ஜாமக்காரன் வாசகர்களுக்கு
சில முக்கிய அறிவிப்புகள்

இதுவரை ஜாமக்காரன் ஊழியத்துக்கென்று பண சேகரிப்புக்காக நான் யாரையும் எந்த ஊரிலும் உலகில் எந்த நாட்டிலும் Co-ordinator-ஆகவோ, ஏஜண்ட்டாகவோ, ஜெபக்குழு தலைவராகவோ யாரையும் நியமித்தில்லை. 1964ம் வருடம் நான் ஊழியம் தொடங்கிய காலத்திலிருந்து இந்த நிமிஷம்வரை யாரையும் என் ஜாமக்காரன் ஊழியம் சார்பாக நான் நியமித்ததில்லை. சில வருடங்களுக்குமுன் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொல்லம், கொட்டாரக்கரை, குண்டரா, பேரயாம் ஆகிய ஊர்களில் சிலர், தாங்கள் ஜாமக்காரன் அலுவலகத்தில் வேலை செய்வதாக கூறி ஜாமக்காரன் ஊழியத்துக்கு உங்களாலான பணவுதவிகளை செய்யுங்கள் என்று வீடுவீடாக சென்று பணசேகரிப்பு நடத்தியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் செய்யும் கிராம ஊழியங்களுக்கு, மெடிக்கல் கேம்ப்க்கு விநியோகம் செய்ய உடைகள், பொருள்கள், ஆஸ்பத்திரி உபகரணங்கள் பணம் இப்படி எதுவானாலும் கொடுத்து உதவுங்கள் என்று வீடுவீடாக சென்று வசூலித்துள்ளனர்.

  இவர்கள் இந்த வசூலிப்புக்கு உபயோகித்த வஞ்சக வார்த்தைகள் என்னவென்றால், டாக்டர். புஷ்பராஜ் அவர்கள் இதுவரை அவருக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பணம் யாரிடமும் கேட்காதவர் என்றும் பணம்கேட்டு இதுவரை தன் பத்திரிக்கையில் எழுதாதவர் என்பது உங்களுக்கே தெரியுமே! ஆகவேதான் நாங்கள் நேரில் வந்தோம் என்று கூறி ஏமாற்றியிருக்கிறார்கள். மார்தோமா, CSI, கொட்டாரகராவில் உள்ள என்னை அறிந்த பெந்தேகோஸ்தே சபை குடும்பத்தினர் வாசகர்களாகிய பலரிடம் இப்படி கூறி பணம் பெற்றுள்ளனர். இப்படி ஏமார்ந்தவர்களில் பிரபல வக்கீலும் ஒருவர். குண்டரா (Qualin.Dt) என்ற ஊரிலுள்ள இரண்டு குடும்பத்தினரிடம் மட்டும் இவர்கள் வசமாக மாட்டிக்கொண்டனர். பணசேகரிப்பு செய்யவந்த அவர்களை உட்காரவைத்து அவர்களுக்கு தேனீர் வழங்கி அதற்கிடையில் அவர்களுக்கு தெரியாமல் சேலத்தில் என் வீட்டுக்கு தொலைபேசிமூலம் தொடர்புக்கொண்டார்கள். வீட்டில் நான் இல்லை, என் மனைவி பதில் அளித்துள்ளார். நாங்கள் யாரும் பணம் சேகரிக்க ஆட்களை அனுப்புவதில்லை. தயவுசெய்து அவர்களை நம்பிவிடாதீர்கள் என்று அறிவிக்க, உடனே அந்த இரண்டு குடும்பத்தினரும் போலீஸ்க்கு தகவல் அறிவித்துவிட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் வந்து அவர்களை பிடித்துக் கொண்டுபோய் விசாரித்தார்கள்.

மறுநாள் நான் சேலம் வந்து சேர்ந்தவுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களே தொலைபேசியில் என்னோடு தொடர்புக்கொண்டு என்னை விசாரித்தார். நான் என் ஊழியங்களைப்பற்றிக்கூறி, என் ஊழியத்துக்கு பணம் இதுவரை தேவைப்பட்டதில்லை ஆகவே யாரிடமும் பணவசூல் செய்வதும் இல்லை என்ற விஷயத்தையும் அவரிடம் அறிவித்தேன்.

அகப்பட்ட அந்த கிறிஸ்தவர்கள் போலீசிடம் கூறியதாவது நாங்கள் சுதந்திரமாக வீடுவீடாக சென்று ஊழியம் செய்பவர்கள், நாங்கள் திருடர்கள் அல்ல, டாக்டர்.புஷ்பராஜ் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன்தான் அவரை கேளாமலே இந்த தவறை செய்துவிட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள் என்று அழுதுயிருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு கிறிஸ்தவர், அவர் இவர்களை என்ன செய்யலாம் என்று என் அபிப்ராயம் கேட்டப்போது பொய்பேசும் அந்த கிறிஸ்தவ ஊழியர்களை நான் பார்த்ததில்லை, ஆனால் அவர்கள் தங்களை ஊழியர்கள் என்று கூறுவதால் அவர்களை விட்டுவிடுங்கள். நான் அவர்கள்மேல் எந்த புகாரும் கொடுக்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டேன், அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். விடுவிக்கப்படும்முன் போலீஸ் வழக்கப்படி போலீஸ் முறையில் செம்மையாக விருந்து கொடுத்துதான் அனுப்பியிருக்கிறார்கள் என்பதை பிறகு அறிந்தேன்.


பணக்குறைவு உண்டானதில்லை:

  ஆகவே ஜாமக்காரன் வாசகர்கள் இவ்விஷயத்தில் ஏமார்ந்துவிடாதீர்கள். நான் ஊழியம் தொடங்கிய 1964ம் வருட முதல் இந்த நாள்வரை என் ஊழியத்தில் பணக்குறைவே உண்டானதில்லை. கடனும் உண்டானதில்லை. அதனால்தானே வெளிநாடுகளுக்கு ஊழியத்துக்கு நான் போனாலும் எனக்காக யாரும் கூட்டங்களில் காணிக்கை சேகரிக்கவேண்டாம் என்று என்னை அழைத்தவர்களுக்கு கடிதம் எழுதிவிடுகிறேன். காரணம் எனக்கென்றோ, என் பெயரிலோ சொந்த சபை கிடையாது. பல கிராமங்களில் நான் ஸ்தாபித்த சபைக்கான நிலங்களையும், சபை கட்டிடங்களையும் அந்தந்த சபை மக்கள் பெயரில் சபைக்காகமட்டும் என்று முத்திரை பத்திரத்திலேயே குறிப்பிட்டு பத்திரப்பதிவு செய்து அந்தந்த கிராம சபைகளுக்கு உதவியிருக்கிறேன். ஆகவே அவைகளை மேற்கொண்டு பராமரிக்கும்செலவு என் பொறுப்பல்ல. எனக்கென்று என் பெயரிலோ, என் மனைவி பெயரிலோ, என் பிள்ளைகள் பெயரிலோ, பினாமி பெயரிலோ எந்த ஒரு ஊழியமோ அல்லது சமூகசேவை ஸ்தாபனங்களோ எதுவும் எனக்கு கிடையாது. பின் எதற்கு எனக்கு பணம்?


பத்திரிக்கை ஊழியம்

  நான் நடத்தும் பத்திரிக்கை ஊழியமான ஜாமக்காரனுக்காகமட்டுமே எனக்கு பணம் தேவைப்படும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 1969ம் வருடம் முதல் தமிழ் மற்றும் மலையாளம் பாஷைகளில் நான் நடத்தும் ஜாமக்காரன் என்ற பெயரில் நடத்தும் மாத பத்திரிக்கைக்குமட்டும் பல லட்சக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படும். இந்த பத்திரிக்கை ஊழியத்துக்கு சந்தாவோ - பணமோ தேவைப்பட்டதேயில்லை. என்னை சரியாக புரிந்துக்கொண்ட, விளங்கிக்கொண்ட இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஜாமக்காரன் வாசகவிசுவாசிகள் நான் கேளாமலேயே மாதந்தோரும் இந்தியாவிலும், உலகநாடுகளில் வாழும் தமிழ் மற்றும் மலையாளிகள், இலங்கை மக்கள் போன்ற பெரும்பாலானவர்கள் எனக்கு பணம் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். இதை வாசித்துகொண்டிருக்கும் உங்கள் மனச்சாட்சியை கேட்டுப்பாருங்கள். நீங்களாகத்தானே எனக்கு பணவுதவி செய்தீர்கள். பத்திரிக்கையிலோ, என் பிரசங்கத்திலோ, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ பத்திரிக்கை தேவைகளுக்காக ஜெபியுங்கள் என்ற பெயரில் மறைமுகமாக என்றைக்காவது நான் உங்களிடம் பணம் கேட்டிருப்பேனா?

  என் அலுவலகத்தில் கம்பியூட்டர் மற்றும் அலுவலக பணிகளை பல வருடங்களாக மேனேஜர் ஸ்தானத்தில் பொறுப்பெடுத்து செய்யும் ஒரு அன்பு தம்பி உண்டு. அவரும் இதை தன்னுடைய ஊழியமாக கருதி, ஜாமக்காரன் அலுவலக பணியை செய்து, பத்திரிக்கை அச்சடித்துவந்தபின் அதை ஆட்கள் உதவியோடு தபால் ஆபீஸ் கொண்டுபோய் சேர்க்கும்வரை உதவி செய்வார், நான் ஊரில் இல்லாதபோதும் தானே முழுப்பொறுப்பெடுத்து இந்த உதவிகளை செய்கிறார். இதுவரை அவர் தனக்கென்று எந்த பண உதவியையும் என்னிடம் வாய்திறந்து கேளாமல் அவராகவே இந்த பத்திரிக்கை பணியைச் செய்கிறார். நாங்களாக அவருக்கு ஒரு சிறு தொகை கொடுக்கிறோம். அவ்வளவுதான்.

  அதேபோல் மலையாள ஜாமக்காரன் பத்திரிக்கை ஊழியத்தில் திருவனந்தபுரம் செகரிடிரியேட்டில் கெஜட்டட் ஆபீசராக, செக்கரிட்டெரியேட்டில் முக்கிய அதிகாரியாக அங்கு பணிசெய்த சகோ.சுகுமாரதாஸ் அவர்கள் அரசு பணிபுரிந்த காலத்திலிருந்து, இப்போது ஓய்வுபெற்ற பின்னரும், கடந்த சுமார் 22 ஆண்டுகளாக ஜாமக்காரன் செய்திகளை மலையாளத்தில் மொழிபெயர்த்து, அதை கம்ப்பியூட்டரில் கொடுத்து - தவறுகள் திருத்தி அச்சாப்பீஸ் அனுப்பும்வரை சகோ.சுகுமாரதாஸ் அவர்கள் மலையாள ஜாமக்காரன் ஊழியத்தில் உதவி செய்கிறார். மொழிபெயர்ப்பில் பிழை வந்துவிடக்கூடாது என்று நான் எழுதிய பிரசங்க வசனத்தை ஆங்கில வேதபுத்தகத்தையும், கத்தோலிக்க வேதபுத்தகத்தையும் ஒப்பிட்டு, சில முக்கிய கருத்துகளுக்கு மற்றவர்கள் எழுதிய புத்தகத்தையும் தேடி எடுத்து அதையும் ஒப்பிட்டு அர்த்தங்கள் மாறிவிடாமல் என் கருத்துக்கள் மொழிபெயர்ப்பில் மாறாமல் மிகபொறுப்போடு ஜாமக்காரனை தன் சொந்த ஊழியமாக கருதி உதவி வருகிறார். அவரும் என்னிடம் ஒரு பணமும் இதற்காக வாங்கினதில்லை.

அதுமட்டுமல்ல, அவரே தன் கைப்பணம் செலவழித்து ஒவ்வொரு மாதமும் மலையாள ஜாமக்காரன் தயாரிக்க கம்பியூட்டர் சென்டருக்கு பணம் கொடுத்து, கம்ப்பியூட்டர் DTP வேலையை முடித்து இந்த பத்திரிக்கை ஊழியத்தை நிறைவேற்ற பெரிதும் உதவுகிறார்.


என் மனைவி திருமதி.வதனிபுஷ்பராஜ்

  சேலத்தில் உள்ள ஜாமக்காரன் அலுவலகம் முழுவதையும் என் மனைவி திருமதி.வதனி புஷ்பராஜ் அவர்களே கவனிக்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரியிலிருந்து கட்டாய ஓய்வு பெற்று, என் அலுவலக பணி முழுவதையும் பொறுப்பேற்று செய்கிறார்.

  அவர் கடிதங்கள் பிரிப்பது, வரும் காணிக்கை, பண விவகாரங்களை குறிப்பதும், பெறுவதும், ரசீதுகளை உரியவருக்கு உடனுக்குடன் அனுப்புவதும், நான் இல்லாத நாட்களில் தொலைப்பேசி தொடர்புகளை கவனிப்பதும், பலருக்கு தொலைப்பேசியிலேயே ஜெபித்து ஆலோசனை அளிப்பதும் போன்ற பல ஊழிய வேலைகளை அவர் செய்து எனக்கு ஒத்தாசையாக இருப்பதால் சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகையை பணமாக கொடுக்க என் அலுவலகம், மற்ற ஊழியர்களின் அலுவலகம்போல் நூற்றுக்கணக்கான ஆட்களை கொண்டதல்ல. அதனால்தான் எனக்கு பணத்தேவை அதிகம் இல்லை.

  ஜாமக்காரன் பத்திரிக்கை அச்சடிக்கும் செலவுக்கும், தபால் ஸ்டாம்ப் செலவுக்கும் தேவையான லட்சக்கணக்கான ரூபாய்கள் ஒவ்வொரு மாதமும் குறைவுபடாமல் என் அன்பு வாசகர்கள் தொடர்ந்து எனக்கு பணம் அனுப்பிகொண்டிருக்கிறார்கள். சில மாதங்கள் தேவைக்குமேல் அதிகமாகவே காணிக்கை வந்து சேருமே ஒழிய, ஒரு மாதமும் பணம் குறைவுபட்டதேயில்லை. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  அதைப்போலவே நான் செய்யும் இந்த ஊழியத்தின் தேவைக்கான பணத்துக்காக இதுவரை என் கர்த்தரிடம் பணம் வேண்டும் என்று கேட்டு ஜெபித்ததேயில்லை! இப்படி நான் எழுதுவதை உங்களால் நம்பமுடிகிறதா? கர்த்தருக்குமுன் அதுதான் உண்மை என்று அறிக்கை செய்கிறேன். அதுதான் கிருபை!கிருபையோ கிருபை! அது தேவகிருபையே ஆகும்.

  இத்தனை எதிர்ப்புகள், பயமுறுத்தல்கள், பலரின் வெறுப்புகள் என் ஊழியத்தில் காணப்பட்டாலும், சில சமயம் என் வாசகர்களே என்னை வெறுத்த காலங்கள் உண்டு. ஆனாலும் என் ஊழியத்தில் பண விஷயத்தில் நான் குறைவுபட்டதில்லை. இது மிகப்பெரிய சாட்சியாகும்.

  இப்படியாக என் ஊழியம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும்போது நான் யாரையாவது பணத்துக்காக - பொருளுக்காக அவைகளை சேகரிக்க வாசகர்கள் வீடுகளுக்கு அனுப்புவேனா? ஏமார்ந்து வீடாதீர்கள்.   ஆகவே என் பெயரை கூறிக்கொண்டு அல்லது ஜாமக்காரன் பெயரை கூறிக்கொண்டு யார் உங்கள் வீடு தேடி பணசேகரிப்பு நடத்தினாலும் உடனே எங்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு எங்களுக்கு அறிவியுங்கள். அவர்கள் விலாசங்களை பெற்று அதையும் எங்களுக்கு அறிவியுங்கள். பிசாசு என் ஊழியத்தின் நற்பெயரை கெடுக்க பல விதத்தில் முயற்சிப்பான். ஜாக்கிரதை!.


எங்கள் அனுபவம்:

  மேலே உங்களை நான் எச்சரித்தேன். ஆனால் நானும் - என் மனைவியும் எங்கள் வீடு தேடிவந்த பல ஊழியர்களிடம் பலமுறை ஏமார்ந்து தெளிவு பெற்றுவிட்டோம். இதில் அதிகம் ஏமார்ந்தது என் மனைவி திருமதி.வதனி புஷ்பராஜ் அவர்கள்தான். நான் ஊரில் இல்லாத நாட்களில் வீடுதேடிவந்த ஊழியர்கள் கூறின பரிதாப கதைகளை நம்பி அவர்களுக்கு பணம் கொடுத்து ஏமார்ந்துபோயிருக்கிறார்கள். ஆகவே, நாம் எல்லாரும் இப்படிப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக, விழிப்போடு, ஞானத்தோடு இருப்போம். நாம் ஏமாறும் வரை ஏமாற்றுகாரர்கள் இருந்துகொண்டேயிருப்பார்கள். ஜாக்கிரதை! இப்படி ஏமாற்றும் ஊழியர்கள் மனம்மாற ஜெபிப்போம்.

  பல ஆண்டுகளுக்குமுன் சில ஊழியர்களுக்கு ஆலயம் கட்ட, நிலம் வாங்க என்றும், வேறு சிலருக்கு ஆலய கட்டிடம் கட்ட, கூரைப்போட என்று கேட்ட சில ஊழியர்களுக்கு பண உதவி செய்து அதற்கு அத்தாட்சியாக நாங்கள் எதையும் எழுதி வாங்காமல் எதிலும் எங்கள் பெயர் சேர்க்காமல் என் மனைவி, என் பிள்ளைகள் இவர்களின் வருமானத்திலிருந்து ஊழியத்திற்காக எடுத்துவைத்த பணத்திலிருந்தும், என் மனைவியின் அரசாங்க பிராவிடன்ட் ஃபண்ட் பணத்திலிருந்தும் பணம் எடுத்து, அவைகளை சேகரித்து சேர்த்துகொடுத்தோம். அப்படி பயன்பெற்ற ஊழியர்கள் திறப்பு விழா நடத்தும்போதும் நன்றி கூறும்போதும் அழுது நடித்துபோனவர்கள் பலர். அதன்பின் அவர்கள் எந்த தொடர்பும் எங்களோடு வைப்பதில்லை. ஒரு சிலர்மட்டும் இன்றும் நன்றியுள்ளவர்களாக எங்களோடு தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளார்கள். இந்த விஷயத்தில் நாங்கள் ஏமார்ந்துபோனோம் என்று கூற நான் விரும்பவில்லை. கொடுத்தது கர்த்தருக்கென்று, ஆகவே நாங்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடையமாட்டோம். எங்கள் கிரியைக்கான பலன் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

  வாசகர்களாகிய உங்களுக்கு மேலே குறிப்பிட்ட இரண்டுவித அனுபவங்கள் பாடமாக அமையட்டும்.

  நீங்கள் எதை செய்தாலும் அதை கர்த்தருக்கென்றே செய்யுங்கள் என்று வேதம் கூறுகிறது. ஆமென்.


முக்கிய அறிவிப்பு:

இந்தியாவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் என்ற ஊரில் வாழும் திரு.ஐயாதுரை என்பவர் இவர் சமீபத்தில் மறைந்த Rev.பியூலா அவர்களின் கணவராவார். இவர் என் பாடல்கள், பிரசங்கங்கள் அடங்கிய சிடிக்களை விற்பனை செய்தார். தமிழ்நாட்டில் நாகர்கோவில், பாளையங்கோட்டை, மில்லர்புரம், தூத்துக்குடி போன்ற நகரங்களில் நான் கன்வென்ஷனில் செய்த பிரசங்க CD & DVD-களை அந்தந்த சபையினரிடம் என்னை கேட்காமலே அவைகளை வாங்கி அதை பல நூறு CD & DVDயாக காப்பி செய்து அதிக விலைக்குவிற்று சம்பாதிக்க ஆரம்பித்தார். இவர் மனைவியும் இவரும் அன்றைய நாட்களில், CD & DVD விற்பதின்மூலம் வரும் வருமான மூலமாவது இவரும், இவர் மனைவியும் சந்தோஷமாக, சமாதானமாக வாழட்டும் என்ற நல்ல எண்ணத்தில் என் பிரசங்க CDக்களை விற்பதை நான் தடைசெய்யவில்லை.

ஆனால் அவர் மனைவி மரித்தப்பின் சில முக்கிய காரணங்களுக்காக இனி என் பிரசங்கம் - பாடல்கள் எதையும் நீங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று கட்டளையிட்டு எழுதினேன். அவர் கைவசம் இருந்த CDக்கள் அனைத்தையும் நானே வாங்கி இலவசமாக பலருக்கு கொடுக்க ஏற்பாடு செய்து அதற்கான பணமும் அவருக்கு கொடுத்துவிட்டேன். அவர் இதுவரை விற்ற CDக்கு நான் எந்த கமிஷனோ, ராயல்டியோ இதுவரை அவரிடமிருந்து பெற்றதில்லை, எதிர்ப்பார்த்ததுமில்லை. அதன் அவசியமும் இல்லை. அன்றும் - இன்றும் அவருக்கோ - என் ஊழியத்துக்கோ இதுவரை எந்த தொடர்பும், உறவும் இல்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன். என் CD விஷயமாக அவரோடு தொடர்பு வைக்கவேண்டாம் என்று இதன்மூலம் அறிவிக்கிறேன்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM