ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது PRAISE THE LORD, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று கூறலாமா?

கடந்த பிப்ரவரி 2011 ஜாமக்காரனில் இந்தக் கேள்வியை ஜாமக்காரன் வாசகர்களிடமே கேட்டிருந்தேன். இத்தனை காலம் என்னிடம் கேள்வி கேட்ட என் வாசகர்களுக்கு நான் அவர்களையே கேட்டது பரஸ்பரம் உரிமை பாராட்டும் நல்ல உறவாக கருதினர்கள். ஏராளமானவர்கள் கடிதத்தின் மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும், தொலைப்பேசியிலும் பதில் அளித்தார்கள்.

  பெரும்பாலனவர்கள் கூறியது, இந்த கேள்வி பல காலமாக எங்கள் உள்ளத்தில் எழுந்தது. உங்கள் மூலமாக அது வெளிகொண்டுவரப்பட்டது. ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஏன்? பிரைஸ் தி லார்ட் பிரதர் - பிரைஸ் தி லார்ட் சிஸ்டர் என்று கூறவேண்டும். அதில் அர்த்தம் உள்ளதா?

  சிலர் ஐயப்பன் கோவிலுக்கு மாலைபோட்டு மலைக்குபோக ஆயத்தப்பட்ட உடனே சின்ன பையனாக இருந்தாலும், வேலைக்காரனாக இருந்தாலும் அவனை பெயர் சொல்லி அழைக்காமல் - சாமி அதை எடு, சாமி இதை எடு! சாமி டீ வாங்கி கொண்டு வா என்று கட்டளையிடுகிறதை பார்க்கிறோம். பஸ்ஸில் கருப்பு உடையோடு மாலை அணிந்தவர் ஏறும்போது கண்டக்டர் அவரைப் பார்த்து சாமி இடம் இல்லை. அடுத்த வண்டியில் ஏறுங்கள் என்கிறார். இப்படி புறமதத்தினர்களே அப்படிப்பட்ட சீஸனில் ஒருவர் மற்றவரைப்பார்த்து சாமி என்று அழைக்கும்போது ஏன் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது வேறு வார்த்தைகளை பேசுவதைவிட கர்த்தரை துதிக்கும் வண்ணமாக பிரைஸ் தி லார்ட் என்று கூறக்கூடாது? வணக்கம் கூறுவதற்கு பதிலாக அல்லது தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க பிரைஸ் தி லார்ட் (Praise the Lord)என்று கூறுவது சிறப்பானது அல்லவா என்று எழுதியுள்ளனர். இப்படி கூறுவது தவறல்ல என்று எனக்கு எழுதியவர்கள்தான் மிக அதிகம்.

  ஒருவரையொருவர் சந்திக்கும்போது ஆண்டவரின் மகிமைக்காக பிரைஸ் தி லார்ட் (Praise the Lord) என்கிறோம். அதன்பின் பேசப்படும் நம் வார்த்தைகள் நம் செய்கைகள், நம் சாட்சிகள் தேவனை மகிமைப்படுத்துகிறதாக இருக்கிறதா? பிரைஸ் தி லார்ட் (Praise the Lord) என்று கூறும் அந்த ஒரு வார்த்தைக்கு பிறகுள்ள நம் வாழ்க்கையும் செயல்களும்தான் தேவனை மகிமைப்படுத்துமே தவிர, அந்த குறிப்பிட்ட வார்த்தையினால்மட்டும் நாம் தேவனை பிரியப்படுத்தமுடியாது. அந்த ஒரு வார்த்தை கூறுவதால் நம் தேவன் நம்மை மெச்சிக்கொள்ளமாட்டார். வழக்கமாய்போன இந்த பழக்கம் சமீப காலமாகத்தான் மிகைப்படுத்தப்பட்டுள்ளன.

  ஒரு விசுவாசி - மற்றொரு விசுவாசியை அவர் மனம்திரும்பின அனுபவமுள்ளவர், இரட்சிக்கப்பட்ட நம் கூட்டத்தை சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டுக்கொள்ள ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் பிரைஸ் தி லார்ட் (Praise the Lord) என்று கூறும் வழக்கம். இது நாளாக நாளாக எல்லா கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் காணும்போதும் பேசப்படுவதாகிப்போனது. ஆனால் இதில் அர்த்தம் உண்டா? என்று யோசித்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கே விளங்கும். இப்படி கூறுவதில் என்ன தவறு? என்று வாதிப்பதில் பிரயோஜமில்லை! இப்படி கூறுவது பொருத்தமானதுதானா என்று யோசித்துப்பாருங்கள்.

  சிலர் கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன், அவர் புகழ் எப்போதும் என் வாயிலிருக்கும் என்று சங்கீத புத்தக வசனத்தை சுட்டிக்காட்டுவார்கள். இதை தவறு என்று யாரும் கூறமாட்டார்கள். ஆனால் கேள்வி என்ன? ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பிரைஸ் தி லார்ட் (Praise the Lord) என்று ஏன் கூறவேண்டும்?.

  அதற்கு சரியான பதில் சொல்லமுடியாமல் கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்தரி என்று எழுதப்பட்டதால் ஒருவரை பார்த்து அப்படி கூறவேண்டுமா? நாம் நடக்கும்போதும், பிரயாணம் செய்யும் போதும், எல்லா நேரமும், நினைக்கும்போதெல்லாம் கர்த்தரை துதிக்கலாமே! அதைத்தானே சங்கீதக்காரன் கூறுகிறான். அதற்காக ஒருவரைப் பார்த்தால் - உடனே பிரைஸ் தி லார்ட் (Praise the Lord) என்று கூறவேண்டுமா? நீங்கள் துதிப்பது கர்த்தரையா அல்லது உங்கள்முன் நிற்கும் ஆளையா?.

  ஒருவரை பார்க்கும்போது பிரைஸ் தி லார்ட் என்றால் உங்களை சந்தித்ததினால் கர்த்தருக்கு நன்றி. கர்த்தரை துதிக்கிறேன் என்பதுதான் அதன் பொருள் என்று சிலர் எழுதியுள்ளார்கள். இதை எந்த டிக்ஷனரியிலிருந்து எடுத்தார்களோ தெரியவில்லை! இவர்கள் குறிப்பிட்ட அர்த்தம் முன்னால் நிற்பவருக்கு தெரியுமா? தயவுசெய்து அர்த்தத்தைப் புரிந்து கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.

  ஒருவர் மிக நன்றாக எழுதியுள்ளார். ஒருவரை ஒருவர் பார்க்கும்போது பிரைஸ் தி லார்ட் என்று கூறுவது அபத்தம்! ஒருவரை பார்த்து கர்த்தரை துதி என்று கட்டளையிடுகிற அர்த்தம் இதில் வருகிறது. அப்படியானால் நான் கர்த்தரை துதியாமல் இருக்கிறேனா? என்னைப் பார்த்து ஏன் கர்த்தரை துதி என்கிறாய்? என்று அவர் கோபப்படவும் வாய்ப்பு உண்டு! என்று எழுதியுள்ளார். மேலும் அவர் ஒருவரை ஒருவர் வாழ்த்துவதற்கு எவ்வளவோ வார்த்தைகள் உண்டு. அதை பயன்படுத்தலாமே என்றும் எழுதியுள்ளார்.  - அருளமுது - ஆசிரியர் (ஈரோடு).

  இன்னொரு வாசகர் எழுதுகிறார். ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது பிரைஸ் தி லார்ட் என்று கூறுவது: ஐயப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது சாமியே சரணம் என்று கூறுவதுபோல் இருக்கிறது என்கிறார். - திருவள்ளுர்.

(இவர் கூறுவதிலும் அர்த்தம் இருக்கிறதே!). இப்படி தங்கள் அபிப்ராயங்களை எனக்கு எழுதிய வாசகர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

  பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஷாலோம் என்பார்கள். சமாதானம் என்று அதற்கு அர்த்தமாகும். உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக என்று வாழ்த்துவதை வழக்கமாக கொண்டார்கள். இயேசுகிறிஸ்துவும் நீங்கள் ஒரு வீட்டுக்குபோகும்போது அந்த வீட்டுக்கு சமாதானம் கூறுங்கள் என்று கூறினார். பழைய ஏற்பாட்டு மக்களின் அந்த அனுபவத்தை இயேசுகிறிஸ்து இங்கு பிரதிபலிக்கிறார்.

  கிறிஸ்து மரித்து, உயிர்த்தெழுந்து, பரமேறியபின் புதிய ஏற்பாட்டு சபை உருவானது. அப்போது சபை மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது மாரநாதா என்றார்கள். மாரநாதா என்றால் இயேசு வருகிறார் என்று அர்த்தம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை சீஷர்கள் காலத்திலேயே சபை மக்கள் எதிர்ப்பார்த்தார்கள். மேலும் ஒவ்வொரு நிமிடமும் அதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள ஞாபகப்படுத்தும் பொருட்டு மாரநாதா என்று கூறிக்கொண்டார்கள்.

  இப்போது வாழ்கிற நாம் கர்த்தரை எப்போதும் எக்காலத்தும் எந்த நேரமும் துதிப்போம். ஆனால் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது பிரைஸ் தி லார்ட் (Praise the Lord) என்று கூறுவது அர்த்தமற்றது. அது பொருத்தமற்றதுமாகும். அதற்கு பதில் அவரவர் கலாச்சாரத்தில் ஒருவரை ஒருவர் வாழ்த்த அல்லது மரியாதை செலுத்த என்ன வார்த்தைகளை உபயோகிப்பீர்களோ அதை அர்த்தத்துடன் உபயோகியுங்கள். பிரைஸ் தி லார்ட் என்றுதான் நாங்கள் கூறுவோம் என்றால் தாராளமாக கூறுங்கள், கர்த்தரை துதிப்பது பாவமல்ல. ஆனால் அந்த குறிப்பிட்ட சூழ்நிலைக்கு அது பொருத்தமான வார்த்தை அல்ல என்று கூறுகிறேன்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM