தேவன் ஒருவரே நம்மைப் பரிசுத்தமாகக் கூடியவராக இருக்கிறார். நமது
ஒத்துழைப்பு இன்றி அவர் நம்மைப் பரிசுத்தமாக்குகிறதில்லை. கிறிஸ்தவ வாழ்வின் பல அம்சங்களில்
தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும் ஆர்வமிக்க முறையில் கலந்து இருக்கின்றன. தேவன் நாம் பரிசுத்தமாவதற்குத் தேவையான பலத்தை தருகிறார். அதனை நாம் நமக்குரியதாக்கிக் கொள்ளவேண்டும். ஆனால், நாம்
பரிசுத்த ஆவியினால் நிறைய வேண்டுமென்பது நமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையாகும்.
மாம்சத்தில் எழுகிற இச்சைகளுக்கு இடம்கொடாது. ஆவியில் நடப்பதே பரிசுத்த ஆவியில் நிறைவதாகும்.
பரிசுத்த ஆவியினால் நிறையப்படுவது என்பது யாது? அது நமது புலனுக்கு அப்பாற்பட்டதும், மறைபொருளுமாகத் தோன்றுகிறது. அது ஏதோ பிரசங்கிகளுக்கும், இறை ஊழியர்களுக்கும் என ஒதுக்கி வைக்கப்பட்ட ஒன்றாகவும் தோற்றமளிக்கிறது. அந்த எண்ணம் முற்றிலும் தவறானது. அது
தேவனுடைய மக்கள் யாவருக்கும் கொடுக்கப்பட்ட கட்டளையாக இருக்கிறது. எந்தவொரு விசுவாசியும் செய்யமுடியாத ஒன்றைச் செய்யும்படியாகச் சொல்லப்படவில்லை. தொடர்ந்துவரும் பகுதியில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவதை மிக எளிமையாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் ஆக்கித்தரும்படி சில அடிப்படை வழிமுறைகளை ஆலோசனையாகத் தருகிறோம்.
பாவத்தைக் குவித்துக்கொள்ளாதீர்கள்:
நாம் நம்மைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும்படி நம்மிடம் பாவம் உண்டென்று தெரிந்தவுடனே, அதை அறிக்கை செய்து விட்டுவிடவேண்டும். (நீதி 28:13, 1யோவான் 1:9) எல்லாப் பாவமும் தேவனுக்கு விரோதமாக இருப்பதால் அவரிடத்தில்
அறிக்கை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு எதிராகக்குற்றம் இழைத்திருப்பின் அவர்களிடமும் அறிக்கை செய்யவேண்டும். உண்மையான அறிக்கை யாதெனில்:
உடனடியான அறிக்கை: பாவம் செய்த நாளின் முடிவுவரை அல்லது அந்த வாரத்தின் கடைசி வரைக்கும் காத்திருக்க்கூடாது. உடனடியாக அறிக்கை செய்யவேண்டும்.
நிபந்தனையற்ற அறிக்கை: "நான் ஏதாவது தவறு செய்திருந்தால்" என்றோ
"நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்றால் நான் உங்களை மன்னிப்பேன்" என்றோ சொல்லக்கூடாது ஒரு பெண் இப்படி கூறினாள்.
"நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்கான மன்னிப்பை ஏற்றுக்கொள்ள
ஆயத்தமாயிருக்கிறேன்" என்று சொன்ன அந்த பெண்மணியைப்போல நாம் நடந்துக்கொள்ளக்கூடாது. இது மெய்யான அறிக்கை ஆகாது.
உண்மை முழுவதையும் அறிக்கை செய்தல்: ஒரு மனிதன் ஒரு முழுக்கயிற்றைத் திருடிவிட்டேன் என்றுமட்டும் அறிக்கை செய்தான். ஆனால் அக்கயிற்றின் மறுபுறத்தில் ஒரு குதிரை கட்டியிருந்தது அதையும் சேர்த்து திருடினேன் என்று சொல்லவில்லை. இப்படி உண்மையும், பொய்யும் கலந்த அறிக்கையில் எவ்விதப் பயனுமில்லை.
உள்ளதை உள்ளவாறு சொல்லிச் செய்யும் அறிக்கை: உள்ளதை உள்ளப்படியே சொல்ல வேண்டும். அரக்கனை அரக்கன் என்றே சொல்லவேண்டும்.
"குடியை" அறியாப்பிழை என்றோ "திருடியதை" கடன்பெற்றேன் என்றோ சொல்லக்கூடாது. பேதுரு
"நான் குறையுள்ள மனிதன்" என்று சொல்லவில்லை.
"கர்த்தாவே, நான் பாவியான மனுஷன்" என்றே அறிக்கை செய்தான். செய்த
பாவத்தை விட்டுவிடும் மனமும், தீர்மானமும் இல்லாதிருப்பின் அது அறிக்கை ஆகாது.
இதயபூர்வமான அறிக்கை: "நான் தவறு இழைத்துவிட்டேன். அதற்காக வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள்" என்றே உளமாரச் சொல்லவேண்டும்.
நாம் பாவத்தை நேர்மையாக அறிக்கை செய்யும்போது, தேவ வார்த்தையின் அதிகாரத்தின் அடிப்படையில் மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வோம். நாம் அறிக்கை செய்தால் தேவன் மன்னிப்பேன் என வாக்களித்துள்ளார் (1யோவான் 1:9). தமது வாக்கை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவருமாயிருக்கிறார். நமது விசுவாசத்தினாலே
மன்னிப்பை நமக்குரியதாக்கிக் கொள்ளவேண்டும்.
"நான் மன்னிப்படைந்த உணர்வு எனக்கில்லையே" என்று ஒருவர் நினைக்கலாம். நீங்கள் அதை உணர்கிறீர்களோ, இல்லையோ மன்னிக்கப்பட்டாயிற்று. மாறிப்போகிற உணர்வுகளாலே அல்ல, மாறாத தேவ வார்த்தைகளினாலேயே மன்னிப்பின் உறுதி கிடைக்கிறது. உண்மையான மனமாற்றம் உங்களில் ஏற்படும்போது நீங்கள் மன்னிக்கப்பட்டீர்கள் என்பதை நீங்களே உணரமுடியும்.
"தேவன் என்னை மன்னித்துவிட்டார் என்று அறிவேன். ஆனால், நான்
என்னை மன்னிக்க மாட்டேன்" என்று சிலர் கூறலாம். அந்த மனப்பான்மை தேவையில்லாது அது தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்வதாகும். தேவன் நம்மை மன்னித்தாயிற்றெனில் அது முடிவடைந்த ஒன்றாகும். குற்ற உணர்வோடு இன்னும் ஏன் புரளுகிறீர்கள்? தேவன் மன்னிக்கிறபோது,
அப்பாவத்தை மறக்கவும் செய்கிறார் என்பதே உண்மை (அவர்களுடைய பாவங்களை . . .
இனி நான் நினைப்பதில்லை என்று நம் ஆண்டவர் கூறுகிறார். இதனால் (எபி 10:17) அவர் ஞாபகமறதியுள்ளவர் என்பது இதன் பொருள்ளல்ல. அப்பாவங்களை நமக்கு எதிராக ஒருபோதும் கொண்டுவரமாட்டார் என்பதே அதன் பொருளாகும். அந்த வழக்கு முடிவடைந்துவிட்டது என்னும் வகையில் அப்பாவங்கள் கர்த்தரால் மறக்கப்பட்டு விட்டன. உள்ளம் உடைந்து மனம் வருந்தின ஒருவன். மீண்டும் தீய பழக்கத்தில் வீழ்ந்துப்போனவனாக
"கர்த்தாவே, நான் அந்தப் பாவத்தை மீண்டும் செய்துவிட்டேனே" என்று அழுதபோது
"எதை நீ மீண்டும் செய்தாய்?" என்று ஒரு நபருக்கு கர்த்தர் பதில் உரைத்ததாக ஒரு கதை உண்டு. அதன் அர்த்தம் நானே அதை மறந்துவிட்டேனே என்பதாகும். அவன் அறிக்கை செய்த அத்தருணத்திலேயே அந்தப் பாவத்தைத் தேவன் மறந்துவிடுகிறார். நாம் அறிக்கை செய்த பாவத்தை தேவன் மறப்பதோடு
"மறுபடியும் அதை தோண்டிப்பார்க்காதே" என்னும் குறிப்பையும் அதின்மேல் வைக்கிறார் என்று
கூரிடென்பூம் என்ற ஊழியர் நமக்கு நினைவூட்டுகிறார். அறிக்கை செய்து
பாவ மன்னிப்பைப் பெற்றபிறகு, அது நாம் செய்த பாவமோ அல்லது மற்றவர்கள் செய்த பாவமோ, நாம் அதைத்தோண்டி ஆராய்ந்துபார்க்கும்படி தேவன் விரும்புகிறதில்லை. அந்தப் பாவங்களை நாம் மீண்டும் செய்யாதபடி
நம்முடைய எச்சரிப்புக்கென அவற்றை நினைத்துப் பார்க்கலாம்.
நாம் தேவனிடத்திலா அல்லது யாருக்கு எதிராகப் பாவம் செய்தோமோ அவர்களிடத்திலா அல்லது சபையிலோ, பாவ அறிக்கை செய்யவேண்டும்? நாம் யார் யாருக்கு எதிராகப் பாவம் செய்தோமோ அவர்களிடத்திலெல்லாம் சென்று அறிக்கை செய்யவேண்டும் என்பதே இதற்குத்தக்க பதிலாக இருக்கிறது. இதைக்குறித்து
லீத் சாமுவேல் என்பவர் நல்ல யோசனை தருகிறார்.
"உங்களுடைய பாவம் சிந்தனையில் ஏற்பட்டிருந்தால், உங்கள் அறிக்கையும்
சிந்தனையிலே செய்யப்படவேண்டும். யாராவது ஒரு பெண்ணிடம் சென்று என் உள்ளத்தில் அல்லது என் சிந்தனையில் உங்கள் மீது இச்சைகொண்டேன் என்று ஞானமில்லாமல் கூறக்கூடாது. அப்படி சொல்லுவது விரும்பத்தகாத சூழ்நிலையையும், குழப்பத்தையும் வருவித்து சில நேரங்களில் அதிகப் பாவத்தை உண்டாக்க ஏதுவாகும். உங்கள் எண்ணத்தில் உண்டான பாவம்
மறைவானதாக இருப்பின், பாவ அறிக்கை சிந்தையிலேயே மறைவானதாக இருக்கட்டும். அதை வெளிப்படையாகச் சொல்லி மற்றவர்களுடைய உள்ளம் உடைந்துப்போவதற்கும்,
கறைபடுவதற்கும் ஏதுவானதாக இருக்கவேண்டாம். சபை ஐக்கியத்திலே வெளிப்படையாகச் செய்த பாவத்திற்குரிய மன்னிப்பை, சபை ஐக்கியத்திலிருந்து பெறவேண்டும். பிறரைக் குற்றப்படுத்திவிட்டீர்களா? உங்கள் வருத்தத்தை அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களுக்கு எதிராகக் கசப்பு உணர்வு கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் சொற்களால் அவர்கள் அறிந்திருக்கிறார்களே? ஆகவே உங்கள் சொற்களுக்காக நீங்கள் மனங்கசந்து வருந்துகிறீர் என்பதை வெளிப்படையாக அவர்களிடம் தெளிவாக அறிக்கையிடுங்கள்".
ஹேரிலாய்டு என்பவர் தமது நண்பர்களாலும், வாடிக்கையாளர்களாலும், இவர் மிகச் சிறந்த கிறிஸ்தவத் தொழிலதிபர் என்னும் புனிதத்தன்மையோடு கூடிய, புகழுரையை கேட்டபோது தன் உள்ளத்தில் குத்தப்பட்டவராக, தான் அதற்குத் தகுதியற்றவர் என்று உணரலானார். அவர்கள் தன்னை இவர்
"முற்றிலுமாக ஒப்புவித்த ஒரு கிறிஸ்தவ ஒளிச்சுடர்" என்று அவர்கள் புகழுரை வழங்கியபோது மனதில் மிகுந்த தொல்லையுற்றவரானார். இந்தப்
புகழுரைக்கு தான் தகுதியற்றவன் என்ற அறிவிப்பை வெளியிட்டார்:-
எனது தொழில் வளர்ச்சிக்கும், எனது மகிழ்ச்சிக்குமாகவே என்னுடைய அனைத்து சக்தியையும் நான் செலவிட்டேன்: எனது வாழ்க்கையில் அதற்கே முதலிடம் கொடுத்தேன்.
நான் உண்மையாக ஆசையாக வேதத்தைப் படிக்கவேயில்லை. என்னுடைய எண்ணத்திலும், செயலிலும் செய்த பாவங்கள் கொடியவை. அது பலருக்கு தெரியாது. தேவனுடைய ஊழியத்திற்கென்று நான் கொடுத்த தசமபாகம் என்னுடைய சக்திக்கு மிகச்சிறிய தொகையாகும். அதை சிறந்த பலி என்று புகழ்ந்து சொல்வது கேலிக்கூத்தாகும்.
என்னுடைய அதிகாரத்தைச் செலுத்தி, மற்றவர்களிடம் குற்றம் கண்டுபிடித்து எஜமான் என்னும் ஆணவம் எனக்குள் கொண்டிருந்தேன். அதை வெளி உலகம் அறிய நியாயம் இல்லை.
என் குடும்பத்திலும் அவ்வப்போது அன்பு கூறாத கணவனாகவும், அன்று கூறாத தகப்பனாகவும் விளங்கினேன். சிறுவனாக இருந்தபோது நான் சபைக்குச் சென்றதுபோல, இப்போது சபைக்கு ஒழுங்காகச் செல்கிறதில்லை.
மற்றவர்கள் என்னை புகழும்போது நான் ஏமாற்றுகிறவன் என்று என் மனசாட்சி கூறுகிறது. அதனால்தான் இந்த உண்மைகளைக் சொல்ல ஏவப்பட்டேன். என்னை,
"மாதிரிக் கிறிஸ்தவன்" என்று சொல்வது தவறு, தயவுசெய்து கிறிஸ்து ஒருவரைத்தவிர ஒருவரையும் புகழாதீர்கள்.
இப்படி இவர் வெளியிட்ட நேர்மையான அறிக்கைகளை இன்று நாம் கேட்பதில்லை. இதுபோல அறிக்கைகளை நாம் செய்வதுமில்லை.
கிடைக்கும் சந்தர்ப்பங்களில் திரும்பச் செலுத்தவேண்டும்:
கடந்த காலத்தில், நாம் செய்த தவறுகளை முடிந்த மட்டும் சரி செய்யவேண்டுமென்பது. தேவனுடைய கிருபை நமக்குக் கற்பிக்கும் பாடமாகும். நாம் தவறான முறையில் எடுத்துக்கொண்ட பொருட்கள், அவற்றின் உரிமையாளரிடம் திரும்பக்கொடுப்பது என்பதும் இதன் பொருளாகும். களவு செய்த பணத்தை வட்டியோடு திரும்பச் செலுத்தவேண்டும்.
புதிய ஏற்பாட்டில் சகேயு இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகத் திகழ்கிறான். அவன் மனமாற்றம் அடைந்தபிறகு, கர்த்தரைநோக்கி
"ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன். நான் ஒருவனிடத்தில் எதையாகிலும்
அநியாயமாய் வாங்கினதுண்டானால் நாலத்தனையாகச் செலுத்தகிறேன்" என்றான் (லூக் 19:8). தான்
இரட்சிப்படையவேண்டும் என்பதற்காக அவன் இதைச் செய்யவில்லை.
இரட்சிப்படைந்ததினாலேயே இதைச் செய்தான்.
திரும்பிச் செலுத்துதல் நேர்மையாகவும், முழுமையாகவும் இருக்கவேண்டும்.
"கடந்த ஆண்டு, என்னுடைய வருமானவரி அறிக்கையில் உண்மையான வருமானத்தைக் காட்டவில்லை. அதனால் என்னால் சரியாக உறங்கமுடியவில்லை. ஆகவே இத்துடன் ரூ.1000க்கான காசோலையை அனுப்புகிறேன். இன்னும் எனக்குத் தூக்கம் வரவில்லையென்றால் மீதித்தொகையையும் அனுப்புவேன்" என்று வருமான இலாகாவிற்கு ஒருவர் கடிதம் எழுதியனதைப்போல நாம் நடந்துக்கொள்ளக்கூடாது. இனி அதை எந்த கணக்கிலும் சேர்க்கமுடியாது என்று பதில் வந்தது. ஆகவே அப்படி செய்யாமலிருக்க ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமே யான்தான் பெரிய நீதிமான் என்று காண்பிக்க இப்படிப்பட்ட சில இக்கட்டான அரசாங்க விஷயங்களில் நடந்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் செய்த தவறு காலம் கடந்துவிட்டதாலும், சூழ்நிலைகள் மாறிவிட்டதாலும் சில வேளைகளில் அந்த பணத்தை திரும்ப அவர்கள் பெற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கும். அந்தப் பாவத்தை நாம் அறிக்கை செய்தபோது நமது உள்ளத்தில் இனி அப்படி செய்யக்கூடாது என்றும் அதை சரிய செய்யவேண்டுமென்ற உள்ளார்ந்த எண்ணம் நமக்குள் எழுந்ததைக் கர்த்தர் அறிவார். சூழ்நிலைகளை அறிகிற கர்த்தர் நமது எண்ணங்களையும் ஏற்றுக்கொள்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் பெல்ஃபாஸ்ட் என்னும் நகரில்
W.P.நிக்கல்சன் தேவ செய்தியை வழங்கினார். தேவஆவியானவரின் வல்லமையுள்ள நடத்துதலினால் குற்ற உணர்வைப் பெற்ற மக்கள் தாங்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் திருடிய இயந்திரக் கருவிகளைத்
திரும்பகொடுத்தனர். இவ்வாறு திரும்பக் கிடைத்த கருவிகளை வைப்பதற்குச் சில தொழிற்சாலைகள் புதிய அறைகளைக் கட்ட வேண்டியதாயிற்று. கடைசியில் அத்தொழிற்சாலைகள் போதுமான இடம் இல்லாத காரணத்தினால் எடுத்த பொருட்களைத் திரும்ப கொண்டுவராதீர்கள் என்று பொது அறிவிப்பு செய்தனர். அந்த அளவு பிரசங்கத்தின் விளைவினால் உள்ளம் குத்தப்பட்டு ஏராளமானவர்கள் எடுத்த பொருள்களை எல்லாம் திரும்ப செலுத்தினர். அதுபோலவே, அமெரிக்காவில் நடத்தப்படும்
கெஸ்விக் மாநாட்டில்
F.B.மேயர் உயிர்மீட்சி அடையச் செய்யும் செய்திகளை வழங்கினார். பல கிறிஸ்தவர்கள், தாங்கள் தவறாக எடுத்துக்கொண்ட பணத்தையும், வாங்கிய கடனையும் பிரசங்கம் கேட்டு தீர்மானம் செய்த அன்றே அனுப்பும்படி அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை மொய்த்துவிட்டனர். வேறு பல முறைகளிலும் பணத்தை திரும்பச் செலுத்தினார்.
உங்கள் சரீரத்தை ஜீவபலியாய் ஒப்புவியுங்கள்:
நடைமுறைப் பரிசுத்தத்தை அறிய, நாம் செய்யவேண்டிய மூன்றாவது செயலாக்கத்தைக் குறித்துக் காண்போம்.
நம்மையும், நமது அவயங்களையும் நீதிக்கு அடிமைகளாக ஒப்புவிக்கவேண்டும் (ரோம 12:12,6:19).
ஒப்புவித்தல் என்பது விசுவாசிகளின் வாழ்க்கையின் முதல் திருப்புமுனையாக இருக்கிறது. அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒன்றாகவும் அது இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் நமது சரீரங்களைக் கர்த்தருக்கு ஜீவபலியாய் ஒப்புவிக்கிறோம். ஆனாலும், தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், நம்முடைய
சித்தத்திற்குப் பதிலாக அவருடைய சித்தத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக்
கர்த்தரிடம் ஒப்புவிக்க வேண்டும். தன்னைத்தான் வெறுத்து, சிலுவையைச் சுமந்து அவர் தம் அடியொற்றிச் செல்ல வேண்டும். பாவ அறிக்கை எப்படி நம்மைத் தூய்மையாகக் காத்துக்கொள்கிறதோ, அதுபோலவே
ஒப்புவித்தல் நம்மை அவருக்கு உரியவராகக் காத்துக்கொள்ளும்.
ஆனே கிரேனிஸ் என்பவர், பரிசுத்தத்தின் உண்மையான பொருளை கீழ்வரும் வாக்கியங்களில் விளக்கித் தருகிறார்:.
"எனது வாழ்க்கையினின்று சுயம் நீங்கி,
எனக்குள்ளாக எனது நேசக் கர்த்தர் வருவாராக"
என் இதயத்தை அவர் வசிக்கும் வீடாக மாற்றி, அவர் தங்குவதற்கேற்ற அனைத்து வேலைப்பாடுகளையும் செய்வாராக. இவ்வித நிலை உண்டாவதற்கு என்னென்ன தேவை என்பதை அறியத்தக்கதாக ஒவ்வொரு நாள் அதிகாலையிலும், இரகசிய அறைக்குள் சென்று எனது சித்தத்தை
அவரிடம் சம்ர்ப்பிக்கிறேன். அதனை அவர் கிருபையுடன் ஏற்றுக்கொண்டு,
தமது சித்தத்தை என்னிடம் தருகிறார். அதன்பிறகு,
அந்நாளைத் தொடங்க ஆயத்தப்படுகிறேன். அந்த நாளில் கர்த்தர் எனக்கிட்ட பணியைச் செய்கிறேன்.
இவ்விதமாகவே என் நலனைக் காக்கிறார். எனக்கு எதிராக வரும் இடற்பாட்டை அவர் கட்டுப்படுத்துகிறார். நாளின்
இடைவேளைகளில்கூட நாங்கள் சந்தித்து எங்களது சித்தங்களைப் பரிமாற்றம் செய்துக் கொள்வோம்.
பிஷப்.டெய்லர் ஸ்மித் என்பார் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் தனது படுக்கையில் முழங்காலில் நின்றவராக,
"கர்ததாவே, எனது படுக்கை உமது பலிபீடம், நானோ உமது
ஜீவபலி" என்னும் எளிய சொற்களைச் சொல்லி இவ்வாறு தன்னுடைய செய்கைகளின் உரிமையைக் கர்த்தரிடம் ஒப்புவிப்பார்.
ஆர்தர் பியர்சன் என்பவர் ஒருமுறை
ஜார்ஜ் முல்லரிடம்
"தேவன், உங்கள் மூலமாக மேன்மையானதும், அதிசயமானதுமான செயல்களைச் செய்வதன் இரகசியம் என்ன?" என்று வினவினார். பிற்பாடு,
"பல ஆண்டுகளுக்கு முன்பே என் வாழ்க்கையில் ஒருநாள்,
ஜார்ஜ் முல்லர் இறந்துவிட்டார். இளைஞனாக இருந்தபோது என் வாழ்க்கையில் பல சாதனைகளாற்ற வேண்டுமென்ற நோக்கம் எனக்கு இருந்தது. அவை யாவற்றிற்கும் ஒரு நாள் நான் மரித்துவிட்டேன். அப்பொழுது, ஆண்டவராகிய இயேசுவே,
இன்றிலிருந்து எனது சித்தமல்ல. உமது சித்தமே என்
வாழ்க்கையில் நிகழக்கடவது என்றேன். அந்த நாள் முதற்கொண்டு என்னைத் தேவன் அவருடைய கிரியைக்கென்று பயன்படுத்துகிறார்" என்றார்.
இதனையே ஜெனரல் பூத் என்பவர் வேறொரு முறையில் விளக்குகிறார்.
"நான் பதினேழு வயது நிரம்பினவனாக இருந்தபோது, வில்லியம் பூத் என்பவனுடைய உடைமை யாவும் தேவனுக்கு உரியதாக வேண்டும் எனத் தீர்மானித்தேன்" என்பதாகும்.
திருமறை எழுத்துகளால் உங்கள் வாழ்க்கையை நிரப்புங்கள்:
நான்காவதாக, நாம் திருமறை எழுத்துகளுக்கு நெருங்கியிருப்பது இன்றியமையாத தேவையாகும். அந்த வார்த்தைகள் நம்முடைய வாழ்வில் நிரம்பி இருக்கும் அளவிற்கு நாம் வேதத்தை நெருங்கியிருக்கவேண்டும். நாம் வேதத்தை வாசித்தல், மனப்பாடம் செய்தல், படிப்பது, தியானம் செய்வது. அதோடு
தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல் என்பன அதனுள் அடங்கும். நாம் வேதத்தை வாசிப்பதால், நமது குணநல நடவடிக்கை எப்படிப்பட்டதாயிருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்பதன் பொதுவான கருத்துக்களைக் கற்றுக்கொள்வோம். நாம் அவற்றை மனப்பாடம் செய்வதால், நாம் சாட்சி பகரும் வேளைகளிலும், சோதனைக் காலங்களிலும், முடிவெடுக்க முடியாத சூழ்நிலைகளிலும் ஏற்ற வசனங்களை ஆவியானவர் நமது நினைவிற்குக் கொண்டு வருவதற்கு ஏதுவாயிருக்கும். நாம் அதனைப் படிப்பதால் கள்ள போதகங்களிலிருந்தும், தவறான எதிர்ப்பார்ப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவோம். அதனைத் தியானம் பண்ணுவதால், அது யாரைக் குறித்துப்பேசுகிறதோ அவரை நோக்கிப் பார்த்து மாற்றம் பெறுவோம். அதற்குக்
கீழ்ப்படிவதால், நாம் நீதியின் பாதைகளில் நடத்தப்படுகிறவர்களாயிருப்போம்.
பரிசுத்தமாகுதலுக்கும், திருமறைக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிந்த சங்கீதப் பாடகன்,
"வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே . . . . நான் உமக்கு விரோதமாய் பாவஞ்செய்யாதபடிக்கு உமது வாக்கை(வசனத்தை) என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்" என எழுதியுள்ளான் (சங் 119:1,11). இயேசு நாதர் இந்தத் தொடர்பைத் தமது ஜெபத்தில் உறுதிப்படுத்துகிறார்.
"உம்முடைய சத்தியத்தினாலே (வார்த்தையினாலே) அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய
வசனமே சத்தியம்" (யோவான் 7:17). இந்நாட்களில் வழங்கும் பொதுமொழி இத்தொடர்பை இவ்வாறு விவரிக்கிறது.
வேதம் பாவத்திலிருந்து உன்னைக் காக்கும் அல்லது பாவம் உன்னைப் பரிசுத்த வேதத்திலிருந்து விலக்கும். இரண்டு செயல்களில் தேவனுடைய பங்கு இல்லை. அவையாவன. வேதத்தில் படியும் தூசி, பனிப்போலக் குளிர்ந்துப்போன இருதயம்.
தூய ஆவியினால் நிறைவதற்கும், திருமறைக்கும் உள்ள தொடர்பு தெளிவுள்ளதாயிருக்கிறது. பரிசுத்த ஆவியின் நிறைவைத் தொடர்ந்து,
"சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திச்சொல்லிக் கொண்டு, இருதயத்தில்
கர்த்தரைப்பாடிக் கீர்த்தனம் பண்ணுதல்" ஆகியவை பரிசுத்தாவியில் நிறைந்தவனுக்குள் நிகழும் செயல் ஆகும் என்று எபேசியர் 5ம் அதிகாரத்தில் பவுல் கூறியிருக்கிறார். மேலும்
"கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக, சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திக் சொல்லிக்கொண்டு நமது இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடுவோம்" என்று கொலோசெயர் நிருபத்தில் 3வது அதிகாரத்தில், அதே ஆசிரியர் கூறியிருக்கிறார்.
ஒரு பொருளுக்கு வேறு இரண்டு பொருட்கள் சமமாயிருக்குமெனில், அவ்விருபொருட்களும் ஒன்றுக்கொன்று சமமானவையாகும். ஆகவே
ஆவியினால் நிறைவது என்பது கிறிஸ்துவின் வசனத்தினால் நாம் பூரணமாக நிறைந்து வாசம் செய்வதற்கு ஒப்பாகும் என்பதே முடிவு.
வேதம் இல்லாமல் பரிசுத்தம் இல்லை. தேவபக்தி நிறைந்த மேக்செய்னி என்பவர் வேத வசனங்கள் இல்லாமல் தேவதூதர்கள் தேவனால் படைக்கப்பட்டனர். ஆதாமும்
"வேத வசனங்களின்றிப் பரிசுத்தமாய்ப் படைக்கப்பட்டான். அவரால் வேத வசனங்கள் இன்றி எதனையும் பரிசுத்தமாக்கமுடியும் என நான் நம்புகிறேன். ஆனால் அவர் அவ்வாறு செய்யமாட்டார்.
"உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்" ஒரு தாய் தன் குழந்தையைப் பாலூட்டிப் பேணி வளர்க்கிற வண்ணம், இயேசுநாதர் திருவசனமாகிய ஞானப்பாலினால் ஒவ்வொரு ஆத்துமாவையும் ஊட்டி வளர்க்கிறார்" எனக்கூறியுள்ளார்.
தாங்கள் அடைகின்ற
பரவச நவீன அனுபவங்களின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள் வாரத்தின் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரைக்கும்
வேதாகமத்தைத் திறக்காதபடி ஏமாற்றப்படுகின்றனர். எச்சரிக்கை?
இடைவிடாத ஜெபம்:
ஜெபம் இல்லமால் பரிசுத்தம் இல்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது சீடர்களுக்கு முன்மாதிரியாக ஜெபத்தைக் கற்பித்த போது
"எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்" என்னும் வேண்டுகோளையும் சேர்த்துள்ளார். இந்த வேண்டுகோளைத் தவறாமல் ஏறெடுக்கவேண்டும்.
பாவத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுவதற்கான கதறுதல் ஒருவரது இதயத்தினின்று வெளிப்படவில்லையென்றால் அவரது ஜெபம் முற்றுப்பெற்றதாகக் கருதமுடியாது.
நமது அன்றாடக ஜெபப்பட்டியலில் கீழ்க்காண்பனவற்றைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
"கர்த்தாவே, பரிசுத்தமாய் வாழ்வதற்குத் தேவையான பலத்தை எனக்குத் தாரும்".
"பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வாசம் பண்ணுகிறார் என்பதை எனக்கு உணர்த்தி நினைவூட்டி அதன் காரணமாக அவரைத் துக்கப்படுத்தும்படியான காரியம் எதையும் நான் செய்யாதபடிக் காத்துக் கொள்ளும்".
"பரலோகத்தின் இப்புறமாகிய பூமியில் வாழ்கிற ஒருவன், எந்த அளவிற்கு பரிசுத்தமாய் வாழ முடியுமோ அந்த அளவிற்கு நான் பரிசுத்தமாய் வாழ எனக்கு உதவி செய்யும்".
"நான் பாவம் செய்ய விரும்பினாலும் அதைச் செய்யாதபடித் தடை செய்யும்". "பாவம் செய்வதற்கான சோதனையும், வாய்ப்பும் ஒன்று சேராதபடி என்னைத் காத்துக்கொள்ளும்".
"உமது பெயருக்குக் களங்கம் உண்டாகாதபடி என் செய்கைகளைக் காத்துக்கொள்ளும்"
"நான் பாவத்தில் வீழ்ந்து போவதைக்காட்டிலும், என்னைப் பரலோக வீட்டிற்கு அழைத்துக் கொள்ளும்". எவன் ஒருவனுடைய முழங்கால்கள் ஜெபத்தில் களைத்துப்போகாதிருக்கிறதோ அவன் பரிசுத்தமாய் வாழ்வான் என எதிர்ப்பார்க்கமுடியாது.
கிறிஸ்தவ ஐக்கியத்தில் நெருங்கிக் காணப்படுதல்:
மற்ற விசுவாசிகளுடன் நெருங்கி வாழ்வது (ஐக்கியம் வைத்துக்கொள்ளுதல்), பரிசுத்தமாகுதலுக்குத் தூண்டுகோலாயிருக்கிறது. கூடிவாழும்
பறவைகளுக்கு ஒப்பாகவே தேவ மக்களும் காணப்படவேண்டும். ஆலோசனைக் சங்கத்தாரால் விடுதலை செய்யப்பட்டவுடன், பேதுருவும், யோவானும் தமது
கிறிஸ்தவத் தோழர்களை நாடிச்சென்றனர் (அப் 4:23).
சபை கூடுதலை விட்டுவிடக்கூடாது என நாம் புத்தி புகட்டப் பட்டிருக்கிறோம். (எபி 1:25). தேவ ஜனங்கள் ஒன்றாகக் குழுமியிருந்த நேரங்களிலேயே, தூய ஆவியானவர் அதிசயிக்கத்தக்க வகையில் இறங்கி வந்ததாக, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காண்கிறோம்.
ஒருமன இணக்கத்தினால் ஏற்படும் ஆவியின் அனுபவம் என்று இது அறியப்படுகிறது.
வாரந்தோறும் ஒழுங்காக நாம் கர்த்தருடைய
மரணத்தை நினைவுக் கூர்ந்து அப்பம்பிட்பது, நமது இரட்சகர் பாவத்திற்கென்று செலுத்திய விலையை நமக்கு ஞாபகமூட்டுவதால், நாம் பாவம் செய்யாதபடி நம்மைத் தடுக்கும் வலிமை மிக்க சாதகமாக இருக்கிறது. தேவனுடைய கணக்கின்படி பாவத்திற்கு என்ன விலை கொடுக்கப்பட்டது என்பதைக்
கர்த்தருடைய பந்தி நமக்கு அறிவிக்கிறது. அதன் வாயிலாக நாம் பொல்லங்குகளை எதிர்த்து நிற்கத்தக்க பலத்தைப் பெறுகிறோம். மேலும், இவ்வுண்மை உள்ளுர் சபையின் அனைத்துக் கூட்டங்களுக்கும் பொருந்தும்.
கர்த்தருக்கென்று சுறுசுறப்பாயிருத்தல்:
ஜெயக் கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கென்று எப்பொழுதும் சுறுசுறுப்பாயிருப்பதன் மேன்மையை நிரூபித்துக் காட்டியுள்ளனர் (பிரசங்கி 9:10).
"சோம்பலான கரங்கள் பொல்லாங்கை விளைவிக்க சாத்தான் சூழ்ச்சி செய்வான். ஆகவே கர்த்தருக்கென்று வேலைத்திறனும், உழைப்பும் உடையவனாய் சுறுசுறுப்பாயிருப்பேன்" என
ஐசக் வாட்ஸ் கூறியுள்ளார்.
நாம் நம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளாத தருணங்களில்தான், நமக்கெதிராகப் பெரும்
சோதனைகளை உண்டாகக்கூடிய அபாயத்திற்குள்ளாக இருக்கிறோம் என்பதை நினைவிற்கு கொள்வோம். தாவீது தனக்கு வெட்கம் உண்டாகும்படி இப்பாடத்தைக் கற்றுக்கொண்டான். வசந்த காலத்தில் இராஜாக்கள் யுத்ததிற்குச் சென்றபோது தாவீது உப்பரிகையின்மேல் உலாவிக் கொண்டிருந்தான். அவன் கண்ட காட்சி. அவனை இச்சைக்குட்படுத்தியது. விபச்சாரம் செய்து அதை மறைக்கக் கொலையும் செய்தான் (2சாமு11).
சோதோம் என்று சொன்னவுடன், நம் நினைவிற்கு வருவது
வெட்கக்கேடான சுயபால் உறவாகும். அதற்கு இணையான சோதோமின் மற்ற பாவங்களை எசேக்கியல் நினைவூட்டுகிறான் (எசே16:49). அவற்றில் ஒன்று
மிகுதியான சோம்பலாகும். அந்தச் சோம்பல் அவர்களது ஒழுக்கக் கேட்டிற்கு ஊற்றாக விளங்கினது.
கர்த்தருக்கென்று நாம் சுறுசுறுப்பாக இருப்பதால் நமது உடல்
வலிமை வீணாகாதபடி காக்கப்படுகிறோம். மேலும் அவ்விதச் சுறுசுறுப்பு. நம்மை அநாகரீகச் செயல்களைச் செய்யாதபடி தடுத்து, குணநலமிக்கதும், நாகரீகமானதும், நெறி மேம்பாடுடையதுமான செய்கைகளைச் செய்ய ஊக்குவிக்கும். திருமணம் வேண்டாம் என்னும் நோக்குடையோர். தங்களது உடல் வலிமையை இடைவிடாது ஊழியத்தில் தன் சக்திகளை செலவிடவேண்டும்.
"அவர்கள் தங்களது சரீரங்களை வேலை மிகுதியினால் கொன்று, ஜெபத்தினால் உயிர்பெற வேண்டும்" என்று ஒருவர் கூறியுள்ளார். செயல்திறன் கொண்ட நாட்கள், மிகுந்த பாதுகாப்பானவை.
சரீரக் கட்டுப்பாட்டின் செயல்முறை:
மேற்கூறியவைகளோடு, சரீரக் கட்டுபாடு தொடர்புடையதாயிருக்கிறது. "மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்" எனப் பவுல் உரைக்கிறார் (1கொரி 9:27). அதனையே தற்கால மொழிபெயர்ப்பு இவ்வாறு விவரிக்கிறது.
"அதன் காரணமாக, எனக்கு நியமிக்கப்பட்ட எல்லைக்கோட்டை நோக்கி நேராக ஓடுகிறேன். நான் ஒரு குத்துச்சண்டை வீரனைப்போல இருக்கிறேன். அவன் தன் ஆற்றலை (சக்தியை) வீணாக்குவதில்லை. என்னுடைய சரீரத்தை
மற்றவர்களின் குத்துகளினாலே கடினமாக்கி, அதனை என்னுடைய ஆதிக்கத்திற்குள் முற்றிலுமாக அடக்குகிறேன். மற்றவர்களைப் போட்டிக்கு அழைத்துவிட்டு என்னை ஆயத்தப்படுத்தாமல் நிராகரிக்கப்பட்டவனாகப் போய்விடாதபடிக்கு என்னுடைய சரீரத்தை ஒடுக்குகிறேன்" என்பது புதுமொழிபெயர்ப்பில் உள்ள வார்த்தையாகும்.
பவுல் உண்மையாகவே பல அடிகளையும், குத்துகளையும் வாங்கித் தன் சரீரத்தை ஒடுக்கினார் என்பது பொருளல்ல. மாறாக, தன்னுடைய வாழ்க்கையின்
ஒழுக்கம், உறக்கம், உணவு, உடற்பயிற்சி ஆகிய பகுதிகளைச் சொந்தக் கட்டுபாட்டிற்குள் வைத்துக்கொண்டார் என்பதே பொருள். மாம்ச
இச்சைக்கு அடிப்பணியாதிருந்தார். ஆகவே நாமும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தடவைகள் நமது மனது ஏவும் பல செயல்களுக்கு
"மாட்டேன்" என்று பதில் சொல்லுகிறவர்களாக இருக்க விழைவோம். தற்கால உலக ஞானம்.
"அது நல்லாகத் தோன்றுமாகில் அதனைச் செய்யுங்கள்" என்று கூறுகிறது. ஆயின் நாமோ
பல செயல்களை எதிர்த்து நிராகரிக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.
நாம் சோதனைகளை எதிர்த்து நிற்கிற ஒவ்வொரு முறையும், தேவன் அதற்கேற்ற வெகுமதியை அளிக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.
"சோதனையைக் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்...." என யாக்கோபு உரைக்கிறார் (1:12). இதனைக்குறித்து
எல்லா வீலர் வில்காக்ஸ் என்பவர் இப்படி கூறுகிறார்.
"எந்தச் செய்கைகளை நிறைவேற்றினோம் என்பதனால் அல்ல, எந்தச் செய்கைளை
எதிர்த்து நின்றோம் என்பதன் அடிப்படையிலேயே, அழிவில்லாதவரின் பெயர்ப்பட்டியலில்
நமக்கு வரிசை எண் தரப்படும் என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை" என உரைக்கிறார்.
நமது உறக்கத்தைக் கட்டுப்படுத்துவது இதன் மற்றொரு பொருளாக இருக்கிறது. மணியோசை தரும் கடிகாரம் நல்லதொரு ஆவிக்குரிய கருவியாக இருக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, பருகும் பானங்கள் ஆகியவற்றைக்
கட்டுப்படுத்துவதும் இதன் பொருளாகும். ஏனெனில்
"உணவினாலே வயிற்றை நிறைத்துக்கொள்ளுதல்" சோதோமின் பிறிதொரு பாவம் என்பதனை நினைவிற்கொள்க. (எசே 16:49).
சரீர உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்பதும் இதன் மற்றொரு பொருளாகும். அதனை
"அற்ப பிரயோஜனம் உள்ளது" எனப் பவுல் உரைக்கிறார். (1தீமோ 4:8). இவை யாற்றையும் சுருங்கக் கூறுவோமாகில்,
"சோதனை கதவைத் தட்டுகையில், இயேசுநாதரை வாசலுக்கு அனுப்புவோம்" என்னும் முறையில் நாம் செயல்படவேண்டும்.
சிந்தனை வாழ்க்கையைக் காத்துக்கொள்ளுதல்:
சரீரக் காட்பாடு எவ்வளவு இன்றியமையாததோ, அதுபோலவே சிந்தனை வாழ்க்கையையும் கட்டுப்படுத்தப்படவேண்டிய ஒன்றாகும். நாம் சிந்திக்கிறவை யாவும் நன்மையானாலும், தீமையானாலும் கட்டுப்படுத்தக் கூடியவை என்பதே உண்மை. மனம் என்னும் ஊற்றிலிருந்து செயல் என்னும்
ஓடை பாய்ந்து வருகிறது (நீதி 4:25). பாவம் மனதில் தோன்றுகிறது. தொடரும்
சிந்தையால் செயல் உண்டாகிறது. அந்தச் செயல் தொடர்கிறபோது மரணத்தைப் பிறப்பிக்கும். இது வாழ்க்கையெனும் சக்கரத்திற்கு ஒத்திருக்கிறது. கருவுறுதல், பிறப்பு, வளர்ச்சி, மரணம் என்னும் வாழ்க்கைச் சக்கரத்தைப்போலப் பாவத்தின் செயல்பாடும் இருக்கிறது என யாக்கோபு தெளிவாக எழுதியுள்ளார்.
நமது சிந்தனை எவ்வாறு இருக்கிறதோ, அவ்வாறே நாம் மாறுகிறோம்.
"அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்" (நீதி 23:7). இதன் நிமித்தமாக நமக்குள்ளாக இருக்கும்
மிருக உணர்ச்சியைத் தூண்டிவிடக்கூடிய தொலைக்காட்சி, வீடியோ படங்கள், வானொலி, திரைப்படங்கள், பத்திரிக்கைகள் போன்றவற்றில் நாம்
மிகுந்த கட்டுப்பாடு உடையவராயிருக்கவேண்டும்.
புத்தாண்டின் முந்தினநாள், கிறிஸ்தவர் ஒருவருடைய இல்லத்தில் தொலைக்காட்சிப் பெட்டி பழுதடைந்துவிட்டது. அந்தக் கிறிஸ்தவத் தம்பதி அதனைப்
பழுது பார்க்கவேண்டுமா அல்லது அதனை வேண்டாமென விட்டுவிடவேண்டுமா எனக் கர்த்தரிடம் விண்ணப்பித்தார்கள். அடுத்த நாள் காலை 101வது சங்கீதத்தைப் படித்தனர். அவர்களது விண்ணப்பத்திற்குப் பதில் 2,3 ஆகிய வசனங்களில் காத்திருந்தது,
"என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். தீங்கான காரியத்தை என்
கண்முன் வைக்கமாட்டேன்" என்பதே அவர்கள் பெற்ற பதில்.
வாழ்க்கையில் பல அம்சங்கள் பொல்லாப்பைச் சார்ந்துவிடக்கூடியவைகளாக இருக்கின்றன. அவைகளை நாம் வெறுத்துத் தள்ளவேண்டுமென்று யூதா நம்மை எச்சரிக்கிறார் (யூதா 23).
நமது சிந்தனை வாழ்க்கையின் மறுபுறம் நன்மை பயக்கக்கூடியதாய் உள்ளது. நாம் பொல்லாங்கான சிந்தனைகளை நமதுள்ளத்திலிருந்து விரட்டுவதோடு, அதைத் தூய்மையும், பரிசுத்தமும் மிகக் நினைவுகளால் நிரப்பவேண்டிய அவசியமுண்டு (பிலி 4:8). இதனை
"நல்ல நினைவுகள் வேதத்தின் வல்லமை" என்று அழைக்கிறோம்.
நாம் ஒரே நேரத்தில் இரண்டு நினைவுகளைக் கொண்டிருக்கமுடியாது என்பதே. அனுபவம் நமக்குக் கற்பிக்கும் பாடமாகும். இந்த உண்மையை நம்முடைய நன்மைக்கென்று பயன்படுத்துவோம். நாம் ஒரே சமயத்தில்
பாவத்தையும்,
கிறிஸ்துவையும் குறித்துச் சிந்திக்கமுடியாது. நாம் எவ்வளவு அதிகமாகக்
கர்த்தரைக்குறித்துச் சிந்திக்கிறோமோ, அந்த அளவிற்கு நமது வாழ்க்கை
தூய்மையாக இருக்கும். இதை இன்னும் ஒருபடி மேலே சொல்வோமானால்
கர்த்தரைக்குறித்துச் சிந்திக்க சிந்திக்க, அவருடைய சாயலைப்
பெறுகிறவர்களாக இருப்போம். இந்த உண்மையைப் பவுல் 2கொரி 3:18ல்
வெளிப்படுத்துகிறார். "நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய
மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆவியாயிருக்கிற
கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து
மறுரூபப்படுகிறோம்"
இந்த வசனம் கிறிஸ்தவப் பரிசுத்தத்தைப் பொருத்தமட்டில் மிகவும் முக்கியமானதாகும். ஆகையால் நாம் இதனை நன்கு பகுத்தறிவது நல்லது.
திறந்த முகமாய் - நமது முகத்திற்கும் - கர்த்தருக்கும் இடையே திரையை உண்டாக்குவதற்குப் பாவம் காரணமாயிருக்கிறது. பாவத்தை அறிக்கை செய்து அதனை விட்டுவிடுவோமென்றால், திறந்த முகமுடையவராய் இருப்போம். அவ்வாறு நாம் இருப்போமாயின் நமக்கும். நமது இரட்சகருக்கும் இடையில் ஒரு தடையுமிராது. கர்த்தருடைய மகிமையை - கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்குணச் சிறப்பினையும், அதன் நிறைவையும், அவருடைய கிரியைகளின் அழகையும், அவருடைய வழியையும் நாம் வேதத்தில் காண்கிறவர்களாக இருக்கிறோம்.
கண்ணாடியிலே காண்கிறதுபோலக்கண்டு -
தேவ வார்த்தை கண்ணாடியாக இருக்கிறது.
ஆவியாயிருக்கிற கர்த்தரால் - நமது குணநலன்களில் நாம் மறுரூபமடைகின்ற செயல்பாடு தூய
ஆவியானவரால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. திருமறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற வண்ணமாக இரட்சகரை விசுவாசத்தோடு நோக்கிப் பார்க்கிறவர்களிடத்தில் கிறிஸ்துவின் சாயலை, ஆவியானவர் உருவாக்குகிறார்.
அந்தச் சாயலாகத்தானே மறுரூபப்படுகிறோம் - அவரைப் பார்த்ததால் மாறியிருக்கிறோம். அவரைப் புகழ்ந்து தொழுதுக்கொள்ளும் எண்ணத்துடன் உற்று நோக்குகிறவர்களாயிருப்போமெனில் அவரைப் போலாவோம். இதனை ஒருவர் இவ்வாறு விளக்கியிருக்கிறார்.
"அவரைக் காணும் பார்வை நம்மை இரட்சிக்கிறது. அவரை உற்றுநோக்குவது
பரிசுத்தப்படுத்துகிறது"
மகிமையின்மேல் மகிமையடைந்து - மகிமையின்
ஒரு படியிலிருந்து அடுத்தபடிக்கு உயர்வதை இது குறிக்கிறது. இது சடுதியாக ஏற்படுகின்ற செயல் அல்ல. அவரோடு எவ்வளவாக
நெருங்கி இருக்கிறோமோ அதற்கு ஏற்றபடி நாம் மகிமையின்மேல் மகிமை அடைகிறவர்களாயிருப்போம்.
கிறிஸ்துவை நோக்கி நீ பார்த்தால்
அவர் சாயலை நீ அடைவாய்:
அதனால் உன் நடத்தை மாறும்
அதனை உன் நண்பர் காண்பர்.
வீழ்வதைக் காட்டிலும்
ஓடுவதைத் தெரிந்துக்கொள்வோம்:
சில சந்தர்ப்பங்களில், நம்மை எதிர்த்துவரும் சோதனைகளுக்கும், நமக்கும் சில மைல் கற்கள்
இடைவெளி தூரம் இருக்கும் வண்ணம் ஓடுவது அவசியமாகும். நாம் சரியான பாதையைத் தெரிந்துக்கொண்டால் அவ்விதமாக ஓடுகிறவர்களாக இருப்போம்.
யோசேப்பு அதனைச் செய்து காட்டினான் (ஆதி 39:12). அவன் தனது
மேலாடையை இழந்துவிட்டது உண்மைதான். ஆனால் கிரீடத்தை அல்லவா பெற்றான்.
"எவனொருவன் போராடி ஓடுகிறானோ, அவன் இன்னும் ஒருநாள் போர் செய்ய வாழ்கிறான்" என்பதை அவன் நிரூபித்துக் காட்டினான். வேசித்தனத்திற்கும் (1கொரி 6:18),
விக்கிரக ஆராதனைக்கும் (1கொரி 10:14), இச்சைகளுக்கும் (1தீமோ 6:11),
பாலியத்துக்குரிய இச்சைகளுக்கும் (2தீமோ 2:22)
நாம் விலகியோட வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வப்போது வலுவான மன உறுதிக்கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இயேசுநாதர் கற்பித்திருக்கிறார்.
"உன் கையாவது, உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தரித்து எறிந்துப்போடு, நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், சப்பாணியாய் அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்க நலமாயிருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துப்போடு, இரண்டு கண்ணுடையவனாய் எரி நரகத்தில் தள்ளப் படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்" என அவர் உரைத்துள்ளார் (மத் 18:8,9). இங்கு சொல்லியிருக்கிறபடி நாம் நமது அவயவங்களைச் தரித்துப்போட வேண்டும் என்பது அதன் பொருளாகாது. நமது சரீரங்கள் பரிசுத்த
ஆவிவாசம் செய்யும் ஆலயங்களாயிருக்கின்றனவே. நாம் பாவத்தோடு விளையாடக்கூடாது. மாறாக, அவற்றோடு
இரக்கமற்ற முறையில் போராடி வெற்றிக்கொள்ளவேண்டும் என்பதே ஆண்டவர் இங்கு வலியுறுத்திக் கூறுவதன் பொருளாகும். நாம் பாவத்தூண்டுதலுக்கு விலகியோடும் போது, நமது முகவரியை கொடுத்துவிடக்கூடாது என்னும் ஆலோசனையும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இறந்துப்போன மனிதனைப்போல சோதனையை எதிர்த்து நிற்கவேண்டும்:
நாம் வெற்றி பெறுவதற்கான சகல வழிமுறைகளையும் நாம் இன்னும் சொல்லி முடிக்கவில்லை.
நம்மைப் பாவத்திற்கு மரித்துப்போனவர்களாக நாம் எண்ணிக்கொள்ளவேண்டுமென்று பவுல் நமக்கு நினைவுப்படுத்துகிறார் (ரோமர் 6:11). அந்த நிழற்காட்சி தெளிவாகவும், மறக்க முடியாததாகவும் இருக்கிறது. பளபளக்கும் துணியால் அலங்கரீக்கப்பட்ட பெட்டியிலே வைக்கப்பட்டிருக்கும் சவத்தை நினைத்துக்கொள்ளுங்கள்.
இறந்துப்போன அந்த மனிதனோடு முன்பு வாழ்ந்த காமக்கிழத்தி (விபச்சார பெண்) அந்தப் பெட்டிக்கு அருகில் வந்து வாழ்த்தினாள். ஒரு பதிலும் இல்லை மாலையில் வெளியில் செல்வதற்கு
அழைத்தாள். அந்தச் சவம் அசையவுமில்லை, பேசவுமில்லை. அவளோ அவனைப் பாவத்திற்குட்படுத்தும்படி தன் பாவ கவர்ச்சி செயல்கள்மூலம் பல உபாயங்களைக் கையாண்டாள். ஆனால் அனைத்தும் வீணாய்போயின. காரணம்,
அவன் இறந்துவிட்டான். இந்தக் கதை அகஸ்டின் என்பவனின் கடந்தகால அனுபவத்தை நினைவிற்குக் கொண்டுவருகிறது. தான்
மனமாற்றம் அடைவதற்கு முன்னர் தனக்குப் பிரியமாக இருந்த ஒரு பெண்ணை ஒருநாள் சந்திக்க நேரிட்டது. அவனைக் கண்டவுடன் அவள் கூவி அழைத்தாள். ஆனால் அவனோ திரும்பித் தன் வழியில் வேகமாகச் சென்றான். அவள் விடவில்லை. பின் தொடர்ந்து வந்து
"அகஸ்டின், நான் தான், நான்தான்" எனக் கூறினாள். அவன் தன் முகத்தைச் சற்றுத்திருப்பி,
"எனக்குத் தெரியும். இனி நான் பழைய அகஸ்டின் இல்லை" என்று சொல்லித் தன் நடையை வேகப்படுத்தினான்.
பொல்லாங்கை நடப்பிக்கும்படி நாம் தூண்டப்படும்போது, ஒரு பிணம் எவ்வாறு பதில் ஒன்றும் செய்யாதோ, அவ்விதமாகவே நாமும் நம்மை பாவத்துக்கும், உலகத்துக்கும் மரித்துப் போனவர்கள் என்று எண்ணிக் கொள்ளவேண்டும். ஆனால் அதோடு நாம் நிறுத்திவிடக்கூடாது.
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக நாம் தேவனுக்கென்று
பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ள வேண்டும். அதாவது, நாம் உடனடியாகக் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, எப்பொழுதும்
அவரது உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியவைகளையே செய்யவேண்டும் என்பதே அதன் பொருளாகும்.
தொடுவதனால் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்போம்:
தொடுதல், நேசமாகத் தடவிக்கொடுத்தல், நெருக்கமான வார்த்தைகள், அர்த்தமுள்ள அங்க அசைவுகள், விளையாட்டுத்தனமான நடத்தைகள் ஆகிய ஆசாரமற்ற பழக்கங்களை நாம் தவிர்க்க வேண்டும் என்பது நடைமுறைக்குத் தேவையான இன்னுமொரு ஆலோசனையாகும்.
மூடி என்னும் மாதப் பத்திரிக்கையில்,
ஜெரி ஜென்கின்ஸ் என்பார் இந்த ஆலோசனைக்குத் தேவையான நடைமுறை விதிகளைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். தன்னையும், தன் மனைவியையும், தனது குடும்பத்தையும், தனது எஜமானனையும், தனது சபையையும், கிறிஸ்துவின் மேன்மையையும் நிலை நிறுத்திப் பாதுகாத்துக் கொள்ளத்தக்க வேலியாக அந்த ஆலோசனைகளைத் தன் வாழ்க்கையில் அவர் கடைப்பிடிக்கவும் செய்கிறார்.
1. தொடர்பில்லாத பெண்ணைச் சந்திக்கவோ, அவருடன் உணவருந்தவோ, அவளுடன்
பயணம் செய்யவோ நிர்ப்பந்தம் நேரிட்டால், அத்தகைய சந்தர்ப்பங்களில் எங்களோடு இருக்கும் படியாக
இன்னும் ஒருவகைகூட சேர்த்துக்கொள்வேன். கடைசி நேரத்தில் அவ்வாறு ஒருவரைச் சேர்த்துகொள்ள இயலாவிட்டால் அதைக்குறித்து முதலாவதாக
என் மனைவிக்குத் தெரிவிப்பேன்.
2. தொடுவதைக்குறித்து மிக ஜாக்கிரதையுள்ளவனாக இருப்பேன். மிக நெருங்கிய நண்பர்களையம், உறவினர்களையும் மட்டுமே கைகளை அழுத்திப்பிடித்துக் கைகுலுக்குவேன். அதுவும் மற்றவர்களுக்கு முன்னால் மட்டுமே அவ்வாறு செய்வேன்.
3. ஒருவருக்குப் புகழுரை வழங்கும்போது அவருடைய
ஆடையைப்பற்றியோ, முடி அலங்காரத்தைப்பற்றியோதான் சொல்வேன்.
அப்பெண்ணைக் குறித்து எதுவும் சொல்ல மாட்டேன். அந்தப் பெண்ணின் அலங்காரத்தைக் குறித்துச் சொல்வது, அந்தப் பெண்ணையே அழகுள்ளவர் என்று சொல்வதைக் காட்டிலும்
நாகரீகமானதாகும் என்று நான் கருதுகிறேன்.
4. குலுக்கி மினுக்கிப் பேசுவதையும்,
வசியப்படுத்தும் உரையாடலையும் வேடிக்கைக்கும்கூடச் செய்யமாட்டேன்.
5. நான் விவாக உறுதிமொழியை நினைவில் கொண்டுள்ளேன் என்பதைப் பேச்சிலும், எழுத்திலும்
என் மனைவிக்கு அடிக்கடி நினைவுப்படுத்துவேன்.
"நாம் உயிரோடு இருக்கும் வரை உன்னையே எனக்காகக் கொண்டிருப்பேன்..." என் மனைவி டயானா பொறாமை கொண்ட பெண்ணல்ல. இந்த உறுதிமொழியை என்னிடத்தில் எந்த ஒரு சமயத்திலும் கேட்டதில்லை. ஆயினும் நான் எனக்கு நியமித்துக்கொண்ட விதிகளை, நான் கடைப்பிடிப்பதைக் கண்டு, என் மனைவி என்னை அவ்வப்போது பாராட்டுவதுண்டு.
6. வேலையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, குழந்தைகள் படுக்கைக்குச் செல்லும்வரை, நான் வீட்டில்
எழுதுவதோ, அலுவலக வேலையைச் செய்வதோ இல்லை. அதன் காரணமாகக் குடும்பத்தோடு அதிகமான நேரத்தைச் செலவிடமுடியும்.
தாம்பத்ய உறவில் மகிழ்ச்சி கொண்டவர்களாகவும் இருக்க அது துணை செய்கிறது.
தொடுவதனால் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்போம்:
வசியப்படுத்தும் வார்த்தைகளையும் செயல்களையும் தவிர்ப்பதோடு, பாவம் செய்வதை எதிர்க்கும் இயல்பைப் பலவீனப்படுத்தும் எதனையும் நாம் தவிர்க்கவேண்டும்.
மது அருந்துதல், மனதைச் சீர்குலைக்கும் போதை மருந்துகள் போன்றவற்றை முற்றிலுமாக விலக்கவேண்டும்.
மனிதர்கள் மது அருந்தும்போதும், போதைப் பொருட்களை உட்கொள்ளும்போதும் தாங்கள் சாதரணமாகச் செய்வதற்கு வெட்கப்படும் எந்த செயல்களைச் செய்யத்துணிவார்கள்.
எரின் ஒட்சர் என்பவர் இதனைக்குறித்து கருத்துரை வழங்குகிறார்.
"குடிவெறியும், வெட்கமற்ற செயலும் கைகோர்த்துச் செல்பவை என்பதனை
நோவாவின் அனுபவம் நமக்கு விளக்குகிறது. அதுவே வேதத்தில் குடிவெறியைப் பற்றி முதலாவதாகக்
குறிப்பிட்டுள்ள இடமாகும். அந்த இடத்திலே அதனுடைய விளைவையும் காண்கிறோம். நோவா தன் கூடாரத்தில் நிர்வாணமாகப் படுத்துக்கிடந்தான். ஒருவரது குடிப்பழக்கம் அவர் தனது குணநலனைக் காத்துக்கொள்ளும் திறனை வலுவிலக்கச் செய்துவிடுகிறது. ஒருவர் சிறிதளவு குடித்தவுடனேயே கட்டுப்பாட்டை இழந்து, நியாயமான மனிதர்கள் செய்வதற்குத் தடுமாறக்கூடிய செயல்களைத் தாராளமாகச் செய்கிறவராக மாறிவிடுவார். ஜன்ம சுபாவமுள்ள மனிதன் ஒருவன் தனது கீழான நடத்தையைக் குறித்துப் பேசினதைக் கேட்க நேரிட்டது.
"நாங்கள் சிறிதளவு குடித்தோம். பின்னர்...... அவ்விதமாக நடந்துக்கொண்டோம்" என்று நாக்கூசாது கூறினான்.
மது மனிதனை மிருகமாக மாற்றிவிடுகிறது. அதற்காக அவன் வெட்கப்படுகிறதில்லை. குடிப்பவர்கள் தங்களது பிரச்சனைகளை மறக்கவே குடிக்கிறோம் என்கின்றனர். ஆனால்
அந்தக் குடியே அவர்களது பிரச்சனைகளை வளர்த்துவிடுகிறது".
உதவிக்கு அழையுங்கள்:
கொடுமையான சோதனைக் காலத்திலும், உதவியற்ற நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணமும், வீழ்ந்துப்போய்விடுவோமென்ற எண்ணமும் நம்மைச் சூழ்ந்துக்கொள்ளும் நேரத்திலும் நாம் என்ன செய்யவேண்டும்?
"கர்த்தருடைய நாமத்தை அழையுங்கள்" என்பதே அதற்குரிய விடையாகும்.
"கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடிச்
சுகமாயிருப்பான்" (நீதி 18:10). பேதுரு அலைகளுக்குள்ளே தான் அழிழ்ந்துபோகிறவனாக உணர்ந்தபோது,
"ஆண்டவரே, என்னை இரட்சியும்" எனக் கூறினான் (மத் 14:30). கர்த்தர் அவனை உடனடியாகக் காப்பாற்றினார். எப்பொழுதும் அவர் அவ்வாறு செய்பவராக இருக்கிறார்.
உங்களிலும் உங்கள் மூலமாகவும் தேவன் கிரியை செய்கிறார் என்பதை விசுவாசியுங்கள்:
சாமுவேல் ருதர்போர்ட் என்பவர் "தேவனுடைய விருப்பத்திற்கேற்ற சூழ்நிலைகளுக்கு உங்களைத் திறந்துகொடுங்கள்" என்று அறிவுரை கூறியுள்ளார். இதன்பொருள் யாது?
ஜான் எல்.பேர்ட் என்பார் இதனை விளக்குகிறார்.
இதன் பொருள் யாதெனில், நீங்களும் நானும் தேவனிடத்தில் காலையிலும், பகலிலும் நம்மை ஒப்புவிப்போமானால், அவருடைய சித்தம் அனுமதிக்காத ஒன்றும் அந்த நாளில் நம்மை நெருங்கி வராது. ஒவ்வொன்றிற்கும் ஓரிடமுண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கமுண்டு. நமது சிறுசிறு திட்டங்களுக்கு ஊடாக சில தடைகள் ஏற்படும். அவை நமது திட்டங்களுக்கு இடையூறாக அமையும். அவை நமது திட்டங்களை மாற்றிவிடும். ஆனாலும் நம்முடைய நாளை நாம் தேவனிடம் ஒப்புவித்திருப்பதால் நம்மை நெருங்கி வருகிற அனைத்து இடையூற்றையும், அவருடைய சித்தத்தினால் அனுமதிக்கப்பட்டவை என்றே நம்புவோம். நாம் அதற்கு எதிர்த்து நிற்கவேண்டாம். அந்த எதிர்ப்பு நமது ஆத்துமாவைக் கசப்படையச் செய்துவிடும். மாறாக, நாம் அந்தச் சூழ்நிலைகளுக்கு நம்மை ஒப்புவிக்கவேண்டும். அவைகளை நாம் வருகிற வண்ணமாகவே ஏற்றுக்கொள்ளவேண்டும்'.
ஹரோல்ட் வில்டிஸ் என்பவர் அதற்கொப்பான புத்திமதியை வேதத்தின் அடிப்படையில் தருகிறார்.
"கிறிஸ்துவினால் நிறைவேற்றப்பட்ட கிரியையில் பாவபாரம் முழுவதையும் சுமத்திவிட்டு, நாம் இளைப்பாறுகிற வண்ணமாகவே நமது வாழ்க்கையின் பாரத்தையும், ஊழியத்தின் பாரத்தையும் ஒதுக்கிவிட்டு, தூய ஆவியானவரின் உள்ளார்ந்த கிரியைக்கு நாம் வழிநடத்தப்படுவதற்கென்று நம்மை ஒப்புவிப்போம். நாம் அவரை வாழ்த்தி,
நமது நாளையும் அவர் நடத்தும்படி சமர்ப்பணம் செய்வோம். நாள் முழுவதும் அவரைச் சார்ந்து மனமகிழ்ச்சியுடன் இருக்க நாம் பழகிக்கொள்வோம். மேலும், அவருக்குக் கீழ்ப்படியவும், அவர் நம்மைப் பிரகாசிப்பிக்க, கடிந்துக்கொள்ள, கற்பிக்க, பயன்படுத்த, அவருக்கென்று நாம் செயலாற்ற, அவர் சித்தததிற்கு ஒப்புவிக்க நாம் பழகிக்கொள்வோம். நமது காட்சிக்கும், உணர்ச்சிக்கும் முற்றிலும் அப்பாற்பட்டு அவருடைய கிரியை பேருண்மையாக இருக்கிறது என்பதை நினைவிற்கொள்வோம்".
ஆவியினால் நிரப்பப்படும்போது என்பது உணர்ச்சி பூர்வமானதல்ல. அது
பரிசுத்தமாகுதலேயாகும். வேலை மிகுதியினாலும், உலகு சார்ந்த கடின உழைப்பினாலும் நாட்கள் நிறைந்து காணப்படலாம். எப்பொழுதாவது மலையுச்சியின் அனுபவம் உண்டாகும். அந்த அனுபவம் நாம் முன்னேறிச் செல்வதற்கு நம்மை ஊக்குவிக்கப்போதுமானதாயிருக்கும். ஆனாலும் வாழ்க்கையின் ஓட்டங்கள் ஒன்றோடென்று பின்னிக்கொள்ளும், நமது ஊழியம் வியத்தகுமுறையில் பளிச்சிடும். தேவன் நம்மிலும், நமது மூலமாகவும் கிரியை செய்கிறார் என்ற உணர்வு எப்பொழுதும் இருக்கும். ஆயினும் அதில் சிறிதளவும் பெருமையுண்டாகாது. நமது மூலமாக மற்றவர்களது வாழ்க்கை தொடப்படும்போது, அது தேவனுக்குச் சிறப்பைக் கொண்டுவரும்.
மேலும், ஆங்கே வல்லமை காணப்படும் (லூக் 24:49, அப் 1:8).
சாட்சி பகர்வதில் தைரியம் விளங்கும் (அப் 4:13,29,31).
மகிழ்ச்சி நிறைந்திருக்கும் (அப் 13:52). தொழுகையும் (லூக் 1:67-75, எபே 5:19,20).
கீழ்ப்படிதலும் (எபே 5:21) இருக்கும்.
பரிசுத்தமாகுதலின் மற்றொரு அம்சத்தைக்காண, நமது சிந்தனைச் சக்கரத்தின் ஓட்டத்தைத் உந்திவிடுவோம். கிறிஸ்தவன், தன்னை இரண்டு இராஜ்ஜியங்களுக்கு உட்ப்பட்டவனாகக் காண்கிறான். அவை கர்த்தருடைய இராஜ்ஜியமும், உலக இராஜ்ஜியமுமாகும். அவற்றின் வேறுபாட்டை நிதானித்து அறிந்தவராக, நாம் எதைச் சார்ந்திருக்கிறோம் என்று உணர்ந்து கொள்வோமாக.
(இது ஒரு மொழிபெயர்க்கப்பட்ட செய்தி) |