ஆவிக்குரிய வியாபாரிகள்
ஜெபகோபுரங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.

இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரங்களுக்கு இப்போது ஆட்கள் வருவது குறைந்தது. இதைக்குறித்து விசாரித்தபோது நாலுமாவடி திறப்பின் வாசலுக்கு பஸ்கள், வேன்கள் மூலம் சில ஏஜன்ட்கள் சபை மக்களை அழைத்துக்கொண்டு போகிறார்கள். ஒவ்வொரு CSI ஆலயங்களுக்குமுன் ஆட்களை வரவழைத்து அவர்களை ஏற்றிக்கொண்டு நாலுமாவடிக்கு கொண்டுபோய் விடுகிறார்களாம். கழக கட்சி கூட்டங்களுக்கு ஆள்சேர்க்க அவர்களுக்கு சாப்பாடு பொட்டலங்களை கொடுப்பதைப்போல கொடுக்கிறார்களாம். (தமிழக அரசியல் கழகங்களில் கொடுப்பது பிரியாணி பொட்டலம். இங்கு என்ன பொட்டலமோ தெரியவில்லை). இப்படி இலவச பயணம், இலவச சாப்பாடு நாலுமாவடியில் கொடுப்பதால் ஜனங்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரங்களுக்கு வருவதில்லை என்கிறார்கள். ஆனால் ஜெபகோபுர கட்டிடங்களுக்கு வாடகை செலுத்த பணம் வேண்டும். அந்த கட்டிடங்களை அல்லது அந்த ஜெபஅரங்கு(Auditorium)களை பராமரிக்க பணம் வேண்டுமே? என்ன செய்ய? மேலே நீங்கள் படத்தில் பார்த்த ஜெபகோபுரங்களைப்போல, ஜெபிக்கும் இடம் கல்யாண மண்டபமாக மாறிவிட்டது. இப்போது கல்யாணம் நடத்த, நிச்சியதார்த்தம் நடத்த, பிறந்தநாள் வைபவங்கள் நடத்த, மற்ற சபைகளின் கூட்டங்களை நடத்த ஜெபகோபுரம் வாடகைக்கு விடப்படுகிறது. ஜெபகோபுர கட்டிடத்தின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள விளம்பரபோர்டைப் பாருங்கள். நல்ல பிஸனஸ்! அல்லவா?.


இஸ்ரேல் ஜெபகோபுர லாட்ஜ் மற்றும் ஓட்டல்:

இந்த மாதம் இயேசு அழைக்கிறார் குடும்பம் சுமார் 1000 ஆட்களை இஸ்ரவேல் தேசத்துக்கு அழைத்து செல்லுகிறார்கள். அங்கு கட்டப்பட்டிருக்கும் இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரத்தை சில மாதத்துக்குமுன் குறிப்பிட்ட சிலரைமட்டும் அழைத்து திறப்புவிழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். இந்த கட்டிடத்தை படத்தில் பாருங்கள். ஜெபகோபுரம் என்று அழைக்கப்படும் இந்த பல மாடி கட்டிடத்தில் ஜெபிக்க ஒரு சிறு அறையும், அலுவலத்துக்கு ஒரு அறையும், அலுவலர் தங்க ஒரு அறையும்மட்டும் இருந்தால் போதுமானது. ஆனால் நெடுக உயர்ந்து நிற்கும் மீதியுள்ள பலமாடி கட்டிடங்களும் அறைகளும் எதற்கு? கேள்விப்பட்டதை அறிவிக்கிறேன். அந்த கட்டிடத்தில் வேறு சில வியாபார கம்பெனி அலுவலகங்கள் இயங்க அவர்களிடம் பெரிய தொகையாக அட்வான்ஸ் பெறப்பட்டதாக சில செய்திகள் கூறுகிறது.

இப்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் புனித யாத்திரை என்பது அனைத்து கிறிஸ்தவ சபைக்குள்ளும் அதிகமாகிவிட்டது. கிறிஸ்தவ சபை மக்களுக்கு இஸ்ரேல் புனித யாத்திரை என்ற ஆசை தொற்று வியாதிபோல் பரவி பலர் உள்ளத்தில் இஸ்ரேல் போவது மிகப்பெரிய ஏக்கமாக மாறிவிட்டது. கிறிஸ்தவ சபைமக்கள் தாங்கள் மரிப்பதற்குள் எப்படியாவது ஒருமுறை இயேசுகிறிஸ்து நடந்த இடம், சிலுவையில் அறையப்பட்ட இடம், ஜெபித்த இடம், கல்லறை ஆகிய இடங்களுக்கு சென்று டிவி நிகழ்ச்சியில் பால்தினகரன் குடும்பம் முகம்குப்புற விழுந்து முத்தம் செய்ததைப்போல் தாங்களும் முத்தம் செய்யவேண்டும் அதன்பிறகு நான் செத்துவிட்டால் அதுபோதும் என்று புற மதத்தினரைப்போல் ஏங்குகிறார்கள். இப்படி புறமதத்தினர் காசி யாத்திரை செல்வதைப்போல் ஏங்குகிற கிறிஸ்தவர்கள் இப்போது ஏராளமாகி விட்டனர்.

சகோ.DGS.தினகரன் அவர்கள் தன் மகனை திட்டமிட்டே வியாபார துறையில் டாக்டரேட், MBA., PhD., படிக்க வைத்த அவரின் ஆசையை இஸ்ரேலில் இவர்கள் வாங்கிய இடத்தில் ஜெபகோபுரம் கட்டியதாலும், காருண்யா கல்லூரி கட்டப்பட்டதின் மூலமும் பூர்த்தியாக்கிவிட்டது. தம்பி.பால்தினகரன் அவர்கள் தகப்பனின் ஆசையை நிறைவேற்றி, ஏமார்ந்த மக்கள் கொடுத்த காணிக்கைகளைக்கொண்டு பல பில்லியன் அதாவது மில்லியன் அல்ல, பில்லியன் கணக்கில் பணத்தை செலவழித்து அந்த உயர்ந்த பலமாடி கட்டிடங்களை எருசலேமில் வாங்கிவிட்டதாகவும், அந்த கட்டிட திறப்புவிழாவும் நடைபெற்றதாகவும் கேள்விப்பட்டேன். எருசலேமில் உள்ள இந்த ஜெபகோபுரத்துக்கு ஒரு இஸ்ரேல் நாட்டு ஒரு யூதனாவது ஜெபிக்க வருவானா? வேறு யார் அங்கு ஜெபிக்க வருவார்கள்!. ஏற்கனவே இந்தியாவில் ஜெபகோபுரத்துக்கு போவோர் எண்ணிக்கை இறங்கு முகமாகிவிட்டது. அதனால்தான் ஜெபகோபுரம் வாடகைக்கு விடப்படும் என்ற போர்டையே ஆதாரமாக வெளியிட்டிருக்கிறேன். ஆக இந்தியாவிலேயே நிலைமை இப்படியிருக்க இஸ்ரேலில் யார் ஜெபிக்க கூடுவார்கள்?. தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள் விமானம்மூலம் இஸ்ரேலுக்கு சென்று தினசரி ஜெபிக்கமுடியுமா? ஆகவேதான் இவர்களின் வியாபார மூளையில் தோன்றியதுதான் இஸ்ரேல் ஜெபகோபுர ஓட்டல் அல்லது லாட்ஜ் என்பதாகும்.

இது உலக கவர்ச்சியான நல்ல வியாபாரமாகும். இந்தியாவிலிருந்து கிறிஸ்தவர்கள் அல்லாத ஏராளமானவர்களும் தினசரி வடஇந்தியா முதல் கன்னியாகுமரி வரை வாழும் கிறிஸ்தவர்களும், மற்ற புறமத்தினரும் ஏராளமாக இஸ்ரேல் புனித பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு அங்கு ரொட்டி, அறைவேக்காடு கோழி, மாடு இறைச்சி, பச்சை இலைகள் கொண்ட சேன்ட்விட்ச் அடங்கிய ரொட்டி துண்டுகள் ஆகியவைகள்தான் உணவாக கிடைக்கும். ஆனால் அவைகளை நம் இந்தியர்கள் சாப்பிட விருப்பம் இல்லை. ஆகவே இந்திய ஆகாரம், தமிழ்நாட்டு இட்லி, வடஇந்திய ரொட்டி அல்லது நான் என்று அழைக்கப்படும் ரொட்டி போன்ற அனைத்து இந்தியவகை ஆகாரம், ஜெபகோபுர ஓட்டலில் மட்டுமே கிடைக்கும் என்றால் இந்தியாவிலிருந்து இஸ்ரேல் வரும் அனைத்து டூரிஸ்ட்களையும், இந்த விளம்பரம் வெகுவாக கவருமே! இந்தியா நாட்டு சாப்பாடுக்கு ஒரே ஓட்டல் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுர ஓட்டலாகும் என்பதுதான் இதன் சிறப்பு. அங்கு தங்கும் அறைகளில் கிடைக்கும் வாடகையே தினசரி பல லட்சங்கள் லாபம் தரும் அதுவே நல்ல தொழிலுமாகும் என்கிறார்கள். இந்த ஜெபகோபுரத்தின் திறப்புவிழா சமயத்தில் அந்த ஜெபகோபுரத்தில் ஜெபித்தது சுமார் 20 நிமிடம் மட்டுமே என்றனர். இனிவரும் நாட்களில் ஜெபகோபுரத்தில் எத்தனைபேர் உட்கார்ந்து ஜெபிக்க போகிறார்களோ!. இஸ்ரேலை சுற்றி பார்க்க டூர் நாட்கள் மொத்தம் 7 அல்லது 10 நாட்கள் மட்டுமே. இஸ்ரேலை சுற்றிப்பார்க்க வருகிறவர்களுக்கு முக்கிய இடங்கள் முழுவதையும் சுற்றிப்பார்க்கவே நேரம் போதாது. அப்படி இஸ்ரேலை சுற்றி பார்த்து கொல்கதாமலை ஏறிவந்தாலே போதும், உடனே அறைக்கு சென்று அப்பாடா என்று களைப்புடன் படுக்க தோன்றுமா? ஜெபகோபுர AC-அறைக்கு சென்று ஜெபிக்க தோன்றுமா?. இதில் கவனிக்கவேண்டியது: யூதர்களுக்காக விசுவாசிகள் ஜெபிக்க எருசலேமில்தான் ஜெபகோபுர கட்டிடம் கட்டி ஜெபிக்கவேண்டுமா? டெல்லி எம்பிகளுக்காக மந்திரிமார்களுக்காக ஜெபிக்க பார்லிமெண்ட் கட்டிடம் அருகே பல கோடிகளுக்கு கட்டிடம் வாங்கி பார்லிமெண்ட்டை பார்த்தப்படி ஜெபித்தால்தான் ஜெபத்தை கர்த்தர் கேட்பாரா? அவரவர்கள் இருக்கும் இடத்தில் ஜெபித்தால் அந்த ஜெபம் கேட்கப்படாதா? யோசியுங்கள்.

பிரச்சனையுள்ள இடத்தில் ஜெபித்தால்தான் கர்த்தர் கேட்பார் என்றால் தினசரி குண்டு மழையில் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் சிரியா, பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் அங்கு சென்று ஜெபகோபுரம் அமைக்கலாமே?. இவர்கள் ஏன் அந்த இடத்தில் ஜெபகோபுரம் கட்டவில்லை?

இயேசு அழைக்கிறார், காருண்யா கல்லூரி யாவும் டிரஸ்ட் அறங்காவலர் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை. டிரஸ்ட்டில் இயேசு அழைக்கிறார் குடும்பத்தினர்மட்டும் மெம்பர்களாக இருக்கிறார்கள். பேருக்கு வெளியிலிருந்து ஒன்று, இரண்டு பேர் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுபவர்களை பார்த்து சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆகவே குடும்ப பரம்பரையாக சொத்தாக இயேசு அழைக்கிறார் - பால்தினகரன் குடும்பம் மட்டும் ஏகபோக உரிமையோடு கோடிக்கணக்கான லாபத்தை அனுபவிக்கலாம். சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டிருக்குமேயானால் பால்தினகரன் குடும்பத்தினர் அதன் லாபத்தை ஏகபோக உரிமையாக அனுபவிக்க இயலாது. ஆக உலககெங்கும் பல பில்லியன் சொத்துக்கள் பால்தினகரன் பிள்ளைகளுக்கு தினகரன் சந்ததிக்கு இப்போதே ஆயத்தமாகிவிட்டது என்று சட்டம் படித்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இப்போதெல்லாம் குடும்ப ஊழியம்கூட குடும்ப சொத்துக்களாக மாறிவிட்டது.

எருசலேம் ஜெபகோபுர லாட்ஜில் அங்கு தங்க வருபவர்களுக்கொல்லாம் இயேசுவின் கல்லறையை காட்டவும், சிலுவையில் அறைப்பட்ட இடத்தை காட்டவும் இவர்களே நல்ல கைடுகளையும் ஏற்பாடு செய்வார்கள்.

கைகாட்டிமரம் பலருக்கு வழிகளை காட்டும், போர்டில் எழுதி வைத்த பரலோக வழியைக்கூட அந்த கைகாட்டி மரம் காட்டும்.

ஆனால்

கைகாட்டி மரம் மட்டும். மேலே குறிப்பிட்ட அந்த இடங்கள்லேயே நிற்கும். அந்த கைகாட்டி மரம் மட்டும் எங்கும் போகாது. நட்ட இடத்திலேயே அது நிற்கும். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று ஜெபிப்போம்.

(தொடர்ந்து இஸ்ரேல் புனித பயணம் பற்றிய கட்டுரையையும் வாசியுங்கள்).


இஸ்ரேல் புனித பயணம்

இந்தியாவில் தமிழ்நாடு அரசு கிறிஸ்தவர்களுக்கு புனித பயண சலுகை அறிவித்த பிறகு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் செல்வது அதிகரித்திருக்கிறது. ஆட்சிக்கு வருகிறவர்கள் ஓட்டுக்காக மக்களை கவரும் வண்ணம் பல சலுகைகள் வழங்குவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் கிறிஸ்தவ தலைவர்கள் இதை புனிதப் பயணம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா? அதை தெளிவுப்படுத்த வேண்டிய கடமை கிறிஸ்தவ தலைவர்களுக்கு இருக்கிறதல்லவா?.

இந்திய கலாச்சார பின்னணியில் புனிதப் பயணம் என்றாலே அது மதசடங்கு என்பதாக கருதப்படும். மற்ற மதங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் கிறிஸ்தவ மார்க்கம் மட்டுமே கிருபை மார்க்கமாகும். உலகத்தில் உள்ள அனைத்து மதமும் கிரியை மார்க்கமாகும். நோன்பு இருப்பது, மொட்டை அடிப்பது, காவடி எடுப்பது, குறிப்பிட்ட புனித ஸ்தலங்களுக்குப் பயணம் செல்வது இவையெல்லாம் தாங்கள் முக்தியடைவதற்கு மனிதன் உலகத்தில் சேர்த்து வைக்கும் புண்ணியங்களில் ஒன்றுதான் புண்ணியஸ்தலம் சென்று வருவது என்று கருதப்படுகிறது.

ஆனால் கிறிஸ்தவம் அப்படி போதிக்கவில்லை நாம் நம்முடைய புண்ணியத்தினாலே முக்தியடையாமல் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து நமக்கு புண்ணியத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதை விசுவாசிப்பதினால் அல்லது நம்புவதினால் மட்டுமே நமக்கு முக்தி(இரட்சிப்பு) கிடைக்கிறது. (எபே 2:8, 2 தீமோ 1:9) பாவிகளாகிய மனிதர்கள் செய்யும் எந்த புண்ணியமும் பரிசுத்த கடவுளுக்கு அருவருப்பானது என்று வேதம் போகிக்கிறது. (ஏசா 64:6).

இயேசுகிறிஸ்து பிறந்த, வளர்ந்த, மரித்த, உயிர்த்த இடங்களை சென்று பார்ப்பதில் தவறில்லை. ஏனென்றால் இயேசுகிறிஸ்து கற்பனை கதையில் வருகின்ற ஒரு கதாநாயகன் அல்ல. அவர் வரலாற்றில் மனிதராக வந்த தேவகுமாரன் என்பது விளங்கும். ஆனால் உண்மை கிறிஸ்தவர்களாகிய நாம் காணாதிருந்தும் விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள் (யோவான் 20:29,2 கொரி 5:6) என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் எங்கே மதம் உள்ளே நுழைகிறதோ அங்கே வியாபாரமும் உள்ளே நுழைந்துவிடும். இஸ்ரேல் போவதினால் புண்ணியம் கிடைக்கும். அங்கிருந்து கொண்டுவரப்படும் யோர்தான் நதியின் தண்ணீர், ஒலிவ எண்ணெய், திராட்சை ரசம் போன்றவை புனிதமானது என்று யாராவது சொன்னால் அது முட்டாள்தனமானது. அதுமட்டுமல்ல, அது விக்கிரகமாக மாறும். ஆகவே உண்மை விசுவாசிகள் விழிப்பாயிருப்போம். மற்றவர்களையும் எச்சரிப்போம்.

ஜாமக்காரன்: இதுவரை இஸ்ரேல் புனித பயணம் என்ற தலைப்பில் வாசித்தது ஒரு பத்திரிக்கையிலிருந்து எடுத்தாளப்பட்டதாகும். மேலே கூறப்பட்டதுபோல கிறிஸ்தவர்களும் இன்று புனித பயணம் மேற்கொள்வதும் மொட்டையடிப்பதும் இவை யாவும் புறமதத்தினரின் செயல்கள் என்று உணருவதில்லை.

(திருநெல்வேலி) பாளையங்கோட்டையில் CSI சபை குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு ஒருவருடம் முடியப்போகிறது. தலை முடியெடுக்கவேண்டும் அதற்காக நாங்கள் சொந்தக்காரர்களையும் உடன் அழைத்துக்கொண்டு குடும்பமாக வேளாங்கண்ணி சென்று குழந்தைக்கு தலை மொட்டையடித்துவிட்டு வரும் வழியில் சகோ.தினகரன் உண்டாக்கிய காருண்யா வளாகத்திலுள்ள பெதஸ்தா குளமும் கண்டுவிட்டு அந்த குளத்தில் காணிக்கைகளையும் போட்டுவிட்டு திரும்பபோகிறோம் என்று எழுதி புறப்படும் தேதியை குறிப்பிட்டு எங்கள் பிரயாணத்தை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கும்படி எனக்கு கடிதம் எழுதினார்கள். உடனே நான் பதில் எழுதினேன். நீங்கள் பல வருடமாக ஜாமக்காரன் வாசிக்கும் என் வாசக குடும்பமாகும். அதனால் உங்கள் பிரயாணத்தில் ஆபத்து நேரிடாமல் சுகமாக வந்துசேர மட்டும் ஜெபிப்பேன். ஆனால் குழந்தைக்கு செய்யும் மொட்டைக்காக ஜெபிக்கமாட்டேன். இத்தனை வருடங்களாக ஜாமக்காரனை வாசிக்கும் குடும்பத்தினராக இருந்து இந்த முட்டாள்தனமான மொட்டை அடிக்கும் செய்கையை குறித்து தெளிவில்லாமல் போனதென்ன? மொட்டையடிக்க லோக்கலில் முடிவெட்டுபவர்கள் இல்லையா? உங்களுக்கும் இந்துமத மக்களுக்கும், கத்தோலிக்க சபை மக்களுக்கும், திருப்பதி-பழனி போகும் மக்களுக்கும் ஒருவித்தியாசமும் இல்லாமல் போனதே! உங்கள் செயலுக்காக வெட்கப்படுகிறேன் என்று எழுதினேன்.

இப்படி நான் பதில் எழுதிய மறு மாதத்திலிருந்து அவர்களே வழமையாக எனக்கு அனுப்பும் காணிக்கையை நிறுத்திவிட்டனர். பல வருடங்களாக மாதாமாதம் காணிக்கை அனுப்பிக்கொண்டிருந்த அந்த குடும்பம் நான் கொடுத்த ஆவிக்குரிய ஆலோசனையால் கோபப்பட்டு காணிக்கையை நிறுத்திவிட்டனர். இப்படி நான் பல விஷயங்களில், குறிப்பாக திருமண விஷயங்களில் நேர்ச்சை என்று கூறி ஜெபிக்க கேட்டுக்கொண்ட குடும்பங்களுக்கு, திருமணத்திற்கு மாப்பிள்ளை-பெண் தேடும் விஷயத்திலும் டவுரி (வரதட்சணை) கொடுக்கும் விஷயத்தில் நான் வசன அடிப்படையில் அவர்களுக்கு ஆலோசனை எழுதியதாலும் அது அவர்கள் எண்ணத்துக்கும், தீர்மானத்துக்கு விரோதமானதாக இருந்ததால் உடனே அவர்கள் என்மேல் வெறுப்பு கொண்டு எனக்கு அவர்கள் தண்டனை கொடுப்பதாக எண்ணிக்கொண்டு தொடர்ந்து அனுப்பும் காணிக்கையை நிறுத்தி விடுவார்கள். நான் என் வாசகர் பலருக்கு அவர்களுக்கு பிடிக்காத நான் எழுதிய நல்ல ஆலோசனையால் நான் இழந்த வாசக குடும்பங்கள் ஏராளம். இவர்களின் அறியாமை நினைத்து பரிதாபப்படுகிறேன். மேலே நான் எழுதிய மொட்டை கேசில் மொட்டையடிக்கும் நிகழ்ச்சிக்கு ஆதரவாக நான் எழுதியிருந்தால் வேளாங்கண்ணியிலிருந்து இவர்கள் வீடு திரும்பியவுடன் பெரிய தொகையை காணிக்கையாக எனக்கு அனுப்பியிருப்பார்கள்.


என்றைக்கு இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் திருந்தப்போகிறார்களோ?.

சுமார் 32 வருடத்துக்கு முன்னாள் எகிப்து நாட்டுக்கு நான் 3 நாள் கன்வென்ஷனுக்காக சென்றபோது அந்த நாட்டில் கூட்ட ஏற்பாடுகளை செய்த சகோ.சாதிக் (இஸ்லாமிலிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டு மிஷனரி ஊழியம் செய்பவர்) என்பவர் அவர் கூறினார். நான் இந்தியா திரும்பும் வழியில் 3 நாட்கள் அருகில் உள்ள இஸ்ரேல் தேசம் சென்று சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்தே நீங்கள் இந்தியா திரும்பலாமே என்று எனக்கு ஆலோசனை கூறி, அவரே விமான டிக்கட் ஏற்பாடுகளும் அதற்கேற்றபடி எனக்காக செய்திருந்தார். இஸ்ரேல் நாட்டை சுற்றி காண்பிக்க அவருடைய நண்பரான ஒரு யூதன் ஒருவரையும் என்கூட அனுப்பி அருமையான ஏற்பாட்டை எனக்காக செய்தார். இஸ்ரவேலில் எல்லா இடங்களுக்கும் என் கூடவே உடன்வந்த அந்த யூதன் இயேசுவின் கல்லறைக்குள் மட்டும் வரவில்லை. நான் மட்டும் உள்ளே சென்றேன். டூரிஸ்டுகளாக வந்த பல்வேறு நாட்டு கத்தோலிக்க பிஷப்மார்கள், கன்னியாஸ்திரீகள் என்று பலர் என்னோடு கல்லறைக்குள் நுழைந்தனர். நூற்றுக்கணக்கான மெழுகுதிரிகள் அங்கு எரிந்துகொண்டிருந்தன. அங்கு இயேசுகிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிற திட்டு ஒன்று உண்டு. எல்லாரும் சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து அதை தொட்டு வணங்கினார்கள். சிலர் அந்த திட்டை முத்தம் செய்தார்கள். சிலர் கண்ணீர்விட்டு அழுதார்கள். நான் மட்டும் நின்றவாறு பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கு நின்ற பலர் என்னை சந்தேக கண்களோடு பார்த்தனர். சில நிமிடங்களில் எல்லாரும் வெளியேறினோம், அப்போது கன்னியாஸ்திரீகளுக்குள் தலைவியான மதர்சுப்பீரியருடன் நான்கு பேர் என் அருகே வந்து என்னை பார்த்து "நீங்கள் கிறிஸ்தவரா?" என்றனர். "ஆம். ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன். "பிஷப் முதல் நாங்கள் அனைவரும் வேற்று மதத்தினர் சிலரும் இயேசுவின் கல்லறையில் விழுந்து வணங்கும்போது நீங்கள் விழவுமில்லை, கைகூப்பி வணங்கவுமில்லை. காரணம் அறியலாமா?" என்றனர். "நீங்கள் எல்லாரும் முகங்குப்புற விழுந்து வணங்கின அந்த இயேசுகிறிஸ்து எனக்குள் வாழ்கிறார் (யோ 14:24). அப்படியிருக்க வெறும் கல்லறையை நான் ஏன் வணங்கவேண்டும்?. இயேசுகிறிஸ்து செத்துப்போனவர் அல்ல அவர் உயிரோடு இருக்கிறார்" என்றேன். "ஆனாலும் மரியாதைக்காவது நீங்கள் வணங்கியிருக்கலாமே" என்றார்கள். நான் சொன்னேன். "அப்படி அந்த வெறும் மண்திட்டை நான் வணங்கியிருந்தால் அது நிச்சயம் விக்கிரக ஆராதனையாக அமைந்திருக்கும். நம் தேவன் அதை விரும்பமாட்டார், மட்டுமல்ல அவர் இந்த செய்கைக்காக மிகவும் கோபப்படுவார்" என்று கூறினேன். அதற்குள் பலர் என்னை குழ்ந்துகொண்டனர். ஒருவரிடம் மட்டும் கையில் ஆங்கில வேத புத்தகம் இருந்தது. அதை வாங்கி கிறிஸ்து நம் இருதயத்துள் எப்படி பிரவேசிக்கிறார் எப்போது பிரவேசிக்கிறார், அதை எப்படி நாம் உணரமுடியும் என்பதை விளக்கினேன். அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு நீங்கள் எந்த சபையை சார்ந்தவர் என்று கேட்டார்கள். நான் ஒரு CSI சபையை சேர்ந்தவன் என்று கூறினால் அவர்களுக்கு விளங்காது என்பதால் என் சபை எந்த பெயரில் இருந்தாலும் நான் இந்த வேத வசனத்தின்படி வாழ்கிறவன் என்று அவர்களுக்கு பதில் அளித்தேன். அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். எனக்கும் மனம் திருப்தியாக இருந்தது. இஸ்ரேல் நாட்டில் கிறிஸ்து இம்மானுவேலாய் நமக்குள் வாசம் பண்ணவிரும்புகிறவர் என்பதை கூற எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று பூரித்தேன். ஆண்டவரை துதித்தேன்.

சமீபத்தில் இயேசு அழைக்கிறார் டிவி நிகழ்ச்சி இஸ்ரேல் ஜெபகோபுர விளம்பரத்தில் பால்தினகரனும் அவர் பிள்ளைகளும் ஒவ்வொருவராக பெத்லகேமில் இயேசு பிறந்ததாக கூறப்படும் இடத்தில் விழுந்து வணங்கி அந்த தரையை முத்தம் செய்தததைக் கண்டேன். அப்படியே அவர்களுடன் வந்த எல்லாரும் விழுந்து முத்தம் செய்து பால்தினகரனின் பிள்ளைகளின் செயலை பின்பற்றினார்கள். ஆகவேதான் அப்படி வணங்குவது விக்கிரக வணக்கத்துக்கு ஒப்பாகும். அது தவறு என்பதை வாசகர்கள் அறிய இதை எழுதினேன். இப்படிப்பட்ட புனித யாத்திரை விக்கிரக வணக்கத்துக்கு நேராக மக்களை வழிநடத்தும். அன்று கல்லறைக்கு வந்திருந்த மகதலேனா மரியாளோடும், மற்ற சீஷர்களோடும், தூதர்கள் கூறினதை ஞாபகப்படுத்துகிறேன். இயேசுவையா தேடுகிறீர்கள், அவர் இங்கில்லை என்றார்களே!, இஸ்ரவேல் செல்ல ஆசைப்படும் எல்லாருக்கும் கூறுகிறேன். இயேசு இல்லாத இடத்தில் உங்களுக்கு என்ன வேலை?. கிறிஸ்து வாழ்ந்த சரித்திர பிரசித்தப்பெற்ற இடங்களை பணம் இருப்பவர் சுற்றிப்பார்த்து வருவதில் பிழை ஏதுமில்லை. ஆனால் அந்த இடத்தை விக்கிரகமாக்கி வணங்கி வராதீர்கள்.

கோயமுத்தூர் IBT மொழிபெயர்ப்பு ஸ்தாபன தலைவர் சமீபத்தில் மறைந்த புரொபஸர் டாக்டர்.பன்னீர்செல்வம் அவர்கள் தன் பிரசங்கத்தில் கூறியதாவது: ஒரு நபர் அவரிடம் கூறினாராம்: "நான் இஸ்ரவேல் தேசத்துக்கு போகும் பாக்கியம் கிடைத்தது. அங்கு சீனாய் மலைக்கு சென்று அங்கு ஆண்டவரை தொழுதுகொண்டேன்" என்றாராம். அப்போது சகோ.பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டாராம், "சீனாய் மலைக்கு போன உங்களுக்கு மோசேக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட 10 கட்டளைகளைப்பற்றி தெரியுமா?" கொஞ்சநேரம் யோசித்து "ஒன்று இரண்டு மட்டும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. மற்றது மறந்துப்போனேன்" என்றாராம். "மோசே மூலமாக கர்த்தர் கொடுத்த கட்டளைகளைப்பற்றியே அறியாமல், அதற்கு கீழ்ப்படியாமல் இஸ்ரவேல் தேசத்துக்கும், எருசலேமுக்கும், சீனாய் மலைக்கும் போய் என்ன பிரயோஜனம். நீங்கள் பரலோகம் போகமுடியாதே!" என்றாராம்.

இப்படி பலர் இஸ்ரவேல் தேசத்தில் எருசலேம் சென்று அங்கேயே நான் மரித்தால் நான் பாக்கியம் செய்தவனாவேன் என்கிறார்கள். இரட்சிக்கப்பட்ட வேறு விசுவாசிகள் பலர் இஸ்ரவேல் பிரயாணத்தை மனதில் வைத்து அங்கு போகும்போது யோர்தான் நதியில் நான் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்பதற்காகவே பல வருடங்களாக ஞானஸ்நானம் எடுக்காமல் இருக்கிறேன் என்று பெருமையோடு கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஞானஸ்நானத்தை எங்கு எடுத்தாலும் பரலோகம் போகமுடியாதே!, பரலோகம் செல்ல மனந்திரும்புதல்தான் ஒரே ஒரு வழி. (யோ 3:3) என்று இயேசு கூறினார்.

இப்போதும் இந்தியாவில் திருச்சியில் ஒரு பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர் தன் சபையில் கொடுக்கும் திருவிருந்தில் ஒரு துளி யோர்தான் நதியிலிருந்து கொண்டுவந்த தண்ணீரை கலக்கிறேன் என்று அறிவித்ததால் அந்த திருவிருந்து கைக்கொள்வதற்காகவே அந்த குறிப்பிட்ட சபைக்கு சென்ற பல முட்டாள் கிறிஸ்தவ விசுவாசிகள் இன்னும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சரளமாக அந்நியபாஷை பேசுகிறவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இயேசுகிறிஸ்து வாழ்ந்த சரித்திர பிரசித்தி பெற்ற இடம், அவர் சிலுவை சுமந்த சரித்திர பாதை சிலுவையில் அறையப்பட்ட கொல்கதாமலை இவைகளை பார்ப்பது நமக்குள் வாழும் இயேசுவைப்பற்றிய விசுவாசத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கவேண்டுமே. தவிர எருசலேம் ஆலய மதில் அருகேயும் கொல்கதா மலைக்கும் சென்று ஜெபித்தால் கர்த்தர் விசேஷமான முறையில் நம்மை கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற குருட்டு பக்தி, உங்களுக்குள் வராமல் இருக்க பாருங்கள். எத்தியோப்பியாவிலிருந்து எருசலேமில் தொழுதுக்கொள்ள வந்த மந்திரியை பிலிப் என்ற ஊழியக்காரன் மூலமாக ஆண்டவர் பேசி ஆண்டவரை எங்கும் தொழுதுக்கொள்ளலாம் என்ற சத்தியத்தை அறியவைத்து இனி தொழுதுக்கொள்ள எருசலேம் வரவேண்டாம் என்று திருப்பி அனுப்பினாரே?. விபச்சார பாவத்தில் வாழ்ந்த சமாரிய ஸ்தீரிக்கு இயேசுகிறிஸ்து கூறிய ஆலோசனை எங்கும் கர்த்தரை தொழுதுக்கொள்ளலாம் என்பதாகும். ஆகவே இஸ்ரவேல் தேசம் சென்றுவர உங்களுக்கு பணவசதி - ஆரோக்கியம் ஆகியவை இருக்குமானால் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு உல்லாச பயணம் செல்வதுபோல சரித்திர பிரசித்திப்பெற்ற அந்த எருசலேம் கல்வாரிமலை, யோர்தான் நதி ஆகியவைகளை பார்த்து வரலாம், பிழையில்லை, ஆனால் (இஸ்ரவேல்) எருசலேம் சென்று வந்தால் பெரும் ஆசீர்வாதம் வரும். அது ஒரு புனிதபூமி என்று நினைத்து நீங்கள் அங்கு சென்றால், காசிப்போனால், கங்கைப்போனால் புண்ணியம் கிடைக்கும், பாவம் போகும் என்பதை போன்ற அவர்களின் தவறான எதிர்ப்பார்ப்புபோல ஒரு எண்ணம் உங்கள் மனதிலும் அப்படிப்பட்ட ஒரு சபலம் உண்டானாலும் போதும். அது விக்கிரகமாக கருதப்பட்டு தேவகோபம் நிச்சயம் உங்கள்மேல் வரும். ஒருவேளை இஸ்ரவேல் தேசம் சென்று அங்கு எருசலேம் அருகிலோ இயேசு சிலுவையில் அறையப்பட்ட கொல்கதாமலை சென்று பார்த்து அங்கேயே செத்துப்போனால் அல்லது எருசலேமில் தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது இருதய வியாதியாலோ நீங்கள் அந்த நாட்டில் மரித்துப்போனால் அதை நல்ல மரணம் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எங்கு மரித்தாலும் மனந்திரும்புதலின் அனுபவத்தோடு மரித்தால் மட்டுமே பரலோகம் போகமுடியும் என்பதை மறக்கவேண்டாம். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான். யோ 3:3.

டூரிஸ்ட் கம்பெனி வியாபாரம்: 10 டிக்கட் வாங்கினால் ஒரு டிக்கட் இலவசம். இப்படி சில ஏர் லைன்ஸ்ஸில் சலுகைகள் தருவதால் ஏராளமான ஊழியர்கள் இப்போது இஸ்ரவேல் டூர் விளம்பரம் செய்து தாங்களே ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் வருபவர்களுடன் கூடவருவதுபோல் கவர்ச்சி விளம்பரம் செய்தததை அறிந்தேன். சகோ.சாம்ஜெபதுரை, சகோ.மோகன் சி.லாசரஸ், சகோ.பால்தினகரன், சகோ.ஜான் சாலமோன் இன்னும் பலர் டூரிஸ்ட் கம்பெனி தொடங்கியிருப்பதாக அறிந்தேன். இவர்கள் ஜனங்களுக்கு நன்மை செய்வதாக நினைத்து டூரிஸ்ட் கம்பெனி முதலாளிகள் என்ற கெட்ட பெயரை சம்பாதித்துகொண்டார்கள்.

குறிப்பு: முடிவாக நான் வாசகர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் உங்களுக்கு பணம் அளவுக்குமேல் இருந்தால் இஸ்ரவேல் தேசத்துக்கு மட்டுமல்ல, பேதுரு ஊழியம் செய்த இத்தாலி, ரோம் போன்ற நாடுகளுக்கு டூரிஸ்டாக போய்வருவது என்பது உங்கள் ஆவிக்குரிய ஆழம் எப்படிப்பட்டது என்பதை காண்பிக்கும்.

ஆனால் ஒரு வேண்டுகோள்: நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் இஸ்ரவேல் தேச நாடுகளில் இயேசுகிறிஸ்துவை தேடாதீர்கள். அவர் வாழ்ந்த, நடந்த இடங்களை வணங்கி அதை புண்ணிய ஸ்தலமாக்கிவிடாதீர்கள். அங்கு விழுந்து வணங்கி முத்தம் செய்து கர்த்தர் வெறுக்கும் விக்கிரக வணக்க கிறிஸ்தவர்கள் என்ற தேவ கோபத்துக்கு ஆளாகாதீர்கள். அங்கு யோர்தான் நதியில் எடுக்கும் ஞானஸ்நானம் உங்களை பரிசுத்தமாக்காது. நீங்கள் பரலோகம் செல்ல அந்த ஞானஸ்நானம் உதவாது.

இஸ்ரவேல் போவதற்கென்று நேர்ச்சையோ, பணசேமிப்போ செய்யாதிருங்கள். அந்த பணத்தை இயேசுகிறிஸ்துவை ஒருமுறைகூட கேள்விப்படாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் மிஷனரி பணிகளுக்கு கொடுத்து உதவுங்கள். அதன்மூலம் பரலோகத்தில் உங்கள் பொக்கிஷத்தை சேர்க்கவும், சேமிக்கவும் பிரயோஜனப்படும். ஜெபித்து செயல்படுங்கள்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM