நான் ஜாமக்காரனில் அரவாணியைப்பற்றி எழுதிய விஷயம், முற்றிலும் கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவ சபைகளுக்கும் அறிவித்த ஆலோசனையாகும். நான் ஜாமக்காரனில் எழுதியது குறிப்பாக
சபையில் ஆயர் ஊழியம் செய்வதைப்பற்றிய தகுதியைப் பற்றியதாகும்.
இது கிறிஸ்தவ சபைக்கு
வெளியே உள்ள அரவாணிகளுக்கும், அவர்களின் சங்கங்களுக்கும் இதில்
சம்பந்தம் ஏதும் இல்லை என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமியர்களுக்கு
தலக் என்று கூறி விவாகரத்து செய்வது அவர்கள் மதத்துக்கு உரியதாகையால் மத்திய அரசாங்கம்கூட தன் பொது சட்டத்தால் இஸ்லாமியர்களின் கொள்கையில் தலையிடமுடியவில்லை. அதுபோலதான் கிறிஸ்தவர்களுக்கும் தனி சட்டம் உண்டு. கிறிஸ்தவம் ஒரு
மதம் அல்ல - அது மார்க்கம். கிறிஸ்து ஒரு மத தலைவருமல்ல. கிறிஸ்தவர்களுகென்று பரலோகத்துக்கு வழிகாட்டும்
சட்டதிட்டம் அடங்கிய வேதபுத்தகம் உண்டு.
உலகில் எந்த பெயருள்ள சபைகளிலும் ஒரு கிறிஸ்தவன் அங்கமாக இருந்தாலும் அவர்கள் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், அவர்கள் உலகத்தின் எந்த கலாச்சாரத்திற்குட்பட்ட கிறிஸ்தவர்களாக இருந்தாலும், எந்த நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்களானாலும் அவர்கள் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஒரே உலக சட்டம் - ஒரே வழிகாட்டி கிறிஸ்தவ
வேதபுத்தகம்தான். அந்த வேதபுத்தக சட்டப்படித்தான் ஒவ்வொரு கிறிஸ்தவனும் வாழவேண்டும். ஆகவே
அரவாணிகளைப்பற்றி கிறிஸ்தவ வேதபுத்தக சட்டத்தின்படி என்ன எழுதியிருக்கிறதோ அதன்படிதான் என் கருத்துக்களை எழுதினேன். அது என் கடமை! அது என் உரிமையுமாகும்! மற்றபடி
அரவாணிகளை கொச்சைப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ நான் முயற்சிக்கவில்லை என்பதை என் உளமாற அறிவிக்கிறேன்.
அரவாணிகளுக்கு உலகிலும், நம் இந்திய நாட்டிலும் காட்டும் பரிவு மிகவும் வரவேற்கப்பட வேண்டியதாகும். அவர்கள் சமூகத்தில் எல்லாருடன் இணைந்து வாழலாம். ஆனால் மற்றவர்களை பாதிக்காதவகையில் அவர்கள் இணைந்து வாழ எல்லா உரிமையும் உண்டு. அவர்களை அருவருப்புடன் பார்ப்பதும், அவர்கள் அருகில் வந்தால் ஒதுங்கி அவர்கள் மனதை வேதனைப்படுத்தும் விதத்தில் நடந்துக்கொள்வதும் தவறு. அதற்கும் சில காரணம் உண்டு. அவர்களில் பலர் பழகும் முறையில் காணும் சில தவறான அணுகுமுறையால்தான், அவர்களைக் காணும் எல்லாரும் அவர்களை விட்டு விலகுகிறார்கள் என்பது எல்லாரும் ஒத்துக்கொள்ளக்கூடியதாகும்.
இந்த விஷயத்தில் ஞானமாக
கிறிஸ்தவ அரவாணிகள் கிறிஸ்தவ சாட்சியை காத்துக் கொள்ளவார்களேயாகில் அவர்கள் பெண்ணாக வாழ்ந்து மற்ற பெண்களுடன் உறவாடி, கிறிஸ்தவ அன்பையும், ஐக்கியத்தையும் வளர்த்து கொள்வதில் எனக்கோ, மற்றவர்களுக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை.
தயவுசெய்து
கிறிஸ்தவ அரவாணிகள் இதை புரிந்துக்கொண்டு எங்கள் எல்லாரோடும் இணைந்து வாழுங்கள். இயேசுவின் இரத்தம் எங்களை கழுவியதுபோல உங்களையும் கழுவி, மனந்திரும்புதலின் அனுபவத்தை பெற்றீர்களானால் நீங்களும், நானும் ஒருதாய் வயிற்று பிள்ளைகளைப்போல் கர்த்தரின் குடும்பமாக வாழமுடியும். |