இந்திய AOG சபைகளின் ஆரம்பகால
சரித்திரமும் - வீழ்ச்சியும்

  AOG சபைகளிலும் ஊழல் என்ற தலைப்பில் 2011 ஜுன் மாத ஜாமக்காரனில் வெளியிட்ட தகவல்களை வாசித்து மிக அதிகமான கடிதங்களும், இமெயில் செய்திகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது. சிலர் ஆதரித்தும், சிலர் ஏசியும் எழுதியுள்ளார்கள். எழுதியவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். அவைகளில் சில வாசகர்களின் பார்வைக்கு வெளியிடுகிறேன்.

தங்களின் ஜாமக்காரன் பத்திரிக்கையில் 2011 ஜுன் மாத இதழில் அசம்பளீஸ் ஆப் காட் சபைகளிலும் ஊழல் என்னும் செய்தி கட்டுரையை வாசித்தேன். தாங்கள் அதில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் அனைத்தையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரம் பல விவரங்கள் தவறாய் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை தங்களுக்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகிறோம்.

  முதலாவதாக, இந்தியாவில் AOG சபைகளின் துவக்கம் குறித்த தகவல்கள் அறியவேண்டும். 1914ம் ஆண்டு அசம்பளீஸ் ஆப் காட் அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட வருடமே இந்தியாவிலும் AOG சபை துவங்கப்பட்டுவிட்டது. மேரிவீம்ஸ்சேப்மேன் என்னும் அம்மையார் முதன்முதல் AOG சபையின் மிஷனரியாக இந்தியாவிற்கு வந்தார்கள். மும்பை, பெங்களுர் போன்ற இடங்களில் ஊழியம் செய்து பின் சென்னையில் தங்கி ஊழியம் செய்தார்கள். அதன்பின் அன்றைய திருவிதாங்கூர் மக்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் திருவனந்தபுரம் வந்து ஊழியம் செய்தார்கள். 1922ம் வருடம் அவருடன் ஸ்பென்சர் மே என்னும் வேல்ஸ் தேசத்தை சேர்ந்தவர் பிரிட்டிஷ் ஏ.ஜீ (AG) மிஷனரியாக இந்தியாவுக்கு வந்து இணைந்து ஊழியம் செய்தார். அவர்கள் சேர்ந்து பெந்தேகோஸ்தே எக்காளம் என்னும் பத்திரிக்கையை நடத்தி வந்தார்கள். ஏற்கனவே இந்தியாவில் ஊழியம் செய்துவந்த இராபர்ட்குக் என்னும் சுயாதீன மிஷனரி (Independent Missionary) ஏ.ஜீ (AG) சபையில் இவர்களுடன் சேர்ந்து, 1927ம் ஆண்டு செங்கன்னூரில் மவுண்ட்சீயோன் பைபிள் இன்ஸ்டியூட் என்ற பைபிள் காலேஜை ஸ்தாபித்தார்கள்.


AOG சபை உடைந்தது - IPC சபை உருவானது

  1929ல் இராபர்ட்குக் அவர்களுடன் பாஸ்டர்.K.E.ஆபிரகாம் ஆகியோர் AG சபையிலிருந்து வெளியேறி IPC சபையை ஸ்தாபித்தார்கள். இவர்கள்தான் கேரளாவில் IPC சபை ஆரம்பிக்க காரணமானார்கள். 1926ல் இந்தியாவிற்கு வந்த ஜான்பர்கஸ் என்னும் அமெரிக்க பெந்தேகோஸ்தே மிஷனரி சில மாதங்களில் 1927ல் மாவேலிக்கரையில் பெத்தேல் வேதாகம கல்லூரியை ஸ்தாபித்தார். இதுவே உலகளவில் ஏ.ஜீ (AG) சபை ஸ்தாபனம் துவங்கிய இரண்டாம் வேதாகம பயிற்சி நிறுவனம் ஆகும். இதுதான் பிற்காலத்தில் மாவேலிக்கரையிலிருந்து புனலூருக்கு இடம் பெயர்ந்தது. பின்பு 1948ல்தான் தமிழ்நாட்டில் ஏ.ஜீ (AG) ஊழியங்கள் வளர்ந்து பெருகின.

  தமிழ்நாட்டில் ஏ.ஜீ (AG) ஊழியங்கள் 1937ம் வருடத்தில் துவங்கப்பட்டது. மிஸ்.கான்ஸ்டான்ஸ், எஸ்.ஈடி, குட் குடும்பம், ஆலிவர்போத், லவ்ரி குடும்பம் மற்றும் எட்வர்ட்ஸ் குடும்பத்தினர் ஆகியோரே AOG சபை ஊழியம் தமிழ்நாட்டில் துவங்க முக்கிய காரணமாயிருந்தவர்கள் ஆவர். ஆலிவர்போத் குடும்பத்தினர் முதலில் குன்னூரில் தங்கி ஊழியம் செய்தனர். 1947ம் வருடம் எட்வர்ட்ஸ் குடும்பத்தினர் தமிழ்நாட்டிற்கு வந்து 18 மாதம் கொடைக்கானலில் தங்கி தமிழ் படித்தனர். பின்பு தென்காசி அருகிலுள்ள கணக்கப்பிள்ளைவலசை என்னும் கிராமத்திற்குப்போய் AOG சபை ஊழியத்தை துவக்கினர். 1948ம் வருடம் பாஸ்டர்.பெஞ்சமின் அவர்களின் விருப்பத்தின்பேரில் ஆலிவர்போத் என்பவர் மதுரையில் தமிழ்நாடு வேதாகம கலாசாலையை (AOG பைபிள் காலேஜ்) துவங்கினார். முதலில் பாஸ்டர்.பாப்பச்சன் பணிக்கர், மற்றும் பாஸ்டர்.சி.டி.ஜான் ஆகியோர் இவர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் ஊழியம் செய்தனர். ஆரம்பத்தில் திருமதி.டாரிஸ் எட்வர்ட்ஸ் அவர்களே தனக்கு தெரிந்த தமிழில் தன் கணவரின் பிரசங்கங்களை தமிழில் மொழிபெயர்த்து வந்தார்கள். பின்பு தமிழ் தெரிந்த பாஸ்டர்.சி.டி.டேவிட் அவர்கள் இவர்களுக்கு மொழிபெயர்ப்பில் உதவினார்கள். 1952ம் வருடம் தென்காசி கணக்கப்பிள்ளைவலசையில் தொழிற்பயிற்சி பள்ளி (Industrial School) ஒன்று துவங்கப்பட்டது.

  பின்பு அந்நாட்களில் ஏ.ஜீ ஸ்தாபனத்தில் இருந்து ஊழியம் செய்த பாஸ்டர்.பிலிப் மற்றும் சி.டி.டேவிட் ஆகியோர்மூலம் பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களை எட்வர்ட்ஸ் தம்பதியினருக்கு பிரசங்கத்தை தமிழில் மொழிபெயர்த்து உதவ தென்காசிக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார். 1951ம் வருடத்தில்தான் பாஸ்டர்.ஜெயராஜ் அவர்கள் ஊழியத்தில் இணைந்து 3 வருடம் வேதாகம கல்லூரியில் படித்து பின் பாஸ்டரானார். அவருக்கு முன்பாகவே பாஸ்டர்.கே.சி.ஆண்ட்ரூஸ் மற்றும் பாஸ்டர்.ஆதாம்துரை ஆகியவர்கள் AOG சபை ஸ்தாபனத்தில் வந்து சேர்ந்துவிட்டனர். இதற்கிடையில் வெளியிடப்படமுடியாத சில காரணங்களுக்காக பாஸ்டர்.ஜெயராஜ் அவர்கள் AOG ஊழியத்தைவிட்டு தன் சொந்த ஊருக்கே போய்விட்டார். அதன்பின் பாஸ்டர்.பிலிப் அவர்கள்தான் பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களைத்தேடி கண்டுபிடித்து மறுபடியும் அழைத்துக்கொண்டு வந்தார்கள். பின் எட்வர்ட்ஸ் அம்மையாரின் வற்புறுத்தலின் பேரில் அம்மையாரின் வீட்டில் உதவி செய்துவந்த ராஜம்மாள் என்பவரை பாஸ்டர்.ஜெயராஜ் அவர்கள் திருமணம் செய்துகொண்டார். இத்திருமணமே இவரின் வாழ்க்கையின் திருப்புமுனையாய் அமைந்தது. இவர் திருமணத்துக்கு பிறகுதான் இவர் AOG சபைகளின் ஸ்தாபனத்தின் முடிசூடா நிரந்தர தலைவராவதற்கும் காரணமாக அமைந்தது. ஆரம்ப முதலே வெள்ளைக்கார பெண் மிஷனரிகள் வெள்ளைக்கார பாஸ்டர்கள் ஆகியவர்களின் மொழிபெயர்ப்புக்கு உதவியதால் அவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டதால் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். அதனால் பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களை வெள்ளைக்கார ஊழியர்கள் மிகவும் நேசித்தார்கள். ஆகவே தடையின்றி வெளிநாட்டு உதவிகளையும், மிஷனரிகளின் ஆதரவையும் பெறுவதற்கும் அதுவே காரணமானது. அதேசமயம் AOG ஸ்தாபனத்தில் பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களின் பங்களிப்பையும், உழைப்பையும் நிச்சயம் யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அதேசமயம் தன் சொந்த மைத்துனராகிய பாஸ்டர்.ஆதாம்துரை உட்பட வேறு எவரும் தலைமைத்துவத்தில் தலையெடுக்க பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களும், அவருக்கு முழு ஸ்பான்ஸசராயிருந்த எட்வர்ட்ஸ் அம்மையாரும் அனுமதிக்கவே இல்லை.

  தென்இந்திய தேவசங்கம் South India Assemblies of God மும்பையில் 2701 என்ற பதிவு எண்ணுடன் 1951-52ல் 1860 சங்கப் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டதாக இதுவரை நம்பப்பட்டு வந்தது. இந்த பதிவு எண்ணைக்காட்டி 1999ல் பாஸ்டர்.டி.சி.ஜார்ஜ் அவர்களின் தீவிர முயற்சியால் பெரும் பணச்செலவில் வெளிநாட்டு பணம்பெறும் அங்கீகாரமான FCRA, 12AA வருமானவரி விலக்கு போன்றவை பெறப்பட்டன. ஆனால் அதற்கு ஆதாரமாக காண்பிக்க உபயோகித்த சான்றிதழ் உண்மையானதுதான் என்று சான்றளித்த நோட்டரி பப்ளிக் அதை ட்ரூ காப்பி (உண்மை நகல்) என்று அறிவித்தார்கள். அந்த சான்றிதழ் அளித்தவர்கள் ஆரம்பகால ஒரிஜினலை பார்த்துதான் அப்போது சான்றளித்திருக்கவேண்டும். ஆனால் நான் ஒரிஜனலை பார்க்கவில்லை என்று மும்பை சேரிட்டி கமிசனர் முன் கூறி, பொய்சாட்சியம் அளித்ததால் அவர்களின் கோபத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளானார்கள். பிற்பாடு இந்த குறிப்பிட்ட எண்ணுடன் கூடிய பதிவு, குறிப்பிட்ட அதே வருடத்தில் மேற்கூறிய பெயருடன் பதிவு செய்யப்படவில்லை என்று மும்பை சேரிட்டி கமிசனர் எழுத்துமூலம் தெரிவித்துவிட்டார். இதைக்குறித்து AOGயின் ஒவ்வொரு தலைவரும், ஒவ்வொருவிதமாக பேசி வருகின்றனர். இன்று அகில இந்திய ஏ.ஜீ செயலாளராக இருக்கும் ரெவ.டி.ஜே.சாமுவேல் அவர்கள் பேசும்போது, "நான் SIAG செயலாளராய் இருந்ததுவரை, அறிக்கைளை எல்லாம் மும்பையில் ஒழுங்காக பதிவுசெய்து வந்தேன். ஆனால் எனக்குப்பின் வந்த பாஸ்டர்.பி.எஸ்.பிலிப்பின் சோம்பல்தனத்தால்தான் அரசாங்க பதிவை AOG இழக்கநேரிட்டது" என்கிறார். தற்போதைய AOG சபைகளின் செயலாளர் வி.டி.ஆபிரகாம் அவர்கள் பேசும்போது (ரெவ.பி.டி.ஜான்சன் காலத்திலேயே) 30 வருடங்களுக்கு முன்பாகவே அரசாங்க பதிவை நாம் இழந்துவிட்டோம். ஆனால் நாங்கள் இதற்கு காரணம் அல்ல. பி.டி.ஜான்சனுக்கு முன்பிருந்த தலைவர்களின் அறியாமையும், கவனக்குறைவும்தான் காரணம் என்கிறார். சமீபத்தில் சென்னையில் சுமார் 100 பேரைக்கூட்டி நடத்தப்பட்ட அவசரக்கூட்டத்தில் பேசிய தமிழ் பிரதேச பொருளாளர் ரெவ.சுவர்ணராஜ் அவர்கள் பேசும்போது "பதிவு காலாவதியாகாமல் இப்போதும் இருப்பதும் உண்மை, அதை நாம் சுமார் 30 வருடங்களுக்கு முன்பே இழந்ததும் உண்மை, அதற்காக நாங்கள் தற்போது மும்பை பதிவாளருக்கு ரூபாய் ஏழு லட்சங்கள் லஞ்சமாக கொடுத்திருக்கிறோம். இன்னும் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால்போதும், இந்த 2011 ஜுலை 13ற்கு முன், நாங்கள் அன்றைய காலங்களில் கிடைத்த 2701 என்னும் அதே பதிவு எண்ணுடன் அரசாங்க பதிவை திரும்பப் பெற்றுவிடுவோம்" என்று ஆணித்தரமாக கூறுகிறார். இப்படி இரண்டுவிதமாக முரண்பாட்டோடு இவர்கள் கூறும் பதிலில் எது உண்மை என்று இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை! என்று சம்பந்தப்பட்ட பாஸ்டர்கள் கூறுகிறார்கள்.

  AOG சபைகளின் தலைவராய் இப்போது இருக்கும் பாஸ்டர்.பி.எஸ்.இராஜமணி அவர்களோ இனிமேல் இந்த பதவிக்கு நான் போட்டியிடப்போவது இல்லை என்றுமட்டும் கூறி, அதற்கான வேறு விளக்கம் எதுவும் பேசாமல் மௌனம் சாதிக்கிறார். அகில இந்திய தலைவர் பாஸ்டர்.மோகன் அவர்களிடம் இது குறித்து கேட்டப்போது SIAG, என்பதும் Assemblies of God India என்ற இரண்டும் வேறுவேறு அமைப்புகள் ஆகும். மேலும் இதைக்குறித்து அறியவேண்டுமானால் SIAG தலைவர்களிடம்தான் கேட்கவேண்டும் என்று சமாளிக்கிறார். இவர்களில் யாரை நம்புவது? என்று தெரியவில்லை என்று பலர் சலித்துக்கொள்கிறார்கள்.

  ஒன்று மட்டும் உண்மை, யாரோ ஒருவர் 2701 எண்ணும் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு ஒரு போலியான பதிவுச்சான்றிதழை தயாரித்து, இந்திய அரசாங்கத்தையும், AOG சபைகளையும் ஏமாற்றிவிட்டார் என்பதுமட்டும் தெளிவாகிறது! சீக்கிரம் அதுவும் ஆதாரபூர்வமான தகவல்களுடன் நிச்சயம் வெளியாகலாம்.

  தென்இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா உள்பட இந்த AOG ஸ்தாபனம் இன்று முற்றிலும் தமிழ்நாட்டு தலைவர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. தங்கள் ஓட்டுவங்கியை தரமற்ற விரிவு வேதாகமப் பள்ளிகள் மூலம் (Extension Bible Schools) அதிகரித்து, தங்கள் பணபலத்தையும் உபயோகித்து, அனைத்து AOG மாநாடுகளையும் சென்னை புது வாழ்வு ஏ.ஜீ சபையிலேயே நடத்தி, மீண்டும் மீண்டும் தாங்களே தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட ஞானமாக ஏற்பாடுகளை செய்துகொள்கிறார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. இது எந்த ஒரு ஆவிக்குரிய சபையிலும் காணப்படாத விநோதமான பெந்தேகோஸ்தே சபை அரசியல் ஆகும். ஒவ்வொரு வருடமும் AOG சபைக்காக வரும் வெளிநாட்டு பணங்கள், கிட்டத்தட்ட அனைத்துமே பாஸ்டர்.மோகனுக்குத்தான் வருவதாக சொல்லப்படுகிறது. தேவையோடிருக்கும் மற்ற பாஸ்டர்களுக்கோ, சபைகளுக்கோ கொடுப்பதற்கு பணம் இவர்களின் உள்ளத்தில் எண்ணம் இல்லை. சபைகளுக்கு பண உதவி கேட்டால் ஜெபம் பண்ண ஆலோசனை கொடுக்கப்படுகிறது!

  சபை ஊழியத்தைத்தவிர, வேறு எந்த ஊழியமும் யாரும் செய்யக்கூடாது என்று வாதிடும் இந்தத் தலைவர்கள், தங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் பெருத்த வருமானம் பெற்றுத்தரும் பள்ளிக்கூடங்கள், அனாதை இல்லங்கள், விபச்சாரிகளை பராமரிக்கும் இல்லங்கள், கருணை இல்ல ஊழியங்கள் என்று ஏராளமான சேவை ஸ்தாபனங்களை வைத்துக்கொண்டு கோடிகோடியாக வருமானம் பெறுகிறார்கள்!

  வருடாவருடம் தங்கள் ஸ்தாபன விபரங்களை பண வரவு-செலவுகளை அரசாங்க பதிவாளருக்கு தெரிவிக்கவேண்டும் என்பது சட்டம்! ஆனால் அதை எந்த பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று இதுவரை தலைவர்களாகிய இவர்களுக்கு தெரியாது என்ற செய்தி ஆச்சரியமாக இல்லை! காரணம் அப்படி ஒரு பதிவு எந்தக்காலத்திலும் நடக்கவில்லை!

  யார் வேண்டுமானாலும் இதை மும்பைக்கு ரிஜிஸ்டர் ஆபீசுக்கு நேரில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். உலகம் முழுவதும் பிரயாணம் செய்வது எப்படி? எப்படி குடும்பம் நடத்தவேண்டும்? எப்படி சபை நடத்தவேண்டும்? என்றெல்லாம் பிரசங்கிப்பதில் மிகவும் தேர்ச்சியடைந்த பாஸ்டர்.பி.எஸ்.இராஜாமணி அவர்கள் மற்றும் பாஸ்டர்.டி.மோகன் ஆகியோருக்கு AOG ஸ்தாபன நிர்வாகம் எப்படி செய்வது? என்று இவ்வளவு காலம்தெரியாமல்போனது என்பது ஆச்சரியம்தான்! "கூரைமேல் கொள்ளி வைத்துக்கொண்டு நிற்பவன்தான் எங்கள் வீட்டிலேயே நல்ல பையன்" என்பதுபோல, எல்லாரையும் ஒரே வார்த்தையில் அடக்கிவைத்து இத்தனைகாலம் AOGஐ ஆட்சி செய்த பாஸ்டர்.ஒய்.ஜெயராஜ்தான் மிக சிறந்த நிர்வாகி என்று இன்று புகழப்படுகிறார். AOG சபைகளின் இன்றைய நிர்வாக நிலைமைகளை கண்டீரா? இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகித்து தங்கள் மனவேதனையை சபை முக்கியஸ்தர்கள், விசுவாசிகள் சிலர் வெளிப்படுத்துகின்றனர்.

  25,000 சபைகளை உருவாக்கும் AOG சபைகளின் கவர்ச்சித்திட்டம்பற்றி இன்றுவரை எந்த ஏ.ஜீ சபை போதகருக்கும் தெரியாது! இது முழுக்கமுழுக்க பாஸ்டர்.டி.மோகன் அவர்களின் பிரம்மாண்ட பேராலயத்திற்கு பணம் சேகரிக்க உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் என்று சிலர் கூறுகிறார்கள். இது இந்தியாவில் வேறு யாரும் அறியாதபடி செயல்பட்ட பாஸ்டர்.டி.மோகன் அவர்களின் இரகசிய திட்டம் ஆகும் என்றும் கூறப்படுகிறது. அவரிடம் இருக்கும் சென்னை வேதாகமக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களை காண்பித்து, அவர்கள் மூலமும், சபை விசுவாசிகளின் மூலமும் தொடங்கப்படும் வீட்டு சபைகளுக்காகத்தான் அப்பணம் பெறப்படுவதாக பிரபல அமெரிக்க மிஷனரி.டேவிட் கிராண்ட் என்பவர் அடித்து கூறுகிறார். ஏற்கனவே AOGக்கு வந்த பணத்தைக்குறித்து கேள்வி கேட்டதால்தான் பாஸ்டர்.JJY.அருள் அவர்கள்மீது பாஸ்டர்.மோகனுக்கு இவ்வளவு கோபம் உண்டானது என்று எல்லாராலும் கூறப்படுகிறது.

  ஜாமக்காரனில் குறிப்பிட்டதுபோல AOG சபைகளில் 6 பாஸ்டர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படவில்லை முழுவதுமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் AOG ஸ்தாபனத்தைவிட்டே நீக்கப்பட்டுள்ளார்கள். வேறு 5பேர் 2 வருடம் AOG மாநாட்டிற்கு வரக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணம் மும்பைக்குப்போகும் பணத்தைப்பற்றி இவர்கள் கேள்விக் கேட்டதனால் மட்டுமல்ல, காழ்ப்புணர்ச்சியும் காரணமாகும். பாஸ்டர்.அருள் அவர்களை (3 வருடம் அல்ல) 5 வருடம் AOG தேர்தலில் நிற்கக்கூடாது என்று நியாயமற்ற நிலையில் அறிவிக்கப்பட்டதற்கும் இதே காரணம்தான். தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததற்க்காக 5 பேர் தடை செய்யப்பட்டுள்ளனர். வேறு குற்றச்சாட்டு எதுவும் இவர்கள்மேல் இல்லை என்பது குறிப்பிட்டதக்கதாகும். நிர்வாகக்குழுவில் இருந்த காலங்களில் பாஸ்டர்.ஒய்.ஜெயராஜ் குடும்பத்தினர் செய்யும் சர்வாதிகார தவறுகளையும், பாஸ்டர்.மோகனின் கோடிக்கணக்கான பணக்கொள்ளையையும் குறித்து நிர்வாகக்குழுவில் இருந்துகொண்டு பாஸ்டர்.அருள் அவர்கள் கேள்வி கேட்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக திட்டமிட்டு சதிசெய்து, இவரை முதலில் ஒரு வருடமும், பின்பு உலகில் எந்த சட்டத்திலேயும் இல்லாத அளவு 5 வருடம் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் அநீதியாக முடிவெடுத்ததே தங்களை யாரும் கேள்வி கேட்டக்கூடாது என்ற ஒரே காரணம்தான் என்று பலரால் கூறப்படுகிறது.

  இப்படியாக AOGயின் தரம், மற்றெந்த சபைக்கும் இயலாத நற்பெயர் AOG சபைகளிலிருந்து வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது.

இதை யார்? தூக்கி நிறுத்தபோகிறார்கள். பரம்பரையாக AOG சபைகளை ஆண்டுகொண்டு இருக்கும் இவர்கள் கையிலிருந்து AOG ஆட்சி யாரால் விடுவிக்கப்படும்? என்று விவரம் அறிந்த AOG சபையினர் ஆவலாக காத்திருக்கின்றனர்.

ஜாமக்காரன் வாசகர்கள் AOG சபையில் இருந்தால் உங்கள் சபைகளுக்காகவும், முக்கிய தலைவர்களுக்காகவும் ஜெபியுங்கள். மற்ற ஜாமக்காரன் வாசகர்களும் ஜெபிப்போம்.


நான் கோடீஸ்வரன் அல்ல - பாஸ்டர்.அருள்
Pastor.ARUL

உங்கள் ஜாமக்காரனில் இரண்டுமுறை நான் பெரிய கோடீஸ்வரனாக என்னை குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்குள்ள கடன்கள் எவ்வளவு என்று வெளிஉலகமும், நீங்களும் அறிய வாய்ப்பில்லை!

மற்றபடி AOG சபை சம்பந்தமாக என் மீதுள்ள நீதிமன்ற வழக்கு பாஸ்டர்.மோகன் அவர்களின் விவகாரம் குறித்து எழுதியது அனைத்தும் உண்மை.

அது சம்பந்தமான வழக்கு அடுத்த வாரம் நீதிமன்றத்தில் வருகிறது. ஆகவே அதைக்குறித்து இப்போது விளக்க விரும்பவில்லை.


அரசாங்க பதிவு புதுபிக்கப்பட்டுவிட்டது

அகில இந்திய AOG சபை அரசாங்க அங்கீகாரம் புதுபிக்கப்பட்டுவிட்டதாக பாஸ்டர்.மோகன் அவர்கள் கூற அதை உங்களுக்கு அறிவிக்கிறேன்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM