இயேசு கிறிஸ்துவிடம் விவாகரத்தைக்குறித்து கேள்வி கேட்டபோது மோசே மூலமாக அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட ஆலோசனையின்படி தள்ளுதல் சீட்டு (விவாகரத்து நோட்டீஸ்) கொடுத்து ஒரு கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். அதைப்பற்றி இயேசு விளக்கம் கொடுக்கும்போது அன்றைக்கு வேதபுத்தகம், நியாயப்பிரமாணம் இல்லாத காலம். அதுமட்டுமல்ல அன்றைய மக்கள் ஆவிக்குரிய முதிர்ச்சி பெறாத காலம். ஆகவேதான் கொலைக்கு கொலை, பல்லுக்கு பல் என்ற கடினமான கட்டளையிருந்தது. ஒருவேளை இப்படிப்பட்ட தவறுகளை மக்கள் செய்யாமல் இருக்க தண்டனையை அறிவித்து மக்களை பயமுறுத்தி உணர்த்த வேண்டிய காலமாக இருந்திருக்கலாம். கொலை செய்தால் - பதிலுக்கு நீ கொலை செய்யப்படுவாய். இப்படி பயமுறுத்தினால் கொலை செய்யாமல் இருப்பார்கள் என்ற நோக்கத்தில் அந்த சட்டம் அன்றைய காலத்தில் கொடுக்கப்பட்டிருக்கலாம். அந்த கடினமான முதிர்ச்சியற்ற கால கட்டத்தில் மக்களின் இருதய கடினத்தநிமித்தம் மோசே அப்படி எழுதினான் என்று குறிப்பிடுகிறார். உண்மையில் கர்த்தரின் நோக்கம் விவாகரத்து செய்வது சரியல்ல என்பதாகும். ஆகவேதான் இயேசு அதை தெளிவுப்படுத்தினார். அதே தேவன்தான் பவுல் மூலமாக திருமணமானவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது இந்த ஆலோசனையை கர்த்தர் சொன்னார் என்று தைரியமாக குறிப்பிடுகிறார். புருஷன் - மனைவியை விட்டு பிரியக்கூடாது என்கிறார். அதே 1கொரி 7ம் அதிகாரத்தில் அவிசுவாசி பிரிந்துப் போனால்போகட்டும் என்றார். அதன் அர்த்தம் நான் கூறும் ஆலோசனை மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவருக்குதான் பொருந்தும் என்பதாகும். ஆனால் ஒரு அவிசுவாசி சேர்ந்துவாழ முடியாது என்றால் அந்த அவிசுவாசி போகட்டும். ஆனால் விசுவாசியான நீ விவாகரத்துக்கு சம்மதிக்காதே என்பதாகும்.

நான் எழுதும் எந்த கட்டுரையும், ஆலோசனையும் இரட்சிக்கப்பட்டு மனந்திரும்பி இயேசுவை மட்டும் திருப்திப்படுத்தி, வசனத்தின்படி, ஜீவிக்க மனமுள்ளவர்களுக்குதான் இந்த கட்டுரையின் ஆலோசனை பொருந்தும். அப்படிப்பட்டவர்கள்மட்டுமே கர்த்தரைமட்டும் திருப்திப்படுத்த விவாகரத்தை ஆதரிக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் தவறு செய்தவன் கணவனானாலும், மனைவியானாலும் கர்த்தரை நேசிப்பார்கள் அப்படிப்பட்டவர் கர்த்தரை திருப்திபடுத்தத்தான் யோசிப்பார்களே தவிர, விவாகரத்து செய்யும்படி பெரியவர்கள்கூடி ஆலோசனை கூறியதாலும், கோர்ட் தீர்ப்பு சொன்னதாலும் விவாகரத்து செய்தேன் என்று விவாகரத்தை நியாயப்படுத்த துணியமாட்டார்கள். சங்143:10 கர்த்தாவே உம்மைப் பிரியப்படுத்த என்னை போதித்தருளும் என்று சங்கீதக்காரன் கெஞ்சுகிறான். நான் இந்த விஷயத்தில் எப்படிப்பட்ட முடிவு எடுத்தால் உமக்கு பிரியமாக இருக்கும். உமக்கு பிரியமில்லாததை நான் செய்யக்கூடாது என்பதுதான் ஆவிக்குரியவர்களின் தீர்மானமாக இருக்கும். ஆகவே மனந்திரும்பிய தம்பதிகள் கவனிக்கவும்: என்னுடைய பெற்றோர் சொன்னார்கள், நான்கு பெரியவர்கள் நியாயம் பேசி தீர்மான எடுத்ததாகும் என்றெல்லாம் கூறி உங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்க முயலாதீர்கள். இதைக்குறித்து என் கர்த்தர் என்ன சொன்னார் என்பதுதான் உங்கள் முடிவாக இருக்கவேண்டும்.


பெற்றோரினால் பிரிக்கப்படுகிற குடும்பம்:

சில பெற்றோரே திருமணமான பிள்ளைகளை பிரிக்கும் ஆலோசனை கொடுக்கிறார்கள். இரட்சிக்கப்பட்ட கணவன்-மனைவி இருவருக்கும் ஊழியக்காரன் என்ற முறையில் வசனத்தை சார்ந்து இதை ஆலோசனையாக எழுதுகிறேன். எந்த சூழ்நிலையிலும், உங்கள் பெற்றோர் கூறும் விவாகரத்துக்கு ஒத்துப்போகாதீர்கள். நீங்கள் தனி குடும்பஸ்தர் ஆகிவிட்டீர்கள். நீங்களும், உங்கள் மனைவியும் வாழவேண்டியவர்கள். தேவன் நமக்கு கொடுத்துள்ளது ஒரே வாழ்க்கைதான் என்பதை மறக்கவேண்டாம். திருமண நாளில் சபைமக்கள்முன் வைத்து, கர்த்தரின் சந்நிதியில் கர்த்தருக்குமுன் கூறிய சத்திய பிரமாணத்தை மனதில் கொள்ளுங்கள்.

நீங்கள் இருவரும் மட்டுமே பேசி தீர்மானம் எடுங்கள். உங்கள் இருவர் வாழ்க்கையில் உங்கள் பெற்றோரையோ வேறு யாரையும் நுழைய விடாதீர்கள். பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. தீர்மானம் எடுப்பது, முடிவு எடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

நாளை கர்த்தர் உங்களிடம்தான் கணக்கு கேட்பார் என்பதை மறக்கவேண்டாம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM