எனக்கு சம்பந்தமில்லை

ஜாமக்காரனில் வெளிவரும் பல முக்கிய விஷயங்களை பல ஆயிரம் போட்டோ காப்பி எடுத்து வாசகர்களில் பலர் ஜாமக்காரன் வாசகர் அல்லாத பலருக்கு அதை வினியோகம் செய்வது வழக்கம். அப்படித்தான் பல லட்சம் மக்கள் ஜாமக்காரன்மூலம் வரும் வேதவசன உண்மைகளை, பிழையான ஊழியர்களை, பிழையான உபதேசங்களை அறிந்து விழிப்புணர்வு பெற்றுவந்தனர். ஜாமக்காரனில் வரும் குறிப்பிட்ட விஷயத்தையோ அல்லது ஜாமக்காரன் முழுவதையுமோ போட்டோ காப்பி எடுத்து மற்றவர்களுக்கு விநியோகிப்பதை நான் எப்போதும் தடை செய்வது இல்லை.

  ஆனால் சகோ.வின்சென்ட் செல்வகுமார், சகோ.சாது சுந்தர் செல்வராஜ், சகோ.ஆலன்பால், சகோ.பால்தினகரன், சகோ.மோகன் சி.லாசரஸ், சகோ.ஜவஹர் சாமுவேல், சகோ.ஜான் சாலமோன் ஆகியவர்களின் பெயர்களை கடந்த ஜாமக்காரனில் குறிப்பிட்டிருந்தேன். அதில் சகோ.வின்சென்ட் செல்வகுமார், ஏஞ்சல் TV சாது சுந்தர் செல்வராஜ் ஆகியவர்களைப்பற்றி குறிப்பிட்டு அவர்களின் பிழையான ஊழிய உபதேசத்தைக்குறித்து எழுதிய விஷயத்தில் சகோ.வின்சென்ட் செல்வகுமாரின் ஆட்கள் மிரட்டல் கடிதங்களை எனக்கு எழுதியுள்ளனர். சிலர் நான் வீட்டில் இல்லாத வேளையில் தொலைப்பேசியில் வீட்டிலுள்ளவர்களுடன் முரட்டுத்தனமாக பேசியுள்ளார்கள். அதைக்கொண்டே சகோ.வின்சென்ட் செல்வகுமார், சகோ.சாது சுந்தர் செல்வராஜின் ஆதரவாளர்களின் ஆவிக்குரிய ஜீவியத்தை எடைப்போடலாம்.

  ஜாமக்காரனிலிருந்து யார், எதை போட்டோகாப்பி எடுத்து எத்தனை பேர்களுக்கு அனுப்பினாலும் எனக்கு பிரச்சனையில்லை. மக்கள் விழிப்புணர்வு பெற்றால் அது ஆண்டவருக்கும் மகிமை.

ஆனால், ஜாமக்காரனை போட்டோ காப்பி எடுத்து அனுப்புபவர்கள் என் விலாசத்துடன் அப்படியே அனுப்புங்கள் அல்லது தைரியமுள்ளவர்கள் அவரவர்களின் விலாசம் அல்லது தொலைப்பேசி எண் அதில் எழுதி விநியோகிக்கலாமே! அப்படி செய்ய துணியாமல் சிலர் ஜாமக்காரன் பத்திரிக்கையை போட்டோ காப்பியெடுத்து அதில் ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அதன் கீழே என்னுடைய தொலைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்கள். நல்ல காரியம் செய்யும்போது ஏன் அப்படி திருட்டுதனமாக செயல்படுகிறீர்கள்? இதை என் வாசகர்களே செய்திருந்தாலும் அதை தைரியமில்லாத கோழைத்தனம் என்றுதான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

  நாம் வெளியிடும் விஷயத்தில் உண்மை உண்டானால் யாருக்கும் பயப்படதேவையில்லை. அந்த பிழையான உபதேசத்தை குறிப்பிட்ட அந்த ஊழியர்கள் அவர்கள் வீட்டுக்குள் கூறியிருந்தால் அதைக்குறித்து யாரும் கேள்வி கேட்கவோ? விமரிசிக்கவோ அதிகாரம் இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் இஷ்டம்போல் கர்த்தர் காட்டாததை கர்த்தர் காட்டினார், பேசினார் என்று லட்சக்கணக்கான மக்கள் காணுமளவு பகிரங்கமாக பேசும்போது அல்லது எழுதும்போது அதைக்குறித்து யாரும் விமரிசிக்க உரிமை உண்டு. ஆகவே இனியாகிலும் பிரச்சனைக்குரிய விஷயம் ஜாமக்காரனில் வாசிக்கும்போது அதை ஜாமக்காரனில் உள்ளபடியே, ஜாமக்காரனின் முழுவிலாசத்துடன் போட்டோ காப்பி எடுத்து தாராளமாக வெளியிடலாம்! மக்களை எச்சரிக்கலாம்! விழிப்புணர்வு அடையச் செய்யலாம்! அதை வாசித்தவர்கள் யாராவது கேள்வி கேட்டால் பதில் அளிக்கவேண்டியது அதை எழுதிய என்னுடைய கடமையாகும். இதில் யாருக்கும் என் வாசகர்கள் பயப்பட தேவையில்லை என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.

  ஜாமக்காரன் வாசகர்களுக்காகமட்டுமே ஜாமக்காரன் பத்திரிக்கை அனுப்பப்படுகிறது. மற்றவர்கள் யாருடைய விலாசத்தையும் நாங்கள் தேடி பெறமுயலுவதில்லை. வாசகர்கள் அல்லாத யாருக்கும் ஜாமக்காரனையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ நாங்கள் எங்கள் அலுவலகத்திலிருந்து போட்டோ காப்பி எடுத்து யாருக்கும் அனுப்பியதும் இல்லை, அனுப்பப்போவதுமில்லை. என் வாசகர்களில் யாரோ தவறான முறையில் அப்படி வினியோகித்துள்ளனர். அது வாசகர்களின் பிரியம், அதை நாங்கள் தடைசெய்வதில்லை. ஆகவே ஜாமக்காரன் பத்திரிக்கையின் விஷயங்கள் கடந்த காலங்களில் போட்டோ காப்பி எடுத்து அனுப்பப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் அறிவித்துக்கொள்கிறேன் .

கர்த்தரின் பணியில்
டாக்டர்.புஷ்பராஜ்


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM