வாசகர் கடிதம்

வாசகர் கடிதம் 1:
ஜாமக்காரனில் ஊழியர்களைக்குறித்து எழுதும் கட்டுரையில் அவரவர்களின் புகைப்படங்களை (Photo) தொகுத்து வெளியிட்டது மிகமிக அருமை, ஜாமக்காரன் புதிய பொலிவை பெற்றது. நாங்கள் ஏஞ்சல் TVயை பார்ப்பதில்லை. எங்கள் ஊரில் யாருக்கும் அந்த TV சேனல் வருவதில்லை. ஆகவே சகோ.சாதுசுந்தர் செல்வராஜ், சகோ.வின்சென்ட் செல்வகுமார் போன்ற பலருடைய புகைப்படத்தை ஜாமக்காரனில் கண்டபின் அட! இவர்களா, இப்படியெல்லாம் பிதற்றுகிறார்கள்? என்று ஆச்சரியப்பட வைத்தது. அந்த செய்திகளை புகைப்படம் உறுதிப்படுத்துகிறது. இப்போது வித்தியாசமாக முன்னேறும் ஜாமக்காரனுக்காக தேவனைத் துதிக்கிறேன்.


வாசகர் கடிதம் 2:
சத்திய வசனம் TV செய்திகள் தமிழன் TV சேனலில் வருபவை மிக நன்றாக இருக்கிறது. பிழையான செய்திகள் சொல்லும் ஊழியர்களின் பிரசங்கத்தை அதே தமிழன் TV சேனலில் கேட்டிருக்கிறோம். ஆனால் இப்போது உங்களை போன்றோர் பேசும் இப்படிப்பட்ட ஆழமான, வசன அடிப்படை செய்திகளுக்காக தேவனைத்துதிக்கிறேன்.

  வேதநாயக சாஸ்திரியார் அவர்கள் தேவனின் அன்பைக்குறித்து தமிழன் TVயில் பேசும்போது, பிதாவின் மடியில் இருந்த குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்றால் இயேசுகிறிஸ்துவை கைக்குழந்தையாக நினைத்து அப்படி எழுதவில்லை. பிதாவானவர் இயேசுவை மடியில்போட்டு கொஞ்சிக்கொண்டிருந்தார் என்று நினைக்கக் கூடாது. தன் குமாரனை எவ்வளவாய் நேசித்தார் என்பதை வெளிப்படுத்தவும், குமாரன் என்ற உறவால் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதை உலகுக்கு விவரிக்கவுமே குமாரன் என்ற பதத்தை உபயோகித்தார். தன்னுடைய ஒரே பேரான குமாரனை உலகத்துக்கு சாவதற்க்கென்று அனுப்பியதன்மூலம் குமாரனை நேசிப்பதைவிட நம்மை நேசித்தார் என்பதை அந்த வார்த்தையின்மூலம் வெளிப்படுத்தினார் என்று அவர் செய்தியளித்தார்.

  இப்படிப்பட்ட வசன அடிப்படை செய்திகள் நின்றுவிடக்கூடாது.

  சத்தியவசனம் செய்திகள் TVயில் தொடர்ந்து வரவேண்டும் என்று நாங்களும் ஜெபிக்கிறோம்.

- டி.பால் ஞானய்யா.

வாசகர் கடிதம் 3:
அந்திகிறிஸ்து யூத குலத்தில் எழும்புவான் என்பது தவறு

ஜாமக்காரன் 2011 ஏப்ரல் மாத பத்திரிக்கையில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் அந்திகிறிஸ்து யூத குலத்திலிருந்துதான் எழும்புவான் என்று எழுதிய கட்டுரையை வாசித்து பலர் தங்கள் மாற்று அபிப்ராயங்களை எழுதியுள்ளார்கள். அனைத்தையும் வெளியிட இயலாது. ஆனாலும் பெங்களுர் பாஸ்டர்.டி.டேனியல் அவர்கள் எழுதியதின் கடைசி பகுதியை மட்டும் வெளியிடுகிறேன்.

அந்திகிறிஸ்து யூதகுலத்திலிருந்து எழும்புவான் என்று வேதபுத்தகத்தில் எங்கும் எழுதப்படவில்லை. தானியேலின் புத்தகத்தில் அதிகாரம் 2,7,8,11ல் உள்ளபடி அந்திகிறிஸ்து எழும்பும் நாடு, இனம் ஆகியவற்றைக் குறித்து தெளிவாக எழுதியிருக்கிறது. . . . . .

  அந்திகிறிஸ்து ஒரு கிரேக்கன், அவன் சீரியாவை சேர்ந்தவன், அவன் ஒன்றுப்பட்ட ரோமில் அல்லது ஐரோப்பியாவிலிருந்து எழும்புவான். இது வேத வசனத்தினப்டி நூற்றுக்குநூறு சத்தியம்.

  சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் வேதத்தை ஆராயாமல் வேத ஆதாரம் இல்லாமல் விளக்கம் தந்துள்ளார். யூதர்கள் மற்றவர்களை தங்களுக்கு தலைவனாக யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யூதனைத்தான் ஏற்றுக்கொள்வார்கள் என்பது ஏற்கதக்க உதாரணமல்ல, காரணம், வேதாகமத்தையும், சரித்திரத்தையும் பார்த்தால் யூதர்கள் அதிகமாக அந்நியர்கள் தலைமையின்கீழ் இருந்து பழக்கப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.

உதாரணமாக எகிப்தில் 400 ஆண்டுகாலம், கானான் தேசத்தில் அவ்வப்போது சுற்றிலும் இருந்த தேசத்தரிடம் அடிமைகளாக இருந்துள்ளார்கள். எல்லாவற்றையும்விட கி.மு.606 முதல் கி.பி.1948 வரை தங்களுக்கு ஒரு சொந்த தலைவன் இல்லாமல் வாழ்ந்த பெருமை இஸ்ரவேலரையை சேரும். இயேசு கிறிஸ்துவும் மேய்ப்பன் இல்லாத ஆடுகள் என்று கண்டு மனதுருகினார் என வேதத்தில் பார்க்கிறோம். ஆதலால்தான் வேறொருவன் தன் சுயநாமத்தில் வருவான் அவனை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார். வேறொருவன் என்பது புறஜாதியனைக் குறிக்கும். ஆதலால் அந்திக்கிறிஸ்து யூதகுலத்தில் வருவான் என்று சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் அவருடைய சொந்த விளக்கம் அது வேத விளக்கமல்ல.

- பாஸ்டர்.டி.டேனியல், பெங்களுர்.

வாசகர் கடிதம் 4:
அவசரப்படாதீர்கள்:

  சகோ.வின்சென்ட் செல்வகுமார் எழுதிய கட்டுரையை ஜாமக்காரனில் வெளியிடும்முன் ஜாக்கிரதையாக இருங்கள். இவர் பல விஷயங்களை வேத வசன அடிப்படையில் எழுதாமல் தம் சொந்த கருத்தை பிரசங்கமாகவும், கட்டுரையாகவும் எழுதுகிறார். அவர் கட்டுரையில் அடிப்படை தவறுகள் ஏராளம் உண்டு. எந்த கட்டுரையை யார் எழுதினாலும் அதை வெளியிட அவசரப்படாதீர்கள்.

- பாஸ்டர்.ஸ்டீபன், சென்னை.

Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM