அவசர ஜெபம்

கர்த்தருக்குள் அன்பானவர்களே!

பிசாசு தனக்கு கொஞ்சங்காலமாத்திரம் உண்டென்று அறிந்து மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால் உங்களுக்கு ஆபத்துவரும்..... வெளி 12:12.

மேலே எழுதப்பட்ட வசனத்தில் பிசாசு தனக்கு கொஞ்சங்காலமாத்திரம் உண்டு என்று விளங்கிகொண்டான். ஆகவே மிகவேகமாக திட்டமிடுகிறான். தன்னுடைய முடிவான அழிவுக்குமுன் துரிதமாக செய்யவேண்டியதை அவன் பட்டியலிட்டுவிட்டான். அதனால்தான் ஆவியானவர் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது என்று எச்சரிக்கிறார். எந்த விதமான ஆபத்து அது? யாருக்கு முதலில் வரும்? என்றெல்லாம் நாம் யோசிக்கவேண்டும். பிசாசு அழிக்க நினைக்கும் பட்டியலில் முதலிடம் பெறுவது மிஷனரி ஸ்தாபனங்கள் ஆகும். வளர்ந்துவரும் மிஷனரி ஸ்தாபனங்களை அவன் குறிவைக்கிறான். பணத்தை உண்மையாக செலவழிக்கும் உண்மையான மிஷனரி ஸ்தாபனங்கள் மேலும், உண்மையாக ஊழியம் செய்து ஏராளமான ஆத்துமாக்களுக்கு இயேசுவே இரட்சகர், இயேசுவே பாவ பரிகாரி என்று அறிவித்து அதன்மூலம் மனம்திரும்பி சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும் ஆத்துமாக்களை எந்த மிஷனரி அதிகம் ஆதாயப்படுத்துகிறாரோ அவர் எந்த உண்மையுள்ள ஸ்தாபனத்தில் இணைந்து பணியாற்றுகிறாரோ அந்த ஸ்தாபனத்துக்கும் மிஷனரிகளுக்கும் ஆபத்து! ஆம். இதுவரை அவன் ஆளுகையில் பிடியில் இருந்தவர்களை பரிசுத்தரின் கரங்களில் ஒப்படைத்து அவரின் ஆளுகைக்குள் அந்த ஆத்துமாக்களைக்கொண்டு வந்துசேர்ந்து விட்டதால்தான் அவன் மிகுந்த கோபம் கொண்டுள்ளதாக ஆவியானவர் அறிவிக்கிறார். அந்த பிசாசின் கோபம் மிகுந்த அளவில் கூடிப்போனதால் உக்கிரத்தோடு செயல்பட தொடங்கிவிட்டான். ஆகவே முதலாவது மிஷனரி ஸ்தாபனங்கள்மீது அவன் பார்வை விழுந்துள்ளது. அதிலும் அந்தந்த மிஷனரி ஸ்தாபன தலைவர்களை தன் பட்டியலில் முதலாவதாக குறித்துவைத்து பலவிதமான அஸ்திரங்களை மறைமுகமாக உபயோகிக்க தொடங்கிவிட்டான்.

பரிசுத்த குலைச்சலை உண்டாக்குவது:
நாம் ஆராதிக்கும்தேவன் பரிசுத்தர் ஆனபடியால் அவரை ஆராதிக்கும் நாமும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த பரிசுத்தத்தைத்தான் சுவிசேஷத்தின் மையமாக வைத்து பிரசங்கிக்கிறோம்! அந்த பரிசுத்தத்தை மையமாகவைத்துதான் சுவிசேஷத்தையும் அறிவிக்கிறோம். அப்படி சுவிசேஷத்தை அறிவித்ததால் அந்த சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டவர்கள் விக்கிரக ஆராதனையை நிறுத்துகிறார்கள், குடியை நிறுத்துகிறார்கள், விபச்சாரத்தை நிறுத்துகிறார்கள், பொய்யை அறவே நீக்குகிறவார்கள் இன்னும் இப்படிப்பட்ட பலவிதமான பரிசுத்த செயல் மக்களை பரிசுத்தப்படுத்தப்படுத்தி பரிசுத்தமுள்ள இயேசுவை போல் நம்மை மாற்றுகிறது. பரிசுத்தத்தை பிசாசுக்கு அறவே பிடிக்காது. அந்த பரிசுத்தத்தை கைக்கொண்டு செயல்படும் எல்லா மிஷனரி ஊழியர்களையம் மிஷனரி ஸ்தாபன தலைவர்களையும் முதலில் பாவத்தில் விழதள்ளி உலகத்திலுள்ள யாரும் பரிசுத்தமாக யாரும் வாழவேமுடியாது என்று உலகத்துக்கு காட்டுவது பிசாசின் திட்டம். அதன் முதல் கட்டமாக மிஷனரி ஸ்தாபன தலைவர்களை அவன் பிடிக்க திட்டமிட்டு அதன்படி இப்போது ஒவ்வொருவராக மிஷனரி ஸ்தாபன தலைவர்கள் பாவத்தில் விழுந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் சிலருடைய பாவவிழுகை வெளிப்படையாக தெரிந்தது. கிறிஸ்தவ உலகில் இடிவிழுந்துபோல் பெரிய பெரிய மிஷனரி தலைவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தார்கள். இதில் ஒருவர் மட்டும் மனம்திரும்பி வெளியரங்கமாக தன் பாவவிழுகையை உலகக்கு அறிக்கையிட்டு மீண்டும் கர்த்தரின் பணியை மிக வல்லமையாக செய்து முடித்தார். பிசாசு வெட்கப்பட்டுபோனான். அதோடு பிசாசு சோர்ந்துபோனான் விசுவாசிகள் விழுந்தாலும் எழுந்திருப்பார்கள் என்பதை அதன்மூலம் உலகம் அறிந்தது. அது பிசாசுக்கு பெரும்தோல்வியாக மாறியது. அதனால் இப்போது பிசாசு முன்பைவிட அதிக கோபமானான். மீண்டும் மிஷனரி தலைவர்களை குறிவைத்தான். ஆசியாவில் குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய மிஷனரி ஸ்தாபன தலைவர் ஒருவர்மேல் கண்வைத்தான். லகுவாக அவரும் விபச்சார பாவத்தில் விழுந்துப்போனார். காதும்காதும் வைத்ததுபோல் இந்த விழுகையைக்குறித்து யாரும் அறியாது மிஷனரி தலைவர்கள் அவர் செயலை மறைக்க முயன்று ஸ்தாபனத்தில் மறைமுகமாக தலைமையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். எப்படித்தான் மறைத்தாலும் இரகசியம் கசிய ஆரம்பித்து தீ போல பரவ ஆரம்பித்துவிட்டது. எந்த மிஷனரிஸ்தாபனத்தை ஜெபத்தை மையமாகக்கொண்டு செயல்படுகிறது என்று உலகமே வியக்கத்தக்க விதத்தில் பேசப்பட்டதோ அந்த மிஷனரி ஸ்தாபனத்தின் மீது கையை வைத்துவிட்டான். என் உள்ளம் மிகவும் நெருங்கிப்போனது. தனிமையில் அழுதேன். ஜெபித்தேன். எப்படி மூடிமறைத்தாலும் மிஷனரி தலைமை ஏன் மாற்றப்பட்டது என்று விசுவாசிகள் கேட்டால் எப்படி பதில் கூறப்போகிறார்களோ! ஆவியானவர் உதவி செய்வாராக. பல இடங்களில் ஜெபகுழுக்கள் மிஷனரி தலைவருக்காக அழ தொடங்கி விட்டனர். யாரும் எதிர்பாராத அதிர்ச்சி செய்தியாகும்.

இனி நாம் என்ன செய்யவேண்டும்?: பிசாசு மிகுந்த கோபம் கொண்டபடியாலும், தனக்கு கொஞ்சங்கால அவகாசத்தில் மிகவேகத்தோடு செயல்பட தொடங்கிவிட்டான் என்று ஆவியானவர் கூறுகிறார். ஆகவே பதிலுக்கு நாம் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று அதே ஆவியானவர் 2பேதுரு 1:5ல் ஆலோசனையாக கட்டளையிட்டுள்ளார். பிசாசின் கோபத்தின் அளவு மிகுந்தகோபம் என்ற வார்த்தையை உபயோகித்து வேதம் வர்ணிக்கிறது. ஆகவேதான் நாம் அதிக ஜாக்கிரதையாக செயல்படவேண்டும். மிகுந்த-அதிக எதில் அதிக ஜாக்கிரதை வேண்டும் என்று 2 பேதுரு 1:4ல் இச்சையினால் உலகத்தில் உண்டான கேட்டுக்கு தப்பவேண்டும் என்கிறார். மிஷனரி தலைவர்களை விழவைத்தால் மிஷனரி ஸ்தாபனம் செயல்படுவது நின்றுபோகும் என்பது பிசாசின் கணக்கு. ஆகவேதான் தொடர்ந்து மிஷனரி தலைவர்கள் பாவத்தில் விழுந்துப்போனதை கேள்விப்படுகிறோம். ஆனால் பிசாசு எதிர்ப்பார்த்ததைப்போல் மிஷனரி ஸ்தாபனத்தின் செயல்பாடு நிற்கவில்லை, முடங்கவில்லை, அந்த குறிப்பிட்ட நல்ல மிஷனரி ஸ்தாபனத்தின் மற்ற தலைவர்கள், மிஷனரிகள் யாரும் சோர்ந்து போகவில்லை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆகான் கண்டுபிடிக்கப்பட்டபின் பாளையம் எங்கும் சமாதானம்!

அன்பானவர்களே! இதையே அடிப்படையாக கொண்டு நாம் ஆராதிக்கும் சபை குருமார்களை, பிஷப்மார்களை, பரிசுத்தஆவியைப்பற்றியே போலியாக பேசிக்கொண்டிருக்கும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்களை, பெந்தேகோஸ்தே விசுவாசிகளை விபச்சார பாவத்தில் விழவைத்து கொண்டிருக்கிறான். அப்படி விபச்சாரத்தில் விழுந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மாரில் பலர் இன்று ஜெயிலில் இருக்கிறார்கள். பல குருமார்கள் போலீசில் அகப்பட்டுள்ளனர். கேரளாவில் மார்தோமா சபையின் மற்றொரு பிஷப் ஜெயிலில் போக இருக்கிறார். நீதிமன்றம் விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த செய்திகள் யாவும் மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கையின் பிரயாணத்தை ஆரம்பித்திருக்கும் இளம்வாலிபசந்ததியை பாதித்துக் கொண்டிருக்கிறது. சபை விசுவாசிகளை ஆவியில் வளரவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. ஜாக்கிரதை! பிசாசு தனக்கு கொஞ்சங்காலம்மட்டுமே உண்டு என்று அறிந்துக்கொண்டான். ஆகவே தன் முழுவேகத்துடன் பரிசுத்த குலைச்சலை சபைக்குள் உண்டாக்க ஆரம்பித்துவிட்டான்.

ஆபத்து: ஆபத்து வரும் என்று பரிசுத்த ஆவியானவர் எச்சரிக்கிறார். ஊழியர்கள், பிஷப்மார்கள், பாஸ்டர்மார்கள் ஆகியவர்களின் பிள்ளைகளை தொட ஆரம்பித்துவிட்டான், விசுவாசிகளின் பிள்ளைகளையும் பிசாசு தொட ஆரம்பித்துவிட்டான். மிஷனரி ஸ்தாபன தலைவர்களின் பிள்ளைகள் பாவத்தில் பிள்ளைகள் பாவத்தில் விழுந்தால் அது மிஷனரி ஊழியத்தை பாதிக்கும், ஊழியர்களையும் பாதிக்கும். பிள்ளைகள் பாவத்தில் விழுந்தால் பிஷப்மார், குருமார், பாஸ்டர்கள் சாட்சி கெடும். அதிக ஜாக்கிரதை வேண்டும் என்று ஆவியானவர் வசனத்தின் வழியாக எச்சரிக்கிறார். நம் வாலிபபிள்ளைகள் குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்காமல், இரவுநேரம் கழித்து தாமதித்துவரும் பிள்ளைகளை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால், பிறகு அவர்கள் இரவு நேரங்களில் வெளியில் நண்பர்களுடன் தவறான ஜீவியத்தில் இறங்கி அந்த பிள்ளைகள் வெளியிலேயே குடியிருக்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள். அது ஊழியத்துக்கு தடையாக மாறும், ஊழியர்களுக்கு அவமானமும், சபை மக்களுக்குமுன் சாட்சியும் இழக்கநேரும். பெரும்பாலான ஊழியர்களின் பிள்ளைகள் சாட்சிகெட்டுப் போனதால் ஊழியர்கள் பலர் மிகுந்த மனவேதனையுடன் இருக்கிறார்கள். மிஷனரி ஸ்தாபன தலைவர்களும் தங்கள் பிள்ளைகளின் சாட்சிகெட்ட ஜீவியத்தால் தலைகுனிந்து ஜீவிக்கிறார்கள். இது கர்த்தருக்கும் கிறிஸ்தவ சமுதாயத்துக்கும் பெரும்வேதனையை உண்டாக்கும் செயலாகும். ஸ்தாபன தலைவர்களுக்கு பிள்ளைகளை கவனிக்க நேரமில்லை. அதனால் ஏற்பட்ட பாதிப்பாகும். ஆகவே நாம் யாவரும் சேர்ந்து மிஷனரி ஸ்தாபன தலைவர்கள், மிஷனரிகள், சபை பாஸ்டர்கள், குருமார்கள், பிஷப்மார்கள், விசுவாசிகள் இவர்கள் யாரும் பிசாசின் திட்டத்தில் அகப்பட்டு பரிசுத்தத்தை இழந்துவிடாதபடி ஜெபிப்போம்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM