ஆவியானவரைப்பற்றிய பின்பற்றக்கூடாத
சிலரின் தவறான அனுபவம்:

மொழியின் மூலமாகத்தான் தொழுகையானது பிரதனமாய் வெளிப்படுகிறது. அதனால் ஆவியானவராகிய நான் குறிப்பாய் உனது நாவைத் தொடுகிறேன். நீ உனக்கு புரியாத, நீ படியாத மொழிகளில் பேசும் கிருபாவரத்தை நீ விரும்பினால் உனக்குத்தருவேன். அப் 2:4,10:46.

இந்த வரத்தின் மூலம் கிடைக்கும் நன்மை என்னவென்றால் நீ உனது அறிவாற்றலைக் கடந்து சென்று உனது ஆவியில் கடவுளுக்குப் புகழ் சாற்றலாம். உள்ளான மனிதனில் உனக்கு நான் ஆழ்ந்த அமைதியை கட்டளையிடுவேன். நீ புத்துணர்வை அடைவாய். இப்படி ஆவியானவர் கூறுகிறதாக "ஆவியானவர் பேசுகிறார் என்று தலைப்பில்" எழுதியவர் சகோ.ஆர்.ஸ்டான்லி (BYM) வெல்லூர்.

ஜாமக்காரன்: அந்நிய மொழி (அந்நியபாஷை பேசுவது ஆவியானவரின் அடையாளம் அல்ல) கர்த்தருக்கு அனைத்து மொழிகளும் தெரியும். நமக்கு விளங்காத பாஷையில் பேசவைத்து வேடிக்கை பார்க்கும் அளவு நம்மை குழப்ப நம் தேவன் ஒரு பைத்தியக்காரர் அல்ல என்பதை நீங்கள் அறியவேண்டும்.

தொழுகை என்பது சகோ.ஸ்டான்லி கூறுவதுபோல் அந்நிய மொழியின் மூலமாக அல்ல. நிச்சயமாக வேதத்தை நமக்கு எழுதிதந்த ஆவியானவர் ஒருபோதும் தான் எழுதாததை சகோ.ஸ்டான்லிக்கு தனிப்பட்ட முறையில் கூறியிருக்க இயலாது.

அடுத்தது சகோ.ஸ்டான்லி கூறியபடி அந்நியபாஷை வரத்தை நீ விரும்பினால் உனக்கு தருவேன் என்று ஆவியானவர் சொன்னதாக கூறுவதும் பிழை ஆகும். வரம்-Gift பரிசு என்பது கொடுக்கப்படுவது, அது கேட்கப்படுவது அல்ல!.

வேத புத்தகம் எழுதப்படாத அந்த காலத்தில் உண்டாயிருந்த அந்த கால சபைகளுக்கு அந்நியபாஷை வரமாக சபை சுத்திகரிக்கப்பட ஆவியானவரால் கொடுக்கப்பட்டது. அந்நியபாஷை வேண்டும் என்று ஒருபோதும் கேட்கக்கூடாது. சீஷர்கள் யாரும் அந்நியபாஷை வேண்டும் என்று கேட்கவும் இல்லை - கேட்கும்படி சபைகளுக்கு கட்டளையோ! ஆலோசனையோ எந்த சீஷனும் எழுதவில்லை.

(அறிவாற்றல்) பக்திவிருத்தி என்று சகோ.ஸ்டான்லி கூறுவதுபோல் பக்திவிருத்தி அந்நியபாஷையில் உண்டாகாது. பக்திவிருத்தி வேத வசனத்தின்மூலமாகத்தான் உண்டாகும் என்று வேதம் போதிக்கிறது. மற்றபடி க்ரபல... சுக்ரபல... பாபாபாபா என்று அந்நியபாஷை என்ற பெயரில் உளறுவதால் அல்ல.

மனம் அறிந்து உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிவரும் (நன்றி) துதியே தேவனுக்கு பிரியமானதாக இருக்கும்.

மற்றப்படி சகோ.ஸ்டான்லி, சகோ.லைனல் இவர்களின் BYM மிஷனரி புத்தகத்தில் எழுதப்பட்ட இந்த பிழையான உபதேசம் மிஷனரி ஊழியத்துக்கும், இவர்கள் ஆதாயம் செய்த மிஷனரி சபை மக்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. இப்படிப்பட்ட உபதேசம் இயேசுவே தெய்வம் என்று மிஷனரி பணியில் சுவிசேஷம் அறிவிப்பதற்கும் அந்நியபாஷை உபதேசம் மிகப்பெரிய தடையாகும் என்று உரிமையோடு எச்சரிக்கிறேன்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM