வாசகர்களின் நெடுநாளைய ஆசையை நிறைவேற்ற உங்கள் விருப்பப்படி ஜாமக்காரனில் பிரசங்க செய்தியை உட்கார்ந்து எழுதி தயாரித்துள்ளேன். நாங்கள் ஜாமக்காரனில் ஏறக்குறைய எல்லா மாதங்களும் மற்றவர்களின் குறைகளை குற்றங்களையே வாசித்து சலித்துவிட்டது. டாக்டர் கன்வென்ஷன் கூட்டங்களில் சுமார்
2½ மணி அல்லது
3 மணிநேரம் பேசும் செய்திகள் எவ்வளவு ஆழமான வேத பாடமாக அமைந்துள்ளது. அந்த செய்திகளையேகூட நீங்கள் ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டால் அதுவே உங்கள் வாசகர்களாகிய எங்களுக்கு போதுமே! இப்படி எனக்கு கடிதம் எழுதிய அன்பர்கள் ஏராளம்.
கவனியுங்கள்! வேதத்தில் புதிய ஏற்பாட்டில் எந்த
நிருபத்தை நீங்கள் வாசித்தாலும் அதை எழுதிய சீஷர்கள் மற்றவர்களின் குற்றங்களை குறைகளை சுட்டிக்காட்டி அறிவிக்கத்தானே நிருபங்களை எழுதினார்கள்! குறிப்பாக
கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தை வாசித்தால் நான் எழுதியது சரி என்பீர்கள். பொதுவாக சீஷர்கள்
சபைகளுக்கு எழுதிய எல்லா நிருபங்களும் அந்தந்த சபைகளில் காணப்படும் குறைகளை அறிந்து அல்லது அதைக்குறித்து
கேள்விப்பட்டு அந்தந்த சபை மக்களையும், ஊழியர்களையும் குறிப்பிட்டு எச்சரித்து எழுதவே நிருபங்களை உபயோகித்தார்கள். குற்றச்சாட்டுகளைக் குறித்து கண்டித்து நிருபங்களை எழுதின அந்த சீஷர்கள் சம்பவம் நடந்த இடத்தை நேரில்போய் பார்த்து நாலுபேர் அதைப்பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்று உறுதிப்படுத்தியபின் சீஷர்கள் நிருபங்களில் எந்த குற்றச்சாட்டையும் குறித்து எழுதவில்லை என்பதை நம்மில் பலர் உணரவில்லை. ஆனால் அந்தக்காலத்தில் நிருபங்களை எழுதிய சீஷர்கள் தாங்கள் கேள்விப்படும் சபை ஊழியர்களின் அல்லது விசுவாசிகளைப்பற்றிய
குற்றச்சாட்டுகளைக்குறித்து அறியும்போது அதை மூன்று சாட்சியங்கள் என்ற அடிப்படையில் உறுதிப்படுத்தி அதை நிருபங்களில் அறிவித்ததும் உண்டு. மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அன்றைய காலங்களில் சீஷர்கள் எல்லாரும்
பரிசுத்த ஆவியானவரால் நேரிடையாக நடத்தப்பட்டார்கள்.
ஆவியானவர் குற்றச்சாட்டுகளின் உண்மையை சீஷர்களுக்கு தனிப்பட்டமுறையில் அறிவித்து உறுதிப்படுத்த உதவினார். அதைப்போலவே
என் ஜாமக்காரன் பத்திரிக்கை விஷயத்திலும் ஆவியானவர் உதவுகிறார். என் வாசகர்களுக்கு நான் அறிவிக்கும் எச்சரிப்புகளோ!
உபதேச குழப்பங்களைக் குறித்தோ, சபைகளின் விவகாரங்களைக் குறித்தோ நான் எழுதப்போவதை நான் உணர்ந்தால் குறிப்பிட்ட
ஊழியர்களின் அல்லது சபைகளின் அல்லது சபை தலைவர்களின் (Bishop) பிஷப்மார்களின்
தவறான போக்கை நான் வாசகர்கள் மூலமாக கேள்விப்பட்டு சேகரித்த விஷயத்தை அப்படியே எழுதாமல், அதை நான் ஜெபத்தில் வைக்கும்போது
ஆவியானவர் எது உண்மை, எந்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டது என்பதையெல்லாம் என்உள்ளில் ஆவியானவர் உணர்த்தும்போது அல்லது அதை உறுதிப்படுத்தும்போது உடனே ஜாமக்காரனில் நான் எழுத
என்னில் ஒரு தைரியம் வருகிறது. அப்போது என் உள்மனதில் குற்ற உணர்வு இல்லாத நிலைமை உருவாகிறது. அதன்பின்புதான் தைரியமாக, வெளிப்படையாக எதையும் ஜாமக்காரன் எழுத துணிவேன்.
என்
கேள்வி-பதில் பகுதியில் காணப்படும் என் பதில்கள் பெரும்பாலான விஷயங்கள் விமர்சனங்கள், கட்டுரைகள் போன்ற அடிப்படையில்தான் நான் எழுதுகிறேன். ஆனால் வாசகர்கள் நினைக்கிறார்கள். நானாக வேண்டுமென்றே திரும்பத்திரும்ப
குற்றச்சாட்டுகளையே கூறிகொண்டு இருப்பதாக தவறாக எண்ணுகிறார்கள். அதனால்தான் வாசகர்களாகிய எங்களுக்கு உங்கள் பிரசங்கம் வேண்டும் என்கிறார்கள்.
சபையில் பாஸ்டர் அல்லது சபை ஆயர் செய்யும் பிரசங்கமே சபை மக்களை உணர்த்த அவர்களில் உள்ள குறைகளை குற்றங்களை வசன அடிப்படையில் சுட்டிக்காட்டி பேசுவதுதான் ஞாயிறு பிரசங்கம். ஒவ்வொரு ஞாயிறும், ஒவ்வொருமுறையும் அதையே கேட்கிறோமே என்று யாராவது
ஆலயத்துக்கு அல்லது சபைக்கு போகாமல் இருக்கிறார்களா? இன்று
பல ஊழியர்கள் புதிய புதிய தவறான போதனைகளை தொடர்ந்து தங்கள் பத்திரிக்கைகளிலும், டிவியிலும் அறிவிக்கும்போது அவர்களைக்குறித்து வாசகர்களுக்கு எச்சரிக்காமலிருப்பது
எப்படி?
அதனால்தான் குறிப்பிட்ட சில ஊழியர்களைப்பற்றியே ஜாமக்காரனில் எழுதும் நிலை மீண்டும் மீண்டும் வருகிறது. காரணம் இவர்களை ஒவ்வொரு நாளும் புதுபுது
பொய்களை அள்ளி வீசுகிறார்களே! அதை அறிவிக்காமல் தவிர்க்க என்னால் இயலாது. உங்கள் விருப்பப்படி பிரசங்கத்துக்கு வருகிறேன். இதிலும் காணப்படும் அறிவுரைகள்
சிலரை குற்றப்படுத்துவதுப்போலத்தான் இருக்கும். இதுவும் பிரசங்கமே! சரி, வசனத்தை கவனியுங்கள். மத் 28:19,20. ஒரு ஆத்துமாவுக்கு கிறிஸ்துவை அறிவித்து அவனை ஞானஸ்நானம் கொடுத்து சபையில் சேர்க்கும்முன் அவனை
சீஷனாக்க வேண்டும் என்ற கட்டளையை பல சபைகள் கவனிக்க மறக்கிறார்கள்.
சீஷன் என்றால் - கற்றுக்கொள்கிறவன்
சீஷன் என்றால் - பின்பற்றுகிறவன் என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு.
எந்த ஒரு மனுஷனையும் ஊழியக்காரர்களை அல்ல, பரிசுத்தவான்களையல்ல பெரிய மகாத்மாக்களையல்ல,
இயேசுவை மட்டும் பின்பற்றுகிறவர்களாக அவர்களை மாற்றவேண்டும். பிறகு அவனுக்கு கிறிஸ்துவின் வழிகளை கற்றுக்கொள்ளும் வாஞ்சையை அவனுக்குள் உண்டாக்கவேண்டும். கிறிஸ்துவைப்பற்றி - வேதவசனத்தைப்பற்றி அவன் கற்றுக்கொள்ளவேண்டும் அவனுக்கு அந்த விஷயத்தை விளங்க வைக்கவேண்டும் என்பதை நம் தெய்வம் இயேசுகிறிஸ்து நமக்கு கட்டளையாக கொடுத்திருப்பதை கவனிக்க வேண்டும். அது
ஆலோசனையாக அல்ல கட்டளை என்பதை கவனிக்கவும். அதனால்தான் இயேசு கூறினார். ஒரு ஆத்துமாவை சபையில் கொண்டுவந்தபின் அவனிடம் நான் (கூறியதெல்லாவற்றையும்) உங்களுக்கு கட்டளையிட்டதெல்லாவற்றையும் அவர்கள்
கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் (வசனம் 20) என்று இயேசுகிறிஸ்து கூறினார்.
இதிலே பல சபைகள் தவறவிடும் ஒரு காரியம் என்னவென்றால், சபை மக்களுக்கும் சரி, புதிய ஆத்துமாக்களுக்கும் சரி, வேதவசன விளக்கங்களை பலர்
உபதேசிப்பதில்லை. மேலே குறிப்பிட்ட அந்த வசனத்துக்கு ஆங்கில வேதபுத்தகத்தில்
Teaching Them என்று குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான சபைகளில், கன்வென்ஷகளில் பிரசங்கம் (Teaching) உண்டு. ஆனால் வேத வசனத்தை படிப்பிப்பதில்லை -
Preaching இல்லை.
அதனால்தான் அன்றைய ஆரம்பகால சபைக்கு அருளப்பட்ட முக்கிய நான்கு ஊழியங்களில் உபதேச ஊழியத்தை, அதாவது
போதக ஊழியத்தையும் ஆவியானவர் அறிவிக்கிறார். சபை பக்தி விருத்தியடைவதற்கு சிலரை அப்போஸ்தலராகவும்,
சிலரை தீர்க்கதரிசியாகவும் (தீர்க்கதரிசி என்றால் கர்த்தருடைய வார்த்தையை உரைக்கிறவன் என்று அர்த்தம்)
சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும்,
போதகராகவும் (ஆவியானவர்) ஏற்படுத்தினார் என்று குறிக்கப்பட்டுள்ளது. எபே 4:13.
இவைகளை ஆவியானவர் ஏன் எழுதினார்? இந்தமாத ஜாமக்காரனிலும் பல ஊழியர்களின் தவறான ஊழியங்களையும், அவர்களின் பிழையான உபதேசங்களையும் மற்ற பக்கங்களில் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். எங்கும் மனுஷனுடைய
சூதும், வஞ்சிக்கிறதற்கேதுவான, தந்திரமுள்ள போதகம் நிறைந்து காணப்படுகிறது. எபே 4:14ல் குறிப்பிடுவதைப்போல இதில் குறிப்பிட்டிருக்கும்
வஞ்சிக்கிற சில குறிப்பிட்ட ஊழியர்களிடமிருந்து கிறிஸ்தவ மக்களை காப்பாற்ற இப்படிப்பட்ட வேதவசன
உபதேசமும், போதகமும் மிக அவசியமாகிறது.
இப்படிப்பட்ட ஊழியர்கள்
சூதும், வஞ்சனையும், தந்திரமும் நிறைந்தவர்கள் ஆவர். இவர்கள் பிரசங்கம் மிக ஆழமாக காணப்படுபவைப்போல் சில சமயம் காணப்படும், அந்த பிரசங்கத்தில் இவர்கள் தன்னை கர்த்தருக்கு
சமமாக உயர்த்தும் விஷயங்கள் நிறைய இருக்கும். செய்தி ஆழமாக இருக்கிறதே!,
பாட்டு நன்றாக இருக்கிறதே! என்பதைத்தான் நாம் கவனிப்போம். அதில் உள்ளே உள்ள
விஷத்தை கவனிக்க தவறிவிடுவோம். பிசாசு பூரண ஞானமுள்ளவன் என்று எசே 28:12ல் கூறுகிறது. மக்களை எப்படி வஞ்சிப்பது என்று அவனுக்கு மிக நன்றாக தெரியும்.
ஏவாளை வஞ்சிக்கும்போது, கர்த்தர்
ஆதாம்-ஏவாளுக்கு சாப்பிட அனுமதித்த தோட்டத்தில் உண்டாக்கிவைத்த அத்தனை பழத்தைக்காட்டிலும், பிசாசு காண்பித்த அந்த மரமும், பழமும்
புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும்,
புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படதக்க விருட்சமுமாயிருந்தது என்று அதைக்குறித்து விசேஷமாக வர்ணித்து குறிப்பிடுவதை ஆதி 3:6ல் கவனியுங்கள்.
இப்படித்தான் இப்போதயை
மேடை மந்திரவாத பிரசங்கிகளும், அவர்களின் அற்புத அடையாளங்களும் அதை நடப்பிக்கும் ஊழியர்கள் அந்த அடையாளங்களை தாங்கள் பிரசங்கிக்கும் மேடையில் செய்கிறார்கள். இதை சபை மக்களுக்கு யார் விளங்க வைக்கமுடியும்?. வெறும் பிரசங்கம்மூலம் ஜனங்களை விளங்க வைக்கமுடியாது, விளங்கவைக்க டீச்சிங் அவசியம். இந்த குறிப்பிட்ட ஊழியர்களின் பிரசங்கத்தில் கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கிறார், இன்று
உங்கள் அற்புதத்தின்நேரம், இயேசு அழைக்கிறார், இயேசு உருகுகிறார், இயேசு தேற்றுகிறார், இயேசு ஆறுதலளிக்கிறார், அக்கினி அபிஷேகம் உன்மேல் இருந்தால் போதும் அபிஷேகம் உன்
வஸ்திரத்தின்மேல் இருந்தால்போதும் என்று கூறும் இப்படிப்பட்ட எந்த தந்திர ஊழியர்களிடமும் வேதவசன
உபதேசங்கள், போதனைகள் காணப்படாது. மாறாக, உங்களை இவர்கள் பேச்சு
சாமர்த்தியத்தால் அழவைத்து, போட்டோ எடுத்தப்பின் உங்களை அனுப்பி வைத்துவிடுவார்கள். இவர்கள் உங்கள்
பெயர்களை, வியாதிகளை ஜெபத்தில் அறிவித்தவுடன் உங்கள் பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டதைப்போல நீங்கள் ஏமார்ந்து வீட்டுக்கு திரும்புவீர்கள். அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பலர் தங்களின் மாறாத பழைய சூழ்நிலை, ஏமாற்றம், சமாதான குறைவு, வியாதிகள் இவைகளை திரும்ப தங்களுக்குள் காணும்போதுதான் ஒருசிலர் மட்டும் இவர்களின் ஏமாற்று வித்தைகளை உணர்ந்து மனத்தெளிவை பெற்றுள்ளார்கள். ஆனால் பெரும்பாலான மக்களுக்கும், பெரும்கூட்ட ஜனங்களுக்கும் இவர்களின் ஏமாற்றுகளை விளங்கிக்கொள்ளாமல், செம்மறி ஆட்டுக்கூட்டமாக மறுபடியும் அடுத்த மாத கூட்டத்துக்கு கடன் வாங்கியாவது பஸ்சைப்பிடித்து அதே ஊழியர்களை தேடி படையெடுக்கிறார்கள்.
இதனால்தான் இயேசுகிறிஸ்து யோ 6:39ல்
வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அதில்தான் நித்திய ஜீவன் உண்டு என்றார்.
அந்த உபதேசத்தை
பெரோயா சபையினர் பின்பற்றினர் என்று அப் 17:10-11ல் எழுதியுள்ளது. அப் 16:4,5ல் எழுதியபடி அப்போஸ்தலர் வசனத்தை இவர்களுக்கு விளங்க வைத்ததினால் அன்றைய சபைகள்
விசுவாசத்திலும் ஸ்திரப்பட்டு நாளுக்குநாள் பெருகின என்று காண்கிறோம்.
ஒரு ஊரில் திருடனை பிடிக்க அந்த கிராம மக்கள்
திருடன், திருடன் பிடியுங்கள் என்று கத்திக்கொண்டு ஓடுகிறார்கள். ஒளிந்திருந்த திருடன் அவனும் இக்கூட்டத்தில் சேர்ந்துக்கொண்டு அவனும்
திருடன் திருடன் பிடியுங்கள் என்று கத்திக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக ஓடும்போது எப்படி உங்களால் திருடனை அடையாளம் கண்டுக்கொள்ளமுடியும்?. அவனும் உங்கள் கூட்டத்தில் அதே பிரசங்கத்தில் பொய் பேசிக்கொண்டே
கள்ளத்தீர்க்கதரிசிகளைப்பற்றியும் பிரசங்கம் பண்ணுகிறானே! உங்களால் அவர்களை அடையாளம் கண்டுக்கொள்ளவே முடியாது.
இதனால்தான் இயேசுகிறிஸ்து
ஓநாய் மாதிரியான ஊழியன் தன்மீது ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்டு உங்களுக்குள் ஒருவனாக ஆட்டுதொழுவத்தில் நுழைவான் என்று எச்சரித்தார். அதன்பின் சபையின் ஆத்துமாக்கள் பலர் இப்படிப்பட்ட ஊழியர்களால் கவரப்பட்டு சபையிலிருந்து (ஆட்டுதொழுவத்திலிருந்து) பஸ் ஏறிபோய் சபையைவிட்டே போய்க்கொண்டிருப்பார்கள். இதைத்தான் ஒட்டுகூட்டத்தில் ஓநாய் வேஷம்மாறி புகுந்து ஆடுகளை கொள்ளையடிப்பது என்பதாகும். ஒரு சில சபைமேய்ப்பர்கள் இதை அறியார்கள். காரணம், அந்த ஆயர்தான் சபை மக்களுக்கு
ஓநாய்களைப்பற்றி உபதேசிப்பதில்லையே!, அந்த சபையில் சரியான போதகம் இல்லையே!, ஆடுகளுக்கு தன்னோடுகூட ஓடிவருவது
திருடன், ஓநாய் என்பதை அவர்களுக்கு அறியவைக்க அங்கு யாரும் இல்லை.
ஒரேமாதிரி ஆட்டுப்போர்வை போர்த்தி வேஷம் மாறியதால் மற்ற ஆடுகளுக்கும்
ஓநாய் வேஷமிட்ட திருட்டு ஆட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையே! எப்படிப்பட்ட சூதும், வஞ்சகமும், ஞானமும் நிறைந்தவன்
பிசாசு என்பதை உணருங்கள். வசனத்தின்மூலம்மட்டுமே நீங்கள் அவனை அடையாளம் கண்டுக்கொள்ளலாம். இதைத்தான் இன்றைய கிறிஸ்தவ
உலகில் நீங்கள் அன்றாடம் காணும் பிசாசின் வஞ்சனை - சூழ்ச்சியின் திட்டம் ஆகும். மறுபடியும் கூறுகிறேன் ஜாக்கிரதை!
இவர்களும் கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள் ஜாக்கிரதை
என்று அடிக்கடி தங்கள் பிரசங்கத்தில் கூறுவார்கள். தங்களை நீங்கள்
அடையாளம் கண்டுக்கொள்ளாமல் இருக்கவே தங்கள் பிரசங்கத்தின் மத்தியில்
ஊறுகாய் மாதிரி இதை அவ்வப்போது சேர்த்துக்கொள்வார்கள். நீங்கள்
எல்லாரும் எவ்வளவு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறீர்கள் பார்த்தீர்களா?
இப்படிப்பட்ட வஞ்சகம், சூது உள்ள ஊழியர்களையும் அடையாளம் காண்பித்து ஆவிக்குரிய சபைகளுக்குள்ளேயே இவர்கள் இருப்பதையும் என் வாசகர்களுக்கு ஜாமக்காரன்மூலம் அடையாளம் காட்டவேண்டிய கடமையும் எனக்குண்டு. இவைகளோடுகூட
CSI, லுத்தரன், மார்தோமா போன்ற சபைகளில் மக்கள்போடும் காணிக்கைகளை பள்ளி, கல்லூரி ஏழை மாணவர்களிடம் வசூலித்த பணங்களை
கொள்ளையடிக்கும் மலை விழுங்கிகளையும் நான் அடையாளம் காட்டியாகவேண்டுமே! இதுதானே தேவன் எனக்கு ஒப்படைத்த ஊழியம். இப்படியிருக்க நீங்கள் என்னிடம்
ஆறுதல் பிரசங்கங்களை ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்தால் எப்படி? அவைகளையும் அவ்வப்போதுமட்டுமே எழுதுவேன் அவ்வளவுதான். மிக ஆபத்தான சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். மற்றொரு பக்கம்
கிறிஸ்துவின் ஊழியர்கள் என்ற பெயரில் நூற்றுக்குநூறு
பொய் தீர்க்கதரிசனம் கூறி பல அடையாளங்களை காண்பித்து அப்படியே உங்கள்
காணிக்கைகளையெல்லாம் அள்ளிக்கொண்டுபோய் தங்கள்
மனைவி பெயரில் அல்லது பினாமி பெயரில் கோடிகளாக பேங்க்கில் சேமிக்கும்
ஓநாய்களையும், உங்களுக்கு அடையாளம் காண்பிக்கும் மிகப் பெரிய பணி என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் நான் நிறைவேற்றவேண்டுமே! ஆகவே தயவுசெய்து எழுதும் என்னையும், என் ஜாமக்காரன் பத்திரிக்கையின் நோக்கத்தையும் புரிந்துக்கொள்ளுங்கள்.
நம்
CSI, லூத்தரன் ஆராதனைக்குபோனாலும்
CSI பிஷப்மார்களின் லீலைகளைப்பற்றியும் பிஷப் போகும் தவறான இடங்கள், பழகும் பெண்களின் புகைப்படங்களையும், அவர்கள் வீடுகளையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டு மக்கள்முன் கேவலப்படுத்துகிறார்கள்.
ரெய்னி ஆஸ்பத்திரியில் ஒரு பிஷப் அடிக்கடி தொடர்புக்கொள்ளும் ஒரு பெண்,
நகரி ஆஸ்பத்திரியில் ஒரு பெண், பிஷப்பை தேடிவரும் ஒரு
டீச்சர் இப்படி நீண்டுகொண்டுபோகிறது பிஷப்மாரைப்பற்றிய ஆபாச குற்றச்சாட்டுகள்!
பரிசுத்தம் எங்கே?
மற்றொரு பக்கம் பிஷப்மார்களும், கூட உள்ளவர்களும், உதவி செய்யும் குருமார்களும் மக்களின் காணிக்கைகளை
கல்லூரி மாணவி, மாணவர்களின் டொனேஷன் பணங்களை கல்லூரி வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் அப்படியே அள்ளிக்கொண்டு போகிற பிஷப்மார்களின் மனசாட்சியற்ற செயல்கள்,
அன்றைய மிஷனரிகள் சபையின் ஏழைமக்களுக்காக வாங்கிபோட்ட
ஆலய நிலங்களை விற்கும் கொடுமை, முடிவுக்கு வராமல் நீண்டுக் கொண்டுபோகிறது.
நீதிமன்ற விசாரணை இன்னும் நீளுகிறது. மாடரேட்டரும் குற்றவாளி லிஸ்ட்டில் இருக்கும்போது நீதி எப்படி கிடைக்கும். இந்த விவகாரத்தை இன்னும் எத்தனை காலம் சகிப்பது? ஆலய ஆயர்களைப்பற்றி கூறவே வேண்டாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு எங்குதான் போகிறது? நம் சபை நிலை இப்படி? பெந்தேகோஸ்தே சபைகளின் நிலை அப்படி! என்ன செய்வது? இப்படி பல கிறிஸ்தவர்கள் புலம்புகிறார்கள்!.
பெந்தேகோஸ்தே சபைக்குபோனால் எங்கள் பிள்ளைகளுக்கு
டான்ஸ் கற்றுக்கொடுத்து சினிமாவில் நடிகைகளாகும் ஆசையை ஞாயிறு பள்ளியிலேயே தூண்டிவிடுகிறார்கள். பிள்ளைகள் நடிகைகளாக மாறிவிடுவார்களோ என்ற பயம் பெற்றோர் உள்ளத்தில் உருவாகிவிட்டது. நம் பிள்ளைகளை எங்குதான் அனுப்புவது.
இப்போது கிறிஸ்தவ
TV நிகழ்ச்சிக்கு எல்லா பாட்டுக்கும் சின்னத்திரை நடிகைகளை பணம் கொடுத்து அழைத்து அந்த
பெண்களை ஆடவிடுகிறார்கள். இப்போது வரும் பாடல்களில் இசைக்கருவிகளின் சத்தம் காதை செவிடாக்குகிறது. ஆனால் பாட்டின் வார்த்தைகள் விளங்குவதில்லை. அதில் ஆத்துமாவுக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது. நிறைய பாடல்கள்
குத்துப்பாட்டு ராகங்களில் அமைந்துள்ளது. இன்றைய இளைய சமுதாயம் அதை ரசிக்கும். ஆனால் அவர்களின் ஆத்துமாவுக்கு பிரயோஜனம் ஏதும் இராது.
களையெடுக்கும் கண்ணம்மா என்ற பாடலை விரும்புகிறவர்கள் யாரும் ஆழமான அர்த்தமுள்ள பாடல்களை விரும்பி கேட்பதில்லை. இந்த நிலை நீடித்தால் கிறிஸ்தவ மக்களின் குடும்பம் அதிலுள்ள பிள்ளைகள் யாவரும் கிறிஸ்தவ சாட்சி இழந்துபோகும் பெரும் அபாயம் ஏற்படபோகிறது. இது என்னமாய் முடியுமோ? இதே பெந்தேகோஸ்தே சபை ஊழியர்கள்
வல்லமை, தீர்க்கதரிசனம், அந்நியபாஷை என்ற பெயரில்
பொய்களை சபைகளில் அள்ளி தெளிக்கிறார்கள். கடைசிக்கால அறிகுறிகள் அப்படியே இவர்களில் காணப்படுகிறதே! கைகளைத்தட்டி பாடல் பாடுவதில் தவறில்லை, அதை இன்னும் தட்டுங்கள் என்றும், இன்னும் வேகமாக தட்டுங்கள் என்றும் மனோதத்துவ முறையில்கூறி சபை மக்களை ஆடவைத்து,
அலரவைத்து ஆலய ஆராதனையின் கனம் (ரெவரென்ட்)தன்மை நீக்கப்பட்ட ஆராதனையாக பல சபைகளில் காண்கிறேன். மக்களை சத்தம்போட வைக்க கிளர்ச்சியுடன்கூடிய பரவச பாடல்கள்மூலம் உணர்ச்சியை மனோதத்துவமுறையில் தூண்டிவிடுகிறார்கள். இவர்களின் பிரசங்கமும் ஒரு சில நேரத்தைத்தவிர உப்புசப்பு இல்லாத பிரசங்கமாக இருக்கிறது. நானும் ஆவிக்குரிய சபைக்கு போனேன்,
வல்லமை பெற்றேன், அபிஷேகம் பெற்றேன்,
அக்கினி பெற்றேன் என்று இப்படிப்பட்ட சபைக்கு செல்லும் சிலர் கூறி பெருமையடித்து கொள்கிறார்கள். சபையில் சத்தம் போடாதவர்களை ஒரு அற்பபார்வை பார்த்துப்போகிறார்கள். அதோடு அருவருப்போடுள்ள பார்வையும், அலட்சிய பார்வையும் இணைத்து இவர்களைப் பார்த்து இவர்கள்
போலி பெருமையில் மிதந்து செல்கிறார்கள்.
இப்படி
CSI, லூத்தரன், பெந்தேகோஸ்தே போன்ற எல்லா சபைகளும் ஒவ்வொரு விதத்தில் பயங்கரமான சூழ்நிலையில் இருந்தால்
நாங்கள் எங்குதான் ஆராதிக்க செல்வது என்று கேள்வி கேட்டு எழுதும் மக்களுக்கு நான் (ஜாமக்காரன்) என்ன பதில் சொல்வேன்? கிறிஸ்தவ பிள்ளைகள் ஆலயத்தைவிட்டு திரும்பும்போது
அந்நியபாஷையை விளையாட்டாக சபை மக்கள் உளறுவதுபோல் ஒருவருக்கொருவர் உளறி காண்பித்து சிரித்து பேசி
பகடி செய்து மகிழ்கிறார்கள். சபைகள் இந்த நிலையிலிருந்து மாறாதா? சரியான சபையை கர்த்தர் காட்டமாட்டாரா? என்று பலர் கேட்கும் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.
இந்த புதிய வருட ஆரம்பத்தில் இவைகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகிறது ஆகவே எழுதினேன். இதை பிரசங்கமாக எடுத்துக் கொள்கிறீர்களோ? வேறு விதத்தில் வழமையாக எப்படி நினைத்துக்கொள்கிறீர்களோ அறியேன். வேதபுத்தகத்தை
தேவன் கிருபையாக உங்கள் பாஷையிலேயே மொழிபெயர்த்து உங்கள் கரத்தில் கொடுத்துள்ளார். தினமும் கவனமாக வாசித்து, தியானித்து ஆவியானவரின் உதவியோடு அவரவர் ஆத்துமாவை காத்துக்கொள்ளுங்கள். நான் வேறு என்ன சொல்லமுடியும். தொடர்ந்து ஜெபிக்கிறேன். |