வாசகர் கடிதம்

வாசகர் கடிதம் 1:

அடுத்த ஜாமக்காரன் யார்?
ஜாமக்காரனுக்கு ஒரு திறந்த கடிதமும்-நன்றியும்:

CSI சட்டம் 1947க்கு முன் - 1947க்கு பின் என்ன என்பதை அறியவேண்டும். அப்பொழுதுதான் CSI TA என்ற அமைப்பின் திருட்டுதனத்தை தெளிவாக அறியலாம். நாங்கள் SPG சபையை சார்ந்தவர்கள். CSI TA என்ற பெயரில் CSIக்கு சொந்தமான கொடைகானலில் உள்ள எஸ்டேட்டை அடிமாட்டு விலைக்கு விற்று கொள்ளையடித்துவிட்டார்களே! சபை சொத்துகளுக்கு பாதுகாப்பு தரவேண்டிய அமைப்பு இப்போது கொள்ளையடிக்கிறது. ஜாமக்காரனில் CSI சபை சொத்துகளுக்கு ஆபத்து என்று எழுதியபின்தான் பலர் சுறுசுறுப்பானார்கள். உங்கள் பாணியில் கூறவேண்டுமானால் உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டார்கள். உங்கள் ஜாமக்காரன் பத்திரிக்கை என்ற அற்புதமான ஆயுதம் CSI சபைக்கு ஏற்பட இருந்த நஷ்டங்களை எத்தனையாய் காப்பாற்றியுள்ளது.

இந்த CSI TA என்ற அமைப்பை வைத்துதான் சுனாமிக்கு அனுப்பிய கோடிகளை திருடினார்கள். திருடிய மாடரேட்டர், பிஷப், சினாட் செயலர் போன்ற கொள்ளையர்கள் பிடிப்பட்டாலும் ஜெயிலில் அடைத்தாலும் இப்போது அவர்கள் எல்லாரும் வெளியே உலவிக்கொண்டுதானே இருக்கிறார்கள்!

ERD அமெரிக்க அமைப்பு CSI சினாட்மேல் போட்ட வழக்கு கிணற்றில்போட்ட கல்லாக மேல் நடவடிக்கை ஒன்றும் இல்லாமல் அப்படியேதானே இருக்கிறது.

  கிறிஸ்தவ மத சொத்துக்களுக்கு ஆபத்து என்று ஜாமக்காரனில் எழுதினீர்கள். CSI மக்கள் ஆவேசமடைந்தார்கள், கொதிப்படைந்தார்கள். எங்களைப் போன்றோர் செய்ய முடியாததை உங்கள் ஜாமக்காரன் எல்லா கிறிஸ்தவ மக்களையும் துக்கத்திலிருந்து எழுந்து உணர்ந்து உட்கார வைத்தது. ஆனால் டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய உங்களுக்கு ஏனோ கோபம் வரவில்லை. என் வேலை முடிந்தது என்று முடித்துவிட்டீர்கள். 56 வியாதிகளுக்கு ஒரே லேகியம் என்பதைப்போல ஜெபம் பண்ணுங்கள் என்று கூறிகொண்டிருக்கிறீர்கள். நாங்கள் அதையும் செய்து பார்த்தாயிற்று, பலன் இல்லை.

  உங்கள் ஜாமக்காரன் எச்சரிப்புகள் தென் இந்திய கிறிஸ்தவர்களை ஊலுக்கிவிட்டது. CSI சபைகளை குறித்து பாரம் அடைந்தவர்கள் எங்கள் முற்பிதாக்கள் மிஷனரிமார்கள் எங்களுக்கென்று வாங்கிப்போட்ட சொத்தை இந்த கொள்ளையர்கள் டையோசிஸ், சினாட், பிஷப், மாடரேட்டர் என்ற பெயர்களில் விற்பதா? என்று பொங்கி எழுந்தார்கள். ஓய்வுபெற்ற நீதிபதிகளாக, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளாக IAS, IPS அதிகாரிகள் யாவரும் இணைந்து சபையின் மீதியுள்ள சொத்துக்களை பாதுகாக்க ஒரு CSI சொத்து பாதுகாப்பு என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி இழந்த சொத்துக்களை மீட்க போராடி கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்துகொண்டிருக்கிறது.

  ஒவ்வொரு டையோசிஸ்ஸிலும் CSI சொத்து பாதுகாப்பு அமைப்புகள் ஜாமக்காரன் எச்சரிப்பால் ஆங்காங்கு தொடங்கப்பட்டு செயல்பட தொடங்கிவிட்டது.

  டாக்டர் ஐயா உங்களைப்போல் அறிவித்துவிட்டு, எச்சரித்துவிட்டு ஜெபித்துகொண்டிருந்தால் மட்டும் போதாது. நீங்களும் களத்தில் இறங்கவேண்டும். ஆனால் நீங்கள் களத்தில் இறங்கமாட்டீர்கள். ஆனால் நாங்களோ இறங்கிவிட்டோம். அதனால்தான் கோயமுத்தூர் CSI டையோசிஸ் பிஷப் அவர்களை போலீஸ் பிடித்தது. பதவி இழந்தார், சென்னை பிஷப் அவர்களும் கோர்ட்டுக்கும், டையோசிஸ்க்குமாக நடந்துகொண்டிருக்கிறார். கோர்ட்டில் நீதிபதிகள் கண்டபடி அவரை ஏசியபின்னும் வெட்கம் இல்லாமல் மன்னிப்பும் கேட்டார். அபராதம் செலுத்துகிறேன் என்றார். அப்படியே பெங்களுர் பிஷப்பும், மாடரேட்டரும் நீதிமன்றம் ஏறி இறங்கிக்கொண்டிருப்பதால் நிம்மதி இழந்தனர். போலீஸ் துரத்தும்போது CSI ஆஸ்பத்திரியில் ICUவில் போய் படுத்துக்கொள்கிறார். இப்படி ஏராளமான பிஷப்மார்கள் ஜாமக்காரனின் அறிவிப்பினாலும், எங்களை போன்றோரின் CSI - சொத்து பாதுகாப்பு சங்கத்தினாலும் இவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு அடங்கியிருக்கிறார்கள். ஆனால் போராடுகிற எங்களுக்கு முழுவெற்றியை இன்னும் காணமுடியவில்லை.

  அமெரிக்க ERD உதவி அமைப்பு அனுப்பிய கோடிகளை திருடிய மாடரேட்டர், பிஷப்மார், செயலர் இன்னும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவுமில்லை! இதில் பலர் ஓய்வுப்பெற்றுவிட்டனர், சிலர் ஓய்வுப்பெறபோகிறார்கள். செயலர், பொருளாளர் இவர்களெல்லாம் மாறிக்கொண்டிருக்கிற நாடக காட்சி சீன்போல மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பலன் என்ன? முடிவு என்ன? எப்படியோ எங்களுக்கு பின்னும், நாங்கள் ஆரம்பித்த சபை சொத்து பாதுகாப்பு அமைப்பு இயங்கும், இயங்கவேண்டும்! தலைமுறைகள் வீறுக்கொண்டு எழும்பும் - அடுத்த ஜாமக்காரன் யார்? எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM