5 லட்சம் மானநஷ்ட பணம்
ஜாமக்காரன் கொடுக்கவேண்டும்

இந்தியா தமிழ்நாட்டில் திருநெல்வேலி திருமண்டலத்தில் முன்னாள் கவுரவ பொருளாளராக பணியாற்றிய திரு.செல்வின் ஜெயராஜ் அவர்கள் 2013 ஜுன் மாத ஜாமக்காரனில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டு செய்தியில் முன்னாள் முதல்வர் (Principal) ஒருவர் திருநெல்வேலி போலீஸ்ஸில் கொடுத்த புகாரில் முன்னாள்-இந்நாள் பிஷப்மார்கள் 3 பேர்கள் பெயரிலும், மேலும் திருமண்டல நிர்வாகத்தில் பொறுப்பாளராக இருந்த இரண்டு பேர்கள் பேரிலும் புகார் கொடுத்திருந்தார். அன்று பொருளாளராக பொறுப்பு வகித்திருந்த திரு.செல்வின் ஜெயராஜ் என்பவர் பெயரிலும் ஊழல் குற்றச்சாட்டு கொடுக்கப்பட்டு, அந்த குற்றச்சாட்டு திருநெல்வேலி போலீஸில் பதிவுசெய்யப்பட்ட செய்தி எல்லா தினசரி செய்திதாள்களிலும் வெளிவந்தது.

அந்த செய்தியைத்தான் நான் எடுத்து ஜாமக்காரனில் செய்தியாக வெளியிட்டிருந்தேன். இப்போது பிரச்சனை என்னவென்றால் ஜாமக்காரனில் வந்த அந்த செய்தி பொருளாளராக பதவி வகித்த திரு.செல்வின் ஜெயராஜ் அவர்களைமட்டும் பாதித்தாகவும், தன் குடும்பத்தினரின் மனதையும் புண்படுத்திவிட்டதாகவும், இவருடைய உற்றார் உறவினர், நண்பர்கள், பொதுமக்கள் ஆகியவர்கள் தன்னை மேலும் கீழும் இறங்க பார்க்கிறார்கள். ஏதோ நான் ஊழல் புரிந்தவன்போல் அவர்கள் நினைக்கிறார்கள். இன்றும் அவர்கள் யாவரும் உங்கள் பத்திரிக்கை செய்தியை வாசித்து தன்னை தவறாக நினைத்தும் பேசியும் வருகிறார்கள். ........ ஆகவே ரூபாய் 5 லட்சத்தை நஷ்ட ஈடாக எனக்கு ஜாமக்காரன் வழங்கவேண்டும். தவறினால் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை.... என்னால் மேற்கொள்ளப்படும். இவ்வாராக அந்த கடிதத்தில் திரு.செல்வின் ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார். கடிதம் அனுப்பியவர் விலாசம்:

Mr.J.Selvin Jayaraj
34, State Bank Colony
Ezhil Nagar, Tirunelveli - 627 007. India.

ஜாமக்காரன்:என் கேள்வி என்னவென்றால்? நான் பொதுமக்கள் வாசிக்கும் பத்திரிக்கை செய்தியிலிருந்து அந்த செய்தியை எடுத்து மறுபதிவு செய்து ஜாமக்காரனில் வெளியிட்டேன். எல்லா தினசரி பத்திரிக்கைகளும் பொதுமக்கள் புறமதத்தினர் ஆகியவர்கள் வாசிப்பதாகும். ஜாமக்காரன்மட்டும் பொதுமக்கள் வாசிக்கும் பத்திரிக்கை அல்ல. மேலும் எல்லா கிறிஸ்தவர்கள் வாசிக்கும் பத்திரிக்கையும் அல்ல, இது குறிப்பிட்ட என் வாசகர்கள் மட்டும் வாசிக்கும் பத்திரிக்கையாகும். அப்படியிருக்க தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களால் காலை செய்திதாள் மாலை செய்திதாளில் இதே செய்தி வெளிவந்தபோது திரு.செல்வின் ஜெயராஜ் அவர்களுக்கு மானம் போகவில்லையா? உற்றார், உறவினர், நண்பர்கள், பொதுமக்கள் அவரை மேலும் கீழும் இறங்க பார்க்கவில்லையா? அப்போது அவர் மானம்போன நிலையில் இல்லையா?. அந்த தினசரி பத்திரிக்கைகள்மீதும் போலீஸ்ஸில் புகார்கொடுத்த பிரின்ஸ்பல் மீதும் மானநஷ்ட வழக்கு போடுவேன் என்றோ, 5 லட்சம் மானத்துக்கு ஈடாக கொடுக்கவேண்டும் என்றோ அவர்களிடம் கேட்டரா? என்று அறிய விரும்புகிறேன்.

ஒரு பொறுப்பில் பதவி வகிக்கும்போது அதுவும் பிஷப் மாதிரி உயர்ந்த பொருப்பில் பதவி வகிக்கும்போது அவர்கள் முன் இரண்டு வித கூட்டம் இருக்கும். ஒரு கூட்டம் பிஷப்பை ஆதரிக்கும், ஒரு கூட்டம் பிஷப்பை எதிர்க்கும், இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் பிஷப்மார் சந்திக்கும் சவாலாகும். இரண்டு கூட்டத்தையும் ஒரு பிஷப் திருப்திப்படுத்த முடியாது. ஆகவே ஒரு கூட்டம் நிச்சயம் பிஷப்புக்கு எதிராகவே செயல்படும். தங்கள் காரியம் பிஷப் மூலமாக நடக்காத பட்சத்தில் அவர்கள் கோபம், எரிச்சலும், கசப்பும், பகையுமாக மாறும். அந்த தோல்வியை கவுரவ பிரச்சனையாக எதிர் அணியினர் கருதும்போதுதான் நீயா? நானா? என்று பார்த்து விடுவோம் என்ற எண்ணத்தில் அடிதடி கலாட்டா, கோர்ட் கேஸ் என்று அலைந்து பல கோடிகளை வக்கீலுக்கும் கொடுத்து, சமாதானம் இழந்து, ஜெபவாழ்க்கை இழந்து அந்த பிரச்சனையின் எதிரொலியாக தங்கள் சொந்த குடும்பத்திலேயேகூட அதன் தாக்கம் உண்டாகும். சபை பிரச்சனை கோப வார்த்தைகளாகமாறி வீட்டுக்குள் வெடிக்கும், இதனால் இவர்கள் பெற்றபிள்ளைகளும் பாதிக்கப்படுகிறார்கள். சபையும் சமாதானம் இழக்கிறது. ஆயர்களும் எந்த பக்கம் பெலம் அதிகம் இருக்கிறதோ அவர்கள் பக்கம் சாய்ந்து அவர்களை கொண்டு தங்கள் காரியங்களை குறுக்கு வழியில் சாதித்துக்கொள்கிறார்கள். இதனால் நல்ல ஆயர்களும் ஜெப வாழ்க்கை வேத வாசிப்பு யாவையும் இழந்து தங்களை நம்பி ஆராதனைக்கு வரும் சபை மக்களுக்கு ஆகாரம் கொடுக்கமுடியாமல் போகிறது. சபை மக்கள் ஒவ்வொரு ஆராதனையிலும் இவர்களின் வாக்குவாதங்களையும், சண்டைகளையும் கண்டு மனநிம்மதியற்று பக்கத்தில் உள்ள பெந்தேகோஸ்தே சபை ஆராதனைக்கு போய்விடுகிறார்கள். அர்த்தம் இல்லாத சத்தம், அந்நியபாஷை என்ற பெயரில் அவர்கள் பேசும் உளறல்கள் பொய்தீர்க்கதரிசனம் ஆகியவைகள் அங்கு காணப்பட்டாலும் நம் சபையைபோல் வெளிப்படையான வாய்சண்டை அங்கு காணப்படுவதில்லையே!. இதற்கு அதுவே மேல் என்று அங்கு போய்விடுகிறார்கள்.

மானநஷ்டமாக 5 லட்சம் வேண்டும் என்று இந்த பயமுறுத்தல் கடிதம் எழுதிய சகோதரன் இதே திருநெல்வேலி திருமண்டலத்தில் எத்தனை வருடங்கள் இருந்திருக்கிறார். பிஷப்.ஜெயபால் டேவிட் அவர்களை ஆலயத்தில் வைத்து கன்னத்தில் அறைந்து, பிஷப்பின் அங்கியை கிழித்து கழுத்தைபிடித்து வெளியேதள்ளி, அவரை கெட்ட வார்த்தைகளில் பேசி அவமானப்படுத்தி ஆலயத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு வந்த நிகழ்ச்சிகள் மொபைல் போனில் படமெடுத்து அதை சிடியில் ஆக்கி எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சி தினகரன், தினத்தந்தி, மாலைமலர், தினமலர் போன்ற தினசரி செய்திதாளில் வெளிவந்ததை அன்றைய நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசங்கித்து கொண்டிருந்த நானும் மற்றவர்களும் பார்த்து கண் கலங்கிப்போனோம். வெளி திருமண்டலத்தில் உள்ள நாங்கள் பிஷப் அடிப்படுவதைப் பார்த்தபோது எங்களுக்கு ஏற்பட்ட மனவேதனை இந்த சகோதரன் பரம்பரையாக அங்கம் வகிக்கிற தன் சொந்த திருமண்டலத்தில் இந்த சம்பவம் நடந்ததே! அப்போது இவர் மானம் போகவில்லையா? அன்றைய செய்தியை கண்ட தமிழ்நாடே சிரித்ததே? இந்த கடிதம் எழுதியவருக்கு அது அவமானமாக தோன்றவில்லை. என்ன கிறிஸ்தவர்கள் இவர்கள்?

சிலசமயம் திருமண்டலத்தை ஆளும் பொறுப்பாளர்கள் செய்யும் ஊழலுக்கு சில பிஷப்மார்களும் அவர்களுக்கு அடிமையாகி அதன் காரணமாக அவர்களோடு சேர்ந்து ஊழல் செய்த பிஷப்மார்களும் உண்டு. ஒரு கட்டத்தில் திருமண்டலத்தை ஆளும் பொறுப்பாளர்களை பகைத்துக்கொண்டு தைரியமாக அவர்களுக்கு எதிராக செயல்பட்ட பிஷப்மார்களும் உண்டு. அதேசமயம் சில மாதங்களிலேயே யாருக்கு எதிராக நீதிமன்றம் சென்றார்களோ அவர்களோடு பாதிக்கப்பட்ட பிஷப்மார் மீண்டும் இணைந்து இணைப்பிரியா கூட்டாளிகளாக மாறிவிடுகிறார்கள். இதை என் அனுபவத்தில் பலமுறை பல திருமண்டலத்தில் கண்டிருக்கிறேன். கன்னியாகுமரி CSI டையோசிஸ், தூத்துக்குடி டையோசிஸ், திருநெல்வேலி டையோசிஸ்ஸின் பழைய சரித்திரத்தை கிளறினால் நான் சொன்ன விவரங்களை அறியலாம். இதில் யாருக்கும் வெட்கமில்லை. இதனால் நடுவில் அகப்பட்டு கண்விழி பிதுங்க பயந்து நிற்பவர் ஆயர்கள்தான். ஒரு கட்டத்தில் யாரை எதிர்த்தார்களோ இப்போது அவரையே ஆதரிக்கவும் செய்து அவர்களுக்கு பணிந்துப்போகும் இக்கட்டான நிலை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சில சமயம் தாங்கள் பிஷப்பை எதிர்க்கிறவர்களா? ஆதரிக்கிறவர்களா? என்பது அந்த ஆயர்களுக்கே தெரியாமல் திகைத்ததுண்டு. ஒரு ஆயர் கூறுகிறார். ஒருநாள் பொழுது விடியும்போது பிஷப் எந்த அணிப்பக்கம் சாயப்போகிறார் என்பதை தொலைபேசி மூலம் கேட்டு அறிவதே எங்கள் இக்கட்டான நிலையானது என்றார்கள். இவைகளை அனுபவிக்கும் ஆயர்கள் கர்த்தரிடம் அன்றைய நாளில் என்னவென்று ஜெபிப்பார். இன்றைய சிஎஸ்ஐயின் நிலை இதுதான். பிஷப்மார், ஆயர் இவர்கள் யாவரும் நம்மைப்போல் சாதராண மனிதர்கள்தான், ஆனால் தேவ ஊழியர்கள். இவர்களும் மனிதர்களானதால் தவறுகள் செய்திருக்கலாம் அல்லது ஊழல் செய்வர்களுக்கு கூட்டு நின்றிருக்கலாம். அவர்களை திருத்த கிறிஸ்தவர்களுக்கு வேதம் கூறும் வழிகள் பல உண்டு. கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு அணுகுமுறை உண்டு. நீதிமன்றம் சட்டம், நியாயம் தெரிந்த இவர்களுக்கு நம் வேத புத்தகம் கூறும் அணுகுமுறையும் சட்டமும் தெரிந்திருக்கவேண்டும். இவைகளைப்பற்றி தெரியாமல் கிறிஸ்தவ திருமண்டலத்தில் பொறுப்பாளராக இருக்கவே இவர்களுக்கு தகுதியில்லை.

பெரிய பொறுப்புள்ள பிஷப்-செயலர்-பொருளாளர் போன்ற பதவிகளில் உள்ளவர்மீது எப்போதும் சில குற்றச்சாட்டுகள் யாராவது சுமத்திக்கொண்டேயிருப்பார்கள். அந்த குற்றச்சாட்டு பொய்யானதாக இருந்தால் அதற்கான விளக்கத்தை அதிகாரபூர்வ பத்திரிக்கைகளில் சபை ஜனங்கள் அறிய வெளியிடவேண்டும். குற்றசாட்டு பொய் என்பதை நிரூபிக்க கோர்ட் உதவியை கிறிஸ்தவர்கள் நாடக்கூடாது. கோர்ட் செலவை இவர்கள் யாவரும் தன் சொந்த சம்பளத்திலிருந்து எடுத்து செய்யவில்லை. சபை மக்கள் ஜெபத்துடன் கர்த்தருக்கென்று அர்பணித்த காணிக்கை பணத்திலிருந்துதான் செலவு செய்யப்படுகிறது என்பதை எந்த பிஷப்பும், செயலரும் யோசிப்பதில்லை. அந்த காணிக்கை பணத்திலிருந்து செலவு செய்ய இவர்களுக்கு பயம் உண்டாகுவதில்லை. தெய்வபயம் அற்றவர்களும், கிறிஸ்துவின் சிந்தை அற்றவர்களும் திருமண்டல பொறுப்பில் வருவதால் ஏற்பட்ட விளைவு இது. அன்று இயேசுகிறிஸ்துவை பிசாசின் தலைவன் என்றார்க்ள. அதற்காக கர்த்தர் கோபப்படவில்லையே!. அதற்காக அவர்களோடு வாக்குவாதம் செய்யவும் போகவில்லை. அவர்கள் என்னை பிசாசு என்று சொல்வதால் நான் இயேசுகிறிஸ்து பிசாசாக போவதில்லை. அவர்கள் என்னை பிசாசு என்று சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும் இதுதான் இயேசுகிறிஸ்துவின் வழி. ஆனால் குற்றச்சாட்டில் உண்மையிருக்குமானால் அதை திருத்திக்கொள்வதுதான் அவரவர் ஆத்துமாவுக்கு நல்லது. அப்படியில்லாமல் இவர்கள் யார் நமக்கு ஆலோசனை சொல்வது என்ற பதவி மமதை உள்ளத்தில் ஏற்பட்டு சர்வாதிகார சிந்தை வந்தால் எங்கள் கோவை திருமண்டல முன்னாள் பிஷப், தூத்துக்குடி பிஷப் ஆகியோர் இப்போது அனுபவிக்கும் நிலைதான் ஏற்படும்.

செய்திதாளில் வந்த அந்த குற்றச்சாட்டுக்கு நம் பிஷப் Rt.Rev.J.J.கிறிஸ்துதாஸ் அவர்கள் நாட்டு மக்கள் அறிய வெளிப்படையாக மிக அருமையான நல்ல விளக்கத்தை கொடுத்துவிட்டாரே? அதுபோதுமே? அந்த விளக்கம் பொருளாளரான இவருக்கும் பொருந்துமே? இவருக்கு மட்டும் ஏன் மானம் போனது? என்பது எனக்கு விளங்கவில்லை. அன்று பெந்கேகோஸ்தே சபை ஊழியர் சகோ.சாம் ஜெபதுரை போல என் மீது மானநஷ்ட வழக்குக்காக அவர் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதுபோல, திரு.செல்வின் ஜெயராஜ் அவர்களும் அறிவிப்பு நோட்டீஸ் எழுதி, எனக்கு அனுப்பி 5 லட்சம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து எழுதினாரோ?.

கடைசியாக நான் ஒன்றை கூற வாஞ்சிக்கிறேன். ஒரு சபையில் பிஷப், ஆயர், செயலர், பொருளாளர் நிர்வாக கமிட்டி அங்கத்தினர், செக்ஸ்டன் (கோயில்பிள்ளை) ஆகிய இந்த பொறுப்புகளை நாம் எப்போது ஊழியம் என்று நினைக்கிறாமோ அப்போதுதான் நம் சபை உருப்படும். ஊழியம் என்று நினைக்காமல் அதை பதவி என்று எண்ணி செயல்பட்டால் ஊழல் முதலில் அவர்கள் உள்ளத்தில் வரும், பிறகு சபைக்குள் வரும், பிறகு திருமண்டல முழுவதும் தொற்றுவியாதியாக மாறும். வேதம் சபை ஊழியர், உடன் ஊழியர் என்றுதான் மேற்கூறிய பொறுப்பில் உள்ளவர்களை விவரிக்கிறது. ஊழியம் என்று நினைத்தால் அதில் போட்டி வராது. பொறாமை வராது. ஊழல் வராது. அதற்கு பதில் தெய்வபயம் வரும். தெய்வபயம் வரும்வரை CSI - லூத்தரன் சபைகளில் ஊழல் இருந்துகொண்டுதான் இருக்கும். சபை பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அரசியல்வாதிபோல் செயல்படுவார்கள். - ஜெபிப்போம்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM