ஊழியங்களையும், ஊழியர்களையும்
சோதித்து பார்ப்பது குற்றமா?
இயேசுவே வாழ்வு Selected

  நமது விசுவாசத்தை தேவன் சோதிக்கிறார் (1பேது 1:7). நமது விசுவாச சோதனையில் நாம் உத்தமர் என விளங்கின பின்புதான் கர்த்தர் நமக்கு ஜீவ கீரிடத்தைத் தருகிறார் (யாக் 1:12).

நாமும் இவ்வுலகில் - போலித்தனம் மலிந்துவிட்ட இவ்வுலகில் நாம் ஏமாற்றப்படாமல் இருப்பதற்காக பலவித ஊழியங்களையும், உபதேசங்களையும் சோதித்துப் பார்க்கவேண்டும்.

ஏன் சோதித்துப் பார்க்கவேண்டும்?
  "திருடர்கள் ஜாக்கிரதை" என எச்சரிப்பு உள்ள பேருந்து நிலையங்களில் நாம் நமது உடைமைகளை எவ்வளவு கவனமாக வைத்திருப்போமோ அதுபோல, போலித்தனமான ஊழியர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் ஒவ்வொரு ஊழியங்களையும் நாம் சோதித்து விலகவேண்டியவர்களை விட்டுவிலகி (ரோ16:17, 2தெச 3:6) நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்ளவேண்டும். பிசைந்த புதிய மாவைப் புளிப்பாக்கும். கொஞ்சம் புளித்த மாவு ஆகிய விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்ந்து, ஞானஸ்நானமும் பெற்ற ஏன் அபிஷேகம் பெற்றதாகவும் அலட்டிக்கொள்ளும் விபச்சாரக்காரர், பொருளாசைக்காரர், விக்கிரக ஆராதனைக்காரர், கொள்ளைக்காரர் முதலில் பொல்லாதவர்களை நமது ஐக்கியத்தைவிட்டே தள்ளிப்போடவேண்டும். அதாவது சபை நீக்கம் (Ex-Communicate) செய்யவேண்டும் என 1 கொரி 5:1-13 வசனங்களில் காண்கிறோம். என 1 கொரி 5:1-13 வசனங்களில் காண்கிறோம்.

கடைசி காலத்தின் அறிகுறிகளில் முதலிடத்தில் உள்ளது போலித்தனம்:
மத் 24:3-31, மாற் 13:3-33 மற்றும் லூக் 21:7-36 ஆகிய வேத பகுதிகளில் உலகத்தின் முடிவுக்கும், கிறிஸ்துவின் வருகைக்கும் அடையாளம் என்ன? அதாவது அறிகுறிகள் என்ன என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்டபோது யுத்தங்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், நோவா காலமக்கள்போல உலக வாழவே சதம் என வாழும் மக்களின் மனநிலைகள் போன்ற பல அடையாளங்களை இயேசுகிறிஸ்து குறிப்பிட்டார். ஆனால், அவைகளின் பட்டியலில் முதல்முதல் குறிப்பிட்ட அடையாளம் கள்ளத்தீர்க்கதரிசிகள் அநேகர் எழும்புவார்கள். தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக, ஏமாற்றத்தக்கதாக பெரிய அற்புதங்களைச் செய்வார்கள் என்று தெளிவாகச் சொன்னார்கள்.

அதுமட்டுமல்ல, பவுல் எழுதிய தீமோத்தேயு 3:5ல் தேவபக்தியின் வேஷம் போட்டு, தேவபக்தியின் விளைவாகிய நடைமுறை கிறிஸ்தவ வாழ்வு அற்றவர்கள் கடைசி காலங்களில் எழும்புவார்கள். அவர்களை விட்டுவிலகவேண்டும் என குறிப்பிட்டார்.

போலித்தன ஊழியங்களைச் சோதித்துப் பார்த்து விலகுவதை தேவன் பாராட்டுகிறார்:
வெளி 2:1-3 வசனங்களில் எபேசு சபையைப் பாராட்டி தேவன் கூறும்போது அவர்களின் செயல்பாடுகள், பிரயாசங்கள், பொறுமை முதலியவற்றைப் பாராட்டியவர், அப்போஸ்தலரல்லாத சில போலி ஊழியர் தங்களை அப்போஸ்தலர் எனக் கூறித்திரிவதைப் பொறுக்கக்கூடாமல், சகிக்கக்கூடமால் அவர்களைப் சோதித்துப் பார்த்து, அவர்களைப் பொய்யர், போலிகள் என கண்டறிந்ததையும் பாராட்டுகிறார்.

வெளி 2:12-15 வசனங்களில் பெர்கமு சபையைப் பற்றி குறிப்பிடும்போது, சபை மக்களை விசுவாசத்தை விட்டு இடறிவிழச்செய்யும் பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளும், மற்றும் தேவ கிருபையினால் இரட்சிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பாவம் செய்தாலும் கிருபையை இழக்கமாட்டார்கள் என்ற பாவத்தைக்குறித்த எச்சரிப்பு அற்ற சமரசபோக்குடைய நிக்கொலாய் மதத்தவரின் தவறான போதனைகளையம் கடைபிடிக்கும் தெளிவற்ற விசுவாசிகள்! பெர்கமு சபையில் இடம் பெற்றிருப்பதை தேவன் வெறுக்கிறார்.

வெளி 2:18-21 வசனங்களில் தன்னை தீர்க்கதரிசி என்று பறைசாற்றிக்கொள்கிற அதாவது தீர்க்தரிசன வரம் பெற்றவர் என்று நோட்டீஸில் விளம்பரப்படுத்திக் கொள்கிற யேசபேல் என்ற ஸ்தீரியானவளின் ஏமாற்றுப்போதனைகளுக்கு இடம் கொடுப்பதை தியத்தீரா சபையில் கண்டுபிடித்த தேவன் அதைக் கண்டிக்கிறார். எனவே விசுவாசிகளாகிய நாமும் போலித்தனமான ஊழியங்கள் (நிறுவனங்கள்) எவை? போலிகளான ஊழியர்கள் யார்? கள்ளத் தீர்க்கதரிசிகள் யார் எனக் கண்டுப்பிடிப்பது அவசியமாகின்றது.

வேதவசன அடிப்படையில் போலியான ஊழியங்களைக் கண்டறிவது எப்படி:
1. அவர்களுடைய கனிகளை அறிதல்: மத்தேயு 7:7ல் மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடக்கூடாது என்ற இயேசுகிறிஸ்து அதே அதிகாரத்தில் 15-20 வசனங்களில் கள்ளத் தீர்க்கதரிசிகள் யார், நல்ல தீர்க்கர் யார்? என அவர்களுடைய கனிகளை வைத்து, அதாவது அவர்களின் நடைமுறை வாழ்வை வைத்து அறியவேண்டும் எனப் போதிக்கிறார்.

அவர்களின் தோற்றம் ஆடுகளைப்போல சாதுவாக இருந்தாலும், அவர்களின் சுகவாழ்வு பட்சிக்கிற கடித்துக் குதறுகிற ஓநாயாக இருப்பார்கள் என்று மத் 7:15ல் குறிப்பிடுகிறார். அதாவது இரட்டை வாழ்வு வாழ்கிறவர்கள், ஓர் ஊழியனின் வாழ்க்கை திறக்கப்பட்ட புத்தகமாய் மக்களுக்கு அப்பட்டமாய்த் தெரியவேண்டும்.

நியாயாதிபதி ஆட்சிமுறையிலிருந்து தனது பொறுப்புகளை அரச ஆட்சிக்கு மாற்றிக்கொள்ளும் நிலையில் சாமுவேல் பொதுமக்களிடம் பகிரங்கமாக கேட்டது என்னவென்றால் நான் யாருடைய கழுதையை, எருதை எடுத்துக்கொண்டேன்? யாரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அநியாய தீர்ப்பு செய்தேன்? என்னைக்குறித்து எந்த ஆட்சேபனையிருந்தாலும் தெரிவிக்கலாம். என் சிறுவயது முதல் உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவந்தேன் என் வாழ்க்கையைக் குறித்து என்ன குறையிருந்தாலும் நீங்கள் தைரியமாக சொல்லலாம் என 1சாமு 12:1-5 வசனங்களில் சாமுவேல் கேட்கிறார். சாமுவேலின் வாழ்க்கை பொது மக்கள்முன் திறந்த புத்தகமாய் இருந்தது. அதுபோல நெகேமியாவின் வாழ்க்கை திறந்த புத்தகமாய் இருந்தது. தான் யார் மீதும் சர்வாதிகாரம் செலுத்தவில்லை. ஒரு வயலையாவது வாங்கி சொத்து சேர்க்கவில்லை. அதிபதிகள் வாங்குகிறபடி, அலவன்ஸ், T.A (அதாவது பயணப்படி) வாங்கவில்லை என்று சவால் விடுகிறார். (நெகே 5:14-19).

  இன்றைக்கு போகாத பயணத்துக்குப் பயணப்படி வாங்குகிறவர்கள், கட்டாத ஆலயத்துக்கு நன்கொடை வசூலித்துவிட்டு, அதை அப்படியே தங்கள் பெயரில் பிளாட் வாங்கி பிளாட் (சதி) செய்தவர்கள். ஒரே ஒரு மிஷனரியைக்காட்டி நான்கு சபைகளில், சப்போர்ட் வாங்குகிறவர்கள், அந்த நான்கு சபை கொடுக்கும் காணிக்கைகளில் நெல்லை வாங்கி அதை குத்தி அரிசியையும், தவிட்டையும் எடுத்துக்கொண்டு வெறும் உமியைமட்டும் மிஷனரிக்கு அனுப்பி ஏமாற்றுகிறவர்கள். அரசாங்கத்துக்கு ஒழுங்காக சொத்து கணக்கு காட்டாதவர்கள், வருமான வரி ஏய்ப்பு செய்தவர்கள், சேனையின் கர்த்தர் பரிசுத்தர் என மேடையில் அலங்கார ஆராதனை நடத்திவிட்டு, சொந்த மனைவியை வஞ்சித்து அலுவலக உதவிப் பெண்ணோடு (Personal Assistant) ஒரு குடும்பம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் இன்று ஏராளம். இப்பேர்ப்பட்டவர்கள்தான் ஆட்டுத்தோல் போர்த்தி ஓநாயாக வலம் வருகிறார்கள்.

இவர்கள் தேவ வெளிப்பாடு பெற்றவர்களாக வரம் பெற்றவர்களாக, தங்களை வர்ணனை செய்துகொண்டு இன்டர்நேஷனல் ஸ்பீக்கர் எனத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு மக்களை வஞ்சிக்கிறார்கள்.

ஒவ்வொரு ஊழிய திட்டமும் கர்த்தர் சொன்னார், கர்த்தர் சொன்னார் என பொய் சொல்லி மக்களிடம் பணம் வசூல் செய்பவர்கள் இவர்கள் தங்கள் ஊழிய வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? என திறந்த மனதுடன் கணக்கை வெளியிடமுடியுமா?

தங்களைப் பெரிய தீர்க்கதரிசியாகவும், தேவ வரம் பெற்றவர்களாகவும், தங்கள் பத்திரிக்கையில் தங்களைப்பற்றி சித்தரிப்போர் தங்கள் சொத்துக் கணக்கை அவர்களின் பத்திரிக்கையிலேயே குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வெளியிடமுடியுமா?

இந்த சிறியவரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என இயேசுகிறிஸ்து கூறினார். ஐம்பது லட்சம் ரூபாய் காரில் வலம் வருகிறவர்கள் சிறியவர்களா? நன்றாய் இருக்கும் சபைக் கட்டிடத்தை அலுவலகத்தை இடித்து ஆடம்பரமாய்க் கட்டுகிறவர்கள் அதற்கு சதுர அடிக்கு இவ்வளவு கொடுங்கள் எனக் கேட்பவர்கள் சிறியவர்களா?

இவர்கள் ஆடம்பரமாக இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள், உலக உல்லாசத்தை அனுபவித்து தங்களை பெரிய தியாகிகள்போல் காட்டிக்கொள்பவன் இவர்களே. ஓநாய்கள், கனியற்றவர்கள், கள்ளத்தீர்க்கதரிசிகள் இவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். இவர்களுக்கு எப்படிப்பட்ட உதவி செய்தாலும், காணிக்கை அனுப்பினாலும் அது இயேசுவை சந்தோஷம் படுத்தாது. இவர்களுக்கு நீங்கள் எதை செய்தாலும் உங்கள் ஆசீர்வாதத்தை இழந்துப்போவீர்கள்! ஜாக்கிரதை!

தேவ ஊழியத்தை ஆதாயம் தரும் தொழிலாகச் செய்கிறார்களா என அறிதல்:
உண்மையான ஊழியம் எது என அறிய, அந்த ஊழியர் எதன் அடிப்படையில் ஊழியம் செய்கிறார் என அறிவது அவசியம். விளம்பரம், புகழ், பணம் என்பவைகளையே குறியாக வைத்து ஊழியம் செய்கிறாரா? அல்லது தேவ நாம மகிமைக்காக, தேவ ராஜ்ஜிய விருத்திக்காக, ஆத்தும ஆதாயத்துக்காக ஊழியம் செய்கிறாரா? என நாம் சோதிக்கவேண்டும்.

  சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு அதினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார். ஊழியம் முதலிடத்தில் இருக்கவேண்டும், உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும் போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்ற நம்பிக்கையோடே போராடிக்கவும் வேண்டியதே என 1 கொரி 9:10ல் வாசிக்கிறோம்.

ஆனால் பிரசங்கம் செய்ய, கூட்டம் நடத்த இவரை அழைத்தால் பேரம் பேசி இவ்வளவு தந்தால்தான் வருவேன் என வியாபாரம் செய்வதுபோல் ஊழியத்தை பெரியபெரிய கூட்டங்களை ஒழுங்கு செய்வதும், ஒழுங்கு செய்த பின்பு, அதைவிடக் கூடுதலாக காணிக்கை வந்தால் முதலில் ஒழுங்கு செய்த, உறுதி செய்த ஊழியத்தை உதாசீனப்படுத்திவிட்டு பணம் கூடுதலாக கிடைக்கும் இடத்துக்கு பறந்து ஓடுவதும் உண்மையான தேவ ஊழியக்காரனின் ஊழியத்துக்கு தேவைதான் என்றாலும், அதை முதலிடத்தில் வைத்து ஊழியம் செய்வது ஓர் ஊழியக்காரனின் அழகு அல்ல.

பட்டணங்களுக்கு ஓடிவருகிற ஊழியரெல்லாம், சிறிய கிராமங்களுக்கு அழைத்தால் ஜெபித்துச் சொல்கிறேன் என்று சாக்குபோக்குச் சொல்வது போலியான ஊழியத்தின் அடையாளமாகும். ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன் என்ற பவுலின் நோக்கம் உடையவர்களாய் தங்கள் தாலந்துகளை, பணத்தை பெலத்தை, நேரத்தை ஆதாய நோக்கின்றி தேவ பணியில் செலவிடுவோரே மெய்யான தேவ ஊழியக்காரர் ஆவார்.

இயேசுகிறிஸ்துவை முக்கியப்படுத்துகிறார்களா என அறிதல்?
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. . . . . அந்திக்கிறிஸ்துவின் ஆவி அதுவே. அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. அவர்கள் உலகத்துக்குரியவர்கள். உலக்தக்குரியவைகளைப் பேசுகிறார்கள். (யோவான் 4:1-5). தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்யக்கூடாது. அதாவது இருவரையும் ஒரே நேரத்தில் சேவிக்கமுடியாது என்று இயேசு தமது சீடர்களிடம் கூறினார்.

இயேசுகிறிஸ்து கொடுக்கிற பாவமன்னிப்பு, பரிசுத்த வாழ்வு, பரலோக வழி இவைகளைவிட அவர் தரும் உலக ஆசீர்வாதங்களைமட்டும் இன்றைய ஊழியர் பலர் பிரசங்கிக்கிறார்கள். மாமிசத்தில் வந்த இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சிக்க வந்தார். இரட்சிப்பு பெறாத ஒரு மனிதன் தெய்வீக சுகமோ, உலகப்பிரகாரமான ஆசீர்வாதமோ பெற்று என்ன பயன்? பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? (பிர 8:12). நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மனுஷகுமாரன் காலத்திலும் நடக்கும். நோவாவின் காலத்தில் மனுஷர் பெண் கொண்டார்கள், பெண் கொடுத்தார்கள், புசித்தார்கள், குடித்தார்கள். ஆனால் பாவ உணர்வு அற்றவர்களாக, தேவ தீர்ப்பை உணராதவர்களாகவே வாழ்ந்தார்கள். அதாவது உலகப் பிரகாரமான வாழ்வு வாழ்ந்தார்கள். ஆவிக்குரிய வாழ்வில் தரித்தரர்களாய் இருந்தனர். இந்த உலகமும், அதின் ஆசீர்வாதங்களும் தற்காலிகமானவை. நித்திய வாழ்வுக்குரிய இரட்சிப்பைப் பெறாதவன். இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினவனாக இருந்தும் தனது ஜீவனை, ஆத்துமாவை நஷ்டப்படத்தினவனாவான். எனவே எந்த ஊழியருடைய செய்தியில், எழுத்துக்களில் நித்திய ரட்சிப்பு தரும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இடம்பெறவில்லையோ அல்லது உலக ஆசீர்வாதம் மட்டுமே பேசப்படுகிறதோ அந்த ஊழியத்தை நீங்கள் சந்தேகப்படவேண்டும்.

இயேசுகிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன். அற்புத அடையாளங்களைவிட இரட்சிப்பே பெரியது. இரட்சிப்பைக்குறித்து முக்கியப்படுத்தவே அற்புதங்கள். இன்றைய பல ஊழியங்களில் இரட்சிப்புக்கு வழி நடத்தாத அற்புதங்கள் ஏராளம். இரட்சிப்பைவிட அற்புதங்களே முக்கியப்படுத்தப் படுகின்றன. யோவான் ஸ்நானகன் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவைக்குறித்து அவன் சொன்னதெல்லாம் உண்மை.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM