யார் அந்த அந்திக்கிறிஸ்து?
அந்திக்கிறிஸ்து பிறக்கும் இனம்
Selected

"இயேசு தாம் பிறப்பதற்கு யூத குலத்தைத் தேர்ந்தெடுத்ததைப்போல, அந்திக்கிறிஸ்துவும் யூத குலத்தில்தான் பிறப்பானா?" இந்த கேள்விக்கு பதிலைப் பார்ப்பதற்கு முன்பாக யூதர்களின் மனோபாவத்தைப்பற்றிப் பார்த்து விடுவது உத்தமம்.

  தன் இனம் அல்லது ஜாதியின்மேல் பற்றுக்கொண்ட எத்தனையோ மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். பெண் கொடுப்பதிலும், பெண் எடுப்பதிலும் மாத்திரமல்ல, தண்ணீர் குடிப்பதில்கூட ஜாதி பார்க்கிற ஆட்கள் இருக்கிறார்கள். உயிரே போகிற மாதிரியான தாகமானால்கூட தங்கள் வீட்டுக்கு வந்துதான் தண்ணீர் குடிப்பார்களேயொழிய வழியில் கண்ட இடத்தில் தண்ணீர் குடித்துவிடமாட்டார்கள். அது தீட்டு என்று நினைப்பவர்களும் உண்டு.

  பெண் கொடுத்து எடுப்பதிலும்கூட தங்கள் ஜாதிக்குள்ளேயே கிளை, அந்த கிளைக்குள் இலை என்றெல்லாம் ஜாதி வித்தியாசங்களைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். பெண் குதிர்ந்து, பின் உதிர்ந்து போகிறவரைக்கும் வரன் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். உருவத்தை வைத்துக்கூட ஜாதி பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள்.

  இந்தியாவில் ஜாதி பாகுபாடு பார்க்கிறவர்களுக்கு பஞ்சமில்லை, என்றதாலும் யூதர்களோடு ஒப்பிட்டால் இவர்கள் எல்லாம் மிதவாதிகள் என்பீர்கள். யூதர்களுக்கு இந்த விஷயத்தில் தீவிரம் ஜாஸ்தி. இவர்களுக்குள் ஜாதி இல்லை, ஆனால் இனவெறி உண்டு. ஜாதி வேறு, இனம் என்பது வேறு (ஜாதி - Caste, இனம் - Race) குடிப்பதற்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் வறட்டுக் கௌரவத்துக்கும், இனப்பெருமைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் யூதர்கள். யூதர்களுக்கு தாங்கள் மாத்திரமே கடவுளின் நேரடி வாரிசுகள் என்ற எண்ணமும் கொஞ்சம் தூக்கலாகவே உண்டு. இயேசுவின் மூலம் நாங்களும் கடவுளின் பிள்ளைகள்தான் என்று விவாதிப்பீர்களேயானால் வேறு வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். அதை எவ்வளவு விளக்கினாலும் நம்பமாட்டார்கள்.

  பிற இனத்தாரை ஒருவேளை மதித்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தங்கள் யூத மதத்தைப் பின்பற்ற முன்வரும் பிற இனத்தைச் சோந்தவர்களுக்கு தேவாலயத்தில்கூட தனியிடம் கொடுத்து வைத்திருந்தார்களேயொழிய தங்களுடன் சேர்ந்து அவர்கள் தேவனை ஆராதிக்க அனுமதிக்கமாட்டார்கள். தங்களிடமிருந்து பிரிந்துபோய் புறஜாதியினருடன் சம்மந்தம் கலந்த இஸ்ரவேலின் மற்றைய இனத்தாரை சமாரியர் என்று சொல்லி ஒதுக்கி வைத்ததுடன், அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகவும் பாவித்தார்கள். இதனால்தான் இயேசு சமாரியப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததைக்கூட ஆச்சரியமாகப் பார்த்தார்கள். இயேசு நல்ல சமாரியன் கதை என்றெல்லாம் சொன்னபோதும்கூட அதைக் கேட்டுக் கொண்டார்களேயொழிய அவர் அந்த கதையை சொன்ன நோக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வளவு ஏன்? ஆதி அப்போஸ்தலர்களையே எடுத்துக்கொள்ளுங்களேன். கர்த்தரால் அழைக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் எல்லாம் பண்ணப்பட்டு கர்த்தருடைய ஊழியத்தை செய்ய ஆரம்பித்த பின்பும்கூட, புறவினத்தாரின் வீடுகளில் சாப்பிடுவதைத் தீட்டாகத்தான் கருதினார்கள் (கலா 2:12-13). பின்னாட்களில் உண்மையை உணர்ந்து கிறிஸ்துவுக்குள் யூதர் என்றுமல்ல, கிரேக்கர் என்றுமல்ல என்று புரிந்துக்கொண்டாலும் துவக்கத்தில் பாரம்பரிய யூதர்களைப்போலத்தான் இவர்களும் மற்றவர்களைத் தீட்டாகக் கருதினார்கள்.

தங்களைக் கர்த்தர் அபிஷேகித்ததைப்போலவே மற்றவர்களையும் அபிஷேகம் பண்ணுகிறார் என்பதுகூட துவக்கத்தில் இவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. புறஜாதியினருக்கு பேதுரு சுவிசேஷம் அறிவித்து திரும்பினபோது யூதர்களான மற்ற அப்போஸ்தலர்கள் அதைக்குறித்து பேதுருவிடம் தர்க்கம் செய்தார்கள். பேதுருவும் அவர்களுக்கு நீண்ட விளக்கம் கொடுக்கவேண்டியதாயிருந்தது (அப் 11:1-3). கிறிஸ்துவை அறிந்த சீடர்களுக்கே மற்ற இனத்தவரை ஏற்றுக்கொள்வது இத்தனை கஷ்டமாக இருக்குமானால் மற்ற யூதர்களின் மனோபாவம் எப்படியிருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்.

தங்கள் இனத்தைச் சேராத ஒருவரை தங்களுக்கு சகமனிதராகவே ஏற்றுக்கொள்ள மறுக்கும் யூதர்கள் புறஜாதியைச் சேர்ந்த ஒருவரை தங்களுக்கு ராஜாவாக எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? ஏன் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்? யூதர்களை ஆண்ட பார்வோன் முதல் ரோம ராயன்கள் வரைக்கும் பலரையும் ராஜாவாக ஏற்றுக்கொண்டுதானே இருந்திருக்கிறார்கள்? என்பீர்கள். ஒரு ராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பது என்பது வேறு. ஒருவரை ராஜாவாக என்று ஏற்றுக்கொள்வது வேறு. நீங்கள் சொன்ன பார்வோன் முதல் ரோமர்கள் வரைக்கும் யார் ஒருவரும் யூதர்களால் தங்களுக்கு ராஜாவாக முடிசூட்டப்பட்டவர்கள் கிடையாது. அவர்கள் தங்கள் படைபல பராக்கிரமத்தால் தங்களை ராஜாவாக்கிக்கொண்டார்கள். அவ்வளவுதான். யூதர்களை சுயாதீனமாக ஒருவரை ராஜாவாக தேர்ந்தெடுத்து முடிசூட்டும்படி சொன்னால் அவர் எத்தனைதான் வல்லவராகவும், நல்லவராகவும் இருந்தாலும் அவர் தங்கள் இனத்தவராயில்லாத பட்சத்தில் அவரை தங்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தமாட்டார்கள்.

  இனிவரப்போகும் அந்திக்கிறிஸ்துவின் பணிகளைப்பற்றி வேதம் சொல்லும் செய்திகளில் பெரும்பான்மையானவை யூதர்களோடு சம்மந்தப்பட்டவையாகவே இருக்கின்றன. யூதர்களின் அரசியல், யூதர்களின் சமுதாயம், யூதர்களின் மதம் போன்ற எல்லாவற்றிலும் அந்திக்கிறிஸ்துவுக்கு தொடர்பு இருக்கிறது. இதை அந்திக்கிறிஸ்து செய்யவேண்டுமானால் அவன் யூத இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தால்மட்டுமே சாத்தியம். வரப்போகும் அந்திக்கிறிஸ்து யூத இனத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பான் என்று யூதர்களின் மனோபாவத்தை மாத்திரம் வைத்துச் சொன்னால் போதாது. வேதத்தில் இதுபற்றி என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் பார்த்துவிடவேண்டும்.

வேதத்தில் அந்திக்கிறிஸ்துவைப்பற்றி அநேக இடங்களில் மறைவாகவும், பல இடங்களில் வெளியரங்கமாகவும் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கட்டுரையின் துவக்கத்தில் நாம் பார்த்ததைப்போல, வேதத்தில் காட்டப்பட்டுள்ள மனிதர்களில் சிலர்கூட வரப்போகிறவனாகிய அந்திக்கிறிஸ்துவுக்கு நிழலாட்டமாகக் காட்டப்பட்டிருக்கிறார்கள். சில சம்பவங்கள்கூட அந்திக்கிறிஸ்துவின் காலத்திற்கு நிழலாட்டமாகக் காட்டப்பட்டுள்ளது. இதை கவனமாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது வேதாகமத்தில் அந்திக்கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிற ஒரு பகுதியை வாசித்துப் பார்க்கலாம். எசேக்கியேலின் புத்தகத்தில் 21:25-27 வசனங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

எசேக்கியேல் 21:25-27. இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்துக்கு முடிவுவரும் காலத்தில் உன்நாள் வந்தது. பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு, அது இனி முன்போலிராது. தாழ்ந்தவனை உயாத்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன். அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன். உரிமைக்காரனானவர் வரும்மட்டும் அது இல்லாதிருக்கும். அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற காரியங்களை பெரிதாக ஒன்றும் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. மேலோட்டமாகப் பார்த்தாலே அர்த்தம் புரிகிறது. இல்லையா? இந்த பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளைக் கொஞ்சம் எளிமைப்படுத்திப் பாருங்கள். விஷயம் விளங்கும். வசனம் 25ஐ எடுத்துக்கொள்ளுங்கள். இங்கே, ஓர் அதிபதி அல்லது ஓர் ஆளுநரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அதிபதி ஆளும் தேசம் - இஸ்ரவேல். அவனுடைய குணாதிசயம் - அவபக்தி, துன்மார்க்கன். அவனுடைய முடிவு காலம் - அக்கிரமத்துக்கு முடிவு வரும் காலம்.

இந்தப் பகுதியை அவசரமாக வாசித்துப் பார்த்தால் ஏதோ நடந்துமுடிந்த சரித்திரத்தைப்பற்றி சொல்லப்பட்டதைப்போலக் காணப்பட்டாலும், அது உண்மையில் கடைசிக்காலத்தில் நடக்கப்போகிற காரியத்தையே முன்னறிவித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. வசனத்தில் காட்டப்பட்டிருக்கும் காலக்குறிப்பைப் பாருங்கள். "அக்கிரமத்துக்கு முடிவு வரும் காலம்". அக்கிரமத்துக்கு முடிவு வரும் காலம் என்பது கடைசிக்காலத்தைத்தானே குறிக்கிறது? தானியேலின் புத்தகத்தில் அந்திக்கிறிஸ்துவைப்பற்றிக் குறிப்பிடும்போது, பாதகரின் பாதகம் நிறைவேறும் காலத்தில் வெளிப்படுவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தானியேலின் புத்தகத்திலும், எசேக்கியேலின் புத்தகத்திலும் சொல்லப் பட்டிருப்பவற்றை சேர்த்துப் பார்த்தால் நமக்குத் தெரியவரும் விஷயம் இதுதான். அக்கிரமக்காரர்களின் அக்கிரமங்கள் எல்லாம் நிறைவேற்றப்படும் கொடிய காலத்தில் அந்திக்கிறிஸ்து தோன்றுவான். அந்த அக்கிரமங்களுக்கு முடிவு வரும் காலத்தில் அவன் அழிக்கப்படுவான். எசேக்கியேலின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த அக்கிரமத்தின் காலத்தில் இஸ்ரவேலை ஆளும் அதிபதியாக அந்திக்கிறிஸ்து இருப்பான். அவன் பார்வோனைப் போலவோ, அல்லது நேபுகாத்நேச்சாரைப் போலவோ தன் பராக்கிரமத்தால் யூதர்களை அடிமைப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு ஆளுநராக தன்னை ஏற்படுத்திக்கொள்கிறவனாக இருக்கமாட்டான், மாறாக, அவன் யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களால் யூதாவுக்கு அதிபதியாக ஏற்படுத்தி வைக்கப்பட்ட ஒரு ஆளுநராகவே இருப்பான்.

  அந்திக்கிறிஸ்து வரும்போது யூதர்கள் அவனை ஏற்றுக்கொள்வார்கள் என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். வாசித்துப்பாருங்கள். யோவான் 5:43ஐ.

யோவான் 5:43: நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். இங்கே இயேசு சொல்லியிருக்கும் யூதரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறொருவன்தான் அந்திக்கிறிஸ்து என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். யூதர்களுக்கு அதிபதியாக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிபதியாக இருக்கவேண்டுமானால் அது ஒரு யூதனாகத்தான் இருக்கவேண்டும். இயேசுவை இன்றளவும் யூதர்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம். இயேசு முழுமையான யூதரல்ல என்று அவர்கள் நினைத்ததேயாகும். இயேசு ஒரு முழுமையான யூதன்தான் என்பதை நிரூபிக்கும் முயற்சியாகத்தான் சுவிசேஷத்தில் அவருடைய வம்சாவளிப் பட்டியலையும் சேர்த்து எழுதியிருக்கிறார்கள். யூதர்கள் தங்களுக்கு எத்தனைதான் ஒருவர் உதவி செய்தாலும் அவரை மதிப்பார்களேயொழிய, அவர் யூதராயிருந்தால் மாத்திரமே அவரை ஏற்றுக் கொள்வார்கள். வரப்போகும் அந்திக்கிறிஸ்துவை அவர்கள் மனப்பூர்வமாக தங்கள் அதிபதியாகவும், ஆளுநராகவும் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் அவன் யூதனாய்ப் பிறந்தால்தான் முடியும். இரண்டாவது ஆதாரமாக நாம் தானியேல் 11ம் அதிகாரத்தில் அந்திக்கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் காரியத்தைப் பார்க்கலாம். இதற்காக நீங்கள் தானியேல் 11:36-38 வரைக்கும் உள்ள வசனங்களைப் படிக்கவேண்டும்.

தானியேல் 11:36-38: இராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்தத் தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான். கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைக்கூடிவரும், நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும். அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்தீரிகளின் சிநேகத்தையும், எந்தத் தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னை பெரியவனாக்கி, அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களாலும் கனம்பண்ணுவான். வேதத்தில் மிகவும் வெளியரங்கமாக அந்திக்கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லும் வேத பகுதி இதுதான். இதில், அந்திக்கிறிஸ்துவின் குணாதிசயங்களும் அவன் செய்யப்போகும் பணிகளும் சொல்லப்பட்டுள்ளன.

இதில் அந்திக்கிறிஸ்துவின் குணாதிசயங்களாக சொல்லப்பட்டுள்ள காரியங்கள்: தன்னிச்சையாக காரியங்களைச் செய்வது, தன்னைத்தானே உயர்த்திக்கொள்வது, தேவனுக்கு விரோதமாக பேசுவது, தேவனை மதியாமலிருப்பது, பெண்களின் சிநேகத்தை விரும்பாமலிருப்பது.

அவனுடைய பணிகளாக சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்: எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை உயர்த்துவது, ஆச்சரியமான காரியங்களைப் பேசுவது, புதிதாக ஒரு தேவனை உருவாக்குவது. இந்த வேதப்பகுதியில் அந்திக்கிறிஸ்துவின் குணங்களும், பணிகளும் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்குத் தேவையான வேறொரு விஷயமும் சொல்லப்பட்டுள்ளது.

வசனம் 37ல் தன் "பிதாக்களின் தேவன்" என்கிற பதம் உபயோகிக்கப்பட்டிருக்கிறதை கவனிக்கவேண்டும். இந்த வார்த்தைதான் அந்திக்கிறிஸ்து யூதகுலத்தில் பிறப்பதைச் சுட்டிக்காட்டும் வார்த்தை. தமிழ் வேதாகமத்தில் இந்த வசனம், தன் பிதாக்களின் தேவர்களை என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், ஆங்கிலம் மற்றும் மூலமொழி வேதாகமங்களில் தன் பிதாக்களின் தேவன் என்கிற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Daniel 11:37 : தானியேல் 11:37
Neither shall he regard the God of his fathers, nor the desire of women, nor regard any god: for he shall magnify himself above all.

தன் பிதாக்களின் தேவன் என்கிற வார்த்தை அந்திக்கிறிஸ்து யூத குலத்தைச் சேர்ந்தவனாக வெளிப்படுவதையே காட்டுகிறது. காரணம், தன் பிதாக்கள் என்கிற வார்த்தை மாம்சத்தின்படி அவன் பிறக்கும் குலத்தின் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களையே குறிக்கும். தன் பிதாக்களின் என்கிற பதம் பழைய ஏற்பாடு முழுவதிலும் யூத குலத்தைச் சேர்ந்தவர்களுக்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தங்கள் பிதாக்களின் தேசம், தங்கள் பிதாக்களின் கல்லறை, தங்கள் பிதாக்களின் தேவன் என்கிற பதங்கள் எல்லாமே ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்ற முற்பிதாக்களைக் கொண்ட இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடைசியாக, அந்திக்கிறிஸ்துவுக்கு உபயோகப்படுத்தப்படும் அந்திக்கிறிஸ்து என்கிற பெயரே அவன் யூத குலத்திலிருந்து வருகிறவன் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. அந்திக்கிறிஸ்து என்று சொல்லப்படும் வார்த்தைக்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு. ஒன்று கிறிஸ்துவுக்கு விரோதமானவன், இன்னொன்று போலியான கிறிஸ்து. இவன் தன்னை கிறிஸ்துவைப்போலக் காண்பித்துக் கொள்வதினாலேயே யூதர்கள் அவனை வரப்போகிற மேசியாவாக ஏற்றுக்கொள்வார்கள். அவனுடைய போலித்தனம் வெளிப்படும் நாட்கள் வரைக்கும் அவனை தங்கள் மேசியாவாகவே நம்புவார்கள். வெளிப்படப்போகும் அந்திக்கிறிஸ்து கிறிஸ்துவின் போலியான மாதிரி என்பதால் அவன் கிறிஸ்துவைப்போலவே தன்னையும் யூதகுலத்திலிருந்தே வெளிப்படப்பண்ணவேண்டும். வேறொரு குலத்தில் பிறந்த ஒருவரையும் யூதர்கள் கிறிஸ்து என்றோ, தங்கள் மேசியா என்றோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

  உண்மையான மேசியாவாகிய இயேசு கிறிஸ்து வந்துப்போனதை அவர்கள் (யூதர்கள்) இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குக்காரணம், மேசியாவைப்பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரியங்கள் எல்லாம் இயேசுவுக்குப் பொருந்தவில்லை என்று அவர்கள் தவறாக நினைப்பதுதான். வேதத்தில் மேசியாவைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் காரியங்கள் எல்லாம் ஆவிக்குரிய அர்த்தமுள்ளதாகும். ஆனால் அதை யூதர்கள் மாம்சத்துக்குரியதாக கருதுவதால்தான் இயேசுவை அவர்களால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை. புரிந்துக்கொள்ளாததினால்தான் இயேசுவை அவர்கள் மேசியா என்று ஒத்துக்கொள்வதில்லை. ஓர் உதாரணத்துக்கு, இயேசு ஜனங்களுடைய பாவங்களை நீக்கி அவர்களை பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக வந்தார். ஆனால், யூதர்கள் விடுதலை என்கிற பதத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு மேசியா என்பவர் தங்கள் தேசத்திற்கு நிரந்தரமான விடுதலையை பெற்றுத்தந்து தங்களை உயர்த்துவார். மேசியா வருவதன் நோக்கமே அதுதான் என்று கருதுகிறார்கள் இதுதான் மாமிச பிரகாரமான கருத்து ஆகும்.

இயேசுவிடம் இதுபற்றி ஜாடைமாடையாக விசாரித்தபோதுகூட அவர், என்னுடைய ராஜ்ஜியம் இவ்வுலகத்துக்குரியதல்ல என்று சொல்லிவிட்டார். அவர் பரலோக ராஜ்ஜியத்தைக்குறித்து பேசிக்கொண்டிருக்க, யூதர்கள் மேசியா என்பவர் பூலோக ராஜ்ஜியத்தை தங்களுக்கு தருபவராக வருவார் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். அதுதான் சிக்கல்.

  மேசியா என்பவர் ஆவிக்குரிய ராஜா என்று வேதத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட இவர்களோ மேசியா தங்களுக்கு இவ்வுலகத்துக்குரிய ராஜாவாக வெளிப்படுவார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஆவிக்குரிய காரியங்களை மாம்சத்துக்குரிய காரியமாக கருதிப் பார்ப்பதால்தான் மெய்யான மேசியா வந்துபோயும், இனிமேல்தான் அவர் வருவார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது விஷயத்தில் ஆபத்தே இதுதான். ஆவிக்குரிய காரியத்தை மாம்சத்துக்குரியதாக நினைத்து சிந்தித்துக்கொண்டிருந்தால் நடக்கவேண்டியது கண்ணெதிரே நடந்தாலும் அது தெரியாமல் போய்விடும். ஆவிக்குரிய காரியங்களை ஆவிக்குரிய கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.

  இரண்டாம் வருகை காரியத்தில்கூட நாம் அவர் வருகையைப்பற்றி சொல்லப்பட்டிருக்கும் காரியங்களை லாஜிக், அது இது என்று மாம்சத்துக்குரியதாக எண்ணி தியானித்துக்கொண்டிருந்தால் எதுவொன்றும் கண்ணெதிரே நடந்தாலும் புரிந்துக்கொள்ளமுடியாமல் போய்விடும். கவனம்!

யூதர்கள் மேசியா விஷயத்தில் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு காரியங்களையும் நுணுக்கமாக ஒப்பிட்டுப் பார்த்தேதான் மேசியா என்று ஒப்புக்கொள்வார்கள். ஒருவர் தங்களுக்கு தேசத்தை தந்துவிட்டார் என்பதற்காக மாத்திரம் அவரை மேசியா என்று ஒப்புக்கொண்டுவிடமாட்டார்கள். அப்படி ஒப்புக்கொள்வதாயிருந்தால் 1948ல் யூதா தனி நாடாக விடுதலைபெற்றபோது, அதன் விடுதலைக்கு பாடுபட்ட யாராவது ஒருவரை அவர்கள் மேசியா என்று ஒப்புக்கொண்டிருந்திருக்கலாமே! அப்படி நடக்கவில்லையே!

அவர்கள் ஒருவரை மேசியா என்று ஒப்புக்கொள்வதற்கு பல காரியங்களை அடையாளமாக வைத்திருக்கிறார்கள். அவை ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் இல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் வேதத்தின் அடிப்படையிலேயே அடையாளமாக வைத்திருக்கிறார்கள். அந்த அடையாளங்கள் எல்லாம் பொருந்தினால்தான் அவரை தங்கள் மேசியா என்று ஏற்றுக்கொள்வார்கள். அப்படி மேசியாவின் அடையாளங்களாக அவர்கள் வைத்திருப்பதில் பிரதானமானது அவர் பிறப்பு பற்றியது. வாசித்துப்பாருங்கள் மத்தேயு 2:4-6.

மத்தேயு 2:4-6.
அவன் (ஏரோது) பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி வரச்செய்து கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

அதற்கு அவர்கள்: யூதாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார். அதேனென்றால், யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல, என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது (மீகா 5:2) என்றார்கள். கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் கிறிஸ்துவானவர் பிறந்துவிட்டார் என்று சொன்னவுடன் யூதர்கள் கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி வேதத்தைக்கொண்டு பொருத்திப்பார்க்கிறதை கவனித்தீர்களா? இதைத் தவிரவும், மேசியா தாவீதின் வம்சத்தில் பிறப்பார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது (ஏசாயா 11:2). எரேமியா 30:21ல் மேசியாவைக்குறித்து சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனத்தில் மேசியா யூதர்கள் நடுவிலிருந்து எழும்புவார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

எரேமியா 30:21: அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார். அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன். அவர் சமீபித்து வருவார். என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தை பிணைப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார். யாரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கு இதுமாதிரி நூற்றுக்கணக்கான அடையாளங்களை யூதர்கள் தங்கள் மனதிலே நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொருந்துகிறதா என்று பார்த்துதான் அவர்கள் மேசியா என்று ஒருவரை ஏற்றுக்கொள்வார்களேயொழிய, மற்றபடி அவர்களுடைய எந்தப் பாராக்கிரமத்தையும், வலிமையையும் பார்த்து ஏற்றுக்கொண்டு விடமாட்டார்கள். எனவே,வரப்போகிற அந்திக்கிறிஸ்து என்கிற போலியான மேசியா யூதர்கள் எதிர்ப்பார்த்திருக்கும் எல்லா மாம்சத்துக்குரிய அடையாளங்களையும் உடையவனாகத்தான் வெளிப்படுவான். யாரும் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பிவிடாதபடிக்கு பார்த்து பார்த்து மேசியாவுக்குரிய எல்லா விஷயங்களும் தனக்கு பொருந்துகிற மாதிரி இருக்கும்படிக்கு கவனமாயிருப்பான். ஒரிஜினல் ஆட்களைவிட வேஷம் போடுகிறவர்கள்தானே தங்களைக்குறித்து கவனமாயிருக்கவேண்டும்!.

  அதில் பிரதானமான அடையாளம் வரப்போகிற மேசியா யூதர்கள் நடுவிலிருந்தே எழும்புவார் என்பதே! அப்படிப் பார்த்தால் அந்திக்கிறிஸ்து யூத குலத்தில்தான் பிறப்பான் என்பது ஓரளவு யூகிக்கமுடிகிறது.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM