கர்த்தருக்குள் அன்பானவர்களே,
உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல் கூறிக்கொள்கிறேன்.
கடந்த மாதத்தில்
தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது. ஒரு கட்சி புதிய ஆட்சியை அமைத்தது. அவர்களுக்கு
ஜாமக்காரன் சார்பில் என்னுடைய வாழ்த்துதல் கூறிக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டை ஆள
எந்த கட்சியினர் பொறுப்பெடுத்தாலும் ஆளுகின்றவர்களுக்காக ஜெபிக்கும்படி நம் வேதம் கட்டளை இடுகிறது. 1 தீமோ 2:1-5. ஒருவேளை உங்களுக்கு இஷ்டமில்லாத கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது நம் கடமை. காரணம்,
அதிகாரங்கள் எல்லாம் தேவனால் அனுமதிக்கப்படுவது ஆகும்.
கர்த்தருக்கு தெரியாமல் எந்த ஆட்சியும் வருவதில்லை. ரோ 13:1-5, தீத்து முதல் அதிகாரம் வாசித்துப்பாருங்கள்.
இந்த
ஜுன் மாதத்தில் புதிய வகுப்பு அல்லது புதிய பள்ளி - கல்லூரிக்கு நம் பிள்ளைகள் பிரவேசித்துள்ளார்கள். பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் மிகவும் ஜெபிக்கவேண்டியது அவசியமாகிறது. பள்ளிக்கூடத்திலும் - கல்லூரியிலும் நல்ல நண்பர்கள் நம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும். கெட்ட நண்பர்களின் தொடர்பினால் நம் பிள்ளைகள் கெட்டு சீரழிந்து போகிறார்கள். பெற்றோருக்கு கீழ்ப்படிவதில்லை, ஹாஸ்டலில் படிக்கும் பிள்ளைகளின் நிலையும் மிக மோசமாக போய்கொண்டிருப்பதை பல சம்பவங்கள் மூலமாய் நாம் அறிகிறோமே. அநேக பிள்ளைகளின் ஒழுக்கங்களைப்பற்றி பெற்றோர் கவலைப்படுவதில்லை. அவர்கள் யாரோடு பழகுகிறார்கள். அவர்கள் நண்பர்கள் அல்லது சிநேகிதிகள் யார்? என்பதைக்குறித்து பெற்றோர் விசாரிப்பது இல்லை - அதனால் கட்டுபாடு இல்லாத நிலையில் பிள்ளைகள் கெட்டுப்போகிறார்கள். கடந்த வாரம் ஒரே மகனை பெற்றெடுத்த பெற்றோர் தொலைப்பேசியில் தன் மகனுக்காக ஜெபிக்ககூறி கண்ணீர் விட்டார்கள். பாலிடெக்னிக் படிக்கும் அந்த பையன் இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவதில்லை. விடியற்காலை நேரத்தில் வீட்டுக்கு வருகிறான் என்பதுதான் அவனைப்பற்றிய குற்றச்சாட்டு. அவன் ஏதோ தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறான் என்பது புரிகிறது. ஆனால் என்ன மாதிரி தவறு செய்கிறான் என்பது தெரியவில்லை! என்றார்கள். அவனை மனநல
ஆலோசகரிடம்
(Psychologist) அழைத்து சென்று ஆலோசனை வழங்கலாமே என்றேன். அவன் எங்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டான். அவன் கையில் நான்கு விலையுர்ந்த
மொபைல் வைத்து இருக்கிறான். அதை நாங்கள் வாங்கி கொடுக்கவில்லை. அது எப்படி அவனுக்கு கிடைத்தது என்றே தெரியவில்லை. அடிக்கடி யார் யாரோ அவனிடம் பேசுகிறார்கள். என்ன இது என்றால், பெற்றோராகிய எங்களை மிரட்டுகிறான். எங்களுக்கு பயமாக இருக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றார்கள். போலீஸில் உங்களுக்கு பழக்கம் உள்ளவர் யாராவது தெரியுமானால் மகனைக்குறித்து விசாரிக்க ஏற்பாடு செய்து உதவுங்கள். போலீஸ் இந்த விஷயத்தில் உதவுவார்களா? என்று தொலைபேசியில் அழுதுக்கொண்டே கூறினார்கள்.
நான் கூறினேன்.
என் தாய் என்னை எப்படி வளர்த்தினார்கள் என்று என் சாட்சியில் போகுமிடமெல்லாம் பிரசங்கத்தில் கூறியிருக்கிறேன். லேட்டாக வீட்டுக்கு வந்தால் என்னை வீட்டில் சேர்க்கமாட்டார்கள். பல ராத்திரி என்னை வீட்டுக்கு வெளியே நாய் படுத்திருக்கும் இடத்தில் படுக்க வைத்தார்கள். ஒரே மகன் என்று எனக்கு செல்லம் கொடுக்கவில்லை. அப்படி ஆரம்பத்திலேயே பிள்ளைகளை கட்டுப்பாட்டுடன் வளர்த்தியிருந்தால் அந்த பையனுக்கு இந்த நிலை வந்திருக்காது. நான் ஒரு போலீஸ் அதிகாரியிடம் பையனின் விவரத்தைக்கூறி விசாரிக்க ஆலோசனை கூறினேன். அதன்பிறகு அந்த பையனைப்பற்றி விவரம் இன்னும் நான் அறியவில்லை.
ஏன் இதை வாசகர்களாகிய உங்களுக்கு கூறினேன் என்றால் நம் பிள்ளைகளை ஆரம்பத்திலேயே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் - கட்டுப்பாடு விட்டுப்போனால் பிறகு அவர்களை சரிப்படுத்துவது மிகக்கடினம். ஆண்களுக்கு சமமாக இப்போது பெண் பிள்ளைகளும் பெற்றோருக்கு கீழ்ப்படிவதில்லை. சுதந்திரத்துக்கும் - பாசத்துக்;கும் எல்லை அவசியம். ஆரம்ப நிலையிலேயே பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்துக்கொள்ளுங்கள்.
வேதவசனம் கூறுகிறது.
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான். நீதி 13:24.
பிள்ளையானவன் நடத்த வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதி 22:6
பிள்ளைகளை இந்தியாவில் விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் பெற்றோர்களுக்கு ஆலோசனை: நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக மிகமிக பாரத்தோடும், உபவாசத்தோடும் ஜெபித்து பிள்ளைகளை கர்த்தரிடம் ஒப்படைத்து அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபித்துக்கொண்டேயிருக்கவேண்டும். அதோடு பிள்ளைகளின் செலவுக்கு தேவைக்குமேல் பணம் அவர்களிடம் கொடுக்காதீர்கள். இது மிக முக்கியம். குறைந்த தூர பயணத்தில் ஸ்கூல், காலேஜ் இருக்குமானால் அவர்களுக்கு மோட்டர் சைக்கிளோ - காரோ இப்போதைக்கு வாங்கி கொடுக்கவேண்டாம். பஸ்ஸில் ஏறிப்போக சொல்லுங்கள், அவர்களுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள்.
இப்படிப்பட்ட பிள்ளைகளுக்காக நானும், என் மனைவியும் தொடர்ந்து பாரத்துடன் ஜெபிப்போம்.
இம்மாதம் நமது பிள்ளைகள் புதிய வகுப்புக்கு பள்ளியிலும், கல்லூரியிலும் பிரவேசிக்கிறார்கள். அவர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் பரீட்சையில் வெற்றியடைந்ததற்காக தேவனைத் துதிக்கிறேன். வெற்றியடைந்த எல்லா பிள்ளைகளையும் பாராட்டுகிறேன். வெற்றியடையதவர்கள் அடுத்த முயற்சியில் நல்ல படித்து வெற்றியடையுங்கள். பிள்ளைகள் பாஸ் ஆனதையும் ஜெபத்துக்கு பதில் கிடைத்ததையும் அறிவித்த வாசகர்கள் யாவருக்கும் நன்றி. உங்களோடு துதிப்பதில் நாங்கள் இணைந்துக்கொள்கிறோம். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. தொடர்ந்து ஜெபிப்போம்.
|