அந்நியபாஷை சில குறிப்புகள்

யோவான் 14ம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியானவரைப்பற்றி குறிப்பிடும்போது அவருடைய கிரியைகளை, பணிகளைப்பற்றி குறிப்பிடும்போதும் கீழ்கண்டவாறு கூறுவதை காணலாம். அவர் உங்களுக்கு போதிப்பார் - நினைவூட்டுவார் - நடத்துவார் - அதிகாரத்தோடு பேசுவார் என்றெல்லாம் கூறியவர் அந்நியபாஷையைப்பற்றி ஒரு வார்த்தையும் கூறவில்லை.

  புதிய ஏற்பாட்டில் 16 பாஷைக்காரர்கள் உள்ளடக்கிய கொரிந்து சபையில் எழுந்த பாஷை பிரச்சனைக்காக அந்த ஒரு சபைக்காகமட்டும் பாஷைகளைக்குறித்து பவுல் எழுதுகிறார். அதுவும் பாஷை விஷயமாக அந்த சபைகளில் பிரச்சனை வந்ததாக பவுலுக்கு செய்தி வந்தது. 1கொரி 1:11. ஆகவே அந்த நிரூபத்தை எழுதுகிறார். அந்நிய பாஷை என்ற ஒரு அனுபவம் ஒரு கிறிஸ்தவனுக்கு மிக முக்கியம் என்றால் பவுல், பேதுரு போன்றவர்கள் மற்ற சபைகளுக்காக எழுதப்பட்ட ஒரு நிரூபத்திலாவது அந்நியபாஷைப்பற்றி எழுதியிருப்பார்களே! ஏன் எழுதவில்லை!

  யோவான் சின்ன ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு தன் தரிசனத்தைப்பற்றி எழுதும்போது அதில் பல விஷயங்களைப்பற்றி எழுதிய அவர் அந்நியபாஷைப்பற்றி எதையும் எழுதவில்லையே!

  சீஷத்துவத்தின் வெற்றிக்கு அந்நியபாஷை மிகமுக்கியம் என்று ஆதிசபை நினைக்கவில்லை. ஆவிக்குரிய வரங்களை குறிப்பாக பாஷை பேசும் வரத்தைக்கேட்டு வேண்டிப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற போதனை வேத வசனங்களுக்கு முரண்பாடான ஒன்றாகும்.

  வரம் என்பது கர்த்தரால் கொடுக்கப்படவேண்டிய ஒன்று - கேட்கப்படவேண்டிய ஒன்றல்ல.

ஆவியானவரே எங்களை விடுவியும் என்று அழைத்து மக்களை அழவைத்து சில ஊழியர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். குமாரன் உங்களை விடுவித்தால் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. குமாரன் உள்ளே வந்தால் ஆவியானவரும் வருவார் என்று இவர்கள் போதிப்பதில்லை. என் நாமத்தில் நீங்கள் எதைக்கேட்டாலும் பிதாவானவர் அதை உங்களுக்கு அருளுவார் என்ற இயேசுகிறிஸ்துவின் உபதேசத்துக்கு எதிராக சபை ஜனங்களை பரிசுத்தாவியானவரோடு பேசவைக்கும் இவர்கள் உபதேசம் சபை மக்களை வஞ்சிக்கிறது அல்லது ஏமாற்றுகிறார்கள் எனலாம்.

  காலையில் கிறிஸ்தவ TVயில் 7 மணியிலிருந்து பேசுகிற ஒரு ஊழியர், உங்கள் பாவங்கள் நீங்க வேண்டுமா! துதியுங்கள். பாவம் தானே நீங்கும், துதித்தால் சாபம் போகும், ஆபத்தில் அகப்பட்டுவிட்டீர்களா துதியுங்கள் அப்போது ஆவியானவர் விடுவிப்பார். ஆவியானவரை எப்போதும் துதித்துக்கொண்டேயிருங்கள். மக்களிடம் இப்படிப்பட்ட ஊழியர்கள் மூலமாக நேரிடையாகவும் டிவி மூலமாகவும் பிசாசு பேசுகிறான் என்று அறியவேண்டும். இப்படிப்பட்ட பிரசங்கங்களை ஜனங்கள் தினசரி கேட்டுகேட்டு வேதம் வாசிப்பதையே நிறுத்தி, வசனத்துக் கீழ்ப்படிவதையும் நிறுத்தி, ஸ்தோத்திர துதி பலிகள் என்று அவைகளைமட்டும் மந்திரம் மாதிரி கூறிக்கொண்டே வாழ்கிறார்கள்.

  இன்று துதி ஆராதனை என்பது எங்கும் பிரசித்தம் ஆகும். அப்படியே புறமதத்தினர் உபயோகிக்கும் சுப்பிரபாதம்போல் இப்போது ஒவ்வொருவர் கையிலும் 1000 துதிகள் நிறைந்த புத்தகங்களையும், 2000 துதி புத்தகங்களையும் பைபிளுக்குபதில் இவைகளையே கையில் வைத்துக்கொண்டு திரிவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் அந்திகிறிஸ்துவின் ஆவிகளின் வலையில் இவர்கள் விழுந்துபோனார்கள் என்று காணமுடிகிறது.

  மேலே எழுதிய இரண்டு பெரிய ஆபத்துக்கள் இன்று கிறிஸ்தவ உலகில் பெருகிவிட்டது. ஜாக்கிரதையாக இருப்போம். இதைபோதிக்கும் ஊழியர்களை இனம்கண்டு இவர்களைவிட்டு விலகியிருங்கள்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM