உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது

(Rev.தாமஸ் தங்கராஜ் திருநெல்வேலி பேராயர் அவர்களின்
அபிஷேக தின வழிபாட்டில் ஆற்றிய அருளுரை)

இன்று மாலை நமது பேராயர் அவர்களோடு சேர்ந்து நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். நமது பேராயரோடு இணைந்து நின்று அவருக்காக, அவரது குடும்பத்திற்காக, அவரது திருப்பணிக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்ய வந்திருக்கிறோம். இன்று அவர் நம்மிடையே சபையாரில் ஒருவராக ஜெபிக்க முழங்காற்படியிட்டிருகிறார். நீங்கள் எல்லோரும் நினைப்பீர்கள் இப்போது அருளுரையாற்றுபவர் பேராயருக்கு என்று தனிப்பட்ட முறையில் ஒரு அருளுரை வழங்குவார். நாம் எல்லோரும் அதனை ஒட்டுக்கேட்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் இல்லை! இந்த அருளுரை உங்கள் அனைவருக்கும்தான். இன்று மாலை நல்மேய்ப்பர் ஆலயத்தில் கூடிவந்திருக்கிற உங்கள் எல்லாருக்கும் இந்த அருளுரை ஆற்றப்படுகிறது. நமது பேராயரும் நம்மில் ஒருவராக அமர்ந்து இந்த அருளுரையைக் கேட்க இருக்கிறார்.

1. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது:
இன்று நமக்கு வழங்கப்படுகிற திருமறை வசனம் மத்தேயு 20:26 ஆகும்.

  உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது திருச்சபை ஒரு சங்கம். அதில் அங்கத்தினர் ஆக சங்கம் கட்டுகிறோம். நமக்கென்று கமிட்டிகள், கவுன்சில்கள், தேர்தல், கூட்டங்கள் இவையெல்லாம் உள்ளன. உலகிலே பல சங்கங்கள் இதுபோன்று இருக்கின்றன. தொழிலாளர் சங்கங்கள், ஜாதி அடிப்படை சார்ந்த சங்கங்கள், ஊரின் அடிப்படையில் சங்கங்கள், விருப்பு வெறுப்புகளைச் சார்ந்து சங்கங்கள், ஆனால் திருச்சபை என்ற சங்கம் இவைகளினின்று வேறுப்பட்ட சங்கம் ஆகும். மற்ற சங்கங்களில் நடப்பதுபோல் இங்கு நடக்கக்கூடாது. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது.

  எப்படி இருக்கக்கூடாது? இதற்கு முந்தின் வசனத்தைப் படித்தால் எப்படி இருக்கக்கூடாது என்று சொல்லலாம்.

  அதிகாரிகள் இறுமாப்பாய் ஆளுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது.

  பெரியவர்கள் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது! இந்த வசனத்தைப் பார்த்தால், இது ஏதோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குச் சொன்னது போன்று தோன்றுகிறது. பேராயருக்கும் பிற திருச்சபை தலைவருக்கும் கூறியதுபோல் தொனிக்கிறது. ஆனால் அங்குள்ள சூழ்நிலையை Concept கூர்ந்து கவனியுங்கள். இது சீஷர்கள் அனைவருக்கும், சூழ்ந்து நின்ற மக்களுக்கும் உரைக்கப்பட்ட வாசகம் ஆகும்.

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது. எல்லாருக்கும் கூறிய கூற்று என்றால் இந்த கூற்று வெறும் Administration ஆளுமைப்பற்றி கூறிய போதனை அன்று. எவ்வகையில் நாம் நமது உறவுகளில் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதுப்பற்றியும், கடவுளுக்கும் நமக்குமுள்ள உறவுப்பற்றியும், இந்த வசனங்கள் ஏதோ சொல்ல வருகின்றன. ஏதோ ஒரு Posture-பற்றி, பாங்கு பற்றி நமக்கு சொல்ல விழைகின்றன.

2. எங்களுக்கு என்ன கிடைக்கும்?
கொஞ்சம் பின் நோக்கி 19:27யைப் பார்த்தால் அங்கு பேதுரு ஏசுவிடம் கேட்கின்றார். எங்களுக்கு என்ன கிடைக்கும்? நாங்கள் பின்பற்றி வந்தோமே எங்களுக்கு என்ன கிடைக்கும்? ஒகோ! இங்கு கூடியிருக்கிற நமது அடிப்படைப்பிரச்சனையும் இதுதானோ! உங்களுக்குள்ளே இப்படி இருக்கலாகாது! அதன் அர்த்தம் இந்த கேள்வியை நாம் யாவரும் கேட்கப்படக்கூடாது! எங்களுக்கு என்ன கிடைக்கும்? மறுபடியும் கூறுகிறேன், உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது! இன்று நமது நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு பிரச்சனைகளுகெல்லாம் அடித்தளமாக இருப்பது இந்த வினாதான். எங்களுக்கு என்ன கிடைக்கும்? லஞ்ச ஊழல்களுக்குப்பின்னால் இந்த கேள்விதான் தலைவிரித்தாடுகிறது. தலைவர்கள் முதல் மக்கள்வரை அனைவருமே எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்று தான் நினைத்து செயல்படுகிறோம். வாழ்கிறோம். இந்த வினாவிற்கு இயேசு கொடுக்கின்ற பதிலைப் பார்த்தால், இது ஒரு நல்ல வினா போல் தோன்றலாம். 19:28-29ல் எல்லாம் கிடைக்கும் என்பதுபோல் இயேசு பதில் சொல்கிறார். சிங்காசனத்தில் வீற்றிருப்பீர்கள்! "நூறத்தனையாக அடைந்து" என்றெல்லாம் இயேசு பெருமான் கூறுகிறார். ஆனால், உடனே நம் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. வசனம் 30ல் முந்தினோர் அநேகர் பிந்தினோர் எனக் குறிப்பிட்டு நமக்கு ஒன்றும் கிடைக்காது என்பதுபோல் பதில் சொல்கிறார். இதற்கு என்ன பொருள்? எங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற வினா தவறான வினா என்று அர்த்தமாகிறது.

அதை இன்னும் தெளிவாக்க திராட்சைத் தோட்டத்தில் வெவ்வேறான அளவில் பணி புரிந்த அனைவரும் ஒரே சம்பளம் வாங்குவதை உவமை மூலம் விளக்குகிறார் (மத் 20:1-6). என்ன கிடைக்கும் என்பதல்ல. கர்த்தருடைய தோட்டத்தில் தகுதியில்லாத நமக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைத்ததுதான் பெரும்பேறு. இதுபோதாதென்று தனது பாடு மரணத்தைப்பற்றியும் விளக்க ஆரம்பிக்கிறார். இயேசுபெருமான் (மத் 20:17-19). இவ்வளவு சொன்ன பிறகும் இரண்டு சீஷர்கள்மட்டும் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்று ஏங்குகின்றனர் (மத் 20:19-23). இயேசுகிறிஸ்து இவ்வளவு தெளிவாக கூறியும் இன்னும் சீஷர்களுக்கு இயேசு சொல்வது அவர்கள் தலைக்குள் சிந்தனைக்குள் நுழையவில்லை போலும்! அந்த இரண்டு பேரின்மேல் மற்ற பத்துபேர் எரிச்சலாகிறார்கள். (இதைத்தானே இப்போதும் நம் திருமண்டலத்தில் காண்கிறோம்).

3. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்:
எனவேதான் இயேசு கூறுகிறார்: எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்று உலகில் உள்ள ஆவிக்குரிய அல்லாத மக்கள் கேட்கலாம். ஆனால் உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது! தலைவன் அடிமை ஆகவேண்டும். பெரியவன் பணிவிடைக்காரன் ஆகவேண்டும், இது இயலுமா? சரி. நாங்கள் என்ன கேள்விதான் கேட்கவேண்டும்! ஆண்டவரே? தொடர்ந்து அந்த அதிகாரத்தைப் பாருங்கள். 20:32ல் ஒருகேள்வி, இயேசுகிறிஸ்து கேட்டதுபோல் நாம் கேட்கவேண்டும். நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? இதுதான் இயேசுவின் அடியவர்கள் கேட்கவேண்டிய கேள்வி. பார்வையற்றோரை பார்த்து, பிறரால் அதட்டப்படுகிற மக்களைப் பார்த்து, கேட்பதுபோல் நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்களைப் பார்த்து கேட்பதுதான் கிறிஸ்துவின் சிந்தை! கிறிஸ்தவர்களின் கடமையுமாகும். இந்த கிறிஸ்துவின் சிந்தை நமது திருமண்டல மக்களிடம் இருக்கவேண்டுமே. 200 ஆண்டுகளுக்கு மேலாக நாம் கிறிஸ்தவர்களாய் திருச்சபையில் இருந்தும் நமக்குள் கிறிஸ்துவின் சிந்தை இல்லையே! இன்னும் எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றல்லவா கேட்டுக்கொண்டு இருக்கிறோம். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது! பிறருக்குப் பணிபுரிந்து பலரை மீட்கும் பொருளாக நமது வாழ்க்கையை அர்ப்பணிப்பதுதானே நம்மேல் விழுந்த கடமை! கிறிஸ்துவின் சிந்தை நம்மிடம் இல்லை என்றால் திரும்பவும் உங்களிடம் கிறிஸ்துவை அறியாதவர்களைப்பார்த்து கூறுவதுபோல், கிறிஸ்துவை உள்ளங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்லவேண்டும். எபி 5:12. நாம் வாசிக்கிறபடி காலத்தைப் பார்த்தால், நமது 200 ஆண்டு வரலாற்றைப்பார்த்தால் போதகராயிருக்க வேண்டிய நமக்கு மூலஉபதேசமான கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற கூறும் போதனையைக் கொடுக்கவேண்டியதிருக்கிறது! கிறிஸ்துவை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்வீர்களா?.

4. நாம் செய்யவேண்டியது என்ன?
பவுல் நாம் செய்ய வேண்டியதை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கமும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புள்ளவர்களாய் இருங்கள் (பிலி 2:1-2). நமக்குள் ஏக சிந்தை இல்லையே! இன்னும் அணி என்றும் கட்சி என்றும் பிரிந்தல்லவா கிடக்கிறோம். இன்னும் பவுல் சொல்வதைக்கேளுங்கள். ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே, ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலி 2:3-4).

திருச்சபை என்பது பிறருக்கானவைகளை நோக்குகின்ற ஒரு சங்கம். நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? என்று கேட்கிற சங்கம். ஆர்ச் பிஷப் வில்லியம் டெம்புள் இவ்வாறு கூறினார். "Church is the only club that exists for its non-members". திருச்சபை என்ற சங்கம் தன்னிடத்தில் அங்கத்தினராக இல்லாதவர்களின் நலனுக்காக செயல்படுகிற சங்கம். அதற்கு நமக்குள் எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்வி இருக்கலாகாது. கிறிஸ்துவின் சிந்தையால் நாம் வழி நடத்தப்பட வேண்டும்.

அருமையானவர்களே! இன்னும் சில நிமிடங்களுக்குப்பின் திருவிருந்தில் பங்கு பெறப்போகிறீர்கள். அந்த விருந்தில் நீங்கள் கிறிஸ்துவை உங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல, உடலிலும் ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள். அப்பத்தை புசிக்கும்போதும், ரசத்தை அருந்தும்போதும் கிறிஸ்து உங்கள் உடலில் நுழைகிறார். உங்களுக்குள்ளே வந்துவிடுகிறார். இந்த எண்ணத்தோடு இந்த திருவிருந்தில் பங்குக் கொள்ளுங்கள். கிறிஸ்துவை உங்களுக்குள்ளே வாசம் செய்ய இடம் கொடுங்கள். அப்போது கிறிஸ்துவின் சிந்தை உங்களது சிந்தையாகிவிடும். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது! உங்களுக்குள் இப்படி இருக்கலாம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!

ஜாமக்காரன் குறிப்பு: மேலே வாசித்த இந்த செய்தி திருநெல்வேலி டையோசிஸ் பிஷப், திருமண்டல பொறுப்பாளர்கள், திருமண்டல மக்கள் ஆகியவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தென் இந்திய திருச்சபை மக்களுக்கும், அனைத்து CSI பிஷப்மார்களுக்கும் பொருந்தும். அதுமட்டுமல்ல, AOG, IPC போன்ற பெந்தேகோஸ்தே சபையிலுள்ள தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் ஏற்றதாகும்.

மேலே வாசித்த இந்த பிரசங்கத்தை அன்று கேட்டுக்கொண்டிருந்த பிஷப், திருமண்டல பொறுப்பாளர்கள், DC, ஆC மெம்பர்கள் ஆகிய அனைவரின் இப்போதைய நிலையை பாருங்கள். செய்த அருமையான இந்த பிரசங்கத்தை இவர்கள் கவனித்திருப்பார்களா? பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது இவர்களில் ஒரு சிலரின் மனதில் இவரை பிஷப்பாக நாம் சம்மதித்திருக்கிறோமே நமக்கு என்ன கிடைக்கும்? எந்த பதவியை பிஷப்பிடம் கேட்டுவாங்கலாம்! அந்த பதவியின்மூலம் நமக்கு என்ன கிடைக்கும்? இதுவரை கோர்ட்டும், மற்ற காரியங்களுக்கும் செலவழித்த லட்சங்கள், கோடிகள் ஆகிய இவைகளை எந்த வழியில் டையோசிஸ்ஸிலிருந்து திரும்ப எடுக்க இயலும், அடுத்த எலக்ஷனுக்குள் அத்தனை பணத்தையும் எடுத்தாக வேண்டுமே! என்ற எண்ணங்கள் சிலரின் உள்ளத்தில் எழுந்திருக்கும்.

  வரும் எலக்ஷனை தள்ளிவைத்தால் என்ன? என்று ஒருவர் சிந்திக்க தொடங்கிவிட்டார். எலக்ஷன் நடக்காதிருக்க எந்த காரணத்தின் அடிப்படையில் STAY ஆர்டர் வாங்க இயலும். இப்படி விதவிதமான சிந்தனைகள் அந்த மூளையில் ஓடிக்கொண்டிருக்குமே! அப்படியேதான் அவர் உள்ளத்தில் பொறுப்பில் உள்ள பெரும்தலைகளை எப்படி சமாளிப்பது? நம்முடைய பவரை எப்படி உபயோகப்படுத்துவது?, எந்த வக்கீல் நமக்கு நல்ல ஆலோசனை கொடுப்பார் என்றெல்லாம் யோசித்து மண்டையை குடைந்துகொண்டிருக்கும் மனகுழப்பம்தான் இப்போதைய நிலையாகும். இப்போதுள்ள செய்திகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. கோர்ட் செய்திகள் அதை உறுதிப்படுத்துகிறது. வெளியிலிருந்து கவனிக்கும் நமக்கே இவைகளை யோசிக்கும்போது தலைக்குள் ஏதோ உருளுகிறதைப்போல் இருக்கிறது. ஆனால் திருமண்டலத்தில் பிஷப்பும், அதிகார பொறுப்பில் இருப்பவர்களின் மனநிலையும் எப்படியிருந்திருக்கும்! இரவும், பகலும் இவர்கள் அனைவரின் எண்ண அலைகள் என்னமாய் அவதியுற்று அலைந்திருக்கும்.

  நல்லவேளை DC எலக்ஷன் கோர்ட்டின் மேற்பார்வையில் அடிதடியில்லாமல், குடல் பிதுங்காமல் நல்ல விதத்தில் நடந்துமுடிந்தது. இனி லே செயலர், மற்ற பொறுப்புக்கான எலக்ஷன் இவைகள் எப்படி நடைபெறபோகிறதோ? அது நடக்குமா? நீண்டுபோகுமா? எப்படிப்பட்ட லே செயலர் வரவேண்டும் என்று யாருக்கு அதிக நாட்டம்?, அந்த பதவியை யார் அதிகமாக எதிர்ப்பார்க்கிறார்கள்! எந்த நோக்கத்துடன் இப்போது STAY ஆர்டர் வாங்கப்பட்டுள்ளது. இவைகளையெல்லாம் மக்கள் கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவும் மக்களைவிட மிகுந்த வேதனையுடன் ஒவ்வொருவரின் செயல் பாட்டையும், இரவு இவர்கள் நடத்தும் கலந்தாலோசனையையும் கவனித்துகொண்டேயிருக்கிறார்! இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யமுடியும், வழக்கம்போல ஜெபநிலையில் இருப்போம்! வேறென்ன செய்ய?!

இந்த பிரசங்கத்தின் முக்கிய செய்தி குறிப்பை ஒருமுறைகூட அறிவிக்கிறேன்:

  அதிகாரிகள் இறுமாப்பாய் ஆளுகிறார்கள் . . . . உண்மையா?

  பெரியவர்கள் (திருமண்டலத்தை ஆளும் கமிட்டி, பொறுப்பாளர்கள்) கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள்.

  திருமண்டலத்தில் ஒருவருக்கொருவர் பழகும் நமது உறவுகள் எப்படியிருக்கிறது?

  வேதத்தில் கூறப்பட்ட இரண்டு சீஷர்களின் பதவி ஆசை! (பிஷப்புக்கு வலங்கையாக) சீஷர்களில் மீதி 10 பேர்களின் எரிச்சல் உணர்வு. பதவி பெற்றவர்கள்மேல் உங்களுக்கு உண்டா?

  தலைவன் அடிமையாகவேண்டும்! இது நடக்கக்கூடிய விஷயமா? பெரியவன் பணிவிடைக்காரன் ஆகவேண்டும். இது முடியுமா? தாழ்மை என்னும் குணம் யாருக்கு மிக அதிகம் தேவை?

  இயேசுகிறிஸ்து கூறினார்: ஊழியம் கொள்ள நான் வரவில்லை, ஊழியம் செய்யவே நான் வந்தேன். இந்த சிந்தை நமக்கு உண்டா?

  இயேசு கூறியது: உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்? நீங்கள் சேவை மனப் பான்மையுடன் திருமண்டலத்தில் உள்ள பின்தங்கிய இடங்களில் உள்ளவர்களிடம் சென்று உங்களுக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்? என்று கேள்விகேட்டு திருமண்டலம் முழுவதையும் சுற்றிவருவீர்களா?

  இந்த கிறிஸ்துவின் சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.

  சபைகளில் உள்ள நலிவுற்றவர்களை கண்டுபிடியுங்கள். அவர்களுக்கு ஆறுதல், தேறுதல், இரக்கம் அளித்து அதை செயல்படுத்துங்கள். உங்களுக்குள் ஐக்கியம் உருவாக்கவேண்டும்.

இப்போதுள்ள ஐக்கியம் போல அல்ல, கீரியும் பாம்பும் போல இருந்த இரண்டுபார்ட்டியின் தலைகளுக்குள் ஏற்பட்ட தற்காலிக ஐக்கியம், உள்நோக்கத்துடன் கூடிய ஐக்கியமாகும். எதிரிக்கு-எதிரி நண்பன் என்பது நாட்டு அரசியல்வாதியின் வஞ்சக இணைப்பு. அது ஆவிக்குரிய சபை அரசியலுக்கு பொருந்தாது.

  திருசபை என்பது பிறருக்கானவைகளை நோக்குகின்ற ஒரு சங்கம். திருமண்டலத்திலிருந்து அல்லது சபையிலிருந்து நமக்கு எவ்வளவு எடுக்கலாம்? என்ற பிசாசின் குணம் உண்டாகாமல், திருமண்டத்துக்கு அல்லது சபைக்கு என் பாக்கெட்டிலிருந்து, என் வருமானத்திலிருந்து, என் சொத்திலிருந்து எவ்வளவு கொடுக்கலாம் என்ற உயரிய சிந்தையுடன் பதவி வகிப்பவர்களே நம் சபைக்கு, திருமண்டலத்துக்கு தேவை. கிடைப்பார்களா? கிடைப்பார்களா? ஜெபிப்போம்!


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM