கர்த்தருக்குள் அன்பான வாசகர்களுக்கு,
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இம்மாத ஜாமக்காரன் வழியாக உங்களை மறுபடியும் சந்திப்பதில் மிகவும் சந்தோஷம்.
 2013 பிப்ரவரி
& ஏப்ரல் மாத ஜாமக்காரன் பத்திரிக்கையை வாசித்த பலர் தங்கள் அபிப்ராயங்களை எனக்கு எழுதினார்கள். கேரளாவில்
மார்தோமா சபை ஆயர் ஒருவர் எழுதிய கடிதமாவது: ....டாக்டர் உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும், எத்தனைப்பேர் வெறுத்தாலும் ஜாமக்காரன் ஊழியத்தை நீங்கள் நிறுத்தாமல் தொடரவேண்டும். உங்களையும், உங்கள் ஊழியத்தையும் புரிந்துக்கொண்ட எங்களைப்போல் உள்ள சபை ஆயர்களையும், விசுவாசிகளையும், ஒரு சில பிஷப்மார்களையும் உங்களால் நடத்தப்படும் ஊழியங்களையும், பத்திரிக்கை ஊழியங்களையும் தாங்க, ஜெபிக்க ஏராளமானவர்களை கர்த்தர் எல்லா டையோசிஸ்களிலும் எல்லாவிதமான சபைகளிலும் வைத்துள்ளார் என்பதை நீங்கள் மறக்கவேண்டாம். உங்கள் ஊழியத்தை இப்போதைக்கு யாராலும் எதுவும் செய்யமுடியாது. உங்கள் ஊழியம் மிகவும் வித்தியாசமானது. இப்போதைக்கு யாராலும் தடை செய்யவும் முடியாது.
 என் தகப்பனார் ஒரு ஆயர் (Rev), அவருடைய மகனாகிய நானும் ஒரு ஆயராகும். சின்ன வயதில் உங்கள்
கூட்டத்தில்தான் நான் ரட்சிக்கப்பட்டேன். மறுபடியும் கல்லூரியில் படிக்கும்போது என் அப்பா கேரளாவில் நீங்கள் பேசும் கூட்டத்துக்கு எங்களை குடும்பத்தோடு பல ஊர்களில் நடந்த உங்கள் கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டுபோவார். ஒருமுறை என் தகப்பனாருடன் நானும் உங்கள் கன்வென்ஷனில் கலந்துக்கொண்டோம். அன்றைய செய்தி
சமரியாவில் உண்டான பஞ்சம் அங்கு குஷ்டரோகிகள் தங்களுக்குள் பேசின சம்பாஷனைகளைப்பற்றியதாக அது அமைந்தது. இன்றைக்கு
மௌனமாக இருந்தால் குற்றம் நம்மேல் சுமரும் என்று நீங்கள் பிரசங்கத்தில் அன்றைக்கு கூறிய வசனத்தின் வழியாக
கர்த்தர் என்னோடும் பேசினார். நான் அந்த வசனத்தால் உணர்த்தப்பட்டு ஊழியத்துக்கு ஒப்புக்கொடுத்து இன்று கேரளா
மார்தோமா சபையில் ஆயராக (Vicar) ஊழியம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நீங்கள் எங்கள் பிஷப்மாரில் இருவரின்
SEX சம்பந்தமான தவறுகளைக்குறித்து ஜாமக்காரனில் எழுதியதால், எங்கள்
மார்தோமா சபை பிஷப்மார்கள் இப்போது உங்களை உபயோகிக்காமல்போனாலும் நீங்கள்
மத்தியகேரளாவில் CSI சபைகளில் எங்கு பிரசங்கித்தாலும் நாங்கள் குடும்பமாக உங்களுடைய ஒரு பிரசங்கத்தையாவது கேட்கவருவோம். உங்கள்
ஜாமக்காரன் (காவல்காரன்) பத்திரிக்கை இப்போதும் என் அப்பா பெயரில் 29 வருடமாக வந்துக்கொண்டிருக்கிறது.
 உங்கள் பிரசங்கத்தை கேட்ட என்னோடுள்ள மற்ற ஆயர்கள் கூறுவதாவது: டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் ஒரே இடத்தில் சுமார் 2 மணி நேரம் நின்றபடி ஆடாமல் அசையாமல்
குறிப்புகள் எதுவும் கையில் வைத்துக்கொள்ளாமல் எப்படி இவரால் இப்படி பேசமுடிகிறது. வழக்கமாக எல்லா பிரசங்கிமார்களும், பிரசங்கத்தின் நடுநடுவே
அல்லேலுயா, ஆமென் போன்ற ஒரு சத்தமோ, ஆர்ப்பட்டமோ, குதித்தலோ, கைதட்டலோ இல்லாமல் பிரசங்கிக்கமாட்டார்கள். ஆனால் இவர் கூட்டத்தில் அவை ஒன்றும் இல்லையே!. இவர் கூட்டத்தில் ஜெபவேளையில் இவர் பிரசங்கத்தைகேட்டு தீர்மானம் எடுத்த யாரையும்
இவர் கை உயர்த்த சொல்வதில்லை, எழுந்து நிற்கசொல்வதில்லை ஆனால் ஏராளமானவர்கள் மனந்திரும்பினார்களே! சுகம்பெற்றார்களே! என்று ஆச்சரியத்தோடு பேசிக்கொள்வார்கள். அதேசமயம் உங்கள் பிரசங்கத்தில் மனந்திரும்பினவர்கள், சுகம்பெற்ற ஏராளமானவர்களை நாங்கள் நேரில் கண்டிருக்கிறோம். அவர்கள் குடும்பங்களை நாங்கள் அறிவோம். அப்படியாக ஒருநாள் உங்கள் கன்வென்ஷன் கூட்டத்தில் இரட்சிக்கப்பட்ட, சுகம்பெற்றவர்கள் கூட்டத்தில்
நானும் ஒருவன் ஆவேன். இப்படி உங்கள் ஊழியத்தின் மூலமாக மனந்திரும்பியவர்கள் மிகவும் ஏராளம். பிரிந்த பல குடும்பங்கள் உங்கள் பிரசங்கம்மூலம் ஒன்று சேர்ந்துள்ளன. நான் சிறுவனாக இருந்தபோது உங்கள் பிரசங்கம் கேட்ட ஒரு பெரிய பணக்கார குடும்பத்தில் ஒருவர் கேரளாவில் திருவல்லா அருகில்
காவும்பாகம் என்ற ஊரிலுள்ள எங்கள் ஆலயத்தில் உங்கள் பிரசங்கத்தால் அவர் உணர்த்தப்பட்டு தன் வீட்டிலுள்ள மதுபான பாட்டில்களை எடுத்துக் கொண்டுவந்து,
ஆலயத்தின் முன்புறம் கொண்டுவந்து உடைத்துப்போட்டு கர்த்தரிடம் அழுது தீர்மானம் செய்து ஜெபித்ததை நான் கண்டேன், என் ஊர்க்காரர்கள் கண்டார்கள். அந்த குடும்பம் இப்போதும் மிக சந்தோஷத்தோடு வாழ்வதையும் நான் அறிவேன். இப்படிப்பட்ட ஜீவனுள்ள ஏராளமான உங்கள் ஊழியத்தின் மூலமாக நடந்த சாட்சிகளுக்கு
விளம்பரம் ஏதும் இல்லாமல் கர்த்தர் உங்களை வல்லமையாக உபயோகித்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் ஏன் ஊழியத்தை நிறுத்தவேண்டும். நீங்கள் யாருக்கும் பயப்படவேண்டாம், சேர்ந்துப்போகவும் வேண்டாம்.
(ஜாமக்காரன்: நான் ஊழியத்தை நிறுத்தப்போவதாக எப்போதும் எழுதியதில்லை. 2013 பிப்ரவரி ஜாமக்காரனில் நான் எழுதியதை பலர் தவறாக புரிந்துக் கொண்டுள்ளனர்).
 கடந்த 2013 பிப்ரவரி ஜாமக்காரனில் நீங்கள் எழுதியதை வாசித்தபோது ஏதோ உங்கள் உள்ளத்தில் ஏதோ சோர்வு ஏற்பட்டதைப்போல் நாங்கள் யாவரும் பேசிக்கொண்டோம். உங்கள் ஜாமக்காரனைப்போல் கர்த்தர் வேறு ஒரு பத்திரிக்கை அல்லது வேறு ஒரு ஊழியரை எச்சரிக்கவும், அறிவிக்கவும்
எழுப்பும்வரை உங்கள் ஊழியம் தொடரவேண்டும் என்பது எங்கள் அனைவரின் வேண்டுகோளாகும். அதற்காக நாங்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்?. நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம். மேலே வாசித்தது கேரளாவில் உள்ள
மார்தோமா சபை என்று அழைக்கப்படும் சபை ஆயர் அவர்கள் எனக்கு எழுதியது ஆகும்.
இதைப்போல் ஏராளமான விசுவாசிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கடிதம், இ-மெயில், தொலைபேசி மூலமாக எழுதியும் பேசியும் என்னை பெலப்படுத்தினார்கள். எனக்கு இவ்வளவு ஆதரவாளர்களா? என்று ஆச்சரியப்பட்டேன். பெரும்பாலானவர்கள் என்னை வெறுத்தார்களே! என்று நான் நினைந்திருந்தவேளையில்
பிப்ரவரி மாதம் நான் என்னைப்பற்றியும், என் ஊழியத்தைப்பற்றியும் எழுதிய சில விவரங்கள் நான் ஊழியத்தைவிட்டே விலகிவிடுவதைப்போல பலர் தவறாக எண்ணியதால் அதன் காரணமாக அவர்கள் எல்லாரும் எனக்கு எழுதிய கடிதம்மூலம் இத்தனை திரளான ஆதரவாளர்கள் ஜாமக்காரன் பத்திரிக்கைக்கு உண்டு என்று வியந்து தேவனைத்துதித்தேன்.
 சிலர் இப்படியும் கடிதம் எழுதினார்கள். 30 வருடத்துக்குமுன் நாங்கள் உங்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட உங்கள் போட்டோவை எங்கள் வேதபுத்தகத்தில் வைத்துக்கொண்டு நாங்கள் குடும்பமாக தினசரி அதைப்பார்த்து உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் எழுதிய அப்படிப்பட்ட அன்பு வாசகர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
 2013 ஏப்ரல் மாத ஜாமக்காரன் மிகவும் அற்புதம் என்றும்,
ஜாமக்காரன் என்றால் என்ன?அதன் அர்த்தம் என்ன? ஏன் உங்கள் பத்திரிக்கைக்கு
ஜாமக்காரன் பெயர் வைத்தீர்கள் என்று பலகாலம் நாங்கள் அறியாதிருந்தோம். ஏப்ரல் மாத 2013 ஜாமக்காரன் மூலம் அதை விளங்கவைத்ததற்கு நன்றி என்று பலர் எனக்கு கடிதம் எழுதினார்கள். அதன்மூலம் வாசகர்களுக்கு உண்டான சந்தேகம் தீர்ந்ததில் எனக்கு சந்தோஷம்.
 கர்த்தர் எனக்கு கொடுத்த, எல்லா பாஷையிலுள்ள வாசகர்களுக்காகவும், வெளிநாட்டில் உள்ள வாசகர்களுக்காகவும் தேவனைத் துதிக்கிறேன்.
|