அந்திகிறிஸ்து எங்கிருந்து வருவான்?
(சகோ.வின்சென்ட்செல்வகுமார் எழுதிய கட்டுரைக்கு மாற்று கருத்து)
  (Rev.Dr.A.XAVIER)

  1 யோ 4:3,2:8,மத் 24:24ன்படி, அநேக அந்திகிறிஸ்துவின் ஆவிகள் இப்பொழுதே கிரியை செய்கின்றன. ஆயினும் 2 தெச 2:6-8ன்படி, சபை இரகசிய வருகையில் எடுப்பட்ட பின்னரே வெளிப்படுவான். இவன் எங்கிருந்து வருவான்? சிலர் இஸ்ரேலிலிருந்தும், சிரியாவிலிருந்தும், ரோமிலிருந்தும் எழும்புவான் என்று கணிக்கின்றனர். வேதம் சொல்வதைப் பார்ப்போம்.

தானி 2ல் உள்ள நேபுகாத்நேச்சார் சொப்பனம், தானி 7ல் உள்ள தரிசனம், வெளி 13ல் உள்ள தரிசனம் ஆகியவைகளை முதலில் கவனிப்போம்.

சரித்திரப்படி பாபிலோன், மேதிய-பெர்சிய, கிரேக்கம், ரோம் என்னும் நான்கு சாம்ராஜ்யங்கள் எழும்பிவிட்டன. கடைசி ரோம ராஜ்யம் கி.பி.364ல் கிழக்கித்திய ரோம் என்றும், மேற்கத்திய ரோம் என்றும் இரண்டாய் பிரிந்தது. மேற்கத்திய ரோம் கி.பி.471ல் வீழ்ந்துபோனது. கிழக்கத்திய ரோம் கி.பி.1453ல் வீழ்ந்துப்போனது. இதைத்தான் சாவுக்கேதுவான காயம் என்று வெளி 13:3 ல் சொல்கின்றது. இந்த காயம் சொஸ்தமாக்கப்பட்டு பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடு இதைப்பார்த்து பின்பற்றும் காலம் வரப்போகிறது. அதுதான் விழுந்துப்போன ரோம ராஜ்யம் திரும்பவும் உயிர்மீட்சி அடைவதாகும். இது குறித்து வெளி 17:8-11ஐ வாசித்தால் எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சிய, கிரேக்க என்ற 5 பேரும் விழுந்தார்கள். 6வது ரோம ராஜ்யம் வெளிப்படுத்தல் விசேஷம் எழுதும்போது இருக்கிறது. 7வது சாம்ராஜ்யம், அதாவது Revival Rome Kingdom (காயம் சொஸ்தமாகி ஆச்சரியமாய் நிற்கும்) எழும்பப்போகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட ரோமராஜ்யம்தான் தானி 2ல் சொல்லப்பட்ட 10 விரல்களுக்கொத்த 10 ராஜாக்கள் இணைந்து, இரும்பும் களிமண்ணும்போல எழும்புவதாகும். இதுதான், தானி 9:27ல் சொல்லப்பட்ட 7 ஆண்டுகள் ஆளப்போகும் வரப்போகிற பிரபுவாகிய அந்திக்கிறிஸ்து என்கிற மிருகம். இந்த 10 ராஜாக்களின் கூட்டமைப்பாகிய Revival Rome Kingdom-தான் வெளி 17:16ன்படி போப் மார்க்கத்தையே அழித்துப்போடும். முதல் ஆண்டுகள், இந்த கூட்டமைப்பாகிய ரோம ராஜ்யமாகிய மிருகம் யூதர்களோடு உடன்படிக்கைப்பண்ணி தேவலாயத்தை கட்ட உதவும். இரகசிய வருகையில் விடுப்பட்டுப்போன கிறிஸ்தவர்களை துன்புறுத்தும். கடைசி ஆண்டில் தானி 7:8ல் சொன்ன சின்னக்கொம்பு (10ல் 3ஐ தள்ளி ஒன்று) எழும்பும். இதுதான் 7வதிலிருந்து தோன்றும் 8வது மிருகம். இதுதான் மகா பயங்கரமான அந்திக்கிறிஸ்துவாகிய மிருகம். இப்போதுதான் இஸ்ரேலருக்கு இக்கட்டு காலம் (எரே 30:7). மத் 24:15ல் சொல்லப்பட்ட பாழாக்குகிற அருவருப்பு இதுதான். இந்த நிலையில்தான் இயேசுவாகிய கல் உருண்டுவந்து (தானி 2:44) அவனையும், அவனோடுள்ள ராஜ்யத்தையும் அழித்துப்போடும் (வெளி19).

ஆக, வேத தீர்க்கதரிசனப்படி, புதுப்பிக்கப்பட்ட 10 ராஜாக்களடங்கிய ரோம ராஜ்யமே வரப்போகும் அந்திகிறிஸ்தென்னும் மிருகமென்றும், அதிலிருந்து எழும்பும் ஒரு கொம்புதான் மகா பயங்கரமான அந்திகிறிஸ்து என்றும் அறியலாம். இந்த புதுப்பிக்கப்பட்ட ரோம ராஜ்யத்தில் Revival Rome Kingdom நிச்சயமாய் இஸ்ரேல் ராஜ்யம் இருக்காது என்றும், இஸ்ரேல் ராஜ்யத்திலிருந்து அந்திகிறிஸ்து எழும்பப்போவதில்லை என்றும் இந்த அந்திகிறிஸ்து யூதருக்கு ராஜாவாகமாட்டான் என்றும் திட்டமும், தெளிவுமாய் உணரமுடிகிறது. தானி 11:36லிருந்து தன்னிஷ்டப்படி செயல்படும் ராஜா எழும்புவானென்றும், தேவகோபம் தீருமட்டும் அவன் ஆட்சி கைக்கூடிவரும் என்பதால், இவன்தான் உலக கடைசி ராஜாவாகிய அந்திகிறிஸ்து என உணரலாம். தானி 11:36-45ஐ வாசித்தால் மறுபடியும் வடதிசை (சிரியா), தென்திசை (எகிப்து), ராஜாக்களுக்கு யுத்தம் என்று பார்க்கிறோம். தானி 11:40-43ஐ வாசித்தால், அந்திகிறிஸ்து சிரியா தேசத்திலிருந்து எழும்புவான் என தெரிகிறது. வெளி 13:1-2,17:12-17 வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. 2 தெச 2ல் சொல்லப்பட்டபடியே இவன் பரிசுத்த ஆலயத்திலிலேயே சிங்காசனம் போடுவான் என்று தானி 11:45ல் சொல்கின்றது. இவனுக்கு இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே முடிவு உண்டு (வெளி 19:19-21, தானி 7:11,26,27: 9:27, 2 தெச 2:8).

எசே 21:25:27ஐ வைத்து, சிலர் இதில் வருபவன்தான் அந்திகிறிஸ்து என்கின்றனர் அப்படி அல்ல! இவன் இஸ்ரேலிலே எழும்பும் கடைசி ராஜாவாகிய சிதேக்கியாவாகும். அவனுக்குப்பின் தேவனால் ஏற்படுத்தப்படும் யூதர்களுக்கான ராஜா, இயேசு வரும்வரை இஸ்ரேலிலே யாரும் இல்லை. யோ 5:43ஐ வைத்துக்கொண்டு வேறொருவன் என்று போடப்பட்டது அந்திகிறிஸ்துவாகிய இஸ்ரேல் ராஜா என்கின்றனர். இது தவறு! அந்த வசனத்தை முழுமையாய் படியுங்கள்.

முதல்முறையாய், பிதாவின் வல்லமை, மகிமை, மாட்சிமையோடு இயேசு, யூதர்களின் அரசாங்க ராஜாவாய் வரவில்லை, இரட்சகராய் வந்தார். அப்படியே வரப்போகும் வேறொருவனும், யூதர்களின் அரசாங்க ராஜாவாய் வரப்போவதில்லை என்பது உறுதியாகும். அவன் பிசாசின் வல்லமையோடு மகிமையோடு வருவான். மேலும் தானி 11:36-38ல் சொல்லியிருப்பது, அந்திகிறிஸ்துதான் என்றும், வசனம் 37ல் தன் பிதாக்களின் தேவன் என்ற பதம் உபயோகிக்கப்பட்டுள்ளதால், நிச்சயமாய் இந்த அந்திகிறிஸ்து யூதகுலத்தான்தான் என்றும் சிலர் கணிக்கின்றனர். அலெக்சாண்டரின் ஆதிக்கம் தானி 8:22ன்படி நான்காய் பிரியும். அதிலுள்ள சிரியா, எகிப்து நாடுகளுக்கிடையேயுள்ள யுத்தம்பற்றி தானி 11:5-19 வரை சொல்லப்பட்டுள்ளது. தானி 8:9ல் உள்ள சின்னக்கொம்பாகிய அந்தியோகஸ் எபிபேன்ஸ் என்ற ராஜா செய்யும் அட்டகாசம்தான் தானி 11:20-35ல் சொல்லப்பட்டுள்ளதே தவிர அந்திகிறிஸ்துபற்றி அல்ல. தானி 11:36 முதல் எழுதப்பட்டுள்ளதுதான் அந்திகிறிஸ்துவைப்பற்றியது ஆகும். தானி 11:37ல் தன் பிதாக்களின் தேவன் என்றில்லை. தன் பிதாக்களின் தேவர்கள் என்று தமிழில் உள்ளது. இஸ்ரேலருக்கு ஒரே தேவன்தான் உண்டு. தேவர்கள் இல்லை! மேலும் இந்த வார்த்தை Scofield Bible-ல், "Gods of his fathers" என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "God" என்று போடாமல், "Gods" என்று அந்நிய தெய்வங்களை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளதால் இவன் யூதாவிலிருந்து எழும்பும் அந்திகிறிஸ்து அல்ல என்றும், அவனைப்போலவே அட்டகாசம் பண்ணும், சிரியா தேச அந்தியோகஸ் எபிபேன்ஸ்தான் இவன் என்றும் அறியலாம்.

வரப்போகும் மேசியா ஆவிக்குரிய ராஜாவாய் மட்டுமல்ல, யூதர்களின் ராஜாவாகவும், வெளிப்படுவார் என்று இஸ்ரேலர் நம்பினர். முதல் வருகையில் ஆவிக்குரிய ராஜாவாய் வந்தவர், இரண்டாம் வருகையில் யூதர்களின் ராஜாவாய் வரப்போகிறார். எனவே அதற்குமுன் வரப்போகும் அந்திகிறிஸ்து யூதராஜா அல்ல, புறஜாதியிலிருந்து எழும்பும் ராஜா. இப்படியான புறஜாதி ராஜாக்களின் காலம் அர்மெகதோன் யுத்தத்தோடு முடியும் என்று வேதம் சொல்லியிருக்க, (லூக் 21:24,ரோ 11:25-29) அந்திகிறிஸ்து இஸ்ரேலிலிருந்து எழும்புவான் என்பது வசனத்திற்கு ஒவ்வாதது ஆகும். வரப்போகும் அந்திகிறிஸ்துவை இஸ்ரேலர், மேசியா என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று வசனமே இல்லை. எரே 3:20-21ஐ வாசித்தால் இஸ்ரேல் தேசத்தை புறஜாதி ராஜாக்கள் மிதிப்பார்கள் என்றும் இறுதியில் இயேசுவே ஆள்வார் என்றும் அறியலாம்.

ஆகவே, வரப்போகும் அந்திகிறிஸ்து Revival Home Kingdom ராஜாக்கள் உள்ள சிரியாவிலிருந்துதான் எழும்புவான் என்று கணிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி யூதர்களிலிருந்து எழும்புவதாக வசன ஆதாரமே இல்லை எனலாம். இந்த அந்திகிறிஸ்து ஆட்சியில் நாம் இராதபடிக்கு ஆயத்தமாவோம்! ஆயத்தமாக்குவோம்!! இயேசு சீக்கிரம் வருகிறார்!!

(2011 ஏப்ரல் மாத ஜாமக்காரனில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் இது எழுதப்பட்டது.)
- விசுவாச முழக்கம். மே 2011 (பக்கம் 3)

மற்றொரு மாற்று கருத்து

  அந்த அந்திகிறிஸ்து தலைப்பிலான செய்தியில் பக்கம் 25ல் எசே 21:25-27க்கு (சகோ.வின்சென்ட் செல்வகுமார்) கொடுத்த விளக்கம் சரியானதாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வசனம் 25 . . . . சிதேக்கியா ராஜா தேவனுக்கு விரோதமாக, ஊழியர்களுக்கு விரோதமான ஆட்சி செய்து வந்த நேரத்தில் இந்த தீர்க்கதரிசனம் வந்தது.

எரே 37:2, எரே 37:17, எரே 38:6 . . . . ஆகவே எசே 21:25 . . . . . . அக்கிரமத்துக்கு முடிவு வருங்காலத்திலே . . . . என்பது இஸ்ரவேல் - யூதா - தென் தேசத்தின் அநேக இராஜாக்களினால் உண்டான பாவ அக்கிரமங்கள் எல்லாம் முடிவு பெற்று சிறையிருப்புக்கு போகுங்காலத்தில் சீதேக்கியாவின் "நாள் வந்தது" எசே 21:26. ராஜரீகம் யூதா வம்சத்தைவிட்டு எடுத்துப்போடப்படுகிறது. இது எப்படி முடியும் ஆதி 49:10ன்படி சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதில்லை, நியாயப் பிரமாணிகன், அவன் பாதங்களைவிட்டு ஒழுவதுமில்லை . . . என்றல்லவா பைபிள் சொல்கிறது என கேட்கலாம். அதற்குதான் எசே 21:27ல் விளக்கம் சொல்லப்படுகிறது. அதைக் (யூதாவின் ராஜரீகம்) கவிழ்ப்பேன். . . கவிழ்ப்பேன். . . கவிழ்ப்பேன் (பாபிலோனுக்கு சிறையிருப்பாக கொண்டு போகப்படுகிறார்கள்). உரிமைக்காரணானவர்(மேசியா: இயேசுகிறிஸ்து: யூதருடைய இராஜா) வரும்மட்டும் அது செங்கோல்: (யூத ராஜரீக ராஜாக்கள்) ஆளுகை இல்லாதிருக்கும். அவருக்கே அதை கொடுப்பேன் (இயேசுவுக்கே ராஜா பட்டம்) என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.

மேற்சொன்ன விளக்கத்தின்படி யூதாவைவிட்டு செங்கோல் எடுக்கப்பட்டது. சீதேக்கியா அதன் கடைசி இராஜா.

- Rev.I.Livingston R.Durai,BSc.,BD., CSI Church,Pottalpatti, Tirunelveli.Dt.

Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM