கேள்வி - பதில்
ஜாமக்காரனின் பதில்கள்

கேள்வி:  என் சொந்த கம்பெனியில் கூலி வேலை செய்யும் யாவருக்கும் நாங்கள் சுவிசேஷம் அறிவிக்கிறோம். அவர்களில் பலர் இரட்சிக்கப்பட்டு நாங்கள் ஆராதிக்கும் பெந்தேகோஸ்தே சபைக்குதான் அவர்களும் கலந்துக்கொள்கின்றனர். எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் கூலியாட்களில் ஒருவன் நல்ல மனந்திரும்பினவன், உண்மையுள்ளவன். ஆனால் இப்போ கொஞ்சகாலமாக வேலையில் அக்கறை காட்டுவதில்லை. வேலைக்கு தாமதமாக வருகிறான், இவன் காரணமாக மற்ற கூலியாட்களை எங்களால் சரியாக வேலை வாங்கமுடியவில்லை - அவனையும் கண்டிக்க மனம் வரவில்லை - தண்டிக்கவும் மனம் வரவில்லை, நான் கடினமாக நடந்துக்கொண்டால் அவன் பின்வாங்கிப்போவானோ என்று அஞ்சுகிறேன். உங்கள் ஆலோசனையை கூறுங்கள்.

பதில்:  சபையில் ஆராதிக்கும்வரை அல்லது ஊழியத்தில் ஈடுபடும்போது அவன் உங்களில் ஒருவன் இயேசுகிறிஸ்துவில் அவன் ஒரே குடும்பத்தை சேர்ந்தவனாகிறான். ஜாதி வித்தியாசம் இல்லாமல் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளைப்போல் அவனிடம் பழகலாம்.

ஆனால் வேலையிடத்தில், தொழில் செய்யும் இடத்தில் அல்லது வயல்நிலத்தில் நீங்கள் முதலாளி - அவன் கூலியாள் அல்லது அவன் ஒரு தொழிலாளி என்ற நிலையில்தான் பழகவேண்டும். அவன் தவறு செய்தால் முதலாளி என்ற நிலையில் அவனை கண்டிக்கவும்-தண்டிக்கவும் உங்களுக்கு உரிமையுண்டு. வேலைசெய்யும் இடத்தில் பிரதர்-சிஸ்டர் என்று கொஞ்சவோ, கெஞ்சவோ கூடாது. இதற்கும் நம் வேதம்தான் பதிலாக அமைகிறது.

தேவனுடைய நாமமும், உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லா கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள். விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள் (கூலியாட்கள்), தங்கள் எஜமான்கள் (கிறிஸ்துவுக்குள்) சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டை பண்ணாமல், நம் வேலையின் பலனைப் பெற்றுக்கொள்கிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால் அவர்களுக்கு (அவிசுவாசிகள் செய்வதைவிட) அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள். இந்தப்படியே போதித்து புத்திச்சொல்லு. 1தீமோ 6:1-2.

வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். (வேலைக்காரராகிய) நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்திரமாகிய பலனைக் கர்த்தராலே பெருவீர்களென்று அறிந்து எதை செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொலே 3:22-24.

சிலசமயம் வேலைக்காரர்களை அளவுக்குமீறி நேசித்து அல்லது அளவுக்கு மீறி நம் வீட்டிலோ, கடையிலோ, நம் வியாபாரத்திலோ அவர்களுக்கு அளவுக்குமீறி சலுகை கொடுத்து விட்டால் அதுவும் ஆபத்தாக முடியநேரிடும்.

  உதாரணத்திற்கு புருஷனுக்கு சோறுபோட சோம்பேறிதனப்பட்ட ஒரு சகோதரி, தன் வேலைக்காரி பெண்ணிடம் தனக்கு பதில் புருஷனுக்கு சாப்பாடுபோட சொன்னாள். இரவு, பகல் இப்படி வேலைக்காரியே தன் புருஷனுக்கு எல்லா உதவிகளும் செய்ய இவள் ஊக்கப்படுத்தியதால், இன்று அந்த வேலைக்காரியே அந்த புருஷனுக்கு இரண்டாவது மனைவியாக மாறிவிட்டாள். தன் புருஷனுக்கு பணிவிடை செய்யும் விஷயத்தை மனைவியானவள் வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்கக்கூடாது!

"ஒருவன் தன் அடிமையைச் சிறு பிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால் முடிவிலே அவன் தன்னை புத்திரனாகப் பாராட்டுவான்". நீதி 29:21. பிறகு சொத்தில் பங்குகேட்க ஆரம்பித்துவிடுவான். ஜாக்கிரதை! யாரையும் அவரவர் ஸ்தானத்தில் வைக்கவேண்டிய இடத்தில் வைத்தால் பிரச்சனை எழும்பாது. விசுவாசிகள் இதில் மிக கவனமாக இருக்கவேண்டும்.


கேள்வி:  CSI & LUTHERAN சபைகளின் பணக்கொள்ளை, ஆலய நிலம் விற்றல் ஆகியவைகளை செய்யும் பிஷப்மார்களுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்தினால் என்ன?

பதில்:  நீங்கள் இப்போதுதான் உறக்கத்திலிருந்து எழுந்ததைப்போல் பேசுகிறீர்கள்? இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் பிஷப்மார்கள் நீக்கம், CBI விசாரணை, நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு ஆகிய எதைப்பற்றியும் உங்களுக்கு தெரியாதா? ஐயா, நீங்கள் கூறிய எல்லா முயற்சிகளும் செய்தாயிற்று. இப்போது முயற்சியின் அல்ல, போராட்டத்தின் முடிவைத்தான் எல்லாரும் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறோம்.

தவறுக்கு சட்டத்தில் தண்டனை உண்டு - ஆனால் தீர்ப்பு எப்படியிருந்தாலும் சட்டத்திலுள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து கொள்ளையடித்தவர்கள், பிடிப்பட்டவர்கள் யாவரும் அந்த சட்டத்தின் ஓட்டைவழியாக தப்பிவர இப்போது வசதியும் இருக்கிறது. அதனால்தான் சுனாமி பணம் கொள்ளையடித்தவர்கள் கையும் களவுமாக பிடிப்பட்டும் தீர்ப்பு கூறமுடியாமல் நீண்டு கொண்டுபோகிறது.

  மேலும் 44 வருட என் ஊழியத்தில் கடந்த 30 வருடங்களாகத்தான் பல பிஷப்மார்கள் பண ஊழலிலும், சாட்சி கெட்டும் சர்வாதிகாரமாகவும், நடப்பதை காண்கிறேன். அதற்குமுன் அப்படியில்லை. இப்போதும் பல திருமண்டலத்தில் பல விதத்தில் நான் விசாரித்து விவரம் சேகரித்தபோது, பணக்கொள்ளை, நில ஊழல், டொனேஷன், அட்மிஷன் இப்படிப்பட்ட காரியங்களில் பிஷப்மார்கள் பெயர்கள்தான் முன்னே வருகிறதே தவிர, பிஷப்மார்களை ஆட்டுவிக்கிற சபை பிரமானிகளும், கமிட்டியில் உள்ள சில முக்கிய புள்ளிகளுமாக பெரிய கொள்ளைக்கூட்டமே பிஷப்மார்களுக்கு பின்னால் இயங்குகிறது என்பதை அறிந்தேன். போதாததற்கு அரசியல்வாதிகளும், மந்திரிமார்களும் டையோசிஸ் விஷயங்களில் தலையிட ஆரம்பித்துவிட்டனர்.

  உதாரணமாக, கேரளாவில் பிஷப் அவர்கள் 12 கோடி லஞ்சம் வாங்கியதாக செய்திகள் வந்தது. ஆனால் உண்மையாய் பிஷப் பெயரில் அந்த குறிப்பிட்ட டையோசிஸ்ஸில் உள்ள கமிட்டி பிரமுகர்கள்தான் அந்த 12 கோடியை வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் ஆதாரத்துடன் அறிந்தேன்.

கோயமுத்தூர் CSI டையோசிஸ், கர்நாடகா CSI டையோசிஸ் மற்றும் ஆந்திராவில் சில CSI டையோசிஸ்ஸில் மட்டுமே அங்கு நடந்த எல்லா பண ஊழல்களுக்கும் பெரும்பாலும் பிஷப்மார்களே காரணமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் மற்ற டையோசிஸ்ஸிலும் குறிப்பாக கேரளா CSI டையோசிஸ்களில் நடந்த பெரும்பாலான ஊழல்களுக்கு பிஷப்மார்கள் காரணமல்ல, அவர்களை ஆட்டிவைத்த கமிட்டியில் உள்ள பெரும்புள்ளிகள்தான் காரணம் என்று அறியப்பட்டது. என்றாலும் தவறுகள் யார் செய்தாலும், பொறுப்பில் உள்ள பிஷப்மார் அப்படிப்பட்ட பணக்கொள்ளைக்கு ஒத்துப்போகக்கூடாது. தவறு செய்தவர்கள்மேல் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது.

  பிரதமர் கைசுத்தம் என்ற பெயர் இருந்தாலும், தனக்கு கீழ் உள்ள மந்திரிமார்கள் ஊழல் செய்யும்போது அதை கண்டிக்காததும், அதை தடுக்காததும் பெரும் குற்றமாகும். அவர் தலைமை பதவிக்கே லாயக்கற்றவர் என்றுதான் கூறவேண்டும். இதன்மூலம் முழு இந்தியாவுக்கே கெட்டபெயர் வந்துவிட்டதே. அதேபோல் பிஷப் பெயரில் நடத்தப்படும் எல்லா தவறுகளுக்கும் பிஷப்தான் முழு பொறுப்பேற்கவேண்டும். ஆகவே எல்லா CSI & LUTHERAN டையோசிஸ்களிலும் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம்வரை கழுவி சுத்தப்படுத்தினால் மட்டுமே நம் CSI & LUTHERAN சபைகளும், சபை மக்களும் வசனத்திலும் சாட்சியுள்ள ஜீவியத்திலும் வளரமுடியும்.


கேள்வி:  Sleeveless (கையில்லாத ஜாக்கெட்) அணிவது பாவமா? உஷ்ண காலத்தில் அப்படிப்பட்ட உடுப்புகள் அணிவது சரீரத்துக்கு சவுகரியமாக இருக்கிறதே, அது ஆரோக்கியதுக்கு நல்லதுதானே? டென்னிஸ் விளையாடும் பெண்கள் அப்படி அணிகிறார்களே? அது தவறில்லையா?

பதில்:  நீங்கள் இரட்சிக்கப்பட்டவர்களாக இருந்தால் இந்த கேள்வி எழாது? கேள்வி கேட்ட நீங்கள் பெண்ணா? ஆணா? என்றே அறியமுடியாதவாறு பெயர் எழுதாது வீட்டு நம்பருடன் விலாசம் மட்டும் எழுதியுள்ளீர்கள். யாருக்காக இந்த கேள்வி கேட்டீர்களோ? தெரியவில்லை. சரி, எப்படியானாலும் விளக்கத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.

ஆண்-பெண் சரீரத்தில் அருவருக்கப்படும் சில இடங்கள் உண்டு, ஆபாசமான இடங்களும் உண்டு. அதை நீங்களே அறிவீர்கள். அக்குள் பாகம் அருவருப்பும்-ஆபாசமும் கலந்தது ஆகும். நடிகைகளின் புகைப்படங்களை பத்திரிக்கைகளில் அல்லது விளம்பரங்களில் வெளியிடும்போது கைகளை தூக்கியபடி நிற்கும் (போஸ்) நிலையை காண்பீர்கள். காரணம், கவர்ச்சி அதில் உண்டு என்பதற்காக அப்படி காட்டப்படுகிறது. டென்னீஸ் விளையாடும் பெண்கள் ஓட, குதிக்க டென்னீஸ் பேட்டை உயர தூக்கும்போது உடைகள் இழுத்துபிடிக்காமல் லகுவாக இருக்க அப்படிப்பட்ட உடை உடுத்துவது அந்த விளையாட்டுக்கு அவசியம். நீச்சல் குளத்தில் புடவையுடன் அல்லது சூட், பேண்ட் டை கட்டிக்கொண்டு குதித்து நீந்துவார்களா? நீச்சல் போட்டிக்கு ஜட்டியுடன் தண்ணீரில் நீந்தினால்தான் வேகமாக நீந்தமுடியும். இவைகள் ஆபாசம் அல்ல - அருவருப்பும் அல்ல. இந்த விளையாட்டு நபர்கள் அந்தந்த விளையாட்டு இடங்களில்மட்டுமே அப்படிபட்ட உடைகளை உபயோகிப்பார்கள். அப்படியிருக்க இவர்களை எதற்கு உங்கள் தவறான நோக்கத்துக்கு அல்லது எதிர்ப்பார்ப்புக்கு ஒப்பிடுகிறீர்கள். ஏற்கனவே வெளி 16:15ல் தன் நிர்வாணம் (மானம்) காணத்தக்கதாக நிர்வாணமாக நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு தன் வஸ்திரங்களை காத்துகொள்கிறவன் பாக்கியவான் வெளி 16:15 என்ற வசனத்தின் விவரங்களைக்குறித்து ஜாமக்காரனில் எழுதிவிட்டேன். அதை மனதில் கொண்டு கை வைத்தது, கை வைக்காதது என்று இவைகளை நீங்களே நிதானித்துக் கொள்ளுங்கள்.

இப்படிப்பட்ட ஆபாச, அருவருப்பு, உடை அலங்காரங்கள் தனக்கு அழகு இல்லை என்று நினைப்பவர்கள் மட்டும்தான் அப்படி உடை உடுத்த ஆசைப்படுவார்கள். காரணம், அலங்காரத்தின் நோக்கமே மற்றவர் தன்னை காணவேண்டும் என்பதுதான். அழகு இல்லாதவர்கள் உடுத்தும் சாதாரண உடையில் "தன்னை யாரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை அல்லது கவனிப்பதில்லை" என்று இவர்கள் உணர்ந்தால் அப்படிப்பட்டவர்கள் எல்லாருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்ப இப்படிப்பட்ட அருவருப்பான, ஆபாசமான உடைகளை உடுத்த விரும்புவார்கள். இப்படிப்பட்ட உடைகள் உடுத்துபவரை கண்டாலே விளங்கிவிடும். இப்படிப்பட்டவர்கள் ஆழமான ஆவிக்குரிய ஜீவியத்தில் இல்லை என்று திட்டமாக யூகிக்கலாம். சிறு பிள்ளைகளுக்கு கையில்லா உடை உடுத்துவதில் எந்த ஆபாசமும் கிடையாது. ஆனால் 11 வயதிற்குமேல் உள்ள பெண் பிள்ளைகள் யார் உடுத்தினாலும் ஒன்று ஆபாசமாக தோற்றம் உண்டாக்கும், அல்லவென்றால் அருவருப்பை உண்டாக்கும்.


கேள்வி:  திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்தவரும், தமிழ் இலக்கணத்தை தமிழர்களுக்கே முதலில் எழுதி கற்று கொடுத்த வெளிநாட்டினவரான வீரமாமுனிவர் என்று அழைக்கப்படுபவரின் இயற்பெயர் என்ன?

Fr.CONSTANTINE
JOSEPH BESCHI.S.J

பதில்:  இவரின் இயற்பெயர் Costanzo Giuseppe Beschi என்பதாகும். ஆங்கிலத்தில் அவர் பெயர் கான்ஸ்டென்டைன் ஜோசப் பெஸ்கி (CONSTANTINE JOSEPH BESCHI.S.J) என்பதாகும். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னுமிடத்தில் பிறந்தவர்.

இவர் இலத்தீன் மொழியில் திருக்குறளின் முக்கிய பகுதியாகிய அறத்துப்பால், பொருட்பால் ஆகியவைகளையும் சிறப்பாக மொழி பெயர்த்து உலகுக்கு திருக்குறளின் பெருமையை நிலைநாட்டினார்.

தோமா இந்தியாவுக்கு வந்த காலகணக்கின்படி திருவள்ளுவர் கிறிஸ்துவின் உபதேசத்தை இயேசுகிறிஸ்துவின் சீஷன் தோமா மூலமாக அறிந்து வேத வசன கருத்துக்களை அப்படியே திருக்குறள் வடிவமாக்கி சிறப்படைந்தார் என்று இவரின் ஆராய்ச்சி கூறுகிறது.

  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜீ.யு.போப் என்ற ஆங்கிலேயர் ஆவார்.


கேள்வி:  நம் சபைகளுக்கான தீர்க்கதரிசனம் என்னவாக இருக்கும்? இப்படி நான் கேள்வி கேட்க காரணம், இன்று அவரவர்கள் தங்களை தீர்க்கதரிசிகள் என்று கூறிக்கொள்கிறார்களே உலகத்தின் முடிவு வந்துவிட்டதோ?

பதில்:  சபைகளுக்கான தீர்க்கதரிசனம் வேதம் முழுவதிலும் காணப்படுகிறது. இயேசு கிறிஸ்துவும், சீஷர்கள் யாவரும் இதை முன்அறிவித்துவிட்டார்கள். இன்னும் எத்தனை முறை அவைகளைப்பற்றி விளக்குவது!?

மீகா தீர்க்கதரிசி (மீகா 3:11)ல் இஸ்ரவேல் மக்களுக்கு உரைத்தது இன்றைக்கும் பொருந்தும். "தலைவர்கள் பரிதானத்துக்கு (லஞ்சத்துக்கு) நியாயந்தீர்க்கிறார்கள்". அதன் ஆசாரியர்கள் பாஸ்டர்கள் - குருமார் (இன்றைக்கு) கூலிக்கு உபதேசிக்கிறார்கள்.

தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்கிறார்கள். (சதுரஅடிக்கு 1000 கொடுத்தால் கர்த்தர் 10 லட்சம் கொடுப்பார். ஒரு குழந்தைக்கு 2000 ரூபாய் கொடுத்தால் ஜெபம் ஏறெடுக்கப்படும். அந்த பணம் அனுப்பிய குழந்தைகள் மாணவர்கள் யாவரும் ஊழியத்தில் பங்காளிகளாக மாறுவார்கள். 5 அப்பம் 2 மீன் ஆசீர்வாதம் இப்படி பல ஜெப வியாபாரங்கள். தமிழ்நாட்டில் சில ஊழிய வியாபாரிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளும், கள்ள ஊழியர்களும் என்ன சொல்வார்களாம் தெரியுமா? அதையும் நம் வேதத்தில் தீர்க்கதரிசன புத்தகத்தில் காணலாம். மேலே குறிப்பிட்ட ஊழியர்கள் கூறுவார்களாம், கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? அதாவது கர்த்தர் எங்களோடு இல்லாமல் இருந்தால் இத்தனை கூட்டம் எங்களுக்கு வருமா? பலர் எங்களை கள்ள ஊழியர்கள் என்பார்கள். வியாதி சுகமானது என்று கூறியது பொய் இவர்களுக்கு நிச்சயம் தேவதண்டனை வரும் என்று எல்லாரும் கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் என்ன பதில் சொல்வார் தெரியுமா? மீகா 3:11 தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள். இதைவிட தீர்க்கதரிசனம் சபைகளைப்பற்றி இன்னும் எதிர்பார்க்கிறீர்களா?.

பரிசுத்த ஆலயத்தில் இருக்கிற ஆண்டவரே? பரிசுத்த ஆவியானவர் அந்நியபாஷை பேசுகிறவர்களுக்குமட்டும்தான் என்கிற இவர்களுக்கு விரோதமாக (கர்த்தரே) சாட்சியாயிருப்பேன் என்கிறார். விளங்கிக்கொள்கிறவர் விளங்கிக்கொள்ளட்டும்.


கேள்வி:  கனடா தேசத்தில் உள்ள பெரும்பாலான பாஸ்டர்கள் ஜெர்மனியிலும், இலங்கையிலும் உங்கள் பிரசங்கம் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்களும், ஊழியத்துக்கு ஒப்பு கொடுத்தவர்கள். சிலரை கனடாவில் பாஸ்டராக ஊழியராக, மேய்ப்பராக நீங்களே அபிஷேகம் செய்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று அறிவேன். ஆனால் அந்த பாஸ்டர்கள் உங்களோடு ஆரம்பத்தில் கொண்டிருந்த அன்பும் தொடர்பும் இப்போது உங்களோடு இல்லையே ஏன்?

பதில்:  இவ்வளவு அறிந்து வைத்துள்ள உங்களுக்கு இதன் பதிலும் நிச்சயம் தெரிந்திருக்குமே! அவர்கள் எல்லாருக்கும் என்மேல் இப்போதும் அன்புண்டு, நன்றி உண்டு. அவர்களில் சிலர் இப்போதும் எனக்கு காணிக்கை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களையும் - என்னையும் பிரித்தது எது தெரியுமா? அந்நியபாஷையே அல்லாது வேறில்லை. இவர்களில் பலருக்குதான் பேசும் பாஷை பொய்யானது என்பதும் செயற்கை என்பதும் மிகமிக நன்றாக தெரியும். இவர்களுக்காக நானும் - ஆவியானவரும் துக்கப்படுகிறோம். வேறென்ன சொல்ல?.


கேள்வி:  கனடா நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர் மத்தியில் தனி நபர் பாதுகாப்புக்குறித்து TORANTO நகர காவல்துறை அதிகாரி மிச்சேல் சாங்குயினிட் அவர்கள் பேசும் போது அவர் குறிப்பிட்ட கருத்து உலகம் முழுதுவம் உள்ள பெண்களை போர் கொடி தூக்கவைத்துள்ளது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்:  அவர் கூறியது இதுதான். நான் இப்போது சொல்லபோகும் விஷயம் பொது இடத்தில் பேசக்கூடாதவைதான் என்றாலும், பெண்களின் நன்மைக்காக பேசுகிறேன். பொதுவாக பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால் தங்களை பாதுகாத்துக்கொள்ள உடை விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒரு நடத்தைக்கெட்ட பெண்போல உடை அணியக்கூடாது என்றார். அவ்வளவுதான் பெண்கள் பொங்கி எழுந்து உலகெங்கும் போராட்டம் நடத்த தொடங்கிவிட்டார்கள்.

உலக மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க "ஸ்லட் வாக்" "SLUTWALK" என்ற பெயரில் கடந்த 2 மாதங்களாக உலகத்தின் பல நாடுகளில் தங்கள் விருப்பம்போல அரைகுறை உடைகளை உடுத்தியும், மேலே துணி ஒன்றும் போடாமலும், சிலர் முழு நிர்வாணத்தோடும் வீதிகளில் ஊர்வலம் சென்றார்கள். கனடா நாட்டு காவல்துறை அதிகாரி வெளியிட்ட கருத்து பெண்களின் தனி உரிமையை பாதித்துவிட்டது. அது தனிமனித உரிமையை இல்லாதாக்குக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவர் பேச்சு ஆண் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது. நாங்கள் உடுத்தும் உடைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூற யாருக்கும் உரிமையில்லை, இன்னும் சொல்லப்போனால் எங்கள் பெற்றோருக்கும் உரிமையில்லை. எங்கள் உடை உடுத்தும் உரிமைகளில் யாரும் தலையிட உரிமை கிடையாது. எங்கள் இஷ்டத்துக்கு நாங்கள் உடுத்தி வீதிகளில் நடப்போம். எங்களை பார்க்கும் ஆண்களுக்கு தவறான எண்ணங்கள் உண்டாகுமானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, எங்களைப் பார்க்கிறவர்கள் அவரவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வதுதான் நாகரீகமே தவிர, எங்கள் உடைகளைப் பார்த்துதான் உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது என்று விமர்ச்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது என்று பெண்கள் அறிவிக்கை வெளியிட்டார்கள்.

அதைப்பின்பற்றி இந்தியாவிலும் பெண்கள் "ஸ்லட் வாக்" ஊர்வலம் நடத்தினார்கள். இந்தியாவில் முதலில் BHOPAL - போபாலில் பெண்களின் ஊர்வலம் நடந்தது. ஆனால் ஊர்வலத்தில் மொத்தம் 50 பேர்கள் தான் கலந்துகொண்டார்கள். இதில் பாதி பேர் வாலிபர்கள், பாதிபேர்தான் வாலிபப் பெண்கள். சிறிய வித்தியாசம் என்னவென்றால் மேலை நாடுகளில் "ஸ்லட் வாக்" நடத்திய பெண்கள் போல அரை நிர்வாணம், முழு நிர்வாணம் இல்லாமல் பெண்கள் ஜீன்ஸ்சும், Bra போடாத T-ஷர்ட்டும் அணிந்திருந்தனர். அடுத்து இந்திய தலைநகர் டெல்லியில் 2011 ஜுலை 31ம் தேதியும், மும்பையில் செப்டம்பர் மாதத்திலும் பெண்களின் இந்த ஆபாச ஊர்வலம் நடக்கும் என்று அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். சீக்கிரத்தில் தமிழ்நாட்டிலும் இந்த ஊர்வலம் நடக்கலாம். இந்த ஊர்வலத்துக்கு மேலை நாடுகளில் "ஸ்லட் வாக்" என்று பெயர் சூட்டி ஊர்வலம் வந்தனர். ஆனால் இந்தியாவில் "வெட்கமில்லா பேரணி" என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் மிக அதிகமான பாலியல் பலாத்காரம், பெண் கற்பழிப்பு சம்பவங்கள் மிக அதிகமாக நடப்பது மத்திய பிரதேச மாநிலம் என்பதால்தான் "வெட்கமில்லா பேரணி" மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் பெண்கள் நடத்தினார்கள்.

இந்த வெட்கமில்லா பேரணி(ஸ்லட் வாக்)யின் அமைப்பாளர் உமாங்சபர்வால் என்ற பெண் கூறும்போது இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பெண்கள் இந்திய பண்பாட்டுக்கு எதிராக, யாருடைய உணர்ச்சிகளும் தூண்டாத விதத்தில் பெண்கள் உடை உடுத்தி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறோம் என்றார். இதையேதான் கனடா நாட்டு அந்த போலீஸ் உயர் அதிகாரியும் கூறினார்.

  இன்று இதைத்தான் நம் கிறிஸ்தவ வேதமும் போதிக்கிறது. ஜாமக்காரனும் இதையேதான் ஆலோசனையாக கொடுக்கிறேன். இந்தியாவில் "ஸ்லட் வாக்" ஊர்வலத்துக்கு வைக்கப்பட்ட பெயர் வெகு பொருத்தமாகும். உண்மையில் இதை இவர்கள் "வெட்கமில்லா பேரணி" என்று பெயர் வைத்ததைவிட "வெட்கங்கெட்ட பேரணி" என்று வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

  ஆகவே, நம் கிறிஸ்தவ திருச்சபை பெண்கள், வாலிபப் பெண்கள் யாவரும் உடைகள் விஷயத்தில் வெயில்காலம் என்றும், பெண்கள் உரிமை என்றும் பார்ப்பவர்கள் கண்கள் சரியில்லை போன்ற வார்த்தைகளை உபயோகித்து ஆபாசத்தை நியாயப்படுத்தாமல், அருவருப்பான பாகங்கள், ஆபாச அங்கங்கள் வெளியே தெரிய உடை உடுத்தாமல், பரிசுத்தமுள்ள தெய்வத்தை ஆராதிக்கும், பரிசுத்த சிந்தையுள்ள பெண்களாக வாழ்ந்து ஆவிக்குரியவர்களுக்குரிய தகுதியான உடைகளை உடுத்தி கிறிஸ்தவ சாட்சியுடன் வாழுங்கள். வாக்குவாதம் என்பது உங்கள் உள்ளத்தை வெளிப்படுத்தும் சாட்சியாகும்.

  நம்முடைய வேதம் கூறுவதுபோல: 1தீமோ 2:10 ...தகுதியான வஸ்திரத்தினாலும். ....அலங்கரிக்க வேண்டும்.

  ரோம 12:2. ...உலகத்துக்கு ஒத்தவேஷந்தரியாமல் ............ மறுரூபமாகுங்கள்.

  வெளி 16:15. ... தன் மானம் (Nakidness) காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்கிறவன்(ள்) பாக்கியவான்.


கேள்வி:  உங்களுக்கு பரலோகத்தையோ, தேவ தூதர்களையோ இங்கிருந்து பார்க்க பிடிக்காதா? அப்படிப்பட்ட ஆனந்த அனுபவத்தை இந்த உலகத்திலேயே அனுபவிக்க உங்களுக்கு ஆசையில்லையா? ஒருவேளை உங்களுக்கு அந்த ஆசையில்லை என்றால் அப்படிப்பட்ட அனுபவம் பெற்ற ஊழியர்களை நீங்கள் குறை சொல்ல கூடாதல்லவா?

பதில்:  உண்மையில் பரலோகத்தை எனக்கு இங்கிருந்து பார்க்கும் எண்ணம் இல்லை. ஆசையும் இல்லை. அப்படியே தூதர்களை பார்க்கும் ஆசையும் எனக்கு இல்லை. தூதர்களை நான் ஏன் பார்க்கவேண்டும்?

தேவ தூதர்கள் என்னை பாதுகாக்க, என்னைப்பற்றி விவரங்களை கர்த்தரிடம் அறிவிக்க தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட வெறும் வேலைக்காரர்கள் ஆகும். அவர்களை நான் பார்ப்பதில் எனக்கு என்ன பிரயோஜனம்!

அப்படியே பரலோகத்தை இங்கிருந்து பார்த்து ரசிப்பதைவிட பரலோகத்திலேயே தங்கியிருக்கத்தான் எனக்கு ஆசை. அதற்கு இந்த உலகத்தில் தேவன் அருளிய வேத வசனத்தின்படி பரிசுத்தமாக ஜீவித்து ஒவ்வொரு வசனத்துக்கும் கீழ்ப்படிந்து தேவன் என்னை என்ன நோக்கத்தோடு, எதை எதிர்ப்பார்த்து இந்த உலகத்தில் பிறக்கச்செய்தாரோ அதை நிறைவேற்றி பரலோகம் போய் இயேசுகிறிஸ்துவோடு என்றென்றும் வாழ இந்த உலகில் அவர் சித்தம் என்னில் நிறைவேற முயன்று கொண்டிருக்கிறேன்.

தாவீது ஜெபிப்பதைப்போல் கர்த்தாவே! உமக்கு பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் (சங் 143:10). என்பதே என் தினசரி ஜெபமாயிருக்கிறது.

மற்றப்படி நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட ஊழியக்காரர்களைப்போல் பரலோகம் நரகம் ஆகிய இடங்களுக்கு சென்றுவர தினசரி பஸ் சர்வீஸ் நடத்த எனக்கு பிரியமில்லை. அவர்களைப்போல் பரலோகம், நரகம் தேவ தூதர்களோடு பேசுவது போன்ற கற்பனை கதைகளையும், பொய் மூட்டைகளையும் அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்ற நான் விரும்பவுமில்லை. அப்படிப்பட்ட பரலோக அனுபவத்தையும், நரக அனுபவத்தையும் கூறும் எந்த ஊழியர்களையும் நீங்கள் நம்பாமல் இனியாவது உங்கள் ஆத்துமாவை ஜாக்கிரதையாக இப்படிப்பட்ட பொய் ஊழியர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!


கேள்வி:  இரட்சிக்கப்பட்ட ஒருவர் தன் மரண நேரத்தில் நான் மரித்தால் தன்னைப் புதைக்கக்கூடாது என்றும், தன் சரீரத்தை எரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சபையினரும், எங்கள் மெத்தடிஸ்ட் சபை போதகரும், அவர் குடும்ப உறவினர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து எரித்துவிட்டனர். இவர்கள் செய்தது சரியா? மெத்தடிஸ்ட் பாஸ்டர்மார் அதற்கு எப்படி சம்மதம் தெரிவிக்கலாம்?

பதில்:  உங்கள் கேள்வியின் ஆரம்ப வரிகளிலேயே தவறு உண்டு. நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர் இரட்சிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது தவறு. இரட்சிக்கப்பட்டவர் என்பவர் வேதத்தையும் வாசித்து தெளிவு பெற்றிருக்கவேண்டும். வசனப்படி நீங்கள் குறிப்பிட்ட நபர் இரட்சிக்கப்பட்டவராக இருந்திருந்தால் இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கமாட்டார். மரித்தப்பின் தன் ஆத்துமா எங்கு போகவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் இரட்சிக்கப்பட்டவரோ, இரட்சிக்கப்படாதவரோ, யாராக இருந்தாலும் அவர் மரித்தபின் எரித்தாலும் தவறில்லை, பெட்டியில் வைத்து அடக்கம் செய்தாலும், பெட்டியில் வைக்காமல் அடக்கம் செய்தாலும் அதிலும் எந்த தவறும் இல்லை.

"எத்தனையோ மிஷனரிகள் சுவிசேஷம் அறிவிக்கப்பட்ட இடத்தில் வாளால் வெட்டப்பட்டு காடுகளில் எறியப்பட்டிருக்கிறார்கள். துண்டு துண்டாக எறியப்பட்ட அவர்கள் சரீரம் மிருகங்களுக்கு இறையாயின. சிலரின் சரீரம் அப்படியே அழுகி நாற்றமெடுத்து மண்ணோடு மண்ணாகிப் போயின. கப்பலில் பயணம் செய்தவர் கப்பலில் மூழ்கி மரித்தனர். விமானம் வெடித்து சிதறி சிலர் சாம்பலாய் காற்றில் கரைந்தனர். ஆகவே மரித்தப்பின் சரீரம் எப்படி போனாலும் பரவாயில்லை. ஆத்துமாதான் முக்கியம். அது விலையேறப்பெற்றது".

சாகும்போது மனம்திரும்பின அனுபவத்தோடு ஒருவர் மரித்தால் அவர் தன் சரீரத்தை குறித்து கவலைப்படமாட்டார். உங்கள் பாஸ்டர் அவர் ஆசையையும், குடும்பத்தினர் ஆசையையும் நிறைவேற்றியிருக்கிறார். அவர் செய்ததில் தவறேதும் இல்லை. அவர் குடும்பத்தினருக்கு இந்த சமயத்தில் வேதவசனப்படி மரணத்துக்குபின் உள்ள காரியங்களைக் குறித்து சரியான ஆலோசனை கொடுத்திருக்கவேண்டும். மரித்தவர் தவறான வசன அடிப்படையில்லாத காரியங்களை ஆசைப்பட்டால் அதையெல்லாம் உயிரோடு இருக்கும் விசுவாசிகள் குடும்பத்தினர் அவர் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பது தவறு. இதை பாஸ்டர் அந்த குடும்பத்தினருக்கு விளக்கியிருக்கவேண்டும்.


கேள்வி:  உங்களுக்கு AOG சபையின் மீது திடீரென்று இத்தனை வெறுப்பு உண்டாக காரணம் என்ன?

பதில்:  AOG சபையின் மீது எனக்கு வெறுப்பு என்று இப்போது எழுதிக்கொண்டு வருகிற விஷயத்தை வைத்து நீங்கள் தீர்மானித்துவிட்டீர்கள். அடிப்படை வேத படிப்பு இல்லாத ஆயிரக்கணக்கான சில்லறை பெந்தேகோஸ்தே சபைகளைவிட (Independent Pentecostal churches) ஓரளவு கட்டுப்பாடுள்ள ஸ்தாபன சபையும் உலகம் முழுவதிலும் குறுகிய காலத்தில் மிக அதிக எண்ணிக்கையோடு வளர்ந்துவரும் நல்ல சபையாக நான் கருதும் AOG சபையை நான் மதிக்கிறேன். அதை நான் வெறுக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்பே அதில் உள்ள பல பாஸ்டர்கள், AOG விசுவாசிகள் இவர்களுக்குள்ளே புகைந்து, கொதித்து கொண்டிருந்த சில முக்கிய விஷயங்களையும், AOG சபை தலைவர்களால் வெறுக்கப்பட்ட அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட சில சிறிய AOG சபைகளின் பாஸ்டர்கள் மனதில் உண்டான பலவிதமான ஆதங்கங்களையும், மூடிமறைக்கப்பட்ட முக்கிய விஷயங்களையும் பல AOG சபை பாஸ்டர்களும், விசுவாசிகளும் சில வருடங்களாக என்னை நிர்பந்தித்து எழுதசொல்லி அறிவித்த தகவல்களையும், அவர்களுடைய நன்மைக்காகவும் குறிப்பாக AOG சபையில் உள்ள என் வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க AOG சபையின் உள்விவகாரங்களை வெளியிட்டேன். அது அந்த நல்ல சபைக்கு நன்மையாகவும் அவர்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்கவும் நிச்சயம் உதவி செய்யும். மற்றபடி AOG சபைகள் மீதோ மற்ற எந்த பெந்தேகோஸ்தே சபைகள் மீதோ எனக்கு வெறுப்பு ஏதும் இல்லை.

ஆனால், பொதுவாக அனைத்து பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் சபையில் உள்ள விசுவாசிகள் யாவருக்குள்ளும் ஒரு பெரிய குற்ற உணர்ச்சி உண்டு. அது அவர்கள் பேசும் அந்நியபாஷை ஆகும். மாய்மாலமாக இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்நியபாஷையை இவர்கள் சபையின் அஸ்திபார உபதேசமாக வைத்துக்கொண்டிருக்கும் வரை சபைக்குள் போலி விசுவாசிகளின் எண்ணிக்கை, போலியான பாஸ்டர்களின் எண்ணிக்கை நீண்டுபோகுமே ஒழிய சபை பரிசுத்தத்திலும், வசனத்திலும் வளரவே வளராது.

போலி இருக்கும் இடத்தில் உண்மை எப்படியிருக்கும்? உண்மையில்லாவிட்டால் பரிசுத்தமும் இருக்காதே! பிசாசு எப்படியாய் வஞ்சிக்கிறான்! இந்த போலியான பாஷையால்தான் பாஸ்டர்மார்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் நம்ப முடியவில்லை. பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்போல், ஒரு பாஸ்டர் பேசும் பாஷையை - மற்றொரு பாஸ்டருக்கு அது போலி என்பது மிக நன்றாக தெரியும். இப்படி ஒருவரை ஒருவர் நம்பாமல் இந்த பெரிய சந்தேகத்தை மனதிலே வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை காலம் சபையை நடத்துவார்களோ தெரியவில்லை. ஆத்துமாவுக்கு பிரயோஜனமில்லாத அந்நியபாஷையை இன்னும் எவ்வளவு காலம் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN