பாஸ்டர் - 420 - CHEATING

இந்திய நாட்டில் பல ஏமாற்று தொழில்கள் நடைபெறுகிறது. அதில் முக்கியமாக இடம் பெறுவது சிட்பண்ட் தொழிலாகும். இந்த தொழில் நடத்துபவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பத்திரிக்கைகளில் வெளியிடுவார்கள். 1000 கொடுத்தால் 2000. 2000 கொடுத்தால் 4000 அதுவும் 6 மாதத்தில் இரட்டிப்பு பணம் என்று அறிவிக்கும் இப்படிப்பட்ட கவர்ச்சி விளம்பரத்தை மக்கள் நம்பிவிடுவார்கள்.

முன்பெல்லாம் இப்படி ஏமாறுபவர்கள் பாமர மக்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் என்றுதான் நாம் நினைத்தோம். இப்போது பெரிய பெரிய பட்டதாரிகள், பெரும் பணக்காரர்கள்கூட இப்படிப்பட்ட பொய் விளம்பர இரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் பணத்தை இவர்களிடம் கொடுத்து ஏமாற்றப்பட்டு பல கோடிகள் இழந்து பாதிக்கப்பட்ட இவர்கள் இப்போது போலீசுக்கு புகார் கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் நடந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெற்ற அந்த கம்பெனியும் இப்போது அங்கு இல்லை - அந்த சிட்டு கம்பெனி நடத்திய ஆட்களும் தலைமறைவாகிபோனதால் போலீஸ் அவர்களை தேடிக்கொண்டிருக்கிறது. தினசரி பத்திரிக்கைகளில் தினந்தோறும் இவைகளை வாசிக்கிறோம். ஆனாலும் மறுபடியும் மறுபடியும் இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளிடம் பணம் கொடுத்து பணம் திரும்ப பெறமுடியாமல் ஏராளமானவர்கள் கண்ணீர்விட்டப்படி போலீஸ் ஸ்டேஷனில் நிற்கும் காட்சியை தினம் டிவியிலும் பார்க்கிறோம்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை - ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாக பெருகிக்கொண்டே போவார்கள் என்பது எத்தனை உண்மை!.

இன்றைக்கு கிறிஸ்தவ உலகிலும், கிறிஸ்தவ சபைகளிலும் கவர்ச்சி வசனங்களைக்கூறி கிறிஸ்வர்களின் காணிக்கையை பிடுங்கும் ஏமாற்றும் ஊழியர்கள் பெருவிட்டனர். கர்த்தர் சொன்னார் என்று கூறியும், தசமபாகம் என்ற பெயரிலும் பணம் சேர்க்கும் ஏமாற்று பிரசங்கங்கள் ஏராளமாக பெருகிவிட்டன. அப்படி அவர்கள் ஆராதனையில் செய்த பொய் பிரசங்கங்களை பெந்தேகோஸ்தே சபைகளில் அங்கத்தினர்களாக உள்ள விசுவாசிகள் தங்கள் மொபைல்களில் ரிகார்ட் செய்து அப்படிப்பட்ட பிரசங்கங்களை எனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி பொய் சொல்லும் இவர்களுக்கு கர்த்தர் தண்டனை கொடுப்பாரா? என்று கேட்கிறார்கள் அல்லது நம் நீதிமன்றங்களாவது இவர்களை தண்டிக்க அல்லது இவர்களின் ஏமாற்றை தடுக்க இயலுமா? என்று கேட்டு பெந்தேகோஸ்தே சபை வாசகர்கள் பல வருடங்களாக எனக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

2013 ஏப்ரல் மாத ஜாமக்காரனில் தசமபாகத்தைக்குறித்து நீதிமன்ற வழக்கு என்ற தலைப்பில் வந்த செய்தியை வாசித்த ஜாமக்காரன் வாசகர்களும் இரட்சிக்கப்பட்ட வக்கீல் தொழில் செய்பவர்களில் பலரும் இவைகளை நீதிமன்றம் நிச்சயமாக விசாரிக்க முடியும் என்றார்கள்.

இப்படிப்பட்ட பொய் ஊழியர்களை நீதிமன்றம் விசாரிக்கவும், இவர்கள் செயல்களை தடைசெய்யவும் முடியும் என்று கூறி சட்டம் எண் 420 போல இன்னும் சில சட்ட எண்களை இவர்கள் குறிப்பிட்டு எனக்கு எழுதியுள்ளார்கள். இப்படி பலவிதமாக சபை விசுவாசிகளை ஏமாற்றும் பாஸ்டர்களை தண்டிக்கவும் முடியும் என்றார்கள்.

இப்போது டிவியிலும், தாங்கள் நடத்தும் பத்திரிக்கையிலும், சில ஊழியர்கள் தாங்கள் கட்டும் கட்டிடத்துக்கு அல்லது கட்டபோகும் கட்டிடத்துக்கு ஒருவன் பணம் கொடுத்தவுடன் கடவுள் தாமதமில்லாமல் அந்த நபரின் கதவைத்தட்டி கொடுத்த காணிக்கையைப்போல் 10 மடங்கு பணமாக கர்த்தர் முன்பின்தெரியாத யார் மூலமாகவோ அந்த பெரும் தொகையை கொடுத்து அனுப்பினார் என்று துணிகரமான பொய்யுடன்கூடிய புகைப்படத்தோடு பொய் சாட்சிகளை உருவாக்கி அதை டிவியிலும், பத்திரிக்கையிலும் வெளியிட்டு ஜனங்களை காணிக்கை போடும்படி தூண்டி வஞ்சிக்கிறார்கள் தெரியுமா?.

சென்னையில் பிரபல பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர் காணிக்கை வேளையில் தன் கையில் உள்ள வாட்ச்சை (கைக்கடிகாரத்தை) கழற்றி முதல் காணிக்கையாக நான் போடுகிறேன் ஆவியானவரால் ஏவப்படுகிறவர்கள் அவரவர்களிடம் உள்ள ஆபரணங்களை காணிக்கை பையில் போடலாம். இன்று காணிக்கை பையில் பணம் போடக்கூடாது கையில் என்ன ஆபரணம் உண்டோ அதை போடலாம். கர்த்தர் இரட்டிப்பாக அதை உங்களுக்கு திருப்பி சீக்கிரமாகவே கொடுப்பதாக இன்று காலை ஜெபத்தில் என்னிடம் அறிவித்தார் என்றார். ஏமார்ந்த ஜென்மங்கள் பெண்கள்தானே!. மேலும் ஆண்களைவிட ஆபரணம் அணிவது பெண்கள்தானே? ஆனால் பலர் தயங்கினார்கள். ஆனால் பெண்களில் ஒருவர் மோதிரத்தை மட்டும் கழற்றிபோட்டார், மற்ற பெண் கழுத்தில் உள்ள மூன்று மாலையில் மெல்லிய மாலையை கையில் வருட்டி தேடி கண்டுபிடித்து அதை கழற்றிபோட்டுவிட்டார். காணிக்கை வாங்குபவர் அவள் கழற்றும்வரை பொறுமையோடு அந்த சகோதரியை பார்த்துக்கொண்டு நிற்கிறார். வரிசையில் நின்றுக்கொண்டிருந்த அடுத்த பெண்கள் அதை கவனித்துக்கொண்டே திகைத்து நின்றுவிட்டார்கள். ஒரு சகோதரி தன் கழுத்தில் இருந்த வடகயிறு போல் மொத்தமாக இருந்த செயினை கழற்றிபோட்டுவிட்டு அல்லேலுயா என்று சத்தமிட்டு கூறி அழ ஆரம்பித்துவிட்டாள். அது சந்தோஷ அழுகை அல்ல என்று அன்று மதியமே அறிய முடிந்தது. அந்த சகோதரி மதியம் வீட்டுக்கு சென்றதும் சபையில் நடந்த ஆபரண காணிக்கைப்பற்றியும் ஆலயம் கட்ட பழைய ஏற்பாடு காலத்தில் நகைகளை இஸ்ரவேல் ஜனங்கள் கொடுத்ததுப்போல இன்று ஆலயத்தில் நடத்தப்பட்டது. ஆகவே நம் ஆலயம் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டுவிடும் அல்லேலுயா என்றார். புருஷன் தன் மனைவி கழுத்தை பார்த்து தாலி செயினையா கழற்றி போட்டாய்? ஆம். இன்று மற்ற மெல்லிய செயின்களை போடாமல் போய்விட்டேன். ஆகவே வேறு வழியில்லாமல் இருந்த அந்த ஒரே செயினை ஆலய கட்டுமான பணிக்காக போட்டுவிட்டேன். உடனே கணவன் பளார் என்று ஒரு அறை அறைந்து நான் கட்டிய தாலி செயினை கழற்றிபோட உனக்கு உத்தரவு கொடுத்தது யார்? போ - மதிய சாப்பாடு நானே போட்டு சாப்பிட்டுகொள்கிறேன். திருடர்களாகிய அந்த பாஸ்டர்கள் அதை அழித்து பணமாக்கும் முன் அந்த செயினை திரும்ப வாங்கி வா? என்றார். வேண்டாங்க, தெய்வ குத்தம் உண்டாகிவிடும் என்று அழுதாள். அந்த செயினை கொண்டு வராமல் வீட்டு வாசல்படி ஏறாதே என்று தயவுதாட்சண்யம் பாராமல் வெளியே தள்ளி கதவை சாத்தினார்.

அந்த சகோதரி ஆட்டோ பிடித்து அந்த பெந்தேகோஸ்தே சபைக்கு போனார். பாஸ்டர் அம்மாவிடம் விவரம் கூறியவுடன் பாஸ்டர் வெளியே போய்விட்டார். அவர் வந்தால்தான் காணிக்கை பை தொட முடியும் என்றார். மாலை 5 மணி ஆகும்போதுதான் அந்த பாஸ்டர் வந்தார். விவரம் அறிவித்தபோது காணிக்கை போட்டது திருப்ப எடுக்ககூடாது என்று பாஸ்டர் கூறினார். ஆனால் அந்த சகோதரி பாஸ்டர் ஐயா, என் கணவர் உங்கள் பேரில் போலீஸ் புகார் கொடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். என் கணவரும் இந்த சபையில் பல வருடமாக வருகிறவர். தசமபாகம் தவறாமல் கொடுப்பவர். ஆனால் தாலி செயினை போட்டதால்தான் உங்கள்மேல் மிகவும் கோபமாக இருக்கிறார். தயவுசெய்து கொடுத்துவிடுங்கள். அதன்பின் அந்த பாஸ்டர் வேறுவழியில்லாமல் உதவி பாஸ்டர்களை அழைத்து அந்த இரும்பு பெட்டியை திறந்து அந்த சகோதரியின் ஜெயினை அவளைக்கொண்டே கண்டுபிடித்து எடுத்து கொடுத்துவிட்டு ஒரு பேப்பரில் எழுதி வாங்கி அனுப்பி விடுங்கள் என்றார். எப்படியோ தாலி செயின் திரும்ப கிடைத்தது. இப்போது அந்த குடும்பம் பாஸ்டர்.வாசு அவர்களின் சபைக்கு போய் கொண்டிருக்கிறார்கள்.

இது குரங்கும் - தொப்பி வியாபாரியும் என்ற கதை மாதிரி இல்லை!. மறுவாரம் இந்த சகோதரியின் புருஷன் கோபம் தனியாமல் வேறுசில கிறிஸ்தவ வியாபாரிகளைகூட கூட்டிக்கொண்டு பாஸ்டரை அடிக்க கிளம்பினார். மனைவி காலை பிடித்து கெஞ்சி அழுததால் அந்த பாஸ்டர் அன்று அடி வாங்காமல் தப்பினார்.

நான் 15 வருடமாக ஆராதனைக்கு போய்வரும் என் சபை பாஸ்டர் தசமபாகத்தில் பொய் சொன்னவர்கள் எல்லாரும் கர்த்தரிடம் இப்போது மன்னிப்பு கேட்கலாம் என்று 10 நிமிடம் ஜெபிக்க நேரம் கொடுத்துவிட்டு இப்போது தீர்மானம் எடுங்கள். தசமபாகத்தில் இதுவரை மறைத்த பணத்தை எத்தனை தவணைகளில் செலுத்தபோகிறீர்கள் என்பதை ஆவியானவரிடம் சொல்லிவிடுங்கள். ஏன் என்றால் அனனியா-சப்பிராளுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் உண்டாகக் கூடாது. உங்கள் பிள்ளைகள் அனாதைகளாகிவிடுவார்கள். இப்படி பயமுறுத்தி பேசுகிறார். அன்று இரவு எங்களுக்கு தூக்கமே வராமல் எங்கள் குடும்பமே பயத்தில் படுத்துகிடந்தோம். அந்த பாஸ்டர் எப்பேர்ப்பட்ட தசமபாக கள்ளனாக இருக்கிறார் பாருங்கள். ஒரு குடும்பத்தின் நிம்மதியையே கெடுத்துவிட்டாரே!.

தனக்குரிய எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினான் என்று வேதம் சொல்லுகிறது. உன்னுடைய பி.எப் (பிராவிடன்ட் ஃபண்ட்) எவ்வளவு, உன் மகளுக்கு திருமணம் செய்தபோது கொடுத்த டவுரி பணத்தில் நீ தசமபாகம் கொடுக்கவில்லை. தனக்குறிய எல்லாவற்றிலுமிருந்து தசமபாகம் கொடுத்தான் என்று வேதம் நமக்கு போதிக்கிறதை கவனியுங்கள். உன் சம்பளத்திலிருந்து மட்டுமல்ல, வியாபாரிகள் உங்கள் வருமானங்களிலிருந்து மட்டுமல்ல, மகள் திருமணத்துக்கு நீ கொடுத்த நகைகள், ரொக்கம் (டவுரி) ஆகிய எல்லாவற்றிலும் தேவனுக்கு பங்கு இருக்கிறது. உன் வீட்டில் இரண்டு கல்யாணம் கடந்த வருடம் நடந்தது. உன் பிள்ளைகளின் திருமணத்தை நீ வேறு சபையில் வைத்து நீங்கள் நடத்தினாலும் அந்த திருமண செலவின் தசமபாகம் உன் மேய்ப்பனாகிய நான் ஊழியம் செய்யும் இந்த சபைக்கு உரியது ஆகும். அதை நீ கொடுத்து தீர்க்கும்வரை நீ கர்த்தருக்கு கடன்காரனாக இருக்கிறாய் என்பதை உணரவேண்டும். அதனால் உங்களை மறுபடியும் எச்சரிக்கிறேன். நீங்கள் எதை மறைத்தாலும் கர்த்தருக்கு கோபம் வராது. ஆனால் தசமபாகத்தில் சபையை ஏமாற்றினால் தெரியுமல்லவா? அனனியா-சப்பிராள் தம்பதியினருக்கு ஏற்பட்ட கதிதான் என்று அடிக்கடி எங்களை பயப்படுத்தி எங்கள் பாஸ்டர் பிரசங்கத்தில் பேசுகிறார். சிலமுறை பாஸ்டர் சாபமிடுகிறார். நாங்கள் என்ன செய்ய? என்று எழுதினார்கள். நான் எழுதினேன். இது ஒருவகை பிளாக் மெயில் ஆகும். உன் பாஸ்டர் உங்களை பயமுத்துகிறார் என்பது மிகத்தெளிவாக உங்களுக்கு தெரிந்தும் அப்படிப்பட்ட திருட்டு பாஸ்டர் நடத்தும் ஆராதனையில் எப்படி நீங்கள் எல்லாம் தொடர்ந்து கலந்துக்கொள்கிறீர்கள்? உங்கள் மனசாட்சியாவது பாஸ்டர் பேசுவது பொய் என்று உணர்த்தவில்லையா? இவர்கள் எல்லாம் ஆவியின் வல்லமை பெற்றவர்கள், அந்நியபாஷை சரளமாக பேசுகிறவர்கள். இவர்கள் இந்த அளவு முட்டாளாகவா இருப்பார்கள். இதை எழுதும்போது எனக்கே கோபம் வருகிறது. கர்த்தருக்கு எவ்வளவு கோபம் வரும்.


செங்கல் அற்புதம்

2012 ஜனவரி மாதம் கோயமுத்தூர் பெந்தேகோஸ்தே பாஸ்டர் ஐக்கிய சங்கத்தின் உதவி செயலாளராகவும், கோயமுத்தூரில் (சர்ச் ஆப் குளோரி) மகிமையின் ஆலயம் என்ற பெயரில் பெரிய சபையை நடத்தும் பாஸ்டர்.இஸ்ரவேல் பொன்னப்பா என்பவர் தன் சபையில் திடீரென்று ஒரு அறிவிப்பை அறிவித்தார். தேவன் தனக்கு அளித்த அபிஷேகத்தின்படி ஒரு செங்கல்லை சபை மக்களிடம் காண்பித்து இது சாதாரண செங்கல் அல்ல, ஜெபித்து அபிஷேகிக்கப்பட்ட செங்கல் ஆகும். இது கட்டிடம் கட்டுவதற்காக அல்ல. இந்த செங்கல் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் வீட்டில் உள்ள அனைத்து விக்கிரகங்களும் நீங்கிபோகும். அசுத்த ஆவிகள் வீட்டுக்குள் வராது. இதற்கு வேதத்தில் ஆதாரம் இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் அன்று யாக்கோபு தன் பிராயணத்தின் இடையே ஒரு கல்லை தலையில் வைத்து படுத்துக்கொண்டபோது இரவில் பரலோக தரிசனம் கண்டான். தூதர்கள் பரலோகத்திலிருந்து இறங்குவதும் ஏறுவதுமாக இருந்ததை கண்டான் என்று எழுதியிருக்கிறது. அதுபோல இந்த செங்கல் எந்த வீட்டில் வைத்திருக்கிறீர்களோ அந்த வீட்டுக்கு ஆசீர்வாதம் உண்டாகும் தூதர்களை காண்பீர்கள். ஆவியானவர் சொல்ல சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன். இந்த செங்கலை விலை கொடுத்து நீங்கள் வாங்கினால் அந்த பணம் இந்த ஆலய பணிக்கு பயன்படும். ஆகவே இந்த ஆசீர்வாத திட்டத்தில் பங்குகொள்ள விரும்புவர்கள் ஒரு செங்கலை 10,000 - பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றார். இந்த கல்லை உங்கள் படுக்கையில் வைத்து தலையணையாக அதன்மீது வைத்து படுத்தால் பரலோக தரிசனங்களையும் காணலாம் என்றார். முதல் கல்லை சபை மக்கள் முன்வைத்து ஜெபித்து பிரதிஷ்டை செய்து அபிஷேகத்தை அதில் இறக்கி ஜெபிக்கிறேன் என்று கூறி அந்நியபாஷையும் பேசி முடித்தார். உடனே சபை விசுவாசிகள் எனக்கு-உனக்கு என்று போட்டிபோட்டுக்கொண்டு வாங்கினார்கள். அரை லாரி லோடு உடனே விற்று தீர்ந்தது. அரை லோடு என்பது 1500 செங்கல்கள். கணக்குபோட்டு பாருங்கள். ஒரு செங்கல் 10000 ரூபாய் 1500 செங்கல்களுக்கு 1 கோடியே 5 லட்சம் ரூபாய்கள் சுளையாக அந்த பாஸ்டருக்கு கிடைத்தது. இப்படிப்பட்ட வியாபாரத்தை செங்கல் சூளை வைத்தவர்கள்கூட செய்து இருக்கமாட்டார்.

இப்போது வாசகர்கள் சிந்தித்துப்பாருங்கள். முதலில் செங்கல் விற்ற அந்த பாஸ்டரைப்பற்றி யோசிக்கவேண்டாம். அந்த செங்கலை 10000 ரூபாய் கொடுத்து வாங்கின அந்த அபிஷேகம் பெற்றவர்கள், அந்நியபாஷையில் பேசி ஆவியில் நிறைந்தவர்கள், தரிசனம் காண்பவர்கள் ஆகிய அந்த சபை விசுவாசிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். அந்த சபை விசுவாசிகளில் ஒருவராவது இப்படி ஒரு செங்கல் வியாபாரத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா? செங்கலில் அபிஷேகம் இறங்குமா? வல்லமை இறங்குமா? கல்லை வைத்து படுத்தால் பரலோகம் தெரியுமா? கொஞ்சமாவது யோசிக்ககூடாது.

சகோ.மோகன் சி.லாசரஸ் கம்பெனியின் போர்டு மெம்பராக மெத்தபடித்த டாக்டர் ஒருவர் உண்டு. அந்த டாக்டர் எயிட்ஸ் வியாதி சுகமானது என்று மோகன் சி.லாசரஸ் அறிவித்ததற்கு சாட்சியாக நின்றதுபோல, இந்த சபையிலும் ஒரு டாக்டர் செங்கலை 10000 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் என்று கேள்விபடும்போது பெந்தேகோஸ்தே சபை எங்கு போகிறது? என்று புரிகிறதா?.

அடுத்து அந்த அனுபவம் உள்ள பாஸ்டருக்கு செங்கலை அபிஷேகம் செய்து நாம் விற்றால் நம் சபை விசுவாசிகள் அனைவரும் ஏமாளிகள் முட்டாள்கள் நிச்சயம் ஏமார்ந்து செங்கலை வாங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எப்படி வந்தது? அந்த பாஸ்டரின் விசுவாசம் பிரம்மிக்க வைக்கிறது. அவர் சபை மக்களை அந்த அளவு வசனத்தில் வளரவிடாமல், யோசிக்கவிடாமல் சபையை உருவாக்கி வைத்திருக்கிறார்.

கள்ள நோட்டு வியாபாரிகள் ரூபாய் கட்டுகளில் மேலே நல்ல நோட்டுகளை வைத்து உள்ளே வெள்ளை பேப்பர்களை கட்டுகட்டாக வைத்து பெரியபெரிய பணக்காரர்களை ஏமாற்றியிருக்கிறார்களோ. அதுபோலதானே? இதுவும் மிகப் பெரிய (சீட்டிங்ஸ்) ஏமாற்றுதனமாயிற்றே! அந்த கள்ளநோட்டு வியாபாரியாவது ஒரு கட்டில் 10 நல்ல ரூபாய் நோட்டுகளை வைத்து ஏமாற்றினார். ஆனால் இந்த பெந்கோகேஸ்தே சபை பாஸ்டரோ முழு செங்கல்களை மூடாமல் மறைக்காமல் அப்படியே சுளையாக 10000 ரூபாய்ககு ஒரு கல்லை அனாவசியமாக விற்றிருக்கிறார்.

ஒருவர் கேட்டார் சகோ.பால்தினகரன் மீது ஒருவர் பொதுநல வழக்கு போட்டாராமே அப்படி செங்கலை வைத்து அபிஷேகம் இறக்கும் இப்படிப்பட்ட பாஸ்டர்கள்மேலே ஏன் பொது நல வழக்கு போடக்கூடாது என்று கேட்டார்.

CSI சபையில் ஜீவன் இல்லை - செத்த சபை, வல்லமை இல்லை. அதனால் CSI சபை மக்களோ ஆராதனை முடிந்த கையோடு இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளுக்கு ஓடும் விசுவாசிகள் இனியாவது எச்சரியக்கையாக இருப்பீர்களாக.

அக்கினி அபிஷேகம், அக்கினி அக்கினி நதி, வல்லமை, ஆவியின் நதி, ஆவியின் ஊற்று இப்படிப்பட்ட கவர்ச்சி வார்த்தைகளால் ஜனங்கள் ஏமார்ந்து இப்படிப்பட்ட வஞ்சிக்கிற சில பெந்தேகோஸ்தே சபைகளுக்குப் போகிறார்கள்.

இப்படி ஏமாற்றுகிற பாஸ்டர்களை நம் நீதிமன்றம் தண்டிக்காதா? என்று ஏராளமானவர்கள் கேட்கிறார்கள்.


D.G.S - மகனின் ஏமாற்று 420 - CHEATING
இயேசு அழைக்கிறார் (ஆகஸ்ட் 2009: பக்கம் 8)

சகோ.DGS.தினகரன் அடிக்கடி பரலோகம் போய்வருவதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இவரை பின்பற்றிதான் ஏஞ்சல் டிவி.சாதுசந்தர் செல்வராஜ், மோகன் சி.லாசரஸ், வின்சென்ட் செல்குமார், ஆலன் பால் ஆகியோர் தாங்களும் தினகரனுக்கு சளைத்தவர்கள் அல்ல. நாங்களும் தினம் இரண்டுவேளை பரலோகம் போய் வருகிறோம் என்று போட்டியிட்டு பரலோகம் போய் வருவது செய்தியாக நாம் கேட்டிருக்கிறோம்.

சகோ.தினகரன் அவர்களைவிட மகன்.பால்தினகரன் அதிகம் கற்பனை தரிசனம் பார்ப்பதை அவர் எழுதிய செய்தியில் நீங்கள் அறியலாம்.

என் தந்தை.தினகரன் ஒருமுறை பரலோகத்திற்கு சென்றபோது இயேசு என் தந்தையை வரவேற்றார். இயேசுவுக்கு முன் இருந்த ஒரு மேஜையின் மீது ஒரு தங்கத்தால் ஆன அழகிய தங்க கை கடிகாரத்தை வைத்திருந்தார்.

அதன் பக்கத்தில் ஒரு தங்க கோப்பை, தங்க மை(Ink), முன்னோர்கள் அந்த காலத்தில் எழுத உபயோகிக்கும் தங்க இறகுமிருந்தது.

அப்போது ஆண்டவர் என் தந்தையைப்பார்த்து என் மகனே என் ஊழியத்தை செய்ய நீ வருவாயா? என்றார்.

அதைக்கேட்டபோது என் அப்பா.தினகரனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவர் State Bank of India என்ற வங்கியில் நிம்மதியாக ஒரு குறையும் இன்றி வேலை செய்து கொண்டிருந்தார். அதனால் இயேசுவை நோக்கி என் அப்பா சொன்னார். ஆண்டவரே, என் பேங்க் வேலையில் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. நான் நிம்மதியாக இருக்கிறேன். கூடவே ஊழியமும் செய்துவருகிறேன். எனக்கு அதுபோதும் என்னை விட்டுவிடும் என்றார். ஆனால் ஆண்டவர் சொன்னார், என் மகனே நீ வேலையை விட்டுவிட்டால் உன் தேவைகள் எல்லாவற்றையும் நான் சந்திப்பேன் என்று, இப்படி நான் வாக்குகொடுத்தால் என் ஊழியத்துக்கு வருவாயா? என்று இயேசு கேட்டார். அதற்குமேல் என் அப்பாவுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சகோ.தினகரன் சொன்னார்: ஆண்டவரே நான் எங்கெங்கு போகிறேனோ நீரும் என்னோடு வருவீரானால் அப்போதுதான் நான் உம் ஊழியத்துக்கு வருவேன். ஆண்டவர் சொன்னார். நான் நிச்சயமாக உன்னோடு வருவேன். நான் உன்னை அழைத்திருப்பதை உன் வாயிலிருந்து புறப்படும் என் வார்த்தைகளின் மூலமாகவும், அற்புதங்கள் மூலமாகவும் உறுதிப்படுத்துவேன். நீ என் ஊழியத்தை செய்வாயாக என்றார். உடனே என் தந்தை ஊழியத்துக்கு வருகிறேன் என்று ஒப்புக்கொண்டார்.

அதன்பின் இயேசு தங்க மையினால் (இங்க்) எழுதி அதன்கீழே இயேசுகிறிஸ்து என்று கையெழுத்திட்டு ஒரு உடன்படிக்கையை பண்ணிக்கொண்டார். இந்த உடன்படிக்கை கடிதத்தை என் தந்தையிடம் கொடுத்து(நான் மட்டும் கையெழுத்திட்டால் போதாது) நீயும் உன் கையெழுத்தை போடு என்றார். அந்த நாள் 1967ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி ஆகும். அந்த குறிப்பிட்ட வருடத்திலிருந்து என் தந்தை தினகரன் அவர்கள் எப்போதெல்லாம் பரலோகம் போகிறாரோ அப்போதெல்லாம் இயேசு கையெழுத்துபோட்ட அந்த உடன்படிக்கை கடிதத்தை இயேசுவிடம் காண்பிப்பார்.

ஒவ்வொருமுறை பரலோகம் போகும்போதும் ஒவ்வொரு திட்டத்தை இயேசு கூறுவார். மகனே, இந்த வருடத்தில் உன் ஊழியத்தில் இவைகளையெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என்று அவர் சொல்வார். என் தந்தையும் அவர் சொல்வதை கேட்டு ஆமென் என்று கூறி ஆமோதிப்பார். இப்படித்தான் என் தந்தையின் ஊழியம் வெற்றிகரமாக நடந்தது.

நாம் இதுவரை புளு இங்க், கருப்பு, சிவப்பு இங்க் இப்படி பல கலரில் பார்த்திருப்போம். ஆனால் சகோ.தினகரனின் பரலோகத்தில் இந்த கலர் இங்க் எல்லாம் கிடைக்காது. எல்லாம் தங்க இங்க், தங்க போனா, தங்க கோப்பை, தங்க மேஜை இதை எழுதும் தங்க ஊழியரான தம்பி.பால்தினகரனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் அவர் குடும்பத்தினர் எல்லாம் உபயோகிப்பது, அணிவது எல்லாம் தங்கம்தான் என்பதை நாம் டிவியிலும் மேடையிலும் காண்பித்து நிரூபித்திருக்கிறோரே?.

தங்க இங்க், தங்க கோப்பை, தங்க பேனா, தங்கத்தில் இயேசுவின் கையெழுத்து தினம் பரலோக விசிட் இவைகளைக்குறித்து யாராவது கேள்வி கேட்டதுண்டா? இப்படிப்பட்ட அம்புலிமாமா கதைகளை கேட்டு கிறிஸ்தவ மக்கள், பிஷப்மார், மாடரேட்டர் எல்லாரும் கேள்வி எழுப்பாமல் ரசித்து கொண்டிருக்கிறார்களே தவிர கேள்விகேட்க யாருக்கும் தைரியம் இல்லை.

ஒருவர் இயேசு அழைக்கிறார் குடும்பம் சேர்க்கும் கோடிகள், சொல்லும் பொய் கதைகள், பொய்யான அற்புத சாட்சி, கோபுரங்கள் பணிவது மக்களிடம் பொய்யான காரணங்களைக்கூறி காணிக்கை பெறுவது, ஒரு குழந்தைக்கு 2000 ரூபாய் வாங்கி ஜெபிக்க கர்த்தர் சொன்னார். அதற்கு இளம் பங்காளர் திட்டம் என்று பெயர் வைத்து கோடிகோடியாக பணம் சேகரிக்கப்பட்டது. ஏழைகளுக்காகவே காருண்யா கல்லூரி கட்ட சொன்னார் என்று கூறி ஒவ்வொரு மாணவனிடம் லட்சக்கணக்கில் கேப்பிடல் பீஸ் வாங்கப்பட்டதையெல்லாம் குறிப்பிட்டு சிலர் பொதுநல வழக்கு போட்டதாக செய்திதாளில் செய்திகள் வந்தது. பாறையோடு பானை மோதியதுபோல அந்த கேஸ் தொடர்ந்து நடத்தமுடியாமல் வழக்கு பாதியிலேயே நின்றுப்போனது. கிறிஸ்தவ ஊழியர்கள் மக்களை ஏமாற்றி காசு பறிக்கிறார்கள் என்று அன்று பல பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின.

விருதுநகர் சகோ.ஆலன்பால் என்பவர் இவரும் அடிக்கடி நரகத்துக்குபோய் வருபவர். 19 கோடியில் சென்னையில் மிகப்பெரிய ஆலயம் கட்ட ஆம்பித்திருக்கிறார். டிவியில் தன் சொந்த சேனலான ஆசீர்வாதம் டியியில் கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.

இப்படி தனி ஊழியம் செய்யும் ஊழியர்கள் எல்லாரும் தங்களை சிஎஸ்ஐ என்றும், லூத்தரன் சபையை சார்ந்தவன் என்றும் கூறி அந்நியபாஷை பேசி மறைமுக பெந்தேகோஸ்தே சபையின் அனுபவத்தில் வாழ்ந்து ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். இப்படி பல ஊழியர்கள் மக்களை ஏமாற்றுவதை குறித்து ஏமார்ந்த மக்கள் பக்கம்பக்கமாக கடிதங்கள் எனக்கு எழுதுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஊழியர்களிடம் பொய் பேசும் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடம் அப்படிப்பட்ட சபைகளிடமும் வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

மக்களை ஏமாற்றி அகப்பட்ட ஏராளமான புறமத சாமியார்களின் சன்யாசிகள் ஏராளமானவர்கள் போலீஸில் அகப்பட்டு இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள். இவர்களோடு சில பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களும், ஸ்டார் ஊழியர்களும், அற்புதம் அடையாளம் என்ற பெயரில் கூட்டம் நடத்தி மக்களை ஏமாற்றும் சில ஊழியர்களும் ஜெயிலில் இருக்கிறார்கள். ஆனால் பல போலி ஊழியர்கள் பலர் இன்னும் வெளியே உலா வருகிறார்கள்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM