பழைய ஏற்பாட்டு காலத்தில் ஜனங்களுக்கு சொல்லவேண்டிய செய்திகளை ஊழியர்கள் கர்த்தரிடம் பெற்றுதான் அறிவித்துள்ளார்கள். ஆனால் மோசேயின் காலத்தில் கர்த்தர்
மோசேயுடன் பேசியதுபோல யோசுவாவுடன் முகமுகமாய் பேசவில்லை. முகமுகமாய் என்றால் முகத்தை நேருக்குநேர் பார்த்து அல்ல, நேருக்குநேர் பக்கம்பக்கமாக நின்று பேசினார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். காரணம் மோசே கர்த்தரை பார்க்க ஆசைப்பட்டபோது உனக்காக ஒரு சலுகை தருகிறேன். நான் உன்னிடம் பேசிவிட்டு போகும்போது என்
முதுகைமட்டும் பார்க்க அனுமதி தருகிறேன் என்றார். ஆகவேதான் கர்த்தரின் முகத்தை மோசே பார்க்கவில்லை. பக்கம்பக்கமாக நின்றபடி பேசியிருக்கிறார்கள். அதைத்தான்
முகம்முகமாக பேசினார் என்று வேதம் குறிப்பிடுகிறது. ஆனால் யோசுவாவுக்கு அந்த மாதிரி கர்த்தரோடு பேசும் நெருக்கமான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காரணம் நியாய பிரமாணம் எழுதி கொடுக்கப்பட்டபின் இனி நியாயப்பிரமாணத்தின்படி நடந்தாலே போதும் கர்த்தர் பேசியதுபோல் ஆகும் என்று வேதம் கூறுகிறது.
யோசுவா 1:7-9ல் நியாய பிரமாணத்தில் எழுதப்பட்டதின்படி வாழ கர்த்தர் கட்டளை கொடுத்துவிட்டார். ஆகவே இனி தீர்க்கதரிசிகளை வெளிபாடு சொல்கிறவர்களை மனிதர்கள் தேடாமல் வேத வசனத்தை வாசித்தாலே அதன் வழியாக கர்த்தர் பேசுகிறதை அறியலாம். உபா 30:11-14, 4:7-8 நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளுமல்ல அது உனக்கு தூரமானதுமல்ல. நாங்கள் அதை கேட்டு, அதின்படி செய்யும் பொருட்டு எங்கள் நிமித்தம் வானத்துக்கு ஏறி அதை எங்களுக்கு கொண்டு வருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக அது வானித்திலுள்ளதும் அல்ல....... அது சமுத்திரத்துக்கு அப்புறத்திலுள்ளதுமல்ல. நீ அந்த வார்த்தையின்படியே செய்யும் பொருட்டு அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும், உன் இருதயத்திலுமிருக்கிறது. உபா 4:7,8 நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்கு சமீபமாயிருக்கிறதுபோல
தேவனை இவ்வளவு சமீபமாய் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?. இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?.
தேவனுடைய வார்த்தை உங்களுக்கு சமீபமாயிருக்கிறபடியினாலேயே தேவனும் அவர்களுக்கு சமீபமாயிருக்கிறார். அந்த காலத்திலே
தேவனுடைய வார்த்தையை மனப்பாடம் செய்யவேண்டியவர்களாக இருந்தனர். உபா 6:6. இதனால்தான் தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு சமீபமாய் அவர்களுடைய
வாயிலும்-இருதயத்திலும் இருப்பதாக என்று 14ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகையால் உபா 30:11-14ன்படி தேவசெய்தியை ஒருவனும் பரலோகம் சென்று பெற்று நமக்காக எடுத்துக்கொண்டு வரவேண்டியது அவசியம் இல்லை. இன்று பல பொய்பிரசங்கியார்கள் தாங்கள் பரலோகத்துக்கு சென்றும், நரகத்துக்கு சென்றும் செய்தியை பெற்றுக் கொண்டுவருவதாக கூறுவதை யாரும் நம்பவேண்டாம். வேதத்தை வாசித்து தியானிக்கிறவனே பாக்கியவான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் என்று முதல் சங்கீதத்திலேயே எழுதப்பட்டுள்ளது. ஆகவே வேதம் வாசித்து அந்த வசனத்தை தியானிக்கும்போது தேவன் பேசுவதை உணரலாம். இதுதான் தற்காலத்தில் கர்த்தர் மக்களோடு பேச ஏற்படுத்தியிருக்கும் எளிமையான ஏற்பாடு ஆகும். அதனால்தான்
வேதத்தை கேளாதவனுடைய ஜெபத்தை நான் வெறுக்கிறேன். நீதி 28:9 என்று கர்த்தர் கூறுகிறார்.
ஆகையால் அன்பான வாசகர்களே, கர்த்தர் நம் ஒவ்வொருவரோடும் நேருக்குநேர் பேசமுடியும் வேதத்தை வாசித்து தியானிக்கும்போது அந்த நிகழ்ச்சி நடக்கிறது. தேவகிருபை உங்கேளாடு இருப்பதாக. மறுபடியும் கர்த்தருக்கு சித்தமானால் சந்திப்போம். தொடர்ந்து ஜெபிக்கிறேன்.
|