ஆலோசனை நேர அனுபவங்கள்

1964ம் வருடம் நான் மனம் திரும்பி இரட்சிக்கப்பட்ட அனுபவத்தை பெற்றேன்.

அதே வருடத்தில் என் இரட்சிப்புக்கு நேராக என்னை வழி நடத்தியவர்கள் தாங்கள் பிரசங்கிக்கும் கூட்டங்களில் என் சாட்சியை பகிர்ந்துக்கொள்ள என்னை அவர்களுடன் அடிக்கடி அழைத்து சென்றார்கள். இரண்டு மாதங்கள் கடந்த உடனே VBS பயிற்சி எனக்கு அளிக்கப்பட்டு VBS டைரக்டராக சிறுபிள்ளைகள் மத்தியில் ஊழியம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. VBSக்காக நான் தங்கும் ஊர்களில் ஞாயிறு ஆராதனையில் பிரசங்கிக்க சபை ஆயர்கள் என்னை கேட்டுக் கொண்டார்கள். சபையில் பிரசங்கிக்கும் பயிற்சி அப்போதுதான் எனக்கு தானாக கிடைத்தது. அப்போது பங்காரப்பேட்டை என்ற ஊரில் SIBC வேதாகம கல்லூரியில் குறுகிய கால வேதாகம படிப்பை முடித்தேன்.

1965ம் வருடம் மே மாதம் என் வாழ்க்கையில் முதல் கன்வென்ஷனில் பிரசங்கியராக பிரசங்கிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான்கு நாட்கள் தொடர்ந்து பிரசங்கிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பல ஆயர்கள் அப்போதைய கன்வென்ஷனில் என் பிரசங்கத்தை கேட்க வந்தனர். என் பிரசங்கத்தை கேட்ட ஆயர்கள் தங்கள் சபைகளுக்கு கன்வென்ஷனில் பேச தேதிகளை குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஆரம்ப காலத்திலேயே ஒரு வருடத்துக்கான தேதிகளை கன்வென்ஷனுக்காக பல ஊர்களில் உள்ள சபைகளுக்கு கொடுத்து முடித்துவிடுவேன். என் டாக்டர் தொழிலோடு கன்வென்ஷனில் பேசும் ஊழியத்தையும் செய்தேன்.

1969ல் குஆPடீ முதல் மிஷனரியாக சென்று வந்த அனுபவமும், அந்த மிஷனரி பாரமும் தொடர்ந்து எனக்குள் புகைந்து கொண்டேயிருந்ததால் மாதத்தில் ஒரு வாரம் ஆதிவாசிகள் வாழும் காடுகளை தேடி சென்று அங்குள்ள ஆதிவாசிகளுக்கு இலவச வைத்தியத்தியமும்,சுவிசேஷமும் மாதாமாதம் குழுவாக சென்று அந்த ஊழியத்தையும் செய்தேன். இன்றைய நாள்வரை அந்த மலை ஊழியத்தை நிறுத்தாமல் மாதமாதம் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். மாதத்துக்கு ஒரு மாநிலமாக தெரிந்தெடுத்து ஒவ்வொரு மாதமும் ஆதிவாசிகளிடையே சுவிசேஷம் அறிவிக்கும் பணியை தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன்.


ஆலோசனை நேரம்: (Counselling Time)

நான் கன்வென்ஷனில் பிரசங்கிக்கும் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு சபையிலும் உள்ள குடும்பங்களில் விதவிதமான பிரச்சனைகள், வெளியில் மற்றவர்களிடம் கூறமுடியாத அளவு இரகசிய பிரச்சனைகளும், பலருடைய வாழ்க்கையில் போராட்டங்களும் நிறைந்திருந்ததை, ஜெபத்துக்காக பலர் எனக்கு எழுதும் கடிதங்கள் மூலம் அவைகளை அறிய முடிந்தது. பிள்ளைகளைப்பற்றிய பிரச்சனை, வளர்ந்த வாலிப பிள்ளைகளின் காதல் பிரச்சனை, திருமணமானவர்களும், மனைவி பிள்ளைகளுடன் வாழும்போதே வேறு பெண்களின் காதல் வலையில் விழுந்து எழுந்திருக்க வழி தெரியாமல் தவிப்பது, சிலருடைய வேலை இடங்களில் மேலதிகாரிகள் தங்களை வெறுப்பது, சிலருக்கு தொழிலில் முன்னேற விடாமல் தடைசெய்யும் அப்படிப்பட்ட நபர்களை எப்படி சமாளிப்பது என்பதைப்பற்றியும், வீட்டுக்குள்ளேயே உள்ள உறவினர்களில் உண்டாகும் பிரச்சனை, கூடபிறந்தவர்களே ஒருவருக்கொருவர் வெறுப்பது, சொத்துப்பிரச்சனை, திருமண பிரச்சனை, தங்கள் சரீரத்திலுள்ள குறைப்பாடுகளை வெளியே கூற கூச்சப்பட்டு திருமண வாழ்க்கையில் விரத்திக்கொண்டு தற்கொலைவரை சென்று திரும்பியவர்கள், இப்படி விதவிதமான பிரச்சனைகளைக்குறித்து இவர்கள் ஜெபிப்பதற்காக இப்படிப்பட்டவர்கள் எனக்கு கடிதம் எழுதுவார்கள். ஆனால் இவர்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் நான் கடிதம் மூலம் விரிவாக ஆலோசனையோ, விளக்கமோ கொடுக்கமுடியாது. கணவன்-மனைவி பிரச்சனையானால், 2 பேரையும், தனித்தனியாக சந்தித்து பிறகு இருவரையும் ஒன்றாக அமரவைத்து முதல் அமர்வு 1st sitting இரண்டாம் அமர்வு 2nd sitting என்று குறைந்தது இரண்டு முறையாவது சந்தித்து பேசி ஆலோசனை கொடுத்தால் அவர்கள் சமாதானமாக வாழ்க்கை வாழ அது உதவியாக இருக்கும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM