TVயில் நான் பார்த்தது - விமர்சனம்
ஏஞ்சல் டிவி 2.6.2012 மாலை 3:30 மணிக்கு
திறப்பின் வாசல் உபவாச கூட்டம் - திருவள்ளுவர்.

சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களும் - சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்களும் இணைந்து நடத்திய கூட்டம் - நேரடி ஒளிபரப்பு:

கூட்ட முடிவு நேரத்தில்தான் நான் இந்த ஒளிப்பரப்பை காண நேர்ந்தது. முடிவு ஜெபம் வின்சென்ட் செல்வகுமார் நடத்திக்கொண்டிருந்தார். எல்லாரும் எழுந்து நின்று ஜெபத்தில் ஆடிக்கொண்டும், கைகளை தட்டிக்கொண்டும், சிலர் தங்கள் இடத்திலேயே குதித்துக்கொண்டும், சிலர் பற்களை கடித்து பெருத்த சத்தமிட்டுக்கொண்டிருக்க..... வின்சென்ட் செல்வகுமார் மைக்கில் கூறுகிறார். இதோ எக்காள சத்தம் என் காதில் கேட்கிறது. மிகத் தெளிவாக அதை கேட்கிறேன். கர்த்தர் தீர்க்கதரிசனம் காட்டுகிறார். இப்போது 5 தலை நாகப்பாம்பு ஒன்றை என் கண்முன் காண்கிறேன். அந்த பாம்பின் 5 தலையும் 5 வித பாவமாம். அந்த பாவத்தைகொண்டுவரும் அந்த குறிப்பிட்ட பாம்பு நசுக்கப்பட ஜெபிப்போம். இயேசுவின் நாமத்தில் அந்த பாம்பை நசுக்குகிறேன்.

உடனே அவர் அந்நியபாஷை என்று தூரபல, நரபலா, தரித்துபா என்று இன்னும் சில வார்த்தைகளை பேசுகிறார். உடனே மற்றொரு தரிசனத்தை கூறுகிறார். இப்போது 6 பெண்களை முழு நிர்வாண கோலத்தில் என்முன் நின்றுக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அதன் அர்த்தம் விபச்சார பாவம் இந்த பகுதி எங்கும் காணப்படுகிறது என்பதாகும். அந்த பாவம் இந்த கூட்டத்திலும் காணப்படுகிறது. இப்போது நாம் எல்லாரும் இணைந்து அவைகளை ஓடஓட விரட்டுவோம். எல்லாரும் சத்தமாக அந்நியபாஷையில் ஜெபிப்போம். உடனே இவர் அந்நிய பாஷையில் முன்பு பேசியதையே மறுபடியும் உளறிக் காண்பிக்கிறார்.

மறுபடியும் ஒரு தீர்க்கதரிசனத்தைப்பற்றி கூறுகிறார்: இதோ வானம் திறக்கப்படுவதை காண்கிறேன். இங்குள்ள பலரை தீர்க்கதரிசிகளாக கர்த்தர் எழுப்பப்போகிறார். நாம் அனைவரும் சேர்ந்து பொல்லாத ஆவிகளை, பிசாசின் ஆவிகளை, விபச்சார ஆவிகளை இணைந்து விரட்டுவோம்!, விரட்டுவோம்!, அது இப்போது ஒடிப்போகிறது. உடனே அதே அந்நியபாஷையில் பேசி ஜெபத்தை முடித்துக்கொண்டார்.

இப்போது மோகன் சி.லாசரஸ் மைக்முன் வருகிறார். எல்லாரும் அப்படியே ஜெபநிலையில் இருப்போம் என்று கூறுகிறார். அந்த 5 தலை பாம்புகளை நசுக்க மறுபடியும் ஜெபிப்போம். இப்படி கூறி இவரும் துரப்பலா, தடப்பலா, சரபறா... என்று என்னென்னவோ வாய்க்கு வந்தபடி அந்நியபாஷை என்ற பெயரில் உளற, மறுபடியும் ஜனங்களை ஜெபிக்க கூறுகிறார். அந்த ஆறு விபச்சார ஆவிகளான பெண்களை இப்போது நாம் யாவரும் விரட்டியடிப்போம் என்றார் இப்போது. ஜனங்கள் கதறுகிறார்கள். இவர் சத்தமாக ஜெபிப்போம் என்றார். இன்னும் சத்தமாக அந்நியபாஷையில் ஜெபிப்போம் என்றார். இப்போது அக்கினி இறங்குகிறதை காண்கிறேன் என்றார். மறுபடியும் அதே அந்நியபாஷை உளறல்.... இவைகளை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இந்த கண்றாவி காட்சிகளை தொடர்ந்து பார்த்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. டிவியை நிறுத்திவிட்டேன். என் மனம் மிகவும் பாரப்பட்டது.

அந்த திறப்பின் வாசல் கூட்டத்துக்கு வந்த அந்த மக்களையும் அவர்கள் விடும் கண்ணீரையும், புலம்பலையும் கண்டு கலங்கினேன்.

ஆண்டவரே, இந்த பொய் ஊழியர்கள் கையிலிருந்து இந்த மக்களை காப்பாற்றும், இந்த தமிழ்நாட்டை காப்பாற்றும் என்று சத்தமில்லாமல் ஜெபித்து என் அலுவலகத்துக்குள் போய் உட்கார்ந்தேன்.

இந்த கிறிஸ்தவ மக்கள் இப்படி கண்களை மூடிக்கொண்டு இவர்களை நம்பி பின்பற்றுகிறார்களே!,இவர்களை எப்படி விளங்க வைப்பது? யார் விளங்க வைப்பார்கள்?.


ஏஞ்சல் டிவியில் கண்ட பிரசங்க நிகழ்ச்சியில் கவனிக்க வேண்டியது:

மேலே நடந்த திறப்பின் வாசல் கூட்டத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமார், இந்துமத மக்கள் வணங்கும் 5 தலை நாகத்தை காண்கிறார் என்பதை கவனித்தோம். இந்த 5 தலை நாகத்தை தெலுங்கு சினிமா படங்களின் வால்போஸ்டர்களில் நிறைய காணலாம். இப்போது யாவரும் சேர்ந்து அந்த பாம்பை நசுக்குவோம், நசுக்குவோம் என்று அவர் அந்த ஜெபத்தில் கூறியதை அறிந்தோம். அடுத்தது, வின்சென்ட் செல்வகுமார் தன் தரிசனத்தில் காண்பது கவர்ச்சி நிர்வாண பெண்களின் தரிசனம் ஆகும். நீலப்படம் (Blue Film) என்று கூறுவார்களே, அப்படிப்பட்ட படத்தில்வரும் காட்சிகளைத்தான் அவர் கண்டது. ஆனால் அப்படிப்பட்ட ஆபாச சினிமா படங்களில்கூட பெண்களை முழு நிர்வாணமாக காட்டுவதாக நான் கேள்விப்படவில்லை. ஆனால் சகோ.வின்சென்ட் செல்வகுமாருக்குமட்டும் இவர்களுடைய அருள்நாதர் இயேசு எப்படி முழு நிர்வாணத்துடன் அந்த பெண்களை இவருக்குமட்டும் ஸ்பெஷல் ஷோவாக இவர்களுடைய தேவன் அவர் கண்கள்முன்மட்டும் எப்படி காட்டுகிறார் என்பது விளங்கவில்லையே! சரி, இப்போது அவர் ரசித்த அந்த நிர்வாண பெண்களின் ஆவிகளையும், 5 தலை பாம்பையும் வின்சென்ட் அந்நியபாஷையில் பேசியே விரட்டியடித்துவிட்டார். கூட்டத்தில் உள்ளவர்களும் இவருடன் இணைந்து அவைகளை விரட்டிவிட்டனர் என்று வைத்துக்கொள்ளலாம்!. ஆனால் இவர் ஜெபித்து முடித்தவுடன் மோகன் சி.லாசரஸ் அவர்களும் தன் பங்குக்கு வரும் மேடையில் வந்து நின்று வின்சென்ட் செல்வகுமார் கண்ட அந்த 5 தலை பாம்பு, 6 நிர்வாண பெண்களான விபச்சார ஆவிகள் யாவையும் கூட்டத்தினரை மறுபடியும் பார்த்து விரட்ட சொல்கிறாரே? அதுவும் அந்நியபாஷையில் பேசி விரட்ட சொல்கிறாரே? ஏன்? எப்படி?.

வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் கூட்டத்தினரோடு சேர்ந்து ஜெபித்து அந்நியபாஷையில் பேசி ஓடஓட விரட்டிய ஓடிப்போன அந்த 5 தலை பாம்பும், 6 நிர்வாண பெண்களான பிசாசுகளின் ஆவிகளும் மறுபடியும் அதே கூட்டத்துக்குள் திரும்ப வந்துவிட்டதா? இந்த கேள்வி வாசிக்கிற உங்களுக்கு எழவில்லை? ஓடிப்போன பிசாசுகளை மோகன் சி.லாசரஸ் திரும்ப விரட்டுகிறார் என்றால் என்ன அர்த்தம்?என்ன ஒரு கேலிகூத்து இது?. அந்த கூட்டத்தில் ஜெபிக்க வந்தவர்கள் பற்களை கடிப்பதும், அலறுவதும், குதிப்பதும் கண்டால் பிசாசுகள் ஊருக்குள் இல்லை. அந்த ஜெபிக்க வந்த விசுவாசிகள் கூட்டத்துக்குள்ளேயே இருக்கிறது? என்பது மிகத்தெளிவாக விளங்கவில்லை?. இங்கு கூடியவர்கள் எல்லாம் விசுவாசிகள், ஜெபிக்க வந்தவர்கள் என்கிறார்கள். பொய்யின் ஆவி இந்த கிறிஸ்தவர்களை எப்படியெல்லாம் எப்படி அலைகழிக்கிறது பாருங்கள். இந்த கிறிஸ்தவர்களைப்பார்த்து பரிதாபப்படுகிறதைத்தவிர வேறு என்னசெய்ய?. இதே ஆவிகள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நாலுமாவடி, ராமநாதபுரம் என்று இந்த ஊழியர்கள் எங்கெங்கு போகிறார்களோ, அங்கெல்லாம் விமான டிக்கட், ரயில் டிக்கட் எடுக்காமலே இந்த பிசாசுகள் அனைத்தும் இவர்களோடுகூட பயணமாகிறது என்றுதானே அர்த்தம்!

ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். மத் 24:4.

ஒருவனும் நயவசனபிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதை சொல்லுகிறேன். கொலே 2:4.


13.6.2012 மாலை 3.30 மணிக்கு ஏஞ்சல் TVயில் :
பிஷப்.நித்தியராஜ்

சம்பாஷணை: சகோ.நித்தியராஜ் - அதிசயராஜ்

கேள்வி கேட்பது: சகோ.வின்சென்ட் - சாதுசுந்தர் செல்வராஜ்: இவர்களின் சம்பாஷனையினைடையே.... நீங்கள் எப்படி பத்திரிக்கை ஊழியம் ஆரம்பித்தீர்கள்? என்று கேட்கிறார்கள்.

இரட்டையர்களின் பதில்: பாக்கெட்டில் இருந்த பேனா திடீரென்று கீழே விழுந்தது. உடனே கர்த்தாவே இதன் அர்த்தம் என்ன? என்றேன். உடனே நீ பத்திரிக்கை ஊழியம் செய்யவேண்டும் என்று என்னோடு பேசினார் என்றார். "பேனா விழுந்தால் பத்திரிக்கை ஊழியம் - மணிபர்ஸ் விழுந்தால் - மணி (பணம்) கேட்கும் ஊழியம்" என்று யாரும் பிழையாக எண்ணிவிடாதீர்கள்!.

இரட்டையர்களின் ஜுன் மாத பத்திரிக்கையில் 13ம் பக்கம்: ஆவியானவர் ஊழியம் விரிவடைவதைக்கண்டு சகோ.நித்தியராஜை - பேராயர் (பிஷப்) ஆகும்படியும், அதிசயராஜை - குருவானவராக (ஆயராக) ஆகும்படியும் உணர்த்தினார்.

ஆகவே, நித்தியராஜ் இனி பிஷப்.நித்தியராஜ் - அதிசயராஜ் இனி Rev.Dr.அதிசயராஜ் என்று அழைக்கும்படி அவர்கள் பத்திரிக்கையில் இவர்கள் குறிப்பிட்டு இருக்கும் செய்தி வெளியானது.

குறிப்பு: இனி எப்போது உங்கள் பாக்கெட்டிலிருந்து பேனா விழுந்தாலும் உங்களை பத்திரிக்கை நடத்த ஆவியானவர் கூறுகிறார் என்று வாசகர்கள் யாரும் முட்டாள்தனமாக எண்ணிக்கொண்டால் அது ஜாமக்காரனின் குற்றமல்ல. மேலும் வசனத்துக்கு விரோதமான இவர்களின் கற்பனை வெளிப்பாடுகளைப்பற்றிமட்டுமே நான் விமர்சிக்கிறேன்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM