கேள்வி: 2010 பிப்ரவரி மாத ஜாமக்காரனில் ஆசிரியர் கடிதத்தில் வியாதியஸ்தர்களுக்காக தொலைப்பேசியில் ஜெபித்தேன் என குறிப்பிட்டுள்ளீர்கள். வியாதியஸ்தர்கள் அல்லது பிரச்சனையுடையவர்களுக்காக தேவனிடம் ஜெபிக்கலாம். சம்மந்தப்பட்டவர்களுடைய காதுகளில் ஜெபம் கேட்டால்தான் தேவனும் பதில் கொடுப்பாரா? அப்போதுதான் வியாதி அல்லது பிரச்சனை தீருமா? உங்கள் ஜெபம் குழப்பமாக இருக்கிறது! தங்களுடைய பத்திரிக்கையின் நீண்டகால வாசகன் என்ற முறையிலும் தாங்கள் கொடுத்த விழிப்புணர்வு செய்திகள் மூலமாகவேதான் இந்த கேள்விகள் எழுந்தன என்பதையும் எழுதித் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குழப்பத்திற்கு பதில் வேண்டி காத்திருக்கிறேன்.
பதில்: ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறினார். மற்றவர்களுக்காக நாம் ஜெபிக்க வேதம் கட்டளையிடுகிறது. எங்கோயிருக்கும் ஒருவருக்கு அவரை நேரில் பார்க்காமலே அவருக்காக ஜெபிக்கலாம். அவர்களின் வேண்டுகோளுக்கு இணைங்க அப்படி ஜெபிக்கலாம்.
ஒருவர் வியாதியஸ்தராகயிருந்தால் அவரின் குடும்பத்தினர் வியாதியஸ்தரின் விவரங்களை தொலைப்பேசியில் கூறி ஜெபிக்க கேட்டுக்கொண்டால் நம் தனி ஜெபத்தில் அவருக்காக ஜெபிக்கலாம்.
ஆனால் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் வியாதியின் படுக்கையில் அல்லது ஆப்ரேஷன் செய்ய செல்லும்முன் அவரோடு இணைந்து ஜெபிக்க அவர்கள் கேட்டுக்கொண்டால் அப்படிப்பட்ட நேரத்தில் அவர் செவியில் தொலைப்பேசியை வைத்து நாம் ஜெபம் ஏறெடுத்தால் அவரும் அந்த ஜெபத்தை தன் காதினால் கேட்டுகொண்டிருக்கும் நிலையில் ஜெபித்தால் அந்த ஜெபத்தின் முடிவில் அந்த ஜெபத்துக்கு தன் வாய்திறந்து ஆமென் சொல்லமுடியும், சத்தம் வெளிவராத நிலையில் இருந்தாலும் அவர் சுயநினைவில் இருந்தால் மனதிற்குள் ஆமென் கூறமுடியும்.
ஆமென் என்றால் அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தமாகும். ஜெபித்தப்படியே என்னை சுகமாக்கும் என்று அர்த்தமாகும். அந்த காது வழியே அந்த வியாதியஸ்தருக்கு ஆத்தும சுகத்துக்கான ஆலோசனையும் கொடுத்தால் இன்னும் அதிக பிரயோஜனமாக அமையும். இப்படி எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஜெபிப்பது நல்லது.
ஆகவே காதுகளில் செய்யும் ஜெபம் நாம் நேரிடையாக அவர்முன் சென்று செய்யும் ஜெபத்துக்கு சமம். இதில் உங்களுக்கு குழப்பம் என்ன?
செவியில் வைத்து ஜெபித்தால்தான் ஜெபம் கேட்கப்படும் என்று எழுதினேனா? இல்லையே! யாருக்காக ஜெபிக்கிறோம் என்பதின் சூழ்நிலையை பொறுத்தாகும். அவர் படுக்கையிலா? அவர் ஜெபத்தைகேட்கும் நிலையில் இருப்பவரா? என்பதை பொறுத்து நம் ஜெபம் அமையும். இந்த வாய்ப்பு இல்லாதவர் ஜெபகுறிப்புகளை கடிதத்தில் அல்லது இ-மெயிலில் எழுதி ஜெபிக்ககேட்டுக்கொண்டால் அந்த குறிப்பு கிடைத்தவுடனே நாம் ஜெபிக்க அந்த ஜெபத்தையும் கர்த்தர் கேட்பார். ஆபத்தான நிலையில் இருந்தாலும், தொலைப்பேசி வசதியிருந்தாலும் ஜெபிக்கும் நான் ஊரில் இல்லாமல்போனால் என்ன செய்வது? ஆபத்தான நிலையில் விவரத்தை தொலைப்பேசியில் அறிவித்து ஜெபிக்ககேட்டுக்கொண்டால் அந்த விவரம் நான் இருக்கும்
ஊருக்கு அல்லது வெளிநாட்டுக்கு என் மனைவி அறிவிப்பார். நான்
இந்தியாவில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் ஒவ்வொருநாள் இரவு தொலைப்பேசி வழியாக ஜெபகுறிப்பு விவரங்களை நானே என் மனைவியிடம் கேட்டு குறித்துக்கொண்டு அன்று இரவே நானும், என் மனைவியும் அவரவர்களிடத்தில் இருந்தவாரே குறிப்பிட்டவர்களுக்காக ஜெபித்துவிடுவோம். என் மனைவி ஊழியத்துக்கு அல்லது வெளி ஊர்களுக்கு போயிருந்தால் மகன் அல்லது மருமகள் அன்றைய ஜெப விவரங்களை எனக்கு அறிவிப்பார்கள். இதுதான் எங்கள் ஜெபமுறைகளாகும்.
ஆனால் ஜெபிக்கும் நான் அல்லது நாங்கள் எத்தனை பாரத்துடன் ஜெபித்தாலும், ஜெபிக்க கேட்டுக் கொண்டவர்களின் வாழ்க்கையில் மனந்திரும்புதல் இல்லாமல்போனால் அவர்கள் யாருக்காக ஜெபிக்க கேட்டுக்கொண்டாலும் அல்லது அவர்களுக்காகவே ஜெபிக்க
கேட்டுக்கொண்டாலும் எங்கள் ஜெபத்துக்கு ஒரு பலனும் இருக்காது.
ஜெபிக்க கேட்டுக்கொள்பவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடாமல் எத்தனைபேர்
அவர்களுக்காக ஜெபித்தாலும் அது வீண்!
மற்றொரு விஷயமும் நீங்கள் அறியவேண்டும். ஜெபிக்க கேட்டுக்கொள்கிறவர்களுக்கு உண்மையான மனந்திரும்புதலின் அனுபவம் இருக்குமானால் என்னை போன்றவர்களின்
ஜெபமே தேவையில்லையே! அவர்களின் ஜெபமே அவர்களின் பிரச்சனையை நீக்கிவிடுமே! உன் விசுவாசம் உன்னை இரட்சிக்கும் என்றுதானே வேதம் கூறுகிறது.
இரட்சிக்கப்பட்ட விசுவாசி எப்போது ஜெபிக்க மற்றவர்களின் உதவியை நாடவேண்டுமென்றால் தனக்காக அல்லாமல் தன் குடும்ப பிரச்சனைக்காக, மனந்திரும்பாத புருஷன், மனைவி, பிள்ளைகள் அல்லது தன் குடும்பத்தினர் அல்லது பிரச்சனைக்குரிய தன் அலுவலகத்தில் உள்ளவர்களுக்காக ஜெபிக்கவேண்டும் என்றால் அப்போது ஊழியர்களிடம் அல்லது விசுவாசிகளிடம் ஜெபிக்க கேட்டுக்கொள்ளலாம்.
அதுவும் அவர்கள் உண்மையான ஊழியர்களா? உங்களுக்காக ஜெபிக்கிறேன் என்று அவர்கள் கூறினாலும் அவர்கள்
மொத்த ஜெபம் அல்லது ஒட்டுமொத்த ஜெபம் செய்பவர்களா? என்று அறியவேண்டும். ஜெபிக்கிறேன் என்று கூறுவது ஊழியர்களா, விசுவாசிகளா என்று அறியவேண்டும். அப்படி அவர்களைப்பற்றி அவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தைப்பற்றி அறியாமல் ஜெபகுறிப்புகளை, குடும்ப விவரங்களை அவர்களுக்கு எழுதினால் அல்லது அறிவித்தால் உங்கள் ஜெபகுறிப்பை ஊர் முழுவதும் பரப்பிவிடுவார்கள். அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும். குடும்பத்தையும் பாதிக்கும். உங்கள் உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு அவமானத்தை உண்டாக்கும். அப்படிப்பட்ட ஊழியர்களையும், ஜெப வீரர்களையும் நானும் அறிவேன். அவர்களால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டது என்பதையும் நான் அறிவேன். ஆகவே ஜெபகுறிப்பை எல்லாரையும் நம்பி அறிவிக்கக்கூடாது. அதிலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
ஆகவே யாருக்கு ஜெபகுறிப்பு அனுப்பினாலும் அவர்களைப்பற்றி தீர விசாரியுங்கள். இன்று தமிழ் நாட்டில், கேரளாவில் பெரும்பாலான வரம்பெற்ற ஊழியர் என்று கூறிக்கொள்பவர்கள் யாரும் நீங்கள் அனுப்பும் ஜெபகுறிப்புகளை கண்ணால்கூட பார்ப்பதில்லை. உதவியாளர்கள்தான் அதை பிரிப்பார்கள், உதவியாளர்கள் உங்கள் ஜெபகுறிப்புகளை
சம்பளத்துக்கு வேலை செய்யும் ஜெப வீராங்கனை, ஜெப வீரர்களிடம் கொண்டுபோய் கடிதங்களை கொட்டுவார்கள். அவர்களும் ஒவ்வொரு கடிதத்துக்கும் தனித்தனி ஜெபம் ஏறெடுக்கமாட்டார்கள். கடிதங்கள்மேல் தங்கள் கைகளை வைத்து மொத்த ஜெபம்தான் ஏறெடுப்பார்கள். இதற்காக பெரிய ஸ்தாபனமே இயங்குகிறது. ஜெபிக்க கேட்டுக்கொள்பவர்கள்
பெரும்பாலும் உங்கள் காணிக்கையை எதிர்ப்பார்ப்பவர்களாகும். உங்கள் சாட்சி கடிதங்களை தங்கள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க, அதை விளம்பரமாக்க உங்கள் கடிதங்களை எதிர்ப்பார்ப்பார்கள். இப்படித்தான் பல ஊழியர்களுக்கு நீங்கள் அனுப்பிய ஜெபக்குறிப்புகளின் நிலை இருக்கிறது. லாபத்தை எதிர்பார்த்துதான் உங்கள் ஜெபகுறிப்பை எதிர்ப்பார்க்கிறார்கள். அதனால்தான் எங்களுக்கு வரும் கடிதங்களை
நானோ அல்லாமல் என் மனைவியோ அல்லாது வேறு யாரும் அதை பிரிப்பது இல்லை, அவைகளை படிக்க நாங்கள் யாரையும் அனுமதிப்பதும் இல்லை.
பொதுவாக ஒன்றை மனதில் வையுங்கள். உங்களுக்கும், கர்த்தருக்கும் உள்ள தொடர்பிலே பிரச்சனையிருந்தால்மட்டும் மற்றவர்களின் ஜெப உதவியை நீங்கள் நாடலாம். இது விசுவாசிகளுக்கான ஆலோசனை. மனந்திரும்பின விசுவாசிகளுக்கும்
ஜெப பங்காளர்கள்
(Prayer Partner) மிக அவசியம். ஆவிக்குரியவர்களோடுள்ள ஐக்கியம் அவசியம். இந்த ஐக்கியத்துக்குள் வராதவர்கள்
இரட்சிக்கப்பட்டிருந்தாலும் சீக்கிரமே பின்மாற்றத்துக்கு சென்றுவிடுவார்கள்.
நான் இரட்சிக்கப்பட்ட (1964) ஆரம்ப நாட்களில் நான் அடிக்கடி பகிர்ந்துக்கொண்டு ஜெபிக்க உண்மை நண்பராக, சகோதரனாக, ஊழியராக கர்த்தரால் எனக்கு கொடுக்கப்பட்டவர்களில் முக்கியமானவர் டேனிஷ்பேட்டை
பெத்தேல் ஐக்கியத்தையும்,
VBSயும் உருவாக்கிய ஸ்தாபகர்
சகோ.P.சாமுவேல் அவர்களாவார். அதன்பின்
Dr.தியோடர் வில்லியம்ஸ்,
Rev.ஹக்கெட்,
Rev.கர்ட்,
Rev.மெக்கார்மெக்,
Rev.ஆப்பில் பீ,
Rev.டெஸ்ஒரல், வருகையின்தூதன் ஆசிரியர்
Rev.தேவதாசன்,
Dr.சாம் கமலேசன் அவர்களின் தாய், திருமதி.கமலேசன் அவர்கள்,
Mr.ஸ்டீபன்,
Mrs.ஹெலன் ஸ்டீபன் ஆகியவர்களாவர்.
1969ம் வருடத்துக்குபின் சகோ.DGS.தினகரன் அவர்களோடு உண்டான நெருக்கம், ஐக்கியம் மறக்க இயலாது. அவரானாலும் சரி, நானாலும் சரி எந்த ஒரு பிரச்சனைக்கும், அலுவலக விஷயமானாலும், ஊழிய விஷயமானாலும் அடிக்கடி
சேலம் அருகேயுள்ள ஏற்காடு மலையிலுள்ள காவேரி பீக் எஸ்டேட் அல்லது அந்த காலத்தில் சேலத்தில் இருந்த
துவாரகா ஓட்டல் ஆகிய இடங்களில் நானும், சகோதரன் தினகரனும் தனிமையாகவும், குடும்பமாகவும் கூடி ஜெபித்த நாட்கள் இன்பமானது. சில சமயங்களில்
சகோ.தினகரன் அவர்கள் சென்னையிலிருந்து கோவை எக்ஸ்பிரஸ் இரயிலில் சேலம் வருவதாக அறிவிப்பார். உடனே
துவாரகா ஓட்டலில் அறை எடுத்து இரயிலிலிருந்து சகோதரன் வந்தவுடன் என் மோட்டர்சைக்கிளில் ஏறி
ஓட்டல் வந்துசேர்ந்து எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் சுமார் 5 மணிநேரம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டு தொடர்ந்து ஜெபிப்போம். கோவை எக்ஸ்பிரஸ் இரயில் கோயமுத்தூர் சென்று சேலம் திரும்ப 6 மணிநேரம் ஆகும். தான் வந்த அந்த இரயிலிலேயே சகோ.தினகரன் அவர்கள் சென்னை திரும்பிவிடுவார். சுமார் 4 அல்லது 5 மணிநேர பகிர்ந்துக்கொள்வதற்கும்,
ஜெபிப்பதற்கும்மட்டும் அத்தனைதூரம் பயணப்பட்டு சென்னை திரும்புவார். அந்த ஐக்கியம் வலிமையுள்ளது. அந்த நாட்களை மறக்க இயலாது. தேவன் அனுமதிக்காத
காருண்யா கல்லூரி தொடங்கியபின் எங்கள் ஜெப ஐக்கியம் நின்றுப்போனது. அதற்குமுன் பலமுறை நானும், சகோ.தினகரனும், வருகையின் தூதன்
Rev.தேவதாசன் ஐயாவை நாகர்கோவிலுக்கு நேரில் சென்று பார்த்து பகிர்ந்துகொண்டு இணைந்து ஜெபித்து திரும்புவோம். அந்த காலத்தில் அரசாங்க பஸ்
திருவள்ளுவர் விரைவுவண்டியில்தான் நாங்கள் பயணம் செய்வோம். பயணநேரம் 14 மணிநேரம் போகவர 28 மணிநேரம் இவ்வளவு நீண்ட நாகர்கோவில் பயணம் எதற்காக? அந்த கொஞ்சநேர
ஜெப ஐக்கியத்துக்காக மட்டுமே. நாகர்கோவிலில் எங்கும் தங்கமாட்டோம், யார் வீட்டுக்கும் போகமாட்டோம். அந்த கொஞ்சநேர ஜெப ஐக்கியத்தின் இரகசியம்
இன்பம், சந்தோஷம், சமாதானம் இவை அனுபவித்த எங்களுக்குமட்டுமே தெரியும். நான் அந்த இனிய நாட்களுக்காக தேவனை துதிக்கிறேன்.
சிலசமயம்
Rev.தேவதாசன் ஐயா அவர்கள் வீட்டில் இருக்கமாட்டார். கன்னியாகுமரி கடற்கரையில் நாட்கணக்காக ஜெபத்திலும், தியானத்திலும் உபவாசத்திலும் இருப்பார். கடற்கரையில் இப்படியும், அப்படியும் நடந்துக்கொண்டே ஜெபித்துக்கொண்டிருப்பார். நாங்கள் நிற்பதைக்கூட கவனிக்கமாட்டார். நாங்களாகவே தடுத்து நிறுத்தி பேசும்போதுதான் எங்களை புரிந்துக்கொண்டு அங்கேயே மணலில் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுவார். இந்த
அனுபவங்கள் எல்லாம் மறக்க இயலாததாகும். இப்படிப்பட்ட
ஜெப ஐக்கியம்தான் சகோ.தினகரன் அவர்களை உயர்த்தியது, சகோ.தினகரன் அவர்கள் ஜெப ஐக்கியத்தில் சின்ன ஊழியன் என்றோ, பெரிய ஊழியன் என்றோ வித்தியாசம் பாராமல் அவர்களோடு பகிர்ந்துக்கொண்டு முதலில் அவர்களை ஜெபிக்க சொல்வார். அதன்பின் சகோதரன் அவர்கள் ஜெபித்து பிறகு அவரவர் இடங்களுக்கு சென்றுவிடுவோம்.
சகோ.தினகரன் அவர்கள் ஐக்கியம்
கொண்ட ஊழியர்களில் முக்கியமானவர் மறைந்த பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் ஆவார்.
பாஸ்டர்.சுந்தரம் அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தியதும் சகோ.தினகரன்தான். அப்படியே பாண்டிசேரி பாஸ்டர்.சில்வனஸ், சென்னை பாஸ்டர்.வாசு, சகோ.பக்தசிங், பாஸ்டர்.ஜீவானந்தம், தூத்துக்குடி பாஸ்டர்.மத்தியாஸ், தூத்துக்குடி
AOG பாஸ்டர்.ஆன்ரூஸ் ஆகியவர்களாவர்.
இதில் சகோ.தினகரனுடன் பகிர்ந்துக்கொண்டு ஜெபிக்கும்போது கடிந்துக்கொண்டு ஆலோசனை தரும் ஒரே ஊழியர்
Pr.சுந்தரம் அவர்களாவார். சகோதரனும் ஊழியர்களிலேயே அதிகம் மதிப்பும், மரியாதையும் கொடுப்பது
Pr.சுந்தரம் அவர்களுக்குமட்டுமே. அவர் ஒருவர்தான் ஆரம்ப நாட்களில் சகோ.தினகரனின் ஊழிய தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டி ஜெபித்தவராவார். சகோ.தினகரனின் மகள்
ஏஞ்சல் கார் விபத்தில் மரித்தபின் சகோ.தினகரனை
எச்சரித்து ஆறுதல் கூறி ஜெபித்ததையும் நான் அறிவேன். இப்படிப்பட்ட ஊழியர்களின் ஐக்கியம் நமக்கு இருந்தால் ஊழியத்திலும் சரி, விசுவாச ஜீவியத்திலும் சரி விழாமல் வாழ உதவி செய்யும். அவரவர்களின் ஜெபமே போதுமானது என்றாலும் மத் 18:19ல் இயேசுகிறிஸ்து கூறியதுபோல்:
இரண்டு பேர் பூமியில் தாங்கள் வேண்டிக் கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமைப்பட்டிருந்தால் பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்றார். உங்கள் கேள்விக்கு பதில் எழுதும்போது என் பழைய அனுபவங்கள் எல்லாம் எழுத்தாக வெளிவந்தது. உங்கள் கேள்விக்கு நன்றி.
|