AOG சபையினாரின் ஒரு கடிதம்: பெந்தேகோஸ்தே சபைகளில் இரண்டு வார்த்தைகள் மிகவும் பிரஸ்தாபம்: 1) அக்கினி, 2) அந்நியபாஷை. இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அக்கிரமம் சொல்லி முடியாதது.
எங்கள் சபைக்கு கன்வென்ஷனில் பேச ஒரு பிரபல ஊழியர் வந்திருந்தார் அவர் பிரசங்கம் செய்யும்போது நடுநடுவே
அந்நியபாஷை பேசினார். அவர் பாஷை மிகவும் விநோதமாக இருந்தது. ஜெபவேளையில் அவர் நீண்ட நேரம் பேசிய பாஷை படுபயங்கரமாக இருந்தது. நான் எங்கள் தலைமை பாஸ்டரிடம் கேட்டேன். பாஸ்டர் நீங்கள் இத்தனை வருடம் பேசும் பாஷைக்கும், நாம் எல்லாரும் பேசும் பாஷைக்கும், இந்த கன்வென்ஷன் பிரசங்கியார் பேசும் பாஷைக்கும்
சத்தத்திலும், வார்த்தைகளிலும் இத்தனை பெரிய வித்தியாசம் காணப்படுகிறதே இது ஏன்? என்று கேட்டேன். அப்போது என்னோடு வேறு இரண்டு நபர்களும்கூட இருந்தார்கள்.
பாஸ்டர் கூறினார்: அது அவருக்கு கர்த்தர் கொடுத்த விசேஷ வித்தியாசமான வரமாக இருக்கும் என்று பதிலளித்தார். அவர் பதில் எங்களுக்கு திருப்தியாக இல்லை, என்னோடுகூட இருந்தவர்கள் என்னிடம் பேசும்போது பாஸ்டர் கூறிய பதில் சரியில்லை. அதுமட்டுமல்ல, நான், நீ பேசும் பாஷைகளும் சரியல்ல என்றுதான் எனக்கு தோன்றுகிறது என்று கூறியவுடன் அட! எனக்கு ஏற்பட்ட சந்தேகமே உனக்கும் ஏற்பட்டுள்ளதே! இவைகளை யோசித்து நாங்கள் சோர்ந்துபோனோம். இரவு நான் வீட்டில் என் மனைவியிடம் நடந்த விவரங்களை கூறினேன். உடனே அவள்
ஆவியானவரை சந்தேகப்படாதிருங்கள் என்றாள்.
நான் ஆவியானவரை ஒருகாலும் சந்தேகப்படவில்லை. ஆனால் அந்த கன்வென்ஷனில் பேசிய பாஸ்டர் பேசிய பாஷை
நம் பாஸ்டர் மோகன் பேசும் பாஷை, நானும், நீயும் மற்ற நண்பர்களும் பேசும் அல்லது பேசிய பாஷையைத்தான் சந்தேகப்படுகிறேன் என்றேன். உடனே என் மனைவி கூறினார்.
டாக்டர்.புஷ்பராஜ் அவர்களின் ஜாமக்காரனை நீங்கள் படித்ததால்தான் இப்படி குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்றாள்.
சரி, நீ பேசும் பாஷையில் உனக்கு திருப்திதானா? நீயே சொல்! பாஷையில் நீ கர்த்தரிடம் பேசியது என்ன? அல்லது உனக்கு பதிலாக ஆவியானவர்தான் பாஷைமூலம் உன் வாய்வழியாய் பேசினார் என்று எல்லாரும் கூறுவார்களே, அப்படியே வைத்துக்கொண்டாலும் உன் வாய் வழியாய் ஆவியானவர் பேசியது உனக்கு விளங்கினதா? என்றேன். அப்பப்பா! என்னை குழப்பாதீர்கள்! ஆவியில் நிறைந்து பாஷைகள் பேசி நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றாள். அதன்பின் என் மனைவியின் உற்சாகத்தை கெடுக்க நான் விரும்பவில்லை. அநேக நாட்கள் கர்த்தரின் பாதத்தில் இவைகளைக்குறித்து மிகவும் யோசித்தேன். என் சபையைச் சேர்ந்த சில குடும்பங்களோடு இவைகளைக்குறித்து பேசி பகிர்ந்துக்கொண்டேன். நீண்ட நாட்கள் நாங்கள் கூடி அடிக்கடி இதைக்குறித்தே பேசிக்கொள்வோம்.
ஒருநாள் சபைக்குள் சில பிரச்சனைகள் எழும்பியது. சபையின் வயதான மூத்த அங்கத்தினர் பாஸ்டரிடம் அவர் மகனைப்பற்றி
சில புகார்களை கூறினார். அதை அறிந்துக்கொள்ள நாங்கள் சிலராக அவர் வீட்டுக்கு போய் பேசினோம். அப்போதுதான் பாஸ்டர் மகனின் சாட்சியில்லா சில காரியங்களை குறித்து பாஸ்டரிடமே அவர் புகார் கூறிய விவரம் அறிந்தேன்.
சபையின் அந்த மூத்த விசுவாசி மேலும் எங்களிடம் கூறியதாவது, ஒரு ஊழியர் ஆவிக்குரியவரா இல்லையா? என்பதை ஆவியானவரே, நமக்கு விளங்க வைக்கவேண்டும். ஆகவே நீங்கள் நன்றாக ஜெபித்து
பாஸ்டர்.மோகன் அவர்களின் மகன் நடத்தும் ஆங்கில ஆராதனையில் ஒருமுறைபோய் பங்குகொள்ளுங்கள். அப்போது நீங்கள் பல விஷயங்களை விளங்கிக்கொள்வீர்கள். நம் சபையின் ஆவிக்குரிய வீழ்ச்சியைக்குறித்தும், நம் சபையில் ஆரம்பத்தில் இருந்த தேவஆவியானவரின் அசைவுக்கும் இப்போது சபை அழிவை நோக்கி போய்கொண்டிருக்கும் ஆபத்தைக்குறித்தும் நீங்களும் அறியமுடியும் என்றார். இதை கூறியவர் சென்னை
Little Mount Assembles of God சபையின் ஆரம்பகால முதிர்ந்த அங்கத்தினராவார், தன் சபையைக்குறித்த பாரம் உள்ளத்தின் வேதனை அவர் முகத்தில் தெரிந்தது.
நான் ஒரு பட்டதாரி, என் மனைவியும் ஒரு பட்டதாரி. ஆனாலும்
AOG சபையில் நடக்கும் ஆங்கில ஆராதனையில் இதுவரை கலந்துகொண்டதில்லை. முதிர்ந்த அந்த அங்கத்தினர் கூறியதை என் மனைவியிடம் கூறினேன். உடனே இந்த வாரமே நாம் ஆங்கில ஆராதனையில் பங்குக்கொள்வோம் என்று கூறியபோது என் மனைவியின் உள்ளத்தில் புகைந்துக்கொண்டிருந்த போராட்டத்தை அன்று அவர் புறப்பட்ட வேகத்திலிருந்து விளங்கிக்கொள்வதாக இருந்தது.
என் நண்பர்களின் குடும்பத்தினருக்கும் தொலைபேசிமூலம் இவ்விவரத்தை அறிவித்தேன். நாங்கள் எல்லாரும் ஆங்கில ஆராதனையில் பங்குகொண்டோம்.
அன்றுதான் ஆவியானவர் இந்த வாலிபர்களிடம் சிக்கிக்கொண்டு படும்பாட்டை நேரில் காண முடிந்தது. வாலிபர்களும், வாலிப பெண்களும் நிதானம் இழந்து மேடையில் பாடும்பாட்டும், வாத்திய கருவிகளினால் உண்டான சப்தத்தால் ஏற்பட்ட போதையும் இணைந்து
கஞ்சா அடித்தவர்கள்போல பேசிய அந்நியபாஷை, பாஸ்டரின் மகன்
பாஷை என்ற பெயரில் பேசிய சப்தம், ஆபாச வார்த்தைகள் போன்ற உச்சரிப்போடுகூடிய அந்நியபாஷையும், அவர்கள் ஆடிய ஆட்டம் வெளிநாட்டு கடைகளில் (பார்) ஆடும் நடனம்போல அமைந்திருந்ததையும், உச்சக்கட்டத்தில் சபையில் இருந்த வாலிபப்பெண்களை மேடைக்கு அழைத்து பாடலுக்கு ஏற்றபடி ஆட உற்சாகப்படுத்தியதையும் நேருக்குநேர் காணமுடிந்தது.
இதை எழுதும் நான் கூறுகிறேன்,
பிழையான அந்நியபாஷை எப்படியிருக்கும் என்று யாராவது அறியவேண்டுமானால் சென்னை
AOG சபையில் ஆங்கில ஆராதனையில் கலந்துக்கொண்டால் விளங்கும்.
அன்று இரவு
என் மனைவி கண்ணீர்விட்டு அழுது ஜெபித்தாள். ஆண்டவரே, எங்கள் சபையை காப்பாற்றும், எங்கள் சபை வாலிபர்களையும், வாலிபப் பெண்பிள்ளைகளையும் காப்பாற்றும் என்று அவளோடு நானும் சேர்ந்து ஜெபித்தேன். இதே அனுபவம் என்னோடு, அந்த ஆங்கில ஆராதனையில் கலந்துக்கொண்ட குடும்பங்களுக்குள்ளும் ஏற்பட்டது.
இதை எழுதுகிற நாங்கள்
AOG சபையில் பல வருடமாக அங்கத்தினர்களாக இருக்கிறோம். என் மகன் இரட்சிக்கப்பட்டது இதே சபையில்தான். நாங்கள்
AOG சபையை விட்டுவிலகுவதாக இல்லை. ஆனால், நீங்கள் ஜாமக்காரனில் சுட்டிக்காட்டிய
AOGயின் தலைமையில் ஏற்பட்ட ஊழல், சர்வாதிகார போக்கு, அதிகார ஆணவம் எல்லாவற்றையும் நீங்கள் வெளிப்படுத்தியதால் எங்கள் சபை முதியவர்கள் மூலமாக பல விவரங்களை கேட்டு நாங்கள் அறியலானோம்.
நீங்கள் எழுதியதை எங்கள் சபை மூப்பர்களோடு பகிர்ந்துக்கொண்டோம். மதுரையில் உள்ள
AOG அங்கத்தினர்களுடனும், திருச்சியில் உள்ள
AOG அங்கத்தினர் சிலரோடும் பகிர்ந்துக்கொண்டோம். நீங்கள் எழுதியதில் பல மிகையானதும், பிழையானதுமாகும். என்றாலும் எழுதிய விவரங்கள் உண்மை என்று அறிந்துக்கொண்டோம். எழுதிய உங்களுக்கு நன்றி.
AOG சபையைப்பற்றி இப்படி இதுவரை யாரும் எழுதியதில்லை? (AOG அரசாங்க அங்கீகாரம் புதுபிக்கப்பட்டுவிட்டது என்று கேள்விப்பட்டோம்). |