கேள்வி:விவாகரத்துப்பற்றி ஆகஸ்ட் மாத
ஜாமக்காரனில் 18ம் பக்கம் எழுதியுள்ள அந்த வாலிப பெண்
விவாகரத்து செய்யப்பட்டது அவள்மேல் குற்றம் இல்லை என்பது தெரிகிறது. ஆனால் அவளுக்கு மறுவாழ்க்கையில்லையா? அவள் புருஷன் உயிரோடு இருக்கும் வரை அவள் மறுவிவாகம் செய்யக்கூடாதா? அந்த வாலிபப்பெணணாகிய அவளுக்கு
மனிதாபமானத்துடன், மனிதநேயத்துடன் நீங்கள் ஏன் ஆலோசனை அவளுக்கு எழுதவில்லை. அவள் அப்படியே மனம்வெந்து சாகவேண்டியதுதானா? கிறிஸ்துவின் மனஉருக்கம், இரக்கம், அவளுக்கு இல்லையா?. அவளுக்கு நீங்கள் பதில் அளிக்காமல் அவள் கடிதத்தை அவள் ஆதங்கத்தை மட்டும் அவள் எழுதிய கடிதம்மூலம் அறிவித்துள்ளீர்கள்.
வேத சட்டப்படி புருஷன் உயிரோடு இருக்கும்வரை அவள் திருமணம் செய்யக்கூடாது என்றால், புருஷனை அவள்
கொலை செய்துவிட்டு அவள் வேறு திருமணம் செய்துகொள்ள வழி உண்டாக்குவதுபோல் இருக்கிறது. நீங்கள் ஜாமக்காரனில் எழுதியதுபோல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண் அல்லது ஒரு ஆண் விவாகரத்து செய்தவராக இருக்கிறார்கள். இதற்கு உங்கள் பதிலை நாங்கள் யாவரும் ஆவலாக எதிர்ப்பார்க்கிறோம்.
பதில்:விவாகரத்து விவகாரம் இத்தனைப் பெரிய மலைப்போன்ற பிரச்சனையாக எழும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. எத்தனை கடிதங்கள், எத்தனை
இ-மெயில்கள் எத்தனை எத்தனை வாலிப பெண்களின் கண்ணீரோடு கூடிய தொலைபேசி செய்திகள் எனக்கு வந்தது தெரியுமா!- அப்பப்பா கேள்விகள் கேட்டு என்னை நிலைகுலைய வைத்துவிட்டார்கள். இரவெல்லாம் எனக்கு இதே யோசனையாக இருந்தது.
மற்றொருவர் எனக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் மகளுக்கு இப்படி நேர்ந்தால் உங்கள் மருமகனை கொன்றுவிட்டு வேதசட்டப்படி மகளுக்கு மறுமணம் செய்து வைப்பீர்களா? என்றது என்னை குலுக்கிவிட்டது. எழுதியவரின் மனவேதனை உள்ளத்தின் ஆதங்கம் எனக்கு புரிகிறது.
அன்பானவர்களே!, கிறிஸ்தவ வாழ்க்கை நம் இஷ்டம்போல் வாழும் வாழ்க்கை அல்ல. மன இரக்கம், மனிதநேயம், மனிதாபிமானம் இவைகளுக்கு உலக நீதிமன்ற சட்டத்திலேயே இடம் இல்லையே!.
டெல்லி மாநகரில் ஒரு பெண் நிருபரை நான்கு பேர் கொடூரமாக கற்பழித்தார்கள். வேறு ஒரு இடத்தில் ஒரு பெண்ணை கற்பழித்து கொன்றுபோட்டார்கள். குற்றவாளிகள் அகப்பட்டார்கள். குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள். அதில் ஒருவன் என்னை தூக்கில் போடுங்கள் என்று கத்திக்கொண்டிருக்கிறான். அதற்குள் இவர்களில் 18 வயதுக்கு கீழ்உள்ள சிறுவனும் கற்பழித்த குற்றவாளியாவான். அவனுக்கு தூக்கு தண்டனையில்லை. சீர்திருத்தப்பள்ளியில் 3 வருடம் இருக்கவேண்டும். இதுதான் தீர்ப்பு.
பெண்கள் சங்கம் மற்ற சங்கங்கள் யாவும் அவனுக்கு
தூக்கு தண்டனைத்தான் கொடுத்தாக வேண்டும் என்று
ஊர்வலம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவி. திருமதி.சுஷ்மா சிவராஜ் அவர்களும் மரணதண்டனைத்தான் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கூறுவது என்னவென்றால் குற்றத்துக்கு என்ன தண்டனை என்று சட்டப்புத்தகம், நீதிமன்ற சட்டம் ஆகிய இவைகளில் எழுதியுள்ளபடிதான் தீர்ப்பு கூறமுடியுமே தவிர மக்களின் அபிப்ராயமோ, எதிர்கட்சி தலைவி பரிந்துரையோ செயல்படுத்த இயலாது. நீதிபதி நினைத்தால் குற்றத்தின் தன்மையை, குற்றவாளிகளின் நிலைமையை அறிந்து அவர்களின் தண்டனையை குறைக்கமுடியும். சில சலுகைக் காட்டமுடியும். ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் தண்டனையை நீதிபதி சட்டத்துக்கு மீறி கூட்டமுடியாது என்கிறார்.
18 வயதுக்கு கீழே உள்ளவன் கொலை செய்திருந்தாலும் மற்றவர்களுக்கு கொடுக்கும் தண்டனை கொடுக்கமுடியாதே! சிறுவன் செய்த கொலைக்கு சட்டம் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்குதான் அனுப்பவேண்டும் என்று கூறுகிறதே!. ஆகவே மக்களின் இஷ்டப்படி தீர்ப்பு வழங்ககூடாது. அதற்கு பார்லிமெண்ட் கூடி சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும. ஜனாதிபதிக்குக்கூட தண்டனை குறைக்க தனி அதிகாரம் உண்டு. அதன்மூலம்கூட தண்டனையை குறைக்கத்தான் அவர் பரிந்துரைக்க முடியும். உலக சட்டமே இப்படியிருக்க நம் வேத புத்தகசட்டம் உலகசட்டத்துக்கு முற்றிலும் மாறானது. நம் இஷ்டப்படி கிறிஸ்தவ வாழ்க்கை வாழமுடியாது.
ஜாமக்காரனில் என் பதில்கள் எல்லாம் வேத வசனத்தின்படி மனந்திரும்பின அனுபவம் உள்ள கிறிஸ்தவ விசுவாசிகளுக்குத்தான் பொருந்தும். சம்பந்தப்பட்ட பெண்ணோ, ஆணோ மனந்திரும்பி வசனத்தின்படி வாழ விரும்பினால்மட்டுமே என் ஆலோசனை அவர்களுக்கு பொருந்தும். சிஎஸ்ஐ, லூத்தரன் சட்டம் பெந்தேகோஸ்தே சபை சட்டம் என்று எதுவும் பரலோகத்தில் நியாயதீர்ப்பில் செல்லாது.
என் வசனத்துக்கு பயப்படுகிறவனையே நோக்கிப் பார்ப்பேன் சங்.143:10ல் தாவீது கர்த்தாவே உம்மை பிரியப்படுத்த என்னை போதித்தருளும் என்றான். நம் தேவனுக்கு எது பிரியமோ அதன்படி நடப்பது கீழ்படிவதுதான் தேவன் எதிர்ப்பார்ப்பதாகும். ஆக இப்படிப்பட்ட விவாகரத்து பிரச்சனையில் இங்கு மனிதாபமானத்துக்கும், மனித நேயத்துக்கும் இடம் இல்லை.
இப்படிப்பட்ட திருமண பிரச்சனைகளில் அகப்பட்ட நபர்கள் மனந்திரும்பினவர்களா என்பதுதான் முதலில் அறியப்படவேண்டியது. மனந்திரும்பின அனுபவம் உள்ளவர்களாக இருந்திருந்திருந்தால் தனக்கு வரும் மனைவி, கணவன் மனந்திரும்பினவனாக இருக்கவேண்டும் என்பதில்தான் அவர்கள் பிடிவாதமாக இருப்பார்கள். நான் தேவனை சந்தோஷப்படுத்தவேண்டும். என் பெற்றோரை அல்ல, மேலும் என்னை சந்தோஷப்படுத்தவும் அல்ல, என் இஷ்டம் அல்ல என்னை ஆட்கொண்ட என் பாவத்தை மன்னித்தவரின் சித்தமே என் பாக்கியம் என்று ஜெபித்து காத்திருந்து பெற்றோரிடம் திருமண விஷயத்தில் உங்கள் ஆவிக்குரிய எதிர்பார்ப்பை உறுதியாக கூறி, கர்த்தரின் நடத்திப்புக்காக காத்திருக்கவேண்டும். திருமணத்துக்காக பெண்கேட்டு மாப்பிள்ளை கேட்டு பலர் வரலாம். நமக்கு முகம், படிப்பு, குடும்பத்தின் சூழ்நிலை ஆகியவைகளை நம்
கண்ணால்தான் பார்க்கமுடியுமே, தவிர யாருடைய இருதயத்தையும் பார்க்கமுடியாதே!, எத்தனை மாதம் ஒருவரோடு பழகினாலும் உள்ளத்தின் ஆழத்தை அறிய முடியாதே,
மனிதனின் உள்ளத்தை அறிகிறவர் கர்த்தர் ஒருவர் மட்டுமே!. ஆகவே சகல பாரத்தையும் இயேசுகிறிஸ்துவின்மேல் போட்டுவிட்டு அவரையே நம்பி செயல்படவேண்டும். கர்த்தர் தன்னை நம்பினவர்களுக்கு ஒரு காலும் துரோகம் செய்யமாட்டார். ஏமாற்றவோ நம்பிக்கை துரோகம் செய்யவோ அவர் மனிதரல்ல. எனக்கு தெரிந்து இப்படிப்பட்ட விசுவாசத்துடன் கர்த்தரையே நம்பின யாரும் எந்த குடும்பமும் கெட்டதில்லை.
என்னிடம் திருமண பிரச்சனையில் தொடர்புக்கொண்டவரெல்லாம் இரட்சிக்கப்பட்டேன் என்று பொதுவாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையான
மனந்திரும்புதலின் அனுபவம் அவர்கள் உள்ளத்தில், எதிர்ப்பார்ப்பில், அவர்களின்
கிரியையில், அவர்கள் திருமண விஷயத்தில் எடுக்கும் தீர்மானத்தில்
நிச்சயம் காணப்படும். கர்த்தரை நம்பி மோசம் போனதாக சரித்திரம் இல்லை.
விவாகரத்தில் புருஷன் மேல் தவறா! - மனைவிமேல் தவறா! என்பது அவரவர்களுக்குதான் தெரியும்.
தெரிந்தெடுப்பு சரியில்லாததாலும், குடும்ப விவரங்களைக்குறித்து சரியாக விசாரிக்காததாலும்
ஜெபத்தில் காத்திருக்காமல் பணத்தின் அடிப்படையில், ஜாதியின் அடிப்படையில், வயது முதிர்ந்து காலம் தாழ்ந்தநிலையில்
அவசரமாக நடத்தப்படும் திருமணங்களின் முடிவு பிரச்சனையில்தான் முடிகிறது.
நான் ஜாமக்காரனில் எழுதிய சம்பவத்தில் அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு திருமணம் நடந்த முதல்நாள்
முதல் இரவு அந்த பெண்ணுக்கு பெருத்த ஏமாற்றம். புருஷனும் தன் சரீர பலவீனத்தை புது மனைவியான அந்த பெண்ணிடம் ஒத்துக்கொண்டு, என் பெற்றோரின் கட்டாயத்தினால் உன்னை ஏமாற்றி விட்டேன். எனக்கு
ஆண்தன்மை கிடையாது. நானே விவாகரத்து எழுதி கொடுக்கிறேன்.
நீ தாராளமாக வேறு திருமணம் செய்துகொள் என்கிறார். இதுதான் முதல்இரவே அவர்களுக்குள் ஏற்பட்ட சம்பாஷணையாகும். இப்படித்தான் கடிதம் எழுதிய அந்த பெண்ணைப்போல பல பெண்களின் நிலைமை அமைந்திருக்கிறது. பையனின் பெற்றோருக்கு தன் மகனின் நிலை மிக நன்றாக தெரியும். திருமணமானால் சரியாகிவிடும் என்று
டாக்டர்கள் கூறினார்கள் என்று பையனின் பெற்றோர் பெரிய பொய்யை கூறுகிறார்கள். முறைப்படி பட்டம் பெற்ற எந்த ஒரு
டாக்டரும் அப்படி கூறியிருக்கமுடியாது. அப்படி கூறியிருந்தால் அவர் சரியாக படித்த டாக்டராக இருக்கமுடியாது!. இப்படிப்பட்ட மனவேதனையுள்ள ஒரு பெண்ணின் வாழ்க்கையை அநியாயமாக பாழடித்த கொடுமையை செய்யும் பெற்றோர் இப்போது மிக ஏராளமாக இருக்கிறார்கள். இதில்
கொடுமை என்னவென்றால் புருஷன் கூறுகிறான். உலகுக்கு நீ எனக்கு
மனைவியாக இரு. பெற்றோர் கூறுவது அந்த பெண்ணிடம் உலகுக்கு நீ எங்களுக்கு
மருமகளாக இரு. ஆனால் உன் மன விருப்பப்படி எந்த ஆணோடும் பழகி உன் சரீர சந்தோஷத்தை தனித்துக்கொள். ஆனால்
குழந்தையைமட்டும் பெற்றுக் கொள்ளாமல் எங்கள் குடும்ப கௌரவத்தை காப்பாற்று என்று பெண்ணின் காலை பிடித்து அழுத
மானங்கெட்ட மிகப்பெரிய பணக்கார குடும்பம், ஊரில்
பெருமைவாய்ந்த குடும்பம் எத்தனை பேர் வாழ்கிறார்கள் தெரியுமா?. அந்த பெண் திருமணத்துக்குமுன் தன்னை எந்த
ஆணும் தொடாதபடி யாருக்கும் தன் மனதை கொடுக்காதபடி
பரிசுத்தமாக வாழ்ந்து எனக்கும் ஒரு வாழ்க்கைவரும் அதுவரை நான் என் உணர்ச்சிகளை ஒடுக்கி வாழ்வேன் என்று
நல்ல கணவனுக்காக ஏங்கி காத்திருந்த பெண் பிள்ளைகள் மிக ஏராளம். அப்படிப்பட்ட பெண் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் தாங்கள் எதிர்ப்பார்த்த வாழ்க்கை திருமணத்தில் அமையாமல்
விதவைகளைபோல் வாழ்வது என்ன கொடுமை!. என்ன நியாயம்? திருமணம் என்பது என்ன
பொம்மை கல்யாணமா?. இப்படி ஏமாற்றப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களில் பலரை எனக்கு தெரியும். அவர்கள் விவாகரத்து செய்யாமல், எனக்கு கர்த்தர் அனுமதித்தது இவ்வளவுதான் என்றும், இனி வேறு ஒரு திருமணம் எனக்கு வேண்டாம் என்றும் கணவனை பிரிந்து தன் தாய்வீட்டுக்கு சென்று என் பெற்றோருக்கு மறுபடியும் நான்
பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் என் சரீர உணர்ச்சிகளை கட்டுப்படுத்த மாத்திரம் மாத்திரை தாருங்கள் என்று கேட்டு வந்த பெண்கள் ஏராளம். இப்படிப்பட்ட
பெண்கள் இரவில் சரீரத்தில் அனுபவிக்கும் சித்திரவதை கணவனும் அறியான், மாமியார், மாமனாரும் அறியார்கள். எத்தனை கொடுமை இது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் எந்த தவறும் செய்துவிடகூடாதே என்றும், பாவம் செய்து என் ஆண்டவரை வேதனைப் படுத்திவிடகூடாதே என்றும் கலங்கி துடித்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு
பட்ட மரம்போல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம். அவர்களில் பலர் தனிமையை தவிர்க்க
சபை ஊழியங்களில், தனித்தாள் ஊழியங்களில்,
மிஷனரி பணிகளில் இப்போது செயல்பட்டு எண்ணங்களை திசைதிருப்பி கர்த்தருக்கென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட
கறைப்படாத பரிசுத்தவாட்டிகள் பலரையும் நான் அறிவேன்.
மேலே உள்ள கேள்வியை கேட்டவர் எழுதினார். உங்கள் மகள் விவாகரத்துபெற்றால் அவள் மீண்டும் மறுவிவாகம் செய்ய, உயிரோடு இருக்கும் மருமகனை கொன்றுவிட்டு வேத வசனத்தின்படி மகளுக்கு மறுவிவாகம் செய்வீர்களா? என்றார். கேள்விகேட்டவர்
மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவராக இருந்திருந்தால்
இப்படிப்பட்ட கேள்வி அவர் உள்ளத்தில் எழுந்திருக்காது!.
பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராகவளர்த்தி,
பெற்றோர்களும் வசனத்துக்கு பயந்து சாட்சியுடன் வாழ்ந்து
வரதட்சணை கேட்காமல், நகைகள் கட்டாயப்படுத்தாமல், நல்ல
ஆவிக்குரிய வாழ்க்கையை தன் பிள்ளைகளுக்கு ஜெபத்தோடு அமைத்துக்கொடுக்கும் நல்ல பெற்றோர்கள்தான்,
தேவனுக்கும், வசனத்துக்கும் பயந்தவர்களாவர். அவர்கள் அந்தஸ்து, கௌரவம் ஒன்றும் பார்க்கமாட்டார்கள். மாப்பிள்ளையின் அல்லது பெண்ணின் பெற்றோர் ஜெபிக்கிறவர்களா
இரட்சிக்கப்பட்டவர்களா என்றுதான் முக்கியமாக கவனிப்பார்கள்.
என் மகளும்-மருமகனும் மனம்திரும்பி இரட்சிக்கப்பட்டவர்கள் இருவரும் ஆத்தும ஆதாயம் செய்யும் ஊழியர்கள். கேள்வி கேட்டவர் எழுதியதுபோன்ற அந்த இக்கட்டான சந்தர்ப்பம் உண்டாக வழியில்லை. அப்படியே ஒரு சம்பவத்தை தேவன் அனுமதித்தாலும் அதை வசனத்தின்படி எப்படி எதிர்கொள்வது என்பதை மிக நன்றாக அறிவார்கள். இது எங்கள் குடும்பத்தில் தேவன் அளித்த மிகப்பெரிய கிருபையும் ஆசீர்வாதமாகும்.
2013 ஆகஸ்ட் மாத ஜாமக்காரனில் 18ம் பக்கம் விவாகரத்துபெற்ற ஒரு பெண்ணின் ஆதங்க கடிதம் வாசித்தீர்களே, அந்த பெண்ணின் வாழ்க்கையில் நடந்தது இதுதான். அந்த பெண் வாலிப வயதுள்ளவளாக இருந்தாள். அவள் திருமணமாகி முதல்நாளிலேயே கணவன்
ஆண்தன்மை அற்றவர், இனி வைத்தியம் மூலமாகவும் ஆண்தன்மை உண்டாக வழியில்லை என்பதை டாக்டர்கள் உறுதி செய்ததால், புருஷனின் அனுமதியுடன் அந்த பெண்ணின் விவாகரத்து நடந்தது. இப்போது அந்த பெண்ணின் பரிதாபமான அவளின் வாலிப வாழ்க்கையில் வேத சட்டப்படியல்ல.
மனித நேயத்தின்படி, மனிதாபிமானத்துடன் இவளின் இரண்டாம் திருமணத்தை ஆலயத்தில் வைத்து நடத்த நம் வேதம் அனுமதிக்காததால், அரசாங்க
ரிஜிஸ்டர் திருமணம் செய்துவைக்க இவரது பெற்றோர் முன் வரலாம். வரதட்சணை வாங்காத மனந்திரும்பின அனுபவத்தோடுள்ள, முதல் திருமணத்தில் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணை வாழவைக்கும் நோக்கத்துடன் எந்த
வாலிபனாவது, பெற்றோராவது முன்வந்தால் அவள் திருமணம் செய்துகொள்வதில்
மனிதாபிமான அடிப்படையில் பிழை ஏதும் இல்லை. ஆனால் அவளோ - அவனோ சபையில் எந்த
பொறுப்பும் பதவியும் வகிக்காமல் அதேசமயம் அவர்கள்
தனித்தாள் ஊழியம் செய்து, மிஷனிரி ஜெப கூட்டங்களை நடத்தி
ஆவிக்குரிய சந்தோஷத்துடன் குற்ற உணர்வு இல்லாமல் வாழலாம். இரண்டாம் திருமணத்துக்கு முன்
முதல் திருமணத்தின் விவரத்தை தன்னை இரண்டாம் திருமணம் செய்ய முன்வந்தவரிடம் மறைக்காமல்கூறி அவள் கூறியதை நம்பி ஏற்றுக்கொள்கிறவரை இவள் தாரளமாக இரண்டாம் திருமணம் செய்யலாம். திருமணத்துக்குபின் இவள்மனதில் தான் செய்த இரண்டாம் திருமணத்தின் நோக்கத்தில் அதன் உண்மையான காரணத்தில் குற்ற மனசாட்சியில்லாவிட்டால் அவர்கள்
திருவிருந்து எடுப்பதிலும் தவறில்லை. திருமணமாகி ஒரேநாளில் பிரிந்த அந்த தவிர்க்கமுடியாத காரணத்தின் அடிப்படையிருந்தால் மட்டுமே நான் கூறும் இந்த ஆலோசனை பொருந்தும். மற்ற எந்த காரணத்தாலும்
விவாகரத்து செய்தவர்களுக்கு இந்த என் ஆலோசனை
பொருந்தாது. திருமணமாகி 6 மாதம் அல்லது ஒரு வருடம் இருவரும் குடும்பம் நடத்தி வேறு எந்த காரணத்தினாலும் விவாகரத்து செய்தவர்களானாலும் இந்த ஆலோசனை பொருந்தாது.
ஒருவேளை குடும்ப வாழ்க்கைக்கு தகுதியில்லாத கணவன் என்று அறிந்தும் ஒரு பெண் தனக்கு இனி வேறு திருமணம் எனக்கு வேண்டாம். அவரோடுதான் வாழ்வேன். எனக்கு தேவன் அனுமதித்தது இவ்வளவுதான்.
உள்ளதுபோதும் என்ற எண்ணத்துடன் மரணம்வரை ஒரே கணவனோடு வாழவேண்டும் என்று ஒரு பெண் தீர்மானித்தால் எனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை இவ்வளவுதான் என்று எல்லா சரீர உணர்ச்சிகளையும் தாங்கிக்கொண்டும் ஒரே கணவனோடு எல்லா ஏமாற்றத்தையும் சகித்துக்கொண்டு வாழவேண்டும். இப்படிப்பட்டவர்கள் தனக்கு கெட்டபெயர் உண்டாகாமலும், புருஷன் தன்னை எந்த விதத்திலும் சந்தேகிக்காதபடி வாழ கர்த்தர் அவளுக்கு பெலன் தருவார்.
தாம்பத்திய உறவுமட்டும்தான் குடும்ப வாழ்க்கை என்பது இல்லை என்ற உணர்வு இப்படிப்பட்டவர்களுக்கு கர்த்தர் அருளுவார்.
|