வாசகர் கடிதம்

வாசகர் கடிதம் 1:
அக்டோபர் 2010 ஜாமக்காரன் மிக அருமை. வாலிபர்களுக்கான செய்தி. மிக அற்புதம். இத்தனை வெளிப்படையாக எழுதியது வாலிபப்பிள்ளைகளுக்கு மிகமிக தேவை. சபைகளும், சபை போதகர்களும், பிரசங்கிமார்களும்கூற பயப்பட்ட அந்தரங்க விஷயங்களை நீங்கள் எழுதியதில் நாங்கள் யாவரும் நன்றி கூறுகிறோம். நாங்கள் CSI சபையை சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் உங்கள் ஜாமக்காரனை ஒரு பக்கம்விடாமல் பல ஆண்டுகளாக மற்றவர்களிடம் வாங்கி படிப்பவர்கள்.

  வாலிபர் செய்திகளை நாங்கள் ஆயிரக்கணக்கில் போட்டோ காப்பிகள் எடுத்து கல்லூரி பிள்ளைகளுக்கு வினியோகம் செய்கிறோம். உங்களை கர்த்தர் விதவிதமானமுறையில், விதவிதமான கூட்டத்தாருக்கு விதவிதமான சபையை சேர்ந்தவர்களுக்கும் கர்த்தர் வல்லமையாக பயன்படுத்துவதை பல வருடங்களாக காணும் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்காத நாள் இல்லை. வாலிபப் பிள்ளைகள் என்று ஜெபகுறிப்பில் எழுதி வைத்துக்கொண்டு தினசரி இப்போது ஜெபிக்கிறோம்.

- சென்னை


வாசகர் கடிதம் 2:
அமெரிக்க பிரபல TV - ஊழியரைப்பற்றிய குற்றச்சாட்டுப்பற்றி நீங்கள் எழுதியதை ஜாமக்காரனில் வாசித்தேன். ஆனால் பெனிஹின் (Benny Hinn) அவர்கள் அந்த குறிப்பட்ட பெண்ணுடன் சரீர பிரகாரமான பாவம் ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த பெண்ணும் தான் பெனிஹினுடன் பாவம் ஏதும் செய்யவில்லை என்று எழுதியிருக்கிறார். அதேசமயம் நானும், அந்த பெண்ணும் இத்தாலிக்கு ஒன்றாக பயணம் செய்ததையும் அறையில் தனியாக அழைத்து பல மணி நேரம் பேசியதையும் அந்த நேரத்தை அவளோடு செலவு செய்ததையும் இவர்கள் இருவரும் மறுக்கவில்லை. பத்திரிக்கைகாரர்கள்தான் எங்களை சந்தேகிக்கிறார்களே தவிர எங்களுக்குள் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்று எழுதியுள்ளார்கள். பெனிஹின் மனைவியை விவாகரத்து செய்து பிரிவதற்கு முன்பே எங்களுக்குள் சாதாரண தொடர்புமட்டும் இருந்தது என்றும் எழுதியுள்ளார்கள்.

- நியூயார்க், அமெரிக்கா

வாசகர் கடிதம் 3: சத்தியவசன TV நிகழ்ச்சிக்கு நன்றி:
பல வருடங்களாக இலங்கை Back to the bible சத்தியவசன வானொலியில் Rev.Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் வேதபாடங்களை கருத்தாய் கேட்டுவரும் தமிழ்நாட்டின் பல ஆயிரம் குடும்பங்களில் நாங்களும் ஒன்று. ஆனால் Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களை நாங்கள் நேரில் பார்த்ததேயில்லை. உங்கள் சத்திய வசன TV நிகழ்ச்சி வெளிவரும் தமிழன் டிவியில் அவரை நேரில் கண்டு அவர் செய்தியை கேட்டபோது நாங்கள் மிகவும் சந்தோஷமடைந்தோம். எத்தனை ஆழமான வேதபாடம் வேதத்திலிருந்து சிறுசம்பவத்தை எடுத்து அதை சரித்திர பின்னணியங்களோடு விளக்கி பேசியதை நாங்கள் நேரில் கேட்டப்போது இத்தனை ஆழமான வேதஞானமுள்ள வேதபண்டிதனை இழந்தோமே! என்று வேதனையடைந்தோம். அவர் உயிரோடு இருக்கும்போதே டிவி நிகழ்ச்சியில் அவர் செய்தியை பதிவு செய்திருந்தால், எத்தனை ஆயிரங்களுக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும். எத்தனைத்தான் வானொலியில் ஆளைப்பார்க்காமல் செய்திகளை கேட்டாலும், டிவியில் நேரில் முகம் பார்த்து அந்த வேதபாடத்தை கேட்கும்போது அந்த பிரசங்கத்தில் நாங்கள் நன்றாக கவனம் செலுத்தமுடிகிறது. தயவுசெய்து அவருடைய டிவி செய்தியை நிறைய வெளியிடுங்கள். Dr.புஷ்பராஜ் அவர்களின் இலங்கை கன்வென்ஷனில் பேசிய அவருடைய செய்தியை ஒவ்வொரு நாளும் துண்டுத்துண்டாக மிக சரியான இடத்தில் எடிட் செய்து அந்த செய்தியை வானொலியில் ஒலிப்பரப்பிய இலங்கை சத்தியவசன நிலையத்தினர் செய்ததைப்போல Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் பழைய வீடியோ செய்திகளை பலரிடம் கேட்டு வாங்கி ஒலிப்பரப்புங்கள். லட்சோபலட்சங்களுக்கு அது பிரயோஜனமாக அமையும். அவரை TV மூலம் நேரில் காட்டிய சத்தியவசன நிலையத்தினருக்கு நன்றி கூறுகிறோம். அந்த நிகழ்ச்சிக்கு எங்களால் இயன்ற காணிக்கைகளை நிச்சயம் தொடர்ந்து அனுப்புவோம்.

TVயில் இதுவரை பிரசங்கித்த பல பெந்தேகோஸ்தே ஊழியர்கள் தங்கள் பிரசங்கத்தின் இடையில் ஆரம்ப முதல் முடிவுவரை அல்லேலுயா, ஆமென் என்று சொல்லவே அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அந்த மாதிரி செய்திகளில் சரக்கும் இல்லை, சாராம்சமும் இல்லை. கர்த்தர் Rev.தியோடர் வில்லியம்ஸ் போன்றோரை அதிகமாக எழுப்பவேண்டும் என்று ஜெபிக்கிறோம்.


வாசகர் கடிதம் 4: எச்சரிக்கை! எச்சரிக்கை!!
ஜெபத்தில் பெயர் அழைப்பது பொய் தீர்க்கதரிசனம்
28.10.2010. சகோ.ஜான்சாமுவேல் அற்புத ஊழியம் - தமிழன் டிவி.

  நிஷானி இந்த பெயரை இதுவரை நான் கேட்டதில்லை. இதற்கு முன்னும் நான் கேட்டதில்லை. கர்த்தர் அந்த பெயரை எனக்கு காட்டினார். உன் கண்பார்வை இப்போது சுகமாகிறது. கர்த்தர் சொல்கிறார், நீ சுகத்தோடு இந்த கூட்டத்தை விட்டுப்போகலாம். அப்படியே அவள் சுகம் பெற்றாள். இப்படி டிவியில் கூறியது அற்புத ஊழியர்.சகோ.ஜான்சாமுவேல் அவர்கள் ஆவார்.

  இதே நாளில் வியாழன் அன்று இமயம் TV, ஆசீர்வாதம் TV இவைகளில் பேசிய பல ஊழியர்கள் இஷ்டத்துக்கு ஜெபத்தில் பல பெயர்களை கூறினார்கள், பலரைப்பற்றி வெளிப்பாடு கூறுகிறார்கள். கர்த்தர் காட்டுகிறார், கர்த்தர் சொன்னார் என்று மளமளவென்று கொஞ்சம்கூட தெய்வபயமற்று, பரிசுத்த ஆவியானவர் பெயரில்தான் இவ்வளவு பெரிய பொய்களை அள்ளி வீசி பயம் அல்லது கூச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் ஜனங்களை தன் பக்கம் இழுக்க இப்படி இவர்கள் பேசுகிறார்கள். இப்படி பொய் சொன்ன இவர்கள் தங்கள் மரணத்துக்குபின் உள்ள நித்திய வாழ்க்கையைப்பற்றி அக்கறையற்றவர்கள், நரக ஆக்கினைப்பற்றி பயம் இல்லாதவர்கள், வாழ்கிறவரைக்கும் வாழுவோம், மரித்தபின் நமக்கு என்ன நேர்ந்தால் என்ன? என்ற இருதய கடினத்துக்கு இவர்கள் போய்விட்டார்கள்.

  அறிந்திருந்தும் தவறு செய்கிறவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான் என்று வேதம் போதிக்கிறது. ஆகவே வேதம் தன் எச்சரிப்பை இவர்களுக்கு தெரிவித்துவிட்டது. ஆகவே இவர்கள் தொடர்ந்து ஜெபத்தில் இப்படிப்பட்ட பொய்பேசட்டும் விட்டுவிடுங்கள், திருந்தமாட்டார்கள். நாம் என்ன செய்ய? இவர்களுக்காக ஜெபிக்கத்தான் செய்யலாம், ஆலோசனை கூறலாம்! எச்சரிக்கலாம்! மேலும் வேறு என்ன செய்யமுடியும்?

  ஆவியானவர் மனிதனோடு எப்போதும் போராடமாட்டார் என்று வேதம் கூறுகிறது. ஆனால் இந்த ஊழியர்களால் ஏமாற்றப்படும் மக்கள் வசனத்தை விட்டு விலக்கப்படுகிறார்களே! அவர்களை நினைத்துதான் பாரப்பட்டு இவர்கள் என்மேல் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று திரும்பதிரும்ப சளைக்காமல் நான் இவைகளைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். என்றைக்காவது இந்த கள்ள ஊழியர்களை மக்கள் இனம் கண்டுக்கொள்ளமாட்டார்களா? விழிப்புணர்வு பெறமாட்டார்களா? இந்த ஆதங்கம் எனக்குள் அதிகமாகிறது. இதன் உண்மை விவரம் அறிந்தவர்கள் தயவுசெய்து இந்த மாதிரி ஜெபத்தில் பெயர் அழைக்கும் ஊழியம் செய்யும் இப்படிப்பட்ட எல்லா மந்திரவாத ஊழியக்காரர்களின் பெயர்களையும் ஜெபத்தில் எழுதி வைத்து ஜெபியுங்கள்.

  அதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட ஊழியர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படியும், இப்படிப்பட்ட ஊழியர்களை கிறிஸ்தவ விசுவாசிகள் ஊக்கப்படுத்தாதிருக்கவும் வாசகர்களாகிய நீங்கள் மற்றவர்களிடமும் இதை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM