கி.மு.4ம் நூற்றாண்டிற்குப் பிறகு சமாரியர் எருசலேமில் வந்து தேவனை வழிபடுவதை யூதர் தடுத்தனர். இப்படி யூதருக்கும், சமாரியருக்கும் இடையே ஏற்பட்ட மார்க்க சம்பந்தமான பிளவு, அரசியலிலும் அதிகமாக தலை தூக்கியது. யூதருக்கு எருசலேம் புண்ணிய ஸ்தலமாக இருப்பதைப்போல சமாரியரும் தங்களுக்கென்று கெரிசிம் மலையில் கோயில் கட்டிக்கொண்டனர். யூதருடைய நியாயப் பிரமாண நூலைப்போல சமாரியரும் தங்களுக்கு ஒரு நியாயப் பிரமாண நூலை உருவாக்கிக்கொண்டனர். யூதருடைய பண்டிகைகளைப்போல சமாரியரும் தங்களுக்கு பண்டிகைகளை ஆசரித்த படியினால் யூதருக்கும், சமாரியருக்கும் பகை விரிந்தது. முடிவு யூதர்கள் சமாரியர்களுடனே சம்பந்தங்கலவாதவர்கள் ஆனார்கள். (யோ 4:9). சமாரியா, யூதருக்கு விரோதமான நாடாயிற்று.


ஆண்டவர் இயேசுவும் - சமாரியாவும்:

இந்த நிலையில்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சமாரியரை சிநேகிக்கவும், சத்துருக்களை நேசிக்கும் பண்பை சீசர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் போதிக்கலானார். சமாரியா தீட்டாகக் கருதப்பட்ட அந்நாட்களில் முதன்முறையாக சமாரியாவில் பிரவேசித்த முதல் யூதன் இயேசு. பாரம்பரிய பகையை உடைத்து அவர் சமாரிய ஸ்தீரியிடம் ஜீவதண்ணீரைக் குறித்து பேசிக்கொண்டிருந்ததை சீசர்கள் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். மேலும் ஆண்டவர் சமாரியவில் இரண்டு நாள் தங்குகிறார் (யோ 4:40). சமாரியர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததைக்கண்டு யூத சீஷரான யோவானும், யாக்கோபும் சமாரியரை தீக்கிரையாக்கிடத் துடித்தபோது ஆண்டவர் இயேசு அவர்களை அதட்டுகிறார் (லூக் 9:52,53). சமாரியரை அழிப்பதற்காக அல்ல இரட்சிக்கவே வந்தேன் என்கிறார். நல்ல சமாரியன் உவமையைச் சொல்லி சீசர்களின் கண்களைத் திறந்தார் (லூக் 10:30-37). ஆண்டவர் சுகமாக்கின 10 குஷ்டரோகிகளில் நன்றியுள்ளவனாக அந்த சமாரியக் குஷ்டரோகியைத்தான் இயேசுகிறிஸ்து காட்டுகிறார்.


சமாரியரும் - கிறிஸ்துவின் சீசர்களும்:

ஆண்டவர் தொடக்கத்தில் தன்னுடைய சீசர்களை அனுப்பும் பொழுது நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும் இருங்கள் என்கிறார் (மத் 10:5) நீங்கள் சமாரியாவுக்கு போகவேண்டாம் என்கிறார். ஆனால் கடைசியில் அப் 1:8ல் நீங்கள் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றும் கூறுகிறார். ஏன் ஆண்டவர் முன்னுக்குப்பின் முரணாக அவ்விதம் கூறினார். ஆவியானவரின் ஆளுகைக்குள் ஒருவன் வரும்பொழுதுதான் சத்துருவை சிநேகிக்கும் தேவ அன்பு அவனில் ஊற்றப்படும் (ரோம 5:5). தொடக்கத்தில் ஆவிக்குரிய முதிர்ச்சி அடையாத சீசர்கள் சமாரியாவிற்கு போனால் வீணான வாக்குவாதத்திலும் வீணான சண்டையிலும்தான் ஈடுபடுவார்கள். அதனால்தான் தொடக்கத்தில் ஆண்டவர் போகவேண்டாம் எனக் கூறிவிட்டார்.


இரட்சிக்கப்பட்ட சமாரியரிடத்தில் பரிசுத்த ஆவியானவர்
வாசம் பண்ண தாமதித்தது ஏன்?

இப்படிப்பட்ட விரோத நாடாகிய சமாரியாவுக்கு சுவிசேஷத்தை பிலிப்பு கொண்டு சென்று அவர்களை விசுவாசத்திற்குள் வழிநடத்துகிறான். பிலிப்புவின் ஊழியத்திலே அவர்கள் விசுவாசிகளாக மாறிவிட்டார்கள். விசுவாசித்த அப்பொழுதே அவர்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றிருக்க வேண்டும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் சமாரியாவில் மட்டும் வாசம் பண்ணவில்லை. சமாரியாவுக்கு வெறும் மனந்திரும்புதல் மட்டும் இருந்தது.

பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வாசம் பண்ண தாமதித்தது ஏன்? பேதுரு யூத முறைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். யூத வைராக்கியம் கொண்டவன், புறஜாதியார் கிறிஸ்தவர்களாக முடியாது. யூத முறைமைகளைப்பின்பற்றி விருத்தசேதனம் பண்ணினால்தான் அவர்கள் கிறிஸ்தவர்களாக முடியும் என்கிற வைராக்கியம் கொண்டவர். சமாரியரை அக்கினிக்கு இரையாக்கத் துடித்தவர்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM