மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்... (யோவேல் 2:28-31). யோவேல் தீர்க்கதரிசி ஆவியானவருடைய வருகையை குறித்து கூறிவிட்டு தொடர்ந்து
அடையாளங்களைக்குறித்து கூறுகிறார். யோவேல் கூறின அடையாளங்களாயாவன:
1. தீர்க்கதரிசனம் சொல்லல், 2. சொப்பனங்கள், 3. தரிசனங்கள், 4. இரத்தம்,
5. அக்கினி,
6. புகைஸ்தம்பம், 7. சூரியன் இருளடையும், 8. சந்திரன்-இரத்தமாக மாறும்.
யோவேல் குறிப்பிட்ட மேற்கண்ட எட்டு அடையாளங்களும் அந்த குறிப்பிட்ட
பெந்தேகோஸ்தே நாளில் நிறைவேறவில்லையே!. அக்கினியையும், புகைக்காட்டையும் ஒருவாறு காண்கிறோம்.
மற்ற அடையாளங்களைப் பெந்தேகோஸ்தே நாளில் காணமுடியவில்லையே!. இங்கு சீஷர்கள் பேசின
வெவ்வேறு பாஷைகளைப்பற்றி யோவேல் சொன்ன தீர்க்கதரிசனத்தில் காணோம்!. வெவ்வேறு பாஷை என்பது பரிசுத்த ஆவியானவரின் ஒரு
முக்கியமான அடையாளமென்றால், தெளிந்த புத்தியுள்ள சத்திய ஆவியானவர் நிச்சயமாக யோவேலின் மூலமாய் அன்றே தீர்க்கதரிசனமாக அதைக்குறித்து குறிப்பிட்டிருந்திருப்பாரே!.
யோவேலின் தீர்க்கதரிசனத்தின்படி நடந்தேறியது என்னவென்றால்! அது ஆவியானவருடைய
முதலாம் வருகையேயன்றி குறிப்பிட்ட ஓர் அடையாளமல்ல. ஆவியின் நிறைவுக்கு அந்நியபாஷை ஒன்றே அடையாளம் என்பது வேதத்திற்கு
விரோதமான, ஆவியானவருக்கு விரோதமான பாவம். அந்நிய பாஷை என்பது ஒரு வரம். அது அடையாளமல்ல.
ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது எல்லாரும்
அந்நியபாஷை பேசீனார்களா? என்று அப். நடபடிகளில் உள்ள சம்பவங்களில் பார்த்தால் இல்லை என்றுதான் பதில் கூறலாம்.
1). அப் 4:31ல் மீண்டும் ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது
இடம் மட்டும் அசைந்தது.
2). ஸ்தேவான் ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது
தரிசனம் கண்டான் (7:55).
3). சமாரியர் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றபொழுது
அடையாளங்கள் எதுவும் நிகழவில்லை. (8:16,17).
4). சவுல் பரிசுத்த ஆவியானல் நிறைந்தபொழுது
மீன் செதில்கள் போன்றவைகள் கண்களிலிருந்து விழுந்தன (அப் 9:17).
5). பரிசுத்த ஆவியானவர் கொர்நேலியு வீட்டார்மீது இறங்கினபோது
பல பாஷைகளைப் பேசினார்கள்(அப் 10:44-46).
6). எபேசுவின் சீஷர்கள் மீது ஆவியானவர் வந்தபொழுது அவர்கள்
அந்நிய பாஷை பேசினார்கள். தீர்க்கதரிசனமும் சொன்னார்கள் (19:6).
இவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி அவரவர்கள் பெற்ற அனுபவத்தைக்கூறி சாட்சி சொன்னால் என்ன நடக்கும்? ஒருவர் ஆவியானவரைப் பெற்றதற்கு அடையாளம்
மீன் செதில்கள் போன்றவை கண்களிலிருந்து விழவேண்டும் என்பார். இன்னொருவர் இல்லை,
தரிசனம் காணவேண்டும் என்பார். மற்றவர் இல்லவே இல்லை.
அந்நியபாஷைதான் பேசவேண்டும் என்பார், இல்லை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்பார் வேறொருவர். எல்லாவற்றிற்கும் மேலாக சமாரியர் என்ன சொல்லியிருக்கவேண்டும். எங்களுக்கு
ஒன்றுமே நடைபெறவில்லையே!. எனவே அடையாளம் ஒன்றும் அவசியமேயில்லை என்பார்கள்.
|