|
 |
|
ஒரு CSI பிஷப்பின் நேரடி சம்பாஷணை |
வடக்கு கேரளா
CSI டையோசிஸ்
(North Kerala CSI Diocese)
பிஷப்.Rt.Rev.K.P.KURUVILLA அவர்களைப்பற்றி அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து ஏராளமான குற்றசாட்டுகள் வந்துக்கொண்டேயிருந்தன.
மூணாறு மலை பிரதேசங்களில், மற்ற இடங்களிலுள்ள டையோசிஸ் சொத்துக்களை விற்ற குற்றச்சாட்டு, அனுமதியில்லாமல் தேக்கு மரங்களை வெட்டியதால் வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு, பல கேஸ்களில் நீதிமன்றத்தில் நீதிபதியின் கண்டனத்துக்குள்ளானது. மேலும் டையோசிஸ்ஸில் பலரை சர்வாதிகாரமாக சபையைவிட்டு நீக்கியது. அப்படி நீக்கியது செல்லாது என்றும் நீக்கியவர்களை திரும்ப சபைக்குள் சேர்த்து ஒரு வாரத்துக்குள் கோர்ட்டுக்கு அவ்விவரம் அறிவிக்க வேண்டும் என்றும் கோர்ட் பிஷப் அவர்களுக்கு கட்டளையிட்டது. பிஷப் அவர்களை
CSI சினாட்டும் கண்டித்தது. இப்படி பிஷப்பைப்பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு விவரங்களை நான் ஜாமக்காரனில் எழுதி அறிவித்த விஷயங்களை வாசகர்கள் அறிவீர்கள்.
இப்போது பிஷப்.Rt.Rev.K.P.குருவில்லா அவர்கள் தன் சுபாவத்திலிருந்து சற்று இறங்கிவந்து தன்மேலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு
நேருக்குநேர் சம்பாஷைணையின்மூலம் வெளிப்படையாக பத்திரிக்கைக்கு பதில் அளித்து அதை பகிரங்கமாக பத்திரிக்கையில் வெளியிடவும் அனுமதித்தார்.
(கேள்வியையும்-பிஷப்பின் பதிலையும் சுருக்கியிருக்கிறேன்). |
பிஷப்பாக மாறிய அனுபவத்தைப்பற்றிய கேள்விக்கு பதில் |
|
 |
Rt.Rev.K.P.KURUVILLA |
சபை குருவானவராக இருந்து, திருவனந்தபுரத்தில் உள்ள
கண்ணமூலா வேதாகம கல்லூரியில் விரிவுரையாளராகி, அதன்பின் அதே வேதாகம கல்லூரியின் பிரின்ஸ்பாலாகவும் மாறிய விவரங்களை விவரித்தார். தான் எதிர்பாராத விதத்தில் பிஷப்பாக தெரிந்தெடுக்கப்பட்ட அந்நாளிலிருந்து அடுக்கடுக்காக பல வேதனையான அனுபவத்தின் வழியாக நான் கடந்து வந்தேன். நம்
கர்த்தர் கெத்சேமனேயில் ஜெபித்த ஜெபத்துக்கும், நான் பிஷப்பாக பதவி ஏற்கும் நாளில் நான் செய்த ஜெபத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்று உணர்ந்தேன். பிதாவே இந்த பாத்திரம் (இந்த பிஷப் பதவி) என்னைவிட்டு நீங்ககூடுமானால் நீங்கட்டும். ஆனாலும் என் சித்தமல்ல உம்முடைய சித்தம்போல் ஆகட்டும் என்றேன் என்ற முகவுரையுடன் பேட்டிக்கு பதில் கூற தொடங்கினார்.
|
கேள்வி: நீங்கள் பொறுப்பேற்ற
பின் நீங்கள் செய்த நல்ல காரியமாக எதை கூறுவீர்கள்?
பதில்: நான் பிஷப்பாக பொறுப்பேற்றபின் பல்வேறு இடங்களில் பல வருடங்களுக்குமுன் நம் டையோசிஸ் சொத்தும், கட்டிடங்களும் பலர் கையகப்படுத்தியிருந்தார்கள். எனக்குமுன் இருந்த பிஷப்மார்களால் அவர்கள் கையிலிருந்து அந்த சொத்துக்களையும், கட்டிடங்களையும் திரும்ப வாங்கமுடியவில்லை. அதன் காரணமாக நடந்த கோர்ட் கேஸ்கள் ஏராளம். அதற்காக செலவிடப்பட்ட டையோசிஸ்
பணமும் ஏராளம். நான் பிஷப்பான பின்
STEEM BUILDERS இடமிருந்த நம் சொத்துக்காக திரும்பபெறும் விஷயமாக கோர்ட்டுக்குப்போவதை நிறுத்தி, அவர்களோடு நான் நடத்திய சமரசபேச்சு வார்த்தை மூலமாகவே அத்தனை இடங்களையும் நமக்காக திரும்ப பெறசெய்தேன். அது விஷயமாக கோர்ட்டுக்கு செலவழிக்கப்பட வேண்டிய பெரிய பணநஷ்டம் தவிர்க்கப்பட்டது. அதை நான் நம் டையோசிஸ்க்கு செய்த பெரிய
நன்மையாகவும், என்னுடைய வெற்றியாகவும் கருதுகிறேன். அதை பெருமைக்குரிய விஷயமாகவும் கருதுகிறேன்.
|
கேள்வி: டையோசிஸ்
பிஷப்பானவுடன் உங்கள் கடந்த காலத்தைக்குறித்து நீங்கள் யோசிக்கும் போது
உங்கள் மனதில் தோன்றும் எண்ணம் என்ன?
பதில்: நான்
பிஷப்பாக மாறியது, நான் எதிர்பாராத சம்பவித்தது ஒன்றாகும். பதவி ஏற்றவுடன் நான் அனுபவித்த சோதனைகள், எதிர்ப்புகள், அவமானங்கள், பிரச்சனைகள் யாவும் வித்தியாசமான அனுபவங்களாகும்.
சிலுவையில் அறையப்படுவது ஏற்பட்டால் - உயிர்த்தெழுதலும் உண்டு என்ற சிந்தைத்தான் என்னை பெலப்படுத்தியது. தேவையில்லாத காரியத்தில் நான் தலையிடக்கூடாது என்று என் ஊழியத்தைமட்டும் செய்தேன். ஒருவேளை அதனால்தானே என்னவோ திருமண்டலத்தின் நடக்கும் பிரச்சனைகளுக்கும் நான்தான் காரணம் என்று அவைகளை என்மேல் சுமத்த முயலுகிறார்கள். இவ்வளவு குற்றச்சாட்டுகளில் அகப்பட்ட ஒரு பிஷப் இந்த
CSIயிலே என்னைப்போல் யாரும் இல்லை என்றுதான் கூறுவேன். ஆனால் என்மேல் சுமத்திய குற்றசாட்டுகள் எதையும் ஆதாரத்தோடு யாரும் இதுவரை நிரூபிக்கவில்லை, அதற்கு அவர்கள் முயற்சி செய்யவும் இல்லை. புரளிகளை எனக்கு எதிராக பரப்பியும் வீடுவீடாக அதை அறிவித்து என்னை அவமானப்படுத்தவும் அவர்கள் முயன்றார்கள். இப்படிப்பட்ட மோசமான தரக்குறைவான முயற்சிகளை இவர்கள் நிறுத்தினால் மட்டுமே நம் டையோசிஸ் சரியாகும். அதிகாரத்துக்கும், பதவிக்கும் வேண்டி, டையோசிஸ் சபைகளிலுள்ள வேலையில்லா சிலருடைய வலைகளில் சிக்கிகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டுபோகிறது. இவர்கள் டையோசிஸ்ஸின் வளர்ச்சியை கெடுக்கிறார்கள். வாலிபர்களை திசை திருப்புகிறார்கள்.
சபையில் மூப்பர்கள் முதலாவது நல்ல சாட்சியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
பிஷப் இல்லாமல் டையோசிஸ்ஸில் நிர்வாகம் சரிப்படுத்தமுடியாது! திருமண்டலத்தில்
பிஷப்புக்கு ஆலோசனை கொடுக்கவும், கட்டுப்படுத்தவும் அதற்கான
நிர்வாக கமிட்டிகள் உண்டு. சிலரின் சொந்த லாபங்களுக்காக வெளியிலிருந்துகொண்டு
பிஷப்பையும், கமிட்டியையும் கட்டுப்படுத்த முயல்வது ஜனநாயகம் ஆகாது.
சபையையும், டையோசிஸ்ஸையும்விட இவர்கள் தங்களை பெரியவர்களாக காண்பிக்க முயல்வது ஆபத்தானது. தனிப்பட்ட எந்த நபர்களையும்விட
டையோசிஸ்தான் பெரியது.
|
கேள்வி: நீங்கள் பிஷப் தலைமை ஏற்றெடுத்தப்பின் டையோசிஸ்ஸில் நடந்த நல்ல காரியங்களை விவரிக்க முடியுமா?
பதில்: கோழிகோடு
(CALICUT) நகரத்தில்
S.T.Buildersக்கு விற்க தீர்மானித்த இடம் நமக்கு பிரயோஜனமுள்ளது என்று அறிந்து அந்த ஒப்பந்தத்தை திரும்பபெற முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றேன். சமரசத்தின் அடிப்படையில் அவர்கள்
50 லட்சம் ரூபாய் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் அதற்கு நாங்கள் சம்மதிக்காமல் அந்த இடத்தை கைப்பற்றினோம்.
அது சம்பந்தமான கோர்ட் கேஸ்சும் தள்ளுபடி செய்யப்பட்டு, அந்த சொத்து நம் கைக்கே திரும்ப வந்தது. இதற்கான கோர்ட் செலவு வெறும் ரூ.10,000 மட்டுமே.
மூணாறு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் விஷயமாக நமக்கு எதிராக போடப்பட்ட
7 கோர்ட் கேஸ்கள் நாம் சரியான ஆதாரங்களையும், சாட்சிகளையும் நிறுத்தியதால் கேஸ் தள்ளுபடி ஆனது.
14½ ஏக்கர் நம்முடைய நிலம் கலெக்டர் மூலமாக கட்டளையிட்டு அந்த இடம் நமக்கே கிடைத்தது. அதனால் மண் சரிந்து வீழ்ந்த இடத்தை கட்டிடம் கட்டி பாதுகாத்ததால் கட்டிடம் இப்போது காப்பாற்றப்பட்டது. இப்போது அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்ததால்
1.6 கோடிக்கு அதிகமாக அட்வான்ஸ் பணமாக டையோசிஸ்க்கு கிடைத்துள்ளது. அதற்கு
1½ லட்சம் மாத வாடகையும் இப்போது டையோசிஸ்க்கு கிடைக்கிறது.
ஆலுவாவில்
(Alway) Shopping Complex கட்டும் வேலையும் நடந்துமுடிந்தது. அதன் காரணமாக
4½ லட்சம் ரூபாய் டையோசிஸ்க்கு வாடகையாக இப்போது கிடைக்கிறது.
அதேபோல் கோவாவில் உள்ள நம்முடைய
ரிட்ரீட் சென்டர்
(Retreat Centre) மூலமாக ஏற்பட்ட ஏராளமான பண நஷ்டங்கள் இப்போது இல்லை. அது இப்போது லாபம் உண்டாகும் விதத்தில் செயல்படமுடிந்தது. இப்போது எல்லா செலவும்போக வருடத்தில்
10 லட்சம் வருமானம் நம் டையோசிஸ்க்கு கிடைக்கிறது. மேலும் பல கோர்ட் கேஸ்களுக்கு முடிவும் ஏற்பட்டது. மேலும், ஒரு உதாரணமாக புதியரா என்ற ஊரில் நம் சபையின் கல்லறை கேஸ்,
மஞ்ஜேரி டையோசிஸ் சொத்து சம்பந்தமான கேஸ், இவை யாவும் சுமூகமாக தீர்ந்து நமக்கு வெற்றி கிடைத்தது. அதன்மூலம் கிடைத்த பணத்தில்
சோம்பாலா, வானியங்குளம், குன்னம்குளம் ஆகிய இடங்களில் உள்ள கட்டிடங்களை புதுபிக்க முடிந்தது.
கல்வி சம்பந்தமாக நல்ல ஏற்பாடுகளை நாம் செய்யமுடிந்தது. நம் கல்வி ஸ்தாபனத்தில் உள்ள சிறுபான்மையினர் இழந்த உரிமைகள் நமக்கு திரும்ப கிடைத்தது.
4 உயர்நிலை பள்ளிகளை,
மேல்நிலை பள்ளிகளாக மாற்ற அரசாங்க அங்கீகாரம் கிடைத்தது. இடிந்துவிழும் அபாயத்தில் இருந்த
100, 150 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளி கட்டிடங்களை
PTA ஸ்தாபனம் மூலமாகவும், நாட்டு மக்கள் பண உதவியினாலும் அவைகள் ரிப்பேர் செய்து கட்டிமுடிக்கப்பட்டது பெருமைப்படவேண்டிய விஷயமல்லவா!
பையனூர், பாலக்காடு, காசர்கோடு, கோழிகோடு, ஊரகம், மண்ணுத்தி, அரப்பட்டா ஆகிய ஊர்களில் உள்ள புதிதாக்கப்பட்ட பள்ளிக்கூட கட்டிடங்கள் இதற்கு சாட்சியாகும். சில ஊர் பெரியவர்கள்
60 லட்சம் ரூபாய் வரை நமக்கு இந்த விஷயத்தில் உதவி செய்துள்ளார்கள்.
நான் பிஷப்பாக பொறுப்பேற்றபின்
8 ஆலயங்களை பிரதிஷ்டை செய்யவும்,
8 பழைய ஆலயங்கள் ரிப்பேர் செய்யவும், விரிவாக்கவும் செய்யமுடிந்தது.
10 இடங்களில் புதிய ஆலயங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவைகள்
1 வருடத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டப்பட்டிருக்கிறது. இதற்கான செலவின் பெரும்பகுதி அந்த இடங்களில் உள்ளவர்களிடமிருந்தே பெறப்பட்டுள்ளது. மீதியுள்ள கட்டிட நிர்மான பணிக்கு டையோசிஸ் பண உதவி செய்துள்ளது. மேலும்
14 புதிய குருமனைகளைக் கட்டவும், அதில் அதிகமான
புதிய குருமனைகளை இப்போது கட்டிக்கொண்டு இருக்கிறோம்.
8 ஊர்களில்
5 ஏக்கர் நிலம் டையோசிஸ்க்காக வாங்க முடிந்தது. டையோசிஸ் நிலங்களை கள்ளத்தனமாக விற்பதாகத்தானே கேள்விப்பட்டீர்கள். ஆனால் நான் பிஷப்பான பின் புதிய நிலங்கள் வாங்கியுள்ளோம் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். அவைகளானவை:
நெடுங்கரனை, இலம்பலேரி, படிஞ்ஞாரேதரா, மூணர் காலணி, சூரியநெல்லி, பள்ளநாடு, அகழி, கஞ்ஜிக்கோடு ஆகிய ஊர்களில் வாங்கப்பட்ட நிலங்களாகும். இவைகள் யாவும்
4 வருட பிஷப் ஊழியத்தில் குறிப்பிடத்தக்க விசேஷ செயலாகும். இத்தனை காரியங்களும் நான் பிஷப்பானவுடன் நடத்தப்பட்டதாகும். இதில் இன்னும் முக்கியமானவைகளாக நான் குறிப்பிடுவது:
1. 2007ல் நடந்த சிறப்புமிக்க
CSI டைமண்ட் ஜூபிலி
2.
கோழிகோட்டிலும், பரப்பேரியிலும் நடத்தப்பட்ட
KNHயின் கோல்டன் ஜூபிலி விசேஷத்தை அனைத்து இந்திய
ஜூபிலி விழாவாக 2008 நடத்தினேன்.
3. 2009ல்
திருச்சூர் பெத்தேல் ஆஸ்ரமத்தில் நடத்திய பிளாட்டினம்
ஜூபிலியும் என் பதவியின் சமயத்தில் நடத்திய சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.
4. BASAL
MISSIONARY கேரளாவில் முதலாவதாக வந்ததின்
175வது வருஷ நினைவு தினத்தை கோழிகோட்டில்
2009ல் நடத்தினேன்.
பிஷப்பின் பழைய வீட்டை புதிதாக்கி பெரிய கட்டிடமாக கட்டுவதால் டையோசிஸ்க்குதானே அது பெருமையான காரியம். அதை செய்ததை பெரிய குற்றமாக கருதி அதை எதிர்த்ததைக்குறித்து ஆச்சரியப்படுகிறேன். இப்போது
பிஷப் வீடு கட்டிமுடிக்கப்பட்டது. ஆனாலும் பிஷப் ஆபீஸ் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இதன் மத்தியில் டையோசிஸ்ஸின்
நிர்வாக சீர்திருத்தம் செய்யவும் முடிந்தது. இதன் காரணமாக
மூன்றுமுறை டையோசிஸ் கவுன்சில் கூட்டம் நடத்தி முடித்தேன்.
|
கேள்வி: டையோசிஸ்ஸின் செயல்களில் சபைகள் ஆவிக்குரிய முன்னேற்றம் அடைய நீங்கள் ஏதாவது செய்தீர்களா?.
பதில்: டையோசிஸ்ஸில் ஆவிக்குரிய வளர்ச்சி என்பது
ஆயர்கள், (Catechist) உபதேசியார்கள், மிஷனரிகள், டையோசிஸ்
ஊழியக்காரிகள் ஆகியவர்கள் சரியாக பொறுப்பேற்று அவர்கள் ஊழியங்களை சரியாக செய்து, ஊழியங்களில் ஒத்துழைத்து ஊழியம் செய்யும்போதுமட்டுமே ஆவிக்குரிய வளர்ச்சி உண்டாகும். அந்த சபைகளின் ஊழியங்கள் சரியாக நடத்தப்பட்டாலே ஆத்மீக வளர்ச்சி உண்டாகிவிடும்.
வாலிபர்களுக்கிடையே, சிறு பிள்ளைகளுக்கிடையே ஊழியம் செய்ய முழுநேர ஊழியர்களை நியமித்திருக்கிறோம். உபதேசியார்களுக்கு (கேட்டசிஸ்ட்)
வேதாகம படிப்புக்காக
(School of Ministry) என்ற ஏற்பாட்டை வடக்கு கேரளா
CSI டையோசிஸ்ஸில் ஆரம்பித்துள்ளோம். சில இடங்களில் கன்வென்ஷனும் நடத்தியிருக்கிறேன்.
|
கேள்வி: டையோசிஸ்ஸின்
விஷயமாக இப்போது நடக்கும் கோர்ட் விவகாரங்கள், டையோசிஸ்ஸின் வளர்ச்சி
என்கிறீர்களா? பாதிப்பு என்கிறீர்களா? இவைகள் எதைக் குறிக்கிறது?
பதில்: கோர்ட் விவகாரங்கள் டையோசிஸ்க்கு நிரந்தரம் அல்ல! டையோசிஸ் காரியங்கள் சட்டப்படிதான் செயல்படுகிறது. என் அனுபவத்தில் ஒரு கேஸ்கூட
டையோசிஸ்க்கு எதிராக தீர்ப்பு உண்டாகவில்லை. ஆனால் யாராவது எங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் கேஸ் போட்டால் அதற்கு
பதில் கூற நாங்களும் நீதிமன்றம் செல்லத்தான்வேண்டும் அல்லவா! இப்போது நடக்கும் கோர்ட் கேஸ்கள்
பிஷப்பாகிய என்னை தனிப்பட்ட முறையில் துன்புறுத்துவதற்காக வேண்டுமென்றே எனக்கெதிராக நடத்தப்படுவதாகும். அதனால் எனக்கு பல விதங்களில்
பண நஷ்டமும், நேரம் நஷ்டமும் மிக அதிகமானது.
பிஷப்புக்கு பாடம் புகட்டவேண்டும் என்ற வைராக்கியத்தில் சிலர் எனக்கு எதிராக கோர்ட்டுக்கு போவது, டையோசிஸ்ஸின்
எதிர்காலத்தை பாதிக்கும் என்பதை இப்படிப்பட்டவர்கள் சிந்தித்தால் நல்லது.
|
கேள்வி: டையோசிஸ்ஸின் நீண்டகால திட்டம் இல்லாமல் (தொலைநோக்கு திட்டம் இல்லாமல்) பிஷப் அவர்கள் செயல்படுவதால் டையோசிஸ்ஸின் முன்னேற்றம் தடைப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
பதில்: டையோசிஸ்ஸிலுள்ள முக்கியஸ்தர்கள் நிர்வாகிகள், ஆயர்கள்
ஐக்கியத்தோடு செயல்படாததால்தான் இந்த குற்றச்சாட்டு எழுகிறது. இதற்கு சபை, டையோசிஸ் ஆகியவற்றில் பொறுப்பில் உள்ள
கமிட்டிகள்தான் தீர்மானம் எடுக்கவேண்டும். அதில் முன்னாள் பொறுப்பில் இருந்தவர்கள் இப்போதுள்ள பொறுப்பில் உள்ளவர்களுக்கு நல்ல ஆலோசனை நல்கி, நல்ல தீர்மானத்தை செயல்படுத்தவேண்டும். ஏதாவது தவறு நடந்தால் அதை மற்றவர்களின்மேல் சுமத்தி செல்லவே சிலர் முயலுகிறார்கள்.
டையோசிஸ்ஸில் இடம் விற்றதும், மரம்
வெட்டியதும், கடைகள் வாடகைக்கு கொடுப்பது போன்றவை
கமிட்டியின் பார்வையிலும் அவர்களின் ஒப்புதலோடுதான் நடந்தது. இப்படிப்பட்ட
ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுபவர் டையோசிஸின் பொருளாளர் ஆவார். உண்மை இப்படியிருக்கும் போது
பிரச்சனைகள் உண்டாகும்போது, இதற்கெல்லாம் பிஷப்தான் காரணம் என்று
பழிபோடுவதும், குற்றப்படுத்துவதும் நல்லவர்களுக்கு அடையாளம் அல்ல. இதில் ஒத்துக்கொள்ளாத விஷயம் அல்லது அபிப்ராய வித்தியாசம் இருந்தால்
என்னிடத்தில் நேரில் கூறலாமே! அப்படி செய்யாமல் இவர்கள் வெளி ஆட்களிடமெல்லாம் சொல்லி திரிவது சரியல்ல! மேலே கூறிய பிரச்சனைகளுக்கு டையோசிஸ்ஸில் உள்ள
சில பொறுப்பாளர்களே காரணம். அவர்கள் பிஷப்பைவிட, டையோசிஸ்ஸைவிட
வேறு யாரையோ பெரிதாக நினைப்பதுதான் இப்போது டையோசிஸ் அனுபவிக்கிற பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.
|
கேள்வி: வடக்கு கேரளா
CSI டையோசிஸ் பேங்க்
அக்கவுண்ட் சீல் வைக்கப்பட்டது. சம்பளம், பென்ஷன் ஆகியவைகள்
டையோசிஸ்ஸில் ஊழியம் செய்பவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியது இதன்மூலம்
தடைப்பட்டது. இதன் காரணமாக பல திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல்போனது
ஆகியவைகள் டையோசிஸ்ஸின் நிர்வாக திறமை குறைவே காரணம்
என்பதுதானே இதன் அர்த்தம்?
பதில்: தன்னுடைய வேலையை சரியாக
பூர்த்தியாக்காமல் திடீரென்று ராஜினாமா செய்து வெளியேறிய
பொருளாளர், டெசிகினேட்டர் டிரஷரர் என்பவர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு பேங்க் பணம் எடுப்பதை நிறுத்தி வைத்தது நியாயமில்லாத காரியமாகும். அது எத்தனை பேரை பாதித்துவிட்டது! ஆனால் அது நடந்துவிட்டது! இது அவர்களின் உத்தரவாதமற்ற, பொறுப்பற்ற தன்மையை குறிப்பதாகும்.
பிஷப் தனியாகவும், சுதந்திரமாகவும், எந்த காரியத்தையும் செய்யமுடியாது என்பதை அறிந்துக்கொள்ளவேண்டும்.
செக் புக் எதுவும் என் கையிலும் என்
பொறுப்பிலும் இல்லை! அப்படி டையோசிஸ்ஸில் பணம் எடுக்கவேண்டுமானால்
பொருளாளரும் - பிஷப்பும் இணைந்து கையெழுத்து போட்டால்தான் எந்த பணத்தையும் எடுத்து செய்யமுடியும். அப்படியிருக்கும்போது ஏன் பிரச்சனை உண்டானது? இதன்மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தமுடியாமல்போனது உண்மைதான். ஆனால் வேறு வழியில்லை. ஆனால் அந்த குறிப்பிட்ட
மூன்று மாதம்வரை திருமண்டல பண விஷயங்கள் நிறுத்தாமல், தடைப்படாமல் நடந்தது கர்த்தரின் பெரிய கிருபையாகும்.
டையோசிஸ்ஸின் நிர்வாகத்தையும், பண விஷயத்தையும் தன் கட்டுபாட்டுக்குள் வைக்க முயன்ற
CSI சினாடின் அளவுக்குமீறிய சர்வாதிகார செயல்பாடு பிரச்சனைகளை அதிகமாக்கிவிட்டது.
|
கேள்வி: பண
ஊழலுக்கு பிஷப்பும் உடந்தை என்று கூறும் புகார் பற்றி உங்கள்
அபிப்ராயம் என்ன?
பதில்: பண விஷயங்கள் எதுவும்
பிஷப் பொறுப்பல்ல. பிஷப் ஒரு கண்காணியாக(கேர்டேக்கராக)தான் செயல்படுகிறார். எல்லா பண ஏற்பாடுகளும் சம்பந்தப்பட்ட
நிர்வாக கமிட்டிகள் மூலமாகத்தான் நடத்தப்படுகிறது. ஆனால் ஜனங்களை குழப்பவும்,
பிஷப்பை தவறு செய்தவராக காட்டவும் ஒரு சிலர் வேண்டுமென்றே இப்படி
புரளிகளை அவிழ்த்துவிடுகிறார்கள். செக்கில் முதல் கையெழுத்துபோடும்
நபராக மட்டும் பிஷப்பாகிய நான் செயல்படுகிறேன். டையோசிஸ்ஸில் ஊழல்
நடந்திருக்கிறது என்றால் அதை ஆதாரத்தோடு என்னிடம்
வந்து கூறட்டும்!
|
கேள்வி: பிஷப் அவர்களுக்கு
தாழ்மை இல்லாததாலும், அகம்பாவம் உள்ளவராக இருப்பதாலும் டையோசிஸ்ஸின் வளர்ச்சியை அது மிகவும் பாதித்து உள்ளது என்பது சரியா?
பதில்: பிஷப்புக்குள்ள
அதிகாரத்தையும், பதவியின் உயர்வையும் சாதாரண கண்களால் பார்க்கும்போது
தாழ்மை இல்லாதவனாகவும், அகம்பாவம் உள்ளவானகவும்தான் காணப்படும் என்பது உண்மை. ஆனால் எல்லாராலும்
காலில் மிதிபடுபவரும், எல்லாராலும் சிலுவையில் அறையப்படுபவரும்,
அவமானப்படுத்தபடுபவரும், யாராலும் உற்சாகப்படுத்தாதவருமான பிஷப்பாகிய நான் வகிக்கிற பதவிபோல வேறு ஒரு ஊழிய பதவி இருக்காது என்று நினைக்கிறேன். என் ஊழியத்தில்
நான் சிலுவையில் அறையப்படும் போதும், அவமானபடுத்தப்படும்போது அதற்குபின் ஒரு
தெய்வீக திட்டம் ஒன்று உண்டென்று நம்புகிறேன்.
|
பேட்டியில் பிஷப் அவர்கள் கூறும்போது
வடக்கு கேரளா டையோசிஸ்ஸை எல்லை மிக அதிகமாக இருப்பதால் டையோசிஸ்ஸை
மூன்றாக பிரித்து மூன்று டையோசிஸ்ஸாக பிரிப்பது நல்லது என்றும் கூறி முடிக்கிறார்.
வடக்கு
கேரளா டையோசிஸ் பிஷப்
Rt.Rev.K.P.KURUVILLA அவர்கள் தன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு தைரியமாக பதில் அளித்து, அதை
பகிரங்கமாக பத்திரிக்கையில் வெளியிட்டது நல்ல முன்மாதிரியாகும். இதை எல்லா பிஷப்மார்களும் பின்பற்றினால் என்னை போன்ற பத்திரிக்கை, மீடியாக்கள் தங்கள் பத்திரிக்கைகளில் எழுதி அறிவிப்பது அவசியமில்லாதுபோகும். இந்த விஷயத்தில் பிஷப்
Rt.Rev.K.P.KURUVILLA அவர்களை பாராட்டுகிறேன்.
வடக்கு கேரளா டையோசிஸ் சபை மக்களுக்கும், ஆயர்களுக்கும், பிஷப் அவர்களுக்கும் ஜாமக்காரன் சார்பில் வாழ்த்து கூறுகிறோம்.
CSI டையோசிஸ்க்காக நாங்கள் தொடர்ந்து ஜெபிப்போம் என்றும் அறிவித்துக்கொள்கிறேன்.
ஜாமக்காரன் குறிப்பு: மேலே வாசித்த
பிஷப்.Rt.Rev.K.P.குருவில்லா அவர்களின் பதிலை வடக்கு கேரளா
CSI டையோசிஸ்ஸிலுள்ள என் ஜாமக்காரன் வாசகர்கள் எத்தனைபேர் ஒத்துக்கொள்கிறீர்களோ எனக்கு தெரியாது. அவரைப்பற்றி குற்றச்சாட்டுகளை எனக்கு எழுதியவர்களும், ஜாமக்காரனில் எதிர் அபிப்ராயம் உள்ளவர்களும், பிஷப் அவர்களின் பதிலையும் நீங்கள் கண்டிப்பாக அறியவேண்டும். ஆகவே இதை ஜாமக்காரனில் வெளியிடுகிறேன்.
பிஷப் அவர்களின் பதில்
சரியா-தவறா? என்பதைக்குறித்து தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. ஆனால் பிஷப் அவர்களின் இந்த தைரியமான பதிலைக்குறித்து பெருமைப்படுகிறேன். இதேபோல் ஒவ்வொரு டையோசிஸ்ஸில் உள்ள
CSI, Lutheran & மார்தோமா சபைகளின் பிஷப்மார் தங்களைக்குறித்து எழும் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு பிஷப்மார் தங்கள் டையோசிஸ் பத்திரிக்கை களில் பதில் அளிக்கவேண்டியது மிக அவசியம். பிஷப்மார்கள் பக்கமுள்ள உண்மையையும் அவர்கள் விளக்கங்களையும் சபை மக்கள் அறிய இது நல்ல வாய்ப்பாகும்.
எலக்ஷன் தாமதமாவதை பிஷப் அவர்கள் சம்மதிக்கிறார். ஆனால், காரணம்
தான் அல்ல என்றும் அறிவிக்கிறார். |
|
 |
|
|
|