வாசகர் கடிதம்
4:
விவாகரத்து - DIVORCE
ஜாமக்காரன்: விவாகரத்தைப் (Divorce) பற்றி நான்
2011 ஜுன் மாத ஜாமக்காரனில் விரிவாக ஆலோசனையோடு எழுதியுள்ளேன். அதைப் படித்த எத்தனையோ
கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்று சேர்ந்தன. அதை வாசித்த பலபேர்கள் தங்கள்
விவாகரத்து செய்து பிரிந்துப்போக இருந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு கணவன்-மனைவியுமாக மறுபடியும் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாக இப்போது வாழ்கின்றனர்.
சில குடும்பங்களில்
திருமணம் செய்யபோகும் பையன் அல்லது பெண்ணின் சரீரத்தில் உள்ள முக்கிய குறைபாடுகளை நீக்காமல் தங்கள் மகனுக்கு, மகளுக்கு திருமணம் நடத்திவிட்டால் எல்லாம் சரியாகவிடும் என்ற எதிர்ப்பார்ப்பில் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை சில பெற்றோர்கள் நடத்தி முடித்துவிடுகிறார்கள். ஆனால் சரீர குறைபாடு சரியாகாததால், திருமணமான 1 அல்லது 2ம் மாதத்திலேயே அவர்களுடைய சரீர பெலவீனம் தம்பதிகளுக்குள் தெரியவருகிறது. குடும்பத்தில் பிரச்சனை எழுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ பெண் எனக்கு கடிதம் எழுதும்போது பையனின் பெற்றோர் தங்கள் மகன் திருமண வாழ்க்கைக்கு லாயக்கற்றவன் என்பதை அவர்கள் மனதார அறிந்தும் பெண்வீட்டாராகிய எங்களை ஏமாற்றி திருமணத்தை நடத்திவிட்டனர் என்று அவள் தன் வாழ்க்கையில் நடந்த ஏமாற்றத்தை எனக்கு கடிதம் எழுதி அறிவித்ததை கீழே வாசியுங்கள்.
திருமணமாகி இரண்டு மாதத்திலேயே
விவாகரத்து பெற்று இப்போது பிரிந்து வாழும் தம்பதிகளில் நானும் ஒருவள் என்று தன் கடிதத்தை ஆரம்பிக்கிறாள்.
மணமகளின் வேதனை:
தயவுசெய்து உங்கள் ஜாமக்காரனில் இதை வெளியிடுங்கள். நாங்கள் உங்கள்
ஜாமக்காரன் குடும்பத்தின் பிள்ளைகள், பின்சந்ததிக்கு நான் இப்போது எழுதுவது பிரயோஜனமாக இருக்கும்.
என் திருமணம் ஏமாற்றப்பட்டது. என் கணவருக்கு திருமண வாழ்க்கையில் சரீரபிரகாரமான
ஆசையில்லை. தன் பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் என்னை திருமணம்செய்து கொண்டதாக அவர் முதல் நாளிலேயே என்னிடம் மனம்விட்டு பேசினார். ஆனால் நானோ அதிர்ச்சியுற்றவளாகி மனம் ஒடிந்த நிலையில்
ஏமாற்றபட்டவளாகிவிட்டேன். என் புருஷனின் சம்பளத்தின் தொகையைக்குறித்தும்கூட அவருடைய பெற்றோர் பெரிய பொய் பேசி என் பெற்றோரை ஏமாற்றிவிட்டார்கள். என் புருஷனின் பெற்றோர்
உயர்ந்த குடும்பத்தில் உள்ளவர்கள். மிகஅதிகம் படித்த பட்டதாரிகள். இப்படியிருக்க எப்படி அவர்களுக்கு தன் மகனின்
சரீரகோளாறு பலவீனம் தெரியாமல் போயிற்று!. என்னை போன்ற PG படித்த
பெண் பிள்ளைகளை ஏமாற்றவா? இப்படி ஏற்பாடு செய்திருப்பார்கள்?.
திருமணம் என்ன விளையாட்டா?. ஆண்கள் இதை சகித்துக்கொள்ளலாம். ஆனால் என்னை போன்ற
இளம் வாலிபபெண்கள் எப்படி சகிக்க முடியும்?. விவாகரத்துக்குமுன் திருமண ஆலோசனை (Marriage
Councelling) ஒவ்வொரு ஆலயத்திலும் மணமக்களுக்கு தேவை. அதுபோல் விவாகரத்து செய்பவர்களேயானால்
அவர்கள் கர்த்தருக்குமுன் சத்தியம் செய்து தாலிகட்டிய, அதே ஆலயத்தில்
விவாகரத்து கவுன்சிலிங் என்ற ஏற்பாட்டிற்கு இரு
குடும்பங்களும் மீண்டும் வரவேண்டும். அதன்பின்னர் மட்டுமே விவாகரத்து
கேட்டு அவர்கள் கோர்ட்டுக்கு போகலாம். இப்படி ஒரு ஏற்பாடு ஒவ்வொரு
சபையிலும் செய்யவேண்டும். ஆலயத்தில் நடக்கும் விவாகரத்து
பேச்சுவார்த்தையில் தவறு யார்மேல் உண்டோ அவர்களை சபையை
விட்டு நீக்க Excommunicate செய்ய சபைசட்டம் இயற்றவேண்டும். இன்று விவாகரத்து எல்லா சபைகளிலும் சர்வசாதாரணமாகிவிட்டது.
சபை தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்மார்கள் வீட்டிலேயே அவர்கள் பிள்ளைகளுக்கே இப்படிப்பட்ட விவாகரத்து நடந்துக்கொண்டு இருக்கிறது. அதனால் இதைக்குறித்து சபை தலைவர்கள் நான் கூறிய இந்த பிரச்சனைக்கு நான் எழுதியதுபோல புதிய நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டார்கள்.
ஆனால்
கிறிஸ்தவ சபை மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகவாவது - என் கடிதத்தை ஜாமக்காரனில் வெளியிடுங்கள்.
|