கர்த்தருக்குள் அன்பானவர்களே,
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாக வாழ்த்துகிறேன்.
2014ம் வருடம் எத்தனை வேகமாக கடந்து போய்விட்டது. கடந்த 11 மாதங்களில் தேவன் நமக்கு செய்த நன்மைகளை கிருபைகளை மட்டும் நினைத்து பார்த்து ஸ்தோத்திரம் செய்வோம்.
இப்போதுள்ள உங்கள் பிரச்சனைகளை வியாதிகளை, ஏமாற்றங்களை, கடன்களை, தோல்விகளை எல்லாம் கர்த்தர் அறிவார். ஆகவே அவைகளை நினைத்து கலங்காமல், கவலைப்படாமல் என் கர்த்தர் சகலமும் அறிவார் என்ற நினைவோடு அப்படிப்பட்ட பிரச்சனைகளை கவலைகளைக்குறித்து பாரப்படாமல் கர்த்தர் செய்த நல்ல காரியங்களை கடந்த மாதங்களில் கர்த்தர் உங்கள் ஜெபத்துக்கு கொடுத்த பதில்களை நினைத்து மட்டும் துதியுங்கள்.
பிரச்சனைகள் நிறைந்த உலகத்தில்தாம் நாம் வாழவேண்டி கர்த்தர் நம்மை அனுமதித்துள்ளார். இந்த பிரச்சனைகள் உபத்திரவங்களின் மத்தியில் நாம் வாழவேண்டும் என்பது நம் தேவனின் திட்டமாகும். ஆனால் பிரச்சனைகளை சகிக்கமுடியாமல், தோல்விகளை தாங்க முடியாமல் ஜெபித்து தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புகிறார்கள். சிலர் ஞானமாக பிள்ளைகளை தனியேவிட மனதில்லாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
உலக மக்கள், புறமதஸ்தர்கள் அவிசுவாசிகள் இப்படிப்பட்ட முட்டாள்தனமான முடிவுக்கு வந்தால் நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் எனக்கு பழக்கப்பட்ட நல்ல இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் ஜெபகுழுக்களை நடத்தும் வழிகாட்டிகளாக சாட்சி கூறியவர்கள் உலக பிரச்சனைகளை தாங்கமுடியாமல் இப்படி குடும்பத்தோடு தற்கொலை செய்வார்களேயானால் அவர்களின் இரட்சிப்பில் மனந்திரும்புதல் சந்தேகம் ஏற்படுகிறது. |