கர்த்தருக்குள் அன்பானவர்களே,
உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல் கூறிக்கொள்கிறேன்.
கடந்த மாதமும், இந்த மாதமும் அநேக குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளின் பள்ளி - கல்லூரி சேர்க்கைகள் காரணமாக ஏராளமான பணத்தேவைகளை எதிர்க்கொள்ள நேரிட்டிருக்க வேண்டும். பணநெருக்கடி, பணத்தேவைகளில் கர்த்தர் உங்களுக்கு உதவி செய்திருப்பார் என்று நம்புகிறேன். பொதுவாக இந்த குறிப்பிட்ட
இரண்டு மாதங்களிலும் ஜாமக்காரன் பத்திரிக்கை தேவைகளை சந்திக்க தாமதம் ஏற்படும். ஆனால் கர்த்தரின் பெரிதான கிருபையால் இரண்டு மாத அச்சடிப்பு செலவுகளுக்கும் தாமதமானாலும் குறையேதும் இல்லாதபடி
சரியான நேரத்தில் பணவரவு உங்கள் மூலமாகவே ஏற்பட கர்த்தர் கிருபை செய்தார். உதவியவர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறேன்.
கடந்த மாதங்களில் இந்தியா முழுவதும் பேசப்பட்ட செய்தி திருவனந்தபுரம் கோவில் புதையல் - அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அந்த கோவில் இந்தியாவிலேயே திருப்பதியைவிட பணக்கார கோவிலாக பேசப்பட்டது. அந்த ஆலயத்தில் அந்த காலத்தில் கேரளாவை ஆண்ட ராஜாக்கள் அந்த ஆலயத்துக்காக சேமித்து வைத்த நகைகள், மாணிக்கம், வைடூரியம், மரகதம் போன்ற விலைமதிக்க முடியாத ஆபரணங்களையும், தங்க நாணயங்களையும் இரகசிய அறைகளில் பூட்டிவைத்து பாதுகாத்தனர். அந்தக்காலத்தில் நம் நாட்டை ஆண்ட பல ராஜாக்கள் இந்து ஆலயங்களிலுள்ள பொக்கிஷங்களை கொள்ளையடிக்கவே நம் நாட்டின்மீது போர் தொடுத்தனர். அப்படி இந்து ஆலயங்களை கொள்ளையடித்தவர்கள் முகலாய பேரரசர்களான மாலிக்காபூர், உலுக்கான், முகமதுபின் துக்ளக், பாமினி சுல்தான்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், சந்தாசாகேட், அதன்பின் வந்த பிரஞ்சுக்காரர்கள், பிரிட்டீஷ்காரர்கள் என்று பலரும் இந்து ஆலயங்களை கொள்ளையடித்தனர்.
திருவனந்தபுரம் கோவிலில் உள்ள புதையல்களை யாரும் கொள்ளையடிக்காத வகையில்
நிலவறைகளில் இரகசிய அறைகளை உண்டாக்கி சுமார் 7 அறைகளில் பல கோடி பெருமான பொக்கிஷங்களை சேமித்து வைத்திருக்கிறார்கள். இது திருவனந்தபுரத்தின் கோயிலில் 250 வருடமாக இருந்து வருகிறது. 1750ம் வருடம் கேரளாவை ஆண்ட திருவனந்தபுர மன்னன்
மார்தாண்டவர்மன் என்பவரின் காலத்தில் இந்த தங்ககாசுகளும், பொக்கிஷங்களும் அப்படியே ஆலயத்துக்கும் அவர்கள் ஆராதித்த விக்கிரகத்துக்கும் சமர்பித்து பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வந்தனர். அந்த காலத்திலேயே
சித்திரை திருநாள் என்று அழைக்கப்பட்ட பலராமவர்மன் ஆலயத்தை தாழ்ந்த ஜாதிகளும் பிரவேசிக்கலாம் என்று கட்டளையிட்டு சகல ஜாதி ஜனங்களுக்கும் இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்கும் முன்மாதிரியானர். இதற்கு உறுதுணையாக இருந்தவர் நம் தமிழ்நாட்டு ஸர்.C.V.ராமஸ்வாமி ஐயர் ஆவார்.
ஆவிக்குரிய
வாழ்க்கைக்கு தேவையில்லாத இந்த சரித்திரவிவரம் ஏன் ஜாமக்காரனில்
குறிப்பிடுகிறேன் என்றால், 250 ஆண்டுகாலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை
ஆட்சி செய்த ராஜாக்கள், இப்போது உயிரோடுள்ள மன்னர்வாரிசு சித்திரை
திருநாள் என்ற வர்மா வரை யாரும் இந்த பொக்கிஷங்களில் ஒன்றையும்
தொடவில்லை. சிலவற்றை எடுக்கவும், சொந்தமாக்கவும், உரிமை கொண்டாடவும்
இவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் ஆலயத்துக்கு என்று ஒப்புக்கொடுத்தபின்
அது கோயில் சொத்து என்று அதை யாரும் தீண்டவில்லை. தமிழில் பழிமொழி
சொல்வார்கள். "கோயில் சொத்து குல நாசம்" என்பார்கள். விக்கிரகத்தை
வணங்கும் சொத்துக்கு உரிமையுள்ள இந்த மன்னர்களுக்கே அந்த பொருள்
கோயிலை
சேர்ந்தது அதில் நாம் கை வைக்கக்கூடாது என்றக் கொள்கையை பயபக்தியோடு
பரம்பரை பரம்பரையாக கடைபிடிக்கிறார்களே!
உயிருள்ள
தெய்வத்தை வணங்கும் நம் கிறிஸ்தவ சபை பொறுப்பாளர்கள், திருமண்டல
பொறுப்பாளர்கள், பிஷப்மார்கள், மாடரேட்டர்களுக்கு அந்த தெய்வபயம் எப்படி
இல்லாமல் போனது? இதை குறிப்பிடத்தான் இந்த சரித்திர செய்தியை
குறிப்பிடவேண்டியதானது!
45 வருட என் ஊழிய அனுபவத்தில் ஒரு ஊரில் ஆராதனை முடிந்தவுடன் ஆலய காணிக்கை எண்ணும்போது 500 ரூபாய் நோட்டை மறைத்து வைத்து பிடிப்பட்டவர் உண்டு. வேறொரு ஆலயத்தில் காணிக்கை எடுத்தபின் ஆலயத்தின் கடைசியில் காணிக்கை பையோடு பாட்டு முடியும்வரை காத்திருந்தவர்களில் ஒருவர் தனக்குபின்னே யாரும் இல்லை என்று எண்ணி காணிக்கை பையில் கையைவிட்டு கத்தையாக ரூபாய் நோட்டுகளை எடுத்து தன் பாக்கெட்டில் திணித்ததை கைக்குழந்தையை வெளியில் கொண்டுபோய் ஆலயத்துக்குள் நுழையவந்த ஒரு சகோதரி அந்த நபர் செய்ததை பார்த்து அதிர்ந்து போய் அதை தன் கணவரிடம்
அதை அறிவிக்க பெரிய சண்டையே அந்த ஆராதனை முடிவில் ஏற்பட்டது. அந்த காணிக்கையை எடுத்தவர் ஏழையல்ல, நல்ல வேலையில் இருப்பவர். இப்படி எல்லாம்
CSI நம் சபையில் நடந்ததை அறிவேன்.
கோபி
செட்டிபாளையத்தில் உள்ள
CSI ஆலய கட்டுமான பணிக்காக சபை மக்களிடம் பண சேகரிப்பு நடத்திய குருவானவர் மக்கள் கொடுத்த பல லட்சங்களை ஆலயத்தில் ஒப்படைக்காமல், ஆலயமும் கட்டிமுடிக்காத நிலையில் அவர் ஆலயத்தைவிட்டே துரத்தியடிக்கப்பட்டார். திருமண்டலத்தின் கோடி ரூபாய்களை களவாடிய
பிஷப் அந்த குருவானவரை ஜெயிலுக்கு போகாதவாறு காப்பாற்றி, அவருக்கு உயர்ந்த பதவியை அளித்தும் பெரிய சபையின் குருவானவராக நியமித்தும் அவரை கவுரவித்தார் என்றால் நம்
CSI சபைகளின் நிலைமைகளை பாருங்கள்.
|
Paul Stephenson |
இந்த படத்தில் உள்ளவர்
ஸ்டீவன்சன் என்பவராவார். பிரிட்டன் நாட்டில் லண்டன் மாநகர போலீஸ் மிக உயர் அதிகாரியாவார். உலகை கலக்கிய தொலைப்பேசி ஒட்டுகேட்டல் விவகாரத்தில் இந்த மிக உயர் போலீஸ் அதிகாரியும்
உடந்தையாக இருப்பாரோ என்று ஒரு யூகத்தின்பேரில் செய்தி எழும்பியது. உடனே இவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இங்கிலாந்து பிரதமரும் வருத்தப்பட்டார். ஆனால் இவர் கூறிய பதில் என்ன தெரியுமா? பத்திரிக்கை செய்தி யூகத்தின் பெயரில் எழுதினாலும்
அவமானம் எனக்கல்ல, நான் குற்றமற்றவன் என்பது என் மனசாட்சிக்கு தெரியும். ஆனால் நான் வகிக்கும் இந்த போலீஸ்ஸின் மிக உயர்ந்த இந்த
பதவிக்கு அவமானம் உண்டாகிவிடக்கூடாதே என்றுதான் நான் ராஜினாமா செய்தேன் என்றார். ஆனால் நம்
பிஷப் - மாடரேட்டர் ஆகியவர்கள் கோடிக்கணக்கில் பண ஊழல் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டும், நீதிமன்றத்தில் நீதிபதிகளால் மோசமான வார்த்தைகளால் கண்டிக்கப்பட்டும், நீதிமன்றத்தால் கண்டனம் தெரிவிக்கப்பட்டும், கடந்த
ஒன்றரை வருடமாக தன்பதவியில் ஒட்டிக்கொண்டு உல்லாசமாக
ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் இவர்களைப்பற்றி பொதுமக்களும், மற்ற சபையினரும் என்ன நினைப்பார்கள்? அந்த லண்டன் போலீஸ் அதிகாரி பதவிக்கு காட்டிய மரியாதை இவர்களுக்கு இல்லையே! பல மாதங்களாக கோவை திருமண்டலம்,
CSI சபைகளை ஆளும் சினாட் ஆகியவைகள் செயல்படமுடியாமல் ஸ்தம்பித்துபோனதைக்குறித்து இவர்கள் யாரும் கவலைப்படாமல் தான் கைது செய்யபட்டும், அதைக்குறித்து கவலைப்படாமல் கொள்ளையடித்த கோடிகளை,
வக்கீலுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் கொடுத்துகொண்டு தினசரி நீதிமன்றங்களுக்கு போய்வருவதைக்குறித்து என்னசொல்ல?
பிஷப் - மாடரேட்டர் பதவி என்பதற்குரிய மதிப்பும் பெருமையையும் குலைத்துக் கொண்டிருக்கிறார்களே! இதற்கு ஒரு முடிவில்லையா?
கோயில் சொத்து குல நாசம் என்ற புறமதஸ்தரின் பயம், திருவனந்தபுரம் ராஜாக்கு ஏற்பட்ட பயம், இது ஆலய பணம் என்ற மரியாதையும் தெய்வபயமும் இழந்த இவர்களுக்கு இனி என்ன மரியாதை? எப்போதும் நான் எழுதுவதைபோல்
ஜெபிப்போம் என்ற வார்த்தையோடும்
CSI சபைகளின் நிலையைக்குறித்து வெட்கத்தோடும்,வேதனையோடும் முடிக்கிறேன்.
தொலைபேசிமூலம் என்னோடு தொடர்புகொள்ளமுடியவில்லை என்ற குற்றச்சாட்டு வழக்கம்போல் இப்போதும் மிகவும் அதிகம். என்னோடு தொடர்புகொள்பவர்களோடு 2 தொலைபேசிகளிலும் மாறிமாறி பேசி ஆலோசனை கொடுக்கிறேன். ஜெபிக்கிறேன். தொடர்புகொள்பவர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாவதால் செவ்வாய் - புதன்கிழமைகளில் ஒருவர்பின் ஒருவராய்பேசி ஜெபித்து முடிந்தபின் மட்டுமே அடுத்தவர்களோடு தொடர்புகொள்கிறேன். என்னோடு பேசமுடியாதவர்கள் முழுவிலாசத்துடன் இ-மெயில் மூலம் அல்லது கடிதம் மூலம் என்னோடு தொடர்புகொள்ளுங்கள். இரண்டு தொலைபேசி எண்களைக் குறித்துக்கொள்ளுங்கள்.
1) 0427-2387499, 2) 0427-2386464.
நீங்கள் ஒவ்வொருவரும்
ஆன்லைன் மூலம் பேங்க்வழி அனுப்பிய காணிக்கைகள், இ-மணியாடர் மூலம் அனுப்பிய
காணிக்கைகளையும் பெற்றுக்கொண்டேன். ரசீதும் அனுப்பப்பட்டது. யாருக்காவது ரசீது கிடைக்கவில்லையானால் உடனே எனக்கு தெரிவியுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் ஏராளமான செலவுகளுக்கு மத்தியில் ஜாமக்காரன் பத்திரிக்கை நின்றுவிடக்கூடாதே என்ற பாரத்தோடு அனுப்பிய உங்கள் ஆவிக்குரிய எண்ணத்தைக்குறித்து பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்துகிறேன், ஜெபிக்கிறேன்.
|