கடந்த ஜுன் மாத ஜாமக்காரனில் விவாகரத்து கட்டுரை மிக அருமை என்று கூறி
50 ஜாமக்காரன் புத்தகங்கள் வேண்டும், 60 ஜாமக்காரன் புத்தகங்கள் வேண்டும் என்று பலர் தொலைப்பேசியில் கேட்டார்கள். ஜாமக்காரன் அளவாக அச்சடிப்பதால் உங்களுக்கு அனுப்ப இயலவில்லை.
எந்த குறிப்பிட்ட பகுதியை மற்றவர்களுக்கு விநியோகம் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்தந்த பகுதியை
போட்டோ காப்பி (ஜெராக்ஸ்) மூலம் எத்தனை காப்பிகள் வேண்டுமானால் எடுத்து விநியோகியுங்கள்.
வாசகர்களின் எண்ணிக்கைக்குமேல் ஜாமக்காரன் அச்சடிப்பதில்லை.
சிலர் சென்னையிலிருந்தும், தூத்துக்குடியிலிருந்தும் விவாகரத்து கட்டுரை 4 மாதத்துக்கு முன் கிடைத்திருந்தால்
என் தங்கையின் குடும்பம் விவாகரத்து பெற்றிருக்காது. என் தங்கை உங்கள் பத்திரிக்கையை மிகவும் நேசிப்பவள், இரட்சிக்கப்பட்டவள். ஆனால் குடும்ப சூழ்நிலை விவாகரத்து முடிவை எடுத்து கோர்ட்டும் விவாகரத்து அளித்துவிட்டது. உங்கள் பத்திரிக்கையை நான் உடனே
FAX செய்தேன். அதை வாசித்து அவள் அழுதுவிட்டாள். இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டு அழுகிறாள். அவள் புருஷனும் மிகவும் நல்லவன். அவன் பெற்றோர் குடும்பம் இவைகள்தான் விவாகரத்துக்கு காரணம். அவர் உங்களிடம் பேசப்போவதாக கூறினாள். பேசும்போது தயவுசெய்து அவளுக்கு நீங்கள் வசனத்தின்படி ஆலோசனை கொடுத்து ஜெபியுங்கள் என்று கூறினார். இப்படி பல தொலைப்பேசி செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன.
விவாகரத்து
செய்துகொண்டவர்கள், தன் தவறை உணர்ந்து புருஷனுடன்-மனைவியும் மறுபடியும்
சேர்ந்து வாழ என்ன செய்யவேண்டும்?
சட்டம் என்ன சொல்கிறது?
வேதம் என்ன சொல்கிறது?
தயவுசெய்து விளக்குங்கள் என்று சிலர் எழுதியுள்ளார்கள்.
இந்த கட்டுரைக்கு இவ்வளவு
வரவேற்பும், தாக்கமும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த கட்டுரை மிகவும் பிரயோஜனமாக உள்ளது என்று
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, வெளிநாடுகளில் குறிப்பாக
அமெரிக்கா, கனடா போன்ற இடங்களில் ஏராளமானவர்கள் அருமையான கட்டுரை இந்த காலத்துக்கு மிகவும் தேவையுள்ள ஆலோசனை என்றெல்லாம் புகழ்ந்துள்ளார்கள். ஆனால் பலருக்கு கீழ்ப்படிய மனமில்லை. புருஷனும்-மனைவியும் சேர்ந்து வாழவும் மனமில்லை. இவர்கள் என் கட்டுரை, பிரசங்கம் நன்றாக இருக்கிறது என்று புகழ்ந்து என்ன பிரயோஜனம். சொந்த காலில் நிற்கும் தைரியம் யாருக்கு வந்தாலும் வசனத்தின்படி இணைந்து வாழவிரும்புவதில்லை. என் எழுத்து முயற்சி வீண்தானோவென்று வேதனைப்படுகிறேன்.
முகூர்த்தம் பார்க்கக்கூடாது என்று வேதம் சொல்கிறது.
வரதட்சணை வாங்கக்கூடாது என்று வேதம் சொல்கிறது என்று எழுதினாலும், பிரசங்கித்தாலும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் கீழ்ப்படிய மனம் வருவதில்லை. ஆக, என் பிரசங்கத்தை ஜாமக்காரனில் எழுதும் என் கட்டுரையை
வாசிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் அவ்வளவே! அதை கைக்கொள்ளுவதில்லை. இது மனதுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆண்டவர் கூறியதுபோல,
மனிதன் முகத்தை பார்க்கிறான், ஆனால் கடவுளோ உன் இருதயத்தை பார்க்கிறார். எனவே உங்கள் மனதில் ஆவியானவர் பேசினால் விவாகரத்து செய்தவர்கள் ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்டு குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக நடத்துங்கள். இதுதான் என் வேண்டுகோள். ஜெபியுங்கள். |