சிவகாசி ஜெப நடை ஊழியங்கள் - ஊழிய அறிக்கை
  சிரிப்பு பகுதி
பத்திரிக்கை பெயர்: இயேசுவின் தொனி - வின்சென்ட் செல்வகுமார்
மார்ச், ஏப்ரல் 2011 - பக்கம் 17.

கடந்த ஜனவரி 27ம் தேதி சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்களின் இயேசுவின் தொனி ஊழியர்கள் சிவகாசியில் ஜெபநடை ஊழியம் செய்தனர்.

குறிப்பு: பெயர்தான் ஜெப நடை, ஆனால் வேனில் உட்கார்ந்தபடியேதான் ஜெபிக்கிறார்கள். ஜெபநடை என்று அறிவித்து நடக்காமலே இப்படியும் ஜெபிக்கமுடியும் என்பதற்கு இவர்கள் நல்ல சாட்சி. காலால் நடக்காமலே மிகச் சுலபமாக கால்வலி இல்லாமல் அற்புதமான ஜெபநடை ஊழியம் செய்துள்ளார்கள். வாசகர்கள் இதை கற்றுக்கொள்ளாதீர்கள் என்று அறிவிக்கவே இதை வெளியிடுகிறேன்.

வேனில் உட்கார்ந்துகொண்டே கைகளை உயர்த்தினால் போதும். அது நடந்துக்கொண்டே ஜெபிக்கும் ஜெபநடைக்கு சமம் என்று கண்டுபிடித்து உள்ளார்கள்.

மேலும் இந்த வேன் ஜெப நடையினால் ஏற்பட்ட பலனையும் கீழே வாசியுங்கள்.

  வேனில் ஜெபித்துகொண்டே செல்லும்போது அங்குள்ள மக்களின் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு அநேக வெளிப்பாடுகளை பார்த்தார்கள் (என்ன வெளிப்பாடுகளை பார்த்தார்கள். யார் அதை காண்பித்தார்கள் என்பதை அவர்கள் எழுதவில்லை).

  சிவகாசியில் உள்ள இந்திரா நகரிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊழியர்கள் செல்லும்போது . . . நம் ஊழியர்கள் ஜெபித்துக்கொண்டே சென்றார்கள்.

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் அப்பகுதி முழுவதும் தெளிக்கப்படுவதை தெளிவாக கண்டார்கள்.

இவர்கள் தெளிவாக என்று குறிப்பிட்டு அந்த வார்த்தையை உபயோகிப்பதால் அவர்கள் பத்திரிக்கையை வாசிக்கிறவர்கள் இவர்கள் சொல்வது டூப் என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே இயேசுவின் இரத்தத்தை தெளிவாக கண்டதாக அறிவிக்கிறார்கள். அந்த இரத்தம் எப்படியிருந்தது சிகப்பாகவா! கருஞ்சிவப்பாகவா! என்றெல்லாம் ஜாமக்காரன் வாசகர்கள் கேள்வி கேட்டுவிடாதீர்கள். 2000 வருடத்துக்குமுன் சிந்தப்பட்ட இரத்தம் அல்லவா. ஆகவே, அதன் கலர் விவரங்களை இவர்கள் கூறவில்லை என்று நினைக்கிறேன். அந்த இரத்தம் இவ்வளவு நாள் எங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தது? என்பதும் எழுதப்படவில்லை.

சகோ.வின்சென்ட் செல்வகுமார் பிரசங்கிக்கும் பல கூட்டங்களில் பல ஊர்களில் ஜெபவேளையில் தெளிக்கப்பட்ட இரத்தமும், சிவகாசியில் தெளிக்கப்பட்டதும் ஒன்றா என்ற விவரங்கள் வின்சென்ட் செல்வகுமாரிடம் நீங்களே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். வேனில் ஜெபித்தவர்கள் அந்த இரத்தத்தை நேரிடையாக தெளிவாக கண்டிருக்கிறார்கள். இதைவிட ஆதாரம் வேறு வேண்டாம்! அன்று சிவகாசி சென்ற ஜெப வீரர்களோ, வின்சென்ட் செல்வகுமாரோ அந்த இரத்தத்தின் விளக்கத்தை உங்களுக்கு கூறுவார்கள். அதன்பின் அவர்கள் ஜெபநடை வேனில் தொடருகிறது. சிவகாசியில் தீ விபத்து ஏற்பட்ட இடங்களுக்குள் கடந்துபோய் வைராக்கியமாக ஜெபித்தார்கள் என்று எழுதியுள்ளதை கவனிக்க வேண்டும். அதன்பின் ஒவ்வொரு திசையிலும் காணப்படும் நுழைவு வாயில்களில் இயேசுவின் இரத்தத்தை தெளித்து சிவகாசி பட்டணத்துக்குள் இயேசுவின் இரத்தத்தை தெளித்து ஜெபித்தார்கள். ஆக சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்களும், அவர் ஜெபகுழுவினரும் இயேசுவின் இரத்தத்தை எப்போதும் ரெடிமேடாக கூடவே கொண்டுப்போகிறார்கள் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

இப்படி வேனில் உட்கார்ந்தபடியே ஜெபநடை ஜெபத்தை செய்துகொண்டுபோகும்போது இந்த ஜெபகுழுவினர் அங்கு ஒரு பள்ளிக்கூடத்தில் அடிக்கடி ஜாதி கலவரம் வருவதாக அறிந்தார்களாம். அநேகர் கலவரத்தில் இரத்தமும் சிந்தியிருக்கிறார்கள் என்று அறிந்து அப்பள்ளியை சுற்றிலும் நடந்து ஜெபித்தார்களாம். அப்போது அப்பள்ளியை சுற்றிலும் அநேக விக்கிரக கோவில்கள் நிறைந்திருப்பதை கண்டார்கள். இந்த மதகலவரத்துக்கு இப்படிப்பட்ட ஆவிகள்தான் காரணம் என்ற வெளிப்பாட்டை ஜெபத்தில் பெற்று, உடனே அந்த விக்கிரக கோவில்களுக்கு சென்று அந்த ஆவிகளை கடிந்து கொண்டார்கள் என்று எழுதியுள்ளார்கள். நல்லவேலை RSS, பஜ்ரங்தள் சகோதரர்கள் யாரும் இவர்கள் இந்து விக்கிரக கோவிலுக்குள் நுழைந்து அந்த விக்கிரகங்களை நோக்கி கடிந்து கொண்டதை பார்க்கவில்லை! கண்டிருந்தால் ஜெபதொனி ஜெபநடை வீரர்களால் மற்றொரு மதகலவரம் அங்கு உண்டாகியிருக்கும்! என்ன கூத்து இது? கடைசியாக நடந்த தமாஷையும் கேளுங்கள். சிவகாசி ஜெபநடை முடியும் தருவாயில் (பக்கம் 21) தங்கள் கைகளை உயர்த்தி ஜெபித்தார்கள் அவ்வாறு ஜெபிக்க கைகளை நீட்டியபோது ஊழியர்களின் கைகளிலிருந்து ஒரு அக்கினி புறப்பட்டுபோனதை பிரத்தியட்சமாக கண்டார்கள் என்று தெளிவாக எழுதியுள்ளார்கள். இதில் அக்கினி, பிரத்தியட்சமாக என்ற இரண்டு வார்த்தைகளை கவனிக்கவேண்டும். சொப்பனத்தில் அல்லது தரிசனத்தில் காண்பதுபோல அல்ல, நேருக்குநேர், பிரத்தியட்சமாக நெருப்பு கைகளிலிருந்து புறப்பட்டு போவதை கண்டார்கள் என்று அவர்களே எழுதியுள்ளார்கள். இந்து தெய்வங்களின் கதைகளில்தானே! இப்படி அக்கினி நெற்றியிலிருந்தும், கையிலிருந்தும் வெளிவருவதை கேட்டிருக்கிறோம். இப்போது இயேசுவின் தொனி சகோ.வின்சென்ட் செல்வகுமார் ஊழியங்களிலும் நெருப்பு புறப்பட ஆரம்பித்துவிட்டது.

பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்துகள் நிறைந்த சிவகாசி ஊரில் நெருப்பு பிரத்தியட்சமாக அதாவது உண்மையான நெருப்பாக கைகளிலிருந்து புறப்பட்டது என்று இவர்கள் கூறும்போது பலர் பயந்திருக்கலாம். நல்லவேளை சிவகாசி தொழிற்சாலை கிடங்குகளில் உள்ள வெடிமருந்துகளில் இவர்கள் அனுப்பிய அந்த நெருப்பு பரவவில்லை. பெரிய தீ விபத்து தடுக்கப்பட்டது! என்ன உபதேசம் இது?

எந்த மாதிரியான பைபிளை இவர்கள் வாசிக்கிறார்கள். இவர்களின் ஊழிய அறிக்கை இவ்வளவு சிறுபிள்ளைதனமாக இருக்கிறது.

  இதே ஜெப நடையைத்தான் நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் அவர்களும், குழுவினரும் நடத்துகிறார்கள். இவர்களின் இந்த ஊழிய அறிக்கை நிகழ்ச்சிகளுக்கு வேத அடிப்படை என்ன? இவர்களை பின்பற்றுபவர்களும் நம்புகிறவர்களும் இவர்கள் ஊழியத்தை தாங்குகிறவர்களும் நியாய தீர்ப்பில் தங்களின் இந்த செயலுக்கு என்ன விளக்கம் கொடுப்பார்கள்.

நித்தியம் இவர்களுக்கு எங்கே? இவ்வளவு அறிவு முதிர்ச்சி பெற்ற இந்த காலத்திலும் இப்படிப்பட்ட ஊழியர்களை பின்பற்ற ஒரு கூட்டம் இருக்கிறதே! இவர்களையும் ஒரு கூட்டம் நம்புகிறார்களே! என்ன சொல்ல! இயேசுவின் இரத்தம் பெண்கள் வாசலில் சாணி கலந்து தெளிக்கும் தண்ணீர்ப்போல இவர்கள் கருதுகிறார்களா? கடைசி காலம்! விசுவாசிகள் ஜாக்கிரதையாக இருப்போம். இதை வாசிக்கும் வாசகர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவிக்கவே இதை எழுதினேன்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM