெபித்து ஆண்டவரே, இந்த குடும்ப விவகாரத்தில் நான் நடந்துக்கொள்ள எனக்கு ஞானம் தாருங்கள். மருமகளிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு ஞானம் தாருங்கள் என்று கேட்டு ஜெபியுங்கள். ஈகோ பார்க்காமல், கௌரவம் பார்க்காமல் இந்த விஷயத்தில் பெரியவர்களாகிய நீங்கள் தாழ்ந்துபோக தேவனிடம் பெலன் கேட்டு பெறுங்கள். நாளை மறுநாளிலிருந்து நான் கூறியபடி செயல்படுங்கள் என்று கூறி ஜெபித்து அனுப்பிவிட்டேன்.

அந்த சகோதரி மறுநாளே நான் கூறியபடி உபவாசித்து ஜெபித்தாள். மருமகளிடம் நடந்துக்கொள்ள வேண்டிய ஞானம் தாரும் என்று ஜெபித்து மறுநாளிலிருந்து செயலில் இறங்கினார். பேரப்பிள்ளைகள் விஷயத்தில் தலையிடுவதில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு பயங்கரமாக விளையாடி அடித்து சண்டை போட்டுக்கொண்டாலும், பாட்டியாகிய அந்த சகோதரி தலையிடுவதில்லை.

பள்ளிக்கூடம் முடித்து பிள்ளைகள் வீட்டுக்கு வந்தால் முன்பெல்லாம் முதலில் வீட்டுப்பாடம் (ஹோம் ஒர்க்) என்ன என்று நானே டைரியை பார்த்து ஹோம் ஒர்க் செய்து முடித்தபின்தான் பிள்ளைகளை விளையாட அனுமதிப்பேன். ஆனால் இப்போது அதிலும் தலையிடுவதில்லை. நாட்கள் கடந்தன. பிள்ளைகளின் மார்க் குறைந்தது. பள்ளிக்கூடத்தில் டீச்சர் பெற்றோரை நேரில் காணும்படி எழுதி அனுப்பினார்கள். மகனும், மருமகளும் நேரில் சென்றபோது உங்கள் பிள்ளைகள் இருவரும் முதல் மார்க் வாங்குபவர்கள். சில வாரங்களாக வகுப்பு தேர்விலும் 4-வது ரேங்க் எடுத்துள்ளார்கள். வீட்டில் பிள்ளைகளை கவனிப்பதில்லையா? என்று கேட்டார்கள். நிலைமையை பெற்றோர் விளங்கிக்கொண்டார்கள்.

ஒருநாள் காலை மருமகளும், மகனும் அம்மாவின் அறைக்கு வந்து அமைதியாக நின்றார்கள். என்ன விஷயம்? என்று கேட்க மருமகள் கூறினாள். அத்தை கொஞ்ச நாட்களாக உங்கள் நடத்தையில் மாற்றம் காண்கிறோம். வீட்டு விஷயத்தில், பிள்ளைகள் விஷயத்தில் நீங்கள் தலையிடுவதில்லை. எனக்கு தெரியும். பிரச்சனைக்கு நான்தான் காரணம். உங்கள் மனதை மிகவும் வேதனைப்படும்படி நடந்துக்கொண்டேன். மன்னித்துவிடுங்கள் அத்தை என்றாள். மகனும் மன்னிப்பு கேட்டான்.

அப்போதுதான் டாக்டர் நீங்கள் என்னிடம் கேட்டது ஞாபகம் வந்தது. உடனே என் மருமகளிடம் கேட்டேன். என்மேல் உனக்கு என்ன வெறுப்பு? ஆலோசனைக்காக அந்த டாக்டரிடம் சென்றபோது அந்த டாக்டர்கூட இதே கேள்வியை கேட்டார். உங்கள் மருமகள் உங்களை வெறுக்க நிச்சயம் ஒரு காரணம் இருக்கவேண்டும் என்றார். அது என்ன? எனக்கு சொல் என்றார்.

இப்போதுதான் பிரச்சனையின் ஆணிவேர் வெளியே வர ஆரம்பித்தது. மருமகள் கூறினாள். அத்தை நீங்கள் நன்றாக ஜெபிப்பவர்கள், மிஷனரிகளை தாங்குபவர்கள், ஆலயம் கட்டிக்கொடுத்திருக்கிறீர்கள், ஜெபகுறிப்பு வைத்து மற்றவர்களுக்கொல்லாம் ஜெபிப்பவர்கள் என்று திருமணத்துக்குமுன்பே நான் கேள்விப்பட்டேன்.

ஆனால் எங்கள் கல்யாணம் முடிந்த முதல்நாள் இரவு நம் வீட்டு குடும்ப ஜெபம் முடித்து நானும் கணவரும் அறைக்கு போகும்முன் நீங்கள் ஒரு வார்த்தை கூறினீர்கள். உன் கல்யாண சீதனமாக கொண்டுவந்த பொருள்கள் எவர்சில்வர் பாத்திரங்கள் யாவும் மட்டரகமானது. கனம் குறைந்தது, அவைகள் யாவும் விலை குறைவான பொருட்கள் ஆகும். நல்ல பொருள் வாங்க உன் தகப்பனாருக்கு வக்கில்லையா? தரித்திர குடும்பம்போல இருக்கிறதே! உன் அப்பா, என்னை நன்றாக ஏமாற்றிவிட்டார் தெரியாமல் இப்படிப்பட்ட குடும்பத்தில் உன்னை தெரிந்தெடுத்துவிட்டேன். சரி போ...போ என்று என் பெற்றோரைக்குறித்தும், குறிப்பாக என் அப்பாவை குறித்தும் நீங்கள் அன்று பேசின அந்த ஏளன வார்த்தைகள் என் இருதயத்தில் அப்படியே பதிந்துவிட்டது. இந்த பொருள் விலை உங்களுக்கு தெரியுமா? கவனிக்காமல் பேசிவிட்டீர்கள். எல்லா சீதனமும் தரமானவைகள், என் நகைகள் யாவும் டூப்ளிக்கேட் அல்ல. சுத்தமான தங்கம் இதை வாங்க என் தகப்பனார் பட்டபாடு எனக்குதான் தெரியும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM