|
 |
Rev.W.C.David, Died-12 Apr 1992 (77yrs)
Mrs.Viola David, Died- 3 Feb 2012 (86yrs) |
கோயமுத்தூர் CSI டையோசிஸ்ஸில் மனந்திரும்பின அனுபவமுள்ள, சாட்சியுள்ள ஆயர் குடும்பம் என்று கூற வேண்டுமானால் விரல் விட்டு எண்ணும் அளவுதான் உண்டு. அவர்களில் ஒருவர்தான்
Rev.W.C.DAVID & Mrs.VIOLA DAVID அவர்களின் குடும்பம்.
1964ம் வருடத்திலிருந்தே ஐயா அவர்களின் குடும்பத்தை நான் நன்கு அறிவேன். ஐயா அவர்கள்
1992ம் வருடமும், ஐயர் அம்மா அவர்கள்
2012 பிப்ரவரி 3ம் தேதியும் கர்த்தரின் பாதத்தில் சென்றடைந்தனர். இவர்களுக்கு
4 ஆண் பிள்ளைகளும், 3 பெண் பிள்ளைகளும் உண்டு. அவர்கள் யாவரும் சாட்சியுள்ள பிள்ளைகளாய் குடும்பத்துடனும், பிள்ளைகளுடனும் வாழ்கிறார்கள். பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பு, ஜெப வாழ்க்கை, கண்டிப்பான
கட்டுப்பாடு இவைகள் பிள்ளைகளை சாட்சியுள்ள வர்களாக வாழ வைத்துள்ளது. இவர்களின் பிள்ளைகளில் ஒரு
மகளும், அவரின் கணவர்
Rev.தனசிங் ஆகியோர்
FMPB மிஷனரிகளாக ஊழியம் செய்தார்கள். அவர்கள் ஊழியம் செய்த பணிதளங்களிலெல்லாம் ஆத்துமாக்களுக்காக அலைந்தார்கள். வட இந்தியாவில் பல சபைகளை
FMPBக்காக ஸ்தாபித்தார்கள். பாகிஸ்தான் எல்லைவரை
உருது பேசும் கடினமான இஸ்லாமியர் மத்தியில் ஊழியம் செய்து அங்கு ஒரு ஆலயத்தையும் நிறுவினர். நானும் அவர்களோடு
பாகிஸ்தான் எல்லைவரை சென்று அவர்களோடு தங்கி அவர்களின் உண்மையான அர்பணிப்புள்ள பணியை நேரில் கண்டு தேவனைத் துதித்தேன். அங்கு ஆலயம் கட்ட நானும் சிலர் மூலமாக பண உதவி செய்தேன்.
Rev.W.C.DAVID அவர்கள் பெற்ற பிள்ளைகள் அனைவரும், மற்றும் பேரப்பிள்ளைகளும் குடும்பங்களாக இணைந்து அவர்களுக்குள் ஒரு ஐக்கியத்தை உருவாக்கி, இவர்கள் குடும்பங்கள் சார்பில் தங்கள் சொந்த வருமானத்திலிருந்து காணிக்கைகளைச் சேர்த்து பல மிஷனரிகளை தாங்குகிறார்கள். மிஷனரிகளை பல பணிதளங்களுக்கு அனுப்பி அற்புதமான மிஷனரி பணி செய்கிறார்கள்.
Rev.W.C.DAVID தம்பதியினரின்
7 பிள்ளைகளின் குடும்பங்களும், பேரப்பிள்ளைகளின் குடும்பங்களும் ஒன்றாக இணைந்து தனிப்பட்டமுறையில்
ஒரு மிஷனரி ஸ்தாபனத்தையே உருவாக்கியிருப்பது சிறந்த சாட்சியல்லவா! இதற்கெல்லாம் காரணம் மரித்துப்போன தாய் திருமதி.வையோலா டேவிட் அவர்களின் ஜெப வாழ்க்கையும்,
Rev.W.C.DAVID அவர்களின் சாட்சியுள்ள ஊழியமுமாகும்.
1965ம் வருடம்
V.B.S நடத்த திருப்பூர் அவினாசி ரோடிலுள்ள
CSI ஆலயத்துக்கு நான் சென்றபோது, ஐயர் அவர்களின் வீட்டில் நான் தங்கியிருந்தபோது, ஐயர் அவர்களின் குடும்ப வாழ்க்கையையும், பிள்ளைகளின் வளர்ப்புமுறையையும் நேரில் காண நேர்ந்தது. அதிகாலை
5 மணிக்கு ஐயர் அவர்களும், அவருடைய மனைவியும் பாயை விரித்து பாட்டுப்பாட ஆரம்பிப்பார்கள். உடனே பிள்ளைகள் அனைவரும் அந்த காலை ஜெபத்தில் கலந்துக்கொள்வார்கள். இவர்கள் பாடல் சத்தம் கேட்டு நானும் என் தனிஜெபத்தை நிறுத்தி என் அறையிலிருந்து எழுந்துவந்து அவர்கள் குடும்ப ஜெபத்தில் கலந்துக்கொள்வேன். அந்த ஜெபநேரம் இனிமையானது.
Rev.W.C.DAVID அவர்கள் தன் பொறுப்பிலுள்ள சபைகளில் ஊழியம் செய்யும்போது சுமார்
5 முறை தொடர்ந்து,
5 வருடங்கள் என்னை அழைத்து தன் சபையில் ஆவிக்குரிய கூட்டங்களை நடத்தினார். ஆகவேதான் இவர்களின் குடும்பத்தோடுள்ள நெருக்கம் எனக்கு அதிகம். இவர்களின் உண்மையான ஆவிக்குரிய ஜீவியம், ஜெப வாழ்க்கை இவர்களின் ஊழியம் ஆகியவைகள் அன்றைய என் வாலிப வயதில் என் ஆரம்பகால ஊழியத்தில் எனக்கு நல்ல முன்மாதிரியாக அமைந்தது.
அதன்பின் அநேக வருடங்களுக்குப்பிறகு தமிழ்நாட்டில் நான் குடியிருக்கும் என் ஊரான
சேலம் நகரத்திலுள்ள
CSI கிறிஸ்துநாதர் ஆலய குருவானவராக பொறுப்பேற்றார். அப்போது அவர் ஊழியத்தின்மூலம் அந்த சபை நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. அதிகாலை
5.30 மணிக்கு ஆலய ஒலிபெருக்கி மூலமாக வேதவசனத்தை வாசித்து ஒவ்வொருநாளும் ஜெபம் செய்வார். அப்போது வியாதியஸ்தர்களுக்காகவும் விசேஷ ஜெபம் ஏறெடுப்பார்.
CSI கிறிஸ்துநாதர் ஆலயத்தின் அருகே
சேலம் அரசாங்க பொது மருத்துவமனை இருக்கிறது. அங்கு படுத்திருந்த வியாதியஸ்தர்கள், ஆப்ரேஷனுக்கு ஆயத்தமான நோயாளிகள், மரண அவஸ்தையில் உள்ளவர்கள், யாவரும்
Rev.W.C.DAVID ஐயா அவர்கள் ஒலிபெருக்கி மூலம் வாசிக்கும் வேத வசனத்தையும், ஜெபத்தையும் கேட்டு ஆறுதல் பெற்றார்கள். சிலர் சுகமானார்கள், சிலர் ஆத்மபெலம் பெற்றார்கள். அத்தனை அருமையாக அநேகருக்கு ஆறுதலாக இருந்து
சுவிசேஷம் அறிவித்து சிறப்பான ஆயர் ஊழியத்தை நிறைவேற்றினார்.
ஐயர் அம்மா
Mrs.Viola David அவர்களும், ஆயர் அவர்களுக்கு ஜெபத்தில் பக்கதுணையாக இருந்து ஜெபகுறிப்புகள் எழுதிவைத்து அநேகருக்காக ஜெபிக்கும் தாயாக ஊழியம் செய்தார். சபையில் பெண்கள் பகுதியில் அநேக குடும்பங்களுக்கு ஆறுதலின் தாயாகவும், நல்ல ஆலோசகராகவும் இருந்து உடைந்த பல குடும்பங்களை ஒன்று சேர்த்தார். சபையில் பிரச்சனை அல்லது எலக்ஷன் வரும்போதெல்லாம் ஆயர்
Rev.W.C.DAVID அவர்களும், அம்மாவும் உபவாசம் இருந்து ஜெபிப்பதை பலமுறை நானே நேரில் கண்டு வியந்துள்ளேன். ஆயர் பணியிலுள்ள தன் கணவர்
Rev.W.C.DAVID அவர்களை அருமையாக கவனித்து ஜெபிக்கும் தாயாக, தன் பிள்ளைகளையும் ஜெபிக்கும் பிள்ளைகளாக வளர்த்திய பெருமை ஆயர் மனைவியான திருமதி.வையோலா டேவிட் அம்மையாரையே சேரும். ஆயரின் மனைவி திருமதி.வையோலா டேவிட் அவர்களின் ஆசிரியை வேலையை, திருமணத்துக்குபின் விட்டுவிடும்படி
Rev.W.C.DAVID ஆயர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆயரின் மனைவி வேலை செய்பவராக இருந்தால் திருச்சபை பணியில் ஆயர் மனைவிமாரின் ஈடுபாடு இல்லாமல்போகும் அல்லது குறைந்துபோகும் என்றார். முழுநேர ஊழியபணியாக
ஆயர் மனைவி இருக்கவேண்டும் என்பது அவரது கண்டிப்பான
கட்டளையாக இருந்தது. வறுமையில் குடும்பம் நடத்திய ஆயர் மனைவி தன்னுடைய
7 பிள்ளைகளை ஆயரின் ஒரு சம்பளத்தில் எப்படி வளர்த்துவது உயர்படிப்பை அவர்களுக்கு கொடுப்பது என்ற கேள்விக்கு, ஆயரின் பதில்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்பதுதான் அவரின் பதிலாக இருந்தது. அவரின் விசுவாசத்தின்படியே கர்த்தர் அவர்களுடைய பிள்ளைகளை அருமையாக நடத்தினார். ஒவ்வொரு பிள்ளைகளையும் பட்டபடிப்பு படிக்க வைத்தார்.
ஆயர் மரித்தவுடன் கோயமுத்தூர் டையோசிஸ்ஸில் ஆயரின் விதவை மனைவிகளுக்கான
பென்ஷன் திட்டம் ஆயர் மரித்த அதேமாதம்தான் டையோசிஸ்ஸில் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பென்ஷன் ஆயர் அம்மாவுக்கு பெரும் உதவியாக அமைந்தது.
கர்த்தரின் பணிக்காக ஆசிரியர் வேலையைவிட்ட ஆயர் மனைவிக்கு, தன் ஆசிரியை வேலையில் அரசாங்கம் மூலம் கிடைக்கவேண்டிய
ஓய்வூதிய பணத்தைவிட அதிகமான பணம் கர்த்தர் கிடைக்கசெய்தது ஒரு அதிசயம். அதுவும் ஆயர் மனைவியின் மரணம் வரை ஓய்வூதிய பணத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவனுக்காக,தேவனின் ஊழியத்துக்காக இழந்தவர் எவரும் தரித்திரர் ஆனதில்லை. இந்த நன்றி உணர்வில்தான் ஆயர் மனைவி.வையோலா டேவிட் அவர்கள் மரிக்கும்போது தன் மூன்று பெண் பிள்ளைகளையும் தன்னருகே வரவழைத்து தன் கழுத்தில் இருந்த தங்க தாலிசெயினை கழற்றி அவர்களிடம் கொடுத்து, அந்த
தங்க தாலிசெயினை விற்று மூன்று பாகமாக பிரித்து
3 பேரும் அந்த பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, கடைசியாக அவர்களிடம் அதிர்ச்சி தரும் ஒரு வேண்டுகோளும் விடுத்தார். அதாவது
என் ஆசை என்னவென்றால் இந்த தங்க தாலிசெயினை விற்ற
பணம் முழுவதையும், அப்படியே மிஷனரி பணிக்கு கொடுத்துவிட்டால் நான்
மிகவும் சந்தோஷப்படுவேன், ஆனாலும் இது உங்கள் பணம் உங்கள் பிரியப்படி செய்யுங்கள் என்றார். உடனே பெண் பிள்ளைகள்
3 பேரும் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற தங்களுக்கு தாயின் ஞாபகார்த்தமாக கொடுத்த
தங்கசெயினை விற்று அந்த பணம் முழுவதையும் மிஷனரி பணிக்கே கொடுத்துவிட்டனர். ஆயர் மனைவியின் மரண ஆயத்தம், அவர்களின் சாட்சி, அவர்கள் தன் பிள்ளைகளை வளர்த்திய ஒழுங்கு ஆகியவைகள் அருமையான சாட்சியாகும். அவருடைய வாழ்க்கைக்காக தேவனைத்துதிப்போம்.
Rev.W.C.DAVID அவர்களின் மனைவி திருமதி.வையேலா டேவிட் அவர்கள் தன்
86 வயது வரை, அதாவது தன் மரணம் வரை சாட்சியுடன் வாழ்ந்து, சாட்சியுடன் கர்த்தரின் பாதம் சென்றடைந்தார்கள். இதுதான் நல்ல மரணம். அனைத்து சபை ஆயர்களுக்கும், ஆயர்களின் மனைவிகளுக்கும்
Rev.W.C.DAVID & Mrs.VIOLA DAVID தம்பதியினரின் வாழ்க்கை நல்ல முன்மாதிரியும், சாட்சியுமாக இருப்பதால் இத்தனை விரிவாக இவர்களைக்குறித்து எழுதினேன். |