கேள்வி:நான் இரண்டாம் திருமணம் செய்தவன். முதல் மனைவி என்னை விட்டு போய்விட்டாள் அவளுக்கு ஒரு குழந்தை உண்டு. உங்கள் பிரசங்கத்தை
Internet-ல் - U-TUBE மூலமாக நீங்கள் பேச கேட்டேன். அதில் நீங்கள் திருவிருந்தைப் பற்றி பிரசங்கத்தீர்கள். அந்த பிரசங்கத்தை எந்த நாட்டில் பிரசங்கத்தீர்களோ எனக்கு தெரியாது. செய்தி மிகவும் அருமையாக இருந்தது. அதனால் உங்கள் விலாசம் கண்டுபிடித்து இந்த கேள்வியை கேட்கிறேன். நான் திருவிருந்து பங்குகொள்வதில் தடை உண்டா?
பதில்:இந்த கேள்வியை நீங்கள் கேட்க நினைத்தபோதே உங்கள் உள்ளத்தில் குற்ற உணர்ச்சி உண்டாவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்களே!, ஆம். நீங்கள் சபை ஆராதனையில் பங்குக்கொள்ள தடையேதும் இல்லை. ஆனால் சபையில் எந்த பொறுப்பும் வகிக்ககூடாது. திருவிருந்தில் பங்குகொள்ளவும்கூடாது. ஆராதனை நேரத்தில் காணிக்கை எடுக்கும் உதவியும் நீங்கள் செய்யக்கூடாது. முதல் மனைவி அல்லது புருஷன் உயிரோடு இருக்கும்வரை சபை செயல்பாடுகளில் உங்களுக்கு பங்கு கிடையாது. முதல் மனைவி உங்களை விட்டுப்போக எந்த நியாயமான காரணம் இருந்தாலும் திருவிருந்து கைக்கொள்ளும் தகுதியிழக்கிறீhர்கள்.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நம் இஷ்டம்போல் வாழ்வது அல்ல அல்லது இஷ்டம்போல் அமைத்துக்கொள்வதுமல்ல. கிறிஸ்தவ ஜீவியத்துக்கு வசன சட்டம் உண்டு. இன்றைக்கு ஐரோப்பா, அமெரிக்கா, கலாச்சாரம் இந்தியா-இலங்கை சபைக்குள் புகுந்து பெரும்
சீரழிவை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது.
வெளிநாடுகளில் நான் பிரசங்கித்த பல சபைகளில் திருமணமே செய்யாமல் 6 வருடங்கள் ஒரே வீட்டில் கணவனும்-மனைவியுமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு அங்குள்ள சபையில் பெரிய பொறுப்புகளை கொடுத்துள்ளனர். அவர் ஒரு பாஸ்டரைப்போல சபை ஆராதனையிலும் பொறுப்பு வகிக்கிறார்.
சபை மக்கள் பாஸ்டர் யாவரும் இவர்களைப்பற்றி அறிவார்கள். இது தவறு என்று இவர்கள் யாருக்கும் தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் அது தவறில்லை என்று நினைக்கிறாகளா?. நான் சுமார்
25 வருடங்களுக்கு முன் இவர்கள் சபையில் பிரசங்கித்தேன். அங்கு திருவிருந்துப்பற்றி பிரசங்கித்தேன். திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் இப்படிப்பட்ட செயல் தவறு என்பதை விளக்கினேன். அதிலிருந்து அந்த நாட்டுக்கு நான் வேறு சபையில் பிரசங்கிக்க அழைக்கப்பட்டு போனாலும், இவர்கள் என்னை அவர்கள் சபையில் உபயோகிப்பதில்லை. காரணம் இப்படிப்பட்ட தவறுகளை நான் சுட்டிக்காட்டி பிரசங்கித்ததே! ஆனால் அந்த சபை மக்கள் நான் பேசும் கூட்டங்களில் பங்குகொள்வார்கள். (இது வெளிநாட்டில் நடந்த சம்பவம் ஆகும்). வேத வசனத்தின்படி தவறுகளை சுட்டிக்காட்டினால் யாரும் இஷ்டப்படுவதில்லை.
சமீபத்தில் ஒரு பிஷப் தன் பிள்ளைக்கு இரண்டாம் கல்யாணத்தை பகிரங்கமாக ஆலயத்திலேயே நடத்தினார். முதல் திருமணத்தில் சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்க இரண்டாம் கல்யாணத்தை இப்படி பகிரங்கமாக நடத்தினால் நாளை நம்
CSI, லூத்தரன் சபைகளில் பல திருட்டு கல்யாணங்கள் அதிகார பூர்வமாக நடந்தேருமே!. இதற்கு முன்பும் இரண்டு பிஷப்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாம் முறை அவர்கள் கல்யாணத்தை சபையில் வைத்து நடத்தியுள்ளனர்!. இவைகளை அறிந்த சினாட் என்ன செய்கிறது?
சிஎஸ்ஐ, லூத்தரன் சபைகள்தான் இப்டிப்பட்டவைகளை அனுமதிக்கிறது என்றால் நான் மிகவும் மதிக்கும் நல்ல ஆவிக்குரிய சபையான
லேமேன் இவாஞ்ஜிலிக்கல் (LEF) என்ற சபை தலைமையிலேயே இந்த சாட்சியில்லா திருமண தவறு நடந்தேறிவிட்டதே!, தன் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்தது. ஆகவே முறைப்படி நான் விவாகரத்து செய்துவிட்டேன் என்று பகிரங்கமாக தன் செயலை நியாயப்படுத்தி தன் மகள் கூறும்போது அதை வேதம் அனுமதிக்கிறதா? என்ற கேள்வியை சபையின் மற்ற தலைவர்கள் அல்லது மேய்ப்பர்கள் ஏன் கேட்ககூடாது?. இந்த குறிப்பிட்ட விவரத்தையும் சபை ஸ்தாபகரே தன் உடன்பிறப்புகளுடன் ஒப்புரவாகாத சில தவறுகள் நீண்டுப்போன விவரத்தையும் இன்னும் மற்ற விவரங்களையும் குறிப்பிட்டு சில வருடங்களாக இந்த சபையிலிருந்து பலர் கடிதங்கள் எனக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் நான் அந்த சபையை எத்தனையாக நேசிக்கிறேன் என்பது. மற்ற மெயின் லைன் சபைகளில் மனந்திரும்பின பலரை, மற்ற மதத்திலிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்ட பலரை கிறிஸ்துவுக்குள் வளர இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்த குறிப்பிட்ட சபைக்கு போங்கள் என்று ஆலோசனை கொடுத்து அனுப்பியிருக்கிறேன். காரணம் அந்த குறிப்பிட்ட சபையில் உள்ள அனைவருமே நல்ல ஆத்தும ஆதாயம் செய்யும் பாரம் உள்ளவர்களாவர். ஒரு ஆத்துமா கிடைத்தால் போதும் அவர்களுக்காக அழுது ஜெபிப்பதும், அந்த ஆத்துமா வளர தங்கள் நேரம், பணசெலவைக்கூட பெரிதாக எண்ணாமல் அந்த ஆத்துமா சரியானபடி மனந்திரும்பும்வரை கர்த்தரிடம் போராடி ஜெபிப்பார்கள் என்பதையும் எல்லாரும் அறிவார்கள்.
பல வருடங்களுக்குமுன்பே இந்த சபையில் உள்ளவர்களின் பிள்ளைகள் திருமண பிரச்சனையில் பெற்றோர் - பிள்ளைகளிடையே பெரிய போராட்டமே நடந்துள்ளது. பெண்ணோ - பையனோ வேறு சபைகளில் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டாலும் அந்த மனந்திரும்புதலை இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களுக்கென்று சில வசன முறைகளை வைத்துக்கொள்கிறார்கள். அந்த சபை தலைமையையே விக்கிரகமாக்கி
தலைமை குறிப்பிடுகிற அல்லது சம்மதிக்கிற பையனை அல்லது பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற மிக கண்டிப்பான சட்டம் இவர்கள் சபையில் காணப்பட்டதால் பல குடும்பத்தில் பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் உண்டாக்கியுள்ளது!. இப்போது இந்த குறிப்பிட்ட சபையில் பிரச்சனைக்குரியவரின் பிள்ளைகள் வெளிநாட்டு கலாச்சாரத்தில் படித்து வளர்ந்துவிட்டப்படியால் இவர்களை கண்டிக்காவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை. தன் கீழ் உள்ள சபை மக்களுக்கு ஒரு வேதம் தன் பிள்ளைகளுக்கு தனி வேதம் என்பதை போல் நடந்துக்கொள்கிறார்கள் என்று அந்த சபையில் பல வருடங்கள் அங்கத்தினராக இருப்பவர்கள் இவைகளைக்குறித்து குற்றச்சாட்டை கூறுகிறார்கள். வெளிப்படையாக இவர்கள் பேசமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சபையில் போதிக்கப்படும் முக்கிய விஷயம் வேத புத்தகம்
ஒரு யுனிவர்சல் லா (வேதபுத்தகம் உலக அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் ஒரு பொது சட்ட புத்தகம் ஆகும்) என்று பிரசங்கத்தில் கூறியதை நானே கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த சட்டம் வெளிநாட்டு கலாச்சாரத்தில் படித்த தன் பிள்ளைகளுக்கும் வெளிநாட்டில் உள்ள சபை மக்களுக்கும் பொருந்தாதா?. உடை விஷயத்திலும் இவர்கள் பெற்ற பிள்ளைகளால் வெளிநாட்டு கலாச்சாரத்தை விடமுடியவில்லை. வீட்டில் அப்படிப்பட்ட உடையோடு திரிவதை காணலாம் என்கிறார்கள். ஏலி என்ற ஆசாரியன் (ஊழியன்) செய்த அதே தவறை தான் இன்றைய ஊழியர்கள் பலர் செய்து சாட்சி இழந்து தலைகுனிந்து நிற்கிறார்கள். பிள்ளைகள் எந்த கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும் இரட்சிக்கப்பட்ட பெற்றோர் தன் பிள்ளைகளை கண்டித்து வளர்த்தாமல் போனால்
ஏலி என்ற ஆசாரியன் தன் பிள்ளைகளைப்பற்றி ஊரே தூற்றியதை அறிந்தும் தன் பிள்ளைகளை அழைத்து அவர்கள் பாவத்தை சுட்டிக்காட்டி தன் பிள்ளைகளை
கண்டிக்காமல்போனதால் (அதை வேதம் அடக்காமல்போன பாவம் என்று கூறுகிறது.1 சாமு 3:13). அந்த ஊழியன்மேல் தேவ கோபம் வந்தது. காரணம் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்தான். சின்ன சாமுவேலுக்குகூட கர்த்தரிடம் எப்படி பேசுவது என்று சொல்லி கொடுத்தான். ஆனால் தன் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவில்லையே!. தன் பிள்ளைகளின் விஷயத்தில் அந்த கண்டிப்பை காட்டவில்லை. அதனால் அவன் கர்த்தருக்கு ஊழியம் செய்தும் அவன் மரணம் நல்ல மரணமாக இல்லை.
சபையில் மற்ற விசுவாசிகளைவிட சபை பாஸ்டர்களின், சபை தலைவர்களின் பிள்ளைகளை சபை மக்கள் மிகவும் கவனிப்பார்கள். இவர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும்
அளவுக்குமீறின சுதந்திரம் காரணமாக திருமணத்திலும் - உடுத்தும் உடையிலும் கலாச்சாரம் என்ற போர்வையில் சாட்சியில்லாமல் போகிறது.
ஆகவே வேதம் கூறும் சட்டம் எல்லா கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும் ஒன்றுதான். தன் வீட்டில் ஒருவர்
தவறு செய்து சாட்சியிழந்தால் அது சபை விசுவாசியானாலும், பிஷப்பானாலும், ஆயரானாலும், பாஸ்டரானாலும் அந்த குறிப்பிட்ட தவறான அல்லது சாட்சியில்லா சம்பவத்தை பகிரங்கமாக சபையில் அறிவித்து
என் மகன் வேத வசனத்தின்படி சாட்சியிழந்தவன் ஆகவே அவன் என் மகனானாலும் இந்த சபையில் அவன் அந்நியனைப்போல வந்துபோகலாம். ஆனால் சபை பொறுப்பெதிலும் அவன் பொறுப்பேற்கும் தகுதியிழந்துவிட்டான் என்று வெளியரங்கமாக அறிவித்தால் அந்த பாஸ்டர் அல்லது பிஷப் தன் ஊழியத்தை குற்ற உணர்வு இல்லாமல் தொடரலாம்.
ஆனால் பிஷப்பின் குடும்பத்தில் நடந்தது என்ன? மகனின்
முதல் மனைவி உயிரோடியிருக்க தன்னுடைய மகன் திருமணத்தை சபையிலேயே அவர் ஆடம்பரமாக நடத்தி முடித்துவிட்டார். அனைத்து ஆயர்கள், மாடரேட்டர் இந்த தவறான திருமணத்துக்கு சம்மதமும் தெரிவித்துவிட்டனர். ஒருவேளை இந்த உலகத்தில் இவர்கள் செயல் அங்கீகரிக்கப்படலாம், ஆனால் வேதம் அங்கீகரிக்கவில்லை. நியாய தீர்ப்பில் இந்த
வேத புத்தகத்தின் அடிப்படையில்தான் ஒவ்வொருவருக்கும் நியாய தீர்ப்பு நடக்கும்.
அன்புள்ள தம்பி, நீங்கள் கேட்ட கேள்விக்கு நீண்ட பதில் எழுதிவிட்டேன். இந்த பதில் உங்களைமட்டும் மனதில் வைத்து எழுதாமல் மற்றவர்களையும் மனதில் வைத்து எழுதினேன். சரி. உங்கள் விஷயத்தில் வேத வசனத்தின்படி நீங்கள் திருவிருந்தில் பங்குக்கொள்ளக்கூடாது. திருமண விஷயத்தில் நீங்கள் தவறிழைத்துவிட்டீர்கள். இனி இரண்டாம் மனைவியை கைவிடாமல் அவரோடு நல்ல விதமாக குடும்பம் நடத்தப்பாருங்கள். ஆனால் பெயர் கிறிஸ்தவராகத்தான் வாழலாம். கர்த்தரின் நியாயதீர்ப்பும் உங்களுக்கு எதிராக அமையும்.
நீங்கள் தவறை உணர்ந்து நீங்கள் செய்த இரண்டாம் திருமணம் தவறு என்பதையும் உணர்ந்து உண்மையான மனஸ்தாபம் உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டால் நீங்கள் செய்யவேண்டியது உங்கள் முதல் மனைவியுடன் மறுபடியும் சேர்ந்து வாழ்ந்து, இரண்டாம் மனைவியை ஒதுக்கி வைத்து அவரோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் அதேசமயம் அவள் வாழ்வுக்கு ஜீவனாம்சமாக பணஉதவி செய்து அவளிடம் மன்னிப்பு கேட்டு அவளோடு தொடர்பு கொள்ளாமல் வாழவேண்டும்.. இந்த ஆலோசனை கடினமானது. நிறைவேற்றுவதும் கடினமானதுதான். ஆனால் கர்த்தரை திருப்திப்படுத்த பரலோகத்துக்கு பாத்திரவானாக உங்களை தகுதிப்படுத்த இதை தவிர வேறு வழி புதிய ஏற்பாட்டு சபை விசுவாசியான உங்களுக்கு வேதம் காட்டவில்லை. உங்கள் நிலைக்காக நான் வருந்துகிறேன். ஜெபிக்கிறேன்.
|