முதலாவது சமாரியா எப்படி உருவானது என்று பார்ப்போம். சாலமோனுடைய அரசாட்சிக்குப்பிறகு இஸ்ரவேல் தேசம் அவர்களுக்குள்ளேயே பிரிவினை ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்தது. 10 கோத்திரங்கள் சேர்ந்து இஸ்ரவேல் தேசமாகவும், 2 கோத்திரங்கள்
(யூதா, பென்யமின்) சேர்ந்து யூதா தேசமாகவும் பிரிந்தது. இந்த இரண்டு நாடுகளும் தங்களுக்கென்று தனித்தனியாக இராஜாக்களை ஏற்படுத்திக் கொண்டனர். யூதாவின் ராஜாவாக
ஆசா ஆண்டு கொண்டு இருக்கும்பொழுது இஸ்ரவேலை உம்ரி ஆரசாள்கிறார். இந்த உம்ரி சேமேரிடமிருந்து ஒரு மலையை விலைக்கு வாங்கி, அதில் கோட்டைகளைக் கட்டி அதற்கு
சமாரியா என்று பேரிட்டான்.
உம்ரிக்குப் பிறகு அவன் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலில் அரசாண்டபோது அவன் பாகாலுக்கு ஆலயம் கட்டி தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தான். இந்த மக்களின் பாகால் வணக்கத்தை தீர்க்கதரிசிகள் அனைவரும் கண்டித்தனர். இஸ்ரவேலர் சமாரியாவிலே தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருந்தபடியினால் தேவகோபம் ஏற்பட்டு அதன் விளைவாக சமாரியாவிலுள்ள இஸ்ரவேலர் அசீரியரால் கி.மு.722ல் சிறைபிடித்துக் செல்லப்பட்டனர். அசீரியா ராஜா சர்கோன் 2 பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பரிவாமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாக சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான். இவர்கள் சமாரியாவை சொந்தமாய் கட்டிக்கொண்டு அதன் பட்டணங்களிலே குடியிருந்தார்கள். (1 இராஜா 17:24). இப்பொழுது சமாரியாவில் பல்வேறு மதங்களும் உண்டானது. அதனால் சமாரியாவில் உள்ள இஸ்ரவேலரின் ஆவிக்குரிய வாழ்க்கையில் கலப்படம் உருவானது. |