நம் குடிகார ஆயர்கள் பாடும் 23ம் சங்கீதம்
  Selected

1."குடிவெறி" என் மேய்ப்பனாயிருக்கிறான்: நான் "விருத்தி"யடையேன்.

2.அவன் என்னைக் "கள்"ளுள்ள இடங்களில் மேய்த்து, "மயக்கும்" தண்ணீர்களண்டையில் என்னைக்கொண்டுபோய் விடுகிறான்.

3.அவன் என் ஆத்துமாவைக் "கெடுத்து" தன்னுடைய வற்புறுத்தலினிமித்தம் என்னை "போதையின் பாதை"களில் நடத்துகிறான்.

4.நான் நரக இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், "தடுமாற்றத்துக்குப்" பயப்படேன்: மதுவே, நீ என்னோட கூட இருக்கிறாய்: உனது "நாற்றமும் டேஸ்ட்(Taste)டும்" எனக்குப் பிடிக்கும்.

5.என் குடும்பத்துக்கு என்னாலே நீ "அவமானத்தை" ஏற்படுத்தி, என் உடலை "அசிங்கத்தால்" அபிஷேகம் பண்ணுகிறாய்: என் "நிர்வாணம்" அப்படியே தெரிகிறது.

6.என் ஜீவனுள்ள நாளெல்லாம் வறுமையும், வியாதியும் என்னைத் தொடரும்: நான் டாஸ்மாக் கடையிலே நீடித்த நாட்களாய் குடியிருப்பேன்!.


பாடம்:

- திராட்சை ரசம் பரிகாசஞ் செய்யும்: மதுபானம் அமளி பண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்லன் - மதுபானத்தை விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை. - மதுபான பிரியரும், மாமிசப் பெருந்தீனிக்காரரும், - போஜனப்பிரியரும் தரித்திரராவார்கள். - மதுபானம் மெதுவாக இறங்கும்: முடிவிலே அது - விரியனைப்போல் தீண்டும்! - சாராயத்தைக் - குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! - ஆசாரியனும் தீர்க்கதரிசியும்(கூட) மதுபானத்தால் மதிமயங்கி - மோசம் போய் - இடறுகிறார்கள். - (ஒன்றுக்கொன்று உறவினர்களான) வேசித்தனமும்-மதுபானமும் இருதயத்தை மயக்கும் - மதுபானம் பண்ணுவோர் அக்கிரமஞ் செய்வார்கள் - துன்மார்க்கத்துக்கேதுவான மதுபான வெறிக்கொள்ளாமல், ஆவியினால் நிறைந்திருங்கள்!. (நீதி 21:1. 21:17. 23:20,21,31,32. ஏசா 5:11. 28:7. ஓசி 4:11. ஆப 2:5. எபேசி 5:18).

ஜாமக்காரன்: மேலே வாசித்த குடிகாரனின் சங்கீதத்தை வெளியிட எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. வேதத்திலேயே அது மிக நல்ல சங்கீதம் ஆகும். நம் சபையில், விசுவாசிகள் முதல் நம் குழந்தைகள்வரை மனப்பாடமாக பயபக்தியோடு சொல்லும் சங்கீதம் 23 அல்லாமல் வேறு எந்த சங்கீதத்தையும் நாம் இந்த அளவு நேசித்ததில்லை. அப்படிப்பட்ட தாவீது பாடிய இந்த நல்ல அர்த்தமுள்ள சங்கீதத்தை நான் கொச்சைப்படுத்தியதுபோல் என் உள்உணர்வு குத்துகிறது.

ஆனால் இன்று பல CSI, லூத்தரன் டையோசிஸ் நிர்வாக கமிட்டி அங்கங்கள் மீட்டிங்க்காக அழைக்கப்பட்டு ஸ்டார் லாட்ஜ்களில் தங்கவைக்கப்படும்போது அவர்களுக்கு கொடுக்கும் விருந்தில் பிரதான இடம்வகிப்பது இந்த மதுபான பாட்டில்கள்தான். சினாட் கூட்டங்களுக்கு கலந்துக்கொள்ள வருபவர்களுக்கு கொடுக்கப்படுவதும் இந்த மதுபானம்தான். இதில் ஆயர்களில் பெரும்பாலானவர்கள் குடிகாரர்கள் என்பதை கண்டுபிடித்ததும் இப்படிப்பட்ட டையோசிஸ் - சினாட் கமிட்டி கூட்டங்களுக்கு கலந்துகொள்ள வந்தபோதுதான் அதை அறியமுடிந்தது. ஒவ்வொரு டையோசிஸ்ஸிலும் குடிகார ஆயர்கள் எண்ணிக்கை வரவர அதிகமாகிக்கொண்டேபோனதால் அவர்கள் இதை வாசித்து உணர்த்தப்பட வழி உண்டாகாதா என்ற எதிர்ப்பார்ப்பில்தான் இதை வெளியிட்டேன். இதை வெளியிட்டத்துக்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM