விவாகரத்து
DIVORCE

இன்றைய நவீன உலகில் உடைந்த குடும்பங்களின் எண்ணிக்கையும், பிரிந்த குடும்பங்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகி கொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல, குடும்பங்கள் உடைவதும், பிரிந்து கிடப்பதும் சபையும், சமுதாயத்தையும், நாட்டையுமே பாதிக்கும்.

  குடும்பத்தில் உண்டாகும் பிரிவினையின் பாதிப்பு சபையையும், நாட்டிலும் பிரதிபலிக்கும். இது நாட்டுக்கும் ஆபத்து. முழு உலகத்துக்கும் பாதிப்பை உண்டாக்கும். இதனால் பிள்ளைகள் அனாதைகளாக்கப்படுகிறார்கள். முதியோர் இல்லங்கள் பெருக ஆரம்பித்துவிட்டன. இந்த விஷயத்தில் உலக மனித உரிமை ஸ்தாபனங்கள் இதைக்குறித்து தங்கள் தவறான மதிப்பீட்டால் திருமணமானவர்களுக்கு தவறான ஆலோசனைகளையே வழங்குகின்றன. இந்த மோசமான நிலையில் உலகமனைத்திலும் உள்ள மக்களிடையே மனித நேயம் (Human Nature) இல்லாமல் போகிறது. வெறுப்பும், பகையும், முழு உலக நாடுகளுக்குள்ளும் உண்டாக ஆரம்பித்துவிட்டன. இதன் மூலக்காரணம் உடைந்த குடும்பங்களும், பிரிந்த குடும்பங்களும்தான் காரணம் ஆகும்.

  இப்போது உலக நாடுகளில் நல்ல கலாச்சாரம் என்று அழைக்கப்படுகின்றது இந்தியா - சீனா, அரேபியா உட்பட்ட நாடுகளின் கலாச்சாரம்மட்டும்தான். இந்த கலாச்சாரத்தில்தான் கூட்டுக்குடும்பம் காணப்படுகிறது. தாய் - தந்தை, அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை என்ற பாச உணர்வு ஆகியவைகள் உண்டு. உலக நாடுகளுக்கு இது நல்ல முன்மாதிரி ஆகும். இந்த கலாச்சாரத்தில்தான் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் மனிதனாக அவதரித்து வாழ்ந்து காட்டினார் என்பது ஒரு சிறப்பு. ஆனால், இப்போது இந்த கலாச்சாரத்திலும் பாதிப்பு உண்டாகிவிட்டது. அமெரிக்க, ஐரோப்பா கலாச்சாரத்தை ஆசிய நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டன. திருமண வாழ்க்கை என்பது மற்ற நாடுகளில் ஒரு பொழுதுபோக்கு என்பது போல் ஆகிவிட்டது. ஆனால் அதை ஆசியா நாடுகளிலுமுள்ள குடும்பங்களில் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

  மேற்கத்திய நாடுகளின் சூழ்நிலையில் யாரும் யாரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. ரிட்டயர்ட் ஆன வயது முதிர்ந்தவர்களும், பள்ளி மாணவர்களும், தங்கள் குடும்பத்தினரின் உதவி இல்லாமல் வாழ அந்த கலாச்சாரத்தின் சட்டம் உதவி செய்கிறது. ஆகவே பெற்றோரை நம்பி பிள்ளைகள் அல்லது புருஷனை நம்பி மனைவியோ வாழ வேண்டியதில்லை. அவரவர்கள் சொந்த காலில் நிற்கமுடியும். இதன் காரணமாகத்தான் பலர் திருமணம் (மணவாழ்க்கை) இல்லாமல் வாழ விரும்புகிறார்கள். திருமணம் செய்யாமல் குடும்பம் அமைத்துக்கொள்ளவும், திருமணம் செய்யாமலே பிள்ளைகளை பெற்றுக்கொள்ளவும் அந்த நாடுகளின் சட்டம் அனுமதிக்கிறது. அதனால்தான் வெளிநாட்டில் அவர்கள் சர்வசாதாரணமாக திருமணமானவர்கள் புருஷனோ - மனைவியோ சட்டையை மாற்றிக்கொள்வதைபோல அடிக்கடி விவாகரத்து செய்து புருஷனையும் - மனைவியையும் மாற்றிக்கொள்கிறார்கள். இது தேவசித்தம் அல்ல!

  சமீபத்தில் மரித்த பிரபல அமெரிக்க நடிகை எலிசபெத் டெய்லர் என்பவர் 8 கணவர்களை மாற்றிக்கொண்டு வாழ்ந்தார். இது குடும்ப வாழ்க்கையல்ல - இது மிருகங்களின் வாழ்க்கை ஆகும். மிருகத்துக்கு ஒரு மனைவி - ஒரே புருஷன் என்ற ஒழுங்கு இல்லையே! வீதியில் ஒரு பெண்நாய்க்குபின் பல ஆண்நாய்கள் துரத்தி ஓடுவதுப்போல ஆகும். உலக மக்கள் எப்படியோ! ஆனால், நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை அப்படியல்லவோ! ஆகவே நீங்கள் உலகத்துக்கு ஒத்தவேஷம் தரியாமல் . . . . . (ரோமர் 12:2) என்று நம்முடைய வேதபுத்தகம் (Holy Bible) மிக கண்டிப்புடன் கட்டளையிடுகிறதே!

கிறிஸ்தவ வாழ்க்கை இஷ்டம்போல் வாழும் வாழ்கையல்ல. 2 தீமோ 2:5. மல்யுத்தம் செய்கிறவனும் சட்டத்தின்படி செய்யாவிட்டால் அவனுக்கு பரிசு இல்லை. சாதாரண குஸ்திக்கே சட்டதிட்டம் இருக்கும்போது மணவாட்டி சபைக்கு சட்டம் உண்டு, ஒழுங்கு உண்டு. கிறிஸ்தவ சபையும் அவரவர் இஷ்டம்போல் நடத்துவதுமல்ல. வேதவசனம் என்ன சொல்கிறதோ அதன்படி வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.

  இந்த விவாகரத்தைக்குறித்து நான் பிரசங்கிக்கும் எல்லா சபை கன்வென்ஷன்களிலும் தவறாமல் கூறுவேன். அப்படி நான் பிரசங்கிப்பது விவாகரத்து செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்மேல் வெறுப்பை உண்டாக்கியது. அந்த விஷயத்தைக்குறித்து நான் பிரசங்கிப்பதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் என் ஜாமக்காரன் வாசகர்களாக இருந்து, பலவருடம் என் ஊழியத்தை காணிக்கைகளினால் தாங்கியவர்கள். ஆனால் நான் விவாகரத்தைப்பற்றி பிரசங்கம் செய்தவுடன் எனக்கு காணிக்கை அனுப்புவதை நிறுத்திவிட்டனர். என்னுடன் அடிக்கடி கடிதம் எழுதும் தொடர்பையும் நிறுத்திக்கொண்டனர். பல வருடங்களுக்குமுன் ஒரு குறிப்பிட்ட பிஷப் அவர்களின் குடும்பத்தில் அவர் மகன் விவாகரத்து செய்துகொண்டார். நான் விவாகரத்தைக்குறித்து பிரசங்கம் செய்தபோது பிஷப் அவர்களின் மனதில் அது பாதிப்பை ஏற்படுத்த, அதன் காரணமாக அவர் என்னை வெறுத்தார், அவர் தன்னுடைய டையோசிஸ்ஸில், எழுதப்படாத சட்டமாக, குருவானவர்களிடம் வாய்மொழியாக கூறி என்னை கன்வென்ஷனுக்கு அழைப்பதை தடை செய்தார். குறிப்பிட்ட அந்த பிஷப் ரிட்டயர்ட் ஆன பிறகுதான் மறுபடியும் அந்த டையோசிஸ்ஸில் நான் உபயோகப்படுத்தப்பட்டேன். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் விவாகரத்து இன்றைய கிறிஸ்தவ உலகில் புறையோடி போய்விட்ட சங்கதியாகிவிட்டது. குருவானவர்களும், பிஷப்மாரும், சபை கமிட்டியும் இதைக்குறித்து பிரசங்கம் கேட்க விரும்புவதில்லை. இதைக்குறித்து பிரசங்கிப்பவரையும் விரும்புவதில்லை. காரணம் விவாகரத்து செய்தவர்கள் இப்படிப்பட்டவர்கள் சபையில் நிறையபேர் உண்டு. பிஷப் முதல் குருமார், சபை பொறுப்பாளர், சபை விசுவாசிகள் ஆகியவர்களின் குடும்பத்தில் நிறைய பேர்கள் விவாகரத்து செய்து வாழாவெட்டிகளாக வாழ்கிறார்கள். இதை பாவம் என்றே இவர்கள் சிந்திப்பதில்லை. ஆகவேதான் இதை முதலில் இந்த மாத ஜாமக்காரனில் கட்டுரையாக எழுதி வெளியிட்டு அதன்பின் இதை கர்த்தருக்கு சித்தமானால் சிறு புத்தகமாக வெளியிடயோசித்துள்ளேன்.

  விவாகரத்தைக்குறித்து கிறிஸ்தவரல்லாதவரும், மனநல ஆலோசகருமான Dr.ந.ஆறுமுகம், DSM, ND அவர்கள் எழுதிய கட்டுரையை தெரிந்தெடுத்து இங்கு சமர்ப்பிக்கிறேன். முதலில் இதை வாசியுங்கள். இதன் தொடர்ச்சியாக நம் கிறிஸ்தவ வேதம் விவாகரத்தைக்குறித்து என்ன கட்டளையிடுகிறது? என்ன போதிக்கிறது என்பதைக்குறித்து நான் எழுதியதையும் தொடர்ந்து வாசித்து ஜெபியுங்கள். இனி திருச்சபையாக, ஓர் உண்மை கிறிஸ்தவனாக இப்படிப்பட்ட பிரச்சனைக்கு என்ன தீர்வு காணலாம் என்பதை சிந்தித்து உங்கள் அபிப்ராயங்களை எனக்கு எழுதுங்கள்.


விவாகரத்து சில யோசனைகள்
(டாக்டர். ந.ஆறுமுகம், DSM,ND)

திருமண முறிவுக்காக (விவாகரத்து) குடும்ப நல நீதிமன்றங்களில் முறையீடு செய்வோர் அண்மைக் காலங்களில் அதிகமாகி வருகின்றனர். இதில் வியப்பு என்னவென்றால், பெற்றோர் பார்த்து முடித்துவைத்த திருமணத் தம்பதிகளைவிட காதலித்து மணமுடித்த தம்பதிகள்தான் மணமுறிவுக்காக குடும்ப நல நீதிமன்றங்களை அதிக அளவில் நாடுகிறார்கள்!.

  50 ஆண்டுகளுக்கு முன்னர் நெருங்கிய உறவினர்களுக்குள்ளே அல்லது ஒரே ஊரில் உள்ளவர்களுக்கு இடையேதான் பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்றன. இந்த வகைத் திருமணங்களில் கணவன் - மனைவிக்குள்ளே கட்டுப்பாடுகளும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் மனப்பக்குவமும், நாம் ஒற்றுமையாக இல்லையெனில், உறவினர்கள் நம்மை கேவலமாக நினைப்பார்களே என்ற அச்சமும் கூட்டுக்குடும்பங்களுக்கு இடையே வழிவழியாக வந்த பண்பாடும் காரணமாகத் திகழ்ந்தன. அக்கா மகள் - அத்தை மகள் - மாமன் மகள் - அத்தை மகன் என மிக நெருக்கமான உறவினர்களுக்குள்ளேயே திருமணம் முடித்தார்கள்.

  அறிவியல் ரீதியாகவும், விஞ்ஞானமுறையிலும் இப்படி மிக நெருங்கிய உறவுகளின் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு (வலிப்பு) இழுப்பு நோய் (Fits), உடல் ஊனம், மூளைக் காய்ச்சல், மூளை வளர்ச்சியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

  இந்த உண்மைகளை இரண்டு தலைமுறைகளுக்குமுன் வாழ்ந்தவர்கள் நன்றாக உணருவார்கள். நாளடைவில் இந்த நிலைகள் மாறின. தூரத்து உறவினர்கள், ஊர் விட்டு ஊர், சாதி விட்டு வேறுசாதி, மதம்மாறிக் காதலித்து மணம் புரிந்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

  இந்த மாற்றம் நல்லதுதான். உலகில் மாறாதது மாற்றம் ஒன்றுதான் என்று கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளது குடும்பத்துக்கும் பொருந்தும்.

  நாட்டில் நடைபெறும் கலப்புத்திருமணங்களால் சாதிகள் காரணமாக ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் மெல்ல மெல்ல மறைந்து மக்களிடையே சமத்துவ உணர்வு மேலோங்கி வருகிறது. இது ஒரு சிறந்த சமுதாய மாற்றம்தான்! இந்த மாற்றங்களால் காதலித்துக் கலப்புமணம் புரிந்துக்கொண்ட தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகள் அறிவுள்ளவர்களாவும், புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும், சாதனை புரிபவர்களாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

  திருமணம் முடிந்து பல ஆண்டுகள் கழித்து இரண்டு மூன்று குழந்தைகள் பெற்ற பிறகும்கூட, மணமுறிவுக்கு (விவாகரத்துக்கு) மனு செய்கிறார்களே, ஏன்? ஒருவருக்கு ஒருவர் பார்த்துப்பேசி, பழகி, ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு, குழந்தைகள் பெற்று அவர்கள் நன்றாக வளர்ந்த பிறகும்கூட மணமுறிவை (விவாகரத்தை) ஏன் விரும்புகிறார்கள்?

  மேலும், படித்து பட்டம் பெற்றவர்கள், நல்ல பணிகளில் உள்ளவர்கள், பல துறைகளில் புகழ் பெற்றவர்கள்கூட மணமுறிவு முடிவு எடுப்பது ஏன்?

இந்த வகையில் படித்தவர்களைவிட படிக்காதவர்கள் எவ்வளவோ மேல்! காரணம், கூட்டுக் குடும்பம், குடும்பச் சூழ்நிலை, கணவன் சம்பாதித்து - மனைவி குடும்பத்தலைவியாக இருப்பது, தனியாகப் பிரிந்துவிட்டால் தனித்து வாழமுடியுமா என்ற பயம். தாம்பெற்ற பிள்ளைகள் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம்! . . . இவை எல்லாவற்றையும்விட, தம்பதிகளுக்கு இடையே ஈகோ கிடையாது. இதுதான் முற்றிலும் உண்மை. திருமண முறிவுக்காக குடும்பநல நீதிமன்றங்களை நாடும் தம்பதிகள் அனைவரும் கீழ் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை நினைவில்கொண்டு, நன்றாக மனம்விட்டுப்பேசி, இருவரும் ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்!

  கணவனும், மனைவியும் அடுத்தவர்களின் குடும்ப உறவினர்களைச் சமமாக நடத்துங்கள்.

  பெண்களே! உங்கள் மாமனார், மாமியாரை தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் தவிர, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாதீர்கள்.

  ஆண்களே! உங்கள் மாமியாரோ, மாமனாரோ - அவர்களை ஆதரிக்க அவர்கள் குடும்பத்தில் எவரும் இல்லையெனில் அவர்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களாக நினைத்து ஆதரித்து அன்புக்காட்டுங்கள்.

  மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே! என்று மருமகள் நினைத்து, மாமியாரைத் தன் தாயாக மதிக்கவேண்டும்.

  மருமகளும் ஒரு வீட்டு மாமியாரே! என்று நினைத்து, மாமியார் மருமகளைத் தன் மகளாக நினைத்துப் போற்றவேண்டும்.

  எந்த பிரச்சனைகளிலும் கணவன் - மனைவி இருவரும் ஒரே சமயத்தில் கோபப்படாதீர்கள்! ஒருவர் கோபம் கொண்டால், மற்றவர் சிறிதுநேரம் அக்கோபம் குறையும்வரை பொறுமையாக இருங்கள்.

  வாக்குவாதம் ஏற்படும் பிரச்சனைகளில் ஒருவரை ஒருவர் ஜெயிக்கவேண்டும் என்று நினைக்காமல், யாராவது ஒருவர் விட்டுக்கொடுங்கள்.

  விட்டுக்கொடுப்பவர்கள் ஒருநாளும் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.

  ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்வதை அன்புடன் செய்யுங்கள்.

  ஒருவருக்கொருவர் மற்றவரது கடந்த காலத் தவறுகளை ஒருபோதும் சுட்டிக்காட்டாதீர்கள். குத்திப்பேசாதீர்கள். மனம் நோகும்படி கேலி செய்யாதீர்கள்!

  மற்றவர்கள் பார்த்து மெச்சவேண்டும் என்று வாழ்க்கை நடத்தாதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே! என்று நினைத்து மனைவிக்காக கணவன் - கணவனுக்காக மனைவி என நினைத்து உங்களுக்காக நீங்கள் வாழுங்கள்!

  ஏதாவது ஒரு பிரச்சனையில் முடிவெடுக்கமுடியாமல்போக நேருமானால், அந்த பிரச்சனையைத் தள்ளிப்போடுங்கள்.

  கணவன் இருக்கும் இடத்தில் நாம் இருந்தால் நாம் என்ன செய்வோம்! என்று மனைவியும், மனைவி இருக்கும் இடத்தில் நாம் இருந்தால், நாம் என்ன செய்வோம் என்று கணவனும், என இருவரும் நினைத்தால், எந்தப் பிரச்சனையும் வெயில்பட்ட பனிபோல் மறைந்துவிடும்!

  ஒரு நாளில் ஒரு முறையாவது கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர்கள் என குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். மனம்விட்டுப்பேசி, மகிழ்ச்சியுடன் சாப்பிடுங்கள்.

  தவறு செய்ய நேர்ந்தால் ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டுப்பேசி, மன்னிப்பு கேளுங்கள். இதில் வெற்றி தோல்வியே கிடையாது. குடும்பத்தில் தோற்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்! என்று நம் தமிழ் இலக்கியம் கூறுகிறது!

  குழந்தைகள் எதிரில் கணவன் - மனைவி இருவரும் சண்டை போடாதீர்கள். கோபமாகப் பேசி விவாதம் செய்யாதீர்கள்.

  குழந்தைகள் தங்களின் பெற்றோர்களைப் பார்த்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் அனைவரும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் நன்றி கூறுங்கள். பாராட்டிப் புகழ்ந்து பேசுங்கள்.

  வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை, ஒரு ஆண்டுக்கு ஒரு முறை நண்பர்கள், உறவினர்கள், சுற்றுலா இடங்கள் என குடும்பத்திலுள்ள அனைவரும் சென்று மகிழ்ச்சியோடு இருங்கள். மனங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சுற்றுலா நிச்சயம் உதவி செய்யும்.

  கணவன் இழந்த, மனைவியை இழந்த அல்லது தவிர்க்க முடியாத வெளியில் சொல்லமுடியாத காரணங்களால் விவாகரத்து பெற்று மறுமணம் செய்துகொண்டவர்கள், அவரவர்களின் கடந்தகால வாழ்க்கையைத் தலைமுழுகிவிடுங்கள். முழுமையாக மறந்து விடுங்கள். முந்தைய வாழ்க்கையைப்பற்றி எதுவும் கேட்டு மணம் புண்படும்படி செய்யாதீர்கள். இது மிகமிக முக்கியம்.

  தீயினால் சுட்டபுண் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு! என்ற திருவள்ளுவரின் திருக்குறளை நினைவில் நிறுத்துங்கள். அன்பு, பாசம், மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்தல் இவற்றை என்றும் மறவாமல் இருங்கள்!

  நல்ல குடும்பம் ஒரு சிறந்த பல்கலைக் கழகம் என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் குடும்ப விளக்காகத் திகழுங்கள்!

  இவர் ஒரு கிறிஸ்தவர் அல்ல, மனநல ஆலோசகர். இவர் எழுதிய கருத்து விவாகரத்து ஏற்படாமல் இருக்க இந்த ஆலோசனைகளை கைக்கொள்ளுங்கள்.


விவாகரத்து - கிறிஸ்தவ வேதம் என்ன சொல்கிறது!

முன்பே நான் எழுதியதைப்போல் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இஷ்டம்போல் வாழும் வாழ்க்கையல்ல - அதற்கு சட்டம் ஒழுங்கு யாவும் உண்டு. குடும்ப வாழ்க்கையை கர்த்தர் விரும்புகிறார். குடும்பத்துடன் பழக விரும்புகிறார். ஏனோக்கு குடும்பமாக கர்த்தரிடம் பழகியதைப்போல் ஒவ்வொரு குடும்பத்தோடும் கர்த்தர் பழக விரும்புகிறார். மரியாள் குடும்பத்துடன் கர்த்தர் பழகினார். மக்களால் ஒதுக்கப்பட்ட சகேயுவின் வீட்டுக்குசென்று சாப்பிட்டார். சிலர் கூறுவதுபோல கர்த்தர் ஏழைகளின் வீட்டுக்குத்தான் செல்ல விரும்புவார். பணக்காரர்களை வெறுக்கிறார் என்று நினைப்பதுபோல அல்ல. பணக்காரர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது குறைவு என்றுதான் கூறினாரே தவிர-பணக்காரர்களை தேவன் வெறுக்கவில்லை.

  உலகத்திலேயே அன்று பெரிய பணக்காரனான ஆபிரகாமின் குடும்பத்துடன் சிநேகிதகனைப் போல நெருங்கிப்பழகினாரே!, எசேக்கியா இராஜாவின் குடும்பத்தோடும், தாவீது இராஜாவின் குடும்பத்தோடும், அன்று எழுதப்படிக்க தெரியாத, மீன் பிடிக்கும் தொழில் செய்த பேதுருவை தன் சீஷனாக்கி அவன் வீட்டுக்கு சென்று அவன் மாமியார் வியாதியையும் சுகமாக்கி, மாமியார் - மருமகன் என்ற வேறுபாடு இல்லாமல் நேசித்தவர் நம் தேவன். மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல - என்பதால்தானே அவனுக்கு ஒரு குடும்ப வாழ்க்கையை உண்டுபண்ணி பார்த்து மகிழ்ந்தார். அந்த குடும்பத்துடன் உலாவினார். இப்படியெல்லாம் கர்த்தர் குடும்பத்தையும், குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளையும் நேசிப்பதால்தான், எனக்காக யார் தன் வீட்டின் கதவை திறந்து, என்னை அழைக்கிறார்களோ அவர் வீட்டுக்கு வந்து அவர்களோடு அந்த குடும்பத்தினரோடு சேர்ந்து சாப்பிடுவேன் என்றெல்லாம் வெளி 3:20ல் கர்த்தர் கூறியிருக்கிறார். சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதை தடைபண்ணாதிருங்கள் என்றார்.

  இப்படிப்பட்ட நம் கர்த்தர் குடும்பம் பிரிவதை விரும்புவாரா? அதனால்தான் தேவன் சேர்த்ததை மனிதன் பிரிக்காதிருக்ககடவன் என்றார். அது உயர்நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் கிறிஸ்தவ குடும்பத்தில் உள்ள புருஷன் - மனைவியை பிரிக்க அதிகாரம் கிடையாது. நம் தேவன் பிரிக்கிற தேவன் அல்ல - சேர்க்கிற தேவன். விவாகரத்தை கர்த்தர் வெறுக்கிறார். ஆகவே திருச்சபையும் அப்படிப்பட்டவர்களை வெறுக்கிறது என்று கிறிஸ்தவ சபைகளில் உள்ளவர்களுக்கு தைரியமாக கூற துணிவில்லை.


விவாகரத்து ஏற்பட காரணங்கள்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் அவர்களுக்கான வாழ்க்கை துணையை தெரிந்தெடுக்கும் விதம் சரியில்லை. கர்த்தர், ஆதாமுக்கு குடும்பவாழ்க்கையை ஏற்பாடு செய்யும்போது தனக்குள்ளேயே கூறியதாவது. ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் ஆதி 2:18 என்று கூறினார். மலையாளத்தில் தக்கதாய துணையை உண்டாக்குவேன் என்று கூறியிருக்கிறார்.

  தங்கள் பிள்ளைகளின் படிப்பு, நிறம், உயரம், அழகு ஆகியவைகளையும் ஒப்பிட்டு பார்த்து, அதோடு அவரவர்களுக்குரிய ஆவிக்குரிய குணங்களுக்கு ஏற்ற துணையையும் கண்டுபிடிப்பது மிக அவசியம். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்று பழமொழியே கூறுகிறதே! அப்படியிருக்க ஏனோ தானோவென்று கல்யாணம் செய்து பெண்களை வீட்டைவிட்டு அனுப்பினால்போதும் என்ற எண்ணத்தில் பெற்றோர் செயல்பட்டால், போனவேகத்தில் அந்த பிள்ளைகள் வாழாவெட்டியாக வீடுவந்துசேருவார்கள். ஒரு புடவை - அதற்கேற்ற கலரில் ஜாக்கெட் தெரிந்தெடுக்க எத்தனை கடைகள் ஏறி இறங்குகிறார்கள். அந்த அக்கறை பிள்ளைகள் திருமணத்தில் பெற்றோர் கொஞ்சமாவது காட்டவேண்டாமா?


முதிர் கன்னி விவாகம்

  கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குறித்த வயதில் திருமணம் செய்து வைக்காததாலும், சில பெற்றோர் தங்கள் மகள் அல்லது மகன் திருமணம் முடித்து தங்களைவிட்டு போய்விட்டால் குடும்ப செலவுக்கும், மற்ற செலவுகளுக்கும் தங்களுக்கு பணம் கிடைக்காமல் போய்விடும் என்ற காரணத்தாலும் மகளுக்கு அல்லது மகனுக்கு திருமணம் செய்துவைக்காமல் சில பெற்றோர்களே வேண்டுமென்றே காலம் கடத்துகிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர் மனசாட்சியில்லாத, சுயநலம் கொண்டவர்கள் என்று கூறலாம்.

  சிலர் தங்கள் குடும்ப பொறுப்பு காரணமாகவும், தனது தங்கைகள் அல்லது அக்கா, சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை அமைத்துகொடுத்தப்பின் தன் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்று தியாக எண்ணத்துடன் தன் திருமணத்தையே தள்ளிவைத்து காலம் கடந்து திருமண வயதையும் கடந்த நிலையில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் திருமணம் செய்யும்போது பெண்ணோ - ஆணோ குடும்ப வாழ்க்கையில் கூடுதல் முதிர்ச்சி பெற்றதின் (Over Maturity) காரணமாக யாருக்கு யார் கீழ்படிவது? என்ற மனோநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால்தான் திருமண வயதை கடந்த நிலையில் திருமணம் செய்பவர்கள் பெரும்பாலும் விவாகரத்தை விரும்புகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதில்லை - சரீரத்தில் அந்த வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் தாம்பத்திய சந்தோஷங்கள் குறைவுப்பட்டு குடும்ப சந்தோஷத்தில் அதிக நாட்டம் இல்லாமல் தனித்து வாழவே பெரும்பாலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

  வரட்சணை கொடுக்கமுடியாத ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள், அதேசமயம் மிகவும் அதிக படிப்பு படித்த பட்டதாரி பெண்கள், பெரும்பாலும் திருமண வயது கடந்து 35லிருந்து 45 வயதுகளில் மிகவும் காலம் தாழ்த்தி திருமணம் செய்துகொள்வதால் இப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்ப வாழ்க்கையை விரும்பாமல் விவாகரத்தை விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வரதட்சணை காரணமாக பொருத்தமில்லாத திருமணத்துக்கு விருப்பமில்லாமலே தலையை நீட்டிய பல பெண்கள் விவாகரத்தை தேடிபோகிறார்கள்.

  அதேசமயம் இந்த மாவட்டங்களில் மிகவும் அதிகம் படித்த பெண்கள், அதுவும் இரட்சிக்கப்பட்ட பெண்கள் வரதட்சணை கொடுக்கமுடியாத காரணத்தால் வாழாவெட்டியாக அப்பெண்கள் வீட்டோடு இருப்பது காண மிகவும் பரிதாபம். சிலர் இதன் காரணமாகவே ஊழியக்காரியாக போகவும், சிலர் மிஷனரியாக போகவும் தீர்மானிப்பதும் அதிகமாகிறது. இவர்களின் பட்டியல் மிக நீளம்.

  இப்படிப்பட்டவர்களிலே பலர் தன்நிலையைக்குறித்து எண்ணி கசந்து,வாழ்க்கையை வெறுத்தவர்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் களும் உண்டு. இவர்களுக்காகவே நாங்கள் மிக பாரத்துடன் குடும்பமாக ஜெபித்துக்கொண்டிருக்கிறோம்.

  எனவே பெற்றோர்கள் முன்கூட்டியே தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையைக் குறித்தும், அவர்களின் பிற்காலத்தைக்குறித்தும் சிந்தித்து அவர்களுக்கு ஏற்ற துணை வேண்டும் என்று ஜெபஆயத்தத்துடன் தன்னுடைய சுயநலமில்லாமல் பிள்ளைகளுக்கு ஏற்ற வரனை, ஜாதி பார்க்காமல், ஆவிக்குரிய பையனாக அல்லது பெண்ணாக பார்த்து திருமண ஏற்பாட்டை செய்யவேண்டும்.

  ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளின் திருமணத்தை தம்முடைய கடமை என்று உணர்ந்து தங்களின் பிள்ளைகளுக்கு ஏற்ற வயதில் மணமகனை அல்லது மணமகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதை முறைப்படி ஜெபத்தோடு முயன்றுப்பாருங்கள். கர்த்தர் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற துணையை நிச்சயம் கொடுப்பார். அதன்பின் விவாகரத்து என்ற பிரச்சனையே வராது. உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கவேண்டும்.


தவறான தெரிந்தெடுப்பு
தவறான வாழ்க்கைத் துணை - சரியான வாழ்க்கைத் துணை

  தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்கக்கூடாது என்ற வசனத்தை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்துவைத்துள்ளார்கள். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக தவறாக நினைக்கிறார்கள். நம் வேதம் அப்படி கூறவில்லை. ஆனால் உலகமக்கள் கூறுவதை அப்படியே நம்பிக்கொண்டு பொருத்தமில்லாத பையனை - பெண்ணை, பணத்தின் அடிப்படையிலும் அல்லது தங்கள் பொருளாதாரத்தின் அடிப்படையிலும் தங்கள் பிள்ளைகளுக்கு தெரிந்தெடுத்து மணமுடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை பெற்றோர் உணர்வதில்லை. பொருத்தமில்லாத (படிப்பில், நிறத்தில், அழகில், ஆவிக்குரிய ஜீவியத்தில்) நிலையில் பிள்ளைகளுக்கு திருமணம் முடிப்பதால், அப்படிப்பட்டவர்கள் கணவனும், மனைவியுமாய் வேறு வழியில்லாமல், வெறுப்புணர்ச்சியுடன் இல்லற வாழ்க்கையை நடத்துகிறார்கள். அப்போது அவர்களுக்குள் Inferiority Complex-ஐ உண்டாகிறது. ஒருவருக்கொருவர் தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய குடும்ப வாழ்க்கையைத்தான் நடத்துவார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் பிள்ளைகள் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்களுக்குள் உள்ளான சந்தோஷத்தோடுள்ள தாம்பத்திய உறவு இருக்காது. அந்த நிலையில் அவர்கள் வாழ்வது மிஷின் போன்ற வாழ்க்கையாகவே அமையும். அதனால் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவர்கள்கூட தன் ஆவிக்குரிய சந்தோஷத்தை இழந்தவர்களாகவும் குடும்ப வாழ்க்கையில் திருப்தியற்ற முறையில் வாழ்க்கையை நடத்துவார்கள்.

  வாலிப வயதில் அந்தப் பிள்ளைகளின் உள்ளத்தில் தங்கள் வாழ்க்கை துணையைப்பற்றி எத்தனையோ கற்பனைகள், கனவுகள், எதிர்ப்பார்ப்புகளை, அவர்கள் உள்ளத்தில் புதைத்து வைத்திருப்பார்கள். அவைகள் நிறைவேறாமல் போவதால், வாழ்க்கையில் தோல்வி, விரக்தி உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் பேசும்போது கோப வார்த்தைகளாகத்தான் வெளிப்படும். சாதாரண விஷயத்துக்கும் புருஷன் - மனைவிக்குள் சண்டை, கோப வார்த்தைகளால் ஒருவர் மனதை ஒருவர் வேதனைப்படுத்தி தன் உள்ளத்தில் உள்ள ஏமாற்றத்தை அதன்மூலம்தான் வெளிப்படுத்துவார்கள். இது அவர்கள் பெற்ற பிள்ளைகளையும் பாதிக்கும். அதுமட்டுமல்ல, முழுகுடும்பத்தையுமே பாதிக்கும்.

ஆனால், அதே சமயம் இரட்சிக்கப்பட்ட அனுபவம் உள்ளவர்கள் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு அதற்க்கேற்ப தன்னை முன்பதாகவே ஆயத்தம் செய்துகொண்டு மணமுடிப்பவர்கள். அது விருப்பமில்லாத திருமணமாக இருந்தாலும், தன் வாழ்க்கையை, கிடைத்த குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக்கிக்கொள்வார்கள். கர்த்தர் அதற்கேற்ற பெலன் அவர்களுக்கு தருவார்.

  என் சொந்த குடும்பத்தில் ஆறு அக்காமார்களில், ஒருவரைத்தவிர மற்றவர்களின் திருமண வாழ்க்கை என் பெற்றோர்களால் திணிக்கப்பட்டதாகும். காரணம், என் குடும்பத்தின் வறுமை. என் தகப்பனாரின் ஒரு சம்பளத்தை வைத்துதான் முழு குடும்ப செலவுகளும் நடத்தப்பட்டது. கடன் வாங்கக்கூடாது என்ற என் தகப்பனாரின் கொள்கை காரணமாக என் சகோதரிகளின் திருமணங்கள் அவர்களுக்கு ஏற்ற துணையாக அமையாமல், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், என் பெற்றோரின் சாட்சியுள்ள நல்ல வாழ்க்கை காரணமாகவும் என் சகோதரிகள் தங்கள் ஆசைகளை, எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, கிடைத்த வாழ்க்கைபோதும் என்ற நிலையில், அம்மா, அப்பாவை வேதனைப்படுத்தாமல் அவர்கள் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு இசைந்து தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றிக் கொண்டார்கள். அதற்காக அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இவர்களின் குடும்ப வாழ்க்கை எனக்கும் நல்ல மாதிரியாக அமைந்தது.

  எனக்கு (டாக்டர்.புஷ்பராஜ்) கிடைத்த திருமண வாழ்க்கையை பெரிய ஆசீர்வாதமாக கருதி, கர்த்தர் எனக்காகவே என் மனைவியை ஆயத்தம் செய்து வைத்திருந்தார் என்று இப்போதும் என் மனைவிக்காக தேவனைத் துதிக்கிறேன்.

  இப்படி வறுமையுள்ள குடும்பங்களில் பிறந்தவர்கள் தங்கள் பெற்றோரின் நிலையை உணர்ந்து பொருளாதாரத்தை புரிந்துக்கொண்டு உள்ளதுபோதும் என்ற திருப்தியுடன் வாழ்ந்தால், அந்த சூழ்நிலையில் அவர்கள் ஜெபஆயத்தம் காரணமாக குடும்பத்தில் பிரிவினை உண்டாக்காது. முறுமுறுப்பு உண்டாக்காது. குடும்பத்தையும் அவர்கள் நன்றாக நடத்தி செல்ல இயலும். ஆகவே இப்படிப்பட்டவர்கள் எவரும் விவாகரத்துக்குப் போக துணியமாட்டார்கள். இவர்கள் தேவனுக்கு பயந்து, தனக்கு கிடைத்த கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும் தியாக உள்ளத்துடன் தன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக நடத்துவார்கள்.

  போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1 தீமோ 6:6 என்று வேதவசனம் கூறுகிறது. எனவே அதிக எதிர்பார்ப்பு சில சமயம் ஆபத்தை கொண்டுவரும். அதனால் ஆண்டவரின் அர்பணிப்போடு உங்கள் வாழ்க்கை துணையை தெரிந்தெடுத்து கர்த்தருக்காக சாட்சியாக குடும்ப வாழ்க்கையை நடத்துங்கள். இதுவே ஆண்டவருக்கு பெருத்த சந்தோஷம்.


திருமண ஆயத்த ஆலோசனை

இன்று பல சபைகளில் திருமண ஆயத்த ஆலோசனை (Counseling) என்று மாப்பிள்ளை - பெண் ஆகியவர்களுடன் இருவரின் பெற்றோருக்கும் ஒருவாரம் Pre-marriage Counseling என்ற திட்டத்தில் திருமண ஆலோசனை வகுப்பு நடத்துகிறார்கள். South Kerala Dioceses, North Kerala Dioceses, சமீபத்தில் கன்னியாகுமரி டையோசிஸ்ஸிலும் இந்த ஒருவார ஆலோசனை தொடங்கி உள்ளார்கள். ஆனால் கன்னியாகுமரி CSI டையோசிஸ்ஸை பொருத்தவரை திருமண ஆலோசனை திட்டம் (Pre-marriage Counseling) வெற்றி பெறுவது சந்தேகமே! அந்த பகுதி சபை மக்கள் பலர் அதில் உற்சாகம் காண்பிக்க தயங்குவதை அறிந்தேன்.

இந்த ஏற்பாடு விவாகரத்து ஏற்படாமல் தடுக்கும். மாப்பிள்ளை - பெண்ணும், அவர்கள் பெற்றோரும் ஒருவரையொருவர் மனரீதியாக, சரீர ரீதியாக புரிந்துக்கொண்டால் எல்லா பரிமாற்றங்களைக் குறித்தும் முன்பதாகவே பேசப்பட்டதால் பண விஷயம், நகை விஷயம் ஆகியவற்றில் திருமணத்துக்கு பிறகு பிரச்சனை உண்டாகாமல் தடுக்கமுடிகிறது.

இப்படிப்பட்ட திருமண ஆலோசனை வகுப்பில் மனோதத்துவ மருத்துவர் அல்லது ஆலோசகர் மூலமாக ஆலோசனைகளையும், வேதவசனம் மூலமாக குருமார்களைக்கொண்டு நடத்தப்படும் ஆலோசனை வகுப்புகள் மூலமாகவும் மணமக்களுக்குள் நல்ல புரிந்துக்கொள்ளுதலை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட ஏற்பாடுகளில் பங்குக்கொண்ட பெரும்பாலானவர்கள் விவாகரத்துக்கு போவதில்லை.


ஏமார்ந்த கிறிஸ்தவ தம்பதிகள் - ஏமாற்றப்பட்ட கிறிஸ்தவ தம்பதிகள்

கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள், நாங்கள் அபிஷேகிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் துணிகரமாக பொய் பேசி தன் பிள்ளைகளுக்கு திருமணத்தை நடத்தி வைப்பவரும் உண்டு. பொதுவாக எல்லா கிறிஸ்தவர்களும் இரட்சிக்கப்பட்ட, தெய்வ பயமுள்ள பெண் அல்லது மாப்பிள்ளை வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். பலர் என்னிடம் ஜெபிக்கவரும்போது இரட்சிக்கப்பட்ட பெண்ணை தேடுகிறோம் என்பார்கள். பதிலுக்கு நான் உங்கள் பையன் இரட்சிக்கப்பட்டவனா என்ற என் கேள்விக்கு அவர்களின் பதில் என்ன தெரியுமா! அவன் IPC சபைக்கு அல்லது AOG சபைக்கு போகிறான், பாடல் குழுவில் இருக்கிறான், வாத்தியகருவிகள் வாசிக்கிறான், கீ-போர்ட் வாசிக்கிறான், ஞாயிறு பள்ளி நடத்துகிறான் என்று பெருமையுடன் கூறுவார்கள். இதுவா என் கேள்விக்கான பதில்? என் கேள்வியை புரிந்துக்கொள்ளாத மாதிரி அவர்களின் பதில் இருக்கும். மகன் அல்லது மகள் இரட்சிக்கப்பட்டவனா?இரட்சிக்கபட்டவளா? என்று கேட்டால் பதில் நேரிடையாக வருவதில்லை. AOG சபை அல்லது IPC, TPM என்று சபைகளின் பெயர் கூறினால் அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பு. சிலர் மிஷனரி கூட்டங்களுக்கு செல்வதையும், மிஷனரிகளை தாங்குவதையும் உயர்ந்த தகுதியாக கூறுவார்கள், இவைகள் எதுவும் இரட்சிப்புக்கு அடையாளம் அல்ல என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

  நிறைய பேர்களின் பொதுவான எண்ணம் AOG, IPC, TPM போன்ற சபைகளில் உள்ளவர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட்டவர்கள் என்ற தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். CSI & லூத்தரன் சபையிலிருந்து பெந்தேகோஸ்தே சபையின் பாடல்களால் கவரப்பட்டு அதன் காரணமாக அந்த குறிப்பிட்ட சபைகளின் ஆராதனையில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கைத்தான் மிக அதிகம். அதனால் மேலே குறிப்பிட்ட சபைகளுக்கு என் மகள், என் மகன் அல்லது என் சகோதரன் ஆகியவர்கள் ஆராதனைக்கு செல்கிறார்கள் என்பதை தகுதியின் அடையாளமாக யாராவது கூறினால் அவர்களின் இரட்சிப்பை நான் நிச்சயமாக சந்தேகப்படுவேன். ஆகவே அப்படிப்பட்ட சபைகளுக்கு செல்லுபவர்கள் என்பதால் மிக உயர்ந்த தகுதியாக நினைத்து உங்கள் பெண்ணையோ - பையனையோ திருமண ஏற்பாட்டுக்கு சம்மதித்து நீங்கள் ஏமாந்து போய்விடாதீர்கள்.

  சிலர் பெரிய ஊழியக்காரர்கள் காண்பித்த பையன் - பெண் என்பார்கள். சிலர் தீர்க்கதரிசனம் வரம் உள்ள அந்த பிரபல ஊழியக்காரர் காண்பித்த குடும்பம் என்பார்கள். சிலர் பாஸ்டர் சிபாரிசு செய்ததால் அந்த குடும்பத்தில் பெண் எடுத்தோம் - பையனை தெரிந்தெடுத்தோம் என்பார்கள். இவர்களையெல்லாம் மலைப்போல் நம்பினதால் எதையும் விசாரிக்காமல் இந்த திருமண ஏற்பாட்டை செய்தோம் என்று ஊழியக்காரர்மேல் பழியை போட்டு நொந்து கொள்வார்கள். ஊழியக்காரர்கள் கைகாட்டிமரம் போல காட்டி தருவார்கள். ஆனால் பெற்றோர்களாகிய நீங்கள்தான் பையனைப்பற்றி - பெண்ணைப்பற்றி அவர்கள் குடும்பத்தைப்பற்றி விசாரிக்கவேண்டும். அந்த பொறுப்பிலிருந்து நீங்கள் நழுவ முயலக்கூடாது. ஊழியக்காரர் உங்களுக்கு உதவி செய்திருக்கிறார். ஆனால் விசாரிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. இப்படி ஊழியர்கள்மேல் பழிபோட்டு ஊழியர்களை குறை சொல்கிறவர்கள் ஏராளம். இந்த விஷயத்திலும் நீங்கள் ஏமார்ந்து விடக்கூடாது. ஆகவே பிள்ளைகளின் திருமணத்துக்குமுன் பெண்ணை அல்லது பையனைப் பெற்ற பெற்றோரின் ஆவிக்குரிய வாழ்க்கையை கவனியுங்கள். அவர்கள் ஆவிக்குரியவர்களாக இருந்தால் தங்கள் பிள்ளைகளையும் ஓரளவு தெய்வபக்தியில் அவர்கள் வளர்த்திருப்பார்கள் என்று ஓரளவுமட்டும் நம்பலாம். அடுத்து திருமணம் செய்யப்போகும் பெண்ணோ - பையனோ இரட்சிக்கப்பட்டவர்களா என்பதையும் நன்கு அறிந்து பிறகு ஏற்பாடு செய்யுங்கள்.

  குடும்ப வாழ்க்கையில் பணமோ - சொத்தோ - வரதட்சணையோ, நகைகளோ நிச்சயமாக சந்தோஷத்தை கொடுக்காது. குடும்ப அந்தஸ்தின் அல்லது பணத்தின் அடிப்படையில் திருமண ஏற்பாடு செய்தால் வறுமையில்லாமல், கார், பங்களாவோடு சவுகரியமாக பிள்ளைகள் வாழலாம் அவ்வளவே! ஆனால் அப்படிப்பட்டவர்களின் குடும்ப வாழ்க்கையோ ஜெபமற்று, வேத வாசிப்பற்று தங்க வீட்டில் (Gold house) வாழும் சந்தோஷமில்லா குடும்ப வாழ்க்கையாகத்தான் அமையும்.

  இவர்கள் ஆலயபணிக்கு கோடிகள் கொடுப்பார்கள், லட்சக்கணக்கான காணிக்கைகளை மாதமாதம் கொடுத்து மிஷனரிகள் பலரை தாங்குவார்கள். ஆனால் அப்படி கொடுப்பதனால் உண்டாகும் ஆசீர்வாதம் அவர்கள் வீட்டு வாசல்படி அருகே வராது. காரணம், மனந்திரும்புதலின் அனுபவம் இல்லை. ஆகவே விவாகரத்து ஏற்படாமல் இருக்க திருமணத்துக்குமுன் வசனத்தின்படி தீர்மானம் எடுங்கள்.

  அவிசுவாசிக்கும் - விசுவாசிக்கும் சம்பந்தமேது. அந்நிய நுகத்தில் இணைக்கப் படாதிருங்கள் என்றெல்லாம் வேதம் ஆரம்பத்திலேயே எச்சரிப்பு கொடுக்கிறது. இரட்சிக்கப்பட்ட, ஜெபிக்கிற ஒரு பையனை அல்லது ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமண ஏற்பாடு செய்தால் அதுதான் திருமணமாக போகும் உங்கள் இரட்சிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய சொத்து ஆகும்.


திருமணத்துக்குபின்
ஏமார்ந்துப்போன அல்லது ஏமாற்றப்பட்ட தம்பதிகள்

நான் எழுதும் ஆலோசனை யாவும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவர்களுக்கே பொருந்தும். அவர்கள் மட்டுமே இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள், விளங்கிக்கொள்ளமுடியும்.

  திருமண வாழ்க்கையில் திருமணமான ஓரிரு நாட்களிலேயே ஏமாற்றப்பட்டவர்கள் ஏராளம். சரீர உறவில் (தாம்பத்திய உறவில் - Sex) திருப்தியில்லாத நிலையில் சரீரத்தில் குறையுள்ள ஆணுக்கோ - பெண்ணுக்கோ திருமணமானால் ஒரு வாரத்துக்குள்ளாக அவ்விவரங்களை பெற்றோருக்கு அறிவித்து சபை மேய்ப்பருக்கும் அறிவித்து, அப்படிப்பட்டவர்கள் சட்டத்தை அணுகி விவாகரத்து கோரலாம்.

இப்படிப்பட்ட நிலை இரட்சிக்கப்பட்ட குடும்பங்களில் ஏற்படாது. அப்படி நடந்தால் அவர்கள் மனப்பூர்வமாகவே பெண்ணையோ, பையனையோ ஏமாற்றும் நோக்கத்தில் அப்படி ஏற்பாடுகளை செய்துள்ளார்கள் என்று உறுதியாகக் கூறலாம். காரணம், தன் சரீரத்தின் தாம்பத்திய சம்பந்தமான குறைகள் நிச்சயமாக அவரவர்களுக்கு தெரியும். சிகிச்கைமூலமாக சரி செய்யக்கூடிய தாம்பத்திய கோளாறு உள்ளவர்கள் திருமணத்துக்குபின் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் திருமணத்துக்கு சம்மதித்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் சீக்கிரமே சம்பந்தப்பட்ட டாக்டரிடம் சென்று வைத்தியம் செய்தால் ஓரிரு நாட்களிலேயோ அல்லது சில வாரங்களிலேயோ குறைப்பாடுகளை சரி செய்துவிடலாம். அப்படி நானே பலருக்கு சிகிச்சை செய்து சரியாகி இன்று குழந்தைகளைப்பெற்று சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

  திருமண வாழ்க்கையில் எத்தனை ஆழமான ஆவிக்குரியவர்களாக இருந்தாலும் தாம்பத்திய உறவு மிகமிக முக்கியம் என்பதை உணரவேண்டும். ஆண்டவர் ஆதாமையும் - ஏவாளையும் இணைத்து வைத்ததே சந்ததிகள் பலுகி பெருகும் நோக்கத்தோடுதான் அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று வேதம் கூறுகிறது.

  ஆனால் ஒரு சில குறிப்பிட்ட சபையார்கள், சில குறிப்பிட்ட ஊழியர்கள் தங்கள் சரீர குறைபாட்டை மறைக்க ஆவிக்குரியவர்களுக்கு சரீர தாம்பத்திய சந்தோஷம் பிரதானமல்ல - ஆவிக்குரிய சந்தோஷமே முக்கியம் என்று கூறி சமாளிப்பார்கள். அது ஆவியானவரின் ஆலோசனையல்ல - பிசாசின் ஆலோசனையாகும்.

  எந்த திருமண தம்பதிகளிடையே தாம்பத்திய விஷயத்தில் சந்தோஷம் அல்லது திருப்தியில்லையோ நிச்சயம் அவர்கள் குடும்ப ஜீவியத்தில் கோபம், வெறுப்பு, தேவையில்லாமல் சந்தேகிப்பது போன்றவை உருவாகும். தன் சரீர பலவீனத்தை மறைக்க மனைவியின் நடத்தையில் சந்தேகப்படுவதைப்போல் பிரச்சனையை உருவாக்குவார்கள். பாவம் அந்த பெண் மெல்லவும் முடியாமல் - விழுங்கவும் முடியாமல் தவித்துகொண்டு, வெளியே கூறவும் கூச்சப்பட்டுக்கொண்டு அதே வீட்டுக்குள் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஆண்கள் வெளிப்படையாக எதைக்குறித்தும் பகிர்ந்துக்கொள்வார்கள். ஆனால் பெண்களின் இயற்கையான கூச்ச சுபாவம் எல்லாவற்றையும் மூடிமறைத்து, மனம் வெதும்பி ஏனோ-தானோ என்று வாழ்க்கையை நடத்துவார்கள்.

  மனநோய்க்கான மருந்து உட்கொள்பவர்கள், Fits (ஜன்னி) வாய் நுரைதள்ளி காக்காய் வலிப்பு போன்ற வியாதி உள்ளவர்கள் உட்கொள்ளும் மருந்தின் பக்கவிளைவால் புருஷனை மனைவியோ, மனைவியை புருஷனோ சந்தோஷப்படுத்த முடியாது. இவைகளை சில பெற்றோர்கள் மனபூர்வமாக அறிந்திருந்தும் அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து பிள்ளைகளின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். இதன் காரணமாக பல பெற்றோரை நேரிடையாக நானே கண்டித்துமிருக்கிறேன். ஆனால் அவர்களின் இரண்டு தவறான நோக்கங்கள்:

  ஒன்று - திருமணமானப்பின் எல்லாம் சரியாகிவிடும் என்று பொதுவாக பலர் கூறுவதால், திருமண ஏற்பாடு செய்தோம் என்று கூறி சமாளிக்கிறார்கள்.

  இரண்டு - பின்விளைவைப்பற்றி அக்கறையில்லாமல் எப்படியவாது மகளை அல்லது மகனை திருமண ஏற்பாடு செய்து ஆற்றில் தள்ளிவிடுவதுபோல தள்ளிவிட்டு தங்கள் குடும்ப பாரத்தில் ஒன்று குறைந்தது என்று திருப்திபட்டுக்கொள்வார்கள். இதனால் தங்கள் வீட்டில் உள்ள அடுத்த பிள்ளைகளின் திருமண வாழ்க்கைக்கு அந்தப் குறிப்பிட்ட வியாதியுள்ள பிள்ளை தடைகல்லாக இருக்ககூடாது என்ற எண்ணத்தில் துணிந்து இந்த தவறை செய்கிறார்கள்.

  விவரம் அறியாதவர், கல்லாதவர், மனம்திரும்பாத பெயர் கிறிஸ்தவ குடும்பம் இப்படி செய்தால் அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், மனந்திரும்பிய அனுபவமுள்ள கிறிஸ்தவர்கள், படிப்பறிவுள்ள கிறிஸ்தவர்கள் அறிந்தே. அப்பாவி பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் செயல்களை மன்னிக்கவே முடியாது. காரணம் கொஞ்சநாளில் பிள்ளைகளின் குடும்ப உறவு முறிந்து - வீட்டில் வாழாவெட்டியாக வாழ்வதோடல்லாமல், நல்ல வாலிபனின் வாழ்க்கையை அல்லது நல்ல வாலிப பெண்ணின் வாழ்க்கையை சீர்குலைத்துவிடுகிறார்கள். சில வீடுகளில் நல்ல ஆவிக்குரிய பெண்ணை பெருத்த ஏமாற்றத்தில் ஆக்கி, அதனால் அவர்களின் மனநிலை (Mental) பாதிக்கப்பட்டு சீரழிந்த பெண்கள் எத்தனைப்பேர்கள்!

  தமிழ்நாட்டில் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம் - கேரளா மாநிலம் ஆகிய இடங்களில்தான் வீட்டுக்குவீடு இப்படிப்பட்ட பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது.

  இப்படிப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனைக்குபின் சரீர பிரச்சனையை உறுதியாக்கியபின் சட்டப்படி விவாகரத்து பெற்று - ஆரோக்கியமுள்ளவர்களுக்கு மறுவிவாக ஏற்பாட்டை செய்யலாம். இதை மனிதநேயத்தின் அடிப்படையில் இந்த ஆலோசனை அளிக்கிறேன். ஆனால், வேதவசனத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மறுவிவாகத்துக்கு வசனம் இடம் கொடுக்கிறதில்லை.

  இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏமாற்றப்பட்ட ஆணோ - பெண்ணோ மறுவிவாகம் செய்து ஆவிக்குரியவர்களாக வாழ்ந்து தன் தனிப்பட்ட ஆவிக்குரிய ஜீவியத்தில் தேவனுக்குமுன் மனசாட்சியில் குற்றமற்றவர்களாக வாழ்வதை நான் காண்கிறேன். இவர்களைக்குறித்து தீர்ப்பு கூறவோ! அவர்களின் இப்போதுள்ள புதிய திருமணத்தைக்குறித்து கிறிஸ்துவின் பார்வையில் ஏற்க்கப்பட்டதா என்பதற்கு அபிப்ராயம் சொல்லவோ என்னால் முடியாது.

  நல்ல ஆழமான விசுவாசியாக இருந்தால் தன் விவாகத்தில் ஏற்பட்ட தோல்வி, அது தாம்பத்திய கோளாறு காரணமாக ஏற்பட்ட ஏமாற்றமாக இருந்து புருஷனை விட்டோ - மனைவியை விட்டோ பிரிந்திருந்தால் பவுல் கூறியதைப்போல் விவாகம் செய்துகொண்டவர்கள் இனி விவாகம் செய்யாதபடி எல்லாரும் தன்னைப்போல் இருந்துவிட்டால் நல்லது என்றார்.

  கர்த்தரின் வருகை சமீபித்துவிட்டது என்ற பவுலின் கருத்துக்கு ஏற்ப, இரண்டாம் திருமணம் செய்யாமல் கர்த்தர் தனக்கு இவ்வளவுதான் அனுபவிக்க அனுமதித்தார் என்றும், உள்ளதுபோதும் என்ற தீர்மானத்தில் இருந்துவிடலாம்.

  பவுல் வாழ்க்கையும் அப்படித்தான் அமைந்திருக்கவேண்டும். அவர் திருமணம் செய்து ஒருவேளை அவர் மனைவி மரித்திருக்கலாம் அல்லது மனைவி அவரை விட்டு ஓடியிருக்கலாம் விவரம் அறியோம். அது எப்படியோ அதன்பின் பவுல் மற்றொரு திருமணத்துக்கு முயற்சி செய்யவில்லை. குடும்ப பாரம் இல்லாமல் ஊழியத்தை மிக நன்றாக செய்யமுடிந்தது. அதனால் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும்போது எல்லாரும் என்னைப்போல் இருந்துவிட்டால் நல்லது என்றார்.


விவாகரத்து கூடாது - கர்த்தரின் கட்டளை

மேலே நான் எழுதியது தாம்பத்திய உறவில் ஒருவர் மற்றவரை சந்தோஷப்படுத்த முடியாத அளவு சரீரத்தில் குறைபாடு உள்ளவர்கள் பெற்றோரின் தூண்டுதலினால் பணத்துக்கு, சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு கொடுத்த ஆலோசனை ஆகும். இப்படிப்பட்டவர்கள்மட்டும் விவாகரத்து செய்துகொள்ள மனிதநேய அடிப்படையிலும், மனநல ஆலோசனைப்படியும், நீதிமன்ற சட்டத்தின்படியும் விவாகரத்து செய்யலாம் என்றேன். இந்த ஆலோசனையும், வேதவசன அடிப்படையில் கூறியதல்ல என்பதை அறியவேண்டும். மேறே கூறப்பட்ட காரணம் அல்லாமல் வேறு எந்தவித காரணமானாலும் விவாகரத்தை கர்த்தர் அனுமதிக்கவில்லை.

  குடிகார புருஷன், ஒத்துப்போகாத மாமியார், இஷ்டமில்லாத கூட்டுக்குடும்பம், புருஷனின் தவறான நடத்தை, புருஷன் வேறு பெண்ணை சேர்த்துக்கொண்டு சின்னவீடாக அமைத்து குடும்பம் நடத்துகிறார், புருஷனுக்கு வியாதி, அது எயிட்ஸ் வியாதியாக இருந்தாலும் சரி, இப்படிப்பட்ட எந்த காரணங்களின் அடிப்படையிலும் மனைவி புருஷனைவிட்டு விலகக்கூடாது. புருஷன் - மனைவியை விட்டுவிலகக்கூடாது. ஒருவேளை பயங்கரமாக அடித்து துன்புறுத்தும், கொடுமைப்படுத்தும் புருஷனானாலும் விவாகரத்தை கர்த்தர் அனுமதிக்கவில்லை. விவாகரத்து விஷயத்தில், வேதம் அனுமதிக்கவில்லை என்ற வார்த்தையை பவுல் தன் நிரூபத்தில் உபயோகிக்காமல், கர்த்தர் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டு கூறக் காரணம் என்ன என்பதை கவனிக்கவேண்டும். விவாகம் செய்துகொண்டவர்களுக்கு பவுல் ஆலோசனை கூறும்போது கர்த்தர் கூறுவதாவது என்றுதான் ஆரம்பிக்கிறார். 1கொரி 6:10ல் எழுதப்பட்ட அந்த வசனங்களில் புருஷன் - மனைவி ஒருவரைவிட்டு ஒருவர் பிரியக்கூடாது என்கிறார். கர்த்தர் கூறியது என்று இந்த ஒரு விஷயத்தில்மட்டும் பவுல் ஏன் தெளிவாக கூறுகிறார்? காரணம்! இது தன் சொந்த ஆலோசனையல்ல என்பதற்காகவும், உலகம் உண்டானது முதல் பழைய ஏற்பாட்டு காலத்திலும் விவாகரத்து விஷயத்தில் தேவனாகிய கர்த்தர் இதே கருத்தை உடையவராயிருந்தார் என்பதை பவுல் அறிந்துதான் அப்படி கூறினார்.

  இயேசுகிறிஸ்து மனிதனாக வாழ்ந்தபோது விவாகரத்தை குறித்து பேச்சு வந்தது. பழைய ஏற்பாட்டில் மோசே தள்ளுதல் சீட்டை எழுதி கொடுத்து ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று எழுதியிருந்தான். அதை இயேசுகிறிஸ்துவுக்கு சுட்டிக்காட்டி உங்கள் அபிப்ராயம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு இயேசு உங்கள் இருதய கடினத்தின் நிமித்தமாகத்தான் மோசே அப்படி எழுதினானேயன்றி ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. மத் 19:7 என்று இயேசு கூறினார். ஆதிமுதலாய் விவாகரத்தை கர்த்தர் அனுமதிக்கவில்லை என்ற வார்த்தையை இயேசுகிறிஸ்து உபயோகிப்பதை கவனியுங்கள். அதனால்தான் பிதாவின் சித்தமும், தன் சித்தமும் ஒன்றாக இருப்பதை இயேசுகிறிஸ்து அழகாக விளக்குகிறார். அதனால்தான் கர்த்தர் சொன்னார் என்ற வார்த்தையை பவுல் மிகத் தெளிவாக கூறுகிறார்.

  இப்போதுள்ள அற்புத ஊழியர்கள், கள்ள ஊழியர்கள், ஜனங்களை ஏமாற்ற உபயோகிக்கும் வார்த்தை கர்த்தர் சொன்னார் என்பது. பவுல் எல்லா இடத்திலும், எல்லா விஷயத்திலும் கர்த்தர் சொன்னார் என்ற வார்த்தையை கூறவில்லை என்பதை கவனியுங்கள்.

  ஆகவே, கர்த்தரின் ஆலோசனை விவாகரத்து கூடாது என்பது ஆகும். இந்த வசனத்தின் அடிப்படையில்தான் விவாகரத்து செய்தவர்களும், விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணை மறுமணம் செய்பவர்களும், விவாகரத்து செய்யப்பட்ட பையனை மீண்டும் திருமணம் செய்பவர்களும் விபச்சாரம் செய்வதற்கு சமம் என்று கண்டிப்பான வார்த்தைகளை உபயோகித்து நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து கட்டளையிட்டார். மத் 19:9.

  ஆனால் இன்று நம் CSI, லூத்தரன், மார்தோமா சபைகளில் இரண்டுமுறை விவாகரத்து செய்தவர்கள், மூன்றுமுறை விவாகரத்து செய்தவர்கள் என்பதை சபை குருமார்கள் அறிந்தும், இது வசனப்படியா என்று யோசிக்காமல், வசனத்தை மறைத்து அப்படிப்பட்டவர்களுக்கு திருமணத்தை பகிரங்கமாக நடத்திக்கொடுக்கிறார்கள். பிஷப்பும் இந்த இமாலய தவறுக்கு சாட்சியாக தன் கையெழுத்தை போடுகிறார். இப்படி வசனத்துக்கு விரோதமாக இரண்டாம்முறை விவாகம் செய்பவர்கள் ஊரில் பிரபல பணக்கார குடும்பமானால் பிஷப்பே நேரில் வந்து அவர்கள் திருமணத்தை நடத்தியும் வைத்து ஆசீர்வதிக்கிறார். இதனால்தான் நம் சபைகள் சோரம்போன சபைகளாக ஆக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் பாஷையில் இப்படிப்பட்ட திருமணங்களைக்குறித்து கூறவேண்டுமானால் சபையில் விபச்சார குடும்பங்கள் பெருகிவிட்டது என்று கூறுவதுதான் பொருந்தும்.

  விவாகரத்து (Divorce) செய்தவர்கள் கண்டிப்பாக திருமணம் செய்துதான் தீரவேண்டும் என்று தீர்மானித்தால் அந்த திருமணத்தை கிறிஸ்தவ சபையில் நடத்தாமல் அரசாங்க ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் நடத்திக்கொள்ளலாம்.

  அப்படி விவாகரத்து (Divorce) செய்தவர்கள் இரண்டாம்முறை திருமணம் செய்தால் அவர்கள் தாராளமாக ஆலய ஆராதனையில் பங்கெடுக்கலாம். ஆனால் ஆலய பொறுப்புகள், டையோசிஸ் பொறுப்புகள், சபை மேய்ப்பன் (பாஸ்டர்) பொறுப்பு எடுக்கக்கூடாது. காரணம், அப்படிப்பட்டவர்கள் தங்கள் தகுதியை இழந்துவிட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. மூப்பனானவன் ஒரே மனைவியை உடையவனாக இருக்கவேண்டும் 1தீமோ 3ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட வசன கட்டளை அப்படி கூறுகிறது.

  ஆவிக்குரிய நல்ல சபை என்று வர்ணிக்கப்பட்ட AOG சபையில் பெங்களுர் பாஸ்டர்.பால் தங்கையா அவர்கள் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் அசம்பளீஸ் ஆப் காட் சபையில் அவர் தொடர்ந்து பாஸ்டராக ஊழியம் செய்வதோடு அல்லாமல் அவருக்கு அசம்பளீஸ் ஆப் காட் சபையில் பிஷப்புக்கு சமமான பதவி உயர்வு கொடுத்து ஒத்துழைத்த அசம்பளிஸ் ஆப் காட் சபை சினாட்டில் உள்ள பொறுப்பாளர்கள் அத்தனைபேரும் தரம் தாழ்ந்தவர்களாகிப்போனார்கள். இவர்கள் பேசும் பாஷை, பெற்ற அபிஷேகம் பொய் என்று ஏன் கூறக்கூடாது? இவர்கள் சபை மக்களுக்கு பரிசுத்தத்தைப்பற்றி பேச இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. பாஸ்டர்.பால் தங்கையாவுக்கு தலைவர் பதவி கொடுக்கும்போது அந்த தெரிந்தெடுப்பை எதிர்த்த நான்கு பாஸ்டர்மார்களைமட்டும் நான் பாராட்டுகிறேன்.

  பிழையான காரணங்களினால் ஒருவேளை புருஷனேடோ - மனைவியோடோ ஒத்துப்போகாத காரணத்தால் விவாகரத்து செய்து மிகவும் இளம்வயதில் ஒரு பெண் அல்லது ஆண் வீட்டில் இருந்தால் பெற்றோர் மனம் வேதனைப்படும்தான்! அந்த வேதனையை பெற்றோர் அனுபவித்தே தீரவேண்டும் வேறு வழியில்லை. காரணம் அவர்களின் வளர்ப்பு சரியில்லை. மகளை சரியாக கண்டித்து வளர்த்தியிருந்தால் புருஷனைவிட்டு அவள் தன் பெற்றோர் வீடு தேடி ஓடிவருவாளா? சில பிள்ளைகளின் விவாகரத்துக்கு பெற்றோர்களின் தவறான ஊக்குவித்தலே காரணமாகிறது. அளவுக்கு மீறின பாசமும், சில ஆவிக்குரிய பெற்றோர்களையும் கர்த்தரின் வசனத்தை மீற வைக்கிறது. பிரச்சனை உருவாகும்போதே, மகளுக்கு அல்லது மகனுக்கு எச்சரிக்கை கொடுத்து வேதவசனம் கூறுவதை சுட்டிக்காட்டி புருஷனோடு அல்லது மனைவியோடு எப்படி வாழவேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கவேண்டும். இதில் பாசம், பரிவு, தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது.

  என் சொந்த குடும்பத்தில் என் ஆறு அக்காமார்களில் ஒருவர், புருஷனிடம் கோபித்துக் கொண்டு புருஷன் வீட்டை விட்டு கைக்குழந்தையுடன் ஒரு பையைமட்டும் கையில் எடுத்துக்கொண்டு தனியாக எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது என் தாய் என் அக்காவுக்கு உணவு கொடுத்து சாப்பிட வைத்து, அப்படியே புருஷனைப்பற்றி கூறிய குற்றசாட்டு விவரங்களை முழுவதும் பொறுமையோடு விசாரித்துவிட்டு, உடனே என் அக்காவை அந்த மாலை வேளையிலேயே அவர் புருஷன் வீட்டுக்கு திரும்ப போகச்சொன்னார். பிரச்சனை எதுவானாலும் புருஷன் - மனைவியான நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளவேண்டும். இப்படி கோபித்துக்கொண்டு அம்மா வீடுதேடி வருவது எனக்கு பிடிக்காது. இருவரும் சமாதானமாக எப்போது வேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் தனியே கோபித்து தாய் வீட்டுக்கு வரகூடாது என்றார். உன் பெற்றோராகிய எங்கள் வாழ்க்கையிலும் உன் அப்பாவுக்கும் எனக்கும் பிரச்சனை வந்தது. இத்தனை வருடத்தில் ஒருநாளும் நான் கோபித்துக்கொண்டு என் அம்மா வீடு தேடிபோனதில்லை. என் வயிற்றில் பிறந்த உனக்குமட்டும் புருஷனை விட்டுவிட்டு தனியாக வர எப்படி தைரியம் வந்தது? என்று என் அம்மா கடின வார்த்தைகளால் பேசி என் அக்காவை அந்த பொழுது சாயும் வேளையில் புருஷன் வீட்டுக்கு திருப்பி அனுப்பிய நிகழ்ச்சியை நான் இன்னும் மறக்கவில்லை. அதன்பிறகு அந்த அக்கா தன் புருஷன் மரிக்கும்வரை, தன் புருஷனோடு வாழ்ந்து, மேலும் சில பிள்ளைகளை பெற்றெடுத்து நல்லநிலையில் இப்போதும் வாழ்கிறார். பிரச்சனை எத்தனை குரூரமாக இருந்தாலும், ஜெபித்து பிரச்சனையை ஜெயிக்க மகளுக்கு அல்லது மகனுக்கு கற்றுக் கொடுத்திருந்தால் புருஷனை விட்டு விலகி வரும் துணிவு மகளுக்கோ - மகனுக்கோ உண்டாகாது.


பிரச்சனையுள்ள சூழ்நிலையில்
புருஷன் - மனைவி
இருவரும் என்ன செய்யவேண்டும்?

  இரட்சிக்கப்பட்ட அனுபவமுள்ள பெண் அல்லது புருஷனாக இருந்தால் பிரச்சனைகளை ஜெபத்தில் வைத்து அதை சரிப்படுத்த முயலவேண்டும். அப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க ஞானம் தருவேன் என்று கூறின (யாக்கோபு 1:5). கர்த்தரிடம் ஞானத்தைகேட்டு வாங்கவேண்டும்.

  சில சமயங்களில் புருஷனிடம் அல்லது மனைவியிடம் தான் எதிர்ப்பார்க்கும் மாற்றம் உண்டாக காலம் நீண்டுப்போகலாம். இதற்கு பொறுமை வேண்டும். லூக் 21:19ல் உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார்.

  மனிதன் மற்றொரு மனிதனை மாற்றமுடியாது என்பதை முதலில் அறிந்துக்கொள்ளவேண்டும். எத்தனை ஆலோசகர்களிடம் கொண்டுபோனாலும், எத்தனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து கண்டித்து பயமுறுத்தினாலும், யாரையும் - யாரும் மாற்றமுடியாது. மற்றவர்களை நாம் மாற்ற முயற்சிப்பதைவிட நம்மை மாற்றிக்கொள்ள முயற்சிப்பதுதான் ஞானம். குடும்பம் உடைந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்தால் இதை கூறுகின்றேன். குடும்பம் உடைந்தால் பிள்ளைகள் அனாதையாகிவிடும், சாட்சி கெட்டுவிடும், நம் தேவனின் நாமம் நம்மால் தூஷிக்கப்பட்டுவிட நாமே காரணமாகிவிடுவோம். ஊழியர்கள் பிரசங்கம் செய்யமுடியாதபடி தகுதியை இழந்தவர்களாவோம். தேவன் தம்மை பரியாசம் செய்ய ஒட்டார்.


அடுத்தது இரட்சிக்கப்பட்ட தம்பதிகள் கடைபிடிக்க வேண்டியது.

  1 கொரி 6:7. நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாக இருக்கிறது. அப்படி செய்கிறதை விட. .

  நீங்கள் ஏன் அநியாயத்தை சகித்துக்கொள்கிறதில்லை. ஏன் நஷ்டத்தை பொறுத்துக்கொள்கிறதில்லை. இந்த வசனத்தில் அநியாயம், நஷ்டம் என்ற இரண்டு வார்த்தைகள் விசுவாசிகள் கவனிப்பது மிக முக்கியம். இந்த இரண்டு வார்த்தைகளை புரிந்துக் கொண்டு வசனத்தின்படி அவைகளை கடைப்பிடித்தால் குடும்பம் உடையாது. பல பிரச்சனைகளை நீங்கள் தாங்கிக்கொள்ளவும், சகித்துக்கொள்ளவும் முடியும். வீட்டுக்குள்ளேயே உங்கள் மனதை வேதனைப்படுத்தும் வகையில் பேசப்படும் பல வார்த்தைகளை கேட்டும் கேளாததுபோல் வாழ கற்றுக் கொண்டால் போதும், விவகாரம் பெரிதாகாது, குடும்பம் உடையாது, அதன்மூலம் புருஷனின் அன்பை மனைவியும் - மனைவியின் அன்பை புருஷனும் பெற்றுக்கொள்ளமுடியும்.

  பிரச்சனைகளை எத்தனை காலம் சகிப்பது என்ற கேள்வி வரும். இந்த கேள்விக்கு பதில் கூற இயலாது. மாதங்கள், வருடங்கள் நீண்டு போகலாம். என் வீட்டினருகே ஒரு குடும்பம் எல்லாரும் படித்தவர்கள். ஆனால் மாமியார் - மருமகளை மிகவும் கொடுமைப்படுத்துவார். அதே சமயம் அவர் புருஷனோ பயங்கர குடிகாரர், குடித்துவிட்டு மனைவியை அடிப்பார். மனைவி இரட்சிக்கப்பட்டவர். பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்தவர். திருமணமான புதியதில் மனைவி ஆராதனைக்கு செல்ல புருஷன் அனுமதித்தார். புருஷன் குடிகாரர் என்பது திருமணத்திற்கு பிறகுதான் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. தன் குடிபழக்கம் மனைவிக்கு தெரிந்துவிட்டது, வீட்டில் தினசரி பிரச்சனை என்று தொடங்கியபின் ஆராதனைக்கு போகக்கூடாது என்று புருஷன் கட்டளையிட்டார். அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் சபை ஆராதனைதான். அதுவும் நிறுத்தப்பட்டது. அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. வேறு வழியில்லை, மாமியார் உண்டு. ஆனால் மகனை கண்டிக்க தைரியம் இல்லை, அதிகம் குடித்துவிட்டு எத்தனையோ முறை மனைவியை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிடுவார். இப்படி பலமுறை சம்பவித்தது. மழை காலங்களில்கூட வீட்டை விட்டு அந்த பெண் தள்ளப்பட்டார். அந்த பெண்ணோ புருஷன் வீட்டுக்குள் அழைக்கும்வரை மழையிலேயே நனைந்துக்கொண்டு வெளியில் நிற்பாரே தவிர, மழைக்காக பக்கத்தில் எங்கும் ஒதுங்கமாட்டார். பக்கத்து வீட்டார் அவளைப்பார்த்து பரிதாபப்பட்டு மழை நிற்கும்வரை எங்கள் வீட்டு முற்றத்தில் வந்து நில் என்று அழைத்தாலும் யார் வீட்டுக்கும் போகமாட்டார். புருஷன் போதையில் மயங்கி விழுந்தவுடன் மாமியார் கதவை திறந்துவிடுவார். அதன் பிறகு வீட்டுக்குள் செல்வார். இப்படிப்பட்ட சூழ்நிலை வருடங்களாக நீண்டுபோயினும் அவள் தன் தாய்வீட்டுக்கு போகவிரும்பவில்லை. தன் வருகையால் தன் தங்கைகளின் திருமணம் தடைப்படக்கூடாது, தன் பெற்றோருக்கு கூடுதல் பாரம் தன்னால் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தனிமையில் அழுது ஜெபித்து கர்த்தரிடமே ஆறுதலை தேடினாள். சுமார் 11 வருடங்கள் கழிந்தன. இப்போது அந்த குடும்பம் தலைக்கீழாக மாறியது. இப்போது அது ஆவிக்குரிய குடும்பமாக மாறியிருக்கிறது. புருஷன் மனம் திரும்பினான், குடி நிறுத்தப்பட்டது, முழுகுடும்பமும் எல்லையில்லா சந்தோஷத்தில் ஆழ்ந்தது. அது துதியின் வீடாக மாறியது. இது எப்படி? இந்த மாற்றம் எப்படி உண்டானது?.

  அந்த சகோதரியை விசாரித்ததில் அவர் கூறினார் . . .  என் கணவர் குடித்துவிட்டு என்னை அடிப்பார். இரவு போதை அவர் தலைக்கு ஏறி மயங்கி விழுந்துவிடுவார். அதன்பின் அவர் கால் பக்கம் முழங்கால்படியிட்டு கர்த்தாவே நீர் எனக்கு தந்த புருஷன் அல்லவா! இன்னும் எவ்வளவு நாள் இவரிடம் கொடுமையை சகிப்பேன் என்று புருஷனை எனக்கு மாற்றிக்கொடும் என்று கதறுவேன். இப்படி ஒவ்வொரு நாளும் நடு இரவில் கர்த்தரிடம் கெஞ்சி ஜெபிப்பேன். ஒருநாள் கர்த்தர் அவரை தொட்டார், மனந்திரும்பினார், ஆவிக்குரிய மனிதனாக மாறினார். இப்போது எங்கள் வீடு ஜெபவீடாக மாறியது. புருஷன் வேலைமுடித்து வீடு திரும்பியதும், நாங்கள் இருவரும் பஸ் ஸ்டாண்டில் துண்டுப்பிரதிகளை விநியோகித்து சுவிசேஷ ஊழியம் செய்கிறோம். 11 வருடங்கள் பொருமையோடு எல்லா அநியாயங்களையும் சகித்து ஜெபித்ததால் கிடைத்த வெற்றி என்று அந்த பெண் கூறினாள்.

  1 பேதுரு 3:1,2. வாசித்துப்பாருங்கள் (உங்கள் புருஷன்) திருவசனத்துக்கு கீழ்படியாதவனாக இருந்தால்(இரட்சிக்கப்படாதவனாக - இரட்சிக்கப்படாத மனைவியாக உங்கள் வீட்டில் யாராவது இருந்தால்) பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே (அவர்களை) ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.

  இந்த வசனத்தின்படி வாழ கற்றுக்கொண்டால், மனந்திரும்பாத புருஷன், மனந்திரும்பாத மனைவி, மனம் திரும்பாத மாமியார், இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் சாட்சியுள்ள நடக்கை, பொறுமை, ஜெப வாழ்க்கை இவைகள் உன் வீட்டின் சூழ்நிலையை மாற்றும். நீங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆலோசனை கூறினால் அல்லது புருஷனுக்கு மனைவிக்கு அவரவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு உங்கள்மேல் கோபமும், வெறுப்பும்தான் அதிகமாகும். பிறகு அந்த வீட்டில் நீங்கள் நிம்மதியாக இருக்க முடியாது. அவர்களுக்கு இனி எந்த ஆலோசனையும் கூறாதீர்கள். அமைதியாகிவிடுங்கள். ஆனால் எல்லாவற்றையும் மாற்றுகிற சக்தி உள்ளவரிடம் இரகசியமாககூறி அழுது ஜெபியுங்கள். உபவாசித்து ஜெபியுங்கள். கர்த்தர் நிச்சயம் மாற்றுவார். ஒருவேளை காலம் நீண்டுப்போனாலும், குடும்பம் உடையாமல், சாட்சி கெடாமல் உங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ளுங்கள். குடும்பம் உடைக்கப்படாமல், வீட்டில் எல்லாரும் இரட்சிக்கப்படவேண்டும் என்று ஜெபியுங்கள். நம் கர்த்தர் குடும்பத்தை பிரிப்பவர் அல்ல - குடும்பத்தை கட்டுகிறவர், குடும்பத்தை சேர்க்கிறவர். எனவே உங்கள் பாரங்களை அவர்மேல் வைத்து ஜெபியுங்கள். வீட்டில் எல்லாரும் உங்களை வெறுக்கலாம், எப்படித்தான் மற்றவர்களை திருப்தி செய்ய நல்ல விதமாக நீங்கள் நடந்தாலும் உங்களை மற்றவர்கள் புரிந்துக்கொள்ளாமல் போகலாம். சோர்ந்து போகவேண்டாம். உங்கள் கர்த்தர் உங்களை புரிந்து வைத்திருக்கிறார். ஜெபிக்கவும்.

  இயேசுகிறிஸ்து கூறுகிறார்: உங்களை சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்கு பலன் என்ன? . . . . . உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு பலன் என்ன? . . . உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். லூக் 6:32-35.

  இயேசுகிறிஸ்து கூறுகிறபடி நீங்கள் செய்தால் எந்த வீட்டில் அவமானப்படுத்தப்பட்டீர்களோ அதே வீட்டில் கனப்படுத்தப்படுவீர்கள். எந்த வீட்டில் மாமியரால், நாத்தனார்மார்களால் அல்லது புருஷனின் சகோதரர்களின் மனைவிமார்களால் நீங்கள் அலட்சியப்படுத்தப்பட்டீர்களோ . . . அவர்களே உங்களை மதிக்கும் வகையில் அதே வீட்டில் உயர்த்தப்படுவீர்கள். இதன் அடிப்படை இரகசியம் என்னவென்றால் -  நீங்கள் வீட்டில் உள்ளவர்களை, பிரச்சனை உள்ளவர்களை மாற்ற செய்யும் முயற்சியை நிறுத்தி - உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். இதுதான் அந்த இரகசியம். வெற்றி நிச்சயம். விவாகரத்து என்ற வார்த்தைக்கு நீங்கள் முற்றிப்புள்ளி வைக்கலாம்.


கவனிக்கவும்:

  கர்த்தர் உனக்கும், உன் . . . மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார். உன் தோழியும், உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் (செய்யாதே) . . மல் 2:14.

  கர்த்தர் (ஒருவளுக்கு) ஒருவனையல்லவா படைத்தார் . . . ஒருவனும் . . . தன் மனைவிக்கு துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். மல் 2:15.

  தள்ளிவிடுதலை (Divorce) நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். மல் 2:16.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM