புராட்ஸ்டன்ட் கிறிஸ்தவர்களாகிய நாம் ஆண்டுத்தோறும்
கிறிஸ்மஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். அத்துடன் அறுப்பின் பண்டிகையையும் ஆண்டுக்கு ஒருமுறை ஆலயத்தில் ஆசரித்து வருகிறோம்.
அறுப்பின் பண்டிகை என்பது தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேல் மக்கள் ஆசரிக்கும்படியாக நியமித்த பண்டிகைகளில் ஒன்றாகும் (யாத் 23:18). எனவே பழைய ஏற்பாட்டு காலம் துவங்கி இன்று வரை தொடர்ந்து ஆசரிக்கப்பட்டு வரும் ஒரு விசேஷ பண்டிகை
அறுப்பின் பண்டிகை ஆகும். அத்துடன் குடும்பமாக ஆலயத்தில் ஆசரிக்கப்படும் ஒரே பண்டிகையும் இதுதான்.
முதல் மானிடப் பிறவிகளான காயீனும், ஆபேலும் தங்கள் பிரயாசத்தின் பலன்களான, நிலத்தின் கனிகளையும், மந்தையின் ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்கு காணிக்கையாக கொண்டு வந்தனர் என்பதை ஆதியாகமம் 4:3-4ல் நான் காண்கிறோம். இதை முன்மாதிரியாகக் கொண்டே, நாம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஏதாவது ஒரு நாளில் அறுப்பின் பண்டிகையை நமது ஆலயங்களில் ஆசரித்துவருகிறோம்.
சாதாரண நாட்களில் நாம் செலுத்தும் காணிக்கைகளும், முதற்பலன்களும்,
ஆல்டருக்கு கொண்டு செல்லப்பட்டு, தேவ சந்நிதியில் படைக்கப்படுகிறது. ஆனால், அறுப்பின் பண்டிகையின்போது ஏராளமான பொருட்கள் வந்துள்ள நிலையில், அவை
அனைத்துயுமே ஆல்டரில் படைக்க முடியாத ஒரு சூழ்நிலையில், காணிக்கையாக வந்துள்ள அத்தனை பொருட்களிலிருந்து
ஒரு சிலதைமட்டும் எடுத்து ஒரு தட்டில் வைத்து
ஆல்டரில் படைப்பர். இந்த தட்டில் உள்ள பொருட்கள்
ஆசீர்வாத தட்டு என்ற பெயரில் முதலில் ஏலம் விடப்படுகிறது. இது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வந்துள்ள ஓர் ஒழுங்குமுறை. இந்த முறைக்கு இப்போது பங்கம் வந்துள்ளது.
சமீப
காலமாக சென்னை நகரிலும், நெல்லை மாவட்டத்திலும் ஒரு சில ஆலயங்களில்
ஆசீர்வாத தட்டை சபை மக்களில் வசதி உள்ளவர்கள் குறைந்த பட்சம் ரூபாய்
20,000 - பெறுமான பொருட்களுடன் (புடவை, பேன்ட், ஷர்ட்
துணி, உடுப்பு, தங்கமோதிரம், செயின், பழங்கள் போன்றவை) நேரே ஆல்டரில்
படைக்கலாம் என்ற புதியதொரு முறை புகுத்தப்பட்டுள்ளது. எனவே
இப்போதெல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட தட்டுகள் விலை உயர்ந்த பொருட்களோடு
படைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு இவ்விதம், சென்னை புறநகர் ஆலயம்
ஒன்றில் வைக்கப்பட்ட தட்டுகளில் ஒன்று ரூபாய்
1,01,000க்கு(ஒரு
லட்சத்து ஒரு ஆயிரம் ரூபாய்) ஏலம் போயுள்ளது. அதேசமயம் ஆல்டருக்கு வந்த
விலை குறைந்த மதிப்புள்ள பொருட்கள் கொண்ட மற்ற தட்டுகள் இதில் மூன்றில்
ஒரு பங்கு தொகைக்குகூட ஏலம் போகவில்லை. இது தவறான ஒரு ஏலமுறையல்லவா?
அத்துடன் பல தட்டுகள் வைக்கப்படும்போது, யார் வைத்த தட்டை முதலில்
ஏலம் விடுவது என்ற பிரச்சனையும், சண்டையும்கூட உருவாகிறது.
தேவனுடைய
வீடாகிய ஆலயத்தில் இவ்வித பாகுபாடுகள் உருவாக ஏன் வழிவகுக்கவேண்டும்?
இந்த புதியமுறை நம் பணபலத்தையும், பெருமையையும் காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டு உள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆண்டவராகிய
இயேசுகிறிஸ்து, ஏழை விதவை போட்ட இரண்டு காசுகளே உயர்வானது என்று கூறியுள்ளார் (லூக் 21:3). எனவே,
இந்த தவறான பழக்கத்தை நம் ஆலயங்களிலிருந்து உடனடியாக கைவிட்டுவிட்டு
மீண்டும் காலங்காலமாக அனுசரித்து வந்துள்ள பழைய முறைக்கே திரும்புவது
தேவனுக்கு உகந்ததாகவும் ஆபேலின் காணிக்கையைப்போல்
அங்கீகரிக்கப்படக்கூடியதாகவும் இருக்கும் அல்லவா?
ஜாமக்காரன்: நெல்லை திருமண்டலத்தில் உள்ள நாடார் ஜாதிகாரர்கள்மட்டும் கடைபிடிக்கப்படும்
ஆசீர்வாத தட்டு, அசனம் ஆகிய ஏற்பாடுகளைப்பற்றி ஜாமக்காரனில் நான் எழுதியவுடன் ஏராளமானவர்கள் குறிப்பாக
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட
CSI சபை மக்களில் பலர் நான் எழுதியதை ஆதரித்து, வரவேற்று எழுதியுள்ளார்கள். காரணம், சகோ.M.A.நெல்சன் அவர்கள் எழுதியபடி அதன் உண்மையான நோக்கம் மாறிபோய்
பணபெருமை, பாகுபாடுகள் உண்டாக வழிவகுத்துவிட்டன என்ற மன வேதனையினால்தான் விமர்சனம் எழுதிய வாசகர்களும் அப்படி எழுதினார்கள்.
கோயமுத்தூர், வேலூர், சென்னை, சேலம், பாண்டிசேரி, கடலூர் போன்ற நகரங்களிலும்,
பம்பாய் போன்ற வெளிமாநிலங்களிலும் உள்ள திருநெல்வேலியிலிருந்து சென்று குடியேறிய நாடார் ஜாதிக்காரர்கள்
அசனம், ஆசீர்வாத தட்டு போன்றவைகளை தாங்கள் ஆராதிக்கும் வெளிமாவட்ட ஆலயங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரும்போது, இதன் ஆரம்ப வரலாறு அறியாத அந்த வெளி
மாவட்ட, மாநில சபை மக்கள், தங்கள் திருமண்டல
CSI மக்களுக்கு அது புதுமையாக காணப்பட்டதால் இதை
எதிர்க்கவும் ஆரம்பித்துள்ளார்கள். சில இடங்களில் தங்கள் எதிர்ப்பை
பிஷப்மார்களுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்கள். இதன் ஆவிக்குரிய நோக்கம் அறியாததாலும் வெறும் சடங்காச்சாரமாக இவைகள் மாறிக்கொண்டு வருவதாலும் மற்றவர்கள் இந்த காரியத்தை எதிர்க்கிறார்கள். ஆகவேதான் இவைகளைக்குறித்து ஜாமக்காரனில் எழுதினேன். |