இலங்கை தமிழர்கள் - 2270924 (11.27 சதவீதம்)
இந்திய தமிழர்கள் - 842323 (4.6 சதவீதம்)
தமிழ் பேசும் முஸ்லீம்கள் - 1869820 (9.23 சதவீதம்) இவர்கள் இலங்கையில் பிறந்து
இலங்கையில் வளர்ந்தவர்கள்
சிங்களவர்கள் - 15173820 (74.88 சதவீதம்)
இலங்கையின் மொத்த மக்கள் தொகை 20263723 ஆகும்.
மேலே குறிப்பிட்டப்படி மொத்த இலங்கை மக்களில் 3 வகை தமிழர்கள் இருக்கிறார்கள். 1). யாழ்பாண தமிழர்கள், 2). இலங்கையிலே பிறந்து வளர்ந்து வாழும் முஸ்லீம் தமிழர்கள், 3). மலையில் தேயிலை தொழிலாளி தமிழர்கள். பல நூறு வருடங்களுக்குமுன்பே இந்தியாவிலிருந்து குடியேறிய தமிழர்கள்.
யாழ்பாண தமிழர்கள் வடக்கு-கிழக்கு பகுதி தமிழர்களை தவிர மற்ற இரண்டுவித தமிழர்களை தங்களோடு சேர்க்க பிரியப்படுவதில்லை. மற்ற தமிழர்களுக்கும் அவர்களோடு இணைந்து போராட விருப்பமில்லை. யாழ்பாண தமிழர்கள் மற்ற தமிழர்களை சேர்த்து இணைந்து போராடியிருந்தால் நிச்சயம்
ஓரளவு தனி தமிழ்நாடு அன்றைக்கே கிடைத்திருக்கலாம் என்று யூகிக்கமுடிகிறது.
ஆனால் அந்த காலத்திலேயே யாழ்பாண தமிழர்கள்
குறிப்பாக விடுதலைப்புலிகள் தங்களோடு மற்ற தமிழர்களை சேர்க்க விரும்பவில்லை. அதனால்தான் கிழக்கு பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான முஸ்லீம் தமிழர்களை புலிகள் இயக்கத்தினரை ஒதுக்கியே வைத்திருந்தனர். முஸ்லீம் தமிழர்கள் புலிகளை சிங்கள ராணுவத்துக்கு காட்டிக்கொடுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி, அந்த காரணத்தை பெரிதுப்படுத்தி கிழக்கு பகுதியிலிருந்தே புலிகள் இயக்கம் முழு முஸ்லீம் தமிழர்களையும் 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து வெளியேற கட்டளையிட்டது. வேறு வழியில்லாமல் சுமார் 8 ஆயிரம் முஸ்லீம் தமிழ் குடும்பங்கள் இரவோடு இரவாக தங்கள் உடைகளையும், உடைமைகளையும் பாலீதின் பைகளில் துறுத்திபோட்டுகொண்டு குழந்தைகளை, பெண்களை இழுத்துக்கொண்டு இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேறிய துயரத்தை இன்றைக்கும் அவர்கள் மறக்கவில்லை, இலங்கை மக்களும் மறக்கவில்லை. 1990ம் ஆண்டு மட்டக்களப்பு அருகில்
காத்தாங்குடி மற்றும் ஏறாவூர் நகரங்களில் மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த முஸ்லீம்களை இரண்டு ஊர் மசூதிகளிலும் ஒரே நேரத்தில்
விடுதலைப்புலிகள் புகுந்து சரமாறியாக சுட்டதில் அதே இடத்தில் தொழுகைக்கு முட்டிபோட்டநிலையில் 103 பேர் இறந்தனர். ஏராளமானவர்கள் படுகாயமுற்றனர். அந்த தூப்பாக்கி குண்டு இன்றும் அந்த மசூதியின் சுவர்களில் அடையாளமாக வைத்துள்ளனர்.
 விடுதலைப்புலிகளின் கூட்டத்திலிருந்து தப்பித்த வாலிபன் ஒருவன் கூறியதாவது: ஆரம்ப காலத்தில் இயக்கத்தில் சேர யாரையும் புலிகள் வலுகட்டாயமாக அழைக்கவில்லை. பொதுவான அழைப்பு கொடுத்தபோது
ஈழநாடு என்ற உற்சாகத்தில் பலர் தாங்களாகவே சேர்ந்தார்கள். அடுத்த கட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் இயக்கத்தில் சேரவேண்டும் என்று கட்டளை கொடுக்கப்பட்டது. 3ம் கட்டத்தில் புலிகளே வீடுகளில் சென்று வாலிபர்களையும், சிறுவர்களையும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்கள்.
4ம் கட்டத்தில்தான் ஒரு பேட்டியில் பெண் புலி ஒருவர் கூறியதைப்போல்
சிறுபிள்ளைகளையெல்லாம் கதறகதற தாயிடமிருந்து விடுதலைப்புலிகள் பிரித்து இழுத்து கொண்டுபோனார்கள். அப்போதுதான் அநேக யாழ்பாண தமிழ்பெண்கள் மண்ணை தூவி சபித்து கதறி அழுது விடுதலைப்புலிகள்மேல் தங்கள் வெறுப்பை காட்டினார்கள். அதன்பின்தான் யாழ்பாணம் மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு போன்ற இடங்களிலிருந்து ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை 8 வயது, 10 வயது, 12 வயது பிள்ளைகளை கள்ளதோனியில் ஏற்றி புலிகள் கையில் அகப்படாமலும் இங்கு குண்டடிப்பட்டு சாகாமலும் இருக்க இலங்கையைவிட்டு
ஓடிபோய் பிழைக்க அவர்களே கள்ளதோனியில் வைத்து அனுப்பிவைத்தார்கள். அந்த பெண்களின் வெறுப்பு இப்போதும் உண்டு. யுத்தம் முடிந்தபின்
ராணுவ ரிசீவிங் பாய்ன்ட் என்ற பெயரில் ராணுவ பாதுகாப்பு தேவைப்படுபவர்கள் சரணடைய இலங்கை ராணுவத்தினர் ஏற்பாடு செய்தனர். இனி ஈழநாடு கிடைக்காது, கிடைத்தாலும் நாட்டில் வாழ மனிதர்கள் இல்லாத நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த விடுதலைப்புலிகள், மற்ற மக்களோடு மக்களாக
ரிசீவிங் பாய்ன்ட்டுக்கு ஒன்றாக மக்களோடு அடையாளம் தெரியாமல் கலந்து வந்தார்கள். புலிகள் யார் பொதுமக்கள் யார் என்பதை கண்டுபிடிக்க இயலாது. விடுதலைப்புலிகளுக்கு தனி ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி புலிகளின் போராட்ட குணம்மாற்ற, மருத்துவம் மனோதத்துவ ரீதியாக ஏற்பாடு செய்து வைத்தியம் செய்யவும் பயிற்சியளிக்கவும் அழைப்புவிடுத்தனர். அப்போது புதிதாக புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் பலர் எழுந்து கூட்டமாக நின்றனர். பழைய புலிகள் யாரும் எழுந்திருக்கவில்லை. ஆனால் மக்களே புலிகளைக் காட்டிக்கொடுத்தனர். இவன்தான் என் பிள்ளைளை கதறகதற இயக்கத்துக்கு இழுத்து சென்றவன். அதோ அவர்களும் புலிகள்தான் என்று சுமார் 300 புலிகளை அன்றைக்கு பொதுமக்களே பிடித்து கொடுத்தார்கள் என்றால் யாழ்பாண மக்களின் உள்ளத்தில் புலிகளைப்பற்றிய வெறுப்பு எவ்வளவாக இருந்தது என்பதை அந்த சம்பவம் பிரதிபலிக்கிறது என்று பேட்டி கண்டவர்கள் கூறினார்கள்.
 மற்றொரு வேதனையான செய்தி என்னவென்றால், அவர்கள் கூறியதிலிருந்து அந்த முக்கிய விவரம் அறியமுடிந்தது.
இன படுகொலை என்றால் தமிழர்களை கொல்வது ஆகும்.
ஆனால் எங்கள் கண்முன்னால் நடந்தது யுத்தத்தில் சுமார் 12 ஆயிரம் புலிகளை ராணுவம் கொன்றது. யுத்தம்
சிங்கள ராணுவத்துக்கும் - புலிகளுக்கும்தான். மக்களோடு அல்ல, ஆகவே அது இன படுகொலை என்று கூறமுடியாது. ஆனால் யுத்தத்தில்
புலிகள் தங்களை பாதுகாத்துகொள்ள மக்களாகிய எங்களைத்தான் அரணாக முன் நிறுத்தினார்கள். காரணம் இலங்கை ராணுவத்தினரைப்போல அவர்களுக்கு பாதுகாப்பு கவசம் அல்லது புல்லட் புரூப் எதுவும் இல்லை. ராணுவம் பொது மக்களை சுடமாட்டார்கள் என்பதற்காக புலிகள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு பொதுமக்கள் கூடியுள்ள இடத்தில் ஒளிந்துக்கொள்வார்கள். புலிகள் பெண்களை வரிசையாக நிறுத்திவைப்பார்கள். ராணுவத்துக்கு தெரியும் இவர்களுக்கு பின் புலிகள் பதுங்கியுள்ளார்கள் என்று. பலமுறை எங்களை சுட்டுவிட்டு முன்னேற ராணுவம் முயலவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் எங்கள் கூட்டத்தை சுட்டுத்தான்
புலிகளை சுடமுடியும் என்ற நிலை ஏற்பட்டபோது படபடவென்று பொதுமக்களை சுட்டுதள்ளி புலிகளையும் கொன்றார்கள். அப்படி செத்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பிணமாக குவிந்தனர்.
ஆஸ்பத்திரியில் புலிகள் பதுங்கினார்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நிறைந்த இடத்தில் பதுங்கினார்கள். பலமுறை ராணுவம் எச்சரித்தும் ஆஸ்பத்திரி நோயாளிகளை அவர்கள் வெளியே அனுப்பவில்லை. மாணவர்களை சிறுமிகளைக்குறித்து புலிகள் இரக்கம்காட்டாமல் ராணுவம் எச்சரிக்கை கொடுத்தும் அந்த பிள்ளைகளை வெளியே அனுப்பவில்லை. ராணுவம் பலமுறை பொறுமை காத்தது முடிவில் ஆஸ்பத்திரியில் குண்டு போட்டார்கள், பள்ளிக்கூடத்தில் குண்டு போட்டார்கள், நோயாளிகள், செவிலியர், சில டாக்டர்கள் உள்பட மரித்தார்கள், காயப்பட்டார்கள், பள்ளிக்கூட சிறுமியரும் கொல்லப்பட்டனர். இந்துகோவிலில் புலிகள் அடைக்கலம் புகுந்தனர். கோயில்கள் பிரங்கியால் சுடப்பட்டது. இப்படிதான் தமிழ்மக்களை
தன் தமிழ் இனத்தை சாக கொடுத்தாவது தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவு விடுதலைப்புலி இயக்கத்தினர்
ஈவு இரக்கமின்றி எங்கள் உறவினர்களை எங்கள் இனத்தை லட்சகணக்கில் பலி கொடுத்தார்கள்.
ராணுவம் கடைசி முயற்சியாக முள்ளிவாய்க்காலில் புலிகள் யார், சிவிலியன் யார்? பொதுமக்கள் யார் என்று பார்க்க முயற்சிக்காமல் பிரபாகரனை வளைத்துவிட்டோம் என்ற வெறியில் அதை கடைசி வெற்றியாக கருதி துவம்சம்செய்து ஒரேடியாக அத்தனை லட்சம் பொதுமக்களையும் ஒரே இடத்தில் இலங்கை ராணுவம் கொன்றது. சரித்திரத்தில் அது மாறாத ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. அதுதான் இலங்கை ராணுவம் செய்த மிகப்பெரிய படுகொலைகள் ஆகும். அதை உலகம் சாட்டிலைட்மூலம் கண்டது.
இப்போது புலிகள் ஆதிக்கம் இல்லை என்ற தைரியத்தில் இலங்கை மக்கள் அன்று பேட்டியில் கூறிய விஷயங்கள் ஆகும். இப்போது விடுதலைப்புலிகளை மறுவாழ்வு மையத்தில் வைத்து தொழில் கற்றுக்கொடுப்பதாக செய்திகள் கூறுகிறது.
மற்ற பத்திரிக்கை கூறுவதுபோல எந்த நாட்டு பத்திரிக்கையாளர்களும் இலங்கையை பார்க்க சுதந்திரம் உண்டு என்பது பொய். இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாக எழுதுபவர்கள் என்று அறிந்தால் அவர்களை மட்டும் குறிப்பிட்ட சில இடங்களை பார்க்க அனுமதிக்கிறார்கள். இதை நானே நேரில் கண்டு அறிந்த விஷயமாகும். வெளிஊர்களிலிருந்து அல்லது கொளும்புவிலிருந்து யார் வந்தாலும் இரகசியமாக கவனிக்கப்படுகிறார்கள். நான் நேரில்போனபோது எங்கு பார்த்தாலும் ராணுவ உடையில் ராணுவத்தினர் ராணுவ வாகனங்களும்தான் பார்க்க முடிந்தது. இதில்
ராணுவ உடையில்லாமல் எத்தனை ஆயிரம்பேர் அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும், பள்ளிக்கூடம் அருகிலும், ஓட்டல்களிலும் பஸ் ஸ்டான்ட்களிலும் காணப்பட்டார்களே!. அதனால்தான் கொளும்பு நகரில் உண்மையான ஆத்துமபாரம் உள்ள ஊழியர்கள் ஊழியம் செய்ய யாழ்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களுக்கு சென்றுவர பயப்படுகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் யாழ்பாண மக்கள்கூட உறவினர்களை பார்க்க சாவுக்கோ, திருமணத்துக்கு வந்துபோக தயங்குகிறார்கள். யாழ்பாணத்தில் சுதந்திரம் இல்லை.
 ஆகவே ஜாமக்காரனாகிய நான்
வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழருக்கு ஆலோசனையாக கூறுவதாவது: இலங்கைவாழ் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் வடக்கு-கிழக்கு இலங்கையை தனி (மாநிலமாக்கி)
மாகாணமாக்கி இந்தியாவில் உள்ளதைப்போல் தனி மாநில சுயாட்சியாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
யாழ்பாணம் தனி மாநிலமாக இலங்கையை மத்திய அரசாங்கமாக ஏற்றுக்கொண்டு மாறினால் வெகுவிரைவில்
கொளும்புவைவிட மிகப்பெரிய உயர்ந்த நிலைக்கு யாழ்பாணம் மாறி பொருளாதார முன்னேற்றம் கண்டு, தொழிற்சாலைகள் யாவும் நிரம்பிய அற்புதமான நாடாக திகழும். நான்
ஒரு தமிழன் என்பதைவிட நான் ஒரு இலங்கை தமிழன் என்று கூறும்
தேசிய நீரோட்டத்தில் வர திட்டமிடுங்கள். இதில்தான் உங்கள் சந்ததி சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்க்கை நடத்த வழி உண்டாகும். நீங்களும் சுதந்திரமாக போய்வரலாம், தொழில் தொடங்கலாம், குடும்பத்தோடு சொந்த நாட்டில் வாழலாம்.
விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் உள்ளவர்களோ,
இலங்கை அரசாங்கமோ என் கட்டுரையை தவறாக புரிந்துக்கொள்ளவேண்டாம். தமிழ் மக்களை பிரிக்கும் எண்ணத்தில் இதை நான் எழுதவில்லை: நான் ஆராதிக்கும் தெய்வம்
இயேசுகிறிஸ்து யாரையும் பிரிக்கும் தெய்வம் அல்ல, சத்துருவை நேசிக்கும் உபதேசத்தை கூறியவர். நான்
இந்திய தமிழன் என்று கூறி பெருமையடைவதைப்போல் இலங்கை தமிழர்கள் என்று கூறி நீங்கள் உங்கள் தாய்நாட்டில் சுதந்திர காற்றை அனுபவிக்கவேண்டும். அப்போதுதான்
யாழ்பாணம், வவுனியா போன்ற இடங்களில் வாழும் ஆயிரக்கணக்கான விதவை சகோதரிகளுக்கு வாழ வழி உண்டாக்க முடியும். கால் இழந்தவர், கண் இழந்தவர், கை இழந்தவர் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து மனநோயில் பாதிக்கப்பட்டவர் நான் எழுதிய இந்த ஆலோசனை நிறைவேறினால் ஒருநாளைக்கு இரண்டு வேளையாவது சாப்பிட்டு பசியாற வழி உண்டாக்க முடியும்.
இவர்களுக்கு உதவி செய்ய நிறையபேர் கையில் பணத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் அது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டும் போய் சேரவேண்டுமே!. பணம் பொருள் சுதந்திரமாக எடுத்து சென்று கொடுக்க இப்போதும் இயலவில்லை!.
ராணுவம் யாழ்பாணத்தைவிட்டு நீங்கவேண்டும். மாநில சுதந்திரம் ஏற்படவேண்டும்.
ராஜபக்ஷே காலத்திலேயே அது நடக்க இந்திய அரசியல் தலைவர்கள், இந்தியாவை ஆள்பவர்கள் முயன்றால் அமெரிக்கா போன்ற நாடுகள் தலையிட்டால், வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களாகிய நீங்கள்
தனி ஈழம் என்ற பழைய சித்தாந்த்ததை மாற்றி - தனி சுதந்திர மாநிலம் என்ற எண்ணத்தின் கீழ் யாவரும் ஒன்றுபட்டால் நிச்சயம் கடவுளின் கிருபையோடு நிச்சயம் ஒருநாள்
வட-கிழக்கு தமிழ் மாநிலம் உருவாகும்.
இனி இலங்கை அரசாங்கம் துரிதகதியில் இலங்கையில் புனரமைப்பு திட்டத்தை துரிதமாக தொடங்கி போர் நடந்த பகுதியில் உள்ள
யாழ்பாண-வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பகுதி கிராமங்களில் காழ்புணர்ச்சி இல்லாமல் கவனம் செலுத்தி உதவிட வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் அன்பை அரசாங்கம் பெறமுடியும்.
 யுத்தத்துக்கு முன்பும்-பின்பும் அரசாங்கத்திடமும், புலிகள் இயக்கத்திடமும் ஏராளமான தவறுகள் நடந்துமுடிந்துவிட்டது. பழைய விஷயங்களை நினைக்காமல் தமிழ் மக்களை வாழ செய்ய, இழப்புகளுக்கு ஈடு செலுத்தி மறுவாழ்வுக்கு வழி உண்டாக்கிடவேண்டும்.
 வெளிநாடுகளில் வாழும்
இலங்கை தமிழ் ஜாமக்காரன் வாசகர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள். அவரவர்கள் தங்கள் சொந்தங்களுக்கு தனிப்பட்டமுறையில் உதவி செய்வதுபோல், வெளிநாடுகளில்
உறவினர்களே இல்லாத தமிழர்கள் வடக்கு-கிழக்கு தமிழ் பகுதிகளில் ஏராளமானவர்கள் வாடி நிற்கிறார்கள். அவர்களுக்கு உதவுபவர்கள் யாரும் இல்லை.
 நான் நேரில் சென்றபோது பல பெண்கள் கண்ணீரோடு ஐயா, மற்றவர்களுக்கு சொந்தங்கள் உதவியிருக்கிறது. ஆனால் எங்களுக்கு யாரும் வெளிநாட்டில் இல்லை. அரசாங்கம் உதவியும் ஒழுங்காக கிடைப்பதில்லை.
எங்களுக்கு உதவிகரம் தேவை என்றார்கள்.
 இந்த ஜாமக்காரனில் இப்போதுள்ள இலங்கை தமிழர்களின் ஒரு சிறு பகுதியினரின் உள்ளத்தின் எதிர்ப்பார்ப்புகளை அவர்கள் பேட்டிமூலம் வாசித்தீர்கள். நான் பேசிய விவரம், வாசித்த முழுவிவரம் முழுவதையும் எழுதாமல் சிறுசிறு பகுதிகளாக தொகுத்து வாசகர்களுக்காக எழுதியுள்ளேன். இதனால் எனக்கு ஏற்படும் பின்விளைவுகளைப்பற்றி நான் யோசிப்பதில்லை.
 உங்கள் யாவருக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறேன். நான் எழுதியதில் பிழை உண்டானால் என்
கருத்து ஏற்புடையதல்ல என்று உங்களில் யாராவது கருதினால் எனக்கு தயங்காமல் எழுதுங்கள்.
இவைகளை தொகுத்து எழுத உதவியாக இருந்த இலங்கை-இந்தியாவை சேர்ந்த 3 பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் மறுபடியும் நன்றி கூறுகிறேன். |