விசேஷ ஜெபம் தேவை

ஜப்பானில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, சுனாமி பேரழிவு, எரிமலை தாக்கம் இவைகளில் அகப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்காக ஜெபிக்கவும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வீடிழந்துபோனார்கள். சில பெரிய தொழிலதிபர்களின் தொழிற்சாலையே இருக்கும் இடம் தெரியாமல் தரைமட்டமானது. பல கோடிகளை அதன்மூலம் அவர்கள் இழந்த நிலையில் செய்வதறியாது திகைக்கும் காட்சிகளைக் கண்டபோது மனதைக் கலங்கவைத்தது. அந்த ஜப்பான் மக்களுக்காகவும், தொழிற்சாலைகளை இழந்து ஒரே நாளில் சாப்பாட்டுக்கு கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட ஜப்பான் நாட்டு தொழிலதிபர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோம்.


பரிதாபம் - மிகப்பரிதாபம்

இதில் உலகத்துக்கே முன்மாதிரியான செய்தி என்ன தெரியுமா? 3 நாட்கள் சாப்பாடு இல்லை, பால் இல்லை, குடிநீர் இல்லை, ஆனால் ஜப்பானில் ஒரு இடத்திலும் கடைகள் சூறையாடப்பட்டதாகவோ, கடைகள் உடைக்கப்பட்டு பொருட்களை கொள்ளையடித்ததாகவோ ஒரு நிகழ்ச்சியும் நாம் கேள்விப்படவில்லை. அதைவிட கடைகளில் பொருள் வாங்க க்யூவில் நிற்கும் மக்கள் போட்டிபோடவில்லை. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் எதுவும் செய்யவில்லை. கடுமையான பசியிலும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மிக அருமையாக கடைபிடித்தனர். கடைகளிலும் ஒரு குடும்பத்துக்கு ஒரு பாட்டில் தண்ணீர், இரண்டு ரொட்டிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு இது போதாதுதான். ஆனால் அதை ஆத்திரம் கொள்ளாமல், சூழ்நிலையை உணர்ந்துகொண்டு கடையில் உள்ளதும் தீர்ந்துவிடுமே என்ற ஆத்திரம், வேகம் காண்பிக்காமல் எத்தனை ஒழுங்காக வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச்சென்றார்கள். உண்மையான தெய்வத்தை அறியாத அந்த மக்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு மிகவும் பாராட்டதக்கது ஆகும்.

  இந்தியாவில், இலங்கையில், அமெரிக்காவில் வீசிய புயலால் கலவரம் ஏற்பட்டவுடன் கடைகள் சூறையாடப்பட்டதையும், புயலால் இடிந்த வீடுகளிலிருந்து சிலர் டிவி பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடுவதையும், 2 பேர் குளிர்சாதனப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடியதையும் சிலர் கைக்கு அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு போனதையும் நாங்கள் டிவியில் பார்த்தோம். ஆனால் அவர்களோடு இந்த ஜப்பானியர்களை ஒப்பிடும்போது உலகமே ஜப்பானியரைப் பாராட்டுகிறது. இழப்பு ஒருபக்கம், பசி ஒருபக்கம், ஆனால் கண்ணியம், கட்டுபாடு, ஒழுக்கம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளும் மனிதநேயம் ஆகியவைகளை ஜப்பானியர்களிடம் கண்டோம். அதை ஜப்பான் TV-சேனலில் நான் கண்டு அதிசயத்துப்போனேன்.

  நான் கடவுள் அல்ல என்று கூறிய புத்தனையே தெய்வமாக வழிபடும் அந்த ஜப்பான் மக்கள். இந்த சூழ்நிலையிலாவது உண்மை தெய்வமான இயேசு கிறிஸ்துவை அவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டுமே என்று நாம் எல்லாரும் ஜெபிப்போமா? இந்த மாபெரும் அழிவின்மூலம் ஜப்பான் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியுற்றது. ஜப்பான் பழைய நிலைக்கு மீண்டும் எழ பல வருடங்கள் ஆகும். அமெரிக்கா குண்டுவீச்சினால் உண்டான பாதிப்பிலிருந்து உடனே எழுந்து உலகத்தின் பொருளாதாரத்தில் முன்னிலை வகித்த அந்த நாடு இம்முறை ஏற்பட்ட பேரிழப்பில் மக்கள் சோர்ந்துவிடாதபடி இருக்க நம் ஜெபம் அவர்களுக்கு தேவை. ஜப்பான் மக்களுக்காக ஜெபிப்போம்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM