|
 |
|
ஏமாறாதே!
|
ஏமாற்றாதே! |
நான் வாசித்தது - நான் பார்த்தது |
மேடையில் பலர் யூத ராஜசிங்கத்தை பார்த்தார்கள்.
தேவனின் கண்களை பிரத்யட்சமாக கண்டார்கள்
என்று சகோ.வின்சென்ட் செல்வகுமாரின் 2010 டிசம்பர் மாத
அற்புத இயேசுவின் தொனி பத்திரிக்கையில் பக்கம் 27ல் ஊழிய செய்திகள் தலைப்பில் மேற்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது. சேலம் நகரத்தில் நடந்த கூட்டத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் பிரசங்கித்தபோது மேலே குறிப்பிட்டவாறு
பிதாவின் கண்களை கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் கண்டதாக அந்த பத்திரிக்கையில் இந்த செய்தியை எழுதியுள்ளார்கள். இது நானே வாசித்ததும் அறிந்ததுமாகும்.
சேலத்தில்தானே இந்த நிகழ்ச்சி நடந்ததாக அந்த பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்! நானும் சேலத்தில்தான் இருக்கிறேன். இதை நேரில் பார்த்த
சேலம் நண்பர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து நேரில்வந்து என்னை கண்டு தாங்கள் அந்தகூட்டத்தில் பார்த்ததை அறிவிக்கமுடியுமா? தயவுசெய்து ஏதாவது ஒரு செவ்வாய்கிழமை நீங்கள் என்னை நேரில் சந்தித்து இதைக்குறித்து விவரித்துகூறி விளக்கி எனக்கு உதவிசெய்யுங்களேன்!
என் தொலைபேசி எண்: 0427-2387499 ஆகும். தயவுசெய்து தொலைபேசியில் இந்த விவரத்தை விவரிக்கவேண்டாம். என் வீட்டுக்கு நேரில் வாருங்கள். சிரமம்பாராமல் இந்த விஷயத்தை பகிர்ந்துக்கொள்ள வாருங்கள். வாக்குவாதம் செய்யும் நோக்கத்துடன் வரவேண்டாம். நீங்கள் கண்டதை விவரித்தால்போதும். நானும் உங்களுடன் வேத வசனத்தின் மூலம் அவைகளைக்குறித்து பேச அனுமதி கொடுங்கள். மேலே கண்டது
பிசாசின் செய்தி மட்டுமல்ல, அது பொய் செய்தியுமாகும். அதற்கான விளக்கம் வேதவசனமூலம் கொடுக்க வாஞ்சிக்கிறேன்.
கோயமுத்தூரில் இயேசுவின் இரத்தம்:
கோயமுத்தூரில் நடந்த கூட்டத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் பிரசங்கித்ததை
ஏஞ்சல் டிவியில் காட்டினார்கள். நானும் அதைக் காண நேர்ந்தது. பிரசங்கம் முடித்து அவர் ஜெபிக்கும் வேளையில் அவர் கூறுகிறார். இதோ
சிவந்த வானத்தைக் காண்கிறேன். இயேசுவின் இரத்தத்தின் துளிகள் கூட்டத்தின்மீது
தெளிப்பதை காண்கிறேன். சிலருடைய உடைகளில், கைகளில் அந்த இரத்த துளிகள் விழுந்திருப்பதை நீங்களே கண்களை திறந்து பாருங்கள். பல பெண்களுடைய கைகளில், உடைகளில்
இரத்த துளிகள் காணப்பட்டதாக அந்த சாட்சி கூறுகிறது. |
சகோ.வின்சென்ட் செல்வகுமார் பத்திரிக்கையிலிருந்து
மேலும் சில பொய் சாட்சிகள்..............
தவறான பொருத்தனை - தவறான சாட்சி |
சகோ.வின்சென்ட் செல்வகுமார் பத்திரிக்கைக்கு சாட்சி எழுதுவோம் என்ற எங்கள் பொருத்தனையை கர்த்தர் கேட்டார். எங்கள் பேரன் சிலரால் கடத்தப்பட்டான், பத்திரிக்கையில்
சாட்சி எழுதுவோம் என்று பொருத்தனை செய்து ஜெபித்தோம். உடனே கடத்தல்காரர்களின் கண்களில் தயை கிடைத்தது.
துலுக்கப்பட்டியில் கடத்திய அவனை சேலத்தில் கொண்டுவந்து விட்டுச்சென்றனர்.
- வசந்தா, துலுக்கப்பட்டி.
குறிப்பு: பையன் கிடைத்துவிட்டது உண்மையாக இருக்கலாம். ஆனால் பத்திரிக்கைக்கு சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்ததால்தான் பையன் கிடைத்தான் என்பது
நூற்றுக்குநூறு பொய்யாகும். நம் தேவன் அந்த மாதிரி
பொருத்தனையை அங்கீகரிக்கமாட்டார். ஆத்துமாவுக்கு பிரயோஜனமான தீர்மானம் அல்லது பொருத்தனை செய்து ஜெபிக்கலாம். இன்று முதல் நான் பொய் பேசமாட்டேன், இன்று முதல் மதுபானம் குடிக்கமாட்டேன் என்மேல் இறங்கும் என்று ஜெபித்தால் அதன் அடிப்படையில் தேவன் உங்களுக்கு இறங்கி காரியங்களை வாய்க்கச் செய்யலாம். பத்திரிக்கையில் சாட்சி எழுதுவதால் உங்கள் ஆத்துமாவுக்கு என்ன பிரயோஜனம்? கர்த்தருக்கு எப்படி மகிமை உண்டாகும்? பத்திரிக்கை நடத்துகிற அந்த ஊழியருக்குத்தான் பெருமை சேரும். கர்த்தருக்கு போகவேண்டிய மகிமை ஊழியருக்கு போய் சேர்ந்துவிடும். மேலே குறிப்பிட்ட சாட்சியில் கடத்தல்காரர்களில் தயை கிடைத்ததாக எழுதியுள்ளார். கர்த்தரின் கண்களில் எங்களுக்கு தயை கிடைத்ததாக அறிவித்திருக்க வேண்டும். அந்த பெருமை கர்த்தருக்கு சேரவேண்டியது. இப்போது பெருமை கடத்தல்காரருக்கு சேர்ந்துவிட்டது. இதை வின்சென்ட் செல்வகுமாரை உயர்த்தும் விளம்பரம் என்று கூறலாம். சாட்சி என்று கூற இயலாது. சங்கீதக்காரன் இப்படி கூறுகிறான்:
கர்த்தர் என் ஆத்துமாவுக்கு செய்ததை அறிவிப்பேன் என்கிறான். அதுதான் சரியான சாட்சி ஆகும். இதை எடுத்து வெளியிட்ட வின்சென்ட் செல்வகுமார் இந்த விஷயத்தில் யோசிக்காமல் தவறு செய்துவிட்டார். இந்த மாதிரி பல பத்திரிக்கைகளில் ஊழியனை உயர்த்தும் சாட்சிகளை ஏராளமாக காண்கிறேன்.
|
அக்கினியும், மஞ்சளும் கலந்த ஒளி இறங்கி வந்தது. |
அக்டோபர் 8, 9 தேதிகளில் இராமநாதபுரத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் பேசி அங்கு நடந்த கூட்டங்களை அப்படியே
ஏஞ்சல் டிவியில் மறுபடியும் காட்டினார்கள். அந்த டிவி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நிர்மலா என்பவர் தன் சாட்சியை கீழ்கண்டவாறு எழுதுகிறார்.
"அதை நாங்கள் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தபோதே சகோ.வின்செனட் செல்வகுமார் அவர்களின் ஜெபவேளையில்
மஞ்சளும், அக்கினியும் கலந்த ஒளி டிவி பார்த்துக்கொண்டிருந்த எங்கள் மேலும் இறங்கிவந்தது" என்று எழுதுகிறார்.
- நிர்மலா, சென்னை.
இதுவரை நீங்கள் வாசித்த வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் மேலே கூறின இந்த தரிசனங்களும், வெளிப்பாட்டையும், அதை சாட்சியாக சிலர் எழுதிய கடிதத்தையும் வின்சென்ட்டின் தீர்க்கதரிசனத்தையும் உங்களால் நம்பமுடிகிறதா? வேத வசனத்தின் அடிப்படையிலா? இவர் தரிசனம் இருக்கிறது.
இயேசுவின் இரத்தம் இவர்களுக்கு என்ன பைப் தண்ணீரா? அல்லது
மழை தண்ணீரா? இவர் ஜெபித்தவுடன் இரத்த தண்ணீர் ஜெபிக்கவந்த மக்கள் மீது தெளிக்கப்பட்டதாம்? என்ன விளையாட்டு இது?
இயேசுவின் இரத்தம் அத்தனை சீப்பாக, சுலபமாக இவர்களுக்கு மாரியம்மன் கோவில்
மஞ்சள் நீராட்டம்போல ஆகிவிட்டதே! இவர் கூட்டத்தில் கூறியதை கேட்ட மக்கள் அதை அப்படியே நம்பி
அக்கினியும் மஞ்சளும் கலந்த ஒளி இறங்கி வந்ததாக சிலர் சாட்சி எழுதியிருக்கிறார்களே!
இதற்கு என்ன அர்த்தம்? இதன்மூலம் என்ன ஆசீர்வாதத்தை இவர்கள் அடைந்தார்கள் என்பதை இவர்கள் எழுதவில்லையே! அதை வின்சென்ட் செல்வகுமாராவது விளக்குவாரா? மஞ்சளும் - அக்கினியும் கலந்த ஒளி இறங்கியதற்கு விளக்கம் அவரால் கொடுக்க இயலுமா? என்ன ஏமாற்றுத்தனம் இது?
வின்சென்ட் பத்திரிக்கையில் சாட்சி எழுதுவோம் என்று பொருத்தனை செய்து ஜெபித்தவுடன் கடத்திய பிள்ளையைகூட கொண்டுவந்துபோட்டுவிட்டார்களாம். இவர்
பத்திரிக்கையில் எழுதும் சாட்சிக்கு அவ்வளவு வல்லமையா? மக்கள் தவறாக பொய்யாக அல்லது மிகைப்படுத்தி சாட்சி எழுதுகிறார்கள் என்பதை வின்சென்ட் அறியாதவர் அல்ல, அதை வெளியிடும் வின்சென்ட் செல்வகுமாருக்கு அப்படி பொருத்தனை செய்வது தவறு என்று அவர்களை எச்சரித்து தடுக்கமுடியவில்லையே! பத்திரிக்கையில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை செய்வதுமூலம் அதை எழுதியவரின்
ஆத்துமாவுக்கு என்ன நன்மை ஆண்டவருக்கு என்ன பெருமை? அதற்கு பதில் கர்த்தாவே,
வேதத்தை இனி ஒழுங்காக வாசிப்பேன், பாவத்தை விட்டுவிடுகிறேன்,
ஒப்புரவாகிவிடுகிறேன் என் பிள்ளையை காப்பாற்றும் என்பதை போன்ற
பொருத்தனை செய்தால் கொஞ்சமாவது ஆவிக்குரிய ஜீவியத்துக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும்.
அக்கினியும், மஞ்சளும் இறங்கியதாக கூறிய வின்சென்ட் செல்வகுமார் வாசகர்களுக்கு இதன்மூலம் என்ன கூறவிரும்புகிறார். கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்களையும் மடையராக்கி இதை அவர் பத்திரிக்கை வாயிலாக வாசிக்கும் வாசகர்களையும் மடையராக்கி சாட்சி கூறிய அந்த கூட்டத்தில்
தானும் அதில் ஒருவன் என்று கூறாமல் கூறி வெளிப்படுத்திவிட்டாரே! இது மிகப்பெரிய ஆவிக்குரிய மோசடி இது? கிறிஸ்தவ ஆவிக்குரிய நல்ல
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்முன் இப்படிப்பட்ட ஆவிக்குரிய மோசடி கூட்டங்கள் நடக்கிறது. அவரும் இப்படிப்பட்ட சில பொய் ஊழியர்கள் கூட்டத்தில் அடிக்கடி கலந்துக்கொள்கிறார். ஆனால் அவர் எப்படி இந்த மாயமாலத்தை விளங்கிக்கொள்ளமல் இருக்கிறார் என்பதை கேள்வி கேட்க வைக்கிறது. கர்நாடகா முதன்மந்திரி
எடியூரப்பா போன்ற மந்திரிகளும், மிக உயர்ந்த போலீஸ் அதிகாரிகளும்
காமலீலை நித்தியானந்தாவின் கால்களை பிடிக்கவில்லையா! ஆகவே கிறிஸ்தவ அதிகாரிகளும் வேதம் தெரிந்த பாஸ்டர்களும் இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளிடம் விழுவது பெரிய ஆச்சரியம் இல்லைதான்.
பரிசுத்த ஆவியை பெற்றேன் என்று கூறும் பாஸ்டர்மார்களை நான் கேட்கிறேன்,
குறிப்பாக பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்கள் இவர் தரிசனத்தை உண்மை என்று நம்புகிறீர்களா? மேலே குறிப்பிட்டவைகளை பொய்சாட்சி என்று எனக்கு எப்படி வாசகர் பலர் கடிதம் எழுதி அறிவித்தார்களோ! அப்படித்தான்
ஊட்டியைப்பற்றி இவர் கூறிய தீர்க்கதரிசனமும் இருந்தது என்பது இப்போதாவது உங்களால் உணரமுடிகிறதா?
சாது சுந்தர் செல்வராஜ் அவர்களும்,
வின்சென்ட் செல்வகுமார் அவர்களும் ஏஞ்சல்
TV மூலமாக கிறிஸ்தவர்களையும், பாமர மக்களையும், புறமதத்தவர்களையும் எண்ணமாய் ஏமாற்றுகிறார்கள்?. இந்த பொய்களை காண சகிக்காத சிலர் இந்த
TV சேனலை நிறுத்த வழி இல்லையா என்று அங்கலாய்க்கிறார்கள். குறிப்பாக படத்தில் கண்டபடி டிவியில் இவர்கள் இருவரின் கலந்துரையாடலில் ஏராளமான பொய் தரிசனங்கள் செய்தியாக அறிவிக்கப்படுகிறது.
வின்சென்ட்
கூட்டத்தில் கலந்துக்கொண்டால் யூத ராஜ சிங்கத்தையும், தேவனின் அதாவது
பிதாவின்
கண்களையும் பிரத்யட்சமாக, அதாவது முகமுகமாக காணமுடியும் என்பதை இவர்கள் இப்படி
எழுத, இப்படிப்பட்ட முட்டாள்தனமான தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? உங்களால்
நிதானிக்கமுடிகிறதா? இவர் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் உடையில் இவர்
ஜெபிக்கும் வேளையில் இரத்தம் தெளித்திருப்பதை பார்க்கிறேன் என்று இவர்கூற
கொஞ்சம்கூட கூச்சப்படவில்லையே! அந்த இரத்தகரையோடு அந்த பெண்கள் எப்படி
கூட்டத்தைவிட்டு மக்கள்முன் வெளியேறிருப்பார்கள். இரத்தம் எங்கள் கைகளிலும்
உடையிலும் நனைந்திருப்பதை நாங்களே பார்த்தோம் என்று கூச்சம் இல்லாமல் சாட்சி எழுதிய
அந்த பெண்களுக்கு வெட்கம் இல்லாமல் போனதே! அப்படி எழுத எப்படி அவர்களுக்கு மனம்
வந்தது. இவர்களெல்லாம் கிறிஸ்தவர்களா?
பல வருடங்களுக்கு முன்பேயும்,
சமீபகாலத்தில் 2 வாரங்களுக்கு (ஜன 2011) முன்பேயும் இந்த இரட்டை பொய்யர்களைப்பற்றி ஏராளமான கடிதங்களும்,
பெண்கள் சம்பந்தமான குற்றசாட்டுகளும், இவர்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்களின் கண்ணீருள்ள சாட்சிகளும் வந்துக்கொண்டிருந்தன. பலர் இது விஷயமாக
ஃபாதர்.பெர்க்கமான்ஸ் அவர்களையும், உசிலம்பட்டி பாஸ்டர்.ஜோசப் பாலசந்தர் அவர்களையும், இன்னும் பிரபல பாஸ்டர் ஊழியர்களையும் சந்தித்து இவ்விவரங்களை அறிவித்து இவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இவர்களைப்பற்றி புகார் கூறியவர்களின் நோக்கத்தில் ஒன்று ஏஞ்சல்
TVயை நிறுத்தவேண்டும் என்பதாகும்.
பல வருடங்களுக்குமுன்பே சகோ.வின்சென்ட் செல்வகுமாருக்கு அவரைப்பற்றி எனக்கு வந்த செய்திகளை, கடிதங்களைக்குறித்து தனி கடிதம் எழுதினேன். அவரும் அதற்கான பதிலை மிக திருப்தியான முறையில் எனக்கு பதில் எழுதினார். அது ஏஞ்சல் டிவி ஆரம்பிக்காததற்கு முன் உள்ள காலம். ஆனால் ஏஞ்சல் டிவியை சாது சுந்தர் செல்வராஜ் அவர்களுடன் இணைந்து நடத்த தொடங்கியபின் குறிப்பிட்ட புகார்கள் எண்ணிக்கை அதிகமானது. இது இவர்கள் வசனத்திலிருந்து விலகி எங்கோ போய் கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது. மக்களை அந்த தவறான வழியில்கூட அழைத்து செல்வதால்தான் இதை வாசகர்களை எச்சரிக்கும் நோக்கத்தோடு எழுத வேண்டிவந்தது.
நான் என்ன சொல்கிறேன் என்றால்
ஏஞ்சல்
TV வந்ததால் பல கிறிஸ்தவர்கள்
TV, சினிமா, சீரியல் பார்ப்பதை குறைத்துள்ளார்கள்.
ஏஞ்சல்
TV நல்ல ஒரு மீடியா ஆகும். அதில் நல்ல விஷயங்கள் பலவும் சில நல்ல செய்திகளையும் அவ்வப்போது கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. குறிப்பாக வியாழக்கிழமை தோறும் ஆராய்ச்சி அரங்கம் என்ற தலைப்பில் பெங்களுர் பாஸ்டர் ஒருவர் மிக நல்ல நிகழ்ச்சிகளை தருகிறார். குறிப்பாக வேதகம சந்தேகங்கள், கேள்வி-பதில் பகுதிகளை நல்ல வசன ஆதாரத்தோடும், குழப்பமான வேதாகம விஷயங்களை உபதேச குழப்பம் உண்டாகாதபடி, ஞானத்தோடு ஆலோசனைக்கூறி அந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இப்படிப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை ஊறுகாய் போல்தான் ஏஞ்சல் டிவியில் அனுமதிக்கிறார்கள். இவர்கள் தங்கள்
பொய்வெளிப்பாடுகளையும், தேவையற்ற சம்பாஷனைகளையும் நிறுத்திவிட்டு இவர்கள் இதைப்போன்ற நல்ல செய்திகளை ஆவிக்குரிய நிகழ்ச்சிகளை இந்த டிவி நிகழ்ச்சியில் வரவைக்க இவர்கள் முயலுவார்களோயானால் அது கிறிஸ்தவ மக்களுக்கு நல்லது. ஏஞ்சல் டிவியை
நிறுத்திவைப்பதைவிட நான் குறிப்பிட்ட நல்ல ஆவிக்குரிய நிகழ்ச்சிகளை வெளியிடும் முயற்சியால் இறங்குதல் கிறிஸ்தவர்களுக்கு நல்லது. ஆகவே அந்த டிவி சேனலை நிறுத்த முயற்சிக்க வேண்டாம். ஆனால் குத்துப்பாட்டுகள்,
சாது சுந்தர் செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் ஆகியவர்களின் பொய் தீர்க்கதரிசனங்களின் சம்பாஷனைகள், பரலோக பொய்கள் இனி வெளிவராமல் இருக்க யாராவது முயற்சி எடுத்தால் நல்லது. ஆனால் அது இயலாது என்றுதான் தோன்றுகிறது. காரணம் அந்த பொய்கள் மூலமாகத்தான் இவர்களுக்கு பணவரவு வியாபாரம் செழிக்கிறது ஆகவே அவர்கள் டிவி நிகழ்ச்சிகளை நிறுத்தமாட்டர்கள். ஜெபிப்போம். இப்படி தவறான செய்திகள் தொடர்ந்து வந்தால் அந்த ஏஞ்சல்
TVயை காண்பவர்கள் அவர்களுக்கு பணம் அனுப்புவதை நிறுத்தி அவர்களின் இப்படிப்பட்ட முட்டாள்தனமாக மக்களை ஏமாற்றும் இப்படிப்பட்ட காட்சிகளை
TVயில் காண்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். பணம் அனுப்புவதற்கு பதில் பல ஆயிரம் எதிர்ப்பு கடிதங்கள் ஏஞ்சல்
TVக்கும், வின்சென்ட் செல்வகுமாருக்கும் எழுதி அறிவியுங்கள்.
 |
நரகத்துக்கு தினம் விசிட் அடிக்கும்
ஆசீர்வாதம்
TV முதலாளி சகோ.ஆலன் பாலுக்கும் உங்கள் எதிர்ப்பு கடிதங்கள் எழுதுங்கள். ஜெபத்தோடு செய்யுங்கள்.
ஓரளவு பலன் கிடைக்கும். கொஞ்சமாவது மக்கள் எதிர்ப்பை இவர்கள் மதிக்கிறார்களா என்று பார்ப்போம்.
ஏஞ்சல்
TV அல்லது ஆசீர்வாதம் டிவியை பார்த்து ரசிக்கிறவர்கள், ஏஞ்சல்
TVயையும், ஆசீர்வாதம் டிவியையும் பணத்தால் தாங்குகிறவர்கள், ஒவ்வொருவரும்
இவர்களுக்கு கடிதம் எழுதி இவர்களை கண்டிக்காமல் போனால், இவர்கள் தவறுகளை விமர்சனங்களாக இவர்களுக்கு எழுதி அறிவிக்காமல் போனால் இந்த
பொய் தீர்க்கதரிசனம் வேறுவிதமான, மோசமான சாட்சியில்போய்முடியும். கிறிஸ்தவர்கள் இதை தட்டிக்கேட்காமல்போனால் பொதுமக்களே இவர்கள்மேல், இவர்கள் கூட்டத்தில் கல்லெறியும் காலமும் வரும். அப்படி நேர்ந்தால் அதையும் இவர்கள் இரத்த சாட்சியாக மாற்றி பெருமைப்பட்டு கொள்வார்கள். என்ன செய்ய?
வின்சென்ட் செல்வகுமாரும்,
சாது சுந்தர் செல்வராஜ் ஆகிய இந்த இரட்டையர் இப்படிப்பட்ட பொய் கற்பனைகளையும், தரிசனங்களையும் கூறக் காரணம் என்னவென்றால் இவர்கள் இருவரும் பயிற்சிப் பெற்ற
பட்டறை பாளையம்கோட்டை இயேசு வருகிறார் ஊழியம் உரிமையாளர் மரித்த சகோ.ஜான் ரபீந்தர நாத் அவர்கள் கொடுத்த பயிற்சியாகும். அங்கு இந்த இருவரும் நண்பர்களாக இணைந்து இந்த இரண்டு பேரும் சகோ.ஜான் ரபீந்தர நாத் கூறிய அத்தனை
பொய் பரலோக கற்பனைகளையும் அப்படியே காப்பியடித்து அதை இப்போது நடைமுறையாக்கியுள்ளனர். அநேக காலங்களுக்குபின் இவர்களுக்கு
பணம் மிகுதியாக சேர்ந்தவுடன் இப்போது தாங்கள் காப்பி அடித்த தவறான தரிசனங்களை ஒவ்வொன்றாக டிவியிலும், பத்திரிக்கையிலும், கூட்டத்திலும் அவிழ்த்துவிடுகிறார்கள்.
சகோ.ஜான் ரபீந்தர நாத் அவர்களின் பழைய பத்திரிக்கைகளை நீங்கள்தேடி கண்டுபிடித்தால் இவர்கள் கூறும் புளுகுகள் அத்தனையும் சகோ.ஜான் ரபீந்தர நாத் தோட்டத்திலிருந்து எடுத்தது என்பது விளங்கும். இதுவும் என்னமாய் முடியுமோ!
|
சகோ.சாதுசுந்தர் செல்வராஜ் அவர்களின் பொய் சாட்சி: |
சகோ.சாது சுந்தர் செல்வராஜ் ஆரம்ப காலத்தில் கூறியதாவது,
சாது சுந்தர்சிங் அவர்கள் மரித்தப்பின் அந்த ஊழியத்தை செய்ய கர்த்தர் என்னை அபிஷேகித்து என் வாழ்நாள் முழுவதும் திபெத் பகுதியிலேயே ஊழியம் செய்து இரத்தசாட்சியாய் நீ எனக்காக மரிக்கப்போகிறாய் என்றார். அப்படியே அவர் அங்குபோய் வந்தார்.
 |
ஆஸ்ட்ரேலியாவில், திபெத்தில் நடக்கும் ஊழியத்தை விளக்கி பணம் திரட்டினார். அப்போது ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இலங்கை தமிழ் கிறிஸ்தவர்கள் இவர் செய்யும் ஊழியம் உண்மைதானா?
சாது சுந்தர்சிங்கைப் போல நிறைய அற்புதங்களை கர்த்தர் இவர் மூலமாக செய்ததாக எங்களிடம் அறிவிக்கிறார். எங்களுக்கு உண்மை தெரியவேண்டும். எங்களுக்கு இவரைப் பற்றி பெருத்த சந்தேகம் எழுகிறது. இந்தியாவிலிருந்து எங்களுக்கு இவரைப்பற்றி விவரம் அறிவிக்க யாரும் இல்லை என்றார்கள். திபெத்துக்கு நேரில்போய் பார்க்காமல் அங்குள்ளவர்களை விசாரிக்காமல் என்னால் அவர்களுக்கு பதில் எழுத முடியவில்லை.
நோபாளம் வரை இரண்டுமுறை நான் தனியே ஊழியத்துக்கு சென்றேன். அங்குள்ள ஊழியர்களிடம் இவரைப்பற்றி விசாரித்தேன். அவர் குறிப்பிட்ட ஊழியங்கள் திபெத்தில் நடப்பதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றார்கள்.
அவர் திபெத்தில் நடந்ததாக கூறும் சாட்சிகளை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருந்தது. உதாரணத்துக்கு இவர் கூறிய பொய்சாட்சி ஒன்றை மட்டும் கூறுகிறேன்.
இவர்
சென்னையில் ஒரு வீட்டுக்கு திடீரென்று போனாராம் அங்கு பல வருடங்கள் எழுந்திருக்கவோ நடக்கவோ முடியாதபடி,
டாக்டர்கள் கைவிட்டநிலையில் படுக்கையில் இருக்கும்
சிறுவனை கண்டாராம். அவனை வெறுமனே உற்றுப்பார்த்தாக இவர் அறிவிக்கிறார். அந்த பார்வை பட்டவுடன் பையன் எழுந்து நடந்து விளையாட வெளியே போய்விட்டானாம். அந்த வீட்டுபெண்மனி அதிர்ச்சியுடன் வெளியில்வந்து ஐயா,
நீங்கள் யார்? இத்தனை வருடம் ஆடாமல் அசையாமல் கை, கால் அசைக்கமுடியாமல் படுக்கையில் கிடந்த என் பையன் இப்போது எழுந்து ஓடுகிறானே! நீங்கள் என்ன செய்தீர்கள்? என்றாராம். சகோதரி நான் ஒன்றும் செய்யவில்லை. படுக்கையில் இருக்கும் பையனை வெறுமனே உற்றுப்பார்த்தேன் அவ்வளவுதான். அவன் நடக்கமுடியாதவன் என்றோ, பல வருடங்கள் வியாதிப்படுக்கையில் இருப்பவன் என்றோ! அவன் டாக்டர்கள் கைவிட்ட கேஸ் என்றோ! எனக்கு தெரியாது என்றேன். ஐயா,
நீர் இயேசுகிறிஸ்துவா என்றாள். இப்படி போகிறது இவரின் சாட்சியின் கதை.
பலர்
இதைக்குறித்து எனக்கு எழுதினார்கள். உடனே நான் சாது சுந்தர்
செல்வராஜ் அவர்களுக்கு என் வழக்கப்படி கடிதம் எழுதினேன். இந்த சாட்சியை நான்
ஜாமக்காரனில் வெளியிடவேண்டும். ஆனால் அந்த சம்பவத்தின் உண்மையை அறிய விரும்புகிறேன். நீங்கள் சந்தித்த அந்த
பையனின் வீட்டு விலாசம் தரமுடியுமா? என்று கேட்டு எழுதினேன். அதற்கு அன்றைய நாட்களில் அவரே எழுதிய கடிதத்தை நீங்களே வாசித்துப் பாருங்கள்.
|
 |
இந்த கடிதத்தில் அவர் பொய் சாட்சியின் உண்மை வெளிவந்துவிடும் என்று அறிந்து அந்த வீட்டு விலாசம் மறந்துவிட்டேன் என்று எழுதியுள்ளார்.
இது மாதிரி ஒரு ஊழியனின் கண்பார்வையில் ஒருவனுக்கு சுகம் கிடைத்தது என்றால் அது சாதாரண விஷயம் அல்லவே! ஆனால் இவரின் சாட்சியில் சில கேள்விகளுக்கு பதில் வேண்டும்! அந்த பையன் பலவருடம் நடக்க இயலாதவனாக இருந்தது வாஸ்தவமா? அப்படியானால் அவனை டாக்டர்கள் ஏன் கைவிட்டார்கள்? அந்த பையனின் மெடிக்கல் ரிப்பேர்ட் என்ன? இந்த விவரங்களை அறிந்தால் உண்மை விளங்கிவிடுமே! இயேசு செத்துப்போன பெண்ணை பார்த்தார்,
சிறு பெண்ணே எழுந்திரு என்றார். ஆனால் சாது செல்வராஜ் அந்த பையனை
எதுவும் பேசாமல் கண்பார்வையிலேயே சுகப்படுத்தி விட்டார் என்றால் அது சாதாரண விஷயமா? மேலும் அந்த பையனின் தாய் கேட்ட கேள்வியிலேயே சாது செல்வராஜ் அந்த பெண்ணை இதற்கு முன்பார்த்ததில்லை என்று விளங்குகிறது. அதனால்தான் அந்த பெண் அவரை நோக்கி ஐயா, நீங்கள் யார்? என்று கேட்டிருக்கிறாள். அப்படியானால் முன்பின் பழக்கமில்லாத அந்த பெண்ணின் வீட்டுக்கு இவர் ஏன் போனார்? என்ற கேள்விக்கள் நமக்கு எழவில்லையா? இந்த கடிதத்துக்குப்பின்தான் அவர் என்னை முற்றிலும் வெறுக்க ஆரம்பித்தார். வாசகர்களாகிய நீங்களே சொல்லுங்கள், இது பொய்சாட்சி இல்லையா?.
அந்த வீட்டுக்கு இயேசுவைப்பற்றி அவர் சுவிசேஷம் ஏதும் கூறவில்லை, அந்த நடக்க இயலாத பையனுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தவில்லை! பின் எதற்காக அங்கு போனார்? சுகம் பெற்ற பையன் தான் சுகம்பெற்ற சந்தோஷத்தை தன் தாய்க்குதானே அறிவிக்க ஆசைவரும். ஆனால் பையனோ வெளியே விளையாட
ஓடிவிட்டான். இந்த சாட்சியில் எங்கேயோ இடிக்கிறதே! இந்த சம்பவத்தை நம்ப இயலவில்லையல்லவா! தன்னையே இயேசுவாக அல்லவா அந்த வீட்டாருக்கு காண்பித்துவிட்டு பதில் கூறாமல் திரும்பியிருக்கிறார்! இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு இயேசுவை கூற நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததே!
|
ஆந்திராவிலிருந்து திரு.டி.ராஜேந்திரசிங் நாடார் என்பவர் 26ம் தேதி மே 2010 அன்று சாது சுந்தர் செல்வராஜ்க்கு மிக நீண்ட கடிதம் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக, 2008 டிசம்பரில் மிகப்பெரிய யுத்தம் இஸ்ரவேல் நாட்டில் நடக்கும் அப்போது ஐரோப்பாவிலிருந்து ஒருவர் வந்து சமாதானப்படுத்துவார். அவர்தான்
அந்திகிறிஸ்து என்று அடிக்கடி தீர்க்கதரிசனம் கூறினீர்கள். ஆனால் இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லையே? அந்த தீர்க்கதரிசனம் நடக்காமல் இருந்தும் அந்த தீர்க்க தரிசனத்தை 2009 வரை ஏஞ்சல் டிவியில் திரும்ப திரும்ப ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தீர்கள்.
ஒருநாள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சூப்பர் ஸ்டார்.ரஜினிகாந்த் ஸ்டைலில் நின்று கொண்டு என்னைப்பார்த்தார் என்று கூறினீர்கள். சினிமா உலக பாதிப்பு உங்களைவிட்டு போகவில்லையே! இயேசுவை நடிகர்.ரஜினிகாந்த்துடன் ஒப்பிவடுவது சரியா?
மரியாளிடம் தூதன் உன்
கர்ப்பபை எனக்கு வேண்டும் என்று கர்த்தர் கேட்கிறார் என்றீர்கள். வேதத்தில் அப்படி எங்கும் காணவில்லையே! கர்ப்பபை ஆண்டவருக்கு எதற்கு? இந்த செய்தியை
TV யில் திரும்ப திரும்ப ஒளிப்பரப்பினீர்கள். ஏன்? மேலும் ஆண்டவர் சிலுவைபாடுகளை அன்று எருசலேமில் நடந்ததை அப்படியே எனக்கு காட்டினார். உடனே நான் அதை அப்படியே என் வீடியோவில் பதிவு செய்துவிட்டேன் என்று 3 முறை
TVயில் போட்டுகாட்டினீர்கள். உடனே நான் அந்த
VCDஐ ஒருகாப்பி எனக்கு அனுப்புங்கள் நான் பணம் அனுப்புகிறேன் என்றேன். இப்போது அது எங்களிடம் ஸ்டாக் இல்லை என்று உங்கள் அலுவலகத்திலிருந்து பதில் வந்தது. வீடியோவில் பதிவு செய்தேன் என்று கூறினீர்கள் ஏன்? அதை எங்களுக்கு அனுப்பக்கூடாது. அப்படியானால் நீங்கள் பொய் பேசுகிறீர்கள் என்று ஏன் நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் பொய் ஏஞ்சல்
TVயில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஜாக்கிரதை! பொய் பேசும் அனைவரும்
இரண்டாம் மரணமான அக்கினி கடலில் பங்கடைவார்கள் என்று வெளி 21:8ல் கூறியிருப்பதை உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன். இப்படி இந்த சகோதரன்போல் நிறையபேர் சாது சுந்தர் செல்வராஜ்க்கு கடிதம் எழுதி எச்சரிக்கவேண்டும்! அப்போதாவது கொஞ்சமாவது அவருக்கு தெய்வபயம் வருகிறதா! என்று பார்ப்போம். கர்த்தர் சொன்னார் என்று
ஏஞ்சல் டிவி-ஐ முதன்முதல் ஆரம்பித்தார். திடீரென்று ஏஞ்சல்
TV நிறுத்தப்பட்டது. கர்த்தர் என்னோடு பேசி உன்னை
திபெத்துக்குத்தானே அனுப்பினேன். போய் அந்த ஊழியத்தை மறுபடியும் தொடங்கு என்று கர்த்தர் அறிவித்தார் என்று டிவியிலேயே இவர் கூறியதை யாவரும் அறிவோம். (ஆனால் நடுவில் ஏஞ்சல்
TV ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு காரணம் வேறு என்பதை நான் ஜாமக்காரனில் அன்றே எழுதினேன்).
ஆனால் சிலவாரங்களிலேயே
தூதர்கள் கூறினார்கள். நீ மறுபடியும் ஏஞ்சல்
TVயை தொடங்கு நான் உனக்கு முன்பைவிட பெரிய அளவில்
TV நிகழ்ச்சிகளை தொடர உதவி செய்வேன் என்று கூறியதாக இவரே
TVயில் அறிவித்ததை வாசகர்கள் அறிவீர்கள். அப்படியானால் திபெத்துக்கு திரும்பப் போ என்று இவரிடம் கூறிய கர்த்தர் இப்போது எங்கே போனார்? இப்போது இவரிடம் பேச கர்த்தருக்குபதில் தூதன் ஏன் வந்தான். அப்படியானால் இப்போ நடக்கும் ஏஞ்சல்
TV கர்த்தரால் நடத்தப்படுவதல்ல, தூதனால் நடத்தப்படுகிறது என்பது அறியமுடிகிறது! என்றால் அந்த
தூதன் யார்? தயவுசெய்து மக்களின் இந்த கேள்விக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சாது சுந்தர் செல்வராஜ் அவர்களே பதில் கூறுங்கள்.
சகோதரனே! கிறிஸ்தவ மக்கள் முன்புபோல அல்ல! மக்கள் விழித்துக்கொண்டார்கள். ஆகவே இந்த கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.
|
மோகன் சி.லாசரஸ் பொய் சாட்சிகள் |
இதே வழியில்தான்
HIV, எயிட்ஸ் வியாதியை இயேசு சுகமாக்குவதை காண்கிறேன் என்றார் மோகன் சி.லாசரஸ் அந்த வாலிபனை மேடைக்கழைத்தார் வீடியோ எடுக்கப்பட்டது. ஆனால் அவரின் வியாதி சுகமாகவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதே! இந்த சாட்சியில்
இயேசு பொய்யரா? மோகன் சி.லாசரஸ் பொய்யரா? நிச்சயம் இயேசு பொய் பேசமாட்டார். பொய்பேச தேவன் ஒரு மனிதன் அல்ல என்று வேதம் சாட்சியிருக்கிறது. இந்த துணிகரமான
பொய்யை பகிரங்கமாக மேடையில் பேசின மோகன் சி.லாசரஸ் அவர்கள் இதுவரை யாருக்கும் பதில் கூறவில்லையே! இப்படிப்பட்ட
பொய்யர்களோடு சில டாக்டர்களும் நாலுமாவடியில் துணை நிற்பது அவமானத்திலும் அவமானமாகும். இத்தனை தெளிவான ஆதாரங்கள் இருப்பதால்தான் இவர்
பொய்யர் என்ற கடினமான வார்த்தையை துணிந்து உபயோகிக்கிறேன். இதில் சமரசம் செய்ய அல்லது சமாளிக்க வழியில்லையே!
 |
இந்த படத்தில் காணும் சகோதரியையும் அவர் குடும்பத்தையும் நானும் அறிவேன். இவருக்காக ஜெபிக்க எனக்கும் இவர் சார்பில் ஜெபகுறிப்பு அனுப்பியிருந்தார்கள். இரண்டு கிட்னியும் கெட்டுவிட்டது. அதை மருந்தினால் சுகப்படுத்த முடியாது. கிட்னியை அகற்றிவிட்டு வேறு கிட்னி வைத்தால் மட்டுமே இந்த சகோதரி பிழைப்பார். இந்த நிலையில் நாலுமாவடியில் உள்ள
திறப்பின் வாசல் என்ற பெயரில் மோகன் சி.லாசரஸ் அவர்கள் நடத்தும் ஜெபகூட்டத்தில் பங்கெடுத்து அங்கு ஜெபித்தபின் சிறுநீரக (கிட்னி) கோளாறை முற்றிலும் மாற்றி
பூரண சுகத்தை கொடுத்தார் என்று மோகன் சி.லாசரஸ்தான் நடத்தும்
இயேசு விடுவிக்கிறார் பத்திரிக்கையில் 2007 நவம்பர் மாத இதழில் பக்கம் 4ல் இந்த சகோதரியிடம் புகைப்படம் கேட்டுவாங்கி தன் புகழை விளம்பரப்படுத்த சாட்சி வெளியிட்டிருக்கிறார். நாலுமாவடியிலிருந்து ஜெபித்து நாசரேத் வந்து சேர்ந்த எட்டாவது நாளில் 8ம் தேதி டிசம்பர் 2007 இந்த சகோதரி அதே கிட்னி கோளாறால் இறந்துப்போனார். இது இயேசு விடுவிக்கிறார் பத்திரிக்கையில் வெளிவராத சாட்சியாகும்.
பூரணசுகம் தந்ததாக இயேசு விடுவிக்கிறார் பத்திரிக்கையில் இவர் சாட்சி வெளிவந்த ஒருவாரத்தில் இந்த
சகோதரி இறந்துப்போனது ஏன்? என்று மோகன் சி.லாசரஸ் அவர்களை கேட்டுப்பாருங்கள். அதை அந்த சகோதரியைத்தான் கேட்கவேண்டும் என்று கூறுவார்.
HIV, எயிட்ஸ் வியாதியஸ்தனை கர்த்தர் சுகமாக்கிவிட்டார் என்று கூறினீர்களே அவன் சுகம் பெறவில்லையே? அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டுப்பாருங்கள். அதற்கு
இந்த பதிலை எழுதமாட்டார் அமைதிதான் பதில். அதை
பொய் என்று இதுவரை மோகன் சி.லாசரஸ் ஒத்துக்கொள்ளவில்லை! இதுவரை ஏராளமான பொய்சாட்சிகள் இவர் பத்திரிக்கையில் வெளிவந்தது, அதற்கு அந்த சாட்சி எழுதியவரின்மேல்தான் பழி போடுவார். ஒவ்வொருவரையும் பரிசோதித்து லேப்பரிசோதனை செய்து வெளியிடுவது எனக்கு இயலாதகாரியம் என்று கூறி சமாளிக்கிறார்.
இயேசு சுகப்படுத்திவிட்டர்.
HIV கிருமிகள் பூமியில் இறங்குவதை காண்கிறேன் என்று கூறியது பொய்யில்லை? இயேசு எயிட்ஸ் வியாதியை சுகமாக்கி விட்டார் என்று கூறியது பொய்யில்லையா? இப்படி எழுதுகிறதற்காக வாசகர்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். மறுபடியும் மறுபடியும் இப்படி எழுதுவது எனக்கு அருவருப்பாகதான் இருக்கிறது. அவர்தான் தான் கூறிய அந்தசாட்சி
பொய் என்று வெளிப்படையாக கூற தயங்குகிறாரே! அவரை ஏன் திரும்ப வறுத்தெடுக்குகிறீர்கள்? என்று சிலர் எனக்கு எழுதுகிறார்கள். ஆனால் பொய் பேச இந்த ஊழியர்களுக்கு கூச்சமோ! பயமோ! உண்டாகவில்லையே! அதனால்தான் திரும்ப எழுதி ஞாபகப்படுத்துகிறேன். ஜனங்கள் இன்னும் நம்புகிறார்களே! இப்படிப்பட்ட
பொய்சாட்சிகளை உங்களில் சிலர் ரசிக்கலாம். நம் கர்த்தரால் இவைகளை தாங்கிக்கொள்ளமுடியாது. இந்த பொய்கள் தொடர்வது என்னைப் போன்றவர்களால் சகிக்க முடியவில்லை. வசனம் அறியாதவர்கள்
ஆறுதல் என்ற பெயரில் ஏமார்ந்துபோகிறார்களே! என்னால் இயன்றவரை என் எழுத்துப்பணி மூலமாக விழிப்புணர்வு உண்டாக்கமுடியுமா என்று முயலுகிறேன். அவ்வளவுதான் ஜெபிப்போம்.
|
அபிஷேகம் வஸ்திரத்தின்மேல் இறங்குகிறது |
ஞாயிறு 9.1.2011 அன்று காலை ஆசீர்வாதம்
TVயில் சகோ.சாம்ஜெபதுரை அவர்கள் ஜெபத்தில் அபிஷேகம்
வஸ்திரத்தின்மேல் இறங்குகிறது என்று சத்தமாக கூற அதைகேட்டு பாவம் ஜனங்கள் கதறுகிறார்கள். அபிஷேகம் என்றால் என்ன?
அபிஷேகம் வஸ்திரத்தில் இறங்குவதால் யாருக்கு என்ன பிரயோஜனம்? இப்படி யாராவது கேட்டால் இவர்கள் பழைய ஏற்பாட்டு சம்பவத்தை காட்டுவார்கள்.
அபிஷேகம் ஜனங்கள்மேல் ஊற்றப்படுகிறது, அபிஷேகம் அக்கினியாக இறங்குவதை காண்கிறேன். இதை கூறியவுடன் ஜனங்கள் என்னமோ ஏதோவென்று உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள். மக்கள்
திருப்பத்தூரில் கூடினாலும் சரி - கோடம்பாக்கத்தில் கூடினாலும் சரி, நாலுமாவடியில் கூடினாலும் சரி, அக்கினி - அபிஷேகம் என்ற வார்த்தையை கேட்டவுடன்
உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். இந்த ஊழியர்களின் கூட்டங்களில் கலந்துக்கொள்பவர்களை இவர்கள் சிலவேளைகளில் அழவைத்து, சத்தம் போட்டு கூச்சலிடவைத்து மனேதத்துவ ரீதியில் பைத்தியமாக்கி ஒரு வழியாக்கிவிடுகிறார்கள்! இந்த ஜனங்களும் இவர்கள் கூறுவதை நம்பி
அக்கினி அபிஷேகம் கிடைத்துவிட்டது. நான் இந்த கூட்டத்தில் தான் அபிஷேகிக்கப்பட்டேன் என்று கூறி பெருமைப்பட்டுகொள்கிறார்கள்.
திருப்பத்தூர் கூட்டத்தில் மூவரணி, நால்வரணியாக மாறி இப்போதெல்லாம் இதில்
ஒரு பெண்ணையும் தங்களோடு இணைத்துக்கொண்டு இவர்களுக்குகென்றுள்ள வேதத்திலில்லாத
அக்கினி அபிஷேகத்தை திருப்பத்தூர் கூட்டத்துக்கு வந்த எல்லார்மேலும் இறக்கி அனுப்புகிறார்கள் என்று பலரால் கூறப்படுகிறது. இந்த கூட்டங்களில் விவரம் அறியாதவர்கள், படித்தவர்களாகயிருந்தும் வேதவசனம் அறியாதவர்களாகயிருப்பவர்கள், பாமரர்கள் ஆகியவர்கள் நிறைந்து இருக்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது. இவர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய், ஆத்துமாவுக்கு ஒரு பிரயோஜனமுமில்லாமல் இவர்கள் நடத்தும் ஜெபநேரங்களில் அழுததால் உண்டான ஆறுதலைமட்டும் பெற்றுவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு போகிறவர்கள் கொஞ்சமாவது வேதத்தை வாசித்து இருக்கமாட்டார்களா? என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த கூட்டத்தை நடத்தும் இந்த ஊழியர்களின் வாழ்க்கையின்
பழைய கதைகளை இவர்கள் கொஞ்சம் ஆழமாக ஆராயமுயன்றால் சில விவரங்கள் விளங்கும். அவைகளை இப்போது நான் கூறவிரும்பவில்லை.
|
|
 |
9.1.2011 ஞாயிறுமதியம் 12.30 தமிழன் டிவியில் கோடம்பாக்கம்
ரூஹா சபை பாஸ்டர்.ஆல்வின் தாமஸ் கிறிஸ்தவ டிவி நிகழ்ச்சியில் இப்போது புதிதாக கிளம்பியிருக்கிறார். இவர் 2011க்கான தீர்க்கதரிசனத்தை
கர்த்தர் சொல்ல சொன்னார் என்று கூறி இந்தியாவுக்கும், உலகத்துக்கும் சேர்த்து 2011ம் வருட தீர்க்கதரிசனம் கூறினார். வருடம் ஒரு தீர்க்கதரிசனம் கூறுவதை வேதத்தில் எங்காவது வாசித்ததுண்டா? இது சகோ.DGS.தினகரனும், தம்பி.பால்தினகரனும் இணைந்து பாஸ்டர்.சாம்சுந்தரம் சபையில் வருடத்தின் முதல்நாள் பல தீர்க்க தரிசனங்கள் கூறி அது நிறைவேறாததை பலர் விளங்கிக்கொண்டதால் அவர்கள் வருடாவருடம் கூறும் தீர்க்கதரிசனத்தை நிறுத்தினார்கள். அவர்கள் கைவிட்ட
வருடாந்திர தீர்க்கதரிசனத்தை இப்போது இவர் தொடர ஆரம்பித்துவிட்டார். இந்தியாவின் ஒவ்வொரு
மாநிலத்தைப்பற்றியும் தீர்க்கதரிசனம் கூறத் தொடங்கினார். எல்லா மாநிலத்திலும்
இப்போதுள்ள முதல்வர்களை கர்த்தர் இந்த தேர்தலில் மாற்றப் போகிறார் என்று கூறி, டெல்லி
மத்திய அரசாங்க மாற்றத்தைப்பற்றியும் கூறிவிட்டார். தமிழக முதல்வர் இந்த தேர்தலில்
ஜெயிக்கமாட்டார் என்று இவர் கூறிய செய்தியை
DMK கட்சியினர் கவனிக்கவில்லைபோல் இருக்கிறது. இப்போது இயேசுவை
அரசியல்வாதியாக மாற்றி எலக்ஷன் களத்தில் இயேசுவை இவர் இறக்கிவிட்டிருக்கிறார்கள்.
|
இயேசுவை அரசியல்வாதியாக்க முயன்ற வேறு சிலர்:- |
1.
AIADMK - அஇஅதிமுக
இயேசுவை
அரசியல்வாதியாக்கி களத்தில் இறக்க
AIADMK தலைவி.ஜெயலலிதா கன்னியாகுமரி மாவட்டம்
அருமனை என்ற ஊரில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடி அதன்மூலம்
CSI கிறிஸ்தவர்களை கவர, இரட்டை இலைக்கு ஓட்டுபோட
CSI கிறிஸ்தவர்களை இப்போதே ஆயத்தப்படுத்த ஆரம்பித்துவிட்டார். இதற்கு தலைமை தாங்க இப்போதைய
பிஷப் அவர்களை சிலர் அணுக, அவர் முடியாது! என்று கூறிவிட்டார். (அப்படி மறுத்ததற்கு அவருக்கு நன்றி கூறுகிறோம்). ஆனால் இரட்டை இலைகாரர்கள்
ரிட்டயர்ட் பிஷப்பைத்தேடி கண்டுபிடித்து அவரை தலைமை தாங்கவைத்து புகைப்படமும் எடுத்து அவைகளை பத்திரிக்கைகளில் வெளியிட்டு விளம்பரப்படுத்தி
CSI, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆகியவர்களின் ஓட்டுகள் வரும் தேர்தலில் இரட்டை இலைக்கு கிடைக்காதா என்று முயன்றுள்ளார்கள்.
மதமாற்று சட்டத்தை கொண்டுவந்த
ஜெயலலிதா மூலம் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ சபை பாஸ்டர்மார்கள் பட்டபாடுகளை பொதுமக்கள் அறிய நியாயமில்லை. ஆனால்
கிறிஸ்தவர்கள் மறக்கவேமாட்டார்கள். ஆனால் இதை எழுதும்போது
கடந்தகாலத்தில் நம்
CSI கிறிஸ்தவர்களாலேயே நடந்த சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்து என் நம்பிக்கையை சங்கடப்படுத்தியது. கடந்த சிலவருடத்துக்குமுன் நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட
CSI கிறிஸ்தவர்கள் நிறைந்த திருமண்டலத்தின் (அன்று தூத்துக்குடி - திருநெல்வேலி மாவட்டமும் ஒன்றுபட்ட
CSI திருமண்டலமாக இருந்தபோது) அப்போதைய
ஆயர்களில் பலரும், பிஷப்பும் துடைப்பக்குச்சி போன்ற மெல்லிய
தங்கசிலுவைக்காக போட்டிபோட்டு கையேந்தி அந்த சிலுவையை ஜெயலலிதா அவர்கள் பெயரால் பெற்றுக்கொண்டு நன்றிக்கடையாளமாக தங்கள் ஓட்டுகளை இரட்டை இலைக்கு போட்டு
ஜெயலலிதாவை ஜெயிக்கவைத்தார்களே!, அப்போது இவர்கள் என்ன பலனை அவர்கள் மூலமாக பெற்றுக்கொண்டார்கள்? வெட்கப்பட்டுபோனதுதான் மிச்சம்! இந்த நிகழ்ச்சி இதை எழுதும்போது என்னுள் வந்ததால் இந்தமுறையும் கன்னியாகுமரி டையோசிஸ்
CSI, கத்தோலிக்க சபைமக்கள் ஜெயலலிதா கூறிய பொய் வாக்குறுதிக்காக
விலைப்போய்விடுவார்களோ என்று அச்சப்படுகிறேன்.
(2) -
DMK : திராவிட முன்னேற்ற கழகம்:
ஜெயலலிதா கிறிஸ்தவர்களை இப்படி கவருகிறாரே என்று
ஆளும்கட்சியான
DMK சார்பில் பிஷப்.எஸ்றா சற்குணம் தலைமையில் இவர்களும்
கிறிஸ்மஸ் விழா எடுத்து கிறிஸ்தவர்களின் ஓட்டு எங்களுக்கும் வேண்டும் என்றார்களே! கிறிஸ்துவை புரிந்துக்கொண்டா இவர்கள் கிறிஸ்மஸ் விழா எடுத்தார்கள்? இவர்கள் நம்மேல் வைக்கும் பாசம் ஓட்டுக்காகமட்டும்தான் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.
(3) -
CONGRESS : தமிழ்நாட்டு காங்கிரஸ்
கட்சிக்குள்ளேயே இவர்கள்
சிதறு தேங்காய் சில்லிப்போல சிதறிக்கிடக்கிறார்களே!
தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்களாகிய இவர்கள் நாங்களும் மற்ற கட்சிக்காரர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று அவர்களும்
கிறிஸ்மஸ் விழா எடுத்தார்களே! இந்த அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும்; எல்லாரும் இயேசு கிறிஸ்துவின்மேல் உள்ள பாசத்தாலா
கிறிஸ்மஸ் விழா எடுத்தார்கள்? இல்லையே!
இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப்பெற முஸ்லீம் பள்ளிவாசலில்
கஞ்சிக்குடிக்க இந்த தலைவர்கள் போட்டிபோட்டுகொண்டு ஏமாற்றுதொப்பியை அணிந்து
கஞ்சிக்குடித்த புகைப்படத்தை இவர்கள் யாரும் பத்திரிக்கைளில் பார்க்கவில்லையா?
கிறிஸ்தவர்களின் ஓட்டுக்காகமட்டுமே கிறிஸ்மஸ் விழா
எடுப்பது என்பது இவர்களின் நோக்கம் ஆகும் என்பதை இந்த
பிஷப்மார்களுக்கு தெரியாதா?
|
கிறிஸ்தவர்கள் அறிந்துக்கொள்ளவேண்டியது: |
அரசாங்கம் அமைக்கும்வரை இந்த
அரசியல்வாதிகளிடம் எந்த சபையும், பிஷப்மாரும், கிறிஸ்தவர்களும் இவர்களோடு நெருக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது இவர்களில் யார் ஜெயித்து
அரசாங்கம் அமைத்து, மந்திரிகள் ஆகிறார்களோ அப்போது இவர்களின் பெயர் குறிப்பிட்டு, இவர்களுக்காக சபை ஆராதனைகளில் ஜெபிக்க
வேதவசனம்மூலம் கட்டளைப்பெற்றிருக்கிறோம். ரோ 13:1-5,தீத்து முதல் அதிகாரம் ஆகிய வசனங்கள் இப்படியாக குறிப்பிடுகிறது.
ஆக, இயேசுகிறிஸ்துவை இவர்கள் எல்லாரும்
அரசியல்வாதியாக்கிபோட்டதைப்போல், இந்த
TV ஊழியர்களும், மேடை மந்திரவாத அற்புத ஊழியர்களும்
இயேசுவை அரசியல்வாதி ஆக்கிவிட்டார்கள். இப்போதைய கிறிஸ்தவ நிலைமையும், ஊழியங்களும் இப்படி போகிறது.
மேலும்
ரூஹா சபை டிவி ஊழியர் ஆல்வின் தாமஸ் கூறுகிறார்:
ஜப்பான் தேசத்தில் பெரும் அழிவை காண்கிறேன். உயர்ந்த கட்டிடத்தின் மீது இருந்து ஆட்கள் குதித்து இறப்பதைக் காண்கிறேன். அது
அமெரிக்கா இரட்டை கோபுரத்திலிருந்து குதித்ததைப்போல இருந்தது என்கிறார். ஜப்பான் ஏற்கனவே பூமியதிர்ச்சியிலும், சுனாமியாலும் பாதிக்கப்படும் பெரிய
பெல்டில் (பகுதியில்) அமைந்துள்ளது. ஆகவே ஒவ்வொரு வருடமும் இங்கு பூமியதிர்ச்சி நடப்பது வழக்கம். இதை நாம் வாசிக்கும் தினசரியிலும், குறிப்பாக டிவியிலும் அறிந்திருக்கிறோம். அந்த பூமியதிர்ச்சி ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவு உண்டாவது வழக்கம். மாதாமாதம் இந்த பூமியதிர்ச்சி உண்டாகிறது, இனியும் உண்டாகும். இப்படி
பேப்பர் நியூசை வாசித்துதான் இதற்குமுன் தீர்க்கதரிசனம் கூறிய நம் தமிழ்நாட்டு போலி ஊழியர்கள் எல்லாம் போலி தீர்க்கதரிசனம் கூறினார்கள். ஆனால் அவர்கள் கணிப்பு எல்லாம் பொய்யானது என்பதை அறிவீர்களே!
பூமியதிர்ச்சிகள் மேலும் மேலும் அதிகமானது. இவைகள் யாவும்
வேதபுத்தகத்தில் முன்பே எழுதிவைத்துள்ளதே! வேதபுத்தகத்தில் இல்லாத எந்த புதிய தீர்க்கதரிசனத்தையாவது நம் தமிழ்நாட்டிலுள்ள (So-called தீர்க்கதரிசிகள்) தீர்க்கதரிசிகள் என்று அழைத்துக் கொள்கிற எந்த ஊழியராவது கூறியுள்ளார்களா? இனி கூறவும் முடியாது!.
|
வேத ஒழுங்கு என்ன சொல்கிறது? |
நாட்டைப்பற்றியோ, நகரத்தைப்பற்றியோ, கர்த்தர் அழிப்பதாக தீர்க்கதரிசனம் கூறினால் அந்த குறிப்பிட்ட
ஊருக்கு சென்று, அந்த குறிப்பிட்ட நாட்டுக்கு தீர்க்கதரிசியை அனுப்பி அல்லது அந்த
குறிப்பட்ட நபருக்கு அந்த ஊழியக்காரனையே நேரில் அனுப்பி நடக்கப்போவதை அறிவிப்பதுதானே
வேதஒழுங்கு. யோனாவை அப்படித்தானே கர்த்தர் அனுப்பினார். காரணம், நம் தேவன் இரக்கமுள்ளவர். அப்படி அழிக்கப்போகும் அந்த ஊருக்கு தீர்க்கதரிசனத்தை கூறுவதால் அந்த ஊரில் உள்ள ஒரு சில ஜனங்களாவது மனம்திரும்பமாட்டார்களா? மரண ஆபத்திலிருந்து அந்த மக்களை காப்பாற்ற முடியாதா? என்று கர்த்தர் மிகவும் கரிசனையுடன் எதிர்ப்பார்க்கிறார். இதுதான்
நம் தேவனின் அன்பு மனம். வேதபுத்தகத்தில் காணும் ஊழியர்களை அழிப்பதற்கு முன் எச்சரிப்பு கூறினார்கள். அந்த எச்சரிப்பைப்பற்றி கூறிய ஊழியர்கள் யாவரும் தங்களை விளம்பரப்படுத்தி பெருமைப்பட்டுக்கொள்ள அப்படி கூறவில்லை! அழிக்கப்பட்டுப்போகும் அந்த குறிப்பிட்ட
இடத்துக்கே சென்று அறிவித்தார்கள். அதுதான் வேதஒழுங்கு ஆகும். ஆனால் இப்போதுள்ள வருடாவருடம் தீர்க்கதரிசனம் கூறும் ஊழியர்கள் தங்களை உயர்த்தவும் பெருமைப்படுத்திக்கொள்ளவும் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள். இவர்களிடம் ஜனங்கள் ஏமாறவேண்டாம்.
இந்த
ஆல்வின் தாமஸ் ஆகட்டும், ஆசீர்வாதம் டிவியின் ஆல்வின் பால்
ஆகட்டும், பால்தினகரன் ஆகட்டும், வின்சென்ட் செல்வகுமார், சாது சுந்தர் செல்வராஜ், மோகன் சி.லாசரஸ், எசேக்கியா பிரான்சிஸ், ஜவஹர் சாமுவேல், ஜான் சாமுவேல் இவர்கள் எல்லாம் தன் வாசகர்கள் முன்பாகவும் கூட்டத்திலுள்ள மக்களுக்குமுன்பாக
தாங்கள் தெய்வத்துக்கு மிக அருகில் இருப்பதைப்போல்
தன்னை ஒரு தீர்க்கதரிசியாக காட்டத்தான் இந்த பொய்தீர்க்கதரிசனத்தை உபயோகிக்கிறார்கள். இவர்கள் கூட்டத்தில் இவர்கள் கூறியதைக் கேட்டவர்களில் வேதத்தை படித்தவர்கள் இருந்தால் கொஞ்சம் யோசியுங்கள்.
இவர்களுக்குமட்டும் இந்த குறிப்பிட்ட நாடுகளைப் பற்றி கர்த்தர் ஏன் தீர்க்கதரிசனம் கொடுக்கவேண்டும் என்று யோசித்தார்களா? அதுவும் வெளிநாடுகளைப்பற்றி இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஏன் தீர்க்கதரிசனம் கூறவேண்டும்? அதனால் வெளிநாடுகளுக்கு என்ன பயன்? இவர் சபை மக்கள் இவைகளைப்பற்றி யோசிக்கத்தான் முயன்றார்களா? அந்த குறிப்பிட்ட சபை விசுவாசிகளில் சிலரே இதைக்குறித்து சந்தேகமாக கேட்கிறார்கள்? ஆனால் பல சபைகளின் பாஸ்டர்களுக்கு இதைக்குறித்து சந்தேகம் வரவில்லையே! இதைக்குறித்து இப்படியாக யோசித்து பார்க்கவில்லையே! நல்ல சபைபாஸ்டர்கள் இப்படிப்பட்ட
கள்ளதீர்க்கதரிசிகளிடமிருந்து தங்கள் சபை ஜனங்களை எப்படி காப்பாற்றபோகிறார்களோ? முடிவாக நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டியது, இப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் கூறுபவர்கள் எல்லாரும்
தாங்கள் தேவனோடு நெருங்கியிருப்பதைப்போல ஜனங்களை
நம்பவைக்கவே இவர்கள் பொய் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.
ரூஹா சபை பாஸ்டர்.ஆல்வின் தாமஸ் இந்த வருடம் கர்த்தரை நேசிக்கும் தன் சபைக்கும், உலகக்கும் கர்த்தர் சொல்லசொன்னதாக கூறிய வாக்குத்தத்தத்தை இவர் மிகவும் கஷ்டப்பட்டு
கண்ணை இருக அடைத்துக்கொண்டு அந்த தீர்க்கதரிசனத்தை கஷ்டப்பட்டு வானத்திலிருந்து வரவழைத்ததுபோல் தன் செய்கைகள்மூலம் காண்பித்து கூறுகிறதை டிவியில் கண்டேன். கர்த்தர் சொல்லசொன்னதாக அவர் கூறிய வாக்குத்தத்தம் என்ன தெரியுமா?
என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனப்படுத்த போகிறேன்.
1 சாமு 2:30 என்று கூறிவிட்டார் இப்படி கூறி முடிக்கமுடித்தவுடன் அந்த சபைமக்கள் கதறுதலோடு கூறின
அல்லேலுயா சத்தம் வானைப்பிளந்தது. இந்த வசனத்தின் ஆரம்பபகுதியில் காணப்படும் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
இந்த வருடம் உங்கள் எல்லாரையும் கர்த்தர் கனப்படுத்தப்போகிறார் - அல்லேலுயா சத்தமாக கூறுங்கள்! என்றார், கைகளை சத்தமாக தட்டுங்கள் என்றார். இப்படித்தான் பல ஊழியர்கள் மக்களை
சந்தோஷப்படுத்தும் - காதுக்கு தினவு உண்டாக்கும் ஆசீர்வாத வார்த்தைகளை கூறுகிறார்கள். மேடை அற்புத ஊழியர்கள் அனைவரும் இப்படியேதான் கூறுகிறார்கள்.
இந்த சபைமக்களில் வேதம் படித்தவர்களுக்கு இந்த வசனம் 2011க்காக சொல்லப்பட்டது அல்ல என்று விளங்கவில்லையே! வேதம் கைகளில்வந்த நாளிலிருந்து இந்த குறிப்பிட்ட வசனம் அங்குதானே இருக்கிறது. இந்த ஆசீர்வாதம் வசனம் அடுத்த 2012க்கு இல்லையா? அல்லது வரும் காலங்களுக்கு பொருந்தாதா?
வருடத்துக்கு ஒரு வாக்குத்தத்தம் என்று ஆண்டவர் வேத புத்தகத்தில் எங்காவது கூறியிருக்கிறாரா? பல உண்மை பாஸ்டர்களுக்கும் சபையில் உள்ள உண்மையான விசுவாசிகளுக்கும் கூறாத இந்த வாக்குத்தத்தம் இரகசியமாக பாஸ்டர் ஆல்வினுக்குமட்டும் கூறியிருப்பாரா? வேதத்தில் எழுதப்பட்ட வாக்குத்தத்த வசனங்கள் எல்லாம் எல்லாருக்காகவும்,
எல்லா காலத்துக்கும் பொருந்த கூடியதாகுமே! அதை ஒவ்வொரு நாளும் வேதம் வாசிக்கும்போது உரிமைப்படுத்திக்கொள்ள வேண்டாமா? யாரோ ஒருவர் சொல்லித்தான் அதை உன் வாக்குத்தத்தமாக உரிமைப்படுத்த வேண்டுமா?
இந்த விஷயத்தில் விசுவாசிகளுக்கு இன்னும் விழிப்புணர்வு உண்டாகவில்லையே!.
தினசரி வேதத்தை வாசித்து ஒவ்வொரு வசனத்தையும் தியானித்தாலேபோதும் வாசிக்கும் ஒவ்வொரு வசனமும் உனக்காகவே எழுதப்பட்டதைப்போல தோன்றுமே!
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் என்று ஒவ்வொரு
வருடமும் ஜனவரி மாதம் கூறும் ஊழியர்களை நம்பாதீர்கள்.
சரி, இப்போது
ரூஹா ஆல்வின் தாமஸ் கர்த்தர் கூறினதாக சொன்ன அந்த வாக்குத்தத்த வசனத்தைப் கவனித்துப்பாருங்கள்.
1 சாமு 2:30 இந்த வசனத்தை இவர் கர்த்தர் சொன்னதாக அறிவிக்கும்போது இந்த வசனத்தின் ஆரம்ப பாகத்தை
மறைத்துவிட்டு ஆசீர்வாதத்தைமட்டும் அறிவித்து தன் சபைமக்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார் என்பதை எச்சரிக்கையோடு கவனியுங்கள். உண்மையில் கர்த்தர் கூறுவதென்னவென்றால்
என்னை கனப்படுத்தினால்தான் உன்னை நான் கனப்படுத்துவேன் என்று கர்த்தர் வேதத்தில் கூறியிருக்கிறார். ஆனால்
ஆல்வின் தாமஸ் கூறியது என்ன? உன்னை நான் கனப்படுத்தபோகிறேன், நீ உயர்த்தப்படப்போகிறாய், உன் கர்ப்பம் திறக்கப்படபோகிறது!, உனக்கு பதவி உயர்வு உண்டாகப்போகிறது, உன் கடன் மறையப்போகிறது என்று மிகுந்த சத்தமாக கூறி எல்லாரும் பலமாக கைதட்டுங்கள்!, பலமாக அல்லேலுயா கூறுங்கள்!. உங்களை உயர்த்தியதற்காக கர்த்தரை துதியுங்கள் என்றார். அந்த
CDயை வாங்கிப்பாருங்கள். இதுதான் செழிப்பு உபதேசமாகும்.
வேதத்தில் குறிப்பிடும் எந்த ஆசீர்வாதத்துக்கும்
கன்டிஷன் உண்டு. கன்டிஷன் இல்லாத ஆசீர்வாதம் இல்லை. ஆனால் ஆசீர்வாதம் கர்த்தரிடமிருந்து பெறுவது என்பது சாதாரண காரியமல்ல. பாவமன்னிப்பைகூட லகுவாக பெற்றுக்கொள்ள வழியுண்டு. இந்த குறிப்பிட்ட ஊழியர்கள் எல்லாம்
ஆசீர்வாதம் ஆசீர்வாதம் இது உங்கள் அற்புதத்தின் நேரம் என்று சொல்லிச்சொல்லி பெரும்பாலான மக்களை தங்கள்
வார்த்தையினாலேயே அவர்களுக்கு ஆசைக்காட்டி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பாவம் வசனத்தை எப்படி படித்து அர்த்தம் எடுத்துக்கொள்வது என்பதுகூட தெரியாத அந்த ஏழை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருமுறையும் அவர் எடுக்கும் வீடியோவுக்காக கண்ணீர்விட்டதுதான் மிச்சம். அந்த கண்ணீர்விட்ட சாட்சியைகாட்டி பணம்பெறும் வியாபாரம்தான் இவர்கள் செய்கிறார்கள். இவ்வளவு பெரிய ஏமாற்றுதனத்தை இவர்கள் செய்கிறார்கள். இவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று ஒவ்வொரு முறை இந்த ஊழியர்களின் ஏமாற்று பிரசங்கத்தை கேட்கும்போதெல்லாம் என் உள்ளம் மிகவும் வேதனைப்படுகிறது. என்ன சொல்வேன்? என்னால் எழுதத்தான் முடியும். தயவுசெய்து இரட்சிக்கப்பட்டவர்கள் இணைந்து இப்படிப்பட்ட ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.
1
சாமு 2:30ன்படி அந்த வசனத்தின் முதல் பகுதி மிகவும் முக்கியம். அதை நீங்கள் நிறைவேற்றாதுபோனால் பின்பகுதியில் உள்ள வார்த்தை செயலிழந்துபோகும்.
முதலாவது பகுதியில் கூறப்பட்டபடி
கர்த்தரை எந்தவிதத்தில் கனப்படுத்தபோகிறீர்கள்?, எதையெல்லாம் நீங்கள் விட்டால் கர்த்தர் கனப்படுவார்?, எந்த பாவத்தைவிட்டால் கர்த்தரின் நாமம் கனப்படும்?, கொள்ளையடித்த ஏமாற்றிய பணத்தை திருப்பிக்கொடுத்தால் கர்த்தரின் நாமம் கனப்படுமே! அதன்பின்தான் கர்த்தர் உன்னை மேலும்மேலும் உயர்த்தி கனப்படுத்துவார் அல்லவா! இதுதான் வேதம் கூறும் உண்மையான வாக்குத்தத்தம் ஆகும். உங்களுக்கு இந்த வருஷம் ஆசீர்வாதம் உண்டாகும் என்று
கர்த்தர் சொன்னார் என்று கூறும் எந்த ஊழியரையும் இனிமேலாவது நம்பி ஏமார்ந்துப்போகாதீர்கள். அப்படி கூறுவது
கிளி ஜோஸ்யம் ஆகும். இவைகள் எல்லாம் மாற ஜெபிப்போம்.
|
|
 |
|
|
|