ஜாமக்காரன்: ஏஞ்சல் டிவியில் சகோ.சாதுசுந்தர் செல்வராஜ், மோகன் சி.லாசரஸ், வின்சென்ட் செல்வகுமார் ஆகிய மூவரணி இணைந்து அவரவர்களுக்கு வெளிப்படுத்தப்படும் தரிசனங்களை அல்லது தீர்க்கதரிசனங்களை
ஏஞ்சல் டிவி மூலமாக வெளிப்படுத்தவேண்டும் என்று கர்த்தர் எங்களோடு பேசினார் என்று டிவியில் இந்த மூன்றுபேர்களும் கூறியதை பலர் கேட்டீர்கள். அதில்
செத்துப்போனவர்கள் பூமியில் வந்து தங்களோடு பேசி, நிறைய ஆலோசனைகளை கூறுகிறார்கள். தூதர்கள் அடிக்கடி எங்களோடு பேசுகிறார்கள். பரலோகத்துக்கும், எருசலேமுக்கும் எங்களை அழைத்து சென்று கர்த்தர் பல விஷயங்களையும் எங்களோடு பேசுகிறார்கள். அவைகளை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும்படி கர்த்தர் இந்த
ஏஞ்சல் டிவியை ஆசீர்வதித்துள்ளார் என்றெல்லாம் இந்த மூவரும் பேசியதைக்குறித்து பலர் எனக்கு எழுதி கேள்விகள் கேட்டார்கள்.
Rev.சேவியர் அவர்கள் இந்த குறிப்பிட்ட விஷயங்களைக்குறித்து தெளிவாக தன் பத்திரிக்கையில் விளக்கியுள்ளார். ஜாமக்காரன் வாசகர்கள் பிரயோஜனப்படும்படி அதை இங்கு வெளியிடுகிறேன். இதில் அபிப்ராய வித்தியாசம் ஏதும் இருந்தால் எனக்கு எழுதுங்கள்.
காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும், பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டும். எபே 1:9
பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாக (கிறிஸ்து மூலமாக) தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப்பிரியமாயிற்று. கொலோ1:20.
மரித்த பரிசுத்தவான்கள் அல்லது தூதர்கள் பூமியில் வந்து நம்மோடு இணைந்து ஊழியம் செய்யமுடியுமா?
நன்றி:
Rev.Dr.XAVIER,
மேலே குறிப்பிட்ட வசனங்களை எடுத்துக்கொண்டு பலர் பரலோகத்திலுள்ள சாமுவேல், தாவீது, ஆபிரகாம் போன்ற மரித்த
பரிசுத்தவான்களும், தேவதூதர்களும் பூமியிலிருக்கிற நம்மோடு சேர்ந்து ஊழியம் செய்கிற காலமிது என்று பலர் தற்காலத்தில் பிழையாக போதிக்கிறார்கள்.
ஆவி-ஆத்துமாவோடு உள்ளான மனுஷனின் நிலையில் இருக்கும் (எபி 12:23)
பரதீசியிலுள்ள பரிசுத்தவான்கள் இப்போது இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள் என்று நாமறிவோம் (தானி 12:13). இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது அவர்கள் (மரித்த பரிசுத்தவான்கள்)
மறுரூபமாகி பரலோகம் போவார்கள் என்றும் (1தெச 4:16-18). அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து அதே
மறுரூப நிலையிலேயே நம்மோடு - இயேசுவோடு - ஒலிவமலையில் கால் வைத்து
இந்த பூமிக்கு வருவார்கள் என்றும் வேதம் திட்டமும், தெளிவுமாய் சொல்லியிருக்கிறது. உண்மை இப்படியிருக்க, இந்தக்காலத்திலேயே
மரித்த பரிசுத்தவான்கள் பூமிக்கு வந்து நம்மோடு இணைந்து அவர்கள் ஊழியம் செய்வார்கள் என்று இவர்கள் கூறுவது சரிதானா? மேலே குறிப்பிட்ட எபே 1:9, கொலோ 1:20 போன்ற வசனங்கள் சொல்வதுதான் என்ன? அந்த வசனத்தின் அர்த்தம் என்ன? மட்டுமல்ல... எபி 1:14ன்படி, நமக்கு
பணிவிடை ஆவிகளாயிருக்கும் தேவதூதர்களோடு இயேசு ராஜா வீட்டுப் பிள்ளைகளான நாம்
தூதர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யலாமா? தூதர்களுக்கு பூமியில் ஊழியம் செய்ய
அதிகாரம் கர்த்தரால் வேதத்தில் எங்காவது கொடுக்கப்பட்டிருக்கிறதா?.
கர்த்தர் பூர்வகால முதல் மறைக்கப்பட்டிருந்த இந்த இரகசியத்தை பவுலுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் (எபே 1:10). இதுபோல பல இரகசியங்களை புதிய ஏற்பாட்டு மக்களுக்கென்றே தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த இரகசியம் ஆதியிலிருந்தே தேவன் தீர்மானித்திருந்த இரகசியம் ஆகும்.
"காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி" இது நடந்தேறும். வேதத்தின்படி
மனிதனுடைய காலங்கள் 7 வகையாய் இந்த பூமியில் கணிக்கப்படுகின்றன.
1).அறியாமையின் காலம், 2).மனச்சாட்சியின் காலம், 3).சுய அரசாங்க காலம், 4).குடும்ப தலைமைத்துவ காலம், 5).நியாயப் பிரமாண காலம், 6).கிருபையின் காலம் (சபையின் காலம்), 7).1000 வருட ஆட்சியின் காலமும்
= புதிய பூமியும்.
பவுல் வாழ்ந்து நிருபங்கள் எழுதிய காலம்
கிருபையின் காலம். பரலோகத்திலிருக்கிறவைகளும், பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்பட வேண்டுமென்கிற சித்தம். இந்த
கிருபையின் காலத்தில் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல, கடந்துப்போன 2012 ஆண்டுகளிலும் நடக்கவில்லை. இப்படி நடக்க வேண்டும் என்ற நியமம்
வேதம் குறிப்பிட்ட காலங்கள் நிறைவேறும்போதுதான் நடக்கும். கொலே 1:20.
அந்தகாலங்கள் எப்போது நிறைவேறும்?
"ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு. வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும்
ஒவ்வொரு சமயமுண்டு". (பிர 3:1). அதன்படியே தான், "காலம் நிறைவேறினபோது" இயேசுகிறிஸ்து பூமிக்கு வந்தார் என்று எழுதியிருப்பதின்படி வந்ததை நாமறிவோம்(கலா 4:5). கிருபையின் காலமாகிய
புதிய ஏற்பாட்டு சபையின் காலத்தில் நடக்காத இந்த காரியம். நிச்சயமாய் மேலே குறிப்பிட்ட அந்த
ஏழாவது காலத்தில்தான் நடைபெறும். அதாவது அது
1000 வருட ஆட்சியின் காலத்தில்தான் நடக்கும் என்று அறிகிறோம்.
1000 வருட அரசாட்சியில் என்ன நடக்கும் என்பதை முழுமையாய் புரிந்துக்கொண்டால்தான் இந்த இரகசியம் நமக்கு விளங்கும்.
அப்போதுதான் விழுந்துப்போன தாவீதின் கூடாரம் கட்டப்படும் (அப் 15:7). தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று தேவன் சொன்ன ராஜ்ஜியம் கொடுக்கப்படும் (2 சாமு 7:8-17,சக 12:8).
ஆபிரகாமிடம் அன்று கர்த்தர் சொன்ன ராஜ்ஜியம்தான் இதுதான் (ஆதி 15:18-21).
இயேசு ஒலிவமலையிலிருந்து பரமேறும்போது இந்த குறிப்பிட்ட இராஜ்ஜியத்தைப்பற்றித்தான் சீஷர்கள் கேட்டார்கள் (அப் 1:6). இந்த ராஜ்ஜியம், இன்றைக்கு நமக்காக பரலோகில் பரிந்துப்பேசிக்கொண்டிருக்கிற நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் தலைமையில்தான் இயங்கும். இஸ்ரேலருக்கு - தாவீதின் கூடாரத்திற்கு - கொடுக்கப்பட்ட பூமியின் பரப்பளவுப்போக, மீதமுள்ளவைகள் நமக்கு ஆளக்கொடுக்கப்படும். ஓசி 3:15, எரே 30:9,எசே 34:23,24, 37:24,15 போன்ற வசனங்களின்படி, தாவீது அரசாளுவார் என்று தெரிகிறது. மொத்தத்தில்
முதலாம் உயிர்தெழுதலில் பங்குபெற்றோர், இரகசிய வருகையில் மரிக்காமலே எடுத்துக்கொள்ளப்பட்ட அத்தனைப்பேரும்
அங்கு ஆளுவார்கள் (வெளி 20:4-6, 1கொரி 15:51). இதிலே முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெற்றோர்தான்
பரதீசில் இருக்கிறவர்கள் ஆவர்.
மரிக்காமலே எடுத்துக் கொள்ளப்பட்டவர்களும் - கிறிஸ்தவ சபையாரும் 1,44,000 பேரும் - பூமியில் இருந்தவர்கள் ஆகிய அந்த
இருதிறத்தாரையும் கூட்டிச்சேர்க்கும் காலம்தான் 7ம் காலம் அது
1000 வருட அரசாட்சியின் காலம். தேவன் இந்த விஷயத்தை இரகசியமாய் வைத்திருந்து பவுலுக்கு அதை வெளிப்படுத்தினார். இந்த இருதிறத்தாரும் இணைந்ததுதான்
தற்கால ஆவிக்குரிய பரலோக ராஜ்ஜியமாகும். இந்த ஆவிக்குரிய பரலோக ராஜ்ஜியத்தைப்பற்றித்தான் இயேசு பல
உவமைகளைச்சொல்லி இருக்கிறார் (மத் 13). இந்த ஆவிக்குரிய பரலோக ராஜ்ஜியத்தார் பரலோகில் தேவனோடு இணைந்து, பூமிக்குவந்து உண்மையான
பரலோக ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்போகிறார்கள். இது இயேசுகிறிஸ்து சிந்திய இரத்தத்தினால் உண்டான பலன் (கொலோ 1:20). இயேசுகிறிஸ்து
ஜெபம் பண்ண சீஷர்களுக்கு சொல்லிக்கொடுத்த
மாதிரி ஜெபத்தில் இந்த பரலோக ராஜ்ஜியத்தைத்தான் வரவேண்டும் என்று இயேசு குறிப்பிட்டதாகும். மத் 6:10.
இந்த காலக்கட்டத்திலும், தேவதூதர்கள் நமக்கு
பணிவிடை ஆவிகளாகவேதான் செயல்படுவார்களே ஒழிய, நம்மோடு இணைந்து - நமக்கு சமமாய் - ஆளுகையும் பண்ண மாட்டார்கள்,
ஊழியமும் செய்யமாட்டார்கள். அந்த குறிப்பிட்ட பூமியிலே ஆளுகை பண்ணும் அதிகாரம்
நமக்கு மட்டுமே! கொடுக்கப்பட்டுள்ளது. (வெளி 5:10,2:26, 11:15, ரோம 5:17, தானி 7:18).
இந்தக் காலம் சீக்கிரம் வரப்போகிறது. இயேசுகிறிஸ்துவின்
இரகசிய வருகை முடிந்த உடனே அந்திக்கிறிஸ்துவின்
7 ஆண்டு ஆட்சி. அந்த ஆட்சி முடிந்தபின், ஒலிவமலையில் இயேசுவோடு,
இருதிறத்தாரும் இறங்கி வந்து பூமியை ஆளுவார்கள். பூமியிலுள்ள செம்மறியாடுகளும் (மத் 25:4), அவர் வரும்போது அவரைக்கண்டு இரட்சிக்கப்பட்ட
யூதர்களும் (ரோ 11:26, வெளி 1:7) இந்த ஆட்சியிலேயே மக்களாய் வாழ்வார்கள். ஆக,
மறுரூப நிலையிலுள்ள பரதீசியில் உள்ள மக்கள், மனித நிலையிலுள்ள
பூலோக மக்களை ஆளப்போவதும், இருதிறத்தாரையும் கூட்டிச் சேர்ப்பதான காரியம் என்று பவுல் கூறிய வசனத்தின் அர்த்தமாக எடுத்துக்கொள்ள வாய்ப்புண்டு. எப்படியோ இந்தக் காலம் மிகச் சமீபம்!
இயேசு சீக்கிரம் வருகிறார் ஆயத்தமாவோம்!!. ஆயத்தமாக்குவோம்!!!.
குறிப்பு: ஆக, சகோ.மோகன் சி.லாசரஸ், வின்சென்ட் செல்வகுமார், சாது சுந்தர் செல்வராஜ் ஆகிய ஏஞ்சல் டிவியின் புதிய கூட்டணியினர் செத்துப்போன பரிசுத்தவான்கள் பூமியில் நேரில் வந்து தங்களுக்கு ஆலோசனை கூறுவதும் அடிக்கடி பேசவருவதும், கூடவந்து இவர்களோடு ஊழியம் செய்ததாக
கூறியதும், கூறிக்கொண்டிருப்பதும், மேலே வாசித்த கட்டுரையின்படியும்,
வேத வசனங்களின் அடிப்படையிலும் நூற்றுக்கு நூறு பொய்யும், வெறும்
கற்பனையுமாகும். இவைகள் கட்டுக்கதைகளாகும். இனியாவது இவர்களின் செய்திகளுக்கு யாரும் செவி கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். |